Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைரமுத்துவும் சிக்கியிருக்கின்ற ‘#நானும்’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வைரமுத்துவும் சிக்கியிருக்கின்ற ‘#நானும்’

Gopikrishna Kanagalingam / 2018 ஒக்டோபர் 11 வியாழக்கிழமை, மு.ப. 02:56Comments - 0

உலகின் முக்கிய விருதுகளில் ஒன்றாக முன்னர் கருதப்பட்டு, இப்போது பெரிதளவுக்குக் கவனத்தை ஈர்க்காத விருதுகளில் ஒன்றாக மாறியிருக்கும், அமைதிக்கான நொபெல் பரிசு, முக்கியமான தெரிவொன்றை, இவ்வாண்டு மேற்கொண்டிருந்தது.

போரிலும் ஆயுத முரண்பாடுகளிலும், பாலியல் வன்முறைகளை ஆயுதமாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டமைக்காக, டெனிஸ் முக்வெகி, நாடியா முராட் ஆகிய இருவருக்கும், சமாதானத்துக்கான நொபெல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.   

இந்த விருதே முக்கியமானது என்பது ஒரு பக்கமாகவிருக்க, உலகம் முழுவதிலும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் தொடர்பில் இப்போது எழுந்திருக்கும் கவனத்துக்கு மத்தியில், முக்கியமான அங்கிகாரமாக, இந்த விருது அமைந்திருக்கிறது. ஆனால், மறுபக்கமாகப் பார்க்கப் போனால், ஏற்கெனவே மிகப்பெரிய இயக்கமாக மாறியிருக்கும் இவ்விடயத்தில், நொபெல் பரிசும் இணைந்திருக்கிறது என்று தான் கருத வேண்டியிருக்கிறது.   

காலாகாலமாக, பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகிவந்த பெண் சமூகம், பொறுத்தது போதும் என்று பொங்கியெழுந்த ஆண்டாக, 2017ஆம் ஆண்டை, அதாவது கடந்தாண்டை, குறிப்பிட முடியும். 

உலகளவில், #MeToo என்ற இயக்கம் உருவானது. “நானும் பாதிக்கப்பட்டேன்” என்ற அர்த்தத்திலான அந்த இயக்கம், உலகின் முன்னணிப் பிரபலங்கள் பலரின் மறுபக்கங்களைத் தோலுரித்துக் காட்டியிருந்தது.   

இந்த #நானும் என்கின்ற இயக்கத்தின் பயணம், மேற்கத்தேய நாடுகளிலேயே பெரும்பாலும் ஆரம்பத்தில் தங்கியிருந்தாலும், கீழைத்தேய நாடுகளையும் இப்போது பாதிக்கத் தொடங்கியிருக்கிறது. இதில், இப்போது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்ற பிரபலம் யார் தெரியுமா? கவிப்பேரரசு வைரமுத்து.

கவிஞர் வைரமுத்து, தமிழ் சினிமாவிலும் இலக்கியத்திலும் முக்கியமான ஒருவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவரது தனிப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான விமர்சனங்கள், எப்போதுமே இருந்து வந்திருக்கின்றன. தன்முனைப்புக் கொண்ட ஒருவர் என்ற விமர்சனம், எப்போதும் இருந்து வந்திருக்கிறது. ஆனால், அந்தத் தன்முனைப்பை, வித்துவச் செருக்கு என்ற வகைக்குள்ளும் அடக்க முடியும் என்ற அடிப்படையில், அவரது கலையை இரசிப்பதை அவ்விமர்சனங்கள் தடுத்து நிறுத்தியதில்லை.   

ஆனால், இப்போது வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள், தன்முனைப்புத் தொடர்பான குற்றச்சாட்டுகள் கிடையாது. பாலியல் குற்றச்சாட்டுகள். அதுவும், ஒருவர், இருவரால் அக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை. ஏராளமான பெண்கள், அக்குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்கள். அவர்களில், பிரபல பாடகியான சின்மயியும் ஒருவர். சின்மயி முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு, 2005ஆம் அல்லது 2006ஆம் ஆண்டில் நடைபெற்ற சம்பவம் தொடர்பானது என்று அவர் குறிப்பிடுகிறார். அதிலும், ஈழத் தமிழர்களால் தயாரிக்கப்பட்ட இசைத்தட்டுக்கான வெளியீட்டு விழாவின் போது தான், முகவர் மூலமாக, வைரமுத்து தன்னை அணுகினார் என்றும், மறுத்த பின்னர் தனது இசை வாழ்க்கை முடிக்கப்பட்டுவிடும் என எச்சரிக்கப்பட்டது எனவும் குற்றஞ்சாட்டுகிறார். இது நடக்கும் போது, வைரமுத்துக்கு, 51 அல்லது 52 வயது இருந்திருக்கும்.   

பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், அண்மைய சில நாள்களில் சிக்கிய முதலாவது பிரபலம், வைரமுத்துவல்லர். இந்த #MeToo அல்லது #நானும், இந்திய அளவில், அண்மைய சில நாள்களில் பல குற்றச்சாட்டுகளை எழுப்பியிருக்கிறது. இந்திய மத்திய அரசாங்கத்தின், வெளிவிவகாரத்துக்கான இராஜாங்க அமைச்சர் தொடக்கம், பெண்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்த நகைச்சுவையாளர்கள் வரை, இக்குற்றச்சாட்டுகள் பாதித்திருக்கின்றன. 

மறுபக்கமாக, ஐக்கிய அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் நீதியரசராக, அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பால் பரிந்துரைக்கப்பட்ட பிரெட் கவனோ மீது, பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டமை, அண்மைக்காலத்தில் அதிக அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இறுதியில், கவனோவின் நியமனம் உறுதிசெய்யப்பட்டிருந்தாலும், அவர் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள், பெரியளவு கலந்துரையாடல்களை எழுப்பியிருந்தன.   

இவ்வாறு, பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் போது, “குற்றச்சாட்டு முன்வைக்கும் போதெல்லாம் அனைவரையும் நம்பினால், ‘குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி’ என்ற வழக்கமான நிலைப்பாடு எங்கே போனது?” என்ற கேள்வி எழுப்பப்படும். ஒரு வகையில் பார்க்கப் போனால், நியாயமான கேள்வியாகத் தான் இருக்கிறது.   

ஆனால், முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையெல்லாம், அப்படியே நம்பிவிடுங்கள் என்பது, இங்கிருக்கும் நிலைப்பாடு கிடையாது. குற்றம் நிரூபிக்கப்படும் வரை, நிரபராதியாகக் கருதப்படுவதில் பெரிதாகப் பிரச்சினைகள் இல்லை. ஆனால், ஒருவருக்கொருவர் சம்பந்தப்படாத பல பெண்கள், தனித்தனியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பின்னரும், குற்றஞ்சாட்டப்படுபவரை “நிரபராதி” என்று கருதுவதில் பிரச்சினைகள் உள்ளன. ஏனென்றால், நீதிமன்றங்களால் வழங்கப்படும் தீர்ப்புகள் வேறானவை. ஆனால், பொதுமக்களின் மட்டத்தில், ஒருவர் மீதான குற்றச்சாட்டு, நம்பத்தகுந்ததாக எழுப்பப்பட்டால், அவர் மீது சந்தேகப் பார்வை எழுவது வழக்கமானது.   

“எங்கள் வீட்டுக்குள் நுழைந்த இவர், எமது வீட்டிலிருந்த பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்” என்று யாராவது குற்றஞ்சாட்டினால், குற்றஞ்சாட்டப்படும் நபர் மீது, எமது சந்தேகம் விழும் தானே? அவர் தான் குற்றவாளி, அவருக்குச் சிறைத்தண்டனையை உடனடியாக வழங்க வேண்டும் என்று, நீதி அடிப்படையிலான எண்ணங்களில்லாமல், “இச்செயலை இவர் செய்திருப்பார்” என்று, குற்றச்சாட்டின் நம்பகத்தன்மையை வைத்து எடைபோடுகிறோம், இல்லையா? அப்படியானால், பாலியல் குற்றச்சாட்டுகளின் போது மாத்திரம், அதே பாணியிலான எண்ணத்தை நாம் கொண்டிருப்பதில்லை?   

அதற்கு, முக்கியமானதொரு விடயம் இருக்கிறது. ஏனைய விடயங்களில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் போது, குற்றச்சாட்டை முன்வைப்பவரை, “பொய் சொல்கிறார். இவர் பொய்யர்” என்ற அடிப்படையுடன், முற்சார்பு எண்ணத்துடன் எதிர்கொள்வதில்லை. ஆனால், பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைப்போரை மாத்திரம், மேற்படி முற்சார்பு எண்ணத்துடன் தான் அணுகுகிறோம்.   

