Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா?

Featured Replies

போர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா?
 

அரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், அரசாங்கப் படைகள் வெற்றி பெற்றதில், அந்த வெற்றியின் போது, நாட்டை ஆட்சி புரிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பங்கு என்ன? அவர், அந்த வெற்றிக்காகத் தாமாக எந்த முடிவையாவது எடுத்துள்ளாரா? தனிப்பட்ட முறையில் எந்தச் சண்டையிலாவது ஈடுபட்டுள்ளாரா?   

ஆனால், ஏதோ துட்டகைமுனு, எல்லாளனை நேரில் சந்தித்து, தனிப்பட்ட முறையில் சண்டையிட்டு, வெற்றி கண்டதைப் போல், தானும், பிரபாகரனை நேரில் சந்தித்து, சண்டையிட்டு வெற்றி கண்டதாக, போர் வெற்றியின் முழுப் பெருமையையும் கொள்ளையடித்துக் கொண்டு இருக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த. அந்த வெற்றியை, அரசியலாக்கி தேர்தல் வெற்றிகளுக்காகவும் அதைப் பயன்படுத்துகிறார்.   

ஆனால், அந்த வெற்றிக்காக அவராக எடுத்த முடிவு என்ன, அவராகத் தனிப்பட்ட முறையில் செய்த பங்களிப்பு என்ன என்று கேட்டால், அவரது நெருங்கிய நண்பரும் மௌனமாகிவிடுவார்.  

இருப்பினும், அரசாங்கத்தின் சார்பில், போர் வெற்றிக்காக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவும் தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவுகளையும் செய்த பங்களிப்புகளையும் பட்டியல் போடலாம்.   

அதனால்தான், மஹிந்தவின் நண்பரான எழுத்தாளர் சி.ஏ. சந்திரபிரேம போரைப் பற்றி, தாம் எழுதிய நுலுக்கு (Gota’s War) ‘கோட்டாவின் போர்’ எனப் பெயரிட்டுள்ளார். அது மட்டுமல்ல, விடுதலை புலிகள், தமது தவறான முடிவுகளால், அரச படைகளின் போர் வெற்றிக்காகப் பல பங்களிப்புகளை வழங்கியுள்ளனர் என்றும் கூறலாம்.   

மஹிந்த ராஜபக்‌ஷ, இவ்வாறு அரச படைகளின் தியாகங்களையும் திறமைகளையும் தனது அரசியலுக்காகவும் தேர்தல் பிரசாரத்துக்காகவும் பாவிப்பதை நிறுத்தும் வகையில், போர் வெற்றியின் உண்மையான பங்காளிகள் யார் என்பதை எடுத்துக் கூறவோ என்னவோ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போரின் வரலாற்றை ஆவணப்படுத்தப் போவதாக, சில தினங்களுக்கு முன்னர் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.   

அதற்காக அவர், முன்னாள் இராணுவத் தளபதிகள் சிலரை அழைத்துக் கலந்துரையாடியதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டு இருந்தது. ஆனால், அந்தக் கூட்டத்துக்குப் போரின் இறுதி வெற்றியின் போது, இராணுவத் தளபதியாக இருந்த அமைச்சர் சரத் பொன்சேகாவும் அக்காலகட்டத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்‌ஷவும் சமூகமளிக்கவில்லை எனவும் செய்திகள் கூறின.   

போரின் வரலாற்றை, சரியாக நடுநிலையோடு ஆவணப்படுத்துவதாக இருந்தால், அது மிகவும் சிறந்த பணி என்றே கூற வேண்டும். ஆனால், இந்தக் கூட்டத்தைப் பற்றிய தகவல்கள், இக் காரியம் சிறப்பாக நடைபெறுமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.  

 இந்தக் கூட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கோட்டாபயவுக்கு அழைப்பு விடுத்தாரோ என்னவோ தெரியாது. அவ்வாறு அழைப்பு விடுக்காவிட்டால் அது பெரும் தவறாகும். ஏனெனில், கோட்டாபய இடைநடுவில் போரை விட்டு, அமெரிக்காவுக்குச் சென்றாலும், அவர் போரின் இறுதிக் காலத்தில், பெரும் பங்காற்றியவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.  

