Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போலி செய்தி உருவாக்கிய மரணபயம்: இளைஞர்களின் உண்மை கதை #BeyondFakeNews

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ்
 
போலி செய்தி உருவாக்கிய மரணபயம்: இளைஞர்களின் உண்மை கதைபடத்தின் காப்புரிமை Getty Images

போலி செய்தியால் என்ன நடக்கும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்கள் சென்னையை சேர்ந்த ஆடலரசு (32) மற்றும் தினேஷ் பாலாஜி (24). கும்பல் கும்பலாக மக்கள் சூழ்ந்துகொண்டு உங்களை சுட்டுகொல்வதா அல்லது அடித்துகொல்லுவதா என்று மூன்று மணிநேரம் கூட்டம் நடத்தினால் எப்படி இருக்கும்? அந்த அனுபவத்தை பெற்றவர்கள்தான் இந்த இரண்டு இளைஞர்களும்.

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மண்ணுர் என்ற மலைகிராமத்தில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு உதவுவதற்காக சென்னையில் இருந்து சென்ற ஆடலரசு மற்றும் தினேஷ் பாலாஜிக்கு ஏற்பட்ட மரண பயத்திற்கு காரணம் குழந்தைகடத்தல் தொடர்பாக பரவிய ஒரு போலி வாட்ஸாப் வீடியோதான்.

பரிசுப்பொருட்களுக்காக பயணம் செய்த நண்பர்கள்

 

''மலை கிராம குழந்தைகளுக்கு காலணிகள், நோட்டுகள், சில பரிசுப்பொருட்கள் வழங்க நாங்கள் திட்டமிட்ருந்தோம். குறிப்பாக பெரிதும் அறியப்படாத குக்கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு உதவவேண்டும் என்று எண்ணினோம். அதனால், மண்ணூருக்கு செல்லலாம் என்று முடிவுசெய்தோம். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த இடத்தை அடைய பேருந்து மூலம் பயணித்து, ஐந்து கிலோமீட்டர் மலைப் பாதையில் நடந்துசென்றோம்.

கலக்காம்பாடி கிராமத்தை அடைந்தோம். அது ஓர் அழகான கிராமம். எங்கும் பசுமை, தூரத்தில் உள்ள வயல்வெளிகளில் வெள்ளை மேகம் கீழே உரசிப் போவதுபோல இருந்தது. ஒவ்வொரு இடத்திலும் புகைப்படம் எடுத்தோம். கிராமத்துக் குழந்தைகளின் கண்கள் ஒளிமிகுந்து இருந்தன. அவர்களையும் படம் எடுத்தோம்,'' என்று பேசத் தொடங்கினார் ஆடலரசு.

இருவரும் புகைப்படங்கள் எடுப்பதை ஒரு சில நபர்கள் நோட்டம் இட்டதாகக் கூறுகிறார் ஆடலரசு. கலக்காம்பாடி கிராமத்தை அடைந்தோம். கிராமத்தில் படமெடுத்த நண்பர்களை கிராமவாசிகள் வந்து விசாரித்ததாக கூறுகிறார் தினேஷ்.

போலி செய்தி உருவாக்கிய மரணபயம்: இளைஞர்களின் உண்மை கதை

இளைஞர்களை சூழ்ந்த கூட்டம்

''முதலில் ஒரு பெண்மணி வந்தார். யார் நீங்கள்? எதற்காக எங்கள் கிராமத்திற்கு வந்து படம் எடுக்கிறீர்கள்? என்றார். நாங்கள் இங்குள்ள குழந்தைகளுக்கு உதவ வந்துள்ளோம். அவர்களை பற்றி விவரம் சேகரித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வந்துள்ளோம் என்றோம். நாங்கள் சொன்ன பதில் அவருக்கு திருப்திகரமாக இல்லை என்று கூறிவிட்டு அருகில் இருந்தவர்களை அழைத்துவந்தார். ஒரு சில நபர்கள் வந்தார்கள், மீண்டும் எதற்காக வந்திருக்கிறோம் என்று மீண்டும் முதலில் இருந்து கேள்வி கேட்டார்கள். சிரித்துக்கொண்டே பதில் சொன்னோம். புகைப்படமும் எடுத்துக்கொண்டிருந்தோம்,'' என விளக்குகிறார் ஆடலரசன்

