Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாற்றை மீட்டுருவாக்கும் நாவல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றை மீட்டுருவாக்கும் நாவல்கள்

File0002.jpg

 

பூமியில் மனித இருப்பு, கடந்த காலம் என்ற நினைவுகளின் தொகுப்பாக விரிந்து தொடர்கிறது. தலைமுறைகள்தோறும் செவிவழிக் கதைகளாகச் சொல்லப்படுகிற சம்பவங்கள், கடந்த காலத்தைப் பதிவாக்கிட முயலுகின்றன. நினைவுகள் ஒருபோதும் அழியாதவை என்ற நம்பிக்கையுடன், மனிதர்கள், சமகாலம் குறித்த பேச்சுகளை உருவாக்குகின்றனர். மனிதனைச் சமூகத்துடன் இணைக்கிற கண்ணியான மொழி, நினைவுவெளியில் பேச்சுகளையும், நடந்து முடிந்த நிகழ்வுககளின் வழியாகக் காத்திரமான அரசியலையும் சமூகத் தொடர்ச்சியையும் கட்டமைக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித வாழ்க்கையின் வரையறையையும் சமகாலத்தின் போக்குகளையும் கண்டறிந்து ஆட்சி செய்த அதிகார வர்க்கத்தினர், எதிர்காலத் தலைமுறையினர் அறிந்திடுவதற்காகக் கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், நாணயங்கள், ஓலைச்சுவடிகள்மூலம் தகவல்களைக் கடத்திட முயன்றனர். இன்னொரு வகையில், தங்களுடைய அதிகாரத்தைச் சூரிய சந்திரர் உள்ளளவும் நிலைத்திருக்க வேண்டுமெனப் பதிவாக்கினர். இதனால் காலமற்ற வெளியில் பயணிக்க முயன்றனர். நேற்றைய சம்பவம் அல்லது நிகழ்வு, இன்று வரலாறாக உருமாறுகிறது. இன்றைய நிகழ்வு, நாளைய வரலாறாக மாறுகிறது. வரலாறு என்ற சொல்லின் பின்னர் புதைந்திருக்கிற மர்மம், அளவற்றது. நவீன உலகில் வரலாறு என்பது பாடப்புத்தகத்தின் மூலம் போதிக்கப்படுகிறது. ஏதோ சில மன்னர்கள், அரச வம்சங்கள், போர்கள், ஆயுதங்கள், படைகள், சதிகள், கொலைகள் என்றரீதியில் விரிகிற வரலாறு, ஒருவகையில், நடப்பு வாழ்க்கைக்குத் தொடர்பு அற்றதாக இருக்கிறது. சிலர் வரலாற்றின் வழியாகப் பழம்பெருமை பேசி, அரச குலத்தின் வாரிசு எனப் போலியாகப் பெருமைகொள்வதும் நடைபெறுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரையில் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர் ஆண்ட பூமி என்று பெருமிதம் அடைகிற மனநிலை நிலவுகிறது. அதேவேளையில், வரலாறு என்பது ஒருவகையில் புனைவின் நீட்சி என்று ஒதுக்குவதும் நடைபெறுகிறது. பொதுவாக, ஒரு வரலாறு என்று துல்லியமாகச் சொல்லிட இயலாது; பல்வேறு வரலாறுகள் இருக்கின்றன என்று பின் நவீனத்துவம் கட்டமைத்த வரலாற்றுப் பார்வை, கவனத்திற்குரியது. இதுவரை சொல்லப்பட்ட வரலாற்றின் பின்னர் பொதிந்திருக்கிற மதம், சாதி, பாலியல் பேதம், பொருளியல் ஏற்றத்தாழ்வு குறித்து ஆராய்ந்திடும்போது, அதிகாரம் எவ்வாறெல்லாம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். நுணுக்கமாக ஆராய்ந்தால் பெரும்பான்மையான மக்கள்மீது, ஆட்சியாளர்கள் எப்படியெல்லாம் அதிகாரம் செலுத்தினர் என்பதன் வெளிப்பாடுதான் வரலாறு. காற்றில் அடையாளமற்று மிதக்கிற விளிம்புநிலையினரின் வலிகள், அவமானங்கள், இறப்புகள் குறித்த பதிவுகள், வரலாற்றில் மிகவும் குறைவு. மன்னர்கள் பற்றிய சம்பவங்கள், விவரிப்புகள்தான் வரலாறு என்ற நம்பிக்கையானது, பாடப்புத்தகங்கள்மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல், சமூகம், பொருளாதாரம், நாகரிகம், பண்பாடு, சமயம், கல்வி, குடும்பம், காதல் என நீளும் வரலாறுகள் பன்முகத்தன்மையுடையன. முன்னர் எப்பொழுதோ நடந்த சம்பவத்தைக் கதை போல கேட்கிற / வாசிக்கிற ஆர்வம் எல்லோருக்குள்ளும் இருப்பதனால்தான், எழுத்து மொழியாகவும் வாய்மொழியாகவும் ஆற்றுநீர் போல வரலாறு எங்கும் பரந்திருக்கிறது; வரலாற்று நாவல்களும் ஆர்வத்துடன் வாசிக்கப்படுகின்றன..