ஆகவே, “பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைப்போர் அனைவரையும் நம்ப வேண்டுமா?” என்ற கேள்விக்கான பதிலாக, “பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அனைவரையும், அப்படியே நம்பத் தேவையில்லை. ஆனால், குற்றச்சாட்டை முன்வைப்பவர் பொய்யர் என்ற முற்சார்பு எண்ணத்துடன் அக்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதை நிறுத்துவோம்” என்பது தான் அமையும்.   
அதேபோல், “பிரபலமாகுவதற்காகவே குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்” என்ற, அடிப்படையற்ற வாதத்தையும் நிறுத்த வேண்டியிருக்கிறது.

அண்மைக்காலத்தில் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அல்லது நிரூபிக்கப்பட்ட பிரபலங்கள் சிலரின் பெயர்கள் இவை: லாரி நாசர், பில் கொஸ்பி, பில் ஓ ரைலி, ஹார்வி வைன்ஸ்டீன், மோர்கன் ஃபிறீமன், சார்ளி றோஸ், அஸிஸ் அன்சாரி, மற் லவெர், றிச்சர்ட் பென்ஸன், அல் ஃபிராங்ளின், லூயிஸ் சி.கே, றோய் மோர், ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ், பென் அஃப்ளெக்.   

இவர்களில் அநேகமாக எல்லோரின் பெயரையும், சர்வதேச ரீதியில் செய்திகள் பற்றிய அக்கறை கொண்டோர் அறிந்திருப்பர். ஆகக் குறைந்தது, இந்தப் பட்டியலில் காணப்பட்டோரில் சிலரின் பெயரையாவது, அறிந்திருப்பர்.   

ஆனால், இவர்கள் மீது குற்றஞ்சாட்டிய பெண்களில் எத்தனை பேரைப் பற்றி அறிந்திருக்கிறீர்கள்? சர்வதேசச் செய்திகளை ஆழமாக வாசிப்பவர்களாலேயே, இவர்கள் மீது குற்றஞ்சாட்டிய பெண்களில் ஒருவரின் பெயரைக் கூட நினைவில் வைத்திருக்க முடியாது. அப்படியிருக்கும் போது, பிரபலமாகுவதற்காகவே குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் என்பது, எந்த விதத்தில் நியாயமான விமர்சனமாக அமையக்கூடும்?   

கவிஞர் வைரமுத்துத் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, நடிகரும் அண்மைக்காலத் தமிழ்த் திரையரங்கில் முற்போக்குச் சிந்தனை கொண்டவராகக் கருதப்படுபவருமான சித்தார்த், முக்கியமான கருத்தை வெளியிட்டிருந்தார்: “குற்றஞ்சாட்டுபவர் தனது பெயரை வெளியிட்டால், பிரபலத்துக்காகச் செய்கிறார் என்கிறீர்கள். குற்றஞ்சாட்டுபவர் அநாமதேயமாக இருந்தால், அவரின் உண்மைத்தன்மையைக் கேள்விக்குட்படுத்துகிறீர்கள்” என்று அவர் தெரிவித்திருந்தார். நியாயமான கருத்தாகவே அது அமைந்திருந்தது. “என்ன செய்தாலும் குற்றஞ்சாட்டுபவரை நம்பமாட்டோம்” என்ற வீராப்பில் இருப்பவர்கள் தான், இப்படி இரு பக்கங்களையும் கேள்விக்குட்படுத்துகிறார்கள்.   

இன்றைக்கு வைரமுத்து மீதும் ஏனைய இந்தியர்கள் மீதும் எழுந்திருக்கின்ற இக்குற்றச்சாட்டுகள், நாளைக்கு இலங்கையையும் வந்தடையக்கூடும். ஏனென்றால், இலங்கையிலும் நிறைய வைரமுத்துகள் இருக்கிறார்கள் என்பது வெளிப்படை. எனவே, நாம் தயாராக இருக்கிறோமோ?   

ஆனால், இதில் இலகுவான விடயம் என்னவென்றால், நாங்கள் பெரிதான மாற்றங்கள் எதையும் செய்யத் தேவையில்லை. குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் போது, நம்பிக்கையுடன் அவற்றைச் செவிமடுப்பது தான், நாங்கள் செய்யக்கூடிய குறைந்தபட்ச நடவடிக்கையாக இருக்கிறது. செய்வோமோ?     

