Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓர் ஆனந்த பைரவியும் சில அபஸ்வரங்களும்

Featured Replies

ஓர் ஆனந்த பைரவியும் சில அபஸ்வரங்களும்

கதையாசிரியர்: ராஜேஷ்குமார்
 

‘தண்ணீர்ப்பந்தல் பாளையம் ஊராட்சி ஒன்றியம் உங்களை மகிழ்வுடன் வரவேற்கின்றது’ என்கிற பெயர்ப்பலகை கிராமத்து எல்லையிலேயே வரவேற்க, தம்முடைய காரின் வேகத்தைக் குறைத்தான் ரகுராம்.

காரின் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த மூன்று நண்பர்களைத் திரும்பிப் பார்த்தான்.

“கிராமத்துக்குள்ளே நுழையப் போறோம். அதோ! அந்த வேப்பமரத்துக்குக் கீழே ஒரு பெட்டிக்கடை தெரியுது. அங்கே விசாரிச்சா ராமசாமி வாத்தியார் வீடு எங்கே இருக்குன்னு சொல்லுவாங்க… கேட்டுடலாமா?”

“ம்… கேட்டுட வேண்டியதுதான்!”

உச்சிவெயில்மண்டையில் உறைக்கிற அந்த மத்தியான நேரத்தில் மண்ரோட்டுப் புழுதியைத்தன் உடம்பு முழுவதும் அப்பிக்கொண்ட அந்தக் கார்வாழைத்தார், சிப்ஸ் பாக்கெட்டுகள் தொங்கும் பெட்டிக்கடைக்கு முன்பாய் போய் நின்றது.

ரகுராம் காருக்கு வெளியே தலையை நீட்டி பெட்டிக்கடைக்குள் உட்கார்ந்திருந்த பெரியவரிடம் கேட்டான்.

“இங்கே ராமசாமி வாத்தியார் வீடு எது?”

ஓர் ஆனந்தபைரவியும்பெட்டிக்கடை பெரியவர் உட்கார்ந்திருந்த இடத்தைவிட்டு அசையாமல் சொன்னார். இப்படியே நேராய் போங்க. மாரியாத்தா கோயில் வரும். கோயிலை ஒட்டின மாதிரியே ஒரு சந்து உள்ளே போகும். அந்தச் சந்துல கடைசி வூடுதான் வாத்தியாரோட வூடு. சந்துக்குள்ளே கார் போகாது. கோயிலுக்குப் பக்கத்துல நிறுத்திட்டுத்தான் உள்ளாரப் போகணும்.”

அவர்க்கு ஒரு நன்றியைச் சொல்லிவிட்டு காரை செம்மண் பறக்க நகர்த்தினான் ரகுராம்.

சிறிது தூரத்திலேயே மாரியம்மன் கோயில் இருந்தது. காரை நிறுத்திவிட்டு நான்கு பேரும் இறங்கினார்கள். ஏப்ரல் மாத வெயில் பிடரியைச் சுட்டது.

தென்பட்ட முதல் சந்துக்குள் நுழைந்தார்கள். ஆள் நடமாட்டம் அறவே இல்லை. சந்தின் குறுக்காக ஓடிய சாக்கடைகளை பேண்ட்டை தூக்கிப்பிடித்துக் கொண்டு ஜாக்கிரதையாய்த் தாண்டி சந்தின் கோடியில் இருந்த அந்த ஓட்டு வீட்டைத் தொட்டார்கள்.

வீட்டின் திண்ணையில் எழுபது வயதுக்குரிய தளர்வோடு, முறத்தில் இருந்த அரிசியில் கல் பொறுக்குவதில் கவனமாய் இருந்தாள் ஓர் அம்மாள்.

“அம்மா! வணக்கம்!” ரகுராம் கைகளைக் குவித்தான்.

அந்த அம்மாள் நிமிர்ந்தாள். மஞ்சள் பூசிய முகம், நெற்றியில் பெரிதாய் குங்குமப் பொட்டு. குரலில் நடுக்கம் தெறிக்கக் கேட்டாள்.

“யாரு?”

“இது ராமசாமி வாத்தியார் வீடு தானே?”

“ஆமா…! என்னோட வீட்டுக்காரர்தான்.”

“ஸாரைப் பார்க்கணும்.”

“நீங்க…?”

