Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பக்கவாதம் ஏன் வருகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பக்கவாதம் ஏன் வருகிறது

கேள்வி- பக்கவாதம் ஏற்படக் காரணம் என்ன?
எஸ்- மூர்த்தி தெல்லிப்பளை

பக்கவாதம் ஏற்படுவது எமது மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு குருதி செல்லாமல் தடைப்படுவதால் ஆகும். குருதி செல்லாவிட்டால் முளையின் அந்தப் பகுதியில் உள்ள கலங்கள் இறக்க நேரிடும். கலங்கள் இறந்தால் முளையின் அந்தப் பகுதி எதைஎதையெல்லாம் இயங்க வைக்கிறதோ அவை செயலற்றுவிடும்.

6stroke-iStock20360282lr.jpg

உதாரணமாக உடலின் வலது பக்கத்தை இயங்க வைக்கும் கலங்கள் இறந்தால் பாதிக்கப்பட்டவரின் வலது பக்க கைகால்கள் இயங்காது. மாறாக பேச்சுத் திறனுக்கான பகுதிக்கான இரத்த ஓட்டம் தடைப்படால் பேச முடியாமல் போய்விடும்.

 எங்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதுடன் முளையின் எவ்வளவு இடம் பாதிக்கப்படுகிறது என்பதும் முக்கியமாகும்.

மிகச் சிறிய இடம் மட்டும் பாதிப்புற்றிருந்தால் கை கால் இயக்கமின்மை தற்காலிமாக இருந்து குணமாகிவிடலாம்.

மாறாக பாதிப்புற்றது பெரிய பகுதியானால் ஒரு பக்கம் இயங்காமலே போய்விடலாம்.

அதே போல பேச்சுக்காக பகுதியானால், பாதிக்கப்பட்ட முளையின் அளவுக்கு ஏற்ப அவ்வாறே சில நாட்களில் திரும்பக் கூடும் அல்லது முழுமையாக பாதிப்படையவும் கூடும்.

மூளையின் கலங்களுக்கு குருதி கிடைக்காமல் விடுவது இருவகை காரணங்களாலாகும்.

முதலாவதும் அதிகமானதும் குருதிக் குழாய்கள் (நாடிகள்) கொழுப்பினால் அடைபடுவதாலாகும்.

இரத்தத்தில் கொலஸ்டரோலின் அளவு அதிகரிக்கும் போது அவை நாடிகளின் உட்புறத்தில் படிகின்னறன. தொடர்ந்து படியும் போது நாடிகளின் உட்புற அளவு குறைந்து குறைந்து வந்து இறுதியில் அடைத்துவிடும். அல்லது அவ்விடத்தில் இரத்தம் உறைந்து குருதி பாய்வதைத் தடுத்துவிடும்.

மூளையில் அவ்வாறு நடக்கும்போது பக்கவாதம் வருகிறது. இருதயத்தில் அவ்வாறு அடைத்தால் மாரடைப்பு வரும் என்பதையும் இங்கு சுட்டிக் காட்டலாம். இந்த வகை பக்கவாதமே மிக அதிகமானதாகும். 10 பேருக்கு பக்கவாதம் வந்தால் அதில் 8 பேருக்கு இவ்வாறு நாள அiடைப்பினாலேயே ஏற்படுகிறது.

இரண்டாவது வகையில் சிறிய இரத்தக் குழாய் வெடித்து இரத்தம் வெளியேறுவதால் மூளையின் அந்தப் பகுதிக்கான குருதி ஓட்டம் தடைப்படுகிறது. இது மிகவும் ஆபத்தானது. ஆனால் இந்த வகை பக்கவாதம் குறைவானது. 10 பேருக்கு பக்கவாதம் வந்தால் அதில் 8 பேருக்கு மட்டுமே இவ்வாறு குருதிக் கசிவினால் ஏற்படுகிறது.

எவருக்குமே பக்கவாதம் வரலாம் எனினும் சில வகை நோயாளிகளுக்கு அதற்கான சாத்தியம் அதிகம்.

