Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் கோரிக்கைகளால் பயனடையும் பேரினவாத சக்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் கோரிக்கைகளால் பயனடையும் பேரினவாத சக்திகள்

ஒவ்வொரு தேசிய மட்டத் தேர்தல்களின் போதும், மாகாணம், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போதும் தமிழ் அரசியல் கட்சிகள், மரபு ரீதியான சில கோரிக்கைகளைப் பிரதான தேசிய அரசியல் கட்சிகளிடம் முன்வைக்கின்றன. அல்லது, அவற்றை அடிப்படையாகக் கொண்டு தமது தேர்தல் விஞ்ஞாபனங்களைத் தயாரிக்கின்றன.   

இம்முறையும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, வடக்கு மாகாணசபையின் முன்ளாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய ஐந்து கட்சிகளும் 13 கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளன.  

image_7c53b43107.jpg

தமிழ்க் கட்சிகள், இது போன்ற கோரிக்கைகளைத் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிடும் போதெல்லாம், அந்தக் கோரிக்கைகளை, தேர்தல் விஞ்ஞாபனங்களைக் காட்டி, தென் பகுதிகளில் இனவாத சக்திகள் அரசியல் இலாபம் அடைய முயற்சிக்கின்றன.   

தமிழர்கள் வழமையாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை அல்லது அதன் தலைமையிலான கூட்டணிகளை விட, ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பதால், அந்த இனவாதிகள் அதன் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராகப் பிரசாரப் போரை ஆரம்பிக்கின்றன. 

ஆனால், தென் பகுதி மக்கள் வாக்களிப்பின் போது, அநேகமாக அந்தப் பிரசாரப் போரையோ, தமிழ்க் கட்சிகள் முன்வைக்கும் கோரிக்கைகளையோ, தேர்தல் விஞ்ஞாபனங்களையோ அவ்வளவாகக் கணக்கில் எடுப்பதில்லை.   

தென்பகுதி மக்கள் ஒரு புறமிருக்க, தமிழ்த் தலைவர்களும் தேர்தலின் போது இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துவிட்டு, அவற்றை ஏற்காத தென் பகுதிக் கட்சிகளை ஆதரிக்கிறார்கள்; இது ஒரு வரலாற்று உண்மை.  

ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் அரசியல் கட்சிகள், மீண்டும் மீண்டும் முன்வைக்கும் கோரிக்கைகளும் தேர்தல் விஞ்ஞாபனங்களும் ஒரே மாதிரியாக அமைவதையிட்டு, அந்தக் கட்சிகளைக் குறை கூறவும் முடியாது. தீர்க்கப்படாதிருக்கும் அடிப்படைக் கோரிக்கைகள் எனத் தமிழ்த் தலைவர்கள் கருதும் சில விடயங்களை, அவர்கள் ஒவ்வொரு தேர்தலின் போதும் மீண்டும் மீண்டும் முன்வைக்கிறார்கள். அதனாலேயே, அவை ஒரே மாதிரியாக அமைகின்றன.  

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்தல், அம் மாகாணங்களைத் தமிழர்களின் வரலாற்று ரீதியான தாயகமாக ஏற்றல், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றல், இனப் பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றை வழங்கல் ஆகியன 1985 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜே. ஆர். ஜெயவர்தன அரசாங்கத்துக்கும் தமிழ் ஆயுதக் குழுக்கள், அரசில் கட்சிகளுக்கும் இடையே, பூட்டான் தலைநகர் திம்புவில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகள் முதல், இன்று வரை ஒவ்வொரு தேர்தலின் போதும் முன்வைக்கப்படுகின்றன.  

2001 ஆம் ஆண்டே புலிகளின் ஆலோசனைப் படி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதான கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஏனைய சில கட்சிகளுடன் இணைந்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியது.   

அன்று முதல், கூட்டமைப்பு எதிர்கொண்ட சகல தேர்தல்களின் போதும் இந்த வரலாற்றுத் தாயகம், வடக்கு, கிழக்கு இணைப்பு, தமிழர்களைத் தேசிய இனமாக ஏற்றல், சுயநிர்ணய உரிமை, சமஷ்டித் தீர்வு என்ற கோரிக்கைகள் அவற்றில் உள்ளடங்கி இருப்பதை அவதானிக்க முடிகிறது.  