“நாங்க நாலு பேரும் அவர்கிட்டே படிச்ச மாணவர்கள். சென்னையிலிருந்து வர்றோம். அவர்க்கு உடம்பு சரியில்லைன்னு கேள்விப்பட்டோம். அதான் பார்த்துட்டுப் போலாம்ன்னு புறப்பட்டு வந்தோம்…”

“அப்படியா… ரொம்ப சந்தோஷம்… உள்ளே வாங்க…!”

அந்த அம்மாள் எழுந்து உள்ளே போக, அந்த நான்கு மாணவர்களும் பின் தொடர்ந்து உள்ளே போனார்கள்.

சிமெண்ட் பூச்சு தேய்ந்து போன தரை. சுண்ணாம்பைப் பார்த்துப் பல வருடங்களாகிவிட்ட மண்சுவர்கள். ஜன்னல் ஓரமாய் ஒரு ஈஸிச்சேர் போடப்பட்டு இருக்க அதில் ஒற்றைநாடி சரீரம் ஒன்று கையில் இருந்த புத்தகத்தைப் புரட்டியபடி தெரிந்தது. அந்த அம்மாள் பக்கத்தில் போய் குரல் கொடுத்தாள்.

“என்னங்க! உங்களைப் பார்க்கிறதுக்காக மெட்ராஸிலிருந்து உங்க பழைய ஸ்டூடண்ட்ஸ் நாலு பேர் வந்து இருக்காங்க.”

ராமசாமி வாத்தியார் மெதுவாய் சிரமமாய் நிமிர்ந்து உட்கார்ந்தார். பார்க்க வந்த நான்கு பேர்களின் விழிகளிலும் பெரிய அதிர்ச்சி.

இவர் ராமசாமி வாத்தியாரா? ஆறடி உயரத்தில் கம்பீரமாய் ஒரு இரும்புத்தூண் மாதிரி நடந்து வருவாரே…? அவரா இவர்… ஏதோ ஒரு ஈர்க்குச்சியைப் போல் இளைத்து உருமாறியிருக்க, கண்களில் மட்டும் அந்தப் பழைய ராமசாமி வாத்தியார் தெரிந்தார்.

“ஸார்… வணக்கம்…!”

அந்த நான்கு பேரும் அவருடைய கால்களில் விழுந்து வணங்கினார்கள். அவர் மூச்சு வாங்கிக் கொண்டே பேசினார்.

“யாரப்பா நீங்க?”

“ஸார்…நாங்க நாலு பேரும் உங்க பழைய மாணவர்கள். தாம்பரம் எலிமெண்ட்ரி ஸ்கூல்ல உங்ககிட்ட படிச்சோம். நான் ரகுராம், இவன் சுரேஷ், இவன் டேனியல்ராஜ், இவன் அருள்செல்வன்…!”

“அ…அ…அப்படியா?” என்றவர் தன் பனியன் பாக்கெட்டிலிருந்து கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டு நான்கு பேர்களையும் ஏற இறங்கப் பார்த்தார். பிறகு தொண்டை கம்மிப் போன குரலில் பேசினார்.

“எ…எ… என்கிட்ட எத்தனையோ பேர் படிச்சாங்க. எல்லாரையும் என்னால ஞாபகம் வெச்சுக்க முடியாது… தம்பி…”

பரவாயில்ல ஸார்… எங்க மனசுல நீங்க இருக்கீங்க. நீங்க சொல்லிக் குடுத்த இங்கிலீஷ் கிராமரும், மேத்ஸும் எங்களுக்கு அடிப்படைத்தளங்களாய் அமைஞ்சதாலே நாங்க மேற்கொண்டு நல்லா படிக்க முடிஞ்சது. இன்னிக்கு நாங்க நாலுபேரும் நல்ல நிலைமையில் இருக்கோம் ஸார்.”

“என்ன பண்றீங்க எல்லாரும்?”

“ஐ.டி. கம்பெனிகளில் வேலை பார்க்கிறோம் ஸார்…”

“ரொம்ப சந்தோஷம்… உட்காருங்க தம்பி.”

நான்கு பேரும் சுவரோரமாய் போடப்பட்டு இருந்த பெயிண்ட் உதிர்ந்து போன பெஞ்சில் நெருக்கியடித்துக் கொண்டு உட்கார்ந்தார்கள்.

ராமசாமி வாத்தியார் சில விநாடிகள் மௌனம் காத்துவிட்டுக் கேட்டார்.

“நான் இந்தக்கிராமத்துல இருக்கேன்னு உங்களுக்கு யார் சொன்னது?”