மிக முக்கியமானது பிரஸர் என்று அழைக்கப்படும் உயர் இரத்த அழுத்தமாகும். பிரஸர் நோயுள்ள சிலர் 'எனக்கு தலையிடி தலைச்சுத்து ஒண்டும் இல்லைதானே' என்று சொல்லி மருந்து சாப்பிடுவதை கைவிட்டுவிடுகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. மருந்தைத் தொடர் ந்து சாப்பிட வேண்டும். ஒருவரின் பிரஸரின் அளவுக்கு ஏற்ப மருத்துவர் மருந்தின் அளவைத் தீர்மானிப்பார்.

அடுத்த முக்கிய காரணம் புகைத்தல் ஆகும். புகைத்தல் மட்டுமின்றி புகையிலை வெற்றிலை சப்புதலும் அவ்வாறே. புகையிலையில் உள்ள நிக்கரின் போன்ற இரசாயனங்கள் குருதிக் குழாய்களை சுருங்கச் செய்வதுடன் கழுத்தின் ஊடாக மூளைக்கு செல்லும் நாடிகளில் கொழுப்பு படிவுகளை ஏற்படுத்துவதாலும் பக்கவாதம் வருகிறது.

இதைத் தவிர,
நீரிழிவு நோய்,
இரத்தத்தில் அதிகரித்த கொலஸ்டரோல் பிரச்சனை,
அதீத மது பாவனை,
எண்ணெய் கொழுப்பு, உப்பு ஆகியவற்றை அதிகம் உட்கொள்ளும் தவறான உணவு முறை,
போதிய உடலுழைப்பு அல்லது உடற்பயிற்சி அற்ற வாழ்க்கை முறை,
அதீத எடை
ஆகியவையும் பக்கவாதம் வருவதற்குரிய ஏனைய காரணங்களாகும்.

இளவயதை விட வயது முதிரும்போதும் பக்கவாதம் வரக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். அத்துடன் ஏற்கனவே ஒரு முறை பக்கவாதம் சிறிய அளவிலேனும் வந்து குணமாகியவர்களுக்கு மீண்டும் வரக் கூடிய சாத்தியம் அதிகம்.

எனவே எண்ணெய் உப்பு கொழுப்பு இனிப்பு போன்றவற்றைக் குறைத்து, அதிகளவு காய்கற்களையும் பழவகைகளையும் மீன் ஆகியவற்றை உண்ணும் ஆரோக்கியமான உணவு முறையைக் கடைப்பிடிப்பதுடன் தினசரி உடற்பயிற்சி செய்து அளவான உடம்புடன் ஆரோக்கியமாக வாழ்ந்தால் பக்கவாதம் மட்டுமல்ல ஏனைய பல நோய்களிலிருந்தும் எம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.

எதிரொலி பத்திரிகையின் சொல்லுங்கோ டொக்டர் கேள்வி பதில் பகுதியில் வெளியானது

 

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்

 

http://hainallama.blogspot.com/2018/10/blog-post.html?m=1

  • கருத்துக்கள உறவுகள்

பக்கவாதம் தடுப்பது எப்படி?

 
 
 


 

 

அக்டோபர் 29 - உலக பக்கவாத விழிப்புணர்வு நாள்

முதுமை என்பது நமக்கெல்லாம் ஒரு பருவம். இக்காலகட்டத்தில் முதுமையின் விளைவாக பல நோய்கள் நம்மிடம் எட்டிப் பார்க்கும். அவற்றில் முதன்மையானது மாரடைப்பு. இந்த நோயினால் உடனே மரணமும் வரலாம் அல்லது சரியான நேரத்தில் சரியான சிகிச்சை பெற்று பல ஆண்டுகள் நலமாகவும் வாழ முடியும். 
24.jpg
ஆனால், பக்கவாதம் வந்தவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே முழுவதுமாக குணம் கிடைக்கும். பலரையும் இது படுக்கையில் போட்டுவிடும். இவர்களுக்கு கை, கால் செயல் இழந்து விடுவதால் மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கும். அதனால், இந்த நோயைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகவே தெரிந்துகொள்வது நல்லது.

எது பக்கவாதம்? 

