Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாசிப்பின் வலிமை: -வேர்ஜீனியா மாநில நீதிமன்றத்தில் ஒரு வித்தியாசமான தீர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாசிப்பின் வலிமை: -வேர்ஜீனியா மாநில நீதிமன்றத்தில் ஒரு வித்தியாசமான தீர்ப்பு

June 12, 2019

என். செல்வராஜா – நூலகவியலாளர், இலண்டன்

அமெரிக்காவின் வடக்கு வெர்ஜீனியா (Northern Verginia) மாநிலத்தில் ஒரு அமைதியான கிராமம் ஆஷ்பேர்ண். இங்குள்ள கறுப்பினத்தவர்களுக்கான சிறிய பள்ளியொன்றின் சுவர்களில் செப்டெம்பர் 2016இல், சில விஷமிகளால் இனவாத சுலோகங்கள் இரவோடிரவாக எழுதப்பட்டிருந்தன. இச்செயலானது அங்கு தலைதூக்கியிருந்த கறுப்பினத்தவருக்கு எதிரான KKK இனவாத இயக்கத்தின் கைவரிசையெனவே ஆரம்பத்தில் அம்மக்கள் நம்பினர். ஆனால் அந்தக் கிறுக்கல்களுக்கிடையே டைனோசர்களினதும் வேறு சில்லறைத்தனமான அடையாளங்களையும் கூர்ந்து அவதானித்த பாதுகாப்புத்துறையினர், இலகுவில் உண்மைக் குற்றவாளிகளை இனம்கண்டுகொண்டனர்.

library1.png?resize=800%2C530

பாடசாலை நிர்வாகத்தினரால் இடைநிறுத்தப்பட்டிருந்த ஐந்து ‘குளப்படிகாரச் சிறுவர்களே” அவர்கள். பாடசாலை நிர்வாகத்துடன் கொண்ட காழ்ப்புணர்வின் வெளிப்பாடாக இந்த கிராமத்துப் பாடசாலைக் கட்டிடத்தில் தங்கள் கைவரிசையைக் காட்டியிருந்தார்கள்.

அவர்கள் 16-17 வயதுடைய ஐந்து வெள்ளையினச் சிறுவர்கள் என்று கண்டறிந்ததும் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்தவர் அலெஜான்ட்ரா ரூடா (Alejandra Rueda) என்ற பெண் நீதிபதியாவார். அக்குற்றச்செயலில் சம்பந்தப்பட்டிருந்த சில சிறுவர்களுக்கு தாம் சுவரில் தீட்டிய சுவஸ்திகா இலச்சினையின் அர்த்தம் கூடப் புரிந்திருக்கவில்லை. சிறுவர்களின் வயதையூம், குற்றச்செயலின் இனவாதத் தீவிரத்தையூம் மனதிற்கொண்ட நீதிபதி, விசாரணையின் இறுதியில் அந்த ஐவருக்கும் வித்தியாசமானதொரு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.

அதாவது, குற்றவாளிகள் ஐவருக்கும் முப்பத்தைந்து ஆங்கில நூல்களின் தலைப்பை வழங்கி ஒரு வருட காலத்தில் அவர்கள் ஒவ்வொருவரும் அந்த முப்பத்தைந்து நூல்களில் ஏதாவது பன்னிரண்டு நூல்களை மாதத்திற்கொன்று என்ற ரீதியில் தெரிவு செய்து, அவற்றினை ஆழமாக வாசித்து, தாம் வாசித்த ஒவ்வொரு புத்தகத்தின் சாரத்தையும் அடிப்படையாகக் கொண்டு, அந்த நூல்கள் பற்றிய பன்னிரண்டு ஆய்வுகளை ஒவ்வொருவரும் நீதிமன்றுக்குச் சமர்ப்பிக்கவேண்டும். இதனைச் செய்யத் தவறும் பட்சத்தில் தீவிர தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதுவே அவரது தீர்ப்பு. இத்தகைய தண்டனைகள் இளையோர் குற்றவியல் கோவையில் ‘இயற்பண்பு சார்ந்தவை” (Disposition) என்று குறிப்பிடப்படுகின்றன.

library2.png?resize=800%2C557

நீதியரசர் கொடுத்த முப்பத்தைந்து புத்தகங்களின் பட்டியலில் அலிஸ் வோக்கரின் ஊதா நிறம் (The Color Purple) சாயிம் பொட்டொக்கின் எனது பெயர் ஆஷர் லெவ் (My Name is Asher Lev), மாயா அஞ்ஜெலாவின் கூண்டுப்பறவை ஏன் பாடுகின்றது என்று நானறிவேன் (I know why the Caged Bird sings) அலன் பட்டொன் எழுதிய என்னுயிர் நாடே நீ அழு (Cry The Beloved Country), காலிட் ஹுசெய்னி எழுதிய கைட் ரண்ணர் ) (Kite Runner)ஆகிய நூல்களும் அடங்கியிருந்தன.