2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல், 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல், 2013 ஆம் ஆண்டு வட மாகாண சபைத் தேர்தல், 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் ஆகியவற்றின் போது, கூட்டமைப்பு முன் வைத்த தேர்தல் விஞ்ஞாபனங்கள், கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கும் அறிக்கைகளைத் துருவிப் பார்த்தால் இது புலனாகிறது.  

அவற்றின் உள்ளடக்கம் ஏறத்தாழ ஒரே வரிசைக் கிரமப்படி எழுதப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர், பெரும்பான்மையின ஆட்சியாளர்களால் தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட வரலாறு, முதலில் விவரிக்கப்பட்டு, பின்னர் இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன.   

புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் ஆலோசனைப் படியே, கூட்டமைப்பின் 2004 ஆம் ஆண்டுத் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டது.   

இந்தக் கோரிக்கைகளுக்கு, சோவியத் ஒன்றியத்தின் ஜனாதிபதியாக இருந்த ஜோசப் ஸ்டாலின், 1924 ஆம் ஆண்டு தேசிய இன விடுதலை தொடர்பாக முன்வைத்த சித்தாந்தமே அடிப்படையாக அமைந்துள்ளது.  

 ‘பொதுவான மொழி, கலாசாரம், நிலம், பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் தேசிய இனங்கள் தோன்றுகின்றன, அவ்வினங்கள் சுய நிர்ணய உரிமை எனப்படும் பிரிந்து செல்லும் உரிமையைப் பிறப்புரிமையாகக் கொண்டுள்ளன’ என்ற இந்தச் சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே, தமிழ் ஆயுதக்குழுக்கள், கட்சிகள் 1985 ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தையின் போது, தமது கோரிக்கைகளைத் தயாரித்து முன்வைத்தன; அது இன்று வரை தொடர்கிறது.   

அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையிலான போர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி முடிவடைந்தது. அதன் பின்னரான தேர்தல்களின் போது, அவற்றோடு வேறு சில கோரிக்கைகளும் சேர்ந்துள்ளன. போரின் போது இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மனித உரிமை மீறல்களைப் பற்றி சர்வதேச பொறிமுறையொன்றின் மூலம் விசாரணை மேற்கொள்ளல், போரின் போது காணாமல் போனோருக்கு நீதி வழங்குதல், போர்க் காலத்தில் படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் ஆகியன அந்தக் கோரிக்கைகளாகும்.  

வடக்கில் மிகப் பெரிய கட்சியான தமிழரசுக் கட்சி, ஒருபோதும் நாட்டில் ஆளும் கட்சியாகப் போவதில்லை. எனவே, தேசிய மட்டத் தேர்தல்களின் போது பேரம் பேசுவது மட்டுமே தமிழ்க் கட்சிகளால் செய்ய முடியும். அந்தப் பேரம் பேசுதலின் போது தமிழரசுக் கட்சி அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தக் கோரிக்கைகளையே முன்வைக்கின்றன.   

ஆனால், எந்தவொரு தேசியக் கட்சியும் திம்புப் பேச்சுவர்த்தை காலத்தில் இருந்து வரும் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதில்லை. சிலவேளை, சில சிறிய இடதுசாரி கட்சிகள் அவற்றை ஏற்றுக் கொள்ளலாம். பிரதான கட்சிகளால் அவற்றை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. ஏற்றுக் கொண்டால், போட்டிக் கட்சிகளிடமிருந்து துரோகிப் பட்டம் கிடைக்கும். இது தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் தெரியும்.   

அதேபோல் தமிழ் கட்சிகளுக்கும், குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இந்தக் கோரிக்கைகளைக் கைவிடவும் முடியாது; கைவிட்டால் போட்டிக் கட்சிகளும் புலம் பெயர் தமிழ் அமைப்புகளும் துரோகி பட்டத்தைச் சூட்டும்.   