மூளையின் ஒரு பக்கத்தில் ரத்த ஓட்டம் குறைந்து, அந்தப் பகுதி செயல்படாமல் போகும்போது, உடலின் எதிர்பாகத்தில் ஒரு கை, ஒரு கால் மற்றும் முகத்தில் ஒரு பகுதி செயலற்றுப் போவதைப் ‘பக்கவாதம்’  (Stroke)  என்று சொல்கிறோம். வலது, இடது என்று மூளையை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். உடலின் வலது பக்கச் செயல்பாட்டை இடது பக்க மூளை கட்டுப்படுத்துகிறது.

 இடது பக்கச் செயல்பாட்டை வலது பக்க மூளை கண்காணிக்கிறது. ஆகவே, மூளையின் வலது பக்கம் செயல்படவில்லை என்றால், உடலில் இடது பக்கம் செயல்படாது. மூளையின் இடது பக்கம் செயல்படவில்லை என்றால், உடலில் வலது பக்கம் செயல்படாது. பொதுவாக, வலது பக்கம் பக்கவாதம் வருமானால் பேச்சு பாதிக்கும். காரணம், பேச்சுக்குத் தேவையான சமிக்ஞைகள் மூளையின் இடது பக்கத்திலிருந்து வருவதுதான்.

எப்படி வருகிறது?

பெருமூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குப் பெருமூளை நடுத்தமனிக் குழாய்   (Middle Cerebral Artery)   ரத்தத்தை விநியோகிக்கிறது. இதில் ரத்தம் உறைந்து அடைத்துக் கொள்ளும்போது அல்லது ரத்தக்கசிவு ஏற்படும்போது, அந்தப் பகுதிக்கு ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனால் அங்குள்ள மூளை செல்கள் செயலிழந்துவிட, அந்தப் பகுதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் உடல் உறுப்புகள் ஓட்டுநர் இல்லாத பேருந்து போல செயலற்றுப்போகும். 

முக்கியமாக, உடலின் ஒரு பக்கத்தில் கை, கால் மற்றும் முகத்தில் பாதிப்பகுதி செயலிழந்துவிடும். ஆகவேதான், இந்த நோய்க்குப் ‘பக்கவாதம்’ என்று பெயர் வந்தது. இதையே ‘ஹெமிபிலிஜியா’ (Hemiplegia) என்ற மருத்துவ மொழியில் அழைக்கிறார்கள்.

காரணங்கள்50 வயதைத் தாண்டியவர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம். அதாவது, இந்த வயதுக்கு மேல் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை பக்கவாதம் வருகிற வாய்ப்பு 2 மடங்கு 
அதிகரிக்கிறது. குடும்பத்தில் பெற்றோருக்கு அல்லது அவர்களின் சந்ததியினருக்கு பக்கவாதம் வந்திருந்தால், அவர்கள் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, அதிக ரத்தக் கொழுப்பு, மாரடைப்பு, இதயவால்வு கோளாறுகள், இதயச் செயலிழப்பு, இதயத்துடிப்புக் கோளாறுகள் போன்றவை பக்கவாதம் வருவதற்கு அடித்தளம் அமைக்கின்ற முக்கிய நோய்கள். 

புகைப்பிடித்தல், அடுத்தவர் விடும் புகையைச் சுவாசித்தல், மது அருந்துதல், பருமன், உடல் உழைப்பு குறைந்த வாழ்க்கைமுறை ஆகியவை பக்கவாதம் வருவதைத் தூண்டுகின்றன. தலைக்காயம், மூளையில் ஏற்படும் தொற்று போன்றவற்றாலும் பக்கவாதம் வரலாம். முன் அறிவிப்புகள் பக்கவாதம் பெரும்பாலும் திடீரென்றுதான் வருகிறது. 

பக்கவாத நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து வரும்போது, ‘அஞ்சு நிமிஷம் முன்னாடி வரைக்கும் நல்லாத்தான் சார் இருந்தார். பாத்ரூமுக்குப் போய்ட்டு திரும்பும்போது மயங்கி விழுந்தாரு. அப்புறம் பார்த்தா ஒரு கை வரலே, ஒரு கால் வரலே, வாய் கோணிப்போச்சு, மூச்சு மட்டும் வருது’ என்றுதான் சொல்வார்கள். 

