Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிரினங்களைக் காப்பாற்ற இந்தியா போதிய நடவடிக்கைகள் எடுக்கிறதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஸ்ரீஷன் வெங்கடேஷ், பிபிசிக்காக
ஆசிய சிறுத்தைபடத்தின் காப்புரிமை Getty Images

காஷ்மீர் பகுதியில் உள்ள இமயமலையின் சிறிய மான் இனமான ஹங்குல், ஆந்திரப்பிரதேசத்தில் விஷத்தன்மை வாய்ந்த கூட்டி டாரன்டுலா என்ற சிலந்தி, தமிழகத்தில் வாச்செல்லியா போலெய் என்ற அவரை இனம் போன்றவை இந்தியாவைச் சேர்ந்தவை என்பதைத் தாண்டி அவற்றுக்குள் உள்ள பொதுவான அம்சம் என்ன? சமீபத்திய கணக்கெடுப்புகளின்படி பார்த்தால், இவற்றின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருவதால், அடுத்த பத்தாண்டுகளுக்குள் இந்த இனங்கள் அழிந்து வரலாற்றில் படிப்பதாக மட்டுமே ஆகிவிடக் கூடிய நிலை ஏற்படும் என்று தெரிகிறது.

ஆசிய சிறுத்தை, சுமத்ரா காண்டாமிருகம்

அப்படி நடந்தால் துணைக் கண்டத்தில் சுற்றித் திரிந்து, பின்னர் மறைந்து போன ஆசிய சிறுத்தை, சுமத்ராவின் காண்டாமிருகம் போன்றவற்றின் பட்டியலில் இந்த மூன்று இனங்களும் இடம் பிடித்துவிடும். 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் வேட்டையாடுதல் மற்றும் குடியிருப்புகளுக்காக அழித்தல் போன்ற மனித குறுக்கீடுகளால் ஆசிய சிறுத்தை மற்றும் சுமத்ரா காண்டாமிருகம் ஆகிய இனங்கள் அழிந்து போயின.

சுமத்ரா காண்டாமிருகம்படத்தின் காப்புரிமை Getty Images

பூமியின் மீது மனிதர்களின் நெருக்குதல் காலப்போக்கில் அதிகரித்து வருகிறது. 2015க்கும் 2018க்கும் இடைப்பட்ட காலத்தில் உலகம் முழுக்க 15 மில்லியன் ஹெக்டர் அளவுக்கு மழைக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. அதேசமயத்தில் வளிமண்டலத்தில் கரியமில வாயு அளவு 415 பி.பி.எம். அளவை எட்டிவிட்டது - மதிப்பிடப்பட்ட 14 மில்லியன் ஆண்டுகளில் இதுதான் அதிகபட்ச அளவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஹவாயில் மவுனா லோவா வானியல் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள சென்சார்களில் மே 2019ல் பதிவான பதிவுகளின்படி இது கணிக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக அழிந்து வரும் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகளும், சுற்றுச்சூழல் பாதுகாவலர்களும் சுட்டிக்காட்டி வருகின்றனர். பெரிய அளவில் உயிரினங்கள் அழிவது ஆறாவது முறையாக நிகழும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு முன்பு நடந்த பெரிய அளவிலான உயிரினங்களின் அழிவு 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்றும் அப்போது, பூமியில் இருந்தவற்றில் சுமார் 75 சதவீத உயிரினங்கள் அழிந்துவிட்டன என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள் குறித்த அரசுகளுக்கு இடையிலான அறிவியல் கொள்கை தளத்தின் (IPBES) உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கையின் தொகுப்பு இந்த மாதத் தொடக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் இந்தக் கருத்துடன் ஒத்துப் போகிறது.

அந்த அறிக்கையின் தொகுப்புரையின் படி, உலகெங்கும் சுமார் ஒரு மில்லியன் உயிரினங்கள் வரை அழிந்துவிடும் சூழ்நிலையின் மத்திய கட்டத்தில் நாம் இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. வரும் பத்தாண்டுகளில் பல ஆயிரம் உயிரினங்கள் முற்றிலுமாக அழிந்துவிடும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்தியாவின் நிலை என்ன?

50 நாடுகளைச் சேர்ந்த 145 ஆராய்ச்சியாளர்களால் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் முன்னோட்டமாக இந்தத் தொகுப்பு இருக்கிறது. பிராந்திய அளவிலான கருத்துகளை இதில் தெரிவிக்கவில்லை. இருந்தபோதிலும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா தான் தவிர்க்க முடியாத பல்லுயிர்ப் பெருக்க பேரழிவில் மிக மோசமாகப் பாதிக்கப்படும் பகுதியாக இருக்கும் என்று அதில் குறிப்பிடப் பட்டுள்ளது. ``பல்லுயிர்ப் பெருக்க பாதிப்பு குறித்த இந்தக் கருத்துகள் இந்தியாவைப் பொருத்த வரையில் உண்மையானதாக இருக்கின்றன. இந்தியாவில் அவை நிகழ்ந்து வருகின்றன. அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. கலாச்சார ரீதியில், நம்முடைய வாழ்வாதாரங்கள் மற்றும் நீடித்த வாழ்வுக்கு பெருமளவு வன வளங்களை நாம் நம்பியிருக்கிறோம். பெரிய வகை பாலூட்டி இனங்களும், பெரிய உடல் அமைப்பு கொண்ட பறவை இனங்களும் இப்போதுள்ள வேகத்தில் அழியுமானால், இந்திய வனப் பகுதிகள் ``உயிர்த்தன்மை இல்லாத வனங்களாக'' மாறிவிடும் என்று உயிர்ச் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்கான அசோகா டிரஸ்ட் (ATREE) உடன் நீண்டகால உயிர்ச்சூழல் கண்காணிப்புப் பணியாற்றி வரும் விஞ்ஞானியான ஆர். கணேசன் கூறுகிறார்.

உயிரினங்களைக் காப்பாற்ற இந்தியா போதிய நடவடிக்கைகள் எடுக்கிறதா?படத்தின் காப்புரிமை Getty Images

இந்த ஆண்டில் வெளியிடப்பட உள்ள இந்த அறிக்கை, தொகுப்புரை குறிப்புகள் பற்றி விளக்கங்களைத் தருவதாக இருக்கும். உலக அளவில் அதிக எண்ணிக்கையில் உயிரினங்களைக் கொண்ட 18 நாடுகளில் ஒன்றான இந்தியாவில் (குறைந்தது 5000 தாவர இனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. கடல்வாழ் உயிர்ச் சூழல் எல்லைகளைக் கொண்டதாக இருக்கிறது.)எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைக் குறிப்பிடுவதாகவும் அது இருக்கும்.

இந்திய தீபகற்பம்

இந்தியாவில் நிலப் பகுதியில் உள்ள பல்லுயிர்ப் பெருக்க சுழற்சியில் பெரும்பான்மையானவை நான்கு `முக்கியப் பகுதிகளைக்' கொண்டதாக இருக்கிறது. இந்திய தீபகற்பத்தின் மேற்கு கடலோரத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகள், வடக்கு தொடங்கி வடகிழக்கு இந்தியா வரை செல்லும் கிழக்கு இமாலய மலையடிவாரப் பகுதிகள், வடகிழக்கு இந்தியாவில் பரவியுள்ள இந்திய - பர்மா பிராந்தியம், அந்தமான் நிகோபர் தீவுகளை உள்ளடக்கிய தென்கிழக்கு ஆசிய சுந்தரவனக் காடுகள் ஆகியவை இதில் வரும். உலக உயிரினங்களில் 7 - 8 சதவீதம் இந்தியாவில் இருப்பதாகக் கணக்கிடப் பட்டுள்ளது. உயிரியல் பெருக்கம் குறித்த கூட்டமைப்பிடம் 2014ல் சமர்ப்பிக்கப்பட்ட இந்தியாவுக்கான ஐந்தாவது தேசிய அறிக்கையில் இது தெரிவிக்கப் பட்டுள்ளது. இருந்தபோதிலும், நாட்டில் புதிய உயிரினங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருவதால், கடந்த சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது.

உயிரினங்களைக் காப்பாற்ற இந்தியா போதிய நடவடிக்கைகள் எடுக்கிறதா?படத்தின் காப்புரிமை Getty Images

நாட்டின் உயிரியல் தொகுப்பில், உலக தாவர இனங்களில் 11.4 சதவீதம் இந்தியாவில் உள்ளதாக 2017ல் இந்திய தாவரவியல் கணக்கெடுப்பு நிறுவனம் தயாரித்த இந்தியாவின் தாவர இன பன்முகத்தன்மை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அச்சுறுத்தல் நிலையின்படி உயிரினங்களை வகைப்படுத்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சர்வதேச யூனியன் (IUCN) வெளியிட்ட சிவப்புப் பட்டியலின்படி, இந்தியாவில் மதிப்பீடு செய்யப்பட்ட 7445 உயிரினங்களில் 1078 இனங்கள் கணிசமான அச்சுறுத்தல் நிலையில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இதில் ஏறத்தாழ 60 சதவீதம், தாவரங்கள் மற்றும் மீன் இனங்களைக் கொண்டதாக இருக்கிறது. இந்திய கடல்வாழ் தாவரங்கள் மற்றும் மீன் இனங்கள் என கண்டறியப்பட்ட 1,43,886 இனங்களில் வெறும் 5 சதவீதத்தை மட்டுமே IUCN மதிப்பீடு செய்திருப்பதால், இது இந்திய பல்லுயிர்ப் பெருக்க பாதிப்பை குறிப்பிட்டுக் காட்டும் ஒரு அடையாளக் குறியீடாகத்தான் உள்ளது.

இந்தியாவில் விரிவான தகவல் மற்றும் ஆராய்ச்சி இல்லை

பல்லுயிர்ப் பெருக்கத்தைக் கண்காணித்தல் அதிகரித்துள்ள நிலையில், எதிர்கால சூழ்நிலைகளை கணித்துக் கூறுதல், இந்தியாவின் இயற்கை வரலாறு குறித்த ஆவணங்கள் குறித்த விஷயங்களில் நடைபெறும் முயற்சிகள் போதுமானவையாக இல்லை, குறைகள் நிறைந்ததாக உள்ளன. கடந்த சில நூற்றாண்டுகளில் இந்திய துணைக் கண்டத்தில் உண்மையில் எவ்வளவு உயிரினங்கள் அழிந்து போயின என்று யாருக்கும் தெரியாது.

``இந்தியாவில் உயிரினங்கள் எவ்வளவு வேகமாக அழிந்து வருகின்றன என்பது குறித்த நம்பகமான மதிப்பீடுகள் எதுவும் இல்லை. பெரிய பாலூட்டி இனங்கள் மற்றும் சில மருத்துவ மூலிகை இனங்கள் அழிந்து வருவது பற்றி சிறு சிறு ஆவணக் குறிப்புகள் மட்டுமே உள்ளன. ஆனால், நாங்கள் ஆய்வு செய்த 1,50,000க்கும் மேற்பட்ட உயிரினங்களில், சில இனங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிற போதிலும், அழிவின் விளிம்புக்குச் செல்லவில்லை என்பது நல்ல தகவலாக இருக்கிறது. இடம் பெயரும் சில பறவை இனங்களை மட்டும் இந்திய வான்பரப்பிலும், நீர்நிலைகளிலும் காண முடியவில்லை'' என்று டேராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு நிலையத்தின் மூத்த விஞ்ஞானி கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

உயிரினங்களைக் காப்பாற்ற இந்தியா போதிய நடவடிக்கைகள் எடுக்கிறதா?படத்தின் காப்புரிமை Getty Images

கிடைக்கிற பதிவுகளும்கூட சிறு சிறு தகவல்களாக உள்ளன என்றும், அவற்றைப் பெறுவது சிரமமாக இருக்கிறது என்றும் ATREE -ஐ சேர்ந்த கணேசன் கூறுகிறார். ``இந்தியாவின் இயற்கை வரலாறு குறித்து நிறைய தகவல்களின் நகல்கள் நிறைய உள்ளன. அல்லது உலர வைக்கப்பட்ட பதக்கூறுகளாக உள்ளன. ஆனால் இன்டர்நெட்டில் எதுவும் இல்லை. இந்தியாவின் பல்லுயிர்ப் பெருக்கம் குறித்து தகவல் பட்டியல் தயாரிப்பது அதிக அளவில் சிறு தகவல்களைத் தொகுப்பதாக உள்ளது. இந்தியாவில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளின் தற்போதைய நிலை குறித்த பட்டியலைத் தயாரிக்க நிறைய பங்காளர்கள் கை கோர்க்கும் வகையில் தேசிய அளவிலான முயற்சி எதுவும் இல்லை'' என்று அவர் கூறுகிறார்.

2008ல் உருவாக்கப்பட்ட இந்தியாவின் தேசிய பல்லுயிர்ப் பெருக்க செயல் திட்டம், இந்த அறிவு இடைவெளிகளை நீக்குவதற்காக திட்டமிடப்பட்டது. இந்திய உயிரினங்கள் குறித்த உண்மை நிலையை பிரதிபலிக்கும் வகையிலான தகவல் தொகுப்பை உருவாக்குவதன் மூலம் இதைச் செய்வது என உத்தேசிக்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டதைவிட இதன் முன்னேற்றம் மெதுவாக இருந்தது. ``நாட்டில் காணப்படும் உயிரினங்களில் பாதி அளவிற்கு தான் இதுவரை நாங்கள் விவரிப்பு செய்திருப்பதாக நம்புகிறோம். ஆனால் முன்னேற்றம் மெதுவாகவே உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் 20 புதிய உயிரினங்கள் பற்றி மட்டுமே விவரிக்கப்பட்டுள்ளன. புதிதாக 1,50,000 உயிரினங்களை விவரிக்க வேண்டியுள்ளது என்ற நிலையில், இது சாத்தியமான வேகமாகத் தெரியவில்லை. இதற்கான உத்வேகம் உருவாக்கப்படவில்லை. இந்திய விலங்கியல் சொசைட்டி இந்தப் பணியை மேற்கொண்டபோது, இவ்வளவு பெரிய எண்ணிக்கையில், உயிரினங்களை வகைப்படுத்துவதற்குத் தேவையான அலுவலர்களின் எண்ணிக்கையை அந்த அமைப்பால் பூர்த்தி செய்ய முடியாமல் போனது. அதுமட்டுமின்றி, அவர்களுடைய தொழில் திறன் மற்றும் இப்போது வேகமாக முன்னேறி வரும் தொழில்நுட்பத்துக்கு இடையில் பெரிய இடைவெளி இருக்கிறது'' என்று 2014ல் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் ஐந்தாவது தேசிய பல்லுயிர்ப் பெருக்க அறிக்கை தயாரித்த முக்கியஸ்தர்களில் ஒருவரான சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தசாப்தங்களாக உயிரினங்களை வகைப்படுத்தி, ஆவணப்படுத்துவதற்கான முயற்சிகள் உலகெங்கும் அதிகரித்து வருகின்றன. பல்லுயிர்ப் பெருக்க கூட்டமைப்பின் (CBD) முயற்சியால் இந்தளவுக்கு ஆர்வம் அதிகரித்திருக்கிறது. 1993ல் 30 உறுப்பு நாடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கு அரசுகள் அளவில் முயற்சிகள் எடுப்பது என்ற நோக்கத்தைக் கொண்டதாக உள்ளது. இப்போது இதில் 168 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. தங்களுடைய தேசிய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள பல்லுயிர்ப் பெருக்க நிலை குறித்து அவ்வப்போது இந்த கூட்டமைப்புக்கு அவை அறிக்கை அளித்து வருகின்றன. இதில் சிவப்புப் பட்டியலைத் தொகுக்கும் வேலையை 1996ல் IUCN தொடங்கியது. கணக்கெடுக்கப்பட்ட உயிரினங்களின் எண்ணிக்கையை 16,000 என்பதில் இருந்து 2019ல் 100,000 என்ற அளவுக்கு ஆறு மடங்காக அதிகரித்தது.

உயிரினங்களைக் காப்பாற்ற இந்தியா போதிய நடவடிக்கைகள் எடுக்கிறதா?படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால் பல்லுயிர்ப் பெருக்கத்தை ஆவணப்படுத்துவதில் ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், உயரமான முதுகெலும்புள்ள உயிரினங்கள், குறிப்பாக பாலூட்டிகள் குறித்த விஷயத்தில் பெருமளவு பாரபட்சம் காட்டப் படுகிறது. விவரிக்கப்பட்ட முதுகெலும்புள்ள உயிரினங்களில் 69 சதவீத அளவுக்கு IUCN மதிப்பீடு செய்திருககிறது. இருந்தபோதிலும் முதுகெலும்பு இல்லாத இனங்களில் இது 2 சதவீதமாகவும், பூஞ்சான்களைப் பொருத்த வரை 0.2 சதவீதமாகவும் மட்டுமே உள்ளது.

``உலகளாவிய மதிப்பீடுகளின் மூலம் IUCN சிவப்புப் பட்டியல் தயாரிக்கப் பட்டுள்ளது. தாவர மற்றும் விலங்கினங்களுக்கு சம அளவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கவனத்தை ஈர்க்கும் பெரிய உயிரினங்கள் பற்றி மட்டுமே கவனம் செலுத்துவது என்பது இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்குமே காணப்படும் மனப்போக்காக உள்ளது. அதனால் முதுகெலும்புள்ள பாலூட்டிகள் இதில் ஆதிக்கம் செலுத்துகின்றன. வனப் பாதுகாப்பு முன்னுரிமையைவிட மனித இயல்பு குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது'' என்று IUCN-ன் இந்தியாவுக்கான திட்ட மேலாளர் அனுஸ்ரீ பட்டாச்சார்யா கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/science-48527318

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.