Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குருவின் சதி! … தாழையடி சபாரத்தினம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குருவின் சதி! … தாழையடி சபாரத்தினம்.

September 23, 2018
  குருவின் சதி!… ( சிறுகதை ) … தாழையடி சபாரத்தினம்.

சிறப்புச் சிறுகதைகள் (12) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – தாழையடி க.சபாரத்தினம் எழுதிய ‘குருவின் சதி’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும்.

thumbnail_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0

அடர்ந்த காட்டினூடே நடந்து கொண்டிருந்தான் அந்த வாலிபன். அவன் செல்வதற்கு வழி செய்துகொண்டு முன்னால் இருவர் சென்றனர். பின்னாலும் வில்லும் வேலும் ஏந்திய வீரர்கள் சென்றுகொண்டிருந்தனர். தாரகைகள் புடைசூழப் பவனி செல்லும் வான்மதி போல் வீரர்கள் மத்தியில் ஏறுநடை போட்டு நடந்து கொண்டிருந்தான் அவன்.

திரண்ட புயங்களும், பரந்த மார்பும், பால் வடியும் முகமும் – அவன் வீரன் மட்டுமல்ல; அழகன் என்பதையும் பறை சாற்றிக் கொண்டிருந்தன. அவன் வேறு யாருமல்ல; பாண்டவர்களிலே வீமனுக்கு இளையவனான அர்ச்சுனன் தான்.

காட்டினூடே அவன் கண்கள் நீண்ட தூரம் பிரயாணம் செய்தன. வேட்டையாடுவதில் அவ்வளவு அக்கறை அவனுக்கு. வேங்கையைக் கூட விரட்டியடிக்கும் நாயொன்று எஜமானுக்கு உதவியாக அங்குமிங்கும் ஓடி ஓடி மோப்பம் பிடித்துத் தகவல் தெரிவித்துக் கொண்டிருந்தது.

திடீரென்று ஒரு கண நேரம் காற்றிலே சுழல் ஏற்பட்டது. சிறிய வன விலங்குகள் அங்குமிங்கும் பாய்ந்தோடின. அர்ச்சுனனின் கரங்கள் ஒரே முறையில் வில்லையும் அம்பையும் பற்றின. வேட்டை நாய் ஒரு திசையை நோக்கிப் பாய்ந்து பாய்ந்து குரைத்தது. இந்தச் சூழ்நிலை ஒரு வனராஜனின் திடீர் வருகையால் ஏற்பட்டது.

சிங்க வேட்டையில் அர்ச்சுனன் திருப்தியடைந்தான். நெடுந்தூரம் தொடர்ந்து செல்லவேண்டி ஏற்பட்டுவிட்டது. கூட வந்த வீரர்கள் அவனை நோக்கி ஓடி வந்துகொண்டிருந்தார்கள். எல்லோரும் ஒன்று சேர்ந்து விட்டனர். நாய் எங்கே?

சிங்கத்தையும் நேரே நின்றெதிர்க்கும் – பயமென்பதைக் கனவிலும் அறியாத – நாய் குற்றுயிரும் குறையுயிருமாகத் தள்ளாடி வந்து கொண்டிருந்தது. நாய்க்கு நேர்ந்ததென்ன? அர்ச்சுனனின் கண்கள் கோபத்தால் சிவந்தன. வில்லின் நாணொலி எட்டுத்திக்கும் எதிரொலித்தது. சல்லடைக் கண்கள் போல் உடலெல்லாந் துளைக்கப்பட்டு பலாசமரம் போல் சோகமே உருவாய் எஜமான் முன் வந்து நிற்கும் நாயைக் கண்ட அர்ச்சுனனுக்கு ஆத்திரத்தோடு ஆச்சரியமும் ஏற்பட்டது. ஒரே பாணத்தில் பல துவாரங்களை உண்டுபண்ணும் வித்தையை நேற்றுத் தான் அவன் துரோணரிடம் கற்றிருந்தான். அந்த வித்தையை அவர் வேறு யாருக்காவது போதித்திருப்பாரா?

சிந்தனைக் குவியலை விலக்கிக் கொண்டு நாயைத் தொடர்ந்து வேகமாய் நடந்தான். புல்லினாலும் அதன் இலை தழைகளாலும் வேயப்பட்ட ஒரு குடிசை முன்னே வில்லேந்திய ஒரு வீர வேடுவன் நின்று கொண்டிருந்தான். அர்ச்சுனனைக் கண்டதும் அவன் பயந்து நடுங்கவில்லை. அவன் கண்களிலே அலட்சிய பாவம் நிறைந்திருந்தது. நாயோடு வந்த அர்ச்சுனனைக் கண்டதும், அவன் ஏன் வந்திருக்கின்றான் என்பதை ஏகலைவன் புரிந்துகொண்டான்.

“நீ யார்?” இடியோசை போல அர்ச்சுனன் தொண்டையிலிருந்து சொற்கள் புறப்பட்டன.

ஏகலைவன் உரக்கச் சிரித்தான். “நான் கேட்கவேண்டிய கேள்வியை நீ கேட்கிறாய். என் வீட்டு எல்லைக்குள் வந்த உன்னை நானல்லவா ‘நீ யார்?’ என்று கேட்க வேண்டும்?”

அர்ச்சுனன் பற்களை நறநறவென்று கடித்தான். கோபத்தோடு சொற்கள் தெறித்தன. “ஏய் வேடனே, உன்னோடு வார்த்தையாட நான் வரவில்லை. என் நாய்க்கு இக்கதி உன்னால்தான் ஏற்பட்டது. என் நாயைத் துன்புறுத்துவதற்கு உடந்தையாயிருந்த உன் வலக்கரத்தை இப்பொழுது துண்டிக்கப் போகின்றேன்.”