ஆனால், நோயாளியானவர் நன்றாக யோசித்துப் பார்த்தாரென்றால், முழுமையான பக்கவாதம் வருவதற்கு முன், அவருக்கு முன்னறிவிப்பு செய்வதைப்போல சில அறிகுறிகள் அவ்வப்போது தோன்றி மறைந்திருக்கும். அந்த அறிகுறிகள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொண்டால் பக்கவாதத்தைத் தடுக்க உதவும். இதோ அந்த அலார அறிகுறிகள்...

1.வாய் கோணுதல்

முகத்தில் அல்லது உடலில் ஒரு பக்கத்தில் மரத்துப்போதல், பலவீனம் அடைதல், தளர்ச்சி அடைதல் அல்லது ஒரு பக்கமாக இழுப்பது போன்ற உணர்வு, உடல் செயலிழத்தல்.

2.வார்த்தைகள் குழறுதல்

பேசும்போது திடீரென வார்த்தைகள் குழறுதல்... மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்வதில் பிரச்னை... எளிய வாக்கியங்களைக்கூட வெளிப்படுத்த முடியாத நிலைமை...

3.கால் தடுமாற்றம்

நடக்கும்போது தள்ளாடுதல்... நேராக நிற்க முடியாத நிலைமை, ஒரு காலில் மட்டும் உணர்ச்சி குறைந்திருப்பது...

4.இதர அறிகுறிகள்

*பேசிக்கொண்டிருக்கும்போது சட்டென்று சில நொடிகள் பேச்சு நின்றுபோகும்.

*பார்வை திடீரென்று குறைந்து உடனே தெளிவாகும். இரட்டைப் பார்வை ஏற்படும்.

*நடந்து செல்லும்போது தலைசுற்றும்.

*உணவை வாய்க்குக் கொண்டுசெல்லும்போது கை தடுமாறும்.

*கையெழுத்துப் போடும்போது கை விரல்கள் திடீரென ஒத்துழைக்காது.

*வழக்கத்துக்கு மாறான தலைவலி, வாந்தி.

பொன்னான நேரம்! பக்கவாத நோயின் அறிகுறிகள் வெளியில் தெரிந்த 2 அல்லது 3 மணி நேரத்துக்குள் தக்க சிகிச்சை அளிக்காவிட்டால் உடலின் ஒரு பகுதி முழுவதுமாக 
செயலிழந்துவிடும். ஆகவே, காலம் தாழ்த்தாமல் சிகிச்சை பெறுகிறவர்களுக்கு பாதிப்பு குறையும். 

என்னென்ன பரிசோதனைகள்?

பக்கவாதம் வந்தவுடனே ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்படும். ரத்தச் சர்க்கரை, ரத்தக் கொழுப்பு உள்ளிட்ட வழக்கமான ரத்தப் பரிசோதனைகள் செய்யப்படும். அவற்றுடன் ஈசிஜி, மூளைக்கான எக்ஸ்ரே, டாப்ளர் பரிசோதனை, சி.டி. ஸ்கேன்/எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஆகிய பரிசோதனைகளைச் செய்வார்கள். 

இவற்றில் மிகவும் முக்கியமான பரிசோதனை மூளை ஸ்கேன். அது சி.டி. ஸ்கேனாகவோ, எம்.ஆர்.ஐ. ஸ்கேனாகவோ இருக்கலாம். இதன் மூலம் ஒருவருக்கு மூளையில் ரத்தக் குழாய் அடைத்து ரத்த ஓட்டம் குறைந்திருக்கிறதா அல்லது ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறதா என்று உறுதியாகக் கூறமுடியும்.  

என்னென்ன சிகிச்சைகள்?

ரத்தச் சர்க்கரையையும்  ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துவது, நோயாளிக்கு மூளையில் ஏற்பட்டுள்ள ரத்தக்குழாய் அடைப்பை சரிசெய்வது, ரத்த உறைவுக்கட்டியைக் கரைப்பது, ரத்தக்கசிவை நிறுத்துவது, ரத்தக் கொழுப்பைக் கரைப்பது, இதயம் பழுதுபடாமல் பாதுகாப்பது, சுவாசம் சீராக நடைபெற உதவுவது போன்றவை முதல் கட்டத்தில் செய்யப்படுகின்ற சிகிச்சை முறைகள். சிலருக்கு மூளையில் ரத்தக்குழாய் உடைந்து ரத்தக்கசிவு பெருவாரியாக இருக்கும். அப்போது அவர்களுக்கு மூளையில் அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டியிருக்கும்.

