Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒருபிடி சோறு!…. இரசிகமணி கனக.செந்திநாதன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒருபிடி சோறு!…. இரசிகமணி கனக.செந்திநாதன்.

 

சிறப்புச் சிறுகதைகள் (10) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – கனக.செந்திநாதன் எழுதிய ‘ஒருபிடி சோறு’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும்.

thumbnail_kanaga.senthinathan.png?resize

யாழ்ப்பாண மாதா மலடி என்று பெயர் கேளாமல் சத்திரசிகிச்சையோடு பெற்றெடுத்த நொண்டிக் குழந்தை தொண்டைமான் ஆறு. கடலிலே இருந்து வெட்டப்பட்ட அந்த உப்பங்கழிக்கு ‘ஆறு’ என்று பெயரிட்டதே விசித்திரம். அதனிலும் விசித்திரம் அந்தக் கழிக்கரையில் முருகப்பெருமான் இருக்க எண்ணங் கொண்ட கதை.

இந்த விசித்திரமான முருகன் பல திருவிளையாடல்களைப் புரிய, சாதி பேதமில்லாமல் எல்லா நோயாளரும் அவனைத் தஞ்சமடைந்திருந்தனர். இப்படித் தஞ்சமடைந்த பல பேருக்கும் அன்னமளிக்கும் புண்ணியத்தை பல ‘பணக்காரப் புள்ளிகளுக்கு’ நோய் கொடுப்பதனால் தீர்த்து வைத்தான்!

வெள்ளிக்கிழமை மடம். இந்த மடத்திற்கொரு கெளரவ ஸ்தானம் அந்தக் கோவிலில் உண்டு. எவர் அன்னதானம் பெரிதாக நடாத்தினாலும் அந்தப் பெருமையை அடைவது அந்த மடம்தான்.

இன்று மடத்திலே புகை கிளம்பிக் கொண்டிருக்கிறது. பக்கத்திலே இரண்டு வண்டிகள் பொருள்களை இறக்கிய வண்ணம் நிற்கின்றன. ஆமாம்! சனங்களின் ஊகம் சரி. யாரோ பெரிய இடத்து ‘அவியல்’. பிச்சைக்காரர் – கஷாயம் தரித்தவர். தீரா நோயாளர் – சோம்பேறித் தடியர்கள் எல்லோருக்கும் குதூகலம்தான்!!

அரிசனங்களின் மடம் அந்த வெள்ளிக்கிழமை மடத்திற்கு வெகு தொலைவில் பற்றைகளுக்கு மத்தியில். மனிதர்கள் ‘எட்டப் போ. எட்டப்போ’ என்று சொல்லாத அந்தக் கோவிலில் மடம் மாத்திரம் ஏன் அப்படித் ‘தீண்டத்தகாததாக’க் கட்டப்பட்டுள்ளது என்று ஒருவருக்கும் விளங்கவில்லை.

புண்ணியம் சம்பாதிக்க அந்த மடத்தைக் கட்டிய ‘புண்ணியவானை’த் திட்டிக் கொண்டே ஒரு கிழவி வந்து கொண்டிருந்தாள். ‘கட்டையிலே போறவன் ஏன் இவ்வளவு துலையிலே இதைக் கட்டினான்? நான் என்னமாய் நடக்கிறது? என்பது அவள் ‘வாழ்த்தின்’ ஒரு பாகம்.

‘உம் – உம் – உம் – ஆ – அப்பனே – முருகா! என்னைக் கெதியாகக் கொண்டு போ’ என்ற முனகலைக் கேட்டு கிழவி திட்டுவதை நிறுத்திவிட்டு விரைவாக மடத்தினுள் புகுந்தாள்.

“ஆத்தை. தண்ணீர் தா” என்றது அந்த எலும்புந் தோலுமாய்க் கிடந்து முனகிய உருவம். கிழவியும் அடுப்பில் இருந்த, சிறிது கொதித்த நீரை பேணியுள் வாத்து அந்த உருவத்தின் வாயுள் ஊற்றினாள். கை நடுங்கியது. தண்ணீர் கழுத்து, தோள் எங்கும் சிதறியது.