இந்த நிலையில், கூட்டமைப்பு சிலவேளைகளில் இந்தக் கோரிக்கைகளைச் சம்பிரதாயத்துக்கு முன்வைத்துவிட்டு, அவற்றைப் பற்றிய எவ்வித உடன்படிக்கையும் இல்லாமல், தென் பகுதியில் பிரதான கட்சியொன்றை, குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்கிறது. 2010, 2015 ஆம் ஆண்டு தேர்தல்களின் போது, அதுவே நடைபெற்றது. இம் முறையும் அநேகமாக அதுவே நடைபெறும். இனிமேலும் அதுவே நடைபெறப் போகிறது.  

ஆனால், தமிழ்க் கட்சிகள் இந்தக் கோரிக்கைகளை முன்வைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தெற்கே இயங்கும் இனவாதக் கட்சிகளும் அமைப்புகளும் ஏதோ புதிய விடயத்தைக் கண்டுபிடித்ததைப் போல், அவற்றைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, ஐ.தே.கவைத் தாக்கி வருகின்றன. இப்போதும் அது தான் தெற்கில் நடைபெறுகிறது.  

நிறைவேற்றிக் கொள்ள எவ்வித திட்டமுமின்றி, வெறும் சம்பிரதாயத்துக்கு இந்தக் கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலம், வடக்கே தமிழ் மக்களின் இன உணர்வுகளைத் தூண்டி அரசியல் இலாபமடையத் தமிழ்த் தலைவர்கள் முயற்சிக்கின்றனர்.   

அதேபோல், அதே கோரிக்கைகளைப் பூதாகரமாகச் சிங்கள மக்களுக்கு எடுத்துரைத்து, அரசியல் இலாபம் அடையத் தெற்கே பேரினவாத அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் முயற்சிக்கின்றன. இம்முறை ஐந்து தமிழ்க் கட்சிகள் இணக்கம் கண்ட கோரிக்கைகளை, பேரினவாத சக்திகளே முழுப் பக்க விளம்பரமாகச் சிங்களப் பத்திரிகைகளில் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.  

ஆயினும், போருக்குப் பின்னரான பொறுப்புக் கூறல், காணி, காணாமலாக்கப்பட்டோர், மீள்குடியேற்றம் போன்ற கோரிக்கைகளை ஓரளவுக்காவது நிறைவேற்றிக் கொள்ள முடியும். குறிப்பாக, காணிப் பிரச்சினைகளில் தமிழ் மக்கள் இதுவரை பெற்ற வெற்றியானது, அம் மக்கள் நடத்திய போராட்டங்களின் பெறுபேறுகளேயன்றி, அரசாங்கங்களின் பெருந்தன்மைகளால் அடைந்தவையல்ல; இவை சிந்திக்கப்பட வேண்டிய விடயங்களாகும்.

போரை வென்றது கோட்டாவா, பொன்சேகாவா?

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் என்ற வகையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ எதிர் கொண்ட முதலாவது ஊடகவியலாளர் மாநாடே, அவரது ‘இமேஜை’ வெகுவாகப் பாதித்துள்ளது.   

image_aef7507599.jpg

குறிப்பாக, அரச படையினரிடம் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று இந்தியாவில் வெளியிடப்படும் ‘இந்து’ பத்திரிகையின் நிருபர் எழுப்பிய கேள்விக்கு, அவர் அளித்த பதில் தெற்கிலும் வடக்கிலும் பலர் அவர் தொடர்பில் பல கேள்விகளை எழுப்பக் காரணமாக அமைந்தது.   

அந்தக் கேள்விக்கு பதிலளிக்கையில், தாமோ தமது சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவோ போரின் போது படையினரை வழிநடத்தவில்லை என்றும் இராணுவத் தளபதியே (பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா) இராணுவத்தினரை வழிநடத்தினார் என்றும் அவர் கூறினார். படையினரிடம் சரணடைந்த எவரும் காணாமற் போகவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.   