தனக்கு நேர்ந்த அனுபவத்தை நினைவுகூரும் ஒவ்வொரு முறையும் மனம் கனத்துபோகிறது என்கிறார் தினேஷ். ''ஒரு சிறிய கும்பலாக மக்கள் சேர்ந்தார்கள். எதற்காக படம் எடுக்கிறீர்கள்? படத்தை இணையத்தில் போட்டு கிராமத்தில் உள்ள குழந்தைகளை திருடிக்கொண்டுபோக வந்தவர்களா என அதட்டிகேட்டார்கள். எங்களை ஏன் மக்கள் சந்தேகப்படுகிறார்கள் என்று எங்களுக்கு புரியவில்லை. மலைக்கிராம குழந்தைகளுக்கு உதவ வந்திருக்கிறோம் என்பதை அவர்கள் நம்பவில்லை. சிறுதுளியாய் பெய்துகொண்டிருந்த மழை திடீரென கொட்டத்தொடங்கியது. அதைப் போலவே எங்களை சூழ்ந்திருந்த சிறிய மக்கள் கூட்டம் தீடிரென பெரிய கூட்டமாக மாறியது. அருகில் இருந்த ஒரு குடிசையில் எங்களை ஒதுங்கிநிற்குமாறு ஒரு கிராமவாசி கூறினார். உதவிக்கு நன்றி கூறி குடிசைக்குள் உட்கார்ந்திரு்தோம்,'' என்கிறார் தினேஷ்.

ஆடலரசுபடத்தின் காப்புரிமை FACEBOOK Image caption ஆடலரசு

கலக்காம்பாடி மக்கள் சந்தேகம் கொண்டது ஏன்?

மழைக்கு ஒதுங்கிய அவர்களை கைகாட்டி பலர் எதோ பேசுகிறார்கள் என்பதுமட்டும் இரண்டு நண்பர்களுக்கும் புரிந்தது. எதற்காக இத்தனை மக்கள் குடிசையை சூழ்ந்துநிற்கிறார்கள் என்பது புரியாமல் யோசித்திருக்கிறார்கள்.

''மழை நின்றபோது, மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. சுமார் நூறு நபர்கள் குடிசையை சூழ்ந்துகொண்டு குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள்தானே நீங்கள் இரண்டு பேரும்? என்றார்கள். அங்கிருந்தோர் சிலர் பக்கத்து ஊர்க்காரர்களைத் தொடர்புகொண்டு குழந்தை திருட வந்தவர்களை பிடித்து குடிசையில் அடைத்துவைத்திருப்பதாக செய்தி சொல்லிக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான் நாங்கள் ஆபத்தில் மாட்டிவிட்டோம் என்று எங்களுக்கு புரிந்தது,'' என்கிறார் ஆடலரசு.

மக்கள் மாறி,மாறி கேள்வி கேட்டபோது ஒரு சமயம் பதில் சொல்வதில் இருவரும் தடுமாறிப்போக, இருவரையும் தண்டிக்கப்போவதாக சிலர் பேசியிருக்கிறார்கள். ''பல கேள்விகளை கேட்டார்கள். எதற்காக இந்த கிராமத்தை தேர்தெடுத்து வந்தீர்கள்? இங்குள்ள குழந்தைகளைப் பற்றி எப்படி தகவல் சேகரித்தீர்கள்? இந்த ஊரில் யாரையும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் எப்படி இங்கு வந்தீர்கள்? நீங்கள் ஏன் குழந்தைகளுக்கு உதவி செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? என சரமாரியாக கேட்டார்கள்.

தினேஷ் பாலாஜிபடத்தின் காப்புரிமை FACEBOOK Image caption தினேஷ் பாலாஜி

நாங்கள் எங்களிடம் இருந்த அடையாள அட்டைகளை காண்பித்தோம். இருவரும் ஆய்வு மாணவர்கள் என்று விளக்கினோம். எங்கள் அடையாள அட்டைகளை பார்த்தவர்கள், இதுபோல அட்டைகளை யார் வேண்டுமானாலும் தயார் செய்யலாம் என்று நம்பிக்கையில்லாமல் பேசினார்கள்,''என்கிறார் தினேஷ்.

மோசமான சூழலில் பாடல் பாடிய அனுபவம்

ஆடலரசு ஆய்வு மாணவர் மட்டுமல்லாது ஒரு நாட்டுப்புற இசைக்கலைஞர் என்பதால், அதற்காக அரசாங்கம் அளித்த அடையாள அட்டையை காட்டியுள்ளார். ''தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத் துறையின் அடையாள அட்டையைக் கூட அவர்கள் நம்பவில்லை. நான் ஒரு கலைஞன் என்பதால், பாட்டு பாடிக் காட்டுகிறேன், அதைவைத்து நீங்கள் முடிவு செய்யுங்கள் என ஒரு கிராம வாழக்கை பற்றிய ஒரு நாட்டுப்புறப் பாடலை பாடினேன். பாடலைக் கேட்டுவிட்டு, இதுபோல அவர்கள் கிராமத்தில் உள்ளவர்களால் கூட பாடமுடியும் என்று என்னை நம்பமுடியாது என்று கூறிவிட்டார்கள்,'' என்கிறார் ஆடலரசு.