“ஸார்! இன்டர்நெட் ஃபேஸ்புக்ல உங்க பழைய ஸ்டூடண்ட் ஒருத்தரோட நட்பு எங்களுக்குக் கிடைச்சுது. அவன்தான் உங்களைப் பற்றிய தகவல்களைச் சொன்னான். அந்த ஃப்ரண்ட் இப்போ வெளிநாட்ல இருக்கான்.”

ராமசாமி வாத்தியார் தன் வாயில் இருந்த மிச்சப் பற்களில் சிரித்தார். “இந்த விஞ்ஞானம் பண்ற வேலை உலகத்தையே ஒரு கிராமமாய் மாத்திடுச்சு… யார் எங்கே இருந்தாலும் கண்டுபிடிச்சுடுவாங்க போலிருக்கு.”

ரகுராம் தாம் கையோடு கொண்டு போயிருந்த பழக்கூடையை அவருக்கு முன்பாய் வைத்தான்.

“இதெல்லாம் எதுக்கு?”

“பரவாயில்லை ஸார். எங்களோட பிரியத்துக்காக…”

“என்னை ஞாபகம் வெச்சுக்கிட்டு பார்க்க வந்ததுக்கு ரொம்பவும் சந்தோஷம்.”

“ஸார்.. நாங்க சந்தோஷப்படணும்ன்னா நீங்க ஒரு விஷயத்துக்கு ஒப்புதல் தரணும்.”

“எதுக்கு ஒப்புதல்?”

“உங்களுக்கு ஹார்ட் பைபாஸ் சர்ஜரி பண்ண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்குன்னு அந்த நண்பன் ஃபேஸ்புக்ல குறிப்பிட்டு இருந்தான். அது உண்மையா?”

அவர் சிரித்தார். “உண்மைதான்… அதுக்கு நாம என்ன பண்ண முடியும்? ஒரு மனுஷனுக்கு வயசானாலே இயற்கை அவனோட ஒவ்வொரு ஜன்னலையும் சாத்திட்டு வரும்ங்கிறதுதான் விதி. அந்த விதியை நான் மட்டும் மீற முடியுமா என்ன…?”

“ஸார்! நீங்க ஏன் பைபாஸ் சர்ஜரி பண்ணக் கூடாது?”

மறுபடியும் அவர் சிரித்தார்.

“பண்ணிக்கலாம்ன்னு ஆசைதான். ஆனா கையில பணம் வேணுமே! ரிடையரான போது பிராவிடண்ட் பணம் நாலரை லட்ச ரூபாய் கிடைச்சுது. அது என்னோட நண்பர் சொன்னார்ன்னு ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் போட்டேன். ரெண்டு மாசம் ஒழுங்காய் வட்டி வந்தது. அதுக்கப்புறம் அந்த நிறுவனத்தை நடத்தின மோசடி பேர்வழி ஊரைவிட்டே ஓடிட்டான். போன ஜென்மத்துல நான் அவனுக்குக் கடன்பட்டிருக்கணும். அதான் எனக்கு இப்படியொரு நிலைமை. மாசாமாசம் வர்ற பென்ஷன் பணம் எனக்கும் என்னோட மனைவிக்கும் நாட்களை ஓட்ட போதுமானதாய் இருக்கு. பைபாஸ் சர்ஜரி பண்ணணும்ன்னா குறைஞ்ச பட்சம் ரெண்டு லட்ச ரூபாயாவது வேணும். என்னோட ஹார்ட் இப்போ பழைய டைம்பீஸ் கடிகாரம் மாதிரி. ஓடற வரைக்கும் ஓடட்டும்…!”

ரகுராம் படபடப்பாய் குறுக்கிட்டான். “ஸார்! உங்களுக்குக் குழந்தைகள் இல்லேன்னு தெரியும். ஆனா நீங்க பெறாத பிள்ளைகள் எவ்வளவோ பேர் நீங்க குடுத்த கல்வியால நல்ல முறையில் படிச்சு பெரிய பெரிய வேலைகளில் இருக்காங்க. அந்தக் குழந்தைகள்ல நாலு பேர் நாங்க. இனிமே உங்களுக்கு நடக்க வேண்டிய பைபாஸ் சர்ஜரி ஆபரேஷனுக்கான செலவை நாங்க பார்த்துக்கிறோம்…”

ராமசாமி வாத்தியாரின் வறண்டு போன இதழ்களில் ஒரு விரக்தியான புன்னகை அரும்பியது.

ராமசாமி வாத்தியாரின் வறண்டுபோன இதழ்களில் ஒரு விரக்தியான புன்னகை அரும்பியது.

ராமசாமி வாத்தியாரின் வறண்டுபோன இதழ்களில் ஒரு விரக்தியான புன்னகை அரும்பியது.

“தம்பி! இது தளர்ந்துபோன உடம்பு. நொண்டியடிக்கிற ஓட்டைக் கடிகாரம். இதுக்குப் போய் தேவையில்லாமே ஏன் ரெண்டு லட்ச ரூபாயைச் செலவு பண்றீங்க. ஓடறவரைக்கும் ஓடட்டும். எனக்கு எந்த ஆபரேஷனும் வேண்டாம்.’

“ஸார்! நீங்க அப்படிச் சொல்லக்கூடாது. இந்த உலகத்துல நீங்க வாழற ஒவ்வொரு நாளும் எங்களுக்கு தீபாவளி மாதிரியான சந்தோஷமான நாள். வேலையிலிருந்து ரிடையரான பிறகும்கூட சாயந்தர வேளைகள்ல ஏழைக் குழந்தைகளுக்கு நீங்க இலவசமா ட்யூஷன் எடுக்கிறதாய் கேள்விப்பட்டோம். பைபாஸ் சர்ஜரி பண்ணிக்கிட்டா நீங்க இன்னும் பல வருஷம் ஆரோக்கியமாய் இருந்து ஏழைக் குழந்தைகள் வாழ்க்கையில் கல்வி என்கிற விளக்கை ஏற்றி வெளிச்சத்தைக் கொடுக்கலாமே…?’

“இதோ பாருங்க தம்பி… என் மேல உங்களுக்கு இருக்கிற அக்கறையும் ஆர்வமும் என்னை நிறையவே சந்தோஷப்படுத்துது. ஆனா, நான் யார்கிட்டேயும் எந்த ஒரு உதவியையும் வாங்கறதில்லை என்கிற ஒரு விஷயத்தை என்னோட கொள்கையாவே வெச்சிருக்கேன். அதை என்னோட உயிர்மூச்சுன்னுகூட சொல்லலாம். எனக்கு பிறர்க்கு குடுத்துதான் பழக்கம். வாங்கிப் பழக்கமில்லை. அரசாங்கம் குடுத்த நல்லாசிரியர் விருதையே வேண்டாம்ன்னு சொன்னவன் நான்.’

“ஸார்…! நாங்க என்ன சொல்ல வர்றோம்னா…?’

“நீங்க ஒண்ணையும் சொல்ல வேண்டாம் தம்பி. என்னோட சுபாவத்தைப் பத்தி உங்களுக்கே தெரியும். நான் வாத்தியாராய் வேலை பார்த்த காலத்துல எந்த மாணவனையும் என்னோட சொந்த வேலைக்குப் பயன்படுத்தியது இல்லை. முடிஞ்ச வரைக்கும் மத்தவங்களுக்கு உதவியாத்தான் இருக்க விரும்புறேன். இன்னிக்கு நீங்க எனக்கு இவ்வளவு மரியாதையும் மதிப்பும் தர்றீங்கன்னா அதுக்குக் காரணம் நான் கடைப்பிடிக்கிற இந்தக் கொள்கைதான்.’

“ஸார்! இது உங்க உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம். அதுதான் கவலைப்படறோம்.’

“இதுல கவலைப்பட ஒண்ணுமேயில்லை. பைபாஸ் சர்ஜரி பண்ணவேண்டியிருக்கும்ன்னுதான் டாக்டர் சொன்னாரே தவிர உடனடியாக பண்ணணும்ன்னு சொல்லலை. மாத்திரை எழுதிக் கொடுத்து இருக்கார். இதை ஒழுங்காய் சாப்பிட்டு வந்தாலே அடைப்பு சரியாயிடுன்னு சொன்னார். நீங்க இந்தக் கிழவனைப் பத்திக் கவலைப்படாமே வாழ்க்கையில மேலுக்கு வர்ற வழியைப் பாருங்க…’

“ஸார்… அது… வந்து…!’

 

“மன்னிக்கணும். நீங்க புறப்படலாம்…’ ராமசாமி வாத்தியார் கையெடுத்துக் கும்பிட, நான்கு பேரும் ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டார்கள். சில விநாடிகளில் கனத்த நிசப்தத்துக்குப் பிறகு “நாங்க வர்றோம் சார்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.

கனத்த மனதோடு வெளியே வந்து காரில் ஏறும்போது பின்னால் வந்த அந்த அம்மாள் கண்களில் நீர் பனிக்கச் சொன்னாள்.

