Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமச்சீரற்ற யுத்தம் (Asymetrical warfare)

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமச்சீரற்ற யுத்தம் (Asymetrical warfare)

நிராயுதபாணியாக நிற்கிறதா புலம்பெயர்ந்த டமிழர் படை?

சமச்சீரற்ற யுத்தம்: அறிமுகம்

சிங்கள இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெற்றுவரும் யுத்தம் ஒரு சமச்சீரற்ற யுத்தமாகும் என பல இராணுவ ஆய்வாளர்களும் கருத்துத் தெரிவித்துவருகின்றனர். அதாவது ஆளெண்ணிக்கை மற்றும் கனரக ஆயுத தளபாட எண்ணிக்கை போன்ற இராணுவ வலு அளவீடுகளில் புலிகளை விட பன்மடங்கு பலம்பொருந்திய ஒரு இராணுவத்துடன் புலிகள் மோதவேண்டியுள்ளது. ஆனாலும் இராணுவச் சமநிலை எட்டப்படுகிறது. இது எவ்வாறு? இதற்கு விடையாக பின்வரும் காரணங்கள் உள்ளடங்கலாக பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

1) சிங்கள இராணுவத்தின் பலம் என்ன என்பது மேற்சொன்ன இராணுவ வலு அளவீடுகளின் மூலம் அளவிடப்படக் கூடியதாகவுள்ளது

2) புலிகளின் பலம் யாராலும் சரியாக அளவிடமுடியாதவாறுள்ளது

3) சிங்கள இராணுவத்தின் யுத்த முறையானது மரபுவழி யுத்தத்திற்குள் மட்டுப்படுத்தப் பட்டுள்ளது.

4) புலிகள் மரபுவழி மற்றும் கெரில்லா முறையில் யுத்தம் செய்கின்றனர்.

சமச்சீரற்ற ஊடக/பிரச்சார யுத்தம்

இனி, புகலிடத்தில் சிங்கள அரசுக்கும் தமிழர் தரப்புக்கும் இடையில் நடைபெறும் (ஊடக, பிரச்சார) யுத்தமும் மிக மிக முக்கியமானது. இங்கு தாயகத்துடன் ஒப்பிடுகையில் நிலமைகள் நேர் எதிராக இருப்பதை அவதானிக்கலாம். முதலாவதாக ஆளணி – ஏறத்தாள 1 மில்லியன் தமிழர்கள் புகலிடத்தில் இருக்கிறார்கள். சிங்களவர்கள் இந்த எண்ணிக்கையின் 10% தான் இருக்கிறார்கள். மேலும் இங்கு தமிழர் தரப்பின் (ஊடக, பிரச்சார) யுத்த தந்திரமானது ஒரு குறிப்பிட்ட பழகிப்போன வழிமுறைகளிற்குள் முடங்கிவிட சிங்கள அரசின் பிரச்சார யுத்தமானது தனது அரச இராஜிய சலுகைகள் (network of embassies & other diplomatic channels) மூலமும், பொருளாதார பலத்தை பயன்படுத்தி கூலிக்கு பிரச்சார அறிவுரையும் அரங்கேற்றங்களும் வழங்கும் நிறுவனங்கள் (media consulting / spin doctering firms) ஊடாகவும், துரோகிகளை ஒன்றிணைத்து வெகுஜனப் பிரச்சாரமாகவும் வேறு மரபுவழியற்ற (unconventional) முறைமைகளாகவும் ஒரு பல் பரிமாண முறையில் முன்னெடுக்கிறது.