“ஏய் கர்வங்கொண்ட அர்ச்சுனா, என் கையைத் துண்டிக்கு முன் உன் கையைப் பத்திரப்படுத்திக் கொள்” ஏகலைவன் வாயிலிருந்து வசனங்கள் உஷ்ணமாகவே புறப்பட்டன.

அர்ச்சுனன் வெகுண்டெழுந்தான். அம்பறாத்தூணியில் இருந்த அம்பின் மேல் அவன் கை தாவியது. ஒரு கணம் சிந்தித்தான். பழைய சம்பவமொன்று அவன் ஞாபகத்திற்கு வந்தது.

பஞ்ச பாண்டவரும் வேறு சில அரசகுமாரர்களும் பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அச்சமயம் பந்து கிணற்றுள் வீழ்ந்து விட்டது. கிணற்றைச் சுற்றி எல்லோரும் கூடிவிட்டார்கள். பந்தை வெளியே எடுக்க அவர்கட்கு ஒரு வழியும் தோன்றவில்லை. அச்சமயம் அவ்வழியே வந்த ஒரு கறுத்த பிராமணர் அவர்களண்டை வந்து விஷயத்தை அறிந்து உரக்கச் சிரித்தார். எல்லோரும் பிராமணர் பக்கம் திரும்பினார்கள்.

“ராஜகுமாரர்களே! உங்களால் எடுக்கமுடியாத பந்தை நான் எடுக்கிறேன், பாருங்கள்” என்று கூறி ஒரு குச்சியை எடுத்துக் கிணற்றுள் போட்டார். அது போய்ப் பந்தைப் பற்றிக் கொண்டது. வேறு சில குச்சிகளையும் உள்ளே போட்டார். ஒவ்வொன்றும் ஒன்றையொன்று பற்றிக் கொண்டது. பந்தை எடுத்து வெளியே போட்டார் அந்தப் பிராமணர். திடீரென்று அப்பிராமணர்மேல் அவர்கட்குப் பக்தி ஏற்பட்டுவிட்டது. முன்பிருந்த குறும்புத்தனம் இப்பொழுது மறைந்து விட்டது. இச்சம்பவத்தை அவர்கள் போய்ப் பிதாமகரிடம் கூறியபோதுதான் அப்பிராமணர் வேறு யாருமல்ல, தனுர்வேதத்தின் கரையைக் கண்ட வீரர் துரோணர் என்பது தெரிய வந்தது. முதன்முதலில் அவரைக் கண்டபோது பாண்டவர்கள் கிண்டல் செய்து கேலிக் கூத்தடித்தார்கள். பின் அவரையே தங்கள் குருவாக ஏற்றுப் பக்தி செலுத்தினார்கள்.

இச்சம்பவம் அர்ச்சுனன் நினைவுக்கு வந்ததும் அவன் மூளை குழம்பியது. இந்த வேடன் யார்? நேற்றுத் துரோணாச்சாரியரிடம் கற்ற வித்தை இவனுக்குத் தெரிந்திருக்கிறதே! இவனைச் சாமானியமாய் கருதிப் போர் தொடுத்து அவமானப்படும்படி ஏற்பட்டு விடுமா?

இந்த நினைவு அவன் கோபத்தைக் கொஞ்சம் குறைத்தது. ஆனாலும், சுயகெளரவத்தை விட்டுக்கொடாமல் சற்று உரமாகவே பேசினான். “நிறுத்து உன் அதிகப்பிரசங்கித்தனத்தை! எதற்காக என் நாய்மீது பாணந் தொடுத்தாய்!”

“அப்படிக் கேள். விஷயத்தை விட்டுவிட்டு வீண்வார்த்தையில் நேரத்தை விரயஞ் செய்வானேன்? அதோ பார்; நான் பக்தியோடு பூஜித்து வரும் என் குருவின் சிலையை. உன் நாய் அதனை அசுத்தப்படுத்திவிட்டது. அதன் பயனை அது அனுபவித்துத்தானே ஆக வேண்டும்!”

திரும்பிப் பார்த்த அர்ச்சுனன் தூரதே சிலையைக் கண்டு வியப்படைந்தான். “துரோணாச்சாரியாருடைய சிலையல்லவா அது! அவரா உன்னுடைய குரு!”

துவேஷச் சிரிப்பொன்று ஏகலைவன் உதட்டிலிருந்து வெடித்தது. அவன் கூறினான்: “இராஜகுமாரர்கட்கு மட்டும் வில்வித்தை பயிற்றும் துரோணருக்கு உயிருண்டு. என் குருவுக்கு உயிரில்லை. ஆனால் என்னோடு பேசுவார்; எனக்குத் தெரியாததைச் சொல்லித் தருவார். ‘நீ வேடன்; தனுர் வேதத்தைப் போதிக்க மாட்டேன்’ என்று உயிருள்ள துரோணர் கூறுவது போல் இவர் கூறமாட்டார். அப்படியான என் ஆதர்ச குருவை உன் நாய் அசுத்தப்படுத்திவிட்டால் பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியுமா?”

”பகுத்தறிவில்லாத – வாயில்லாத ஒரு பிராணியைத் தண்டிப்பதுதான் உன் தருமமோ?”

“காட்டில் வேட்டையாட வந்திருக்கும் நீ எனக்குத் தருமத்தைப் போதிக்கிறாயே! ஆச்சரியந்தான்.”