வரலாற்று ஆசிரியர் / படைப்பாளி என்ற இருவேறு நிலைகள் முக்கியமானவை. கல்வெட்டு உள்ளிட்ட ஆதாரங்களை முன்வைத்து வரலாற்று ஆய்வாளர்கள் விவரிக்கிற விவரணைகள், வர்க்கச் சார்புடையவை. சோழ மன்னர்கள் குறித்து ஏ.கே. நீலகண்ட சாஸ்திரி, சதாசிவ பண்டராத்தார், ரொமிலா தாப்பார், ஆ.சிவசுப்பிரமணியன், பொ.வேல்சாமி போன்ற ஆய்வாளர்கள் எழுதியுள்ள வரலாறுகள், வெவ்வேறு நோக்கங்களுக்கேற்ப எழுதப்பட்டுள்ளன என்பதை வாசிப்பில் எளிதாக அறிந்திட இயலும். தளிச்சேரி பெண்கள், வைதிக சநாதன தர்மத்தை நடைமுறைப்படுத்துதல், மனிதர்களை அடிமையாக்கி விற்றல் எனச் சோழ ஏகாதிபத்தியத்தின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தல் போன்றவை புதிய வகைப்பட்ட வரலாறாகும். வரலாற்றை நாவலாக்குகிற படைப்பாளியின் நிலைப்பாடு எந்த நோக்கிலானது என்பது முக்கியமானது. இன்றளவும் தமிழர்களால் விரும்பி வாசிக்கப்படுகிற, கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று நாவலின் இன்னொரு பக்கம் பற்றி ஆய்வாளர் பொ.வேல்சாமி குறிப்பிடுகிற பின்வரும் தகவல் கவனத்திற்குரியது. இராசராசனின் அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தவர்கள் என்று அன்றையக் கல்வெட்டுக்களில் பதிவாகியுள்ள குற்றவாளிகள் அனைவரும் பார்ப்பனர்கள். கி.ஸி.ணி.557/1920 கல்வெட்டில் உள்ள கொலையாளிகளின் பெயர்கள்: சோமன், ரவிதாசனனான பஞ்சவன் பிரமாதிராயன், அவனது தம்பி இருமுடி சோழ பிரமாதிராயன், உடன்பிறப்பு மலியனூரான், அவர்களுடைய மக்கள். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள். குற்றவாளிகள் அனைவரும் இராசராசன் பதவியேற்ற இரண்டாம் ஆண்டிற்குப் பின்னர் விசாரணையில் கண்டறியப்பட்டு, பார்ப்பனர்கள் என்பதால் அவர்களுடைய சொத்துகள் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டு, துரத்தியடிக்கப்பட்டனர். கல்கி தனது நாவலில் குற்றவாளிகளைப் பார்ப்பனர் அல்லாதவர்களாகவும், ஏறக்குறைய பாண்டிய நாட்டு மறவர்களாகவும் சித்திரித்துள்ளார். நடந்தவை வரலாற்று உண்மைகளாக இருப்பினும் பார்ப்பனர்களைக் கொலைகாரர்களாகச் சித்திரிக்க கல்கியின் பார்ப்பன மனம் இடம் தரவில்லை என்று பொ.வேல்சாமி விவரிப்பது, ஏற்புடையதாகும். மன்னர்களை முன்வைத்துத் தமிழில் எழுதப்பட்டுள்ள பெரும்பாலான வரலாற்று நாவல்கள், படைப்பாளரின் விருப்பு வெறுப்பின் அடிப்படையில்தான் எழுதப்பட்டுள்ளன. புனைவுகளுக்கு இடையில் வரலாற்றுத் தகவல்களைத் தூவி கல்கி, சாண்டில்யன் போன்றோர் எழுதிய வரலாற்று நாவல்கள், இன்று மெல்லச் செல்வாக்கினை இழந்துகொண்டிருக்கின்றன.

நாவல் என்ற வடிவம், எப்பொழுதும் கடந்துபோன காலத்தின் பதிவுகள் என்ற நிலையில் வரலாற்றுப் பதிவாக விளங்குகிறது. வரலாற்றுத் தகவல்களைத் திரட்டி, ஒரு காலகட்டத்தில் வாழ்க்கை இப்படி இருந்தது என வரலாற்றைப் படைப்பின் வழியாக மீட்டுருவாக்கும் முயற்சிகள், கடந்த பத்தாண்டுகளில் பெருகியுள்ளன. பிரெஞ்சுக் காலனியாக விளங்கிய புதுச்சேரியைச் சார்ந்த ஆனந்தரங்கம் பிள்ளை எழுதிய நாட்குறிப்புகளை அடிப்படையாகக்கொண்டு பிரபஞ்சன் எழுதிய மானுடம் வெல்லும், வானம் வசப்படும் ஆகிய இரு நாவல்களும் புனைவின் வழியாக வரலாற்றை மீட்டுருவாக்கியுள்ளன; புதிய வகைப்பட்ட கதைசொல்லலுக்கு வழிவகுத்ததில் முன்னோடியாக விளங்குகின்றன. மன்னர்கள் பற்றிய தகவல்கள்தான் வரலாறு என்ற பார்வையில் இருந்து மாறுபட்ட படைப்பாளர்கள், கடந்த அறுநூறு ஆண்டுகளில் பதிவான ஆவணங்களில் இருந்து திரட்டிய தகவல்களின் பின்புலத்தில் சாமானியர்களை முன்வைத்து நாவல்களை எழுதிடும் முயற்சிகள், தனித்துவமானவை. ஆங்கிலேயரின் காலனியாதிக்கக் காலகட்டத்திய அரசியல் ஆவணங்கள், ஏசு சபைப் பாதிரியார்களின் கடிதங்கள், ஆங்கிலேய இராணுவ அதிகாரிகள் எழுதிய நினைவுக் குறிப்புகள், கெஜட்டியர்கள், மானுவல்கள் போன்ற சமூக ஆவணங்களில் இடம் பெற்றுள்ள வரலாற்றுத் தகவல்கள், நாவலாக்கத்தில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. அதேவேளையில் வரலாற்றை மீட்டுருவாக்கிட முயலுகிற நாவல்களில் வரலாறு எவ்வளவு? படைப்பாளரின் சொந்தச் சரக்கு எவ்வளவு? போன்ற கேள்விகள் தோன்றுகின்றன. இன்னொருபுறம் வரலாற்று ஆய்வாளர்களால் பல்லாண்டு முயற்சியினால் திரட்டப்பட்ட ஆதாரங்களுடன் எழுதப்பட்ட வரலாற்றுப் புத்தகங்களில் கொட்டிக்கிடக்கிற தகவல்களை அப்படியே நாவலின் பக்கங்களில் நிரப்பிடும் ’திருக்கூத்தும்’ இங்கே நடைபெறுகிறது. வெறுமனே வரலாற்றுத் தகவல்களால் நிரம்பி வழிகிற நாவல்களை வாசிப்பது, ஒருவகையில் தண்டனைதான். படைப்பாளி, வரலாற்றுத் தகவல்கள் மூலம் கண்டறிந்த கண்டுபிடிப்பு எதுவும் நாவலில் இல்லை என்ற நிலை, கதையாடலை மொக்கையாக்குகிறது.