அதேபோல், பொன்சேகா சமூகமளிக்காமல் இருந்தமையும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும். அந்த இருவரும் சமூகமளிக்கவில்லை என்பதை மட்டுமே ஊடகங்கள் தெரிவித்து இருந்தன. சில வேளை, வேறு சில முன்னாள் தளபதிகள் சமூகமளிக்காதிருந்து, அது ஊடகங்களின் கண்ணில் படாதிருக்கவும் கூடும்.   

எவ்வாறாயினும், அரசாங்கம் முன் வந்து போரின் வரலாற்றை எழுதுவதாக இருந்தால், அது வெற்றி பெற்றவரின் கதையாகவே இருக்கும். பொதுவாக, உலகில் எங்கும் அவ்வாறு தான் வரலாறு எழுதப்பட்டு இருக்கின்றன. எனவே தான், ‘வெற்றி பெற்றவனே வரலாற்றை எழுதுவான்’ (History is written by the victor) என்பார்கள்.   

அவ்வாறான வரலாற்றில், தோல்வி கண்டவரின் நியாயங்கள், தியாகங்கள் மற்றும் திறமைகள் ஆகியன இடம்பெறாது; அல்லது குறைவாகவே இடம்பெறும்; அல்லது திரிபுபடுத்தப்பட்டுத் தான் இடம்பெறும்.   
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அப்போதைய அரசியல் செயலாளராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த ரமேஷ் நடராஜா, ‘தினமுரசு’ பத்திரிகையின் ஆரம்ப காலத்தில் ‘அற்புதன்’ என்ற பெயரில், தமிழீழத்துக்கான ஆயுதப்போராட்டத்தின் வரலாற்றை எழுதி வந்தார். அப்போது, ஒரு வாசகர் ‘நீங்கள் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் விளம்பரம் தேடிக் கொடுக்கிறீர்கள்’ எனக் கடிதம் எழுதியிருந்தார்.   

அந்தக் கடிதத்தையும் அந்தக் கதையோடு பிரசுரித்த நடராஜா, ‘நான் எழுதுவது கட்சிப் பிரசாரத்துக்காக அல்ல; இது வரலாறு. இன்று புலிகள் ஏனைய தமிழ் இயக்கங்களை விஞ்சிவிட்டார்களென்றால், அதற்குக் காரணங்கள் இருக்க வேண்டும். அந்தக் காரணங்களை மறைத்து, வரலாற்றை எழுத முடியாது’ என்று தமது பதிலையும் பிரசுரித்து இருந்தார். ஆனால் பொதுவாக, அந்தக் கண்ணோட்டததில் வரலாறுகள் எழுதப்படுவதில்லை.   

இன்று பலர் போரைப் பற்றி எழுதுகிறார்கள். தமிழர்களும் எழுதியிருக்கிறார்கள். அவற்றில் அரச படைகளின் நியாயங்கள், தியாகங்கள், திறமைகள் அரிதாகவே குறிப்பிடப்பட்டுள்ளன; அல்லது குறிப்பிடப்படவே இல்லை.   

அதேபோல் புலிகள் தவிர்ந்த ஏனைய தமிழ் இயக்கங்களின் பங்களிப்பும் அவற்றில் இல்லை என்றே கூற வேண்டும். அதேபோல், முன்னாள் இராணுவ அதிகாரியான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட போன்றவர்கள் எழுதியவற்றில் புலிகளின் நியாயங்கள், தியாகங்கள், திறமைகள் அரிதாகவே குறிப்பிடப்பட்டுள்ளன; அல்லது குறிப்பிடப்படவே இல்லை.   

போதாக்குறைக்கு, அரச படைகளுக்குள் நிலவும் பொறாமை, பகைமை போன்றவற்றாலும் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. போர் முடிவடைந்தவுடன் கோட்டாபய ராஜபக்‌ஷ, “இலங்கை கண்ட மிகச் சிறந்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவே” என்றார்.   

சிறிது காலத்தில் அவர்களுக்கிடையே பகைமை உருவாகிய போது, “எந்தவோர் இராணுவத் தளபதியும் செய்யக்கூடியதையே, பொன்சேகாவும் செய்துள்ளார்” எனக் கோட்டாபய கூறியிருந்தார்.   

