Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்த முதலமைச்சராகவும் விக்னேஸ்வரன் வரவேண்டுமா?

Featured Replies

அடுத்த முதலமைச்சராகவும் விக்னேஸ்வரன் வரவேண்டுமா?

 
vikneswaran.jpg

‘வடக்கு மாகாண சபைக்கான முதலமைச்சருக்கான விண்ணப்பம் மக்களினால் கோரப்பட்டுள்ளது.

அடிப்படைத் தகுதி: அரச உயர் பதவி ஒன்றில் இருந்து ஓய்வு பெற்றவர் விரும்பத்தக்கது. தமது பதவிக்காலத்தில் மக்களின் உணர்வுகளை மதிக்காதவர்கள், அரச இயந்திரத்திற்கு ஒத்து ஊதியவர்கள் விரும்பத்தக்கது. இவர்கள் பிறந்தது, கல்வி கற்றது மற்றும் நிரந்தர வசிப்பிடம் வடக்கு மாகாணத்தின் எப்பகுதியிலாயினும் இருத்தல் ஆகாது.

இவரிற்கு கடந்த காலங்களில் பங்கர் வெட்டுதல், ஊர்வலங்கள், இடப் பெயர்வுகள், பாண், அரிசி என்பவற்றிற்கு வரிசையில் நின்றிருத்தல், சைக்கிளில் பயணம் செய்திருத்தல், மண்ணெண்ணெய் மற்றும் செக்கில் ஊற்றிய தேங்காய் எண்ணெயில் கல்வி கற்றிருத்தல் போன்ற முன் அனுபவங்கள் எவையும் இருத்தல் ஆகாது…….(யாவும் கற்பனை)’இவ்வாறு எழுதியிருப்பவர் பருத்தித்துறையைச் சேர்ந்த ஒரு மருத்துவ அதிகாரி.

தனது முகநூல் பதிவில் மேற்கண்டவாறு எழுதியுள்ளார். சுன்னாகம் குடிநீரில் எண்ணெய் கலந்திருப்பது தொடர்பான சர்ச்சையில் மாகாணசபைக்கு எதிராக தீவிரமாக செயற்பட்ட ஒருவர். இவருடைய முகநூல் பதிவின் ஒரு பகுதியே இது.

அவர் எழுதியிருப்பதில் ஒரு பகுதி உண்மையுண்டு. 2009ற்குப் பின்னரான தமிழ் அரசியலில் முதன்மை பெற்றிருக்கும் பலரும் அவர் கூறுவது போல பாதுகாப்பான இறந்தகாலத்தைப் பெற்றவர்கள்தான். அதே சமயம் தமது இறந்தகாலச் செயற்பாடுகள் காரணமாக தற்பொழுதும் ஒரு கட்டத்திற்கு மேல் செயற்பட முடியாதிருக்கும் பலரும் அரசியலில் இறங்கத் தயங்குகிறார்கள். 2009ற்குப்பின் மிதவாத அரசியலில் இறங்கிய முன்னாள் இயக்கத்தவர்களில் ஒரு தொகுதியினர் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகிறார்கள்.

அவர்களால் தேர்தல் களத்தில் வெற்றிபெறவும் முடியவில்லை. ஒரு காலம் தனது சமூகத்திற்காக உயிரைக் கொடுக்கத் தயாராக இருந்தவர்கள், ரிஸ்க் எடுத்தவர்கள் இப்பொழுது அரசியலில் இறங்குவதற்குத் தடையாக இருப்பவை எவை?

இக்கேள்விக்கு விடை காண்பதென்றால் 2009ற்குப் பின்னராக தமிழ் அரசியலை ஆழமாக விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் ஓர் இனப்படுகொலை மூலம் ஒடுக்கப்பட்டது. யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட தமிழ்த்தரப்பு யுத்தமல்லாத வழிவகைகளில் தொடர்ந்தும் ஒடுக்கப்படுகிறது. அதுதான் கட்டமைப்புசார் இனப்படுகொலை.

