Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

‘கோட்டாவுக்கு ஆபத்தில்லை’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘கோட்டாவுக்கு ஆபத்தில்லை’

Editorial / 2019 ஏப்ரல் 16 செவ்வாய்க்கிழமை, மு.ப. 11:30 Comments - 0

image_1274e663dd.jpg

image_a6588f924b.jpgபாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக, தன்னால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, அவரது அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்யும் தீர்மானத்தில் பாதிப்பை ஏற்படுத்தாதென, கோட்டாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ள, கனேடியத் தமிழரான ரோய் சமாதானம் தெரிவித்தார்.

மத்திய இலண்டன் - பிம்லிகோ பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில், ரோய் சமாதானத்தைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சீவினிங் புலமைப் பரிசில் கிடைக்கப்பெற்று, இலண்டனில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தெற்காசிய ஊடகவியலாளர் கற்கைநெறியைத் தொடர்ந்துகொண்டிருக்கும் எனக்கு, ரோய் சமாதானத்தைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இலண்டனுக்கு வருகைதந்திருந்த ரோய் சமாதானம், தமிழ்மிரருக்காக வழங்கிய பிரத்தியேகச் செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கே: கோட்டாபய ராஜபக்‌ஷ மீது, எதற்காகத் திடீரென வழக்குத் தாக்கல் செய்தீர்கள்?

இலங்கையில், 2007ஆம் ஆண்டு, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவால் கைதுசெய்யப்பட்டு, சித்திரவதைக்குட்படுத்தி, பூஸா சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்ததன் பின்னர், 2010ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டேன். அதன் பின்னர், கனடா திரும்பியதும், என்னுடைய வழக்கறிஞர்களின் ஆலோசனைப் பிரகாரம், CCIJ எனப்படும் சர்வதேச நீதிக்கான கனடா நிலையத்தின் அனுசரணையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில், 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தேன். அதற்கான ஆணை, 2015ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. எனக்கு நட்டஈட்டை வழங்க வேண்டுமெனவும் ஆறு மாதங்களுக்குள் இலங்கை அரசாங்கம் பதில் வழங்கவேண்டும் எனவும், ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு, பரிந்துரைத்திருந்தது.

ஆனால், இதுவரை காலமும் இலங்கை அரசாங்கம், தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பாராமுகமாகவே இருந்து வந்தது. என்னைப் போன்ற ஒருவரின் வழக்குக்கு, ஏற்கெனவே சரத் என் சில்வா, அரசமைப்பைக் காரணங்காட்டி வழங்கிய தீர்ப்பை உதாரணங்காட்டி, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரையை, இலங்கை அரசாங்கம் தட்டிக்கழித்து வந்தது. அதனால்தான், தருணம் பார்த்துக் காத்திருந்து, வழக்குத் தாக்கல் செய்திருக்கிறேன்.

தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கம், இந்த விவகாரத்தைக் கணக்கிலெடுக்கவில்லை. அதனால்தான், கட்டளை அதிகாரிகளாகச் செயற்பட்ட பொலிஸ் மா அதிபரையோ அல்லது பாதுகாப்புச் செயலாளரையோ சட்டத்தின் முன் நிறுத்த முற்பட்டேன். பாதுகாப்புச் செயலாளராக கோட்டாபய இருந்தபோது, அவரை ஒன்றுமே செய்ய முடியவில்லை. காரணம், அதிகாரம் அவரைக் காப்பாற்றிவிடும். அமெரிக்காவுக்கு வந்து வந்து போனபோதிலும், சரியான தருணம் வாய்க்கவில்லை. இம்முறை நீதிமன்ற அனுமதியுடன் அமெரிக்கா வந்தமையால், சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கிணங்க, அவர்மீது வழக்குத் தாக்கல் செய்திருக்கிறேன்.

கே: 2015ஆம் ஆண்டிலிருந்த அதே அரசாங்கம்தான் தற்போதும் இருக்கிறது. இந்நிலையில், மீண்டும் அவர்கள் சாட்டுச் சொல்லமாட்டார்கள் என்று நம்புகிறீர்களா?

தற்போது நான் தாக்கல் செய்திருக்கும் வழக்கு, கோட்டாவுக்கு எதிரானது. நான் கைதுசெய்யப்பட்டபோது, அவரே பாதுகாப்புச் செயலாளராக இருந்தார். நீதிமன்ற அனுமதியில் நான் கைதுசெய்யப்படவில்லை. கோட்டாவின் கட்டளைப்படிதான் நான் கைதுசெய்யப்பட்டேன். எனவே, அவர்தான் பதில் சொல்லியாக வேண்டும்.

எங்களைச் சித்திரவதைக்குள்ளாக்கிவிட்டு, தான் மட்டும் நிம்மதியாகச் சுற்றுலா வருவதை, பக்கத்து நாடான கனடாவில் இருந்துகொண்டு, நான் ஒருபோதும் பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன். இதேபோன்று, அன்று கட்டளையிட்ட எவர் வந்தாலும் அவர்மீது வழக்குத் தொடுப்பேன்.

கே: கோட்டாபயவின் ஜனாதிபதிக் கனவைத் தகர்ப்பதற்காகத்தான் இந்த வழக்கு நாடகம் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறதே?

அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வழக்கினூடாக, கோட்டாவின் ஜனாதிபதிக் கனவு தகர்ந்துபோகாது. அது அவர்களின் கட்சி சார்ந்த விடயம். இந்த வழக்கால், கோட்டாவின் அமெரிக்கப் பிரஜாவுரிமையை இரத்துச் செய்யும் அவரது முடிவுக்குப் பாதிப்பு ஏற்படாது. நான் தாக்கல் செய்திருக்கின்ற வழக்கைச் சாட்டாக வைத்து, சிங்கள மக்கள் மத்தியில் அனுதாப வாக்குகளைப் பெறும் பிரசாரங்களை, சிலர் மேற்கொள்கிறார்கள். பாதிக்கப்பட்ட எனக்கான நட்டஈடு கேட்டே வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. கோட்டாவின் பிரஜாவுரிமை தொடர்பாக வழக்கு நடைபெறவில்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

கே: உங்கள் வழக்கினூடாக கோட்டாபய ராஜபக்‌ஷவால் அமெரிக்க பிராஜாவுரிமையை இரத்துசெய்யும் முயற்சி பாதிக்கப்படுமா?

ஒருபோதும் பாதிக்காது. அதைத்தான் திருப்பித் திருப்பி வலியுறுத்த விரும்புகிறேன். இதுவொரு சிவில் வழக்கு. இதற்கு கோட்டா பதில் சொல்லியாக வேண்டும். அவர் பதில் சொல்ல மறுத்தால், தீர்ப்பு எனக்குச் சாதகமாக வரும். இந்த வழக்கை வைத்துக்கொண்டு, அவரால் அமெரிக்கப் பிராவுரிமையை இரத்து செய்யமுடியாது, அவரால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்று பிரசாரப்படுத்துவது வெறும் பொய். ஒரு விடயத்தை நன்று புரிந்துகொள்ள வேண்டும். குற்றம் நடைபெற்றது இலங்கையில், குற்றவாளி அமெரிக்கப் பிரஜை. இந்த விவகாரத்தில், அமெரிக்கா பெரிதாக அலட்டிக்கொள்ளாது. ஆகையால், அமெரிக்கப் பிரஜாவுரிமையை இரத்து செய்தாலும், கோட்டாபய ராஜபக்‌ஷ பொறுப்புக்கூற வேண்டும்.

கே: அப்படியென்றால், தன்னுடைய அமெரிக்கப் பிரஜாவுரிமையை கோட்டாபய எப்போது வேண்டுமானாலும் தூக்கியெறியலாம் என்கிறீர்களா?

நிச்சயமாக முடியும். என்னுடைய கணிப்புப்படி, அவர் இப்போது விண்ணப்பித்திருந்தால், மூன்று தொடக்கம் ஆறு மாதங்களுக்கிடையில் கோட்டாவின் அமெரிக்கப் பிரஜாவுரிமை இரத்தாகும்.

கே: உலகின் தலைசிறந்த சட்டத்தரணியான ஸ்கொட் கில்மோர் (Scott Gilmore), உங்களின் வழங்கைக் கொண்டுநடத்தவுள்ளார். மேரி கொல்வின் போன்றோருக்கு, சிரிய அரசாங்கத்தை நட்டஈடு செலுத்தச் செய்தவர். அப்படிப்பட்டவரை எவ்வாறு நீங்கள் அணுகக் கிடைத்தது?

ITJP எனப்படும் ஜஸ்மின் சூகா தலைமையிலான உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்புக்கும் ஸ்கொட் கில்மோருக்கும் தொடர்பிருக்கிறது. அவர்கள் உலகளவில் பரந்துபட்டிருக்கிறார்கள். ஆகையால், அவர்களூடாகவே இந்தச் சந்தர்ப்பம் கிடைத்தது.

கே: புலம்பெயர் அமைப்புகள் உங்களுக்கு உதவியதினூடாகவே, இந்த வழக்கைத் தாக்கல் செய்திருப்பதாக குற்றச்சாட்டிருக்கிறதே?

இங்கு புலம்பெயர் அமைப்புகள் எவையும் எனக்கு உதவவில்லை. அப்படியிருப்பவர்கள் எவரும் உருப்படியாக இல்லை. நான்தான் புலம்பெயர்ந்தவன். யாழ்ப்பாணத்தில் பிறந்து, கொழும்பில் கல்விகற்று, சிங்களப் பெண்ணை மணம்முடித்துக் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவன். என்னுடைய தனி முயற்சிதான் இந்த வழக்கு. நேரடியாகப் பாதிக்கப்பட்டவன் நான். அதனால், எனக்குத்தான் அந்த வலி தெரியும்.

எனக்காக வழக்காடுகின்ற நிறுவனங்கள், தொண்டு அடிப்படையில் செயற்படுபவை. பணத்துக்கு அடிமையானவர்களில்லை. நீதிக்காகக் குரல்கொடுக்கும் அமைப்புகளே எனக்கு உதவியிருக்கிறார்கள், உதவுகிறார்கள். அவர்களின் தமிழர்கள் இல்லை. நான் மட்டுமே தமிழன். எனவே, புலம்பெயர் புராணங்களைப் பாடி, வாக்குவேட்டைக்குத் தயாராகும் முகத்திரைகள் கிழிக்கப்படவேண்டும்.

கே: சர்வதேச நீதிப் பொறிமுறையில் உங்களுக்கு நம்பிக்கையிருக்கிறதா? அதனூடாகப் பாதிக்கப்பட்ட உங்களைப் போன்ற தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைக்குமா?

சர்வதேச நீதிப்பொறிமுறையில் குற்றங்களை நிரூபிப்பதென்பது மிகவும் கடினமானது. அதற்கு நீண்ட பொறிமுறையிருக்கிறது. அதனடிப்படையில் பயணித்தால் நிச்சயமாகத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழ்த் தேசியம் பேசுகின்ற கஜேந்திரகுமார், சுரேஷ் பிரேமசந்திரன் போன்றோரே, கனடாவுக்கு வரமுடியாமல் இருக்கிறார்கள். அதாவது, கடும்போக்கான தமிழ்த் தேசியப் பேசுபவர்களது நிலைமையே இப்படியிருக்கையில், புலம்பெயர் அமைப்புகள் என்று எவராலும் உரிமைகோர முடியாது. எனவேதான், தனிப்பட்ட ரீதியில் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து, வழக்குகளைத் தாக்கல்செய்து, தீர்வைப் பெறுவதற்கு முயல வேண்டும். அதைவிடுத்து, வேறுவிதமாகப் பயணிப்பதால் எவ்வித நன்மையும் கிடைத்துவிடப்போவதில்லை.

கே: சிங்கள - தமிழருடன் நெருங்கிய தொடர்பிருக்கும் உங்களால், நல்லிணக்க முயற்சியை மேற்கொள்ள முடியாதா?

நான், கடந்த செப்டெம்பரில் இலங்கை வந்திருந்தேன். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர், நல்லாட்சி நடக்கிறதென்ற நம்பிக்கையில் அங்கு வந்தேன். அங்கு வந்து பார்த்தபோதுதான், பாதிக்கப்பட்ட மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை அவதானிக்க முடிந்தது. காணாமல் போனோர் அலுவலகம் இருக்கிறது. எங்களுக்கு அது அவசியமில்லை. எப்படிக் காணாமல் போனார்கள் என்பதே எமக்குத் தேவை. உச்சநிலையில் போராடிய கருணா, கேபி போன்றோர் வெளியில் இருக்கிறார்கள். ஆனால், வீடு வாடகைக்குக் கொடுத்தவர்களும் பற்றரி வாங்கிக் கொடுத்தவர்களும் இன்னமும் சிறையில் இருக்கிறார்கள். இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படவேண்டும். அந்த மாற்றங்கள் ஏற்படாதவரை நல்லிணக்கம் என்பது சாத்தியமில்லை.

எத்தனைக் கலவரங்கள் இடம்பெற்றிருக்கின்றன, எத்தனைபேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சம்பவங்களுடன் சம்பந்தப்பட்ட எவரும் தண்டிக்கப்படவில்லை. காலாகாலமாக இதுதான் நடக்கிறது. அதனால்தான் சர்வதேச நீதியை நாடக் கடப்பட்டிருக்கிறோம். பூகோள அரசியல் மாற்றமடைந்து வருகிறது. இதனால் பாதிக்கப்படப்போவது ஆட்சியாளர்கள்தான். ஆகையால், நிலைமையை உணர்ந்து காய்களை நகர்த்துவதனூடாவே, நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கோட்டாவுக்கு-ஆபத்தில்லை/91-231959

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.