“குடிகளையும் பயிர்களையும் அழிக்கும் விலங்குகளை வதைப்பதே இராஜதருமம் என்பதை நீ எங்கே அறியப்போகிறாய்?”

“அழிக்கும் என்ற பதத்தை உபயோகிக்காமல் ‘உணவு தேடிச் செல்லும் விலங்குகளை’ என்று திருத்திக் கொண்டால் இராஜதருமத்தின் பெருமை தெரியும்! மேலும், நாங்கள் வேடர்; மிருகங்களைக் கொன்று சீவிப்பதே எங்கள் பாரம்பரியத் தொழில். வேடனாகிய எனக்கு ஒரு நாயை இம்சிப்பது அசாதாரணமல்ல.”

..

அர்ச்சுனன் நாடு திரும்பும்போது அவன் இதயம் கனத்துக் கொண்டிருந்தது. வில்லேந்திய வேடனின் உருவம் அடிக்கடி அவன் முன் தோன்றிக் கொண்டிருந்தது. தனக்கு நிகரான – தன்னிலும் மேம்பட்ட ஒரு வீரன் தன் குருவையே மானசீகமாய், ஆதர்ச குருவாய்க் கொண்டிருக்கிறான் என்ற நினைவு அவன் இதயத்தை விஷப்புழுவாய் அரித்துக் கொண்டிருந்தது. ‘சீ! பண்பாடுள்ள ஒரு வீரன் பொறாமை உணர்ச்சிக்கு இடம் கொடுக்கலாமா?’ என்று ஒரு கணம் வெட்கினான்.

‘இல்லை; அவன் அழியத்தான் வேண்டும் அல்லது என் உயிரையே நான் மாய்த்துக்கொள்ள வேண்டும். சீ, பேடியைப் போல் தற்கொலை செய்வதா? ஆகா, அருமையான சந்தர்ப்பத்தை இழந்துவிட்டேனே! அந்த வாயாடிக்கார வேடனோடு வாயாற் பேசாமல் பாணங்களாலே பேசியிருக்கலாமே; ஒன்று அவனை ஒழித்துக் கட்டியிருக்கலாம். அல்லது அவன் கையால் மாண்டிருக்கலாம்.’

’சீ, இது என்ன நினைவு. சதிகாரர்களான துரியோதனாதியர்களிடம் என் சகோதரர்களைத் தவிக்க விட்டுவிட்டு நான் இறக்க முடியுமா? எப்படியும் உயிர் வாழ்த்தான் வேண்டும்’ குமுறும் உள்ளத்தோடு நாட்டைப் போயடைந்தான் அர்ச்சுனன்.

வாடிய முகத்தோடு தலை குனிந்து நிற்கும் அர்ச்சுனனைக் கண்டதும் ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என்று ஊகித்தார் துரோணர். ஆனால், தன் ஊகத்தை வெளிக்காட்டாமல் “என்ன அர்ச்சுனா, வேட்டைக்குச் சென்ற நீ உடனேயே திரும்பிவிட்டாயே வேட்டை ஒருவித விக்கினமுமில்லாமல் நிறைவேறியதா?”

“ஆம் குருவே. ஆனால், தங்கள் சிஷ்யன் ஏகலைவன் என் நாயை இம்சித்ததுமில்லாமல் என்னையும் அவமானப்படுத்திவிட்டான்…”

“என் சிஷ்யனா? ஏகலைவனா? .. அவன் எந்த நாட்டு மன்னன்?”

”அவன் எந்த நாட்டு மன்னனுமல்ல; வனவிலங்குகளிடையே தன் வீரத்தைக் காட்டும் ஒரு வேடன்”

“வேடனா என் சிஷ்யன்? ஆச்சரியமாயிருக்கிறதே! அல்லாமலும் ஒரு வேடனிடம் நீ அவமானமடைந்தாயே! நீ வீரனாயிற்றே; ஒரு பாணத்தால் அவன் தலையைக் கொய்திருக்கலாமே.”

அர்ச்சுனனுக்கு அவமானம் தாங்கமுடியவில்லை. பதில் கூறாமல் குன்றிப் போய் நின்றான்.

”அர்ச்சுனா, ஏன் பேசாமல் நிக்கிறாய்? நான் அரசகுமாரர்களைத் தவிர வேறு யாருக்கும் வில்வித்தை பயிற்றுவதில்லை என்பது உனக்குத் தெரியாதா?”

“தெரியும் குருவே. இந்த வேடன் ஏகலைவன் முன் ஒரு சமயம் தங்களிடம் வில்வித்தை பயில வந்தானாம்; தாங்கள் மறுத்துவிட்டதனால் தங்களைப் போன்ற ஒரு சிலையைச் செய்து அதனிடம் அவன் வில்வித்தை பயின்று வருகின்றான். தங்களிடம் நான் பயின்ற வித்தையெல்லாம் அவனுக்குத் தெரியும் தாங்கள் கடைசியாக எனக்குக் கற்றுக் கொடுத்த புது வித்தையைக்கூட அவன் தெரிந்து வைத்திருக்கின்றான்.”

துரோணரின் உள்ளம் பூரிப்படைந்தது. “ஆஹா! நம்பவே முடியவில்லையே; அவன் குருபக்தியை என்னென்று சொல்வது!”

அர்ச்சுனன் குரோதத்தோடு ஆச்சாரியாரைப் பார்த்தான். அவர் மகிழ்ச்சி அவன் இதயத்தை வாள் கொண்டு அறுத்தது. மோனநிலையில் உட்கார்ந்திருந்த துரோணரிடம் அவன் கூறினான்: “குருவே, என்னை அவமதித்தவனைத் தண்டிப்பதற்குத் தாங்கள்தான் ஒரு வழி வகுத்துத் தரவேண்டும்.”

“அர்ச்சுனா, வீரர்களுக்குரிய தர்ம வழியைத்தான் நீ கடைப்பிடிக்க வேண்டும். உனக்கும் அவனுக்கும் இடையேதான் பூசல் உண்டாகி இருக்கிறது. ஆகையால் நீயே அவனோடு போர் தொடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயித்துக்கொள்ள வேண்டியதுதான். அவனோடு எந்த நியாயப்படி நான் போர் தொடுக்க முடியும்? மேலும், உன்னைப் போல என்னையே தன் குருவாக அவன் கொண்டிருகிறான். நீ நியாயம் தெரிந்தவன்; சிந்தித்துப்பார்.”

“குருவே, ஏகலைவனோடு போர் தொடுக்க நான் கொஞ்சமும் அஞ்சவில்லை. ஆனால், அவன் தனுர்வேதத்தின் கரைகண்ட நிபுணனாகக் காணப்படுகிறான். போர் தொடங்கினால் வெற்றி தோல்வி யார் பங்கென்று சொல்ல முடியாது. போரிலே நான் மாண்டால் என் சகோதரர்கள் கதி என்னவாகும்? என்னை நம்பியல்லவோ அவர்கள் துரியோதனர்களுடைய பகைமையை பொருட்படுத்தாமல் இருக்கிறார்கள்! வருங்காலத்தை உத்தேசித்துப் பாருங்கள்; என் உயிரின் முக்கியத்துவம் தெரியும். கர்ணனை எதிர்க்க என்னைத் தவிர என் சகோதரர்களில் வேறு யாருக்கும் முடியாதென்று தாங்களே பலமுறை கூறவில்லையா?

”ஏதாவது சதி செய்து ஏகலைவனை அழித்துவிடலாம் என்று எண்ணுகிறாயா? அவ்வித பேடித்தனமான எண்ணமும் வீரனாகிய உன் உள்ளத்தில் தோன்றுகின்றதா?”

“குருவே! என்னைப் பேடி என்று மட்டுமல்ல; வேறு எது வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஏகலைவன் நினைவு என்னுள்ளத்தில் பெரும் பாரமாய் அழுத்துகிறது. என் உள்ளத்தில் தோன்றும் யோசனையை நான் சொல்லத்தான் போகிறேன்; அதற்காக என்னை மன்னியுங்கள்”

“சொல், அர்ச்சுனா சொல். பொறாமை என்ற விஷப்பூண்டு சிலசமயங்களில் பண்பட்ட உள்ளத் தரையிலேகூட முளைத்து விடுகிறது. வேரூண்றி வளர்ந்துவிட்டால் அதைப் பிடுங்கி எறிவது மிகக் கடினந்தான்”

”சுவாமி, நியாயம் எது, அநியாயம் எது என்பதை ஆராயும் நிலையில் இப்பொழுது நான் இல்லை. என் உள்ளத்தில் உதித்த யோசனையைக் கூறுகிறேன். அவன் குருவாகக் கொண்டது தங்கள் உருவச்சிலையையானாலும், அவனிடம் குருதட்சணை பெறும் உரிமை உங்கட்கு உண்டல்லவா?”

“அட பாவி, ஏகலைவனிடம் அவன் உயிரைத் தட்சணையாகக் கேட்கச் சொல்கிறாயா? உனக்கு இதயம் இல்லையா?”

அர்ச்சுனன் ஒருகணம் துணுக்குற்றான். அவன் மனத்தில் எண்ணியதை துரோணர் அப்படியே படம் பிடித்துக்

கூறிவிட்டார். அதோடு துரோணருடைய முகபாவம் அந்தச் சதிச் செயலுக்கு ஒருபோதும் அவர் உடன்படமாட்டார் என்பதை எடுத்துக் காட்டியது. ஆகவே, தன் எண்ணத்தை மாற்றி ஒரு சிறு திருத்தம் செய்தான்.

“குருவே, ஏகலைவன் உயிரை குருதட்சணையாக கேட்கும்படி நான் கூறவில்லையே! அவனது வலது கைப் பெருவிரலை…”

அர்ச்சுனன் வசனத்தை முடிக்கவில்லை. துரோணர் அவனை அருவருப்போடு பார்த்துக்கொண்டே கூறினார்:

”வலதுகைப் பெருவிரலைக்காட்டிலும் அவன் உயிரையே கேட்பது மேல் என்பது உனக்குத் தெரியவில்லையா? வில்லையும், அம்பையும் சீவியமாகக் கொண்டுள்ள ஒரு வனவேடனின் விரலைத் துண்டித்துவிட்ட பின், அவன் வாழ்வுதான் ஏது? இதைவிட அவனுக்குச் செய்யக்கூடிய அநியாயம் வேறு என்னதான் இருக்கிறது?”

”குருவே! ஏற்கனவே ஏகலைவன் எனக்கு எதிரியாகிவிட்டான். ஒருசமயம் துரியோதனர்களோடு எங்கட்கு யுத்தம் ஏற்பட்டால் அவன் எங்கள் எதிரிகள் பக்கம் சேர்ந்து தன் வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்ளத் தெண்டிப்பான். எதிரிகள் பக்கம் வலுவடையாமற் செய்வதற்கு எந்தவித உபாயத்தையும் கையாளலாம் என்பது உங்கட்குத் தெரியாதா?”

”ஆனால் அர்ச்சுனா! போர் தொடங்குங்காலை உங்கள் எதிரிகள் பக்கம் சேரக்கூடாதென்றும் உங்கள் பக்கமே நின்று போர் புரிய வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதித்து, அந்த நிபந்தனையையே ஏகலைவனிடம் குருதட்சணையாகப் பெற்றுக் கொண்டால் பிரச்சினை சுமுகமாகத் தீர்ந்துவிடும் அல்லவா?”

“குருவே! சமயமும் சந்தர்ப்பமும் மனிதனை மாற்றிவிடும். இப்பொழுது இந்த நிபந்தனைக்குக் கட்டுப்படும் ஏகலைவன் பின் எப்படி எப்படி மாறுவிடுவானோ யார் கண்டது?

குருதட்சணையாக அவன் பெருவிரலையே தாங்கள் பெறவேண்டும். இல்லையேல், தங்கள் பாதத்திலே என் பிராணனை விட்டுவிடுகிறேன்”

அர்ச்சுனனை தூக்கி நிறுத்திய ஆச்சாரியாரின் உள்ளம் குமுறிக் கொண்டிருந்தது. “தெய்வமே! என்னைச் சோதிக்கிறாயா?” என்று அவர் உதடுகள் அசைந்தன. மனதை உறுதிப்படுத்திக் கொண்டு விசையான வாகனத்தில் ஏறி அர்ச்சுனனோடு புறப்பட்டார்.

..

அன்றலர்ந்த புஷ்பங்களோடு குருவுக்குப் பூஜை செய்யச் சென்ற ஏகலைவன் சிலைக்கு முன்னாலிருந்த மான் தோலில் உட்கார்ந்தான். அன்று அவன் மனத்தில் நிம்மதியில்லை. ஏனோ அவன் மனம் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தது. கூப்பிய கரங்களோடு சிலையை உற்றுப் பார்த்தான். அவன் கண்களிலே இலேசாக நீர் துளிர்த்திருந்தது. ஏகலைவன் பதட்டத்தோடு “குருவே! இது என்ன விபரீதம்? நான் என்ன அபராதம் செய்தேன்?” என்று கதறினான். துளித்திருந்த நீர் ‘பொலுபொலு’வென்று பெருகியது. அவனால் சகிக்க முடியவில்லை. “குருவே!” என்று வாய்விட்டு அலறிவிட்டான்.

“ஏகலைவா!” என்று சோகமான ஒரு குரல் எங்கிருந்தோ வந்து அவன் செவிகளில் ஒலித்தது.

“சுவாமி!” என்றான், அது தன் குருவின் குரல் என்று நிச்சயமாக நம்பிய ஏகலைவன்.

“ஏகலைவா! உன் குரு உனக்குச் சதி செய்கிறேன்: ஏகலைவா! உன்னிடம் தட்சணை கேட்கிறேன். தட்சணை கேட்க நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறேன்…”

“என் குருவே! இதற்காகவா கண்ணீர் வடிக்கிறீர்கள்? இதோ என் உயிரையே தங்கள் பாதத்தில் தட்சணையாய் வைக்கட்டுமா?”

“ஏகலைவா, உன் குருபக்திக்கு ஈடு இணை இந்த மூவுலகிலும் எதுவுமே கிடையாது. என் அருமை சிஷ்யனே! உன் வலது கைப்பெருவிரலை எனக்குத் தட்சணையாகக் கொடுப்பாயா?”

”கொடுப்பாயா? என்று கேட்கிறீர்களே பிரபு! என்மீது சந்தேகம் ஏற்பட நான் என்ன அபராதம் செய்தேன்? இதோ இப்பொழுதே தட்சணை தருகிறேன்.”

உள்ளே எழுந்து சென்று கூரிய கத்தியுடன் வந்தான் ஏகலைவன். வில்லையும் அம்புகளையும் கொண்டு வந்து குருவின் சிலைக்கு முன்னால் வைத்தான். தானும் குருவுக்கு முன்னால் உட்கார்ந்தான். கண்களை மூடியபடி ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்தான்.

அதே சமயத்தில் துரோணரும், அர்ச்சுனனும் வந்து சேர்ந்தார்கள். சிலையின் முன்னால் தியானத்தில் ஆழ்ந்துபோயிருக்கும் ஏகலைவன், தன் பின்னால் இவர்கள் நிற்பதை எப்படி உணரமுடியும்? அவன் தியானம் கலைந்து எழுந்திருக்கும்வரை இருவரும் பொறுதிருந்தார்கள். ஏகலைவன் கண் விழித்தான். கத்தி அவன் கையிலிருந்தது.

“தனுர் வேதத்தைக் குறைவில்லாமல் போதித்த என் குருவே இதோ உங்கள் சிஷ்யன் மனமுவந்து அளிக்கும் தட்சணை.”

மலர்ந்த முகத்தோடு ‘நறுக்’கென்று தன் வலதுகைப் பெருவிரலைத் துண்டித்துச் சிலையின் பாதத்தில் சமர்ப்பித்தான் ஏகலைவன். வானத்திலே இடியிடித்தது. புயல் வீசிக் காட்டு மரங்களை வேரோடு பெயர்த்துப் பிரளய காலமோவென்று ஐயுறும்படி செய்தது. காது செவிடுபடும்படி ஏற்பட்ட ஏதோ சத்தத்தைக் கேட்டுச் சிலையைப் பார்த்தான் ஏகலைவன். சிலையின் மார்பு வெடித்துத் துண்டு துண்டாகக் கீழே சொரிந்தது. வெடித்த மார்புக்குள்ளே இதயத்தைக் கண்டான். இதயத்திலிருந்து பெருகும் இரத்தத்தைக் கண்டான் ஏகலைவன். “ஐயோ குருவே” என்று அலறியபடியே மூர்ச்சித்து விழ்ந்தான்.

“இப்போது உனக்குத் திருப்திதானே!” என்றார் அர்ச்சுனனைப் பார்த்து. ஆச்சாரியாரின் நெஞ்சில் முகத்தைப் புதைத்துக்கொண்டு விக்கி விக்கி அழுதான் அர்ச்சுனன். அவனால் வாய் திறந்து ஒரு வசனம் கூடப் பேசமுடியவிலை.

’ஆனந்தன்’

1954

 

http://akkinikkunchu.com/?p=63937

  • கருத்துக்கள உறவுகள்

இச் சம்பவத்துக்கு சமமான ஒரு பிரச்சினை பரசுராமருக்கு வந்திருந்தது. தந்தையாகிய ஜமதக்கினி முனிவர் தாயையும், சகோதரர்களையும் கொல்லச்சொன்னதும் அவர் வெட்டி விட்டார். பின் அவர்களை உயிர்ப்பிப்பதை வரமாக கேட்டார்.  துரோணருக்கும்  பிரச்சினையை பிரச்சினை இல்லாமல் தீர்க்கும் சந்தர்ப்பம் இருந்தது. 

--- ஏகலைவரை போரில் கலந்து கொள்ள கூடாது என்று சொல்லி இருக்கலாம்.

--- இடது கரத்தால் அம்பெய்ய வரம் கொடுத்திருக்கலாம்.

--- எல்லாவற்றிற்கும் மேலாக  அர்ஜுனனுக்கு இன்னும் அதிகமான வித்தைகளை கற்று கொடுத்திருக்கலாம்.

என்ன செய்வது, மஹாபாரதமே சூழ்ச்சிகளும், சூதாட்டமும், பித்தலாட்டங்களும் நிறைந்ததுதான். போகட்டும்.....!  tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 வெண்முரசு நிகழ் காவியத்தில் மகாபாரதத்தில் வரும் ஏகலவ்யன் கட்டைவிரலை இவ்வாறு துரோணர் கேட்டார்.

..

துரோணர் நள்ளிரவில் எழுந்து வெளியே வந்ததுமே ஏகலவ்யனை நோக்கினார். வில்லாளிக்குரிய நுண்ணுணர்வால் அவன் முற்றத்துக்கு வந்ததுமே அவர் அறிந்திருந்தார். சாளரம் வழியாக அவன் முகம் தெரிந்ததையும் தன்னெதிரே இருந்த இரும்புநாழியின் வளைவில் கண்டுவிட்டிருந்தார். அந்தச்சிறுவன் யாரென்று அரைக்கணம் எண்ணிய அவரது சித்தத்தை அதற்குள் சுழன்றடித்த சுழல்காற்றுகள் அள்ளிக்கொண்டு சென்றன. பின்னர் தன்னுணர்வுகொண்டதும் அவர் வெளியே அவன் அமர்ந்திருப்பதை உணர்ந்து எழுந்து வந்து கதவைத் திறந்தார். அவன் எழுந்து கைகூப்பி நின்றான். அவர் பார்வையிலும் உடலிலும் அசைவேதும் எழவில்லை. “யார் நீ?” என்றார்.

ஏகலவ்யன் பணிந்து “நான் நிஷாதன். ஆசுரநாட்டு கருடகுலத்து அரசன் ஹிரண்யதனுஸின் மைந்தன். என் பெயர் ஏகலவ்யன்” என்றான். “ம்ம்?” என்று துரோணர் கேட்டார். “தங்கள் பாதங்களைப் பணியும் உரிமையை அளிக்கவேண்டும்” என்றான் ஏகலவ்யன். துரோணர் பேசாமல் நின்றார். ஏகலவ்யன் குனிந்து அவர் பாதங்களைத் தொடப்போனபோது விலகி “நில்! எதற்காக வந்தாய்?” என்றார். ஏகலவ்யன் தன் வில்லை எடுத்துக்காட்டி “இதை தங்களிடம் கற்கவந்தேன்” என்றான். “இது மலைவேடர்களுக்குரியதல்ல… நீ செல்லலாம்” என்றார் துரோணர். “உத்தமரே…” என ஏகலவ்யன் தொடங்க “மூடா, வில்வேதம் தேர்ந்தவர்கள் மட்டுமே தீண்டத்தக்கது இது… செல்!” என்று துரோணர் உரக்கச் சொன்னார். முதல் பார்வைக்குப்பின் அவர் அவனை நோக்கி ஒருகணம்கூட பார்வையை திருப்பவில்லை.

ஏகலவ்யன் வில்லின் நாணை இழுத்தபோது அவர் உடலில் அந்த ஒலி எழுப்பிய அசைவைக் கண்டான். அவனுடைய முதல் அம்பு காற்றிலெழுந்ததும் அடுத்த அம்பு அதைத் தைத்தது. மூன்றாவது அம்பும் முதலிரு அம்புகளுடன் மண்ணிலிறங்கியது. “ம்ம்” என்று துரோணர் உறுமினார். “மலைவேடனுக்கு இதுவே கூடுதல். செல்!” என்றார். “உத்தமரே, இந்த வில்லின் தொழில் இதுவல்ல என அறிவேன். மூன்று அம்புகளும் ஒரே சமயம் எழும் வித்தை இதிலுள்ளது. அதை நான் கற்கவேண்டும். தாங்கள் அதை எனக்கு அருளவேண்டும்” என்றான். துரோணர் சினத்துடன் “வேடனுக்கு எதற்கு வில்வேதம்? இனி ஒரு கணமும் நீ இங்கிருக்கலாகாது… செல்!” என்றார்.

“நான் வித்தையுடன் மட்டுமே இங்கிருந்து செல்வேன். இல்லையெனில் இங்கேயே மடிவேன்” என்றான் ஏகலவ்யன். துரோணர் பல்லைக்கடித்து “சீ!” என்றபின் உள்ளே சென்று கதவைமூடிவிட்டார். ஏகலவ்யன் அங்கேயே அமர்ந்திருந்தான். காலையில் அஸ்வத்தாமன் எழுந்ததும் அவனைப்பார்த்துவிட்டான். இரவில் நடந்த உரையாடலை அவன் கேட்டிருந்தான் என்பதை அவனுடைய பார்வையிலேயே ஏகலவ்யன் உணர்ந்தான். துரோணர் எழுந்து வெளியே வந்ததும் அஸ்வத்தாமன் அவர் பின்னால் சென்றான். ஏகலவ்யன் இடைவெளிவிட்டு அவர்களைத் தொடர்ந்தான்.

....

துரோணர் “ஆம், நான் காணிக்கை பெறாமல் உன் கல்வி முழுமைபெறாது. நான் கோரும் காணிக்கையை நீ அளிக்கவேண்டும்” என்றார். “கேளுங்கள் குருநாதரே, நீங்கள் எதைக்கோரினாலும் அக்கணமே அளிப்பேன். ஆணை! ஆணை! ஆணை!” என்றான் ஏகலவ்யன். துரோணர் “நான் கோருவது…” என்று தயங்க “என் மைந்தன் தாங்கள் கோருவதை அளிப்பான் குருநாதரே” என்றார் ஹிரண்யதனுஸ். அவையினரும் உரத்த ஒருமைக்குரலில் “ஆம் ஆம் ஆம்” என்றனர்.

துரோணர் “சென்றவாரம் என் முதல்மாணவனாக நான் அறிவித்த அர்ஜுனன் என்முன் வந்தான்” என்றார் துரோணர். “அவனன்றி எனக்கு வேறு முதல்மாணவர் உள்ளனரா என்று கண்ணீருடன் கேட்டான். அவன் மட்டுமே அறிந்த போர்க்கலைகளை எல்லாம் எப்படி நான் பிறிதொருவனுக்குக் கற்பித்தேன் என்று கேட்டான். நான் எவருக்கும் கற்பிக்கவில்லை என்றேன். மலைவேடன் ஒருவனுக்கு நீங்கள் வில்வித்தை கற்பித்தீர்கள், வில்வேதத்தின் உச்சங்களில் ஒன்றாகிய சப்தசரம் என்னும் வித்தையை அவன் அறிந்திருக்கிறான். என் வீரர்களே அதற்குச் சான்று என்று சொல்லி அவன் கூவினான். அவன் உடன்பிறந்தார் இருவரும் அவனருகே நின்றிருந்தனர்.”

“என் முதல் மாணவன் அவனே என்றும், அவனுக்கு மட்டுமே என் அம்புகள் அனைத்தையும் கற்பிப்பேன் என்றும் அஸ்தினபுரியின் உறவினருக்கும் தொண்டருக்கும் மட்டுமே வில்வித்தை கற்பிப்பேன் என்றும் ஆணையிட்டவன் நான். அச்சொற்களைக் கேட்டு திகைத்துச் சோர்ந்து நின்றேன். அவனுடன் வந்த அவனுடைய தமையனாகிய பீமன் நீயும் உன் குலமும் மகதத்தின் சிற்றரசர்கள் என்றும் அஸ்தினபுரிக்கு எதிராக வெல்லமுடியா வில்லொன்றை நான் ஒருக்கிவிட்டதாகவும் சொல்லி என்னைக் கடிந்தான். உண்ணும் நீர்மேல் இட்ட ஆணையை மீறிய நீர் எப்படி எங்கள் குருநாதராக முடியும் என்று கூவினான்.”

“பொறுத்தருள்க குருநாதரே… நான் அறியாமல் செய்தபிழை” என்றான் ஏகலவ்யன். “ஆம், என் கனவில் நானும் அப்பிழையைச் செய்தேன்” என்றார் துரோணர். “அதைச் சீர்செய்யவே நான் வந்தேன். என் முதல்மாணவன் என்றும் அர்ஜுனனே. அஸ்தினபுரிக்கு எதிராகவும் அர்ஜுனன் வில்லுக்கு எதிராகவும் என் கலை பயின்ற ஒரு வில் நிற்பதை நான் ஒப்ப மாட்டேன்” என்றார் துரோணர். “குருநாதரே, அவன் ஒருபோதும் அர்ஜுனன் முன் நிற்கமாட்டான், மகதத்தை ஏற்கமாட்டான். அவ்வுறுதிகளை இப்போதே குருகாணிக்கையாக அளிப்பான்” என்று சுவர்ணை கூவினாள். “மைந்தா, அந்தக் குடுவை நீரை எடுத்து உன் கைகளில் விட்டு அவ்வாக்குறுதியை குருநாதருக்கு அளி!”