உதாரணமாக அண்மையில் நடந்த அல்லைப்பிட்டி படுகொலையினை எடுத்துக்கொண்டால் சிறிலங்கா அரசே இதன் சூத்திரதாரி என்று குற்றம்சாட்டப்பட்ட நிலையில் உடனடியாக அரசு இதற்கு விசாரணைக்கமிசன் அமைப்பதாக உல்டா விட்டது. இதனை வெளியுலக செய்தி நிறுவனங்களும் பெரிதாக முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. மேலைத்தேய நாடுகளில் ஒரு குற்றச்செயல்/ஊழல் சம்பந்தமாக விசாரணைக் கமிசன் அமைப்பது என்பது ஒரு மிகப்பாரதூரமான விடயம். அந்த விசாரணைக் கமிசன்கள் உண்மையை கண்டறியப் பெரும் பிரயத்தனப் படும். பெரும்பாலான விடயங்களில் உண்மை உலகறியச் செய்யப்படுகின்றது. இந்த வகையில் மேற்குலகில் இந்த விசாரணைக்கமிசன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இயல்பானதே. ஆனால் சிறிலங்காவில் அமைக்கப்படும் விசாரணைக்கமிசன்களின் கதியைப் பற்றி இங்கு யாருக்கும் விளக்கவேண்டியதில்லை. ஆனாலும் இந்த நிலமை தெரிந்திருந்தோ அன்றியோ மேற்கு ஊடகங்கள் இன்னமும் இவ்வாறான போலி அறிவித்தல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடும்போது தமிழர் பரப்புரையில் அது பெரும் தாக்கத்தை செலுத்துவது தவிர்க்க முடியாததாகின்றது. இதே யுக்தியை பாவித்து தமிழர்களும் பிரசாரம் செய்ய முடியாதென்பதால், சிறிலங்கா அரசின் இந்த தந்திரமான பிரசாரத்தை புகலிடத் தமிழர்களின் பிரசாரத்திற்கெதிரான ஒரு மரபுவழியற்ற பிரசார யுக்தியாக எடுத்துக்கொள்ளலாம். அதாவது தனது அங்கீகரிக்கப்பட்ட அரசு என்ற அந்தஸ்த்தை ஊடகங்கள் மனித உரிமை அமைப்புகள் ஏனைய அரசுகள் மதித்து நம்பிக்கை வைத்து செயற்படும் என்ற நிலையை துஸ்பிரயோகம் செய்து முன்னெடுக்கப்படும் பிரச்சார யுக்தி இதுவாகும்.

சிறீலங்காவின் இந்த மரபுவழியற்ற பிரச்சார அணுகுமுறைக்கு எதிர்வினையாக நாம் மரபுவழியற்ற அணுகுமுறைகள் எவற்றையும் கையாள முடியாது. நாம் அரசு அற்ற தரப்பாக நம்பிக்கை அங்கீகாரம் என்பவற்றை சர்வதேச அரங்கில் அனைத்து தரப்பிடமும் வேண்டி நிற்பவர்கள். எனவே சர்வதேசத்துடனான அனைத்து உறவாடல்களும் எமது பக்குவம் முதிர்ச்சி பொறுப்புணர்வு நீதி நியாயத்திற்கு கட்டுப்பட்ட ஒழுக்கம் நிறைந்த அப்பழுக்கற்ற அணுகுமுறைகளை கொண்டதாக இருக்க வேண்டும். நாம் விடும் சிறு தவறு கூட எம்மீதான நம்பிக்கையை உருவாக்குவதற்கான சந்தர்ப்பங்கள் பலவற்றை நீண்ட காலத்திற்கு நிர்மூலமாக்கி வைத்திருக்கக் கூடியது. அடுத்து சிறீலங்கா ஒட்டுக்குழுக்களின் உதவியோடு தமிழர் தரப்பு நம்பிக்கை அற்ற முறையில் நடத்தும் பிரச்சாரம் போன்று போலியாக முன்னெடுத்து எம்மீதான நம்பிக்கைகளை தகர்க்கும் முறையை இன்னெரு மரபு வழியற்ற பிரச்சார யுக்தியாக அல்லது சதியாகக் கூடப் பார்க்கலாம்.

ஒட்டுக்குழுக்களை பயன்படுத்தி போலியான தமிழர் தரப்பாக சிறிலங்கா அரசு என்ன விதமான பிரசாரங்களை செய்துகொண்டிருக்கிறது அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன என்பது குறித்து சரியான தகவல்களோ அல்லது கணிப்பீடுகளோடு கூடிய விரிவான ஆய்வுகள் எவையும் இல்லை என்பதே மிகவும் ஆபாயகரமான நிலையாகும். இந்த இரு மரபு வழியற்ற அணுகுமுறைகளை ஏதிர்கொண்டு வெற்றி பெற எமது பதில் வினைகள் முற்று முழுக்க மரபுவழியில் இருக்க வேண்டும். முதலாவது அணுகுமுறைக்கான பதில் வினையாக சிறீலங்காவின் சுத்துமாத்து விசாரணைக் கமிசன் வரலாற்றை சர்வதேசத்தால் ஏற்றுக் கொள்ளக் கூடிய நடுநிலையான மூலங்களை ஆதாரமாக வைத்து ஆவணப்படுத்தி வெளியிட வேண்டும். 2 ஆவது அணுகுமுறைக்கு பதிலாக எமது நடவடிக்கைகள் முற்று முழுக்க நிர்வாகமயப்படுத்தப்பட்டு தொடர்பாடல்கள் தனிமனித தொடர்பாடல்களாக இருக்காது நன்கு விளம்பரப்படுத்தப்பட்டு வெளிப்படையாக இயங்கும் ஒரு அமைப்பின் ஊடான தொடர்பாடல்களாக மாற்றப்பட வேண்டும்.

