Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மொழியிழந்த முகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                    மொழியிழந்த முகம்

                                              -சுப.சோமசுந்தரம்

                 களையிழந்த முகம் அல்லது ஒளியிழந்த முகம், புரிகிறது. அது என்ன மொழியிழந்த முகம்? முன்னது தானே சரியாகலாம் அல்லது எளிதில் சரி செய்யலாம். பின்னது கிட்டத்தட்ட உயிரிழந்த உடல் போல. இதயத் துடிப்பு நின்றபின் சிறிய கால அவகாசத்தில் உயிர்ப்பிப்பது போல் குறிப்பிட்ட காலத்திற்குள் சரி செய்ய முயலலாம் என்பது நம் எண்ணம். சரி, கதைக்கு வருவோம்.

                  நமது பரிதாபத்துக்குரிய கதாநாயகன் சுஷாந்த். அப்படித்தான் இவன் அப்பனும் ஆத்தாளும் பெயர் வைத்தார்கள். ஸ,ஷ,ஹ,ஜ இல்லாத பெயருக்குப் பரலோகத்தில் இடமில்லை என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர்கள். பெயர் முடிவில் sudden brake வேறு (ஆங்கிலத்திற்கு மன்னிக்கவும்). பெரிய மனது பண்ணி இவனை ‘ஷா’வோடு விட்டார்கள். பயலுக்குத் திரிசங்கு சொர்க்கம்தான். நம்மில் நிறைய பேருக்கு அப்படித்தான்.

                  பால காண்டம் ஆரம்பம். உரிய பருவத்திற்கு முன்பே பள்ளியில் சேர்த்தார்கள். இப்போது அதுதான் உரிய பருவமாம். இவன் பிறக்கும் முன்பே ஆண் குழந்தை பெயரிலொன்றும் பெண் குழந்தை பெயரிலொன்றுமாக அம்மேதகு பள்ளியில் இடம் பிடித்து வைத்திருந்தார்கள் போலும். நன்றாகத்தான் படித்தான். நல்ல பிள்ளைகள் அப்படித்தான் செய்வார்களாம். ஆகையால் பெற்றோர், ஆசிரியர் கொடுமையிலிருந்து இவனது இளமைப்பருவம் ஓரளவு தப்பியது. ஆங்கிலம், இந்தி மற்றும் ஏதோ செத்துப் போன மொழியைப் படித்தான்; இல்லை,அவ்வாறாக விதிக்கப்பட்டான். தாய்மொழியை விடுத்துப் பிற மொழிகள் கற்றதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. பயன்பாட்டில் இல்லாத மொழியைப் படிப்பதில் உள்ள (அ)நியாயமும் நமக்குப் புரியவில்லை. உயிரற்ற உடலாய் ஆக உயிரற்ற மொழிதான் பொருத்தமோ?

                    ஒரே பாட்டில் ஏழைக் கதாநாயகன் பணக்காரன் ஆவதைப் போல், ஒரே மூச்சில் நமது நாயகனின் பள்ளி, கல்லூரி வாழ்க்கையை முடித்து விடுவோமா? இன்றைக்கு உள்ள அலங்கோலத்தில், பாடல் பெற    பள்ளி வாழ்க்கையெல்லாம் காவியங்களா என்ன? கடிவாளம் போட்டு வளர்ந்த குதிரைக்கு, கிரேக்க புராணங்களில் உள்ளது போல் இறக்கை முளைத்தது; கற்பனைக் குதிரை தானே! நாயகன் பிறவிப்பயன் அடைய அமெரிக்கா சென்றான். அங்கு அலுவலகத்திலும், அதன் காரணமாக வாழிடத்திலும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழ்ச் சமூகத்தினருடன் வாழ, பழக நேர்ந்தது இவனது அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் எல்லாம். ஏனெனில் அவர்கள் மொழியைத் தொலைக்கவில்லை அல்லது அவர்களிலும் மொழியைத் தொலைத்தவர்களை இவன் சந்திக்கவில்லை. இவனைப் பொறுத்தமட்டில் தொன்மையான தமிழ் வெறும் பேச்சு மொழி மட்டுமே. மொழி வெறும் தகவல் பரிமாற்ற ஊடகமா என்ன? அதற்கு உயிர் உண்டு;உணர்வு உண்டு. இதனை வெளியுலகம் பார்த்தே தெரிந்து கொண்டான். மாற்றம் ஒன்றே மாறாதது என்று சிறு குழந்தையே சொல்கிறது. சக்கரம் சுழலத்தானே வேண்டும்? சுழன்று விட்டது. தாய்மொழி தெரியாது என்று தமிழன் மார்தட்டிய காலம் இருண்ட காலமானது. மனிதன் எத்துணைக் காலம் தான் உணர்வற்ற உயிராக அல்லது உயிரற்ற உடலாக இருப்பான்? தாய்த் தமிழகத்திலேயே இருந்த வரை உறைக்கவில்லை. வளர்ந்த நாடுகளுக்குச் செல்லும் போது, ‘உன் மொழி என்ன?’ என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. தமிழ் என்றதும், “அப்படியா! எங்கே, என் பெயரை உன் மொழியில் எழுதிக் காட்டு!” என்பது போன்ற ஆர்வக் கோளாறு நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. அந்த நேரத்தில் இவனது முழி இருக்கிறதே! ‘இந்த வெள்ளையரும் நம்மைக் கேவலமாய்ப் பார்க்கிறார்களோ!’ என்ற பிரமை வேறு ஏற்பட்டுத் தொலைக்கிறது. அவர்களில் சிலர் தமிழின் சிறப்புகளைத் தெரிந்து வைத்துக் கொண்டு பேசுகையில் தன் மானம் கண் காணாத் தேசத்திற்குக் கப்பலேறுவதைப் போன்ற உணர்வு. இவன் ஆங்கிலம், இந்தி, தேவ பாடை (பாடை கட்டி தேவலோகத்திற்கு எடுத்துச் சென்றதுதான் பெயர்க் காரணமோ!) என்று படித்துத் (படிப்பைத்) தொலைத்தவன். வெளி மாநிலத்தில் வாழ்ந்திருந்தால் பரவயில்லை; இவனோ தமிழ் நிலத்திலேயே வளர்ந்து தமிழைத் தொலைத்தானே! மாமரத்தில் கூடு கட்டி மாங்கனியைச் சுவைக்காத புள்ளினம் நம் நாயகன் சுஷாந்த்! இவனது தாய்மொழியின் அழகான ‘ழ’வை இவன் பார்த்ததில்லை. தன் மொ’ழி’யில் இவனுக்கு அ’ழ’த் தெரியும். விழத் தெரியும். எழத் தெரியாது; எழுத்தும் தெரியாது. இவனது இலங்கைத் தமிழ் நண்பர்கள் சிலருக்கு சங்க இலக்கியமும் சங்கம் மருவிய இலக்கியமும் பேசத் தெரியும். அதைக் கேட்டு இவனுக்கு ஏக்க பெருமூச்செறியத் தெரியும். இவையனைத்திலும் தன் தவறேதும் இல்லை என்பதால், தாய்-தந்தை உட்பட முந்தைய தலைமுறைச் சமூகத்தை மரியாதையாய் வசவு பாடச் சொல்கிறது இவன் மனம். நம் தலைமுறை தம் சந்ததியிடம் இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக வாங்கிக் கட்டுவதைப் பார்த்தால், என்னவொரு அளப்பரிய ஆனந்தம்!

                      ஒரு நாள் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை இவன் பார்க்க நேர்ந்தது. அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் மாணவப் பருவக் கவிஞர்களை வைத்து வெள்ளை மாளிகையில் அன்றைய அமெரிக்காவின் முதல் பெண்மணி மிச்சேல் ஒபாமாவின் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அன்று அந்நிகழ்ச்சியில் அமெரிக்கர்களைக் கவர்ந்த பதினேழு வயது மாணவி மாயா ஈஸ்வரன், தனது பாலக்காட்டு வேர்களை அமெரிக்காவில் தொலைத்த புலம் பெயர்ந்த தமிழச்சி. தன் கவிதையை உணர்வு பொங்க வாசித்தாள். அதில் தன் ஏக்கத்தை வெளிப்படுத்தினாள். அனைவரையும் கவர்ந்த வரிகள், “எனது அடையாளம் உதிர ஆரம்பித்தது - முடி உதிர்வதைப் போல. கூந்தலை முழுவதும் இழந்து போகும் பீதி என் மனதில்.” கவிதையைக் கேட்டு மிச்சேல் ஒபாமாவே உணர்ச்சி வசப்பட்டார். தாமும் அந்த ரகம் தான் என நினைத்திருப்பாரோ? கவிதையைக் கேட்ட சுஷாந்த் வாயடைத்துப் போனான். இவன் விழியின் ஓரம் நீர்த்துளி பேசியது. அக்கண்ணீர்த் துளிக்கான காரணம் அக்கவிதையா? கவிதை சொன்ன அப்பெண்ணா? மிச்சேல் ஒபாமாவா? இவனது பெற்றோரா? பெற்றோரின் மனவோட்டத்தை இயக்கும் சமூகமா?

                        இவன் நிலையில் எல்லோரும் ஏங்குவதில்லை. மாயாவைப் போல் இவன் ஏங்கினான். நம் தலைவனாயிற்றே! இவனது ஏக்கத்தைப் புரிந்த தமிழ் நண்பனொருவன் சொன்னான், “நண்பா! At any point in life, it’s never too late. வார விடுமுறையில் ஒரு மணிநேரம் சொல்லித் தருகிறேன். இவ்வளவு ஆர்வமும் ஏக்கமும் உள்ள உன்னைத் தமிழும் தேடுகிறது என நினைக்கிறேன்.” முதல் வகுப்பில் நம் தலைவன் ஒரு தட்டில் அரிசி பரப்பி (அவன் பாட்டி சொல்லித் தந்த சடங்கியல்) எழுதினான் ‘அ’. உடனே அம்மா,அப்பா.......என்றெல்லாம் எழுதி, “அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி!.......” என்று பாடவில்லை. ‘அ’ வுக்குப் பின் ‘ஆ’ தான் எழுதினான். இப்போது ‘சுபம்’ என்று நிறைவுத் திரை போட்டால் சரியாக இருக்கும்.                            

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.