அதுமட்டுமல்ல, அந்தப் பகைமையின் காரணமாக, மஹிந்த ராஜபக்‌ஷ, பொன்சேகாவை அவருக்கு எதிரானவர்களைக் கொண்ட இராணுவ நீதிமன்றமொன்றின் மூலம், குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கச் செய்து, அவரது பதக்கங்களையும் ஓய்வூதியத்தையும் பறித்தார். அத்தோடு அவரை இராணுவத் தளபதிகளின் பெயர் பட்டியலிலிருந்தும் நீக்கினார். அவரது பட்டியலின் படி, இராணுவத் தளபதி ஒருவர் இல்லாமலே புலிகளுக்கு எதிரான போர் வெற்றி பெற்றிருக்கிறது.  

சரத் பொன்சேகா, அவ்வாறு வரலாற்றிலிருந்து நீக்கப்படக் கூடியவர் அல்ல. முன்னைய இராணுவத் தளபதிகள் காணாத, இராணுவத்தின் குறைபாடுகளைக் கண்டு, அவற்றைச் சரி செய்து, அரசாங்கப் படைகளின் போர் வெற்றியைச் சாத்தியமாக்கியவர் அவரே.   

முன்னர் படையினர், புலிகளிடமிருந்து ஓரிடத்தை கைப்பற்றிக் கொண்டால் புலிகள் மற்றொரு இடத்தை கைப்பற்றிக் கொள்வர். படையினர் அந்த இடத்தைக் கைப்பற்ற, முன்னைய இடத்திலிருந்து படையினரை அகற்றிக் கொள்ளும் போது, புலிகள் அந்த இடத்தை மீண்டும் கைப்பற்றிக் கொள்வர். இதற்குப் பொருளாதார சுமை காரணமாக இருந்தாலும், படைபலத்தை அதிகரித்தேயாக வேண்டும் என, பொன்சேகா பிடிவாதமாக இருந்தார்.   

பெரிய படையணிகளாகச் செல்லாது, சிறிய சிறிய குழுக்களாகப் படைகளை முன்னகர்த்தும் தந்திரோபாயமும் பொன்சேகாவினுடையதே. போர்க் களத்தைப் பற்றிய அவரது அறிவும் அனுபவமும், இந்த விடயத்தில் பெரிதும் உதவியது.   

எனவேதான், “பொன்சேகாவின் அனுபவமும் போர் உத்திகளும் இல்லாதிருந்தால், போர் வெற்றி பெற்றிருக்காது” என, கோட்டாபயவே போர் முடிவடைந்தவுடன் கூறியிருந்தார்.  

கடலில் நீண்ட தூரம் சென்று, புலிகளின் ஆயுதக் கப்பல்களைக் கடற்படையினர் அழித்தமை, போர் வெற்றிக்குப் பிரதான காரணமாகியது. 2007 ஆண்டு ஆரம்பத்திலிருந்து, 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை, புலிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து ஒரு பனடோல் வில்லையையாவது அனுப்ப முடியவில்லை என, கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் பின்னர் கூறியிருந்தார்.   

வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்து, புலிகளுக்கு அனுப்பி வந்த கே.பியுடன், மூத்த ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ், ‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்காக நடாத்திய நேர் காணலின் போதே, அவர்அவ்வாறு கூறியிருந்தார்.   

இவ்வாறு, புலிகளின் ஆயுதக் கிடங்குகளை வற்றச் செய்த கடற்படையின் அச்செயற்பாடுகளுக்கு, இராணுவத்தினர் வழங்கிய புலனாய்வுத் தகவல்களே காரணம் என, சரத் பொன்சேகா உரிமை கோருகிறார். ஆனால், அப்போதைய கடற்படைத் தளபதி கரன்னாகொட, தாமே அமெரிக்காவிடமும் இந்தியாவிடமும் அந்தத் தகவல்களைப் பெற்றுக் கொண்டாகக் கூறுகிறார்.   

அதேவேளை, பொன்சேகாவுக்கு முன்னர் இராணுவத் தளபதிகளாக இருந்தவர்களினதும் முக்கிய படையதிகாரிகளாக இருந்தவர்களினதும் சில பங்களிப்புகளும் இறுதி வெற்றிக்கு முக்கிய காரணமாகின.   

