Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எந்த வேட்பாளரையும் ஆதரிக்கும்படி கோர முடியாது: நிலைப்பாட்டை அறிவித்தது ஈ.பி.ஆர்.எல்.எவ்!

Featured Replies

தமது எதிர்காலம் தமது பாதுகாப்பு, தமது சுயமரியாதை, தமது இருப்பு இவற்றை முன்னிறுத்தி தமிழ் மக்கள் வைத்த கோரிக்கைகள் தொடர்பாக பேசவோ, அல்லது ஒரு உடன்பாட்டிற்கு வரவோ மறுக்கின்ற கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு எமது மக்களைக் கோருவதற்கு எமக்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது என ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்).

அந்த கட்சியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் இன்று (5) விடுத்த அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

பிரித்தானிய காலனியாதிக்கத்தின் இறுதிப்பகுதியிலிருந்தே சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனை மேலோங்கியதன் காரணமாக இந்நாட்டின் சமபங்காளிகளான தமிழ்த் தேசிய இனத்தின்மீதான அடக்குமுறைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரித்தானியர்களிடமிருந்து சூழ்ச்சிகரமான முறையில் தமிழ் மக்களின் இறைமையைப் பறித்துக்கொண்ட சிங்கள பௌத்த தேசியம் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய இனத்தை இரண்டாந்தரக் குடிமக்களாகவும் தனது மேலாதிக்க சிந்தனைக்கு அடிபணியும் சக்தியாகவும் மாற்ற முற்பட்டது.

தமிழ்த் தேசிய இனத்தை அழித்தொழிப்பது மற்றும் அதனை தன்னுடன் இரண்டறக் கலக்கச் செய்வது என்னும் கோட்பாட்டை சிங்கள தேசியம் வெகு கச்சிதமான முறையில் நன்கு திட்டமிட்ட முறையில் கட்டமைக்கப்பட்ட வடிவத்தில் மேற்கொண்டு வருகின்றது. தமிழ்த் தேசிய இனம் தனது அடையாளத்தையும், உரிமைகளையும் சுயமரியாதையையும் காப்பாற்றிக்கொள்வதற்காகவே சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்திற்கு எதிராக பலவழிகளிலும் போராடி வருகின்றது. இந்த யதார்த்தம் இன்று சர்வதேச சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதுவரை காலமும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதாக வாக்குறுதி அளித்து ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் தென்னிலங்கை ஆளும் வர்க்கங்களைச் சேர்ந்த இரண்டு பிராதன அரசியல் கட்சிகளும் போட்டியிட்டன. ஆனால் தேர்தலில் வெற்றிபெற்ற கையுடன் தமது வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு மீண்டும் மீண்டும் தமிழ்த் தேசிய இனம் ஏமாற்றப்பட்டதே இந்நாட்டின் வரலாறு.

சட்டவாக்கல் சபையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும் என்று ஆரம்பித்த தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக்கான போராட்டம் சிங்கள மேலாதிக்கவாதிகளால் மூர்க்கத்தனமாக அடக்கப்பட்டதன் காரணமாக, சமஷ்டி கோரிக்கையை முன்வைத்தும் பின்னர் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தும் சாத்வீகமுறையில் முன்னெடுக்கப்பட்டது. இவை அனைத்தும் ஆளும் வர்க்கத்தின் அராஜக நடவடிக்கையின் மூலமாக ஆயுத முனையில் அடக்கியொடுக்கப்பட்டதன் விளைவாக தனது இருப்பைக் காப்பதற்கும் சுயமரியாதையை நிலைநிறுத்திக் கொள்வதற்கும் தனது இனத்தினை அழிவிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கும் தமிழ்த் தேசிய இனமும் இலங்கை அரசுக்கெதிராக ஆயுதம் ஏந்திப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் விடுதலைக்கான போராட்டமானது, சிறிலங்கா அரசினால், சர்வதேச சக்திகளை பிழையாக வழிநடத்தி பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் 2009ஆம் ஆண்டு மௌனிக்கச் செய்யப்பட்டது.

தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதிலிருந்து தற்பொழுது நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல்வரை தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்கீழ் ஐக்கியப்பட்டு தமது உள்ளக்கிடக்கையை ஜனநாயக வழியில் வலியுறுத்தி வந்தனர். ஆனால் இந்த ஐக்கியத்தை இலங்கை தமிழரசுக் கட்சி தனது வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக்கொண்டு அர்ப்ப சொற்ப சலுகைகளுக்காகவும் தமக்கு விசுவாசமானவர்கள் தொடர்ந்தும் பதவியில் இருப்பதற்காகவும் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் தென்னிலங்கை அரசியல்வாதிகளின் காலடியில் மண்டியிட வைத்துள்ளது.

தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக்கான போராட்டம் நியாயமானது என்பதை சர்வதேச சமூகமும், ஐ.நா மனித உரிமை ஆணையகமும் ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்க இருந்த நேரத்தில் அதனை எமது மக்களுக்குச் சாதகமாக மாற்றுவதை விடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில் இலங்கை தமிழரசுக் கட்சி தனது சுயநலனுக்காக இலங்கை அரசாங்கத்தை சர்வதேச சமுதாயத்தின் பிடியிலிருந்து பிணையெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு தமக்கான நலன்களை அதற்குப் பிரதியுபகாரமாகப் பெற்றுக்கொண்டது.

தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினூடாக ஒரு தீர்வினைக் காண்பதற்கு முயற்சித்தபோதும்கூட, அது முழுமையான தீர்வாக அமையவில்லை என்ற காரணத்தால் அதனை முழுமைபெறச் செய்வதற்காக அன்றைய ஜனாதிபதி ஆர்.பிரேமதாச அவர்கள் மங்களமுனசிங்க என்னும் பாராளுமன்ற உறுப்பினரின் தலைமையில் தெரிவுக்குழு ஒன்றை நியமித்தார்.

பின்னர் வந்த சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க அம்மையார் அவர்களும் 2000 ஆம் ஆண்டளவில் ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைத்தபோதும் பாராளுமன்றத்தில் அது அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியினால் முறியடிக்கப்பட்டது.

யுத்தம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர், 13வது திருத்தத்திற்கு மேலே சென்று, தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதாக இந்திய அரசுக்கும் ஐ.நா செயலாளர் நாயகத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் அன்றைய ஜனாதிபதி மகிந்தராஜபக்ச பல உறுதிமொழிகளை வழங்கியிருந்தார். இதன்பிரகாரம் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் ஒரு சர்வகட்சிக்குழு நியமிக்கப்பட்டது. அதுமாத்திரமல்லாமல் அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பதினெட்டு சுற்றுக்கள் பேச்சுவார்த்தைகள் நடாத்தி அதுவும் எத்தகைய முன்னேற்றமும் இன்றி முடிவடைந்தது.

தற்போதைய மைத்திரி-ரணில் ஆட்சியில் புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்குவதாகக் கூறி, 83 தடவைகளுக்கும் மேல் இவர்கள் பேசியும்கூட ஏறத்தாழ ஐந்து வருடத்தில் புதிய அரசியல் சாசனத்தைக் கொண்டுவரமுடியவில்லை. இந்த முயற்சிகள் யாவுமே இந்த நாட்டில் தமிழ்த் தேசிய இனப் பிரச்சினை ஒன்று இருக்கின்றதென்பதும் அதற்கு நியாயமான தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்ற அடிப்படையிலுமே இந்தத் தீர்வுத்திட்டங்களும் பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டன.

ஆனால் இன்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களும் அவர்களது கட்சிகளும் சிங்கள பௌத்த மேலாதிக்கம் பற்றி பேசுகின்றார்களே தவிர, தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை ஒன்று இருக்கின்றது என்ற விடயத்தை முற்று முழுதாக தங்களது நிகழ்ச்சி நிரலிலிருந்து அகற்றிவிட்டு, தமிழ் மக்கள் மத்தியில் வாக்கு வேட்டைக்காகச் செல்கின்றார்கள்.

இதனை இன்னும் சிறப்பாகக் கூறுவதாக இருந்தால், தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை என்ற ஒன்று இந்த நாட்டில் இல்லை என்பது போன்றும் தமிழ்த் தரப்பால் அவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றபோது அது ஒரு இனவாத கோரிக்கை போன்ற பொய்யான பாரிய பிரச்சாரங்களை முன்னெடுத்து, தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கொடுக்க மறுக்கின்ற ஒரு நிலைமையை நாங்கள் கண்கூடாகப் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற சிங்கள அரசியல் கட்சிகளின் மேற்சொன்ன போக்கானது தமிழ் மக்களுக்கு தேசிய இனப்பிரச்சினை என்ற ஒன்றே இல்லை என்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி, இந்த நாட்டில் வெறுமனே பொருளாதார அபிவிருத்தியை மட்டும் மேற்கொண்டால் போதுமானது என்ற மாயையை சர்வதேச சமூகத்திற்கு ஏற்படுத்த முயற்சிக்கின்றது. இது தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையான இந்த மண்ணில் அவர்கள் சுயாதிபத்தியத்துடனும், சம அந்தஸ்த்துடனும், தலைநிமிர்ந்து வாழக்கூடிய அவர்களின் நியாயமான அபிலாசைகளை நிராகரிக்கும் போக்கு என்பதை சர்வதேச சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

தமிழ் மக்களது தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும். அவர்களது நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான முழுமையான விசாரணைகள் நடைபெற வேண்டும். வடக்கு-கிழக்கில் உள்ள பெருமளவிலான இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும் . அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். பல்வேறுபட்ட போர்வைகளில் தமிழர் நிலங்கள் பறிமுதல் செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இறுதி யுத்தத்தின்போது நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவை சர்வதேச நியமங்களுக்கு அமைய விசாரிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை தமிழர் தரப்பு முன்வைத்தபொழுது, இவை அனைத்துமே இனவாதக் கோரிக்கைகள் என்றும் இவை தொடர்பாக பேச்சுவார்த்தையே நடாத்த முடியாதென்றும் ஆனாலும் தமிழர் வாக்குகள் எமக்குத்தான் கிடைக்கும் என்று பிரச்சாரத்தை முன்னெடுத்துவரும் இந்த வேட்பாளர்கள் மறுதலையாக கொலை, கொள்ளை, கடத்தல், கப்பம் வேண்டுதல் ஆகியவற்றில் ஈடுபட்டு இலங்கை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் படையினரை உடன் விடுவிப்போம் என்பதும் யுத்தக் குற்றங்கள் என்ற ஒரு விடயமே இந்த நாட்டில் இல்லை என்றும் யாருக்கு எதிராகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்படமாட்டாது பழையனவற்றை மறந்து, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும்படியும் இவர்கள் கூறுவதானது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நியாயங்களும் கிடைக்காது என்பதை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன.

எமது இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் புதிய ஜனாதிபதி ஆற்ற வேண்டிய கடமைகள் தொடர்பாகவும் ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பிலும் பதின்மூன்று அம்சக் கோரிக்கைகளை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற ஐந்து அரசியல் கட்சிகளும் வடக்கு-கிழக்கு பல்கலைக்கழக சமூகமும், தமிழ் சிவில் சமூக அமைப்புக்களும் முன்வைத்திருந்தோம். அதனை ஏற்றுக்கொள்வதற்கோ அல்லது அதுதொடர்பான கலந்துரையாடலை நடாத்துவதற்கோ அல்லது அது தொடர்பில் ஒரு உடன்பாட்டைச் செய்துகொள்வதற்கோ எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் முன்வரவில்லை என்பதை எமது மக்களுக்கு நாம் தெரிவித்துக் கொள்கிறோம்.