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வைரமுத்துவும்-சிக்கியிருக்கின்ற-நானும்/91-223464

  • கருத்துக்கள உறவுகள்

இது சரியான முறையில் மிகவு திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ள செய்தி. பொதுவாகவே இந்திய சினிமா என்பது இவற்றைப்போல் அசிங்கங்கள் நிறைந்தவைதான் உச்ச நட்சத்திரன் எனப்படும் கமல்காசன் ஆரம்பத்தில் நினைவில் வைத்துக்கொள்ளமுடியாத நடிகைகளிலிருந்து சிறீவித்யா உட்பட இப்போது அவரது நண்பனின் மகள் காஜத்திரி ரகுராம் வரைக்கும் தொடுசல் வைத்திருந்தது ஊரறியும் அதேபோல் தமிழ் சினிமாவில் தொடர்புடையவர்கள் அனேகமாணோர் அம்மணமானவர்களே. சின்மயிக்கு ஆதரவு தெரிவித்த சமந்தா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்துப்பெற்ற சித்தார்த்துடன் ஊர் சுற்றிய விடையம் உலகப்பிரபல்யம் சமந்தாவின் திருமணத்தின்போது சித்தார்த் வெளியிட்ட ருவீற்றர் பிரியாணிக்கதை அதைவிடப் பிரபல்யம். 

கன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்கான பாடலாகிய ஒரு தெய்வம் தந்த போவே எனும் பாடலை  சின்மயி பாடியது ஒரு நடு இரவுப்பொழுதில் அப்போது அவர் பதினெட்டு வயதை எட்டவில்லை ஏ ஆர் ரகுமானது ரெகார்டிங் தெயேட்டரிலிருந்து வெளிவர அதிகாலை நேரமாகிவிட்டது காலப்போக்கில் அவர் ஏ ஆர் ரகுமானைக்கூட பாலியல் ரீதியில் என்னைத் தொந்தரவுசெய்தார் எனக்கூறக்கூடும். 


இது மிகவும் திட்டமிட்ட முறையில் அமீர்சா எனும் பஜக பிரமுகர் தலைமையிலான திராவிடத்துகெகிரானதும் தமிழ் நாட்டில் கீழ் சாதியினருக்கானதுமான பிரச்சாரமும் பழிவாங்கல் நடவடிக்கையுமே.

தமிழ்நாட்டில் மிகவும் பிரச்சனையான செய்திகளைத் தலைப்புச்செய்தியாகப் போடாத வடநாட்டு மீடியாக்கள் இச்செய்திக்கு மிக முக்கியத்துவம் கொடுத்திருக்கு.

காரணம் தமிழ்நாடு ஏதோ ஒருவிதத்தில் காலம்காலமாக வடநாட்டவர்களை வயித்த்ரிச்சல்படவே வைத்திருக்கு அதன் வெளிப்பாடே இவை யாவும் 

தவிர திராவிடத்துக்கு எதிரான காய்நகர்த்தல் என நான் கூறுயது உண்மையாகவிருந்தால் எனக்கு மிக்க மகிழ்சியே  திராவிடம் அழிந்து தமிழ் தேசியம் தமிழ்நாட்டில் வளரவேண்டும் என்பதே எனது எண்ணம்.

மற்றப்படி இத்திட்டமிடுதலில் வீணாகப் பலியாகப்போவது சின்மயி மட்டுமே வைரமுத்துக்கு அவரது தலையில் இருக்கும் டை அடித்த மயிர் ஒன்று களண்டுபோனதுக்குச் சமம் அவ்வளவே ஆனால் காலப்போக்கில் சின்மயி இச்செய்தியை வெளியிட்டதால் மிகவும் மனவுளைச்சலுக்குப் படிப்படியாக ஆளாவார் அதன்மூலம் அவர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபடலாம் அல்லது தற்கொலையே செய்துகொள்ளாம் அதுகூட பாஜகவுக்கு இனிப்பான விடையமே.

நான் நினைக்கிறேன் பாஜாக சின்மயியை ஏதோ ஒரு விடையத்தையிட்டு மிரட்டுகிறது அதன் வெளிப்பாடே இதுவாக இருக்கலாம். 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.