உதாரணமாக, மேஜர் ஜெனரல் டென்ஸில் கொப்பேகடுவ யாழ்ப்பாணத்தை அண்டிய தீவுகள் அனைத்தையும் 1980களின் இறுதியில் புலிகளிடமிருந்து கைப்பற்றியிருந்தார். இறுதிவரை அவற்றைப் புலிகளால் கைப்பற்றிக் கொள்ள முடியவில்லை.  

ஈ.பி.டி.பியும் அவற்றைப் புலிகள் மீண்டும் கைப்பற்றிக் கொள்ளாதிருக்க பெரும் உதவியாக இருந்தனர். இவை ஆவணப்படுத்தப்படுமா என்பது சந்தேகமே.  

மேஜர் ஜெனரல் ஜெரி டி சில்வா, கிறிஸ்தவர் என்பதால், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் அவரை, இராணுவத் தளபதியாக நியமிப்பதை தென்பகுதி தீவிரவாதிகள் எதிர்த்தனர். ஆனால், அவரது காலத்தில் தான், யாழ். குடாநாட்டைப் புலிகள் இழந்தனர். இறுதி வரை புலிகளால், குடாநாட்டை மீண்டும் கைப்பற்றிக் கொள்ள முடியவில்லை.  

அது படையினரின் இறுதி வெற்றிக்குப் பேருதவியாக அமைந்தது. லயனல் பலகல்ல, இராணுவ தளபதியாக இருந்த போதே, புலிகளின் பகுதிகளுக்குள் ஆழ ஊடுருவும் படையணி அமைக்கப்பட்டது. அது, படைகளுக்குப் பலத்த சக்தியாக மாறியிருந்தது.   

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2002 ஆம் ஆண்டு புலிகளுடன் செய்து கொண்ட போர் நிறுத்த உடன்படிக்கை, புலிகளின் பலத்தைப் பெருமளவில் அழித்து விட்டது. வெளி உலகைக் கண்ட புலிகளின் முக்கிய தளபதியான கருணா என்றழைக்கப்படும் விநாயகமூரத்தி முரளிதரன், புலிகளில் இருந்து பிரிந்தார். கருணா, பிரபாகரனுக்கு அடுத்தவராக இருந்ததாக பின்னர், தமிழ்ச்செல்வன் கூறியிருந்தார்.   

அந்த ஒப்பந்தத்தின் காரணமாக, புலிகள் மீதான சர்வதேசக் கண்காணிப்பு உத்தியோகபூர்வமாகியது. அனுபவம் வாய்ந்த பல புலிப் போராளிகள், திருமணமாகி குடும்ப வாழ்க்கைக்குள் அக்காலத்தில் புகுந்துவிட்டனர். ஒப்பந்தம் கடலை உள்ளடக்கவில்லை. அதனால் புலிகளின் கப்பல்கள் அக்காலத்திலேயே அழிக்கப்பட்டன.   

இவை, ரணிலின் ஒப்பந்தத்தால் ஏற்பட்ட விளைவுகளாக இருந்தும், ரணில் அவற்றுக்காக உரிமை கோராததாலும் ரணிலுக்கு பெருமை சேர்க்க, மஹிந்த விரும்பாததாலும் அந்த விடயங்கள் எவரது கண்ணிலும் படாமல் இன்றுவரை இருக்கின்றன. இவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆவணப்படுத்தப் போகும் வரலாற்றில் உள்ளடக்கப்படுமா என்பது சந்தேகமே.  

தமது தோல்விக்குப் புலிகளும் காரணமாகியிருந்தனர். அவர்கள் ராஜீவ் காந்தியை கொன்று, இந்தியாவைப் பகைத்துக் கொண்டனர். பின்னர், இந்தியா புலிகளை அழிக்கப் பெரும் பங்காற்றியது. புலிகள், சாதாரண சிங்கள மக்களைக் கொன்று, புலிகளின் போராட்டத்தை ஆரம்பத்தில் ஆதரித்த சிங்கள முற்போக்குச் சக்திகளைப் பகைத்துக் கொண்டனர்.   

முஸ்லிம்களை இம்சித்தும் சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றியும் முஸ்லிம்களைப் பகைத்துக் கொண்டனர். தமிழ் புத்திஜீவிகளைக் கொன்று, அவர்களையும் பகைத்துக் கொண்டனர்.   

அதேவேளை, புலிகள் 30,000 படையினர் பங்கு கொண்ட ‘ஜயசிக்குறு’ படை நடவடிக்கையை முறியடித்தனர். 11,000 படையினர் நவீன ஆயதங்களுடன் பாதுகாத்து வந்த ஆனையிறவு முகாமைத் தகர்த்தெறிந்தனர். சுமார் 1,500 படையினர் இருந்த முல்லைத்தீவு முகாமை அழித்தனர். அதிலிருந்து 250 படையினர் மட்டுமே உயிருடன் திரும்பி வந்தனர்.   

அனுராதபுரம், கட்டுநாயக்க விமான நிலையங்கள் மீதான புலிகளின் தாக்குதல்கள் சாதாரண படை நடவடிக்கைகள் அல்ல; இவை அவற்றின் உண்மையான தாக்கங்களுடன் ஆவணப்படுத்தப்படும் என்று கூற முடியாது.   

  •  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/போர்-வரலாறு-நடுநிலையாக-ஆவணப்படுத்தப்படுமா/91-220323

  • தொடங்கியவர்

புதிதாக எழுதப்படுமா போர் வரலாறு

Untitled-15-27a1528c80d4e7bbb22c85762f97d3c902ebaf82.jpg

 

"போர் வர­லாறு என்னும் போது, இலங்கை இரா­ணு­வத்தின் உண்­மை­யான போர் வர­லாற்றை எழுத வேண்­டு­மானால், அதன் உண்­மை­யான பிம்­பத்தை வெளிப் ப­டுத்த வேண்­டு­மானால், விடு­தலைப் புலி­களின் உண்­மை­யான வர­லாறும் வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்­டி­ யி­ருக்கும். 

எதி­ரியின் பலத்தை சரி­யாக வெளிப்­ப­டுத்­து­வது தான் ஒரு இரா­ணு­வத்தின் பலத்­தையும், வீரத்­தையும் உண்­மை­யாக வெளிக் கொண்டு வரும்.

விடு­தலைப் புலி­களை எதி­ரி­யாக கொண்­டதால் தான், இலங்கை இரா­ணு­வத்­துக்கு  சர்­வ­தேச புகழ் கிடைத்­தது." 

போர் முடிந்து பத்து ஆண்டுகளாகப் போகின்ற நிலையிலும், போர் வரலாற்றின் ஒரு பகுதியையாவது நடுநிலையோடும் உண்மையோடும் வெளிப்படுத்தக் கூடிய வகையில் தமிழர் தரப்பில் இருந்து எந்தவொரு ஆவணமும் வெளிவராதமை, வரலாற்றை ஆவணப்படுத்துவதில் தமிழர் தரப்பில் உள்ள பெருங் குறைபாடு என்பதா, அக்கறையீனம் என்பதா? என்று தெரியவில்லை.

விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான மூன்று தசாப்த காலப் போரை, முறை­யாக ஆவ­ணப்­ப­டுத்தும் ஒரு முயற்­சியில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இறங்­கி­யி­ருப்­ப­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன. கடந்த வாரம் ஆங்­கில வார­இதழ் ஒன்று தான் இது­பற்­றிய தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அழைப்பின் பேரில், முன்னாள் படைத் தள­ப­திகள் கடந்த 6ஆம் திகதி இரவு ஒரு இர­க­சிய சந்­திப்­புக்குச் சென்­றி­ருந்­தனர்.

அந்தச் சந்­திப்பு பற்­றியோ அதில் பேசப்­பட்ட விட­யங்கள் பற்­றியோ வெளியில் எந்த தக­வல்­களும் வெளி­யி­டப்­படக் கூடாது என்றும் கேட்டுக் கொள்­ளப்­பட்­டது.