வரலாற்றுப் பின்புலத்தில் எழுதப்பட்டுள்ள நாவல்களை நேரடியான வரலாற்று நாவல்கள், வரலாற்றை முன்வைத்துப் புனைவுக்கு முன்னுரிமை தரும் நாவல்கள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். சு.வெங்கடேசனின் காவல் கோட்டம், பூமணியின் அஞ்ஞாடி, மு.ராஜேந்திரனின் 1801 போன்ற நாவல்கள் வரலாற்றுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தந்துள்ளன. எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி மற்றும் இடக்கை, ஜெயமோகனின் வெள்ளையானை, சோலை சுந்தரப் பெருமாளின் தண்டவபுரம், நாகரத்தினம் கிருஷ்ணாவின் கிருஷணப்ப நாயக்கர் கௌமுதி, சண்முகத்தின் சயாம் மரண ரயில், கரன்கார்க்கியின் மரப்பாலம், விநாயகமுருகனின் வலம், சுகுமாரனின் வெல்லிங்டன், தமிழவனின் ஆடிப்பாவைபோல, வேல ராமமூர்த்தியின் பட்டத்து யானை, அசோகன் நாகமுத்துவின் போதியின் நிழல், இரா.முத்துநாகுவின் சுளுந்தீ போன்ற நாவல்கள், புனைவுச் சம்பவங்களை வரலாற்றுத் தகவல்கள் பின்புலத்தில் புனைவு மொழியில் முன்னிறுத்துகின்றன. கடந்த நூற்றாண்டுகளில் கூலிகளாக அயல்நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் அவல வாழ்க்கையைச் சித்திரிக்கிற நாகரத்தினம் கிருஷ்ணாவின் நீலக்கடல், தமிழ்மகனின் வனசாட்சி போன்ற நாவல்களும் ஒருவகையில் வரலாற்றை மீட்டுருவாக்கிட முயலுகின்றன. அவை, புலம்பெயர் நாவல் வகைக்குள் அடங்குவதால், இங்குச் சேர்க்கப்படவில்லை.

2009இல் காவல் கோட்டம் நாவல் வெளியாகி, சு.வெங்கடேசனுக்குச் சாகித்ய அகாதெமி விருது கிடைத்தவுடன், வரலாற்றை மீட்டுருவாக்கிடும் நாவல் வகையானது, தமிழில் செல்வாக்குப் பெற்றது. சில படைப்பாளிகள் வரலாற்றை மீட்டுருவாக்கிட ஆவணக் காப்பகங்களின் சேமிப்புகளில் மூழ்கினர். எப்பொழுதோ நடைபெற்ற சம்பவங்களைப் பற்றிய தகவல்களை எவ்விதமான விமர்சனமுமின்றி, அப்படியே தொகுத்து, கொஞ்சம் நகாசு வேலை செய்தால்போதும் நாவல் தயாராகிவிடும் என்று நம்பிக்கை, பரவலானது. நாவல் எழுதிட வரலாற்றுச் சம்பவங்களில் இருந்து எவை படைப்பாக்கத்திற்கு உகந்தவை என்று கண்டறிந்திட வேண்டியது அவசியம். முன்னர் நடந்த சம்பவங்களைத் தொகுப்பது அல்ல படைப்பாளியின் வேலை. குறிப்பிட்ட நிகழ்வின் வன்மை மென்மையுடன், அதன் தொடர்ச்சியானது, இன்றுவரை எப்படியெல்லாம் நீள்கிறது என்பது உய்த்துணர்ந்து எழுதுவதே புனைவு எழுத்தாளனின் முதன்மைப் பணி.

