Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிலை உடைப்பால் யாருக்கு நன்மை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிலை உடைப்பால் யாருக்கு நன்மை?

எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜனவரி 02 புதன்கிழமை, மு.ப. 02:12

image_eb746b15c1.jpg

இஸ்லாம், முஸ்லிம்களுக்கு சிலை வணக்கத்தை தடை செய்துள்ளது. ஆனால், சிலை வணக்கத்தை ஏற்றுக் கொண்டுள்ள பௌத்தர்கள், இந்துக்கள், கத்தோலிக்கர்கள் மீது, அந்தக் கொள்கையைத் திணிக்க, இஸ்லாம், முஸ்லிம்களுக்குப் போதிக்கிறதா என்பது, அண்மையில் மாவனல்லையில் இடம்பெற்ற சம்பவங்களை அடுத்து, சிலர் எழுப்பிய கேள்விகளில் ஒன்றாகும்.   

கடந்த வாரம், மாவனல்லை அருகே உள்ள ஹிங்குல பிரதேசத்தில், பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலைகள், இரவோடு இரவாக சேதமாக்கப்பட்டு இருந்தன. அது தொடர்பாக, ஆறு முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு பேர் தேடப்பட்டு வருவதாகவும் செய்திகள் கூறின.  கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் தான், இதைச் செய்தார்களா என்பது, இன்னமும் விசாரணைகள் மூலம் நிரூபிக்கப்படவில்லை. ஆனால், ‘அவர்கள் அதைச் செய்யவே இல்லை, என, எந்தவொரு முஸ்லிம் அமைப்பும் எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியும் கூறவும் முன்வரவில்லை. 

முஸ்லிம் அமைப்புகளால் நடத்தப்பட்டு வரும் சமூக வலைத்தளக் குழுமங்களில், பலர் வெளியிட்டு இருக்கும் கருத்துகளை கவனிக்கும் போது, அனேகமாக அவர்கள் தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்றதோர் எண்ணம் உருவாகிறது.  

புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டமை, நிராகரிக்கவே முடியாத உண்மையாகும்; அது பொய்யான செய்தி அல்ல. ஆயினும், கைது செய்யப்பட்டவர்கள், அதில் சம்பந்தப்படாதவர்களாகவும் இருக்கலாம். பொலிஸார் நிரபராதிகளிடமும், எந்தவொரு வாக்குமூலத்தையும் பெற்றுக் கொள்ளும் திறமை உள்ளவர்களாவர். 

2015ஆம் ஆண்டு கொட்டதெனியாவையில், சேயா சதெவ்மி என்ற ஐந்து வயதுச் சிறுமி, வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட போது, பொலிஸார் ‘கொண்டயா’ என்ற பட்டப் பெயரில் அழைக்கப்படும் ஒருவரைக் கைது செய்து, அந்நபரிடம் ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றையும் பெற்றிருந்தனர். ஆனால், அந்நபர் பின்னர் விடுதலை செய்யப்பட்டமை, இதற்கு உதாரணமாகும்.   

அதேவேளை, கைது செய்யப்பட்டவர்கள்கூட, இதைச் செய்திருக்கவும் கூடும். அவர்கள், குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்கள் என்ற செய்தியும் உண்மையாக இருக்கலாம். முஸ்லிம்கள் எவரும், இக்குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுக்காததற்குக் காரணம், அந்தச் சந்தேகமாகும்ன. ஹிங்குல பிரதேசத்தில் இயங்கும், தீவிர போக்குடைய சில முஸ்லிம்கள், இச்சம்பவத்தின் பின்னால் இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

இது, சமயக் கண்ணோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு காரியம் என்றும், அரசியல் கண்ணோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட காரியம் என்றும், பலர் பலவிதமாக, அதனை அர்த்தப்படுத்த முற்படுகின்றனர்.இந்தச் சம்பவத்தின் பின்னால், அரசியல்வாதிகள் இருப்பதாகவும் இனக் கலவரம் ஒன்றே, அவர்களது நோக்கம் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கூறியிருந்தார்.  

அதை நிரூபிக்கக் கூடிய ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால், கடந்த மார்ச் மாதம், கண்டி மாவட்டத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியைப் பற்றி, ஜனாதிபதி கொலைச் சதி முயற்சியொன்று இருப்பதாகக் கூறிய நாமல் குமார, தெரிவித்த கருத்துகளைப் பார்க்கும் போது, மாவனல்லை சிலை உடைப்பு விவகாரத்திலும், அரசியல்வாதிகளின் கை இருப்பதை முற்றாக நிராகரிக்க முடியாது.   

இது, சமயக் கண்ணோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட காரியமாக இருந்தால், அதனை எவ்வாறு விளங்கிக் கொள்ளலாம் என்பது, அடுத்து எழும் கேள்வியாகும். 

இஸ்லாம் சிலை வணக்கத்தைப் போதிப்பதில்லை; அதை அனுமதிப்பதும் இல்லை. முஸ்லிம்களுக்கு அது, தடைசெய்யப்பட்ட ஒரு விடயமாகும். காரணம், இஸ்லாமியக் கோட்பாட்டின் படி, இறைவன் எல்லையற்ற பிரபஞ்சம் முழுவதிலும் பரந்தவன் என்பதால், அவனுக்கு உருவமில்லை; அவனைச் சிலை வடிவத்தில் காண முற்படுவதானது, அவனது அடிப்படைப் பண்பை மறுப்பதாகும். எனவேதான், இஸ்லாம் இறைவனுக்குச் சிலை வைப்பதை, குற்றமாகக் கருதுகிறது.  

ஆனால், அந்தக் கருத்தை முஸ்லிம் அல்லாதவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை; அது அவர்களின் உரிமையாகும். அதன்படி, அவர்களில் சிலர், பல தெய்வங்கள் இருப்பதாக நம்புகிறார்கள். அந்தத் தெய்வங்களின் உருவங்களைச் சிலை வடிவத்தில் அமைத்துப் பூஜிக்கிறார்கள். 

பௌத்தர்கள், கௌதம புத்தருக்காகச் சிலை வடித்து, அதை வணங்குகிறார்கள்; அதுவும் அவர்களது உரிமை. அந்த யதார்த்தத்தை, முஸ்லிம்களில் பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்கின்றனர்.   

‘நீங்கள் வணங்குபவற்றை, நான் வணங்குபவனுமல்லன்; மேலும், நான் வணங்குபவனை, நீங்கள் வணங்குபவர்களும் அல்லர்; உங்களுக்கு, உங்களது சமயம்; எனக்கு என்னுடைய சமயம்’ என்று, ஏக இறைவனை நிராகரிப்பவர்களுக்குக் கூறுமாறு கூறி, புனித குர்ஆன் ஏனைய சமயத்தவர்களின் சமய உரிமையை, வலியுறுத்துகிறது.  

அவ்வாறிருக்க, மாவனல்லையில் சிலைகளைச் சேதமாக்கியவர்கள், முஸ்லிம்களாக இருந்தால், மற்றவர்களின் அந்த உரிமையை, ஏற்றுக் கொள்ளாத சிலரும், முஸ்லிம்கள் மத்தியில் இருக்கிறார்கள் என்பதையே, அது காட்டுகிறது. அவர்கள், குர்ஆனில் உள்ள இந்த அத்தியாயத்தை, விளங்கிக் கொள்ளாதவர்கள் என்றே கூற வேண்டும்.  

சமயக் கண்ணோட்டத்தில், சில முஸ்லிம்கள் தான் சிலை உடைப்பில் ஈடுபட்டார்கள் என்றால், அவர்களது நோக்கம் எதுவாக இருக்க வேண்டும்? தமது கண்ணோட்டத்தில், சிலை வழிபாடு பிழையென்பதால் தான், அவர்கள் அதைச் செய்திருக்க வேண்டும். 

ஆனால், சிலை வணக்கம் பிழையென்றால், அதேபோல் சிலை வணக்கத்தில் ஈடுபடுபவர்களை, அதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றால், யார் செய்தார்கள் என்று தெரியாத வகையில், மறைந்திருந்து சிலைகளுக்குச் சேதம் விளைவித்துவிட்டுத் தப்பி ஓடுவதால், அவர்களது நோக்கம் நிறைவேறுமா?   

சிலை உடைப்பால், சிலை வணக்கத்திலிருந்து மக்களை விடுவிக்க முடியும் என, ஒருவர் நினைப்பதாக இருந்தால், அதைப் பகிரங்கமாகச் செய்ய, அவருக்கு தைரியம் இருக்க வேண்டும். சிலை வணக்கத்தில் ஈடுபடுபவருக்குத் தமது கருத்தைப் போதிக்க, அப்போது மட்டுமே அவரால் முடியும். 

மறைந்திருந்து சிலைகளுக்குச் சேதம் விளைவித்துத் தப்பி ஓடுவதால், அதை ஒருபோதும் செய்ய முடியாது. மறுபுறத்தில், பகிரங்கமாகச் சிலைகளுக்குச் சேதம் விளைவிக்கத் தைரியம் இருந்தாலும், அதனால், சிலை வணக்கத்தில் ஈடுபடுபவர்கள் சிலை வணக்கத்தைக் கைவிடப் போவதில்லை.

அவர்கள் மொத்தமாக, முஸ்லிம்களின் எதிரிகளாக மாறிவிடுவது மட்டுமே, அதன் விளைவாக முடியும்.   தமது அறிவின் படியும் நம்பிக்கையின் படியும், சில முஸ்லிம்கள் தான், இந்த அநாகரிக செயலில் ஈடுபட்டார்கள் என்றால், சட்டத்தின் பிடியில் இருந்து, அவர்கள் தப்பித்துக் கொள்வதற்காக, இப்போது எத்தனை பொய்களைக் கூற வேண்டியிருக்கிறது, இதை இஸ்லாம் அனுமதிக்கிறதா? 

இஸ்லாத்தின் பெயரால், ஆயிரம் பொய்களைக் கூறிவிட்டு, சமூகத்தில் குழப்பத்தையும் பிணக்கையும் ஏற்படுத்திவிட்டு, தமது செயல் மூலம் ஒரு பௌத்தரேனும் முஸ்லிம்களைப் பற்றியோ, இஸ்லாத்தைப் பற்றியோ நல்ல அபிப்பிராயம் கொள்ளாவிட்டால், அந்தச் செயல்மூலம், இஸ்லாம் என்ன இலாபத்தை அடையப் போகிறது, சிலைகளுக்குச் சேதம் விளைவித்தவர்கள் தான், என்ன இலாபத்தை அடையப் போகிறார்கள்?   

அவர்கள், இஸ்லாத்தைப் பற்றி மற்றவர்கள் மத்தியில், மோசமானதோர் அபிப்பிராயத்தையே உருவாக்கிவிட்டவர்களாவர். இவ்வாறு செயற்படுவது, மடமையின் உச்சக் கட்டம் என்றே கூற வேண்டும்.  

இறைவன் ஒருவன் மட்டுமே இருக்கிறான் என, புனித குர்ஆனில் குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும் அதனாலேயே தாம் புத்தர் சிலைகளுக்குச் சேதம் விளைவித்ததாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவர், தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக,  சிங்கள ஊடகம் ஒன்று, செய்தி வெளியிட்டு இருந்தது.  உண்மை தான்! இறைவன் ஒருவன் மட்டுமே இருக்கிறான் என்று தான், புனித குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. 

ஆனால், மேலே நாம் குறிப்பிட்ட வாசகங்களும், அதே குர்ஆனில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. பிற சமயத்தவர்களின் உரிமையை வலியுறுத்தும், மேலும் பல வாசகங்களும் குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளன. குர்ஆனை விளங்கிக் கொள்வதாக இருந்தால், அதில் ஒரு வசனத்தை அல்லாது, அதிலுள்ள  மொத்த வார்த்தைகளையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.   

புனித குர்ஆனில், ஒரு வாசகத்தைத் தனியாக எடுத்து, அதோடு சம்பந்தப்படக் கூடிய, ஏனைய வாசகங்களைப் புறந்தள்ளிவிட்டு, குர்ஆனை விளங்க முற்படுவது முறையாகாது. 

அது, அண்மையில் நாடாளுமன்றக் கலைப்பைப் பற்றிய, அரசமைப்பின் ஏனைய வாசகங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தைக் கலைக்க அதிகாரம் இருக்கிறது என்ற வாசகத்தை மட்டும் பொறுக்கி எடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்குச் சமமாகும்.   

அது முறையான அணுகுமுறையல்ல என்றும், நாலரை ஆண்டுகளுக்குப் பின்னரே ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும் என்பதைப் போன்ற சம்பந்தப்பட்ட ஏனைய வாசகங்களையும் கருத்தில் கொண்டு தான், ஜனாதிபதி செயலாற்றியிருக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.   

அதேபோல், ஏனைய சமயத்தவர்களோடு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி, புனித குர்ஆனில் உள்ள வசனங்களின் மொத்தக் கருத்தை விளங்கிக் கொள்வதே, குர்ஆனை விளங்குவதாகும். அதை விடுத்து, சிலை வணக்கத்தில் ஈடுபடுவோரின் சிலைகளை உடைத்து, பலாத்காரமாக அவர்கள் மீது, இஸ்லாத்தைத் திணிக்க ஒருவர் முற்படுவது, அவர், தமது சமயமான இஸ்லாத்தையே விளங்கிக் கொள்ளவில்லை என்பதற்குச் சான்றாகும். ஏனெனில், மார்க்கத்தில் (சமயத்தில்) ‘நிர்ப்பந்தம் இல்லை’ என, குர்ஆனின் இரண்டாவது அத்தியாத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.   

இறைவனுக்கு நிகராக, சிலைகள் போன்றவற்றை வணங்குவோர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிய மிக முக்கியமானதோர் ஆலோசனையும் குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆனின் ஆறாம் அத்தியாயத்தில் வரும் அந்த ஆலோசனையின் மூலம் இறைவன், ‘நீர் அவர்களின் (சிலைகள் போன்றவற்றை வணங்குவோரின்) பொறுப்பாளரல்லர்’ என்று, கூறுவது கவனிக்கத்தக்கதாகும்.   

அதே அத்தியாயத்தில் அதற்கு அடுத்து வரும் வசனம், தற்போதைய பிரச்சினைக்கு மிகவும் பொருத்தமானதோர் ஆலோசனையை வழங்குகிறது. ‘அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்துக் கொண்டிருப்போரை, நீங்கள் திட்டாதீர்கள்’ என்பதே, அந்த குர்ஆனிய ஆலோசனையாகும். 

சிலைகள் போன்ற, இறைவனுக்கு ஈடாக வணங்கப்படுபவற்றைத் திட்டவே கூடாது என்றால், அந்தச் சிலைகளை உடைக்க, எவருக்கும் அனுமதி உண்டா?   

ஆப்கானிஸ்தான் முழுமையாக முஸ்லிம் நாடாக மாறிய பின்னரும், அங்கு பௌத்தர்களே இல்லாத நிலையிலும், பல நூறாண்டு காலமாக, அங்கு பாமியான் மலைகளில் செதுக்கப்பட்ட இரண்டு பாரிய புத்தர் சிலைகள், எவ்வித உபத்திரவமும் இன்றி நிலைத்திருந்தன. 

அண்மையில் தான் அவை, தீவிரவாதிகளான தாலிபான்களால் தகர்க்கப்பட்டன. பாகிஸ்தானில் காந்தார் போன்ற பகுதிகளில், இன்னமும் பல புத்தர் சிலைகளை, அரசாங்கமே பாதுகாத்து வருகிறது.   

மாவனல்லையில் புத்தர் சிலைகளைச் சேதமாக்கியவர்கள் யார் என்பது, இன்னமும் நிரூபிக்கப்படாத நிலையிலும் முஸ்லிம்களே அதனை செய்துள்ளார்கள் என்ற பொதுவான அபிப்பிராயம் ஒன்று உருவாகியிருப்பதாலும், உண்மையிலேயே முஸ்லிம்கள் சிலரே அதைச் செய்திருக்கக் கூடும் என்பதனாலும், அது அனைத்து முஸ்லிம்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட செயலல்ல என்பதையே, நாம் இங்கு வலியுறுத்த விரும்புகிறோம்.  

கடந்த காலங்களில் முஸ்லிம்களினதும் இந்துக்களினதும் கிறிஸ்தவர்களினதும் சமயத் தலங்கள் தாக்கப்பட்ட போது, குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க, பொலிஸார், மாவனல்லையில் சிலைகளைச் சேதப்படுத்தியவர்களைக் கைது செய்வதில் காட்டிய உட்சாகத்தைக் காட்டவில்லை என சிலர் கூறுகின்றனர். அது உண்மை தான். 

ஆனால், அதனால் சிலைகளைச் சேதப்படுத்தியவர்களைக் கைது செய்தமை, பிழையென எவரும் வாதிட முடியாது. பொலிஸாரின் பக்கச்சார்புத் தன்மை, அதன் மூலம் தெரிவது வேறு விடயம்.   

இது போன்ற பிரச்சினைகளின் போது, அந்தந்தச் சமூகமே தத்தமது சமூகத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதே, நல்லிணக்கத்துக்கு பொருத்தமானதாக அமையும்.   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சிலை-உடைப்பால்-யாருக்கு-நன்மை/91-227371

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.