Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவாஜிலிங்கமும் பேரவையும் மாணவர் ஒன்றியமும் ஒரே தரப்பினரே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கமும் பேரவையும் மாணவர் ஒன்றியமும் ஒரே தரப்பினரே

புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஒக்டோபர் 09 புதன்கிழமை, பி.ப. 01:44

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார். ஏற்கெனவே அவர், 2010 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு 9,662 வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் சார்பில், பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை கருத்திலெடுக்கப்படாத நிலையில், தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்ததாக சிவாஜிலிங்கம் கூறுகிறார். அவருக்கு ஆதரவாக, வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் செயற்படுகிறார்.   

தமிழ்த் தேசிய அரசியலில் சிவாஜிலிங்கமோ, அனந்தி சசிதரனோ தங்களது கட்சிகளுக்கோ, தலைமைகளுக்கோ கட்டுப்பட்டு நடந்தது கிடையாது. முரண்பாடுகள்,  தனித்தீர்மானங்களுக்காக அவர்கள் இருவரும் பெயர் பெற்றவர்கள். ஜனநாயக அரசியலில் இதனைப் பெரும் தவறாக எண்ணிவிட முடியாது. ஆனால், ஒரு சமூகத்தின் அரசியல் இயங்குநிலை என்பது, தனித்தீர்மானங்கள், (எதற்கெடுத்தாலும்) அவசரப்படும் நிலை, அடம்பிடிக்கும் மனநிலை உள்ளிட்டவைகளால் வெற்றியை அடைவதில்லை. மாறாக, பொறுமையும் சமயோசிதமும் சந்தர்ப்பங்களைக் கணித்துச் செயலாற்றும் திறனும் முதன்மைபெறும் போது வெற்றி சாத்தியமாகின்றது.   

ஆனால், சிவாஜிலிங்கமோ, அனந்தியோ தாங்கள் நினைப்பது, அன்றே நடந்துவிட வேண்டும் என்கிற மனநிலையோடு அரசியலில் இயங்கிக் கொண்டிருப்பவர்கள். பல நேரங்களில் முன்பள்ளியில் அடம்பிடிக்கும் பிள்ளைகளின் மனநிலையைப் பிரதிபலிப்பவர்கள். 
இவ்வாறான நடவடிக்கைகளால், தனிப்பட்ட ரீதியில் இவர்கள் இருவருக்கும் ஏதாவது இலாபம் கிடைக்கிறதோ தெரியாது. ஆனால், கடந்த காலத்தில் இவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு எந்த இலாபமும் இல்லை. இவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து, ஆத்திரப்பட்டு இரத்த அழுத்தம் வேண்டுமானால் அதிகரிக்கலாம்.  

சிவாஜிலிங்கம், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை முன்வைத்து, தமிழ்த் தேசியக் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் மாணவர் ஒன்றியங்களும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. 

சிவாஜிலிங்கத்தோடும் அனந்தியோடும் எதிர்காலத்தில் எந்தவிதமான அரசியல் தொடர்புகளையும் பேணுவதில்லை என்றும் கூறுகின்றன. கிட்டத்தட்ட தங்களது முயற்சிகளைக் குழப்பிவிட்டதாக இந்தத் தரப்புகள் குமுறுகின்றன. ஆனால், உண்மையிலேயே, இந்தத் தரப்புகள் சிவாஜிலிங்கம், அனந்தி குறித்துக் குமுறல்களை வெளியிடுவதற்கான தார்மீகத்தைக் கொண்டிருக்கின்றனவா என்கிற கேள்வி எழுகின்றது.   

ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்த் தேசியக் கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது எனும் நிலைப்பாட்டைத் தூக்கிக் கொண்டு, தமிழ் மக்கள் பேரவை பத்து நாள்களுக்கு முன்னர் வெளியே வந்தது. பேரவைக்குள் இருக்கின்ற கருத்துருவாக்கிகளான அரசியல் கட்டுரையாளர்களும் யாழ். பல்கலைக்கழகத்தின் சில விரிவுரையாளர்களும் மதத் தலைவர்கள் சிலரை இணைத்துக் கொண்டு, இரா.சம்பந்தன், கஜேந்திரகுமார், சுரேஷ், சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்களைத் தனித்தனியே சந்தித்துப் பேசினர். 