தமிழர் தரப்பு பெரும்பாலும் வெகுஜன கவனயீர்பு நிகழ்வுகள் என்ற மரபு வழி முறைகளின் ஒரு சிறுபகுதிக்குள் அடங்கி நின்று பிரசாரம் செய்கையில் சிறிலங்கா அரச தரப்பானது எல்லாவிதமான முறைகளையும் (மரபுவழி, மரபு அற்ற வழி) பின்பற்றி தனது பிரச்சாரத்தை தந்திரமாக முன்னெடுக்கிறது. மேலும், மரபுவழியை மட்டும் பின்பற்றும் தமிழர் பிரச்சார இயந்திரமானது மரபுவழி, மற்றும் மரபு அற்ற வழியில் பிரசாரம் செய்யும் சிறிலங்கா அரசின் பிரசாரத்தை முறியடித்து பிரசாரரீதியில் ஒரு மேலாதிக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை என்பது மாத்திரமல்ல ஒரு சமநிலையை எண்ணிக் கூட பார்க்க முடியாத கேவலமான நிலை இன்று காணப்படுகிறது. மரபுவழியை மட்டும் பின்பற்றும் ஒரு தரப்பு மரபுவழிக்குரிய ஏனைய அம்சங்களான ஆளணி மற்றும் பொருளாதார வளங்கள் இருந்தும் மேலாண்மையை ஏன் கொண்டிருக்க முடியாதுள்ளது?

இதற்கு விடையாக எம்மவரால் முக்கியமாக முன்வைக்கப்படும் வாதம் சிறிலங்காவானது ஒரு அரச தரப்பாக இருந்து கொண்டு பிரச்சாரம் செய்கிறது நாங்கள் ஒரு அரசு அல்லாத தரப்பாக இருந்து கொண்டு பிரச்சாரம் செய்கிறோம் என்பதாகும். இந்தக் கூற்று சில கோணங்களில் விவாதத்திற்கு உட்படுத்தப்படக் கூடியது. உதாரணமாக ஒரு நாடு, குறிப்பாக மேற்குலக நாடொன்று, தனது நாட்டின் பிரசா உரிமை பெற்றவர்களின் நிலைப்பாட்டிற்கா அல்லது தோல்வி அடைந்த நாடுகளின் பட்டியலில் உள்ள சிறிலங்காவின் அறிக்கைகளுக்கா முக்கியத்துவம் கொடுக்கும்? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டு விடைகள் சிந்திக்கப்படவேண்டும். அடுத்து பிரச்சார யுத்தத்தில் நாம் எண்ணிக்கையில் அதிகமாகவும் பொருளாதார வளத்தில் குறிப்பிடத்தக்க அளவிலும் இருந்தும் கூட இவற்றை ஒருங்கிணைத்து சிறீலங்காவின் பிரச்சார யுத்தத்திற்கு ஒரு காத்திரமான சவாலாக உருவமெடுக்க முடியாது திணறுவதற்கு அடிப்படைக் காரணம் எமது நடவடிக்கைள் நிர்வாக மயப்படுத்தப்படவில்லை, சீராக நீண்ட கால குறிக்கோள்களோடு திட்டமிடப்படவில்லை. ஒழுங்கமைக்கப்பட்ட நடவடிக்கைள் மூலம் ஒவ்வொரு சவால்களும் சரியாக பகுப்பாய்வு செய்யப்பட்டு அதற்கு பொருத்தமான பதில் நகர்வுகளை நோக்கி வளங்கள் பிரயோகிக்கப்பட வில்லை என்பதாகும்.

ஏன் புகலிடத் தமிழர்கள் ஒன்றுமே செய்யவில்லையா? பல விடயங்கள் நடந்துகொண்டு தானே இருக்கிறது என பலர் வினவலாம். புகலிடத்தில் பல தமிழர்கள் அர்ப்பணிப்புடன் பலசமயங்களில் தமது சொந்தவாழ்வை தியாகம் செய்து போராட்டத்திற்குப் பலம் சேர்க்கின்றனர் என்பது உண்மைதான். ஆனால் இவர்களில் எத்தனை பேர் இந்த ஊடகங்களின் மூலம் விழிப்புணர்வு பெற்றனர் என்பது கேள்விக்குரியது. பொதுவாகவே தாயக மக்கள்பாலும் போராட்டத்தின் பாலும் அக்கறை கொண்ட இந்த மக்கள் தாமாகவே சிந்தித்து செயற்படுகின்றனரே தவிர எமது ஊடகங்களின் மூலம் விழிப்புணர்வு பெற்று செயலில் குதித்தவர்கள் எண்ணிக்கை மிகச் சொற்பமே. மேலும் தாயகத்தில் நடப்பது போல ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் செயற்படுவதையும் காணலாம். பல சந்தர்ப்பங்களில் இன்றைய எமது ஊடகங்கள் தென்னிந்திய திரைப்படங்களையும் சீரியல்களையும் போட்டு மக்களை மந்தைகளாக்க முயலும்போது இவை இல்லாதிருந்தால் மக்களின் சிந்தனையும் செயலும் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்ற நிலையே உள்ளது.

மரபுவழியை மட்டும் பின்பற்றி ஒரு பிரசாரவியூகத்தை வகுக்கவேண்டிய கட்டுப்பாடு உள்ளபோது நாம் எவ்வாறு செயல்பட வேண்டும்? உதாரணமாக மரபுவழியில் மட்டும் இராணுவ யுத்தம் செய்ய மட்டுப்படுத்தப்பட்டுள்ள சிங்கள அரசை எடுத்துகொள்வோமானால், தமது இராணுவ மேலாண்மையை நிலைநாட்டுவதற்கான ஒரே வழியாக அவர்களுக்கு உள்ள தெரிவு இராணுவத்தின் பலத்தை அதன் எண்ணிக்கையில், இராணுவத் தளபாடக் குவிப்பில், மற்றும் நவீன போர்க்கருவிகளில் பெருக்குவதாகும். அதேபோல புகலிடத் தமிழர்கள் தமது பிரச்சார மேலாதிக்கத்தை நிலைநாட்ட ஒரே வழி தமது ஊடகத்துறையை திட்டமிட்டு விரிவுபடுத்தி வளர்த்தெடுப்பதாகும்.

எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் நாம் எந்தெந்த வழிகளில் பலமாக இருக்கலாம் அதை எப்படி இனங் கண்டு ஒருங்கிணைக்கலாம் பிரயோகிக்கலாம் என்று சற்று பார்ப்போம். எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் நாம்மவர்கள் சாதாரண நுகர்வோர்களாகவே ஒரு பெரும் பொருளாதார பலத்தை தன்னகத்தே கொண்டுள்ளார்கள். எமது நுகர்வுகளின் தெரிவை எமது இன அடயாளத்திற்கும் தேசியத்திற்கும் மதிப்பு கொடுத்து அதன் மூலம் அங்கீகரித்து நடப்பவர்களிற்கு முன்னுரிமை கொடுக்க முனைவது ஒரு வெளிப்பாடாகும். எமது சமூகம் தேசியம் சார்ந்த நிகழ்வுகளிற்கு விளம்பர உதவி செய்பவர்களிற்கு நன்றியை எமது நுகர்வின் தெரிவினூடாக காட்டி எமது பலத்தை அவர்களது வர்த்தக வெற்றியின் ஊடாக வெளிக் காட்டமுடியும். அவ்வாறு ஒருவரின் வர்த்தக வெற்றி அவரது போட்டியாளர்கள் பலரை எமது பலம் பற்றி அவதானித்து சிந்தித்து தமது விளம்பர உதவிகளிற்கு முன்வர வைக்கும்.