முன்னாள் இரா­ணுவத் தள­ப­திகள் ஜெனரல் ஜெரி டி சில்வா, ஜெனரல் லயனல் பல­கல்ல, முன்னாள் விமா­னப்­படைத் தள­பதி எயர் மார்ஷல் ஜெயலத் வீரக்­கொடி மற்றும் எயர் சீவ் மார்ஷல் பத்மன் மென்டிஸ், முன்னாள் கடற்­படைத் தள­ப­திகள் அட்­மிரல் தயா சந்­த­கிரி, அட்­மிரல் பசில் குண­சே­கர, அட்­மிரல் சிசில் திசேரா மற்றும், பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி அட்­மிரல் ரவீந்­திர விஜே­கு­ண­ரத்ன, இரா­ணுவ, கடற்­படை, விமா­னப்­படைத் தள­ப­திகள், பாது­காப்புச் செயலர் உள்­ளிட்ட 25 பேர் வரை அந்தச் சந்­திப்பில் பங்­கேற்­ற­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

ஆனாலும், இந்தக் கூட்­டத்தில் இரண்டு முக்­கி­ய­மா­ன­வர்கள் பங்­கேற்­க­வில்லை. ஒருவர் இறு­திக்­கட்டப் போரில் இரா­ணுவத் தள­ப­தி­யாக இருந்து, வியூ­கங்­களை வகுத்து, தலைமை தாங்­கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா.

இன்­னொ­ருவர், புலி­க­ளுக்கு எதி­ரான போருக்கு அர­சியல் ரீதி­யான ஆத­ரவை உறு­திப்­ப­டுத்தி, போரை ஒருங்­கி­ணைத்த முன்னாள் பாது­காப்புச் செயலர் கோத்­தா­பய ராஜபக் ஷ.

கோத்­தா­பய ராஜபக் ஷ இப்­போது அமெ­ரிக்­காவில் இருக்­கிறார். அதனால் அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தாலும் அவரால் இதில் பங்­கேற்­றி­ருக்க முடி­யாது.

ஆனால் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா நாட்டில் இருந்­தாலும், அவர் இந்தக் கூட்­டத்தில் பங்­கேற்­க­வில்லை. சரத் பொன்­சே­கா­வுக்கும் ஜனா­தி­ப­திக்கும் இடையில் சரி­யான உற­வுகள் இல்லை. இதனால் அவ­ருக்கு அழைப்பு விடுக்­கப்­ப­டாமல் தவிர்க்­கப்­பட்­டதா அல்­லது சரத் பொன்­சே­காவே அழைப்பை புறக்­க­ணித்­தாரா என்று தெரி­ய­வில்லை.

எது எவ்­வா­றா­யினும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன போர் பற்­றிய ஒரு முழு­மை­யான வர­லாற்றைப் பதிவு செய்யும் முயற்­சியில் இறங்­கி­யி­ருக்­கிறார். ஆனால் அதற்­காக அவர் கையாள முற்­பட்­டுள்ள வழி­மு­றைகள் கடு­மை­யான விமர்­ச­னங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

மேற்­படி சந்­திப்பில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி, போர் பற்­றிய உண்­மை­யான சம்­ப­வங்­களைக் கொண்­ட­தாக வர­லாற்று ஆவணம் உரு­வாக்­கப்­பட வேண்டும் என்று கூறி­யி­ருப்­ப­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன.

போர் முடிந்த பின்னர், இரா­ணுவம், கடற்­படை, விமா­னப்­ப­டையைச் சேர்ந்த அதி­கா­ரிகள் பலர், போர் வர­லாற்று நூல்­களை எழு­தி­யி­ருக்­கி­றார்கள்.

'கோத்­தாவின் போர்' என்ற பெயரில் சிங்­கள ஊட­க­வி­ய­லாளர் சந்­திர பிரே­மவும் ஒரு நூலை எழு­தி­யி­ருக்­கிறார்.

இவ்­வா­றான நூல்­களின் பின்­னணி, போரின் உண்­மை­யான பரி­மா­ணத்தை வெளிப்­ப­டுத்­து­வ­தற்குப் பதி­லாக, சிலரை கதா­நா­ய­கர்­க­ளாக காட்டும் முயற்­சி­யா­கவே இருப்­ப­தாக எழுந்­தி­ருக்கும் விமர்­ச­னங்கள் பற்­றியும் இந்தக் கூட்­டத்தில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.