கொடுத்து முடிந்ததும், “மோனே, காய்ச்சல் கடுமையா? அப்பிடி எண்டால் வீட்டை போவோமா?” என்று அவள் கேட்டாள். “வீடா? எங்கே கிடக்குது அது? … உம் பேசாமைப் போய் ஏதாவது காய்ச்சு” என்றது அந்த உருவம்.

”எனக்குக் கொஞ்சம் பழஞ்சோறு இருக்குது. உனக்குக் காய்ச்ச அரிசியும் இல்லை. காய்கறியும் இல்லை. அந்தக் கட்டையிலே போறவள் இண்டைக்குக் கொண்டு வாறன் எண்டாள். அவளையும் காணவில்லை. பொழுதும் ஏறிவிட்டது. நான் என்ன செய்ய?” என்று அவள் முணு முணுத்தாள்.

”அப்ப என்னைப் பட்டினியாய்க் கிடக்கச் சொல்லுறியோ” என்றான் சின்னான். ஆம். அவன் தான் அந்தக் குடும்பத்தின் கடைசிப்பிள்ளை. கறுப்பியின் கடுந் தவத்தினால் நான்கு பெண் குழந்தைகளுக்குப் பின் சந்நதி முருகன் கொடுத்த வரப்பிரசாதம்.

“வெள்ளிக்கிழமை மடத்திலை யாரோ அவிச்சுப் போடுகினமாம். நான் போய் வாங்கிக் கொண்டு வாறன். ஒரு பிடி சோறு உனக்குப் போதுமே” என்றாள் கறுப்பி.

“உம்… போடுவார்கள்… உனக்காக? கோவிலிலே சுற்றித் திரிகிற சோம்பேறிகள்…. தடியர்கள் சாமிகள் இவர்களுக்கு. இடிபட்டு, மிதிபட்டு வாங்குகிறவர்களுக்கல்லோ ஒருபிடியாவது கிடைக்கும்? நீ காலைக் கையை உடைச்சுக் கொண்டுதான் வருவாய். ஒன்றும் வாங்க மாட்டாய்….. போ. சோத்தைக் காச்சு.” என்று உபதேசித்தான் அவன்.

மத்தியானத்து மணியோசை கேட்டது. “மோனே. மணியோசை கேட்குது. வாறியா கோயிலடிக்கு?” என்று கறுப்பி ஆதரவாகக் கேட்டாள். “இன்றைக்கு என்னாலை வர ஏலாது. காய்ச்சல்… இருமல் தலையிடி எல்லாம். நீ போய்க் கும்பிட்டு விட்டுத் திருநீறு, தீர்த்தம், சந்தனம் எல்லாம் வாங்கி வா. நான் இங்கேயே படுத்திருக்கிறேன்” என்ற அவனது பதில் ஈனஸ்வரத்தில் கேட்டது.

கிழவி ஒரு பெட்டியை எடுத்துக் கொண்டு தடியை ஊன்றியபடியே கோவிலுக்கு வந்து கொண்டிருந்தாள்.

மனித கூட்டத்தின் அவசரம் ஒருவரை ஒருவர் மிதித்துத்தள்ளி ஓடிக் கொண்டிருந்தார்கள். கிழவி பொல்லை ஆட்டியபடி காலை எட்டி வைத்து நடந்தாள்.

பறை மேளத்தின் ஓசை படீர் படீர் எனக் கேட்க ஆலய மணிகளின் கலகல ஓசை அதற்குள் அமுங்கியும் மிதந்தும் ஒலித்தது.