எனவே 2009ற்குப் பின்னரான அரசியலை இனப்படுகொலைக்குப் பின்னரான அரசியல் என்றுகூட அழைக்க முடியாது. அதை மிகப் பொருத்தமான வார்த்தைகளில் சொன்னால் கட்டமைப்பு சார் இனப்படுகொலைக்கு உள்ளாகும் ஒரு மக்கள் கூட்டத்தின் அரசியல் என்றே அழைக்க வேண்டும்.

இவ்வாறான ஓர் அரசியற்களத்தில் தமது இறந்தகாலச் செயற்பாடுகள் காரணமாக இப்பொழுதும் ஆபத்தை எதிர்நோக்குகிறவர்கள் இறங்கிச் செயற்படத் தயங்குகிறார்கள். எனவே பாதுகாப்பான இறந்தாகாலத்தைப் பெற்றவர்களே கடந்த ஒன்பது ஆண்டுகளாக சமூகத்தின் பேச்சாளர்களாகவும், தலைவர்களாகவும், பிரதிநிதிகளாகவும் காணப்படுகிறார்கள்.

இதில் மிக அருந்தலான புறநடைகளே உண்டு. நாடாளுமன்றத்திலும் சரி, மாகாணசபையிலும் சரி, பிரதேச சபையிலும் சரி நிலமை அப்படித்தான் உள்ளது.

கடந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக கட்சிகள் வேட்பாளர்களை தேடிய பொழுது மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களை தேடித்தேடி நியமித்தார்கள். இது மாவீரரின் தியாகத்தை கௌரவிப்பதற்காகவா அல்லது அவர்களுடைய தியாகத்தை வாக்குவேட்டை அரசியலுக்காக பயன்படுத்தும் ஓர் உத்தியா? என்ற கேள்வி இங்கு முக்கியம்.

ஆயுதப் போராட்டத்தில் காணப்பட்ட இலட்சியப் பிடிப்பையோ அல்லது தியாக உணர்வையோ, அர்ப்பணிப்பையோ, நேர்மையையோ கடந்த ஒன்பதாண்டு கால மிதவாத அரசியலில் பெருமளவிற்குக் காண முடியவில்லை. தமிழ் மக்களைப் பிரதிநிதிப்படுத்துவது என்பது கிட்டத்தட்ட பிரமுகர் அரசியலாக மாறிவிட்டது.

வெள்ளையும் சொள்ளையுமாகக் காட்சியளிப்பது, மாலையும் கழுத்துமாக காட்சியளிப்பது, தொண்டர்கள் புடைசூழ உலா வருவது, ஊடகங்களில் தனது பெயர் வருமாறு பார்த்துக் கொள்வது, வாகனங்களும் உட்பட கிடைக்கக்கூடிய சலுகை அனைத்தையும் அனுபவிப்பது. இதுதான் கடந்த ஒன்பதாண்டுகால தமிழ் அரசியலாகக் காணப்படுகிறது. இதில் சில புறநடைகள் இருக்கலாம். ஆனால் பொதுப்போக்கு எனப்படுவது ஆரோக்கியமானது அல்ல.

ஆயுதப் போராட்டம் வேறு, மிதவாதம் அரசியல் வேறு என்பதை இக்கட்டுரை விளங்கி வைத்திருக்கிறது. ஆயுதப் போராட்டத்தின் அளவு கோல்களால் மிதவாத அரசியலை அளக்கக் கூடாது. ஆனால் ஆயுதப் போராட்டமோ ஆயுதமற்ற போராட்டமோ அல்லது மிதவாத அரசியலோ எதுவாயிருப்பினும் எல்லாவற்றிற்கும் ஒரு தார்மீக அடித்தளம் உண்டு. தன்னைத் தெரிந்தெடுத்த மக்களுக்கு நேர்மையாக இருப்பது என்பது ஓர் அடிப்படைத் ஒழுக்கமாகும். இத்தகமை தற்பொழுது அரங்கிலுள்ள எத்தனை தலைவர்களுக்கு உண்டு?