1045 பக்கங்கள் கொண்ட காவல் கோட்டம் நாவலின் முதல் பகுதியானது மதுரைக்கு மாலிக்காபூர் படையெடுப்பதில் தொடங்கி, நாயக்க மன்னர்களின் ஆட்சிச் சிறப்புகளை விவரிக்கிறது. இரண்டாம் பகுதி தாதனூர் என்ற ஊரில் வாழ்கிற கள்ளர்களைப் பற்றிய தகவல்களால் ததும்புகிறது. சத்தியநாத ஐயர், அமு.பரமசிவானந்தம் போன்றோர் எழுதிய நாயக்கர் வரலாற்று நூல்களில் இருக்கிற வரலாற்றுத் தகவல்கள் ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் கள்ளர்கள் பற்றிய புனைவுக் கதைகள், வாய்மொழித் தகவல்களால் நாவலின் பக்கங்கள் நிரம்பியுள்ளன. சங்க காலத்தில் மதுரைக் காஞ்சி, வையைப் பரிபாடல், சிலப்பதிகாரத்தில் மதுரை எனக் காலந்தோறும் வரலாற்றில் பதிவாகி, இன்றளவும் நிலைத்திருக்கிற மதுரை நகர் பற்றிய புரிதல், நாவலாசிரியருக்கு இல்லை. மதுரை நகரை வடுகர்களின் பார்வையில் அரவ நாடு எனக் குறுக்கி, ஆட்சியாளர்களான நாயக்கர்களின் வீரதீரச் செயல்களை முன்னிறுத்தி, நாவலின் கதையாடல் நகர்த்தப்பட்டுள்ளது. தெலுங்கைத் தாய்மொழியாகக்கொண்ட நாயக்கர்கள், மதுரையைக் கைப்பற்றி அரசாண்ட எதேச்சதிகார அரசியலை முன்னிலைப்படுத்தி எழுதப்பட்டுள்ள கதைசொல்லல், வெறுமனே வரலாற்றுச் சம்பவங்களின் தொகுப்பாக விரிந்துள்ளது. விசுவநாத நாயக்கரின் ஆட்சியில் மதுரையைச் சுற்றிக் கட்டப்பட்ட கோட்டை பற்றிய பெருமிதமான விவரிப்பும், ஆங்கிலேயக் கலெக்டரான பிளாக்பெர்ன் ஆட்சியில், கோட்டை இடிக்கப்பட்டபோது, 21 நாட்டார் தெய்வங்களை அப்புறப்படுத்துவதா? என மக்கள் கொதித்தெழுந்தனர் என விவரிப்பும் நுண்ணரசியல் பொதிந்தவை. ஆங்கிலேய காலனியாதிக்கத்தின் கொடுங்கோன்மை பற்றிய எதிர்க் கருத்தியல் நாவலில் அழுத்தமுடன் பதிவாகவில்லை. வெறுமனே தகவல்களைத் திரட்டிக் கொடுப்பதற்கு வரலாற்று ஆசிரியர் போதும்; படைப்பாளி வேண்டியதில்லை. ஓவ்வொரு வரலாற்று நிகழ்வின் பின்னரும் பொதிந்துள்ள அரசியல் சார்ந்த சமூக வாழ்க்கையைக் கண்டறிவதுதான் படைப்பாளரின் முதன்மையான பணி. வன்முறை தோய்ந்த கள்ளர்களின் களவு சார்ந்த வாழ்க்கையை நியாயப்படுத்தும்வகையில் நாவலில் விவரிப்பது எந்தவகையில் ஏற்புடையது என்பது புலப்படவில்லை. 14ஆம் நூற்றாண்டில் மதுரையில் ஏற்படுத்தப்பட்ட இஸ்லாமியரின் ஆட்சிக்கு முன்னர், பாண்டிய மன்னரின் ஆட்சியில் களவை எங்ஙனம் மன்னர்களும் மக்களும் எதிர்கொண்டனர் என்பது முக்கியமான கேள்வி. திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்றவற்றில் இருந்து மக்களைக் காத்திட களவைத் தொழிலாகக் கொண்டவர்களையே நாயக்க மன்னர்கள் காவலராக நியமித்தனர் என்ற செயல்பாடு, தருக்கத்திற்கு முரணானது. களவு, காவல் என இரு முனைகளில் செயல்பட்ட கள்ளர் சமூகத்தினர், ஆங்கிலேயரின் ஆட்சியில் குற்றப்பரம்பரையினராக மாற்றப்பட்டதை வலியோடு விவரிக்கிற வெங்கடேசனின் கதையாடல், ஒற்றைத்தன்மையிலானது. களவு என்பதை ஐம்பெருங் குற்றங்களில் ஒன்றாகக் கருதிய தமிழரின் அறம் குறித்த வெங்கடேசனின் எதிர்மறைக் கருத்தியல் கேள்விக்குரியது. கி.பி. 14ஆம் நூற்றாண்டில் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி, ஒரு லட்சம் படைவீரர்களுடன் டில்லியிலிருந்து மதுரைக்குப் படையெடுத்தார் என்ற தகவல் ஏற்புடையதா? சாததியமானதா? படைவீரர்கள், யானைகள், குதிரைகள் பற்றிய தகவல்கள் நம்பகத்தன்மையற்று உள்ளன. மன்னரின் சாதனைகளை மிகைப்படுத்தி, வெற்றுப் பெருமை பேசுவதற்காகப் போலியாக வரலாற்றில் வரலாற்றாசிரியர்கள் பதிவாக்கியுள்ள தகவல்களை அப்படியே நாவலில் பல இடங்களில் வெங்கடேசன் பயன்படுத்தியிருக்கிறார். கடந்த அறுநூறு ஆண்டுகாலத் தமிழக வரலாறு குறித்த நுட்பமான கேள்விகளையும் கண்டுபிடிப்புகளையும் கண்டறியாமல், ‘வரலாற்றை மீட்டுருவாக்குகிறேன்’ என்று நிரம்பத் தகவல்களைக் கொட்டியிருப்பது, காவல் கோட்டம் நாவலாக்கத்தில் பலவீனமான அம்சமாகும்.

 

marappaalam_FrontImage_629-195x300.jpg

பூமணியின் அஞ்சாடி நாவல், 1053 பக்கங்களில் வரலாற்றை மீட்டுருவாக்கும் புனைவு. நாவலின் கதைக்களம், தமிழகத்தின் தெற்குப்பகுதியில் உள்ள கலிங்கல் என்னும் கிராமம். பள்ளக்குடியின் ஆண்டி குடும்பன், வன்ணாக்குடியின் மாரி ஆகிய இரு விளிம்புநிலையினரின் வாழ்க்கையிலிருந்து தொடங்குகிற நாவலின் கதையாடல், 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிகழ்கிறது. ஆண்டிக் குடும்பன், மாரி வண்ணான், கழுகு மலைப் பெரிய நாடார் ஆகியோரின் பின்புலத்தில் புனைவாகப் பூமணி விவரித்துள்ள சம்பவங்கள், சமூக வரலாறாகப் பதிவாகியுள்ளன. பள்ளர், வண்ணார், நாடார் சமூகங்களின் வம்ச வரலாறும், ஒடுக்குமுறைக்கு ஆளான போராட்ட வரலாறும், புனைவு எழுத்தாக மீட்டுருவாக்கப்பட்டுள்ளன. விளிம்புநிலையினரான நாடார் சமூகத்தினரின் உரிமைகளுக்கான போராட்டங்கள் நாவலில் விரிவாக இடம் பெற்றுள்ளன. கழுகுமலை வரலாறும், சைவர்கள், எண்ணூறு சமணர்களைக் கழுவிலேற்றிக் கொலைசெய்த துன்பியல் சம்பவமும் சித்திரிக்கப்பட்டுள்ளன. பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சி, நாயக்க மன்னர்களின் ஆதிகாரம், பிரிட்டிஷாருக்கு எதிரான கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர் போன்ற பாளையக்காரர்களின் விடுதலைப் போராட்டங்கள், எட்டயபுரம் ஜமீன் வரலாறும் அதிகாரமும் அடக்குமுறைகளும் என நாவல் வரலாற்றுப் பின்புலத்தில் விரிந்துள்ளது. அமணர், அப்பர், அருகர், நாயன்மார், பிள்ளையாண்டவர், வைகுண்டசாமி, சமயப் பண்பாட்டு கதையாடல்களும், கான்சாகிப், கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள், விடுதலைப்போரின் வரலாற்றுக் கதையாடல்களும் நாட்டார் மரபின் தொடர்ச்சியாக விளங்குகின்றன.