கிழவியின் அவசரம் பையன் எறிந்த வாழைப்பழத் தோலுக்குத் தெரியுமா? தடியை ஊன்றும் போது அந்தத் தோல் சறுக்கிவிட்டது. “ஐயோ! முருகா!!” என்ற சப்தத்தோடு கிழவி விழுந்தாள். ’தடக்’ என்ற ஓசையோடு தடி கற்களின் மேல் உருண்டது. பின் பக்கத்தில் அவசரமாய் வந்த மோட்டாரில் இருந்த கனவான் திட்டியபடியே ‘கோணை’ அமுக்கினார். “பெத்தா! விழுந்தா போனாய்? எழும்பு… எழும்பு” என்று பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்த பையன் தூக்கி நிறுத்தி தடியையும் எடுத்துக் கொடுத்தான். “நீ நல்லாய் இருக்க வேணும்” என்று வாழ்த்துரை கூறிவிட்டு நடந்தாள் கிழவி. “கிழடு கட்டைகளுக்கு ஒரு கோயில் வரத்து” என்று காரில் போகும் கனவான் கூறியது அவளுக்குக் கேட்கவில்லை.

“குன்ற மெறிந்தாய்” என்று ஒரு பக்தர் பாடும் பாட்டு. “முருகா! வேலா!!” என்று இரண்டு கைகளையும் நீட்டிப் பிள்ளைவரம் வாங்கும் பெண்ணின் ஓலம். “புன்னெறி அதனில் செல்லும்” என்ற புராணத்துடன் நிலத்தில் விழுந்து கிடக்கும் அடியவர் புலம்பல். “பாராயோ என்னை முகம்” என்று பஞ்சத்துக்கு ஆண்டி பாடும் ஒலி. சங்குகளின் நாதம். பறை மேளத்தின் ஓசை. தவில்காரனின் கிருதா. நாதஸ்வரத்தின் அழுகை. எல்லாம் ஒன்றாய்த் திரண்டு ஒரே ஆரவாரம்.

இவ்வளவிற்கும் மத்தியில் “முருகா! நீ தந்த சின்னான் உன்னை நம்பி வந்து கிடக்கிறான். நீ தான் காப்பாத்த வேணும்.” என்ற அழுகை கேட்டது. அது கறுப்பியின் வேண்டுகோள் அல்லாமல் வேறு யாருடையது? அவளுக்கு தேவாரமோ புராணமோ தெரியாது.

பிள்ளையார் வாசல் – வள்ளியம்மன் இருப்பிடம் – நாகதம்பிரான் புற்று – முருகனின் மூலஸ்தானம் – எல்லாம் சுற்றி வந்து ஒவ்வொரு இடத்திலும் தன் வேண்டுகோளைக் கேட்டு முடித்தாள் கறுப்பி.

பூசை முடிந்தது. அதிசயம்! இத்தனை பக்த கோடிகளில் பத்தில் ஒரு பங்கு பேர் கூட அவ்விடம் இல்லை. அவர்கள் வயிற்றுப் பூசைக்காக மடத்துக்கு ஓடும் காட்சியைக் கண்டு கறுப்பி சிரித்தாள். ஆமாம்! முருகப்பெருமானும் சிரித்திருக்க வேண்டும்!! அவ்வளவு பேருக்கும் வயிற்றுப் பூசை தேவையாக இருந்ததோ என்னவோ? ஆனால் அவளுக்கு – இல்லை – அவள் பெற்ற அருமைச் செல்வன் சின்னானுக்கு ஒருபிடி சோறு தேவையாகத்தான் இருந்தது. எல்லாரும் மடத்தை நோக்கி ஓடியபோது “தலை சுற்றுது… போ… சோத்தைக் காச்சு” என்று கேட்ட, தன் மகனின் ஞாபகம் அவள் மனக்கண் முன் நின்றது.

விபூதி, சந்தணம் எல்லாம் வாங்கி இலையில் வைத்து மடித்துத் தன் சீலைதலைப்பில் முடிந்தாள். ஒரு சிரட்டையில் கொஞ்சம் தீர்த்தம் வாங்கினாள். பெட்டியையும் பொல்லையும் எடுத்துக் கொண்டு மடத்துக்கு வந்து கொண்டிருந்தாள்.

அங்கே ஒரே ஆரவாரம்! ஒருவரோடு ஒருவர் இடிபட்டுக் கொண்டு ஏறி விழுந்து கொண்டும் இருந்தார்கள். உள்ளே போவோரையும் வெளியே வருவோரையும் “அவியல் முடிந்ததா?” என்று ஆவலாகக் கேட்கும் கேள்வியும் திண்ணையிலிருந்து பண்டாரங்கள் அரட்டை அடிக்கும் ஓசையும் வானைப் பிளந்தன.

