Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழினவாத அரசியலினால் ஒருபோதும் வெற்றியீட்ட முடியாது

Featured Replies

தமிழினவாத அரசியலினால் ஒருபோதும் வெற்றியீட்ட முடியாது

 
 
pg-06-1.jpg?itok=WLCdgFl3

“சுரேஸ் பிரேமச்சந்திரனின் அல்லது ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் எதிர்காலம் என்ன?” என்று கேட்கிறார்கள் சிலர். இதில் ஒரு சாரார் முன்னொரு காலம் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் உறுப்பினர்களாக இருந்தவர்கள். இதிலும் சிலர் தற்போதும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வோடு – சுரேஸ் பிரேமச்சந்திரனோடு தொடர்பில் உள்ளவர்கள். இந்தக் கேள்வி ஒன்றும் புதியதல்ல. இவர்களுக்குள்ளே நீண்ட காலம் கொதித்துக் கொண்டிருந்த கேள்வியே.

நேற்று முன்தினம் சுரேஸ் பிரேமச்சந்திரனின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு தொடர்பாக நான் எழுதியிருந்த கட்டுரையைத் தொடர்ந்து நேரடியாகவே மேற்படி கேள்வியைக் கேட்கிறார்கள். இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது அல்லது இதற்கு என் தரப்பில் என்ன பதில் என்று அறிவதற்காக இந்தக் கேள்வி.

இந்தக் கேள்விக்கு இரண்டு விதமான பதில்கள் உண்டு. ஒன்று நேரடியானது. இதன்படி தயவு தாட்சண்யமில்லாமல் கட்சி தன்னுடைய சுய சிந்தனைக்கு, சுயத்துக்கு மாற வேண்டும். அதாவது வெளியே இருக்கும் அலைகளில் இழுபடாமல், தனது அலையை உருவாக்கும் விதமாக.

இதற்கு சுய விமர்சனமும் திறந்த விவாதங்களும் முக்கியம். இதற்கு அது தன்னை முதலில் நம்ப வேண்டும். வரலாற்றை நம்ப வேண்டும். தன்னை மீளமைக்கத் துணிய வேண்டும். இதற்கு அது புலன்களைத் திறக்க வேண்டும். அந்தப் புலன்களின் வழியே அறிதல்களை நிகழ்த்த வேணும். வெளியில் யார் மீதும் குற்றம் காண்பதை விட்டு விட்டுத் தன்னைக் கண்டறிய வேணும். குறிப்பாகத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தன்னை ஒரு “மக்கள் அரசியல் தலைவராக” நம்ப வேண்டும். அதற்குரியவாறு மாற்றிக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது மறைமுகமானது. கட்சியே தன்னை, தன்னுடைய பயண வழியை, தன்னுடைய அடையாளத்தை, தன்னுடைய எழுச்சியை நம்பாமல் பிற சக்திகளின் நிழலில் தங்கியிருக்க விரும்புகிறது. இதைக் கைவிட வேண்டும். அதாவது நம்பிக்கையின்மை என்ற எதிர்மறைச் சிந்தனைக்குள் கட்சியும் அதன் தலைமையும் சிக்கியுள்ளது. இதனாலேயே அது பிற சக்திகளை – விக்கினேஸ்வரன் போன்றோரை எதிர்பார்க்கிறது. இதிலிருந்து விடுபட வேண்டும். நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? உண்மையான சக்திகள் எது? போலியான தரப்புகள் எது? வரலாற்றை மாற்றியமைப்பது யார்? வரலாற்றில் அமிழ்ந்து போவது யார்? என்ற குழப்பத்திற்குள் கட்சி தடுமாறுகிறது. இதைக் குறித்த ஆழமான புரிதல்கள் தேவை.

இதைச் செய்யும்போது கட்சி புதிய நிலைக்கு வந்து விடும்.

இதுவே ஈ.பி.ஆர்.எல்.எவ் என்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க இயக்கத்துக்குச் செய்யும் மதிப்பாகும். அதனுடைய முன்னோடிகளுக்குச் செலுத்தும் மரியாதையாகும். இதுவே ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் அரசியல் தொடர்ச்சிக்கு அவசியமானது. தமிழ் மொழிச் சமூகங்களுக்கு உரிய வரலாற்றுப் பங்களிப்பை இதன் மூலமே செய்ய முடியும்.

தமிழ் மக்களுக்கான அரசியலிலும் விடுதலைப் போராட்டத்திலும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கு தனியான பெறுமதியும் பங்களிப்பு அடையாளமும் வரலாறும் உண்டு. இன்றைய மாகாணசபை முறைமைக்குக் கூடப் பங்களிப்பைச் செய்தது ஈ.பி.ஆர்.எல்.எவ்வே. இதற்காக அது ஒரு காலம் பழித்துரைக்கப்பட்டது. உருவாக்கப்பட்ட வரலாற்றுப் பெரும்பழிக்கு இலக்காகியது. மாகாணசபையை ஈ.பி.ஆர்.எல்.எவ் பொறுப்பேற்றது தவறு என்றும் வரலாற்றுத்துரோகம் என்றும் புலிகள் ஏற்படுத்திய எதிர்ப்பு அடையாள அரசியலின் வழி இது நிகழ்ந்தது. ஆனாலும் அந்தப் பங்களிப்பைச் செய்ததன் விளைவே இன்றைய மாகாணசபையாகும்.

விடுதலைப்போராட்ட இயக்கங்களில் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ ஆகியவையே கடுமையாகச் சிதைக்கப்பட்டன. ஆயினும் இதில் தாக்குப் பிடித்து நின்றது ஈ.பி.ஆர்.எல்.எவ் மட்டுமே. ஆனால் துரதிருஷ்டவசமாக அது பல துண்டுகளாக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது கூட ஈ.பி.ஆர்.எல்.எவ் வலுவான சக்தியாகவே உள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி எவ்வளவு வலுவானதாக உள்ளதோ அந்தளவுக்கு சம வலுடையதாக - அதற்கு வெளியே ஈ.பி.ஆர்.எல்.எவ்வே உள்ளது.

ஆனால், தமிழரசுக் கட்சியோ பிறத்தியிலுள்ள அத்தனை சக்திகளையும் (சுத்தம், புனிதம் என்று பார்க்காமல்) தன்னோடு இணைத்து வைத்திருக்கிறது. தொடர்ந்தும் வெளியிலிருந்து எவரையும் உள்ளீர்க்கும் வகையில் கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறது. “குற்றம் பார்க்கில் சுற்றமில்லை”. அதனுடைய வெற்றியே இதுதான்.

ஈ.பி.ஆர்.எல்.எவ்வோ தன்னைச் சிதைவுக்குட்படுத்தி வைத்திருப்பதோடு, உள்ளிருந்து வெளியே தள்ளும் வகையிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனுடைய பிரச்சினையே இதுதான். தன்னுடைய பலத்தை அறியாமலிருப்பது. தனக்கான வாய்ப்புகளைக் காணத்தவறுவது. இதற்குக் காரணம், “ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் துண்டங்கள்” ஒவ்வொன்றும் தனித்தனியாக யோசிப்பதேயாகும். ஒவ்வொருவரும் தம்மைத் தலைவர்களாகவே உருவகித்துக் கொள்கிறார்கள். சிற்றரசர்களாக.

இதற்கான அக – புற காரணங்கள் இருக்கலாம். உதாரணமாக டக்ளஸ் தேவானந்தா தரப்பு யோசிக்கலாம், தாம் இத்தனை நெருக்கடிகளுக்குள்ளும் நின்று பிடித்திருக்கிறோம். இப்பொழுதும் கூட்டமைப்புக்கு எதிரான வலுவான தரப்பாக தாமே உள்ளோம். இந்த நிலையில் ஏனைய தரப்புகளோடு எப்படி இணைந்து கொள்வது? அவை அந்தளவுக்குப் பலமாக இல்லையே என. மறுதரப்புகள் யோசிக்கலாம், ஈ.பி.டி.பி அரசாங்கத்தோடு நிபந்தனையற்று எப்போதும் இணையத் தயாராக இருக்கும்போது நாம் எப்படி ஒரு இணைவை ஏற்படுத்துவது என. இது போல ஒவ்வொரு தரப்புக்கும் பல நியாயங்கள்.

இதனால் ஒரு மையத்தில் இணைவதற்கு இவர்களில் யாருமே தயாரில்லை. கேட்டால், ஆளாளுக்கு ஆயிரம் காரணங்களையும் பிறர் மீதான குற்றங்களையும் அடுக்குகிறார்கள். இதில் நியாயமிருக்கலாம். உண்மைகளும் உண்டே.

 

 
 

ஆனால், ஒரு சிக்கலான அரசியல் நெடுவழியில் தமக்கு முன்னே உள்ள சவால்கள் என்ன? யார் எதிர்த்தரப்பினர்? மக்களுக்குரியவர்கள் யார்? மக்கள் விரோதச் சக்திகள் எவை? வரலாற்றை முன்னகர்த்துவது யார்? வரலாற்றைப் பின்னிழுப்போர் யார் என்ற தெளிவும் புரிதல்களும் அவசியம். ஈ.பி.ஆர்.எல்.எவ் அடிப்படையில் இடது சார்பான அமைப்பு. அதனால் எப்பொழுதும் அதற்கு ஒடுக்குதலுக்குள்ளான மக்களின் மீதே கரிசனைகள் அதிகமுண்டு. அப்படியானால், ஒடுக்கும் அரசும் மேலாதிக்கத் தமிழ்ச்சக்திகளும் படிமுறை எதிர்ச்சக்திகளாகவே இருக்கும்.

ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் வேரிலிருந்து பிரிந்தவையே டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி, சுகு – வரதர் – மோகன் தரப்பின் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, சந்திரகுமாரின் சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு போன்றவை. கிழக்கிலும் வடக்கிலும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் வேர்கள் பலமாகவே உள்ளன. இவை அனைத்தும் அடிநிலை மக்களின் மீதான கரிசனையைக் கொண்டவை. ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் மீது வடக்கிலும் கிழக்கிலும் இன்னும் முஸ்லிம்களுக்கு இணக்கமும் நம்பிக்கையும் உண்டு என்பது கூடுதல் கவனத்திற்குரியது.

யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பி (தேவானந்தா), ஈ.பி.ஆர்.எல்.எவ் (சுரேஸ் பிரேமச்சந்திரன்) கிளிநொச்சியில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு (சந்திரகுமார்), வவுனியா, முல்லைத்தீவில் சிவசக்தி ஆனந்தன், அம்பாறையில் துரைரத்தினம், கிழக்கின் சில பகுதிகளிலும் வடக்கில் சில இடங்களிலும் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி (சுகு – வரதர் – மோகன்) போன்ற தரப்புகள் செல்வாக்குடன் உள்ளன.

ஆகவே, இவற்றுக்கிடையில் மறைமுகமாகவேனும் ஒரு உடன்படிக்கையும் செயற்பாட்டுத் திட்டமும் இருந்தால் நிச்சயமாக வெற்றியைக் காண முடியும். பலமானதோர் அரசியற் சக்தியாகப் பரிணமிக்க இயலும். புதியதொரு மக்கள் அரசியலை முன்னெடுக்கலாம். தமிழரசுக் கட்சி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய விடுதலை முன்னணி போன்ற தரப்புகளின் பிரமுகர் அரசியலையும் அவற்றின் அதிகாரத்தையும் உடைத்து விடமுடியும்.

தற்போது தமிழரசுக் கட்சியின் மீதும் கூட்டமைப்பின் மீதும் மக்கள் ஏமாற்றமடைந்திருக்கின்றனர். அடுத்த கட்ட அரசியலை முன்னெடுக்க முடியாத நிலையிலேயே தமிழரசுக்கட்சியும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் உள்ளன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பலவீனத்தைத் தனக்குரிய அரசியல் சந்தர்ப்பமாக – ஆதாயமாக எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி. இதற்காக கஜேந்திரகுமார் தரப்பு கடுமையாக முயற்சிக்கிறது.

ஆனால், கஜேந்திரகுமாரின் எழுச்சி என்பது மிகப் பாதகமான ஒரு நிலையையே தமிழ்ச்சமூகத்துக்கு உண்டாக்கும் என்பதைச் சிந்திப்போரும் வரலாற்றை நன்கறிந்தோரும் உலக அரசியல் நிலவரம் அறிந்தவரும் அறிவர். முற்று முழுதாகக் “கற்பனாவாத அரசியலை” முன்னெடுக்கும் தீவிர நிலைச் சக்தியின் மேலெழுச்சியானது அடிநிலை மக்களை மோசமாகப் பாதிக்கும். எத்தகைய பாதுகாப்பையும் தடுப்பையும் ஏற்படுத்த முடியாத தீவிரவாத அரசியல் அது. செயற்றிட்டங்களைப் பற்றிச் சிந்திக்காத பிரகட அரசியல்.