இவ்வாறானதோர் பின்னணிக்குள்தான் பாதுகாப்பான இறந்தகாலத்தைப் பெற்ற பிரமுகர்களே தொடர்ந்தும் அரசியலில் இறங்குகிறார்கள். தமிழ் மக்கள் மத்தியில் இப்பொழுது இருப்பது அதிகபட்சம் பிரமுகர் மைய அரசியல்தான். அரசியல்வாதிகளுக்கு வெளியே உருவாக்கப்பட்ட தமிழ் சிவில் சமூக அமையமும் தொடக்கத்தில் ஒரு பிரமுகர் மைய அமைப்புத்தான்.

தமிழ் மக்கள் பேரவையும் ஒரு பிரமுகர் மைய அமைப்புத்தான். 2009ற்கு முன்னரும் தமிழ் மிதவாத அரசியலெனப்படுவது அதிகபட்சம் பிரமுகர் மைய அரசியல்தான். அப்புக்காத்து அரசியல் எனப்படுவதே அதுதான். அது மிகக்குறைந்த பட்சமே செயற்பாட்டு அரசியலாகக் காணப்பட்டது. ஆயுதப் போராட்டம்தான் மேட்டுக்குடி அரசியலை உடைத்தது.

பிரமுகர் மைய அரசியலுக்குப் பதிலாக பிரமுகரல்லாத தரப்பின் அரசியலை அது முதன்மைப்படுத்தியது. ஆயுதப் போராட்டம் அதன் வளர்ச்சிப் போக்கில் பிரமுகர்களை உருவாக்கியதுதான். எனினும் அடிப்படையில் அது அதிகட்சம் பிரமுகர் மைய அரசியலாக இருக்கவில்லை. ஒரு விதத்தில் பிரமுகர் மைய அரசியலுக்கு எதிரானதாகவும் அது இருந்தது. ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதோடு ஒரு பகுதி பிரமுகர்கள் தமக்கிருந்த தடை நீங்கிவிட்டதாக நிம்மதிப் பெருமூச்செறிந்தார்கள். அவர்களில் ஒரு பகுதியினர் இப்பொழுது தமிழ்த் தலைவர்களாகக் காணப்படுகிறார்கள்.

தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல உலகின் பெரும்பாலான ஜனநாயகப் பரப்புக்களில் மிதவாத அரசியலெனப்படுவது அதிகபட்சம் பிரமுகர்மைய அரசியலாகவே காணப்படுகிறது. செயற்பாட்டு அரசியலுக்கூடாக அடிமட்டத்திலிருந்து வரும் பல தலைவர்கள் பின்னாளில் புதிய மேட்டுக்குடிகளாக மாறி பிரமுகர் மைய அரசியலை முன்னெடுப்பதுண்டு.

உலகம் முழுவதிலும் நிகழ்ந்த பல சுதந்திரப் போராட்டங்களிலும் தொடக்க காலத்தில் பிரமுகர்களே போராட்டத்தை தொடக்கி வைப்பதுண்டு. பிந்திய காலங்களில் பிரமுகரல்லாத தரப்புக்கள் போராட்டத்தைக் கையிலெடுப்பதுமுண்டு.

ஈழத்தமிழர்களில் இப்பொழுது உயிருடன் இருப்பவர்கள் ஆயுத ரீதியான இனப்படுகொலையில் தப்பிப்பிழைத்தவர்களே. குறிப்பாக தாயகத்தில் இருப்பவர்கள் இப்பொழுதும் கட்டமைப்புசார் இனப்படுகொலைக்கு இலக்காயிருக்கிறார்கள்.

தொல்பொருள் திணைக்களம், வனவளப்பிரிவு, வனஜீவராசிகள் திணைக்களம், கடற்றொழிற் திணைக்களம் மாவலி அபிவிருத்தி அதிகார சபை போன்ற எல்லாத் திணைக்களங்களும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் கருவிகள்தான். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதாக சொல்லிக்கொண்டு வீதியில் நின்று வாகனங்களை மறித்து தண்டம் அறவிடும் போக்குவரத்துப் பொலிஸ் அதை நேரடியாக செய்கிறது.