அந்நேரத்தில் கறுப்பி மடத்தைக் கடந்து கொண்டிருந்தாள். விபூதியை மகனுக்குக் கொடுத்துவிட்டுத் திரும்பி வந்து சோறு வாங்கலாம் என்று ஒரு கணம் யோசித்தாள். ஆனால் நேரம் போய்விட்டால் ஒருபிடி சோறும் வாங்க முடியாதே என்று மறுபடி நினைத்தாள்.

’இருதலைக் கொள்ளி எறும்பு போல’ என்று புலவர்கள் வர்ணிக்கிறார்களே அதே நிலை அவளுக்கு. தங்கள் மடத்தை ஒருமுறை பார்த்தாள். “ஐயோ! போயிட்டு வர ஒரு மணியாவது செல்லுமே” என்று அவள் மனம் திக்கிட்டது.

“இந்த அளவுக்கும் பொறுத்த பொடியன் எப்பன் நேரம் பொறுக்க மாட்டானா?” என்று அவள் முணு முணுத்தாள். தீர்த்தச் சிரட்டையை மனிதப் பிராணிகளின் காலடி படாத ஒரு பற்றை மறைவில் வைத்துவிட்டுத் திரும்பினாள். ஒரு நிமிஷம். கூட்டத்தின் மத்தியிலே நடுங்கிய கையோடு ஒரு பெட்டி மேலெழுந்து நின்றது.

“சரி எல்லோரும் வரலாம்” என்ற உத்தரவு பிறந்தது. ஒவ்வொரு மனித மிருகமும் பலப்பரீட்சை செய்தபடி உள்ளே போனது.

“ஐயோ! ஆறு நாளாய்ப் பட்டினி மவராசா!!” என்று கதறும் ஒரு கிழவனின் தீனக்குரல்.

“ஐயோ! சாகிறேன்” என்று கூட்டத்தின் மத்தியில் இடிபடும் குழந்தையின் அலறல்.

“அடா! உனக்குக் கண் பொட்டையா? காலில் புண் இருப்பது தெரியேலையோ” என்று கோபிக்கும் தடியனின் உறுமல்.

“சம்போ! சங்கரா!! மகாதேவா!!!” என்று இழுக்கும் தாடிச்சாமியின் கூப்பாடு.

“சாமி! கொஞ்சம் வழி விடுங்களேன்!” என்று மன்றாடும் சிறுமியின் அழுகை. நாய்களின் குரைப்பு. காகத்தின் கொறிப்பு. எவ்வளவோ ஆரவாரம்.

இவ்வளவுக்கும் மத்தியில் “ஒரு பிடி சோறு”, “ஒருபிடி சோறு” என்ற சத்தம். அந்தக் கிழட்டுப் பிணத்தின் சத்தத்தை யார் கவனிக்கப் போகிறார்கள்?

முதலாவது பந்தி நிரம்பியது. கதவு மூடும் சத்தம் கிழவிக்குக் கேட்டது. “ஐயோ! ஒருபிடி சோறு” என்று பலமாகக் கத்தினாள். கடைசி முறையாக. அதுவும் பிரயோசனமற்ற வெறுங் கூச்சலா முடிந்தது.

இனி அடுத்த முறைக்கு எவ்வளவு நேரமோ? அதுவும் இப்படி முடிந்து போனால் அடுத்த முறை… ஐயோ! என் மகன் சின்னான்! “அவன் சொன்னது… சரியாய்ப் போச்சு தடியன்கள்… சாமிகள், சோம்பேறிகளுக்கு போடுவான்கள்… நமக்கா? கையைக் காலை உடைச்சுக் கொண்டுதான் வருவாய் என்றானே அது சரி… மெத்தச் சரி” என்று அவள் மனத்துள்ளே புகைந்தாள்.