போரின் போது சரணடைந்த எவரும் காணாமற்போகவில்லை என்ற கோட்டாவின் கூற்றைப் பற்றி பொதுஜன பெரமுனவை ஆதரிக்கும் முன்னாள் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் அ. வரதராஜப் பெருமாள், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா போன்றோர் எதுவுமே கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   

இந்தக் கூற்று, தென் பகுதியில் பிறிதொரு விவாதத்தைத் தோற்றுவித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளாக மஹிந்த ராஜபக்‌ஷ, கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோரே போர் வெற்றிக்கு உரிமை கோரினர்.   

ஆனால், இப்போது தாமோ தமது சகோதரரோ படையினரை வழி நடத்தவில்லை என்று கோட்டாவே கூறுவதாக இருந்தால், இனிமேலும் அவ்விருவரும் போர் வெற்றிக்கு உரிமை கோர முடியுமா என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது நியாயமான கேள்வியே.  

இதற்குப் பதிலளிக்கும் பொதுஜன பெரமுனவின் சிலர், படைத் தளபதிகள் படையினரை வழிநடத்தினார்கள்; ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளரும் படைத் தளபதிகளை வழிநடத்தினார்கள் என்று கூறுகின்றனர்.   

அவ்வாறாயின், முன்னாள் ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளரும் போர் வெற்றிக்கு மட்டுமன்றி, போரின் போது இடம்பெற்ற குற்றங்களுக்கும் பொறுப்பாளர்களாகி விடுகின்றனர் என்ற உண்மையை, அவர்கள் விளங்கிக் கொள்ளவில்லைப் போலும்; அவர்கள் விளங்கிக் கொண்டாலும் அதனை மறைக்க முற்படுகின்றனர்.  

கோட்டாவின் கூற்றுக்குப் பதிலளித்து, ஊடகவியலாளர் மாநாடொன்றில் உரையாற்றிய இறுதிப் போர் காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, “போருக்குச் செல்வதா, போரை இடைநிறுத்துவதா, போரை முற்றாக நிறுத்தவதா என்ற விடயங்களை நாட்டுத் தலைவர்கள் தீர்மானித்தாலும், போர்த் தந்திரங்கள், படைபலம், ஆயுதபலம், எங்கே தாக்குவது ஆகியவற்றைத் தீர்மானித்துப் படைகளை வழிநடத்துவது தளபதிகளின் கடமையாகும்” எனத் தெரிவித்தார்.  

அதேவேளை, இறுதிப் போரை, மாவிலாறு பகுதியில் ஆரம்பிக்கும் முடிவைத் தாமே எடுத்ததாகவும் அவர் கூறினார். இதனை மஹிந்தவோ கோட்டாபயவோ இதுவரை மறுக்கவில்லை.  

போர் முடிவடைந்தவுடன், போருக்கு அரசியல் தலைமை வழங்கியமைக்காக பொன்சேகா மஹிந்தவையும், போரை வெற்றிகரமாக நடத்தியதற்காக கோட்டா பொன்சேகாவையும் பாராட்டியமை இங்கு நினைவூட்டுவது பொருத்தமாகும்.   

வெளிநாட்டு நெருக்குவாரங்களைப் புறக்கணித்துப் போருக்கான சூழலை மஹிந்த அமைத்துத் தந்தார் என, பொன்சேகா கூறினார். பொன்சேகாவை உலகிலேயே மிகச் சிறந்த இராணுவத் தளபதியாக இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் வர்ணித்ததாகவும் பொன்சேகாவின் போர்த் தந்திரங்களால் பிரபாகரன் திக்குமுக்காடினார் என்றும் கோட்டா கூறினார்.   

போர் முடிந்து, ஒரு வருடத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்க் கட்சிகள் அதே பொன்சேகாவை ஆதரித்தனர். இப்போது, மஹிந்த தரப்பினரும் பொன்சேகாவும் போர் வெற்றிக்கு உரிமை கோரிச் சண்டை பிடிக்கிறார்கள். இவையும் சிந்திக்க வேண்டிய விடயங்கள்தான்
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழர்களின்-கோரிக்கைகளால்-பயனடையும்-பேரினவாத-சக்திகள்/91-240364

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.