அதேசமயம் போதைப்பொருள் விநியோகத்தையும், வாள்வெட்டுக் குழுக்களையும் கட்டுப்படுத்தத் தவறும் பொலீஸ் அதை மறைமுகமாகச் செய்கிறது. அதாவது போக்குவரத்துப் பொலீசாரின் இறுக்கமான நடவடிக்கைகளும் ஏனைய பொலீசாரின் இறுக்கமற்ற நடவடிக்கைகளும் ஒரே நிகழ்ச்சி நிரலின் வெவ்வேறு வடிவங்கள்தான்.

இவ்வாறானதோர் அரசியல் இராணுவ புலனாய்வுச் சூழலில் இனப்படுகொலைக்கு எதிரான நீதியைக் கோரும் அரசியலே ஆகக்கூடியபட்சம் நேர்மையானதாகவும், புரட்சிகரமானதாகவும் இருக்க முடியும். பிரமுகர்களே தலைவர்களாக இருந்தாலும் இனப்படுகொலைக்கு எதிரான நீதியை பெறும் முனைப்போடு தமிழ் மக்களின் போராட்ட நெருப்பை அணைய விடாமல் பேணும் எல்லாத் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் மதிக்கப்பட வேண்டியவர்களே.

இந்த அடிப்படையில்தான் விக்னேஸ்வரனை ஆதரிக்க வேண்டியிருக்கிறது. அவர் மகிந்தவின் முன்னிலையிலேயே பதவியேற்றார். தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்குமிடையே தொடர்பாடல் தடைகளுண்டு. ஒரு கொழும்பு மைய மேட்டுக்குடி பிரமுகராக தான் அத்தடையை அகற்றலாம் என்று நம்பியதாக பதவியேற்ற புதிதில் சிலரிடம் மனந்திறந்து கூறியுள்ளார்.

ஆனால் வடக்கில் விசுவாசமாக வேலை செய்யத்தொடங்கிய பொழுது இனப்பிரச்சினை எனப்படுவது ஒரு தொடர்பாடல் பிரச்சினையல்ல. அது அதைவிட ஆழமானது என்ற விளக்கத்திற்கு வந்ததாக தன்னைச் சந்தித்த ஒரு மருத்துவரிடம் கூறியிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு நாமல் ராஜபக்ஷ அவரைச் சந்திக்க விரும்பியதாகவும் அதன்போது உங்களுடைய தகப்பனாரோடு சேர்ந்து இனப்பிரச்சினையைத் தீர்க்கலாம் என்று நம்பித்தான் அவருக்கு முன் பதவியேற்றேன். ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்து விட்டது என்ற தொனிப்பட விக்கி நாமலிடம் சொன்னதாக ஒரு தகவலுண்டு.

இந்த விளக்கத்தின் அடிப்படையில்தான் அவர் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றினார். தமிழ் எதிர்ப்பு அரசியலில் பிரகாசமான ஒரு கூர் முனையாகவும் மாறினார். இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெற அவரைப் போன்ற பிரமுகர் மைய அரசியல்வாதிகளும் தேவை.

ஆனால் அவருடைய மூப்பு, உடல்நிலை, வாழ்க்கை ஒழுக்கம் என்பவற்றைத் தொகுத்துப் பார்த்தால் அவர் ஓர் இடைமாறுகாலத்திற்குரிய ஏற்பாடாகவே தெரிகிறார். இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறும் ஓர்மத்தோடும், அர்ப்பணிப்போடும் செயற்படவல்ல அடுத்தகட்ட தலைமைகள் தோன்றும்வரை விக்னேஸ்வரனைப் போன்ற பிரமுகர் மையத் தலைவர்களே அரங்கை நிறைப்பார்கள்.

எனினும் வாக்களித்த மக்களுக்கு நேர்மையாக இருப்பார்களானால் அவர்களை ஓர் இடைக்கால ஏற்பாடாக ஏற்றுக்கொள்ளலாம்.

http://athavannews.com/category/weekly/அரசியல்-கட்டுரைகள்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.