மட்டுமல்ல, இன்றைய உலக ஒழுங்கும் நடைமுறையும் பல்லினச் சூழலுக்குரிய அரசியலையே முன்மொழிகிறது. பல்லினச் சூழலுக்குரிய ஜனநாயக அடிப்படைகளை வலுப்படுத்தும் அரசியலை. இதை நோக்கியே உலகம் விரிந்து செல்கிறது. உலகு தழுவிய பொருளாதார நடவடிக்கைகள், தொடர்பாடல், கலைப்பரிவர்த்தனை, அறிவியல் பரிமாற்றங்கள் போன்றவற்றுக்கு அடிப்படையான பன்மைத்துவ அரசியலே இன்று வரவேற்கப்படுகிறது. இதைச் செய்யத் தவறும் தரப்புகள் உலக அளவில் நெருக்கடிக்குள்ளாகின்றன. இதில் இலங்கை அரசும் சேர்த்தியே. இலங்கை அரசை இனிவரும் காலத்தில் முடக்கக் கூடிய அரசியல் என்பது பன்மைத்துவத்துக்கு எதிரான அரசியலை – ஜனநாயக மறுப்பு அரசியலை அது முன்னெடுக்கிறது என்ற அடிப்படையில்தான்.

இதைத் தமிழ்த்தரப்பு முன்னெடுக்கும்போதே சிங்களப் பேரினவாத அரசியலைத் தோற்கடிக்க முடியும். ஆகவே இதற்கான பொறிமுறையை உருவாக்க வேண்டியது தமிழ்த்தரப்பின் பொறுப்பாகும். சிங்களப் பேரினவாதத்துக்கு எதிரான தமிழினவாத அரசியலினால் ஒரு போதுமே வெற்றியை ஈட்ட முடியாது.

ஆகவே இந்தச் சந்தர்ப்பத்தில் மக்களுக்கான அரசியலை – மக்களைப் பாதுகாக்கும் அரசியலை முன்னெடுக்க வேண்டியவர்கள் அதைச் செய்யாமல் இருப்பது வரலாற்றுத் தவறாகும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் இன்னொரு முக்கியமான விடயத்தையும் இங்கே சொல்ல வேண்டியது அவசியம். ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் அத்தனை தரப்புகளுக்கும் (ஏனைய அரசியல் கட்சிகள், இயக்கங்கள் அனைத்துக்கும் இது பொருந்தும்) கடந்த கால வரலாற்று நெருக்கடிகளில் பங்கும் பொறுப்பும் உண்டு.

இதை இனி முன்னெடுக்கும் அரசியலின் மூலமாகச் சீர்ப்படுத்த வேண்டும். சாதாரணமாக ஒரு விபத்தில் (கவனிக்கவும், விபத்து என்பதை) சேதம் ஏற்பட்டால் அதைப் பொறுப்பெடுத்து அதற்கான நட்ட ஈட்டை வழங்கி பாதிக்கப்பட்டவரைச் சீர்ப்படுத்த வேண்டியது சட்டமும் பொது நியதியுமாகும். நடந்தது அரசியல் விபத்து என்று கொள்ளப்பட்டால் கூட தமிழ்ச் சமூகத்துக்கு உண்டான சேதம் பெரிது. ஆகவே அதைச் சீர்ப்படுத்த வேண்டியது ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் அத்தனை துண்டுகளுக்கும் உண்டு.

சுரேஸ் இன்னும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தலைமைப்பொறுப்பில் இருப்பவர் என்பதால் இந்தப் பொறுப்பு அவருக்குக் கூடுதலாக உண்டு. அதற்காக ஏனையவர்கள் எல்லாம் வந்து ஒருவருக்குக் கீழே முன்னரைப்போல இருப்பது என்று இங்கே அர்த்தப்படுத்தப்படவில்லை. இனி அமையும் கூட்டிணைவு என்பது, அனைத்துத் தரப்பிற்கும் உரிய இடம் – சமனிலை என்ற அடிப்படையிலானதாக இருக்கலாம். அல்லது முதற்கட்டமாக செல்வாக்குள்ள பிராந்தியங்களின் அடிப்படையிலானதாக இருக்கலாம்.

இதைப்பற்றி உரிய காலத்தில் சிந்திக்கவில்லை என்றால் அதன் தண்டனையை அனுபவிக்க வேண்டும். அதேவேளை எதிர்த்தரப்பான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுமே பலம்பெறும்.

http://www.vaaramanjari.lk/2018/07/29/அரசியல்/தமிழினவாத-அரசியலினால்-ஒருபோதும்-வெற்றியீட்ட-முடியாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.