கழுகுமலைக் கோயில் ரதவீதிகளில் பல்லக்கு தூக்கிச்செல்லும் உரிமைக்காக நாடார்கள் நடத்திய கழுகுமலைப் போராட்டம், வியாபாரிகளான சிவகாசி நாடார்கள் மீது மறவர்கள் தலைமையில் நிகழ்த்தப்பட்ட கொலைகள், கொள்ளைச் சம்பவங்கள், சாதிக் கலவரங்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்களைப் புனைவாக்கியதில் பூமணிக்குப் பருண்மையான நோக்கம் உள்ளது. வைதிக சநாதனத்தின் பிடியில் சிக்கியிருந்த தமிழர்களுக்கு இடையில், சாதியரீதியில் உயர்வு, தாழ்வு கற்பித்து, தீண்டாமை நிலவிய அன்றைய சூழலில், ’பார்த்தால் தீட்டு’ என ஒதுக்கப்பட்டிருந்த நாடார்களின் சுயமரியாதைக்கான போராட்டங்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்கள், நுணுக்கமாக விவரிக்கப்பட்டுள்ளன. கழுகுமலை, சிவகாசி, கமுதி போன்ற ஊர்களில் வியாபாரத்தில் செல்வாக்குடன் விளங்கிய நாடர்கள், பொதுக் கோவிலில் நுழைந்திட வேண்டுமென முயன்றபோது நடைபெற்ற கலவரங்கள், கொலைகளின்போது காவல் துறை, நீதிமன்றங்களின் செயல்பாடுகள் குறித்த உண்மைத் தகவல்கள், அரசின் ஆவணங்கள் அப்படியே நாவலில் தரப்பட்டுள்ளன. தீண்டாமைக் கொடுமை, எப்படியெல்லாம் சகமனிதர்களைக் கொல்லவும் வெறுக்கவும் தூண்டுகிறது என்பது, வெறுமனே காற்றில் கரைந்துபோகிற விஷயமல்ல. இன்றைய நவீன வாழ்க்கையிலும் சாதியத்தின் கொடூரம் அழுத்தமாகச் செயல்படுகிறது என்பதற்கான பின்புலத்தைக் கண்டறிந்திட முயன்ற பூமணி, கடந்த நூற்றாண்டுகளில் நிலவிய சாதிய முரண்பாடுகளை நாடார் சமூகப் பின்புலத்தில் நாவலில் பதிவாக்கியிருப்பது, ஒருவகையில் வரலாற்றை மீட்டுருவாக்குவதாகும். இன்றளவும் தலித்துகள் என ஒதுக்கப்படுகிறவர்கள், கடந்த கால வரலாற்று நிகழ்வுகளில் இருந்து, தங்களுடைய வாழ்க்கையைக் கட்டமைத்திட முடியும் என்பதுதான் நாவல் முன்வைக்கிற சேதியா? இரு நூற்றாண்டு கால வரலாற்றை விரிவாகப் பதிவாக்கியுள்ள சொல்கிற பூமணியின் நோக்கம், விளிம்புநிலையினரின் வரலாற்றை மீட்டுருவாக்குவதுடன், தமிழர் வாழ்க்கையின் பன்முகத்தன்மைகளைக் கண்டறிவதாகும். அதற்காக அவர் எழுதியுள்ள பிரமாண்டமான கதையாடல், வரலாற்றை மீறியுள்ள புனைவாகியுள்ளது. ஒருபோதும் முடிவற்ற வரலாற்றுச் சம்பவங்களில் பூமணி விவரித்திருக்கிற கதைசொல்லல், இன்றைய சூழலில் அதனுடைய தொடர்ச்சி எங்ஙனம் நீள்கிறது என்ற விசாரணையை முன்வைத்துள்ளது. அதேவேளையில் கலிங்கல் கிராமத்தை முன்வைத்து எழுதப்பட்டுள்ள குடும்பம் சார்ந்த சம்பவங்கள், அளவுக்கதிகமாக விவரிக்கப்பட்டிருப்பதனால் வாசிப்பில் அலுப்பை ஏற்படுத்துகின்றன. நாவலின் பக்கங்களைக் குறைத்திருந்தால், கதையாடல் இன்னும் பரவலாக மக்களிடம் சென்று அடைந்திருக்கும். அஞ்ஞாடியில் வரலாற்றுத் தகவல்களை முன்வைத்து எழுதப்பட்டுள்ள கதைசொல்லலை வாசிக்கையில் ஏற்படுகிற சுவாரசியம், துப்பறியும் நாவலின் கதையாடல் போன்று விறுவிறுப்பானது.

மு. ராஜேந்திரன் எழுதியுள்ள 1801 நாவல், இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் சிவகங்கைச் சீமைப் பின்புலத்தில் மருது சகோதரர்களின் கதையை விவரித்துள்ளது. அன்றைய பாளையக்காரர்களின் நிலை, கட்டபொம்மன், ஊமைத்துரை, விருப்பாச்சி நாயக்கர், திப்பு சுல்த்தான் என ஆங்கிலேயரின் அதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தைப் புனைவாக்கியுள்ள ராஜேந்திரனின் அரசியல் நோக்கம், படைப்பாக்கத்தில் துல்லியமாக வெளிப்பட்டுள்ளது. வெல்ஷ் போன்ற ஆங்கிலேய அதிகாரிகளின் புத்தகங்கள், ஆங்கிலேய அரசின் குறிப்புகள் போன்றவற்றை நுட்பமாக வாசித்து, எழுதப்பட்டுள்ள நாவலில் தொடக்கம் முதலாகவே முன்னர் எப்பொழுதோ நடைபெற்ற சம்பவங்களின் பின்புலத்தைக் கண்டறியும் முயற்சி, மேற்கொள்ளப்பட்டுள்ளது. எண்ணிக்கையில் குறைவான கிழக்கிந்தியக் கம்பெனியினரான ஆங்கிலேயர் எப்படியெல்லாம் தந்திரங்கள், சூதுக்கள், கபடங்கள் செய்து, தமிழக மண்ணில் காலூன்றிய வரலாறு, நாவலில் மீட்டுருவாக்கப்பட்டுள்ளது. சிறிதளவு பணம், நிலம் என ஆசை காட்டி, துரோகத்தை எங்கும் பரப்பிய ஆங்கிலேயரின் காலனியாதிக்க அதிகாரத்தைக் கட்டுடைத்திடும் நாவல், பெரிதும் வரலாற்றுத் தகவல்களுக்கு முக்கியத்துவம் தந்துள்ளது. துரோகம் எங்கும் நீக்கமறப் பரவியிருக்கையில், விழுமியம் அர்த்தமிழக்கிறது. மேலோட்டமாக மருது சகோதரர்கள், சிவகங்கைச் சீமை என்று விரிந்திடும் சொற்களின் பின்னர் ராஜேந்திரன் பயணிக்க முயன்றுள்ளார். எளிய வாழ்க்கை வாழ்ந்த மன்னர்களான பெரிய மருது, சின்ன மருது ஆகியோரின் அரசியல் வாழ்க்கைச் சூழலும், ஒரு கட்டத்தில் எதிரிகளாக மாறிய ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்த போரின் விளைவுகளும் நாவலில் நுணுக்கமாகப் பதிவாகியுள்ளன. ஆங்கிலேயரின் காலனியாதிக்கம், தமிழகத்தின் வேரூன்றிய சூழலை வரலாற்றுத் தகவல்களால் நாவல் விவரித்துள்ளது. திருப்பத்தூரில் மருது சகோதர்கள் உள்பட ஐநூறுக்கும் கூடுதலான தமிழ்ப் போராளிகள் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தினால் கொடூரமாகத் தூக்கில் ஏற்றிக் கொலை செய்தது, மருதுவின் வாரிசுகள் பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டது போன்ற சம்பவங்கள் உருக்கமான மொழியில் பதிவாகியுள்ளன. சிவத்தையா, ஊமைத்துரை, விருப்பாட்சி நாயக்கர் போன்ற ஆட்சியாளர்கள் கொல்லப்பட்ட கொடூரங்கள் தொடங்கி, ஆங்கிலேயரின் காலனிய ஆட்சியானது ரத்தக் கவிச்சியுடன்தான் தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இன்று சாதியத்தின் போலிப் பெருமைகளை முன்னிறுத்தி, வரலாற்றில் போராடி உயிரைத் துறந்த போராளிகளைத் தங்களுடையவர்களாக அடையாளப்படுத்திட முயலும் கபட அரசியல் குறித்த புரிதலுடன்தான் 1801 நாவல் எழுதப்பட்டுள்ளது. வரலாற்றை எந்தக் கோணத்தில் மீட்டுருவாக்கிட வேண்டும் எனத் திட்டமிட்டுப் பல்வேறு கதைகளின் தொகுப்பாக விரிந்துள்ள ராஜேந்திரனின் படைப்பு முயற்சி, 1801 நாவலில் காத்திரமாக வெளிப்பட்டுள்ளது. வரலாற்று நிகழ்வுகளின் வழியாக நடந்து முடிந்த மருது சகோதரர்களின் அவல வாழ்க்கையின் பின்புலத்தைச் சித்திரித்துள்ள 1801 நாவல், தனித்துவமானது.