இருந்தபொழுதும்கூட, சஜித் பிரேமதாச அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கடந்த ஐந்து வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியல் சாசனத்திற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும், அது சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் ஊடாக நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல், புதியதோர் அரசியல் சாசனத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது என்பதுடன், அப்படி நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே அது ஒரு சர்வஜன வாக்கெடுப்புக்கு முன்னெடுத்துச் செல்லப்படலாம். ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்த கடந்த ஐந்தாண்டுகளில் செய்ய முடியாத புதிய அரசியல் சாசன விடயத்தை குறைந்த பட்சம் அறுதிப் பெரும்பான்மையே இல்லாத இன்றைய அரசாங்கத்தால் எவ்வாறு நிறைவேற்ற முடியும்? ஆகவே தமிழ் மக்களின் கண்துடைப்பிற்காகவே அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நாம் கருதுகின்றோம். கடந்த ஐந்தாண்டுகளில் ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பகிர்வு குறித்து பேசப்பட்டதே தவிர, சமஷ்டிக்குள் அதிகாரப்பகிர்வு குறித்து பேசப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் காணிகளை விடுவிப்பதற்காக ஜனாதிபதியினால் மூன்றுமுறை காலக்கெடு விதிக்கப்பட்டும்கூட அவர் உறுதியளித்தவாறு காணிகள் விடுவிக்கப்படவில்லை. அதேநேரம், காணிகளை விடுவிக்கக் கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிகோரியும், அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரியும் நீண்ட போராட்டங்கள் நடைபெறுகின்ற பொழுதும்கூட, இந்த விடயங்கள் தொடர்பாக எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆனால் புதிய ஜனாதிபதி வந்தால் இவற்றிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

இதே உத்தரவாதங்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் மைத்திரிபால சிறிசேனவினாலும் நல்லாட்சி அரசாங்கத்தினாலும் வழங்கப்பட்டிருந்தது. ஆகவே இவை அனைத்தும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது.
மறுபுறத்தில் பொதுஜன பெரமுனவையும் அதன் வேட்பாளரையும் பார்க்கின்ற பொழுது, அவர்கள் அதிதீவிரவாத இராணுவவாதக் கண்ணோட்டம் உள்ளவர்களாகவும், நாட்டின் தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையில், தமிழ் மக்களை அடக்கி ஆள்வதே அவர்களின் நிலைப்பாடாகவும் தோன்றுகின்றது. நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாகவும், பொருளாதார அபிவிருத்தி தொடர்பாகவும் மாத்திரமே இவர்களால் பேசப்படுகின்றது என்பதுடன், தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாகவோ, அவற்றிற்கான தீர்வு எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பாகவோ தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவோ இவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதுவுமே கூறப்படவில்லை.

அத்துடன் தமிழ் மக்கள் இன்று முகங்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு இவர்கள் முன்னெடுத்த யுத்தமும் இவர்களது இனவாத அரசியல் செயற்பாடுகளுமே காரணமாக அமைந்தன.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் குறித்துரைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டிய ஒருவராக இவர் இன்னமும் இருந்துகொண்டிருக்கிறார். இவரும்கூட, யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களுக்குச் சென்று தமிழ் மக்களின் வாக்குகளைக் கேட்டு நிற்கின்றார். சிங்கள மக்களின் வாக்குகளால் நான் வெல்வேன் என்று கூறிவந்த பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோத்தபாய அவர்கள் தற்பொழுது தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்போம் என்றும் வடக்கு-கிழக்கை அபிவிருத்தி செய்வோம் என்றும் தேர்தல் காலத்தில் பசப்புரைகளைச் செய்து வருகின்றார்.

ஜனாதிபதித் தேர்தல் என்பது முழுநாட்டையும் ஒரே தேர்தல் தொகுதியாக முன்னிறுத்தி நடத்தப்படுகின்ற தேர்தல். அதே சமயம், இலங்கை ஒரு பல இனங்கள், பல மொழிகள், பல மதங்களைக் கொண்ட ஒரு நாடு. இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காகப் போராடி வந்திருக்கின்றார்கள். இது ஒரு பாரிய யுத்தமாகவும் கடந்த முப்பது வருடகாலமாக நடைபெற்று வந்திருக்கின்றது. இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் தமது எதிர்காலம் தமது பாதுகாப்பு, தமது சுயமரியாதை, தமது இருப்பு இவற்றை முன்னிறுத்தி தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைப்பது நியாயமானதே. அவ்வாறான கோரிக்கைகள் தொடர்பாக பேசவோ, அல்லது ஒரு உடன்பாட்டிற்கு வரவோ மறுக்கின்ற கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு எமது மக்களைக் கோருவதற்கு எமக்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது.

https://www.pagetamil.com/85282/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.