நீதிபதியின் தீர்ப்பை பெரும்பான்மையான கறுப்பினத்தவர்கள் ஏற்க மறுத்தனர். அந்த ஐவரும் வெள்ளையினத்தவராக இருந்ததால் தான் இத்தகைய அர்த்தமற்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதெனவும் அவர்கள் கறுப்பினப் பிள்ளைகளாக இருந்திருந்தால் தீர்ப்பு வேறுவிதமாக மாற்றி எழுதப்பட்டிருக்கும் என்று முணுமுணுத்தனர்.

நீதிபதி அலெஜான்ட்ரா ரூடா தனது தீர்ப்பை மாற்றிக்கொள்ளத் தயாராகவில்லை. இவர்கள் ஐவரும் இளம் குற்றவாளிகள். இவர்களை வளர்ந்தோருக்கான சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்க சட்டத்தில் இடமில்லை. ஆகக்கூடிய தண்டனையாக இளையோர் சீர்திருத்தப் பள்ளிகளுக்கு அனுப்பலாம். அங்குசென்று இவர்கள் அங்குள்ள குற்றவாளிகளால் மூளைச் சலவை செய்யப்பட்டு, மேலும் தீவிரமான இனவாதிகளாகத் திரும்பிவரவவும் கூடும். குறைந்த பட்ச தண்டனையாக மாதமொரு முறை பொலிஸ் நிலையத்துக்கு வந்து கையெழுத்து இட்டுச் செல்லப் பணிக்கலாம். இவை எதுவும் இப்பிள்ளைகளின் சமூக ஒருமைப்பாடு, சகிப்புத்தன்மை தொடர்பான அறியாமையைப் போக்காது. புத்தகங்கள் மட்டுமே அதனைச் செய்யக்கூடும். அதனால் ஓராண்டின் பின்பு இவர்களை மீண்டும் பார்ப்போம். பொறுத்திருங்கள். அவர்களுக்கு வேண்டிய புத்தக வசதிகளை பெற்றௌரும், கிராம நூலகமும் செய்து தரவேண்டும் என்று தனது முடிவில் தீர்க்கமாக இருந்தவிட்டார்.

இது நடந்து ஓராண்டு முடிவில் இந்த ஐவரையூம் மீண்டும் நீதிமன்றுக்கு அழைத்து அவர்களது வாசிப்பின் பின்னர் தயாரித்திருந்த ஆய்வேடுகளை பரிசீலனை செய்யும் பணியை நீதித்துறை ஏற்பாடு செய்திருந்தது.

அண்மையில் இந்த ஐவரையூம் பற்றிய ஒரு கள ஆய்வினை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சியை, பீ.பீ.சீ. தொலைக்காட்சிக்காக, ஊடகவியலாளர் எம்மா ஜேன் கெர்பி மேற்கொண்டிருந்தார். அதில் மேற்படி ஐந்து இளையோரையும் உரையாட வைத்திருந்தார். அந்நிகழ்வின் வாயிலாகக் கண்டறிந்த உண்மை பார்வையாளர் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. புத்தகத்தின் சக்தியை நவீன உலகம் மீண்டும் அறிய வைத்திருக்கிறது.

செப்டெம்பர் 2016 இல் அவர்கள் மேற்கொண்ட குற்றச்செயலுக்குப் பின்னர் அவர்கள் இரண்டாண்டுகளாக எவ்விதமான குற்றச் செயல்களிலும் ஈடுபட்டிருக்கவில்லை. அவர்களது தண்டனைக்கால வாசிப்பு, அவர்களது அறிவூக்கண்களை அகலத் திறந்துவிட்டிருக்கிறது. அண்மையில் அவர்கள் தொலைக்காட்சியில் மேற்கொண்ட சுயபரிசீலனை வெளிப்படைத் தன்மையுடையதாக எவ்வித மேடை நடிப்புக்கும் ஆட்படாதவகையில் அறிவூபூர்வமாக அமைந்திருந்தது.