இருவரின் அலைபேசியில் சார்ஜ் இல்லாததால் யாரிடமும் தொடர்பு கொள்ள முடியாத நிலை. கிராமவாசிகளிடம் அலைபேசியை கேட்டிருக்கிறார்கள். ''ஒரு பாட்டி வந்தார். உங்கள் ஊர் தலைவர்கிட்ட பேசி எங்களுக்கு நீங்க யார்னு சொல்லசொல்லுங்க அப்போதுதான் நம்புவோம் என்றார்.

நாங்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டோம். சென்னையில் ஊர்த் தலைவர் முறையெல்லாம் கிடையாது, எங்கள் கவுன்சிலருக்கு நாங்கள் யாரென்றே தெரியாது என்றோம். நாங்கள் சொல்வதை அவர்கள் நம்பவில்லை. சுமார் இரண்டு மணிநேரம் கடந்துவிட்டது. எங்களை குடிசையில் அடைத்துவைத்துவிட்டார்கள் என்பதை உணர்ந்தோம். நாங்கள் வெளியேற முடியாதவாரு ஒரு ஜனத்திரள் எங்களை அடைத்துக்கொண்டது. கோபமும்,வெறுப்பும் மிக்கவர்களாக அவர்கள் இருந்தார்கள்,'' என்கிறார் தினேஷ்.

அங்கிருந்தவர்கள் பலரும் குழந்தைத் திருட்டு தொடர்பாக வாட்ஸாப்பில் வீடியோ பார்த்ததாகவும், அதில் உள்ளதைப் போல குழந்தை திருடும் கும்பல்தான் இந்த இருவரும் என்றும் கோபமாக பேசியதை எப்போதுமே மறக்கமுடியாது என்கிறார்கள் பாதிக்கப்பட்ட நண்பர்கள்.

போலி செய்தி உருவாக்கிய மரணபயம்: இளைஞர்களின் உண்மை கதை

குழந்தை திருடர்கள் எப்படி இருப்பார்கள்?

குழந்தை திருட வருபவர்கள் இளைஞர்களாகவும்,நல்ல உடைகளை உடுத்திக்கொண்டு, மாநகரில் இருந்து வருவார்கள் என்று ஜாடையாக மக்கள் எங்களைப் பற்றி பேசினார்கள் என்கிறார்கள். ''நான் தாடியுடன் இருந்தேன். என் உடை, தலைமுடி உள்ளிட்ட பலதும் அவர்களுக்கு சந்தேகம் கொடுப்பதாகச் சொன்னார்கள். இருவரும் ஆய்வு மாணவர்கள் என்று கூறினோம். உடனே சிலர், படிக்கும் பசங்களா இருந்தா எதற்கு ஊர் சுத்தவேண்டும்? ஆய்வு செய்ய பல கிராமங்களுக்கு செல்வோம் என்றும் அதேநேரம் குழந்தைகளுக்கு உதவி செய்வது எங்களுக்கு பிடித்த செயல் என்றும் கூறினோம். யாரும் எங்களை நம்பவில்லை".

நாங்கள் ஆய்வு மாணவர்கள் என்பதால், எங்கள் ஆசிரியரை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தோம். அவர் எங்களை அமைதியாக இருங்கள் என்று கூறியதுடன் யாரிடமாவது உதவி கோரி எங்களை விடுவிப்பதாகத் தெரிவித்தார். ஆனால் எங்களை சூழ்ந்த மக்கள் அவர்கள் வீடுகளில் நாட்டுத் துப்பாக்கி இருப்பதாகவும், குழந்தை திருடவந்தால் சுட்டுக் கொன்றுவிடுவோம் என்றும் கூறி அச்சமூட்டினார்கள். ஒரு சிலர், எங்களை அடித்து இழுத்துச் சென்று காவல்துறையிடம் ஒப்படைக்கவேண்டும் என்றார். எங்கள் நம்பிக்கை குறைந்துகொண்டே வந்தது,'' என்று பெருமூச்சுடன் சொல்கிறார் ஆடலரசு.

மக்களின் நம்பிக்கையைப் பெற்றது எப்படி?

கூடியிருந்த மக்கள் திரளைபார்த்த அருள்மணி என்ற உள்ளுர்வாசி மக்களிடம் விசாரித்துவிட்டுவந்து இருவரிடமும் பேசியிருக்கிறார். ''கலக்காம்பாடி கிராமத்தில் சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர் அருள்மணியிடம் எங்களைப் பற்றிய விவரங்களை எடுத்துகூறினோம். எங்களது பைகளை சோதித்த மக்கள், எங்கள் கேமரா, நோட்டுப் புத்தகங்களைப் பார்த்து தேவையில்லாமல் சந்தேகம் கொண்டுள்ளார்கள் என்றும், எங்களுக்கு உதவுங்கள் என்றும் அவரிடம் மன்றாடினோம்.