இவற்றைத் தொடர்ந்து ‘பிசியோதெரபிஸ்ட்‘ (Physiotherapist)  மூலம் நோயாளியின் செயலிழந்துபோன கை, கால்களுக்குப் பயிற்சிகள் தந்து அவரை நடக்க வைப்பது சிகிச்சையின் அடுத்தகட்டம். நோயாளிகள் நம்பிக்கையுடன் இந்தப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மருத்துவமனையில் நோயாளி இருக்கிறவரை அவரை கவனிப்பது மட்டுமின்றி, வீட்டுக்கு வந்தபிறகும் இந்தப் பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தசைப்பயிற்சிகள் மிக முக்கியம்!

பக்கவாதத்தைப் பொறுத்தவரை இதற்கான அடிப்படைக் காரணத்தை ஒரு சில நாட்களில் சரிப்படுத்திவிடலாம். ஆனால், செயலிழந்துபோன காலையோ கையையோ மறுபடியும் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்கு தசைப்பயற்சிகள்தான் உதவும். அதிலும் இந்தப் பயிற்சிகளை எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரம் ஆரம்பிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு சீக்கிரம் சரியாகும். இல்லையென்றால், கை, கால் தசைகள் இறுகிவிடும். பிறகு அந்தத் தசைகளைப் பழையநிலைக்குக் கொண்டுவருவது சிரமம். 

இந்த மாதிரி அலட்சியமாக விடப்பட்டவர்கள் படுத்த படுக்கையாகி விடுவார்கள். குளிப்பது, உடை உடுத்துவது, உணவு உண்பது, பாத்ரூம் போவது போன்ற அன்றாட தேவைகளுக்குக்கூட மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயநிலைக்குத் தள்ளப்படுவார்கள். இதனால் மனச்சோர்வு வந்து சரியாகச் சாப்பிடமாட்டார்கள். படுத்தபடுக்கையில் கிடப்பார்கள். அப்போது ‘பெட் சோர்’ என்ற படுக்கைப் புண் வந்துவிடும். இதனால் வேறு பிரச்னைகள் தலைதூக்கும். உயிருக்கே ஆபத்து வரலாம்.

ஆரம்பத்திலேயே உடற்பயிற்சிகளைச் செய்துகொள்கிறவர்கள் ஓரளவு பழையநிலைக்குத் திரும்பிவிடுவார்கள். சிலரால் கைத்தடி, வாக்கர் கொண்டு நடக்கமுடியும். வீட்டில் உள்ளவர்கள், உறவினர்கள், நண்பர்கள் போன்றோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய தேவைகளை அவர்களே செய்துகொள்ள ஊக்குவிக்க வேண்டும். பக்கவாதம் சரியாகி பழையநிலைக்கு வந்துவிட முடியும் என்ற நம்பிக்கையை ஊட்ட வேண்டும்.

தடுப்பதுதான் எப்படி? 

இக்கொடிய நோயை வரவிடாமல் தடுப்பதே புத்திசாலித்தனம். அதற்கு என்ன செய்யலாம்?

ரத்த அழுத்தம் சரியாக இருக்கட்டும்! 

முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் மாதம் ஒருமுறை தங்கள் ரத்த அழுத்தத்தை சோதித்துக் கொள்ள வேண்டும். இந்த அளவு அதிகமாக இருந்தால், அதைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளைத் தொடர்ந்து முறைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.

 ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க வேண்டுமென்றால், உணவுமுறையும் முக்கியம். ரத்த அழுத்த நோய்க்கு முதல் எதிரி சமையல் உப்பு (சோடியம் குளோரைடு). நாளொன்றுக்கு 3லிருந்து 5 கிராம் வரை உப்பு போதுமானது. இதற்கு மேல் உப்பு உடலுக்குள் போனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். இதைத் தவிர்க்க ஊறுகாய், 

கருவாடு, அப்பளம். வடகம், சிப்ஸ், பாப்கார்ன், முந்திரிப்பருப்பு, புளித்த மோர் போன்றவற்றை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். இறைச்சி, முட்டையின் மஞ்சள்கரு, தயிர், நெய், வெண்ணெய், பாலாடை, ஐஸ்கிரீம், சாஸ் மற்றும் சாக்லெட் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. காரமும் புளிப்பும் மிகுந்த உணவுகள், சோடா உப்பில் தயாரிக்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றை ஒதுக்க வேண்டும். 