நெடுநேரம் தாமதிக்க முடியாது என்பது அவளுக்குத் தெரியும். ஒவ்வொரு நிமிடமும் சின்னானின் பசி – பசி என்ற ஓசை கேட்டவண்ணமாய் இருந்தது அவள் மனதில். இனி வெறுங்கையோடு திரும்ப வேண்டியது தான் என்பதை நினைக்கையில் ஏதோ குற்றம் செய்த்தவள் போல அவள் துடித்தாள். ‘குற்றமில்லாமல் வேறென்ன? … இந்த விபூதி சந்தணைத்தையாவது கொடுத்துவிட்டு வந்தோமில்லையே!’ என்ற நினைப்பு முள் போலக் குத்திக் கொண்டிருந்தது. இடையிடையே அந்த முடிச்சைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள்.

திடீரென்று அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. ’மறுபக்கம் போய்ப் பார்த்தால் ஒருவேளை கிடைக்கலாம். அங்கு பெண்கள் இருப்பார்கள். அவர்களிடம் பல்லைக் காட்டினால் ஒரு பிடி சோறு போட மாட்டார்களா’ என்பதுதான் அது.

இந்த எண்ணம் பிடர் பிடித்து உந்த, பொல்லையும் பெட்டியையும் எடுத்துக் கொண்டு சமையற்பக்கம் போனாள். “அம்மா ஒரு பிடி சோறு” என்று அவள் பலம் கொண்ட மட்டும் கத்தினாள்.

ஒரே சமயத்தில் இரண்டு கதவுகள் திறந்தன. ஒன்று வெள்ளிக்கிழமை மடத்துச் சமையற் பக்கத்துக் கதவு. மற்றது பள்ளர் இருக்கும் மடத்துப் பெரிய அறையின் கதவு.

அதைத் திறந்தவள் பூதாகாரமான ஒரு சீமாட்டி. இதைத் திறந்தவள் எலும்பும் தோலுமான சின்னான்.

மலேரியாக் காய்ச்சலின் உக்கிரத்திலே டாக்டர்களுக்குப் பணங் கொடுக்க முடியாத நிலைமையிலே சந்நிதி முருகனைத் தஞ்சமடைந்த அந்தச் சின்னான் தனக்குத் துணை செய்ய வந்த ஆத்தையின் வரவைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் வந்த பாடில்லை. காய்ச்சல் உதறியது. தலை சுழன்றது. நா வறண்டது. தண்ணீர் விடாய்… பசி…. எல்லாம். பக்கத்தில் இருந்த முட்டியை எடுத்துப் பார்த்தான். ஒரு துளி தண்ணீர் கூட இல்லை. வீசி எறிந்தான்.

‘படீர்’ என்று முட்டி சுக்கல் சுக்கலாய் உடைந்துவிட்டது. அவன் ஆத்திரம் அவ்வளவு.

’இவ்வளவு நேரமாய் எங்கே போனாள், பாழ்பட்ட கிழவி?’ என்று பல தடவை திட்டினான் அவன். என்ன பிரயோசனம்? எல்லாம் பழையபடிதான்…. பசி! …. தண்ணீர்!!

கம்பளியை எடுத்து மூடிக் கொண்டு சிறிது நேரம் படுத்தான். கண்களைக் கெட்டியாக மூடிப் பார்த்தான். ஒன்றாலும் திருப்தி ஏற்படவில்லை. வயிற்றில் பசி மிகுந்தது. தண்ணீர் விடாய் கூடியது.

”தண்ணீர் தண்ணீ….ர் …. தண்…ணீர்” என்று அவன் அலறினான். வெறும் சொற் கூட்டந்தான். தொண்டை கூட அடைத்து விட்டது. எழுந்திருந்து யோசித்தான். கிழவியோ வந்த பாடில்லை. “அவள் சோறு வாங்கப் போனாள்… சோறு கொடுப்பார்கள்…. நமக்கா? தடியர்கள் சோம்பேறிகள் சன்னாசிகளுக்கு….. ஏழைகளுக்கா?” இந்தக் கசப்பான உண்மையைப் பல தடவை திருப்பித் திருப்பிப் பைத்தியக்காரன் மாதிரிச் சொன்னான். கண்ணை மூடினான் ஒரு கணம். எலும்புந் தோலுமான அவன் ‘ஆத்தை’ – கறுப்பி – சனக் கூட்டத்தின் மத்தியிலே நசுக்கப்பட்டு “ஐயோ! ஐயோ!!” என்று கதறும் காட்சி அவன் மனத்திரையில் தோன்றியது. “எனக்குச் சோறு வேண்டாம்…. வா! ஆத்தை… “ என்று பலமாகவும் பரிதாபமாகவும் கூப்பிட்டான்.

கண்ணைத் திறந்தான். செத்தல் நாயொன்று மடத்தின் வாயிலை எட்டிப் பார்த்தது.

“உம். உனக்கும் பசியா? வெள்ளிக்கிழமை மடத்துக்குப் போகாதையேன்…. எச்சில் இலைச் சோறாவது கிடைக்கும். ஓ, அங்கையும் கொழுத்த நாய்கள் உனக்கு எங்கே விடப் போகுதுகள்? எங்கேயும் போட்டி, பொறாமை. மெலிந்தவனுக்கு வலியவன் விடாத அக்கிரமம்… இங்கை ஒன்றும் இல்லை.”

”இல்லையா…. இருக்கிறது” என்று ஏதேதோ சொன்னான் நாயைப் பார்த்து.

“இருக்கிறது… இருக்கிறது” என்றான் மெளனமாக. “ஓம் அங்கை பழஞ்சோறு இருக்குது என்று சொன்னாளே ஆத்தை. அட… இவ்வளவும் என் மூளைக்குப் படவில்லையே! நில். நில். உனக்கும் தாறேன்” என்று முணுமுணுத்தான். தெளிவு. மகிழ்ச்சி – எல்லாம் அவன் முகத்தில் தோன்றின.

மெல்ல எழுந்து சுவரைப் பிடித்துப் பிடித்து வாயிலுக்குப் போய்ச் சேர்ந்தான். கதவைத் தள்ளினான். அது மெல்லத் திறந்தது. பைத்தியம் மாதிரி இருந்தவன் அதிக மகிழ்ச்சியில் அசல் பைத்தியமாய் விட்டான்.

”சோறு தண்ணீர் எல்லாம். தண்ணீர்… சோறு எல்லாம்” என்று பல முறை கூவினான். “பாவம் கிழவி ஒரு பிடி சோத்துக்கு அலையுதே…. இங்கை எத்தனை பிடி சோறு… போதும் போதுமென்ன இருக்கே” என்று பலதரம் தன்னுள்தானே கூறினான்.

இருந்த சோறு அவ்வளவையும் சட்டியிற் போட்டுப் பிசைந்தான். ஒவ்வொரு கவளமாய் வாய் மென்று விழுங்கியது. “ஓ! அச்சா” என்று ஆனந்த மிகுதியில் பிதற்றினான். வந்த நாயும் அப்போது ஆவலாகக் கிட்ட வந்தது. “பாவம் நீயும் தின்” என்று ஒரு கவளத்தை எடுத்து இருந்தபடியே எறிந்தான்.

சாப்பிட்டு முடிந்தது. குளிர்… நடுக்கம்… உதறல்… எழுந்திருக்கவே முடியவில்லை. கைகூடக் கழுவவில்லை. பானை சட்டி எல்லாம் வைத்தது வைத்த படிதான்.

எழுந்ததும் விழுந்துவிடுவான் போல் இருந்தது. மார்பால் தவழ்ந்து பாய்க்குப் போய்ச் சேர்வதே சங்கடமாகி விட்டது.

“ஐயோ! முருகா… என்னைக் கொண்டு போ” என்று அலறினான். கம்பளியால் இழுத்துப் போர்த்தான். தேகம் ‘ஜில்’ என்று குளிர்ந்து விட்டது. ஒரே விறைப்பு. பிதற்றல். “ஆத்தை… ஆத்தை… வா.”

அவன் போட்ட சத்தம் அவளுக்குக் கேட்க முடியாது. என்றாலும் அவள் தன் பலங் கொண்ட மட்டும் விரைவாகத்தான் வந்து கொண்டிருந்தாள். தான் வாங்கிய சோற்றைக் கொடுப்பதற்கல்ல. இனிமேலாவது சமைத்துக் கொடுக்கலாம் என்பதற்காகத்தான்.

ஒரு பிடி சோறும் அவளுக்குக் கிடைக்கவில்லையா? கிடைக்கும் தருணத்தில் இருந்தது. ஆனால் அவளுக்கு வாங்கப் பிரியமில்லை… ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

‘ஒரு பிடி சோறு…. ஒரு பிடி சோறு’ என்று அலறிய அந்தக் கறுப்பிக்குச் சோறு போடுவதற்கு அந்தச் சீமாட்டி திரும்ப வந்து பார்க்கும் போது அவள் தூரத்தே போய்க் கொண்டிருப்பதைக் கண்டாள். ஏனோ? “நமக்கு மானம் ரோசம் இல்லையா? கறுமி… மலடி… சண்டாளி. இவள் கையால் ஒரு பிடி சோறா? வேண்டாம்… வேண்டாம்” என்று அலட்டியபடி போகும் கிழவியின் கருத்தென்ன?

”இன்னும் அவள் செருக்கு மாறவில்லை. இங்கையும் வந்து தன் சாதிப்புத்தியைக் காட்டி விட்டாளே” என்று இந்தச் சீமாட்டி பொருமுவதன் மர்மமென்ன?

இருவருக்கும் முன் அறிமுகம் உண்டா? … உண்டு. அறிமுகம் அல்ல; பெரும்பகை. அவர்களைச் சீமான் சீமாட்டி ஆக்கியதெல்லாம் தன்னுடைய மகனின் உழைப்பு என்பது கிழவியின் எண்ணம். இதில் உண்மை இல்லாமல் இல்லை.

வற்றாத ஊற்றைக் கொண்ட ‘நிலாவரைக் கேணி’ இருந்தும் ‘நவக்கிரி’ என்னும் அந்த ஊரை – இயற்கைத் தேவி தன் திருக்கண்ணால் பார்க்கவில்லை. ஒரே கல்லும் முள்ளும், பற்றைக் காட்டில் முயல் பிடிக்கும் கெளபீன கோலச் சிறுவர் வேட்டை நாயுடன் திரிவர். அந்த ஊரை விட்டு ‘வன்னித் தாயை’ச் சரணடைந்து கந்தர் – கந்தவனம் – கந்தப்பிள்ளை – வட்டிக்கடை முதலாளி ஆகியது பெரும் புதினம்.

அந்தக் கந்தப்பிள்ளையின் வீட்டு வாயிலில் ‘நகை அடைவு பிடிக்கத் தத்துவம் பெற்றவர்’ என்ற விளம்பர பலகை ஏறிய அன்றைக்கே அவரின் கீழ் வன்னி நாட்டில் கமத்தொழில் செய்து வந்த சின்னானுக்கு ‘மலேரியா’ ஏறியது.

மூன்றான் நாள் அவன் வன்னி நாட்டை விட்டுத் தன் ‘தாய்த் திருநாட்டுக்கு’ மலேரியாக் காய்ச்சலோடு வந்து சேர்ந்தான்.

ஏமாற்றம். ஒரு வருடத்துக்குப் போதுமான நெல்லோடு வந்திறங்குவான் எனக் கற்பனை பண்ணிக் கொண்டிருந்த கறுப்பிக்கு இது எப்படி இருக்கும்? பெரிய ஏமாற்றம். தங்கள் முதலாளி கந்தப்பிள்ளையின் வீட்டை அடைந்து அடுக்களைப் பக்கம் போன கறுப்பியோடு அந்த வீட்டுச் சீமாட்டி முகங் கொடுத்துப் பேசவே இல்லை.

சீமாட்டிக்குப் பிள்ளைப் பேற்றிற்காக அந்தத் தாடிக்காரச் சாமியார் சொல்லிய முறைப்படி வருகிற வெள்ளிக்கிழமை ‘அவிச்சுப்போட’ எத்தனை ரூபா பணம் தேவை என்ற செலவைப் பற்றிய எண்ணம்.

கறுப்பிக்குத் தன் மகனை எப்படியாவது உயிர் பிழைக்கச் செய்ய வேண்டும் என்ற நினைப்பு.