அவர்கள் வாசித்த நூல்கள் அவர்களை அடிப்படைவாதம், இனவாதம், என்றால் என்ன என்பதையயும், நாஜிகள் ஜேர்மனியில் யூதர்களுக்கெதிராக மேற்கொண்ட மனிதநேயமற்ற இனப்படுகொலையின் தார்ப்பரியம் என்பவற்றையூம் தெளிவாகப் புரியவைத்திருக்கிறது. அங்கு பேசிய ஐவருள் ஒருவன், “தென்னாபிரிக்காவில் நிலவிய நிறவாதம் பற்றிய எதுவுமே அறிந்திராத எனக்கு அலன் பட்டனின் நூல்களே அறியாமை இருளை அகற்றி வைத்த அகல் விளக்காக அமைந்துவிட்டன. கறுப்பினம் – வெள்ளையினம் என்பவற்றுக்கும் மேலாக மனித இனம் என்றொன்று உள்ளதை எனக்கு அவரது நூல் புரியவைத்தது” என்றான். “அதுவரை நாம் கற்ற பாடசாலைக் கல்வியில் இவையெதுவும் எமக்கு உறைக்கவேயில்லை. சக மாணவர்களை நிறத்தையும், இனத்தையும் அடிப்படையாக வைத்து இவ்வளவுகாலமும் எம்மால் ஒதுக்கிவைக்க எம்மால் எப்படி முடிந்துள்ளது?” என்று வருத்தப்பட்டான் மற்றொரு சிறுவன். மற்றொரு சிறுவன், தான் லியோன் ஊரிஸ் எழுதிய ‘எக்சோடஸ்” என்ற நூலை வாசிக்கும் வரை ‘இஸ்ரவேல்” என்ற நாடு பற்றி எதுவுமே அறியமுற்படவில்லை என்றான்.

ஈழத்தில் வாசிப்பை நேசிப்பவர்களுக்கு இந்த வழக்கும் அதன் தீர்ப்பும் நிச்சயமாக எட்டவேண்டும் என்பதே எனது இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

மேற்படி ஐந்து மாணவர்களினதும் கூற்றுக்களை பீ.பீ.சீ. நிகழ்ச்சியில் செவிமடுத்து முடித்ததும் எனக்கு சமூக உணர்வுள்ள ஒரு நூலகவியலாளன் என்ற வகையில் சில கேள்விகள் கிளர்ந்தெழுந்தன.

இலங்கையில் நூலகர்களாகப் பயின்ற எமக்கு இன ஒருமைப்பாடு பற்றி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தத் தக்க சில நல்ல நூல்களை பரிந்துரை செய்யத் தயாராக இருக்கிறோமா?

அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் இனவாத சிந்தனைகளால் சிதைவுறாமல் சிங்கள மக்கள் பற்றியும் இஸ்லாமியர்கள் பற்றியும் தமிழர் பற்றியும் மற்றவர்கள் அறிந்துகொள்ளக்கூடிய  பொதுத்தளம் ஒன்றினை ஏற்படுத்திவைத்திருக்கிறோமா?

மேலாதிக்க உணர்வுடன் தமிழ், முஸ்லீம் மக்களை எதிர்கொள்வதில் குறியாக இருக்கும் சிங்கள-ஆங்கில பத்திரிகைகளும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் ஏற்படுத்திவைத்துள்ள தளத்தை மறுதலித்து. ஒரு நாட்டின் சம அந்தஸ்துள்ள மூவின மக்கள் என்ற கருத்தை கட்டியெழுப்ப தமிழ் சிங்கள இலக்கியகர்த்தாக்கள் இதுவரைகாலமும் இணைந்து முயற்சிசெய்ததாக வரலாற்றில் பதிவகள் ஏதும் உள்ளனவா?

இன ஒருமைப்பாடு தொடர்பாக இதுவரை எழுதப்பட்டுள்ள மும்மொழிகளிலுமான நூல்கள் சிலவற்றை இலங்கையின் அறிவஜீவிகள் பட்டியலிட்டு ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் ஏன் வழங்கமுடியாதுள்ளது?