எண்ணெயில் பொரித்த, வறுத்த, ஊறிய உணவுகள் வேண்டவே வேண்டாம். தேங்காய் எண்ணெயும் பாமாயிலும் ஆகவே ஆகாது. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றைக்கூட மிகக் குறைந்த அளவில்தான் உபயோகிக்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுகளை விரும்பிச் சாப்பிடுங்கள்.

கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற முழு தானியங்கள்... கொய்யா, தர்ப்பூசணி, மாதுளை போன்ற பழங்கள்... பீன்ஸ், பட்டாணி போன்ற பயறுகள்... புதினா, கொத்தமல்லி போன்ற பச்சை இலைகள்... காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகம். 

ரத்தக்கொழுப்பு கவனம்! 

ரத்தத்தில் கொழுப்பு மிகுந்தால், அது ரத்தக்குழாய்களை அடைத்து பிரச்னை பண்ணும். ஆகவே, கொழுப்பைக் கட்டுப்படுத்த வேண்டியது அடுத்த கட்ட நடவடிக்கை. ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, பால், முட்டை, தயிர், நெய், வெண்ணெய், வனஸ்பதி, பாலாடை, பால்கோவா, பாமாயில், தேங்காய், முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு ஆகிய உணவுகளை ஓரங்கட்டுங்கள்.

பீட்சா, பர்கர் போன்ற விரைவு உணவுகள்... கேக், பப்ஸ், ஐஸ்கிரீம், பாதாம்கீர், சாக்லெட் போன்ற பேக்கரி பண்டங்கள்... பூந்தி, லட்டு, ஜிலேபி, அல்வா போன்ற இனிப்பகப் பண்டங்கள்... மிக்ஸர், முறுக்கு, வேர்க்கடலை, அப்பளம், வடை, பஜ்ஜி, போண்டா, பூரி, சிப்ஸ், சமோசா, வடகம் போன்ற நொறுக்குத் தீனிகள்... டின்களில் பதப்படுத்தப்பட்ட அசைவ உணவுகள் ஆகியவற்றை முடிந்தவரை தவிர்க்கவும்.

நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருங்கள் பக்கவாதம் வருவதற்கு நீரிழிவு (சர்க்கரை நோய்) ஒரு முக்கியக் காரணம் . முக்கியமாக, டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு இதன் பாதிப்பு அதிகம். மற்றவர்களோடு ஒப்பிடும்போது சர்க்கரை நோயுள்ள ஆண்களுக்குப் பக்கவாதம் வருவதற்கு 5 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோயுள்ள பெண்களுக்குப் பக்கவாதம் வருவதற்கு 12 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே, சரியான மாத்திரைகள் மற்றும் இன்சுலின் ஊசி மூலம் ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிக மிக முக்கியம்.

எடையைப் பராமரியுங்கள்

சமச்சீரான உணவு சாப்பிடுதல், குறிப்பாக சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உணவு சாப்பிடுதல், எண்ணெய் வகைகளைக் குறைத்துக்கொள்ளுதல், உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்தல் போன்றவற்றின் மூலம் உங்கள் உயரத்துக்கு ஏற்ப எடையைப் பராமரியுங்கள்.

புகைப்பழக்கம் வேண்டாமே!

புகைப்பிடிக்கும் பழக்கம் பக்கவாதத்துக்கான வாய்ப்பை இரட்டிப்பாக்குகிறது. புகையிலையில் இருக்கும் நிகோடின் ரத்தக்குழாய்களைத் தாக்குகிறது. அவற்றை உள்ளளவில் சுருங்க வைக்கிறது. ரத்தக்கொழுப்பு படிவதற்கு வழி அமைக்கிறது. எனவே, புகைப் பிடித்தலுக்கு உடனே ‘நோ’ சொல்லுங்கள்.