‘இந்த நினைப்பில் ஒரு மூடை நெல்லு; ஒரு பறை நெல்லு; ஒரு கொத்து நெல்லு; பத்து ரூபாய் – ஐந்து ரூபாய் – ஒரு ரூபாய் என்று கண்ணபிரான் துரியோதனனைக் கேட்ட ரீதியாகக் கேட்டுப் பார்த்தாள் – மன்றாடினாள் – அழுதாள் – கத்தினாள்.

சீமாட்டி ஒன்றுக்கும் ‘மசி’வதாயில்லை. கடைசியில் கறுப்பியின் ஆத்திரம், ‘மலடிகளுக்குப் பிள்ளையின் அருமையைப் பற்றித் தெரியுமா?’ என்ற பெரு நெருப்பாக வெளிவந்தது.

இந்த நாவினாற் சுட்டவடு சீமாட்டியை ஒரு குலுக்கு குலுக்கிற்று.

‘போடி வெளியே. பள்ளுபறைகளுக்கு இந்தக் காலம் தலைக்கு மிஞ்சின செருக்கு. உன் மகன் எங்களுக்கு அள்ளி அள்ளிச் சும்மாதான் கொடுத்தானோ? வேலை செய்தான். கூலி கொடுத்தோம். அதுக்கு வேறு பேச்சென்னடி? மலடி…. மலடி என்கிறாயே. கடவுள் கண் திறந்தால் இனியும் பிள்ளைப் பாக்கியம் வராதா?’ என்று ஆத்திரத்தைத் தீர்த்தாள் சீமாட்டி.

“கடவுள் கண் திறப்பார்! உங்களுக்கா?” என்று அநாயாசமாகச் சிரித்துவிட்டு வெளியேறிய கறுப்பி தன் மகனின் உழைப்பால் தின்று கொழுத்து ஊராருக்கு அன்னதானம் செய்து புண்ணியம் சம்பாதிக்க வந்த சீமாட்டியிடம் இன்றும் ஒரு பிடி சோறு வாங்கச் சம்மதிக்காதது அதிசயமன்று.

கிழவி மடத்துக்கு வந்து சேர்ந்தாள். நாய் அவளைக் கண்டு வெளியே போயிற்று. தீர்த்தத்தை வாயில் விட மகனை எழுப்பினாள். அவன் அசையவே இல்லை. மூக்கடியில் கை வைத்துப் பார்த்தாள். ஏமாற்றந்தான்!

”அவள் சாகக் கொன்று விட்டாள். சீமாட்டி கொன்றே விட்டாள். என் மகனைப் பட்டினி போட்டுக் கொன்று விட்டாள்” என்று அலறினாள். “சந்நதி முருகா! நீயும் பணக்காரர் பக்கமாய் நின்று ஏழைகளைக் காப்பாற்றாமல் கைவிட்டு விட்டாயே” என்று கதறினாள்.

சீமாட்டியின் ஆட்கள் செல்லும் வண்டிகளின் ‘கடமுடா’ச் சத்தமும் வெண்டையங்களின் ஓசையும் தூரத்தே கேட்டன.

“புண்ணியம் சம்பாதிச்சியா? … போ … போ” என்று அவள் பல்லை நெருடினாள்.

உடைந்த முட்டியும் ‘ஒரு பிடி சோறு’ வாங்கச் சென்ற ஓலைப் பெட்டியும் தவிர இந்தச் சொற்களைக் கேட்க அங்கு வேறு மனிதர்களாக யார் இருக்கிறார்கள்?

 

http://akkinikkunchu.com/?p=62165

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

“சந்நதி முருகா! நீயும் பணக்காரர் பக்கமாய் நின்று ஏழைகளைக் காப்பாற்றாமல் கைவிட்டு விட்டாயே” 

அப்பொழுதே சந்நதியானுக்கு ஒரு சவுக்கடி.

என்னமாய் எழுதியிருக்கிறார். வாசித்தபின் வந்த சோகம் போக நாளாகும்

பதிவுக்கு நன்றி கிருபன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.