வரலாறு என்ற பரந்துவிரிந்த கேன்வாசில் நாவலாசிரியர் தேர்ந்தெடுத்த சில சம்பவங்களை மட்டும் முன்வைத்து எழுதப்படுகிற நாவல்களில் வரலாறு மீட்டுருவாக்கப்பட்டாலும், புனைவுச் சம்பவங்கள்தான் முதன்மையிடம் பெறுகின்றன. எப்பொழுதோ நடந்த நிகழ்ச்சி ஏற்படுத்திய தாக்கத்தினால் படைப்பாளி அடைந்த உத்வேகம்தான் நாவலின் கதையாடலை அழுத்தமாக விவரிக்கிறது.kaaval-kottam-vikadan-publishers_FrontIm

இரண்டாம் உலகப் போரின்போது, 1942ஆம் ஆண்டில் ஜப்பான் அரசாங்கம், சயாமிலிருந்து பர்மா வரையிலும் மலை, காடுகளில் ராணுவத்தினரின் தேவைக்காக ரயில் பாதையை நிர்மாணித்தது. அந்தக் கடுமையான பணியில் 15,000 போர்க் கைதிகளுடன் ஆசியத் தொழிலாளர்களும், மலேசியாவில் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காக இந்தியாவிலிருந்து சென்றிருந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். கடுமையான வேலை, மலேரியா காய்ச்சல், தொற்று நோய், மருத்துவ வசதியின்மை, சத்தற்ற உணவு காரணமாகப் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வரலாற்றுச் சம்பவத்தை முன்வைத்துச் சண்முகம் எழுதியுள்ள சயாம் மரண ரயில் நாவலானது, வரலாற்றை மீட்டுருவாக்கிட முயன்றுள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்கள், வரலாற்றில் எதிர்கொண்ட பேரழிவை விவரித்திட வேண்டுமென்ற நாவலாசிரியரின் ஆர்வம் காரணமாக மிகைப்படுத்தப்பட்ட சம்பவங்களும், ஆரவாரமான வெற்று விவரிப்புகளும் நாவலின் செம்மையைச் சிதைத்து, வாசிப்பில் அலுப்பை ஏற்படுத்துகின்றன.

ஆங்கிலேயரின் காலனியாதிக்க காலத்தில் 19ஆம் நூற்றாண்டில் சென்னையில் உள்ள ஐஸ் ஹவுஸ் பகுதியில் நடைபெற்ற ஐஸ் வணிகம் பற்றிய வரலாற்றுத் தகவலை முன்னிறுத்தி ஜெயமோகனின் வெள்ளை யானை நாவல் விரிந்துள்ளது. ஐரோப்பாவில் இருந்து கப்பல்மூலம் கொண்டுவரப்பட்ட பெரிய பனிப் பாளங்கள், பிரிட்டிஷாரின் காலனிய ஆதிக்கத்தில் விளிம்புநிலையினர் அடைந்த அவல வாழ்க்கையைக் குறியீட்டுநிலையில் குறிக்கின்றன. 1878ஆம் ஆண்டில் காலனிய ஆட்சியினரின் அலட்சியத்தால் உருவான தாது வருஷத்துப் பஞ்சத்தினால், தமிழகத்தில் அநியாயமாக இறந்துபோன விளிம்புநிலை மக்களையும், ஐஸ் ஹவுஸ் சம்பவத்தையும் முன்னிறுத்தி ஜெயமோகன் எழுதியுள்ள புனைவு, வரலாற்றுப் பின்புலத்தில் தோய்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் நிலவிய பஞ்சம், வறுமை, விளிம்புநிலையினரின் அவல வாழ்க்கை எனக் கடந்த காலத்தில் பயணித்துள்ள நாவல், புனைவிற்கு முன்னுரிமை அளித்திருப்பினும், வரலாற்றை மீட்டுருவாக்கிட முயன்றுள்ளது.

எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவல், ஆங்கிலேயரின் காலனியாதிக்கக் காலத்தில் குற்றப்பரம்பரையினராகத் தண்டிக்கப்பட்ட கள்ளர்களின் வரலாற்றைப் புனைவாக்கியுள்ளது. ஓட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தில் ஒரு பிரிவினர் மட்டும் வழிப்பறி, கொள்ளை செய்வதைத் தொழிலாக மேற்கொண்டிருப்பதன் பின்புலத்தைக் கண்டறிந்திடும் முயற்சி, நாவலாகியுள்ளது. தமிழ்த் தொன்மம், தொல் பழங்குடித்தன்மை சார்ந்து விரிந்திடும் நாவல், வரலாறு தரும் தகவலைவிட புனைவுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தந்துள்ளது.

நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவலான கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, செஞ்சிக் கோட்டையை முன்வைத்த வரலாற்றுச் சம்பவங்களின் பின்புலத்தில் விரிந்துள்ளது. செஞ்சிக் கோட்டை என்பது வேறுமனே கற்களால் கட்டப்பட்ட கட்டடத் தொகுதி மட்டுமல்ல. அந்தக் கோட்டை யார் வசம் இருக்கிறதோ அவரது கையில்தான் அதிகாரம். கோனார்களால் கட்டப்பட்ட கோட்டையானது முஸ்லிம், நாயக்கர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் எனத் தொடர்ந்து கைமாறிக்கொண்டே இருக்கிறது. நாகரத்தினம் பல்வேறு வரலாற்று ஆவணங்களின் பின்புலத்தில் செஞ்சியின் கதையைச் சித்திரித்துள்ளார். மலையில் கருங்கற்களால் விரைத்து நிற்கிற கோட்டை, அதிகாரத்தின் குறியீடாகும். காலந்தோறும் நடைபெற்ற சம்பவங்கள், படைபலத்தின்மூலம் கட்டமைக்கப்பட்ட அரச அதிகாரம், மனித உடல்களை வேட்டையாடிய வரலாறு, போன்றவை நம்பகத்தன்மையுடன் புனைவாக்கப்பட்டுள்ளன. கி.பி.16ஆம் நூற்றாண்டின் இறுதியில் செஞ்சிக் கோட்டையை ஆள்கிற வைணவரான கிருஷ்ணப்பநாயக்கரின் அதிகாரத்திற்கு எதிராகக் கோவிலின் பாரம்பரியத்தைக் காப்பற்றிட சிதம்பரம் தீட்சிதர்கள் இருபது பேர் கோபுரத்தின் உச்சியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டனர். சைவம், வைணவம் ஆகிய இரு பிரிவினர்களிடையே நடந்த மோதல்களை, இயேசு சபைப் பாதிரியார்களின் குறிப்புகளை வைத்து நாகரத்தினம் கதையாடலைப் புனைந்துள்ளார். பல்வேறு கதைகளின் தொகுப்பாக விரியும் நாவலில், வரலாறும் நடப்பும் எதிர்காலமும் கலந்து சொல்லப்பட்டிருப்பது பிரதிக்குப் புதிய அர்த்தம் தருகிறது.

அசோகன் நாகமுத்துவின் போதியின் நிழல் நாவலானது வரலாற்றுச் சம்பவங்களின் பின்புலத்தில் யுவான் சுவாங் என்ற சீனத் துறவியின் தேடலையும் இந்தியப் பயணத்தையும் விவரித்துள்ளது. மதங்களின் ஆளுகையில் மனிதர்கள் இப்படியெல்லாம் வாழ்ந்தனர் என்ற விவரிப்பில் வரலாற்றைவிட புனைவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.nedunkuruthi_FrontImage_224-195x300.jpg

சோலை சுந்தரப் பெருமாளின் தாண்டவபுரம் நாவல், சைவ சமயத்தைப் பரப்பிய திருஞான சம்பந்தரின் வாழ்க்கை வரலாற்றைப் புனைகதையாக்கியுள்ளது. சம்பந்தரைச் சைவ வேளாளர் என்று சித்திரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள், நம்பகத்தன்மை இல்லாமல் வறட்சியாக இருப்பது, நாவலின் பலவீனம்.

ஆங்கிலேயர், நீலகிரி மலைப்பகுதிக்குச் செல்வதற்காக வழியை அமைத்தபோது நடைபெற்ற வரலாற்றுச் சம்பவங்களைத் தொகுத்து, சுகுமாரன் வெல்லிங்டன் என்ற பெயரில் நாவலாக்கியுள்ளார். ஆங்கிலேயரின் காலனியாதிக்கக் காலகட்டத்தில் நடைபெற்றதாக விவரிக்கப்படுகிற சம்பவங்கள், வெல்லிங்டன் என்ற ஒற்றைச் சொல்லின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அன்றைய காலகட்டம் குறித்த நாவலாசிரியரின் விவரிப்புகள், உண்மைச் சம்பவங்கள் என்று நம்ப வைக்கின்றன.

விநாயக முருகனின் வலம் நாவல், சென்னை நகரம், ஆங்கிலேயரின் ஆட்சியின்போது நரிகள் நிறைந்த பிரதேசமாக விளங்கியது என்று பதிவாக்கிட முயலுகிறது. ஆங்கிலேயரின் வேட்டையில் சிக்கியது நரிகள் மட்டுமல்ல, அங்கு வாழ்ந்த மக்களும்தான் என்ற சித்திரிப்பில் வரலாறு மெல்லிய இழையாகப் பொதிந்துள்ளது. தீவிரமான வாசிப்பின் மூலம் 19ஆம் நூற்றாண்டில் சென்னை நகரம் எப்படி இருந்திருக்கும் என அறிந்திடுவது வேறு, அந்தத் தகவல்களை அப்படியே பதிவாக்குவது வேறு என்ற புரிதலுடன், அரசியல், சமூகப் பார்வையுடன் விநாயக முருகன் நாவலைப் புனைந்துள்ளார்.