மது அருந்தாதீர்கள்!

மது அளவுக்கு மீறினால் கல்லீரலில் கொழுப்பு சேரவும், ரத்தக்குழாய்களில் கொழுப்பு படியவும் ஊக்குவிக்கிறது. இதனால் மது குடிப்போருக்கு சீக்கிரத்தில் பக்கவாதம் வந்துவிடுகிறது. எனவே, மதுவைக் குடிக்காதீர்கள். என்ன உடற்பயிற்சி செய்யலாம்?

பக்கவாதத்தைத் தடுப்பதில் உடற்பயிற்சிகளின் பங்கும் நிறைய உண்டு.  உங்களுக்கு வசதிப்பட்ட ஒரு பயிற்சியை மேற்கொள்ளலாம். எந்தப் பயிற்சியை எவ்வளவு நேரம் செய்யலாம் என்பதை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

*சுலப நடை - தினமும் 45 நிமிடங்கள். 
*வேக நடை - மணிக்கு 8 கி.மீ. வேகம். தினமும் 40 நிமிடங்கள்.
*மெல்லோட்டம் - மணிக்கு 3 கி.மீ. வேகம். தினமும் 30 நிமிடங்கள்.
*ஓடுதல் - மணிக்கு 3.5 கி.மீ. வேகம்.தினமும் 15 நிமிடங்கள்.
*டென்னிஸ் - தினமும் 35 நிமிடங்கள்.
*நீச்சல் - தினமும் 40 நிமிடங்கள். 
*சைக்கிள் ஓட்டுதல் - மணிக்கு 8 கி.மீ. வேகம். தினமும் 40 நிமிடங்கள்.

மன அமைதி முக்கியம்!

தவறாமல் செய்யும் தியானம், யோகா  இரண்டும் மன உளைச்சலையும் மனப்பதற்றத்தையும் தவிர்ப்பதால், இவர்களுக்கு ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும். இதுபோல் சர்க்கரை நோயும் கட்டுப்படும். இதய நோய் வருவதற்கு யோசிக்கும். பக்கவாதம் ஏற்படுவது தடுக்கப்படும்.தொடர் மருத்துவப் பரிசோதனை வயது காரணமாகவோ, பரம்பரை ரீதியாகவோ, சர்க்கரை நோய், இதய நோய், பருமன், ரத்தக் கொழுப்பு அதிகம் போன்ற காரணத்தாலோ பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு உள்ளவர்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை உடலை மாஸ்டர் செக்கப் செய்துகொள்ளுங்கள். கடைசியாக ஒன்று... 

உங்களுக்கு இருக்கிற உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், ரத்தக் கொழுப்பு போன்றவற்றுக்கு டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுங்கள். இவற்றை இடையில் நிறுத்திக்கொள்வதோ, விட்டுவிட்டுச் சாப்பிடுவதோ, நீங்களாக அளவைக் குறைத்துக்கொள்வதோ கூடாது. இப்படிச் செய்வது ஆபத்தை நீங்களே வரவழைத்துக்கொள்ள வாய்ப்பாகிவிடும். எனவே, சிகிச்சையில் அலட்சியம் வேண்டாம். பக்கவாதத் தடுப்புக்குத் தொடர் சிகிச்சை அவசியம்.

குடும்பத்தில் பெற்றோருக்கு அல்லது சந்ததியினருக்கு பக்கவாதம் வந்திருந்தால், அவர்கள் குடும்பத்தில் யாருக்கு வேண்டுமானாலும் இது வரலாம்.

பெண்கள் கவனம்!

இந்த நோய் ஆண்களுக்குத்தான் அதிகம் என்று முன்பு சொன்னார்கள். இப்போதோ பெண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். பொதுவாக மாதவிலக்கு நிற்கும் காலம் வரை ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு தாராளமாக இருக்கும். இது இவர்களுக்குப் பக்கவாதம் வராமல் தடுத்துக்கொள்ளும். ஆனால், மாதவிலக்கு நின்றபிறகு, பெருவாரியான பெண்களை பக்கவாதம் தாக்குகிறது. ஆகவே, எச்சரிக்கை தேவை!
 
டாக்டர் கு.கணேசன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.