சம்பந்தனுடனான சந்திப்பில், பொது வேட்பாளராக சம்பந்தனே போட்டியிட வேண்டும் என்றும் கோரினர். ஆனாலும், அதனைத் திட்டவட்டமாக மறுத்துவிட்ட சம்பந்தன், ஏனைய விடயங்கள் குறித்து, வழக்கமான தன்னுடைய பாணியில் தலையை ஆட்டி, “யோசித்து முடிவெடுப்போம்; கோரிக்கைகளைப் பரிசீலிக்கிறோம்” என்கிற தொனிப்பட பதில் சொல்லி அனுப்பியிருக்கிறார்.   

வடக்கு, கிழக்கு பூராவும் தேர்தல் புறக்கணிப்புக் கோசத்தை முன்வைத்து, கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும், கஜேந்திரகுமாரும் பொது வேட்பாளர் கோரிக்கையை நிராகரித்துவிட்டார். அவர், தேர்தல் புறக்கணிப்புக் கோசத்திலிருந்து இன்றும் இறங்கிவரவில்லை. யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வருகின்ற யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பேரவை மற்றும் அரசியல் கட்சிகளுடனான சந்திப்பில், தமிழ்த் தேசிய முன்னணியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தாலும், மறுபுறத்தில் தேர்தல் புறக்கணிப்புக் கோசத்தை முன்வைக்கும் கூட்டங்களையும் முன்னணி நடத்திக் கொண்டிருக்கின்றது.   

விக்னேஸ்வரனோ, சுரேஷ் பிரேமசந்திரனோ தனித்த முடிவுகள் எதையும் எடுப்பது மாதிரித் தெரியவில்லை. பேரவையும் மாணவர் ஒன்றியமும் இறுதியில் விடுக்கப்போகும் அறிவிப்புக்கு ஏற்ப, தலையை ஆட்டி வைக்கலாம் என்கிற தோரணையில் அவர்கள் இருவரும் இருக்கிறார்கள். 

இடையில், கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றால், பூகோள அரசியலில் தமிழ் மக்கள் வெற்றிபெறும் சாத்தியமுண்டு என்று, தன்னுடைய கேள்வி - பதில் அறிக்கையொன்றை விக்னேஸ்வரன் வெளியிட்டிருந்தார்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை, மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சிவஞானம் சிறீதரன் உள்ளிட்டவர்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (மற்றும் பேரவை) கூட்டியுள்ள கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தாலும், அவர்கள் இறுதி முடிவுகளை எடுப்பவர்கள் அல்ல. கடந்த காலத்திலும், மாணவர் ஒன்றியத்தினருடனான சந்திப்புகளில் அவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். பேச்சுகளில் மாணவர் பிரதிநிதிகளின் கோரிக்கைகளுக்குத் தலையையும் ஆட்டிவிட்டு வந்திருக்கிறார்கள். ஆனால், இறுதி முடிவுகள் எப்போதுமே சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் எடுப்பதாகவே இருந்திருக்கின்றது. 