அருள்மணி மட்டும்தான் நாங்கள் பேசியதை முழுமையாக கேட்டார். தெரியாத ஊரில், துணைக்கு ஒரு நபரை அழைத்துப் போவது நல்லது என்று எங்களுக்கு சாமாதானம் சொன்னார். எங்களிடம் தகவல்களைப் பெற்றுக்கொண்டு மக்களை அமைதிப்படுத்தினார். நாங்கள் உண்மையில் ஆய்வு மாணவர்கள்தான் என்றும், எங்களை சந்தேகம் கொள்ளவேண்டாம் என்றும் சொன்னார்.

அதே சமயத்தில் எங்கள் ஆசிரியர் கலக்காம்பாடி கிராமத்தில் இதற்கு முன்னர் ஆய்வுக்கு வந்த ஒருவரிடம் தகவல் சொல்லி எங்களுக்கு உதவும்படி கோரியிருந்தார். அந்த முன்னாள் ஆய்வு மாணவர் கிராம மக்கள் எங்களிடம் தந்த அந்த செல் பேசியை தொடர்புகொண்டார். அதன் மூலம் கிராம வாசிகள் சிலரிடம் அவர்கள் பேசினார். ஏற்கெனவே அவர் அந்த கிராமத்துக்கு ஆய்வுக்கு வந்திருப்பதை சொன்னதோடு, யார் யாரை அவர் தொடர்புகொண்டார் என்று சில கிராமவாசிகளின் அடையாளத்தையும் அவர் கூறினார். இதையடுத்து மக்கள் நம்பிக்கை பெற்றனர்,''என்று தாங்கள் விடுதலை பெற்றது எப்படி என்று விவரிக்கிறார் தினேஷ்.

போலி செய்தி உருவாக்கிய மரணபயம்: இளைஞர்களின் உண்மை கதை

இருவரும் குடிசையில் இருந்து வெளியேறி, பைகளை எடுத்துக்கொண்டு நடந்தபோது ஒரு சிலர் அருகில் வந்து இனி இதுபோல வரவேண்டாம் என்று எச்சரித்ததாக இரு இளைஞர்களும் கூறுகின்றனர். ''ஒரு வழியாக நாங்கள் மீண்டு வந்தோம். சென்னைக்கு திரும்பிய பிறகும்கூட எங்களுக்கு அச்சம் தீர பல நாள்கள் ஆனது. ஆனாலும், மக்கள் ஏன் எவ்வளவு கோபம் கொண்டார்கள் என்று எண்ணிப் பார்த்தபோது, போலி செய்திதான் காரணம் என்று புரிந்தது.

இப்போது எங்களுக்கு வரும் எந்த ஒரு தகவல் அல்லது வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பும்முன் மிகவும் யோசிக்கிறோம். போலி செய்தியை ஒருபோதும் பரப்பக்கூடாது, எந்த செய்தி வந்தாலும் உண்மைத் தன்மையை சோதித்த பின்னர்தான் அனுப்பவேண்டும் என்று முடிவுசெய்துள்ளோம். எங்கள் அனுபவத்தை நண்பர்கள்மத்தியிலும் பகிர்ந்துவருகிறோம்,'' என்கிறார்கள் ஆடலரசு மற்றும் தினேஷ்.

கலக்காம்பாடி கிராமத்தைச் சேர்ந்த அருள்மணியிடம் ஆடலரசு மற்றும் தினேஷுக்கு நேர்ந்த அனுபவம் குறித்து கேட்டபோது, ''குழந்தை திருட்டு குறித்த காணொளியால் மக்கள் அச்சத்தில் இருந்தனர். இவர்கள் இருவரும் வெளியூர்வாசிகள் என்பதால், சந்தேகம் வந்து மக்கள் அவர்களை சூழ்ந்துவிட்டார்கள். நான் இவர்களைப் பற்றி தெளிவாக எடுத்துக்கூறிய பின்புதான் மக்கள் நம்பினார்கள். கிராமத்தில் உள்ளவர்கள் தங்களிடம் இருந்த பய உணவர்வால் இதைச் செய்துவிட்டார்கள். மக்களிடம் பரவிய போலிச் செய்தியால் இந்த சம்பவம் நடந்துவிட்டது,'' என பிபிசிதமிழிடம் விளக்கினார்.

https://www.bbc.com/tamil/india-46170540

Edited by பிழம்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.