இதனை கல்வித் திணைக்களம் பாடசாலை நூலகங்களில் கட்டாய இருப்பில் வைத்திருக்க அதிபர்களுக்கு ஏன் பணிக்கக்கூடாது?

அமெரிக்காவில் நடந்தது போன்று ஒரு அலெஜான்ட்ரா ரூடா  (Alejandra Rueda)எம்மிடையே எழுந்துவரும் வரையூம் காத்திராமல் அரசியல்வாதிகளால் சின்னாபின்னப்பட்டிருக்கும் இன ஐக்கியத்தினை ஏன் அறிவுஜீவிகள் கைகளில் ஏந்தக்கூடாது? இவை அனைத்தையூம் கல்விச் சமூகத்தினதும் நூலகர்களினதும் சிந்தனைக்கு விட்டுவைக்கிறேன்.

பின்குறிப்பு:

நீதிபதி அலெஜான்ட்ரா ரூடா வழங்கிய பட்டியலில் இருந்து இச்சிறுவர்கள் தேர்ந்தெடுத்திருந்த பன்னிரண்டு நூல்களும் பின்வருவனவாகும்:

Things Fall Apart/ Chinua Achebe
I know why the Caged Bird Sings/ Maya Angelou
The Tortilla Curtain/ T.C.Boyle
The Kite Runner/ Khaled Hosseini
To Kill a Mockingbird/ Harper Lee
Twelve Years a Slave/ Solomon Northup
The Crucible/ Arthur Miller
Cry the Beloved Country/ Alan Paton
My Name is Asher Lev/ Chaim Potok

10.Exodus/ Leon Uris

The Colour Purple/ Alice Walker
Night/ Elie Wiesel

என். செல்வராஜா – நூலகவியலாளர், இலண்டன்

 

 

http://globaltamilnews.net/2019/124178/

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றைப் படிக்காதவர்கள் அந்த வரலாற்றின் இருண்ட பக்கங்கள் மீள அரங்கேற்றப் பட மூலகாரணமாக இருப்பார்கள் !

அதற்கேற்றாப் போல் அமைந்த நல்ல தீர்ப்பு. இது போலத்தான் அண்மையில் இங்கிலாந்து வந்த ட்ரம்புக்கு மகாராணி இரண்டாம் உலகப் போர் வரலாற்று நூலொன்றைப் பரிசாகக் கொடுத்து "உள் குத்துக்" கொடுத்திருக்கிறார்! யாழிலும் ஒரு சிலருக்கு இப்படியான assignments கொடுக்கப் பட்டால் இந்த ஹிற்லர்,நாசிகள், யூதர்கள், இனவழிப்பு போன்றவற்றில் தெளிவு ஏற்படலாம்! 

  • கருத்துக்கள உறவுகள்
On 6/13/2019 at 4:42 PM, கிருபன் said:

அமெரிக்காவில் நடந்தது போன்று ஒரு அலெஜான்ட்ரா ரூடா  (Alejandra Rueda)எம்மிடையே எழுந்துவரும் வரையூம் காத்திராமல் அரசியல்வாதிகளால் சின்னாபின்னப்பட்டிருக்கும் இன ஐக்கியத்தினை ஏன் அறிவுஜீவிகள் கைகளில் ஏந்தக்கூடாது? இவை அனைத்தையூம் கல்விச் சமூகத்தினதும் நூலகர்களினதும் சிந்தனைக்கு விட்டுவைக்கிறேன்.

இவரது எண்ணம் நிறைவேறுமா?

அரசியல்வாதிகளுக்கு தாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்ற ரீதியில் செயற்படும் அறிவுஜீவிகளையே இன்று நாங்கள் அதிகம் பார்க்ககூடியதாக உள்ளது..

வரலாற்றை மறந்தவர்களும், தோல்விகளிலிருந்து பாடம் படிக்காதவர்களும், இழந்தும் நடைமுறைக்கு சாத்தியமில்லாத கனவுகளை உடையவர்களையுமே இன்னமும் காண்கிறோம். 

அதுமட்டுமல்ல தமிழர் என்ற ஒரு குடைக்குள் வரவே தடுமாறும் நாங்கள் எப்படி ஐக்கியத்தை வரவழைக்க முடியும்? 

எனது அரசியல் அறிவு வரையறைக்குட்பட்டது ஆனாலும் இப்படி நடக்காதா என்ற ஆதங்கம் உண்டு..

Edited by பிரபா சிதம்பரநாதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.