தமிழ்த் தேசிய அரசியலில் நம்பிக்கையான சிவில் அமைப்பொன்றின் தேவைக்கான வெளியைச் சிதைத்து, அழித்த பெருமை தமிழ் மக்கள் பேரவைக்கு உண்டு. கடந்த நான்கு ஆண்டுகளில் பேரவையின் நடவடிக்கைகளே அதற்குச் சான்று. தோல்வியின் முனையில் தள்ளாடிக்கொண்டிருக்கின்ற தமிழ்த் தேசிய அரசியலை, வெற்றிகரமான பக்கத்துக்கு நகர்த்துவதற்கு நம்பிக்கையான அரசியல் கட்சிகள், தலைமைகள் மாத்திரமல்ல, புத்திஜீவிகளையும் கருத்துருவாக்கிகளையும் செயற்பாட்டாளர்களையும் ஒரு புள்ளியில் இணைக்கும் சிவில் அமைப்பின் தேவையும் உண்டு. அது, மக்களிடம் நம்பிக்கையைப் பெறுவது மாத்திரமின்றி, அரசியல் கட்சிகளையும், தலைமைகளையும் சரியான பக்கத்துக்குக் கொண்டு சேர்ப்பதற்கான ஆக்கபூர்வமான சிந்தனைகளையும் அழுத்தங்களையும் வழங்கும் வலுவைக் கொண்டிருக்க வேண்டும்.  குறிப்பாக, கடந்த ஆண்டு முதலே, 2019, 2020ஆம் ஆண்டுகள் தேர்தல் ஆண்டுகளாக இருக்கப் போகின்றன என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியான சூழலில், ஒவ்வொரு தேர்தலையும் எவ்வாறு தமிழ் மக்கள் எதிர்கொள்ள வேண்டும் என்கிற விடயங்களை முன்வைத்து, செயற்பட்டிருக்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியைக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்கள், தமது வாக்குகளைக் கொண்டு பேரம் பேசும் நிலையை எவ்வாறு உயர்த்திக் கொள்ளப் போகிறார்கள் என்று சிந்தித்துச் செயலாற்றியிருக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை பேரவையோ, மாணவர் ஒன்றியமோ கடந்த பத்து நாள்களுக்கு முதல் வரையில் செய்திருக்கவில்லை. தேர்தலுக்கான வேட்புமனு கோரும் திகதி நெருங்கும் போதுதான், அவர்களுக்கு திடீரென ‘ஞானஒளி’ தோன்றி, பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்கிற சிந்தனை எழும்; அதனைத் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு தலைவராக பேசச் செல்வார்கள். இந்த நிலைக்கும், சிவாஜிலிங்கம், அனந்தியின் அரசியல் நடவடிக்கைகளுக்கும் இடையில் பெரிய வித்தியாசங்கள் ஏதும் இல்லை. அவர்களைக் குறைகூறும் தகுதியோடும் பேரவைக்காரர்களோ, மாணவர் ஒன்றியமோ இல்லை.   

பேரவையும் மாணவர் ஒன்றியத்தினரும் முதலில் திறந்த மனதோடு உரையாடலுக்குத் தயாராக வேண்டும். தங்களிடம் உள்ள குறைகள் குறித்துப் பேச வேண்டும். சிவில் அமைப்புகள் மீதான நம்பிக்கையைப் பேரவை என்ற பெயரில் சிதைத்த தரப்பினர், அதனை இனியாவது சீர்செய்ய வேண்டும். அது, எதிர்காலத்திலாவது நம்பிக்கையான சிவில் அமைப்பொன்றை உருவாக்குவதற்கு வழிவகுக்க வேண்டும். யாழ். மாணவர் ஒன்றியத்தைப் பொறுத்தவரை, கடந்த சில ஆண்டுகளாக அவர்களின் நடவடிக்கை என்பது மாணவர்களின் உண்மையான சக்தி, அதன் தாற்பரியங்கள் குறித்து அறிந்ததாக இல்லை. மாறாக, ஒவ்வொரு விடயங்களுக்கும் பிரதிபலிப்பதாகவே இருக்கின்றது. இவ்வாறான நிலை தொடர்ந்தால், மாணவர் ஒன்றியத்தின் மீதான மதிப்பு இன்னும் இன்னும் அடிபடும்.  

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சிவாஜிலிங்கமும், அவருக்கு ஆதரவு வழங்கும் அனந்தியும் ‘பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக ஊடகங்களில் நகைச்சுவைக்கான ‘மீம்ஸ்’ போன்று பார்க்கப்படுகிறார்கள். கிட்டத்தட்ட அதே நிலையிலேயே, பேரவையின் நடவடிக்கைகளும் மாணவர் ஒன்றியத்தினரின் நடவடிக்கைகளும் இருக்கின்றன. இந்த நிலையை மாற்றிக் கொள்ளாத வரையில், மக்களிடம் எந்த நம்பிக்கையையும் ஏற்படுத்த முடியாது; அவர்களின் தீர்மானங்களில் தாக்கமும் செலுத்த முடியாது. இருப்பதில் யார், ஆபத்துக் குறைந்த வேட்பாளர் என்பதை நோக்கியே மக்கள் வாக்களிக்கப்பார்கள். வேண்டுமானால், அதனைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்.   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சிவாஜிலிங்கமும்-பேரவையும்-மாணவர்-ஒன்றியமும்-ஒரே-தரப்பினரே/91-239725

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.