நந்­திக்­க­ட­லுக்­கான பாதை என்ற மேஜர் ஜெனரல் கமல் குண­ரத்­னவின் நூல், அவர் தன்னை இலங்கை இரா­ணு­வத்தின் ‘ரம்­போ’­வாக காண்­பிக்கும் வகையில் எழு­தப்­பட்­டுள்­ளது என்றும் விமர்­சிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

இவ்­வா­றான மிகை­யான – அல்­லது பக்கச் சார்­பான தக­வல்­களில் இருந்து விலகி, ஒரு முறை­யான வர­லாற்று நூலை எழுதும் முயற்­சி­யாகத் தான், முன்னாள் இரா­ணுவத் தள­ப­தி­களைச் சந்­தித்­தி­ருக்­கிறார் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன என்று கூறப்­ப­டு­கி­றது.

அவ்­வா­றான ஒரு முழு­மை­யான வர­லாற்றை எழு­து­வ­தற்கு ஜனா­தி­பதி திட்­ட­மிட்­டி­ருந்தால், பக்கச் சார்­பற்­ற­தாக- எல்லாத் தரப்பு விட­யங்­க­ளையும் உள்­ள­டக்­கிய நடு­நி­லை­யான ஒன்­றாக அதனை வெளி­யிட எண்­ணினால், அது சர்­வ­தேச அளவில் வர­வேற்­புக்­கு­ரிய ஒன்­றாக இருக்கும்.

ஏற்­க­னவே இலங்­கையின் வர­லாற்றை ஒட்­டி­ய­தாக எழு­தப்­பட்ட மகா­வம்சம், சூள­வம்சம், தீப­வம்சம், ஆகி­ய­வற்­றிலும் சரி, கோத்­தாவின் போர், நந்­திக்­க­ட­லுக்­கான பாதை, ஒரு போர் வீரனின் பதிப்பு, கடலில் சமச்­சீ­ரற்ற போர்­முறை, அதிஷ்­டா­னய போன்ற போர் வர­லாறு தொடர்­பான நூல்­க­ளிலும் சரி, ஒரு பக்க வர­லாறு அல்­லது பக்கச் சார்­பான தக­வல்கள், தர­வுகள் தான் இடம்­பெற்­றுள்­ளன.

இலங்­கையின் வர­லாற்றைப் பதிவு செய்­வதில், சிங்­கள மன்­னர்கள், தொடக்கம் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் மைத்­தி­ரி­பால சிறி­சேன வரை­யி­லான ஆட்­சி­யா­ளர்கள் உறு­தி­யா­கவே இருந்து வந்­தி­ருக்­கி­றார்கள்.

மகா­வம்­சத்தின் இணைப்­பாக, 1978 தொடக்கம், 2010 வரை­யான காலத்தில் வர­லாற்றை ஆவ­ணப்­ப­டுத்தும் பணி மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. ஜே.ஆர் ஜெய­வர்த்­தன தொடக்கம், பிரே­ம­தாச, டி.பி.விஜே­துங்க, சந்­தி­ரிகா குமா­ர­துங்க, மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லங்­களின் வர­லாற்றை அந்த இணைப்பில் பதிவு செய்ய நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தார் மஹிந்த ராஜபக் ஷ.

ஆனால் அந்த வர­லாற்று ஆவ­ணத் தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­வுக்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­வில்லை. சரத் பொன்­சேகா என்ற பெய­ரு­டைய ஒரு இரா­ணுவத் தள­பதி இலங்­கையில் இருந்தார் என்ற பதிவைக் கூட விட்டுச் செல்ல மஹிந்த ராஜபக் ஷ விரும்­ப­வில்லை.

இவ்­வா­றாக தமக்குச் சாத­க­மான வர­லாற்றை எழுத முற்­பட்­டதால் தான், சிங்­கள மன்­னர்கள், தள­ப­திகள், ஆட்­சி­யா­ளர்­களால் எழு­தப்­பட்ட வர­லாற்று நூல்கள் எல்­லோ­ரதும் அங்­கீ­கா­ரத்தைப் பெற முடி­யா­த­தாக இருக்­கி­றது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இப்­போது முன்­னெ­டுத்­தி­ருக்­கின்ற போர் வர­லாற்றை ஆவ­ண­மாக்கும் முயற்­சியும் கூட, நியா­ய­மா­ன­தாக- பக்கச் சார்­பற்­ற­தாக எழு­தப்­ப­டுமா என்ற கேள்­விகள் உள்­ளன.