இவை வெறும் இசை நிகழ்சிக்கோ பழயமாணவர் சங்கத்தின் இராப்போச விருந்திற்கான விளம்பரமாக பார்க்காது வங்கிகள் காப்புறுதி நிறுவனங்களின் உதவியோடு தமிழ் மாணவர்களை ஊடகத்துறை, அரசியல் விஞ்ஞானத் துறையில் உயர் கல்வி பயிலுவதற்கான ஊக்குவிப்பு புலமைப்பரிசில் திட்டம் அளவிற்கு வழர்த்தெடுக்கப்பட வேண்டும். நாம் ஒரு பலம்பொருந்திய இனக்குழுமமாக திகழுவதற்கு அந்தந்த நாடுகளில் அனைத்து துறைகளிலும் பிரசன்னத்தைப் பேண வேண்டும். இதற்கு அடுத்த சந்ததியினர் அந்தந்த துறை சார் உயர்படிப்புகளை தெரிவு செய்ய ஊக்குவிப்புகளும் அறிவுரைகளும் தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும். எமது பொருளாதர பலத்தின் மேலதிக நன்மைகள் சரியாக ஒருங்கிணைக்கப்பட்டு அறுவடை செய்யப்பட்டு எமது அடுத்த சந்ததியின் வளர்ச்சியில் அவை முதலீடு செய்யப்பட வேண்டும்.

அடுத்து புலம்பெயர்ந்தவர்களில் குடியுரிமை பெற்ற ஒவ்வொருவரும் உரிய வயதை அடைந்தவுடன் பெற்றுக் கொள்ளும் வாக்குரிமை தரும் அரசியல் பலம். இந்த அரசியல் பலத்தை நாம் தனிமனிதர்களாக இயங்கி வெளிக்காட்ட முடியாது. தமிழர்கள் ஒற்றுமையாக தமது இனத்தின் தேசியத்தின் பெயரால் இணைந்து நிற்கும் பொழுது தான் அந்த வாக்கு வங்கியின் ஒருமித்த பலம் என்பது எமது நலன்களை காப்பதற்கும் தக்க வைப்பதற்குமான அரசியல் பேரம் பேசலிற்கு ஏற்ற வடிவத்தைப் பெறும். அதற்கு முன்நிபந்தனையாக தமிழர்கள் உள்ளூர் அரசியல் நிகழ்வுகளில் ஆர்வமுள்ளவர்களாக பங்கெடுத்து தமது ஈடுபாட்டை ஒரு இனக்குழுமமாக காட்ட வேண்டிய தேவை இருக்கிறது. நாம் வாழும் நாடுகளில் அரசியல் பலமாக வளர முதல்படியாக நாம் உள்ளூர் அரசியல் பற்றிய அடிப்படை புரிதலைப் பெற வேண்டும். புதிய அல்லது புரட்சிகர சிந்தனை கொண்ட அரசியல் கட்சிகள் அல்லது எல்லாத் திசைகளின் மிதவாத சிந்தனைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் என்பன ஜனநாயக அமைப்பில் எந்த சமூகத்திலும் எதிர்பார்க்கப்பட வேண்டியவை. ஆனால் இவர்களால் ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும் நிலைக்கு வளரமுடியுமா என்பதை எமது உள்ளூர் அரசியல் பற்றிய புரிதல்கள் மூலம் கண்டறிய வேண்டும். எமக்கு சாதகமான நிலைப்பாடுகளை இப்படிப்பட்ட கட்சிகளில் பெற்றுக் கொள்ள முனைவது இலகுவாக இருக்கலாம். இவை ஆரம்ப முயற்சிகளிற்கு பயனுள்ளவையாகவும் இருக்கலாம். ஆனால் பெரும்பான்மையான மக்களின் அதரவை கொண்ட முன்னணிக் கட்சிகளோடான (main stream political parties) உறவாடல் தான் எமது அரசியல் பலத்தின் பலன்களை யதார்த்தத்தில் அறுவடை செய்யக் கூடிய சந்தர்ப்பங்களை அவர்கள் ஆட்சி அதிகாரங்களை எட்டும் பொழுது தரும் என்பதை மறந்துவிடக் கூடாது.

ஒரு உயிரின் விலை

இன்றைய உலக நடப்பை உற்றுநோக்குவோமானால், ஒவ்வொரு மனிதனின் உயிருக்கும் ஒரு விலை குறித்திருப்பதைக் காணலாம். உதாரணமாக ஈராக்கில் ஒரு இங்கிலாந்துப் பத்திரிகையாளர் கடத்தப்படுகிறார். அதே நேரம் இலங்கையிலும் ஒரு பத்திரிகையாளர் கடத்தப் படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். ஈராக்கில் கடத்தப்பட்ட பத்திரிகையாளருக்கு ஊடகங்களில் நாட்கணக்கில் முதற்செய்தியாக முக்கியத்துவம் கொடுக்கப்பட இலங்கையில் கடத்தப்பட்ட பத்திரிகையாளர் இலங்கைச் செய்தியில் கூட இடம்பிடிப்பாரா என்பது சந்தேகமே. இதே போல அண்மையில் லண்டனில் 2005 இல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு உலகையே மாதக்கணக்கில் உலுக்கியது எனலாம். இதில் இறந்தவர்கள் ஒரு ஐம்பது பேர். ஆனால் இன்றும் ஈராக்கில் நாளுக்கு ஐம்பது, நூறு என்ற கணக்கில் மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டு தானிருக்கிறார்கள். ஆனால் இதற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படுவதில்லை. எந்த நாடும் இதை கண்டித்து அறிக்கை வெளியிடுவதுமில்லை ஊடகங்கள் இதை பெரிதாக முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுவதுமில்லை. அதாவது ஒரு ஈராக்கிய உயிரானது ஒரு பிரித்தானிய உயிருடன் ஒப்பிடப்படும் போது மிகவும் மலிவானது (மேலைத்தேய அரசுகள்/ஊடகங்களின் பார்வையில்.) இந்த வகையில் புகலிட ஊடகவியலாளர்கள் மனம் வைத்தால் போராளிகளினதும் தாயகமக்களின் உயிரிழப்புக்களை கணிசமாக குறைக்க முடியும் என்பதே இன்றைய யதார்த்தமாகும்.

அதாவது ஒரு பலமான ஊடகத்துறை எம்மிடம் இருந்தால் அல்லது பலமான முன்னணி ஊடகங்களிற்குள் எமது பிரசன்னம் காத்திரமாக இருந்தால் ஒரே தடவையில் நூற்றுக்கணக்காக, குலைகுலையாக உயிர்கள் பறிக்கப்பட்டு பிணக்காடு வரும்வரை காத்திராமல் சிறிலங்கா அரசினால் திட்டமிடப்பட்டு நாளுக்கு ஐந்து என்ற ரீதியில் பறிக்கப்படும் தமிழ் உயிர்களுக்கும் ஒரு பெறுமதியிருக்கிறது என்பதைக் காட்டலாம். அதாவது ஆயிரம் உயிர்களை கொடுத்துச் செய்யப்படும் ஒரு வேலையை பத்து உயிரை கொடுத்துச் செய்யலாம். மேலைத்தேய அரசுகளின் மொழியில் சொன்னால் எம்மவர்களின் உயிரின் பெறுமதியை கூட்டலாம். இன்று எமது இனத்தவர் மத்தியில் உள்ள ஊடகத்துறை சார்ந்த அறிவு, விளக்கம், தெளிவு என்பவற்றை வைத்துப் பார்க்கும் பொழுது யூதர்களின் பல்வேறு ஊடகங்கள் போன்றோ அல்லது அண்மைக் காலமாக பலரின் பாராட்டைப் பெற்றுவரும் அல்ஜசீரா சர்வதேச ஆங்கில சேவை போன்றோ ஒன்றை நாம் கட்டி எழுப்ப வேண்டும் என்று கோசம் இடுவது யதார்த்தத்திற்கு புறம்பானது. அவ்வாறான எதிர்பார்ப்புகளிற்கு முன்னிபந்தனையாக நம்மவர்கள் மத்தியில் ஊடகத்துறை பற்றிய தெளிவு, முக்கியத்துவம், மரியாதை என்பன பரந்த அளவில் பிறக்க வேண்டும். அதன் மூலம் ஊடகத்துறைசார்கல்வியில் இளய தலைமுறையினர் ஆர்வாமக பங்கெடுக்கவும் அதை ஊக்குவிக்கும் சூழலையும் எமது சமுதாயத்திற்குள் கட்டியெழுப்ப வேண்டும். இவ்வாறு துறைசார் கல்வியில் பக்குவப்படுபவர்கள் சர்வதேச அரங்கில் உள்ள முன்னணி ஊடகங்களில் சென்று பணி புரிந்து கள அனுபவத்தை பெற்று துறைசார் நிபுணர்களாக வளரும் நிலையை முதலில் அடைய வேண்டும்.

(பாகம் 2 இல் தொடரும்)

ஆக்கம்: பண்டிதர் மற்றும் குறுக்காலபோவான்

Edited by பண்டிதர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.