“தம்பிகளா! தப்பா நினைச்சுக்காதீங்க. அவர் இப்படி தன்மானம் பார்த்துப் பார்த்தே வாழ்க்கையில் எத்தனையோ இழந்துட்டார். வறட்டு கௌரவம் பார்த்து தன்னோட ஆரோக்கியத்தையும் கெடுத்துக்கப் பார்க்கிறார். எங்களுக்குப் புள்ளைங்க இல்லை. உங்களையெல்லாம் நான் பெத்த புள்ளைகளா நினைச்சுக் கேட்டுக்கிறேன். அவர் சம்மதம் கொடுத்துதான் “அந்த பைபாஸ் சர்ஜரி நடக்கணும்ன்னா அது நடக்கவே நடக்காது. அவரை ஆபரேஷனுக்கு ஒத்துக்க’ வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு. நீங்கள் ஆபரேஷனுக்கு வேண்டிய ஏற்பாடுகளைப் பண்ணிட்டு இந்த டெலிபோன் நெம்பர்க்கு ஃபோன் பண்ணுங்க. இது பக்கத்து வீட்டு டெலிஃபோன் நெம்பர். நீங்க விபரம் சொன்னா என்னைக் கூப்பிட்டு விட்டுடுவாங்க.’

“நீங்க சொன்னா ஸார் கேட்பாராம்மா?’

“எப்படியாவது பேசி சம்மதம் வாங்கிடறேன்.’

காரில் நம்பிக்கையோடு நான்கு பேரும் ஏறிக்கொண்டார்கள். அது ஊர்ந்து வேகம் பிடித்தது.

இரண்டு நாட்கள் கழித்து -
காலை ஏழு மணி.

ரகுராம் காலை நேர காஃபியை சுவைத்துக் கொண்டிருக்க, நண்பன் அருள்செல்வம் கையில் செய்தித்தாளோடு ஓடி வந்தான்.

“டேய் ரகு! நியூஸ் பார்த்தியா?’

“என்ன நியூஸ்?’

மூன்றாவது பக்கத்தைப் பிரித்துக் காட்டினான். ரகுராம் அங்கே பார்வையைக் கொண்ட போனான்.

கொட்டை எழுத்துக்களில் செய்தி ஓடியிருந்தது. வாய்விட்டுப் படித்தான்.

பெட்ரோல் டீசல் விற்னையில் இரண்டு லட்சம் கோடி ரூபாய் ஊழல். மத்திய அமைச்சர் கைதாகி ஜாமீனில் விடுதலை.
ரகுராம் படிக்கப் படிக்க நண்பன் அருள்செல்வன் குறுக்கிட்டுக் கத்தினான்.

“டேய்! நான் சொன்ன நியூஸ் அது இல்லை. அதுக்குக் கீழே ஏழாவது பத்தியில் பார்ரா…!’

ரகுராம் பார்வையைக் கீழே கொண்டு போனான். ஊழல் செய்திக்குக் கீழே சின்னதாய் ஒரு கட்டம் கட்டி பொடிப் பொடியான எழுத்துக்களில் அந்தச் செய்தியை அடக்கியிருந்தார்கள்.

ஆசிரியர் உடல்தானம்

தண்ணீர்ப்பந்தல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. வயது 77 ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். மரணத்துக்குப் பிறகு தம்முடைய உடலை மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்று ஏற்கெனவே பதிவு செய்திருந்தார். அவருடைய விருப்பப்படி கிராம பஞ்சாயத்து தலைவர் முன்னிலையில் அவருடைய உடல் மருத்துவக் கல்லூரிக்குத் தானமாய்க் கொடுக்கப்பட்டது.
- கையிலிருந்த செய்தித்தாள் பிடிப்பில்லாமல் தானாய் உதிர்ந்து விழ, ஏற்கெனவே கைக்குட்டையால் வாய் பொத்தி அழ ஆரம்பித்திருந்த நண்பன் அருள்செல்வனோடு இணைந்துகொண்டான் ரகுராம்.

http://www.sirukathaigal.com/சமுகநீதி/ஓர்-ஆனந்த-பைரவியும்-சில-அ/

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் அந்தக்கால வாத்தியார்களுக்கு கர்வமும், ரோஷமும் அதிகம். ம்... அவர்கள் வீட்டில் ஒரு வாழ்க்கை , பள்ளியில் ஒரு வாழ்க்கை, வெளியே ஒரு வாழ்க்கை என்று முகமூடிகளுடன் வாழ்ந்ததில்லை.......!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.