இறு­திக்­கட்டப் போரில் முக்­கிய பங்­காற்­றிய சரத் பொன்­சே­காவோ, கோத்­தா­பய ராஜபக் ஷவோ பங்­கேற்­காத கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்­யப்­பட்­டதும், இறு­திக்­கட்டப் போரில் பங்­கெ­டுத்த முன்னாள் இரா­ணுவத் தள­ப­திகள் எவரும் சந்­திப்­புக்கு அழைக்­கப்­ப­டா­ததும், இந்தச் சந்­தே­கங்­களை எழுப்ப வைத்­தி­ருக்­கி­றது.

இலங்கை இரா­ணு­வத்தின் உண்­மை­யான போர் வர­லாற்றை எழுத வேண்­டு­மானால், அதன் உண்­மை­யான பிம்­பத்தை வெளிப்­ப­டுத்த வேண்­டு­மானால், விடு­தலைப் புலி­களின் உண்­மை­யான வர­லாறும் வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யி­ருக்கும்.

எதி­ரியின் பலத்தை சரி­யாக வெளிப்­ப­டுத்­து­வது தான் ஒரு இரா­ணு­வத்தின் பலத்­தையும், வீரத்­தையும் உண்­மை­யாக வெளிக் கொண்டு வரும். விடு­தலைப் புலி­களை எதி­ரி­யாக கொண்­டதால் தான், இலங்கை இரா­ணு­வத்­துக்கு சர்­வ­தேச புகழ் கிடைத்­தது.

அந்­த­ள­வுக்கு புலி­களின் வீரமும் பலமும் இருந்­தது. அதனை சரி­யாக மதிப்­பி­டாமல், தெளி­வாக குறிப்­பி­டாமல் வர­லாறு எழு­தப்­பட்டால், அது ஒரு­போதும் நியா­ய­மா­ன­தாக, உண்­மை­யா­ன­தாக பக்கச் சார்­பற்­ற­தாக ஏற்றுக் கொள்­ளப்­ப­டாது.

அது மாத்­தி­ர­மன்றி இந்தப் போரில் இலங்கை இரா­ணுவம் மிகப் பெரி­ய­ள­வி­லான போர்க்­குற்­றச்­சாட்­டு­க­ளையும் எதிர்­கொண்­டி­ருக்­கி­றது. இந்தக் குற்­றச்­சாட்­டுகள் குறித்த நேர்மையான பதிவுகளையும், அதற்கான பதில்களையும் கூட வரலாற்று ஆவணம் கொண்டிருந்தால் தான், அது உண்மையானதாக ஏற்றுக் கொள்ளப்படும்.

அதேவேளை, போரில் வெற்றியைப் பெற்ற தரப்பான அரச படைகளிலுள்ள அதிகாரிகளும், அரசாங்கமும் போர் தொடர்பான வரலாற்று ஆவணங்களை அதிகளவில் வெளியிட்டு வருகின்ற நிலையில், ஏராளமான போர் வரலாற்று தகவல்களைக் கொண்ட தமிழர் தரப்பில் இருந்து அத்தகைய வரலாற்று ஆவணங்கள் அரிதாகவே வெளிவந்திருக்கின்றன.

போர் முடிந்து பத்து ஆண்டுகளாகப் போகின்ற நிலையிலும், போர் வரலாற்றின் ஒரு பகுதியையாவது நடுநிலையோடும் உண்மையோடும் வெளிப்படுத்தக் கூடிய வகையில் தமிழர் தரப்பில் இருந்து எந்தவொரு ஆவணமும் வெளிவராதமை, வரலாற்றை ஆவணப்படுத்துவதில் தமிழர் தரப்பில் உள்ள பெருங் குறைபாடு என்பதா, அக்கறையீனம் என்பதா? என்று தெரியவில்லை.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-08-19#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.