“நீ சற்று பேசாமல் இரு” என்று சினத்துடன் ஹிரண்யதனுஸ் கூவினார். “குருநாதரே, தாங்கள் தங்கள் குருகாணிக்கையை கோருங்கள். இதோ என் மைந்தன், என் நிலம், என் குலம்.” துரோணர் நிமிர்ந்து ஏகலவ்யனை உற்று நோக்கி “உன் வலதுகையின் கட்டைவிரலை எனக்கு குருகாணிக்கையாகக் கொடு!” என்றார். ஹிரண்யதனுஸ் தீப்பட்டது போல பாய்ந்தெழுந்து “குருநாதரே!” என்றார். ஆனால் அக்கணத்திலேயே ஏகலவ்யன் “ஆணை குருநாதரே” என்றபடி அருகே நின்ற வீரன் ஒருவனின் வாளை எடுத்து தன் கட்டைவிரலை ஓங்கி வெட்டி தெறித்த துண்டை எடுத்து இருகைகளாலும் துரோணர் முன் நீட்டினான்.

சபைமுற்றத்தில் பசுங்குருதியின் நெடி எழுந்தது. ஊற்றுபோல குருதி தெறித்து முற்றமெங்கும் சொட்டி முத்துக்களாக உருண்டது. துரோணர் திரும்பி நோக்காமல் அந்த விரலை தன் இடக்கை விரலால் தொட்டு விட்டு எழுந்து “என்றும் புகழுடன் இரு. உன் விற்கலை வளரட்டும்” என்றார். ஹிரண்யதனுஸ் உரத்தகுரலில் “நில்லுங்கள் குருநாதரே. நீங்கள் செய்தது எந்த அறத்தின்பாற்படும்? இதென்ன ஷத்ரிய அறமா? பணிந்தவனைத் துறத்தலா ஷத்ரிய அறம்? இல்லை பிராமண அறமா? அளித்த ஞானத்தை திருப்பிக்கோரும் பிராமணன் போல் இழிமகன் எவன்?” என்றார்.

“இது கடன்பட்டோனின் அறம் அரசனே” என்று பற்களை இறுகக் கடித்து கழுத்து நரம்புகள் அதிர துரோணர் சொன்னார். “பிராமணனோ ஷத்ரியனோ அல்லாதவனின் அறம்.” ஹிரண்யதனுஸ் குரல் உடைந்தது. கண்ணீருடன் “ஏன் இதைச்செய்தீர்கள்? சொல்லுங்கள் குருநாதரே, இப்பெரும் பழியை இம்மண்ணில் சொல்லுள்ள அளவும் சுமப்பீர்களே? இப்பெரும் விலையை அளித்து நீங்கள் அடையப்போவதென்ன?” என்றார்.

“நானறிந்த நரக வெம்மையில் என் மைந்தன் வாடலாகாது. அது ஒன்றே என் இலக்கு. அதை நிகழ்த்துவது எதுவோ அதுவே என் அறம்… நான் புறந்தள்ளப்பட்ட பிராமணன். மண்ணாளாத ஷத்ரியன். நாளை என் மைந்தன் அப்படி வாழலாகாது. அவனுக்குக் கீழே அரியணையும் மேலே வெண்குடையும் இருக்கவேண்டும். எந்தச்சபையிலும் அவன் எழுந்து நின்று பேசவேண்டும். இதோ இந்தத் தோள்களில் இத்தனை வருடங்களாக இருந்துகொண்டிருக்கும் ஒடுக்கம் அவன் தோள்களில் வரக்கூடாது. ஆம், அதற்காக நான் எப்பழியையும் சுமப்பேன். எந்நரகிலும் ஏரிவேன்” துரோணர் உதடுகளைச் சுழித்து நகைத்தார். “நான் அறியாத நரகத்தழல் இனியா என்னை நோக்கி வரவிருக்கிறது?”

திரும்பி வாயிலை நோக்கிச் சென்ற துரோணரை சுவர்ணையின் குரல் தடுத்தது. “நில்லுங்கள் உத்தமரே” என்றாள் அவள். அவர் திரும்பி அவளுடைய ஈரம் நிறைந்து ஒளிவிட்ட விழிகளைப் பார்த்தார். அவர் உடல் குளிர்க்காற்று பட்டதுபோல சிலிர்த்தது. “இங்கு நீர் செய்த பழிக்காக என் குலத்து மூதன்னையர் அனைவரின் சொற்களையும் கொண்டு நான் தீச்சொல்லிடுகிறேன். எந்த மைந்தனுக்காக நீர் இதைச் செய்தீரோ அந்த மைந்தனுக்காக புத்திரசோகத்தில் நீர் உயிர்துறப்பீர். எந்த மாணவனுக்காக இப்பழியை ஆற்றினீரோ அந்த மாணவனின் வில்திறத்தாலேயே நீர் இறப்பீர். ஷத்ரிய வீரருக்குரிய இறப்பை அடையும் நல்லூழும் உமக்கிருக்காது.” துரோணர் உடல் நடுங்கத் தொடங்கியது.

சுவர்ணை உரக்கக் கூவினாள் “மீளாப் பெருநரகத்தில் உமது மைந்தனை நீரே அனுப்பியவராவீர். வாழையடி வாழையாக வரும் தலைமுறைகளின் எள்ளும் நீரும் உமக்குக் கிடைக்காது. உமது மைந்தன் சொற்களாலேயே நீர் பழிக்கப்படுவீர்.” துரோணர் கண்களில் நீருடன் கைகூப்பி “தாயே!” என்றார். “ஆம், இச்சொற்கள் என்றுமழியாதிருக்கட்டும். இச்சொற்களை தெய்வங்களும் மீறாதிருக்கட்டும். அதன்பொருட்டு இங்கே இச்சொற்களையே என் இறுதிச்சொற்களாக்குகிறேன். நவகண்டம்! நவகண்டம்! நவகண்டம்!”

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.