அறுபதுகளில் தமிழகத்தில் தீவிரமடைந்திருந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், போராட்டத்தை முன்னின்று நடத்திய தி.மு.கழகத்தின் செயல்பாடுகள், சுயநல அரசியல் என வரலாற்றின் பக்கங்களில் பயணித்திட்ட தமிழவன் எழுதியுள்ள ஆடிப்பாவைபோல நாவல், சமூக அரசியலை மீட்டுருவாக்கிட முயன்றுள்ளது. அதேவேளையில் இளம் தலைமுறையினர் காதல் காரணமாக எதிர்கொண்ட பிரச்சினைகள், சாதிய வெறி, இந்தி எதிர்ப்புப் போராட்ட நிகழ்வுகள் என நடந்திட்ட வரலாற்றுச் சம்பவங்களும் நாவலில் பதிவாகியுள்ளன. அரசியல் கட்சியின் பெயர்கள், தலைவர்களின் பெயர்கள் போன்ற அடிப்படையான தகவல்களை வெளிப்படையாகத் தந்திருந்தால், நாவலாசிரியரின் நோக்கம் முழுமையடைந்திருக்கும். சமகால வரலாறு பற்றிய புரிதல் இளந்தலைமுறையினருக்கு ஏற்படுவதற்கு நாவலின் கதையாடல் பயன்படுகிறது.

கரன் கார்க்கியின் மரப்பாலம் நாவல், இரண்டாம் உலகப் போர் பின்புலத்தில் ஜார்ஜ் கபே என்ற விளிம்புநிலைத் தமிழர் எதிர்கொண்ட சம்பவங்களை வரலாற்றுரீதியில் விவரித்துள்ளது. போர்க்களக் காட்சிகள் வரலாற்றுத் தகவல்களால் நாவல் நிரம்பி வழிகிறது. சயாம் ரயில் பாதை போடுவதற்காகக் காட்டிற்குள்ளே போன தமிழ்க் கூலிகளின் அவலமான மரணம், வரலாற்றில் கொடூரமானது. கதையாடல், புனைவில் இருந்து விலகி, திடீரென வரலாற்று நிகழ்வுகளில் பயணிக்கிறது. எது புனைவு? எது நிஜம்? என்ற குழப்பம் ஏற்படுகிறது.

வேல ராமமூர்த்தியின் பட்டத்து யானை நாவல், வரலாற்றுப் பெயர்களையும் சம்பவங்களையும் முன்வைத்து ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தை உணர்ச்சிபூர்வமாக விவரித்துள்ளது. 1799இல் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய மயிலப்பன் கொல்லப்பட்டார். அவருக்குப் பின்னர் பெருநாழி ரணசிங்கம் வெள்ளையரின் ஆதிக்கத்தை ஒழித்திட போராடிய சம்பவங்களைச் சித்திரிக்கிற பட்டத்து யானை நாவலில் வரலாற்று அணுகுமுறை மிகவும் குறைவு. வெறுமனே கொந்தளிப்பான மனநிலையில் விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் ராமமூர்த்தியின் மொழியினால் கவனம் பெற்றுள்ளன.

சமூக வரலாறு என்ற பெயரில், நாயக்கர்களின் பாளையக்காரர் ஆட்சியில் நடந்த வரலாற்றுச் சம்பவங்கள் குறித்து இரா.முத்துநாகு எழுதியுள்ள சுளுந்தீ நாவல், நாட்டார் கதையாடலாகத் தொகுப்பாகியுள்ளது. வைதிக சநாதனத்தின் மேலாதிக்கம் பெற்றிருந்த நாயக்கர்களின் ஆட்சியின்போது, மருத்துவர் சாதியினரான பண்டிதரை முன்வைத்துச் சொல்லப்பட்டுள்ள கதையாடலில் நம்பகத்தன்மை குறைவு. இன்றளவும் தமிழகக் கிராமப்புறத்தில் அம்பட்டையர் என இழிவாகக் கருதப்படுகிற சேவை சாதியினரின் நிலை, இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்திருக்கும் என்ற புரிதலற்ற நிலையில் கதை சொல்லப்பட்டுள்ளது. அதிகாரத்தின் கொடூரமான ஆதிக்கத்திற்கு முன்னர் ஊமைத்துரை, விருப்பாச்சி நாயக்கர், மருது சகோதர்கள் போன்ற ஆட்சியாளர்கள் தாக்குப் பிடிக்காமல் பலியாகிப்போன அரசியலைக் கவனத்தில்கொள்ள வேண்டியுள்ளது. சித்தர், சித்த மருத்துவம், சித்த மருத்துவ முறைகள் என நாவலில் தரப்பட்டுள்ள பதிவுகள், கதையாடலில் பொருந்தி வரவில்லை. சித்த மருந்துகள் தயாரிப்பு குறித்து ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டிருந்த மருத்துவக் குறிப்புகள், கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக அச்சு வடிவில் புத்தகங்களாகியுள்ளன. அத்தகைய மருந்துகள் தயாரிக்கிற செய்முறைகளை அப்படியே நாவலில் கொட்டியிருப்பதனால், நாவலின் பக்கங்கள் நிரம்பியுள்ளன. சாதியம், சாதிய மேலாதிக்கம் பற்றிய ஆழமான புரிதல் இல்லாமல் வெறுமனே சம்பவங்களைத் தொகுத்திருக்கிற முத்து நாகுவின் முயற்சியில் வரலாறு, வெற்றுப் புனைவாகியுள்ளது. நாவலின் பக்கங்களில் நிரம்பித் ததும்பிடும் தகவல்கள், சராசரி வாசகருக்குப் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. அவற்றுக்குப் பின்னர் காத்திரமான அரசியல் பொதிந்திருக்கிறது என்ற பார்வை, நாவலாசிரியருக்கு இல்லை. சமூக வரலாறு என்றாலும் நாவலாசிரியர் தேர்ந்தெடுத்த தகவல்களும், அவருடைய சமூக, அரசியல் பார்வையும் நாவலாக்கத்தில் முக்கியமானவை என்ற புரிதல் இல்லாமல் நாவல் எழுதப்பட்டுள்ளது.

எஸ்.ராமகிருஷ்ணனின் இடக்கை, சுகுமாரனின் பெருவலி ஆகிய இரு நாவல்களும் வட இந்தியாவில் ஆட்சி செய்த முகாலாய மன்னர்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்களுடன் புனைவையும் உள்ளடக்கியுள்ளன. எஸ்.ராமகிருஷ்ணன், வட இந்தியாவில் அரசாண்ட இஸ்லாமிய மன்னரான ஔரங்கசீப் பற்றி எழுதியுள்ள இடக்கை நாவல், நீதியை மையமாகக்கொண்டு விரிந்துள்ளது.. தீண்டப்படாத சாதியினராகக் கருதப்படுகிற சாமர் இனத்தவரான தூமகேது நாவலின் மையப் பாத்திரம். அவருடைய சாