Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விண்வெளி ஆதிக்கத்துக்கான போட்டி: போரின் புதிய களம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விண்வெளி ஆதிக்கத்துக்கான போட்டி: போரின் புதிய களம்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜனவரி 31 வியாழக்கிழமை, மு.ப. 01:37Comments - 0

image_87a03be89c.jpgமண்ணில் ஆடும் ஆட்டங்கள் போதாதென்று, விண்ணிலும் அதற்கான ஆட்டங்கள் தொடங்கியுள்ளன.   

மண்ணில் தனது ஆதிக்கத்தை இழப்போர், விண்ணிலாவது தமது ஆதிக்கத்தைத் தக்கவைக்க முனைகின்றனர். உலகம் பட்டினியில் தவிக்கையில், மிகுந்த பொருட்செலவில் விண்வெளி ஆதிக்கத்துக்கான போட்டி தொடங்கியுள்ளது.   

“மண்ணை வெற்றி கொண்ட மனிதன், விண்ணையும் வெற்றி கொள்வான்” என்ற பெருமைப் பேச்சுகளுடன், இந்தப் போட்டி அரங்கேறுகிறது. கேள்வி யாதெனில், நாம் மண்ணை வெற்றி கொண்டோமா என்பதுதான்.   

இன்று, நாம் வாழும் பூமி, நமது எதிர்கால சந்ததியினர் வாழ இயலாத இடமாக மாறியிருக்கிறதே. இதைத் தான், நாம் வெற்றி என்று கொண்டாடுகிறோமா?  

2019 ஜனவரி இரண்டாம் திகதி, நிலவில் ஆய்வு விண்கலத்தைத் தரை இறக்கிய மூன்றாவது நாடு என்கிற பெருமையை, சீனா அடைந்தது.   

இதில் முக்கியமானது யாதெனில், நிலவில் வழக்கமான பகுதியை எட்டாமல், அதன் முதுகில், அதாவது சந்திரனின் ‘இருண்ட பக்கம்’ என்று அழைக்கப்படும் பகுதியில், சீனா விண்கலத்தைத் தரையிறக்கி உள்ளது. இந்தப் பகுதியை, அமெரிக்கா உட்பட, எந்தவொரு நாடும் தொட்டது இல்லை. இதுவே முதல் முறை என்பதும், இது ஒரு தொழில்நுட்பச் சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இதேவேளை, கடந்த 17ஆம் திகதி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் “அடுத்த கட்டப் போருக்கான களம் விண்வெளியே என்பதை, நாம் நன்கு அறிந்து வைத்திருக்கிறோம். அதற்குத் தயாராகவும் இருக்கிறோம். அமெரிக்க இராணுவத்தின் ஒருபகுதியாக, விண்வெளிப் பாதுகாப்புப் பிரிவையும் உருவாக்குவோம். அமெரிக்காவின் பாதுகாப்பே பிரதானமானது. அவ்வகையில், அடுத்தாண்டு வரவுசெலவுத் திட்டத்தில், விண்வெளி சார் ஏவுகணைப் பாதுகாப்பு வலையத் தொழில்நுட்பத்தில் (space-based missile defence layer technology) பாரியளவு முதலீடு செய்வோம்” என்று அறிவித்தார்.   

 இவை, இன்னொரு விண்வெளிப் போட்டிக்கான களத்தை உருவாக்கியுள்ளன. இப்பின்னணியில், இதன் வரலாற்றையும் சீனாவின் வளர்ச்சியையும் ஒருங்கே நோக்க வேண்டியுள்ளது.   

நிலவில் தரை இறங்கிய, ‘சேன்ஜ்-4’ விண்கலம், சீனாவின் விண்வெளி வளர்ச்சி மற்றும் அதன் முக்கியத்துவத்தை, உலகெங்கிலும் உள்ள பெரும் வல்லரசுகளுக்கிடையில் பறை சாற்றியுள்ளது.   

சீனாவின் விண்வெளி சார் வளர்ச்சி, அமெரிக்காவுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. குறிப்பாக, விரிவுபடுத்தப்பட்டு வரும் சீனாவின் விண்வெளி நிகழ்ச்சித்திட்டம், அமெரிக்கப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என, கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கப் பாதுகாப்புக் கொள்கை வகுப்பாளர்கள் கூறிவருகின்றார்கள்.   

விண்வெளிப் போட்டி: நினைவுகூர்தல்  

இரண்டாம் உலகப்போரைத் தொடர்ந்து, தொடங்கிய அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையிலான கெடுபிடிப்போரின் ஓர் அம்சமாக, விண்வெளிப் போட்டி இருந்தது.  

 1950களின் இறுதிப்பகுதியில், முனைப்புப் பெற்ற இப்போட்டியானது, ‘கண்டம் விட்டுக் கண்டம் பாயும்’ ஏவுகணைகளின் உருவாக்கத்துடன், புதிய கட்டத்தை அடைந்தது. 1957ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியம் பூமியிலிருந்து முதலாவது விண்கலமான ‘ஸ்புட்னிக்-1’ யை விண்வெளிக்கு ஏவியது.   

image_c3df683af2.jpg

அதைத் தொடர்ந்து, சோவியத் ஒன்றியம் ‘ஸ்புட்னிக்-2’ விண்கலத்தில் ‘லைகா’ என்ற நாயை அனுப்பி, விண்வெளியை வெற்றிகொள்வதில் புதிய சாதனையை நிகழ்த்தியது. இந்த விண்வெளிப் போட்டியின் புதிய காலகட்டம், 1961ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி நிகழ்ந்தது. 

சோவியத் ஒன்றியத்தின் ‘வொஸ்டாக் -1’ விண்கலத்தில் பயணம் செய்த யூரி ககாரின், 108 நிமிடங்கள் உலகைச் சுற்றிவந்து சாதனை படைத்தார். இது, விண்வெளி விஞ்ஞானத்தின் மாபெரும் வெற்றியாகப் பார்க்கப்பட்டது.   

இவையனைத்தும், விண்வெளி விஞ்ஞானத்தில் சோவியத் ஒன்றியம் முன்னோடியாகவும் முன்னிலையில் இருப்பதையும் காட்டி நின்றன. 

இவை, இத்துடன் நிற்கவில்லை, பூமியை ஒரே நேரத்தில் இரு விண்கலங்கள் சுற்றிவரும், இணைந்த விண்வெளி முயற்சி; இரு மனிதர்கள் முதன் முதலாக ஒன்றாக விண்வெளியில் பறந்தது; விண்வெளியின் முதல் பெண்ணாக வோலென்டினா டெர்ஷ்கோவா பறந்தது; விண்வெளி வீரர் அலெக்சி லியோநோவ், முதல் முதலில் விண்வெளியில் நடந்தது என்று சோவியத்தின் சாதனைகள் தொடர்ந்தன.   

யூரி ககாரின் விண்வெளிக்குப் பயணித்ததையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன், “அடுத்த பத்தாண்டுகளில், அமெரிக்கர்கள் நிலவில் கால்பதிப்பர்” என்று சூளுரைத்தார்.   

1959இலேயே சோவியத்தின் ஆளில்லாத ‘லூனர்-2’ விண்கலம், நிலவுக்குச் சென்ற முதல் விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது. 1969இல் அமெரிக்காவின் ‘அப்பலோ-11’ விண்கலம், நிலவில் தரையிறங்கியது. அதில் பயணித்த நீல் ஆம்ஸ் ரோங், நிலவில் கால் பதித்த முதல் மனிதரானார்.   

இதேவேளை, உண்மையில் அவ்வாறு நீல் ஆம்ஸ் ரோங் கால் பதிக்கவில்லை. விண்வெளிப் போட்டியில், அமெரிக்கா வெல்வதற்காகத் திட்டமிட்டு, இவ்வாறானதொரு நாடகத்தை நிகழ்த்தியது என்று, வலுவான ஆதாரங்களுடன் மாற்றுக்கருத்துகள் இன்றுவரை முன்வைக்கப்படுகின்றன.   

குறிப்பாக, அமெரிக்கத் திரைத்துறையின் சில முக்கிய நபர்களின் உதவியுடன், நிலவு போன்றதோர் அமைப்பு உருவாக்கப்பட்டு, அங்கு படம்பிடிக்கப்பட்டதே, இந்த நிலவில் தரையிறங்கிய நிகழ்வு என்று கடந்த 50 வருடங்களாகச் சொல்லப்பட்டு வருகிறது.

குறிப்பாகச் சில ஆண்டுகளுக்கு முன்னர், ஹொலிவூட் படப்பிடிப்பாளரான மக்ஸ் கொன்ராட், தனது 81ஆவது வயதில் வழங்கிய செவ்வியில், “நான் நிலவின் மீதான தரை இறக்கப் படப்பிடிப்பில் பங்கேற்றேன். உலகில் மிகப்பெரிய பொய்யைக் கட்டமைத்ததில், பங்கேற்றது குறித்து, நான் பெருமைகொள்ளவில்லை” என்று தெரிவித்த அவர், “நான் மரணிப்பதற்கு முன்னர், இவ்வுண்மையைப் பதிவுசெய்ய விரும்புகிறேன்” எனவும் தெரிவித்தார்.   

நிலவில் அமெரிக்காவின் தரையிறக்கம், விண்வெளிப் போட்டியில் அமெரிக்காவுக்கு வெற்றியாகக் கருதப்படுகிறது. 1970களின் இறுதிப் பகுதியில் அமெரிக்க-சோவியத் விண்வெளிப் போட்டி, ஓரளவு தணிந்து முடிவுக்கு வந்தது என்று சொல்லலாம். சோவியத்தின் சரிவு, 1970களின் இறுதிப் பகுதியில் தொடங்கியதுதொட்டு, சோவியத்தின் விண்வெளி நிகழ்ச்சித்திட்டம் மெதுமெதுவாக அஸ்தமித்தது.   
சீனாவின் விண்வெளி நிகழ்ச்சித் திட்டம்   

அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் அடுத்தபடியாக, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை 1950களிலேயே சீனா தயாரித்தது. இருந்தபோதும், இந்த விண்வெளிப் போட்டியில் சீனா பங்கெடுக்கவில்லை.   

image_b8508f885f.jpg

1970இல் முதலாவது ஆளில்லா விண்கலத்தைச் சீனா செலுத்தியபோதும் கூட, சீனாவின் விண்வெளி நிகழ்ச்சித் திட்டம் ஆரவாரங்களற்றதும் வேகம் குறைந்ததாகவுமே இருந்தது.   

1978இல், சீனாவின் விண்வெளி சார் கொள்கைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட, சீனாவின் ஜனாதிபதி டெங் ஜியாவோபிங், “வளர்ந்துவரும் நாடாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் சீனா, விண்வெளிப் போட்டியில் பங்கேற்காது. அதற்குப் பதிலாக சீனா, விண்வெளி வெளியீட்டு வாகனங்கள், செயற்கைக் கோள்களில் தகவல்தொடர்புகள், ரிமோட் சென்சிங், வானியற்பியல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்” என்றார்.  

2003ஆம் ஆண்டு, சீனா, தனது முதல் மனிதனை, விண்வெளிக்கு அனுப்பியது. இதைத் தொடர்ந்து, வர்த்தக நோக்கங்களுக்காக விண்வெளியைப் பயன்படுத்தும் இலக்குகள் குறித்தே கவனம் செலுத்துவதாகச் சொல்லப்பட்டது. ஆனால், கடந்த பத்தாண்டுகளில், சீனா, தனது விண்வெளி நிகழ்ச்சித் திட்டத்தில், மெதுவாகவும் உறுதியாகவும் நிதானமாகவும் முன்னேறியுள்ளது. இது இன்று, மிகப் பெரிய ஆச்சரியமாக, அதன் போட்டி நாடுகளால் பார்க்கப்படுகிறது.   

இம்மாதம் நிலவில் இறங்கிய, சீனாவின் ‘சாங்-4’ (Chang’e-4) விண்கலமானது, சந்திரனின் மறுபக்கத்தை மிகநெருக்கமாகச் சென்று, முதலாவது புகைப்படத்தை எடுத்த புகழைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.   

இந்த நிலவுப் பயணத்தில் முக்கியத்துவம் யாதெனில், இவ்விண்கலம் சந்திரனின் குறைந்த புவியீர்ப்பில், விதைகள் தளிர் விடுமா, பட்டுப்புழு முட்டைகள் பொரிக்குமா என்பவற்றை ஆராயும் உயிரியல் சோதனைக் கருவிகளையும் கொண்டுள்ளது. இதன் மூலம் விண்வெளி ஆய்வில், அடுத்த கட்டத்துக்கு சீனா நகர்வது தெளிவாகிறது.   

நிறைவாக, விஞ்ஞான ரீதியாக, அடுத்த கட்டத்தை நோக்கி, விண்வெளிப் பயணங்களை சீனா நகர்த்தியுள்ளது. நீண்டகால நோக்கில், பல முக்கிய திட்டங்களை, சீனா கொண்டுள்ளது.   

குறிப்பாக 2022 க்குள், சீனா, தனது மூன்றாவது விண்வெளி நிலையத்தை, முழுச் செயற்பாட்டுக்கு கொண்டுவருவது; 2025இல் சந்திரனில் ஒரு கட்டடத்துக்கான அடித்தளம் அமைப்பது; 2030 க்குள் மனிதர்களை அங்கு கொண்டுசென்று குடியேற்றுவது; செவ்வாய்க்கு ஆய்வுக் கருவிகளை அனுப்புவது என்று சீனா, கால எல்லை வகுத்து திட்டமிட்டுள்ளது.   

சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துக்கான வரவு-செலவுத் திட்டம், இதுவரை அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசாவை விடக் கணிசமானளவு குறைவானதாகவே உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. சீனா விண்வெளியை, விஞ்ஞானத்தின் முன்னேற்றகரமான திசைவழி நோக்கி நகர்த்துகையில், அமெரிக்கா, விண்வெளியைப் பாதுகாப்புக்கான களமாக, இராணுவத்துக்கு உரியதாக மாற்றி வருகிறது.   

இதனாலேயே, மேற்குலக ஊடகங்கள் தொடர்ந்தும் ‘விண்வெளிப் போர்’ (space wars) என்ற சொற்பதத்ததைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றன. இது இயலாமையின் வெளிப்பாடன்றி வேறல்ல.   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/விண்வெளி-ஆதிக்கத்துக்கான-போட்டி-போரின்-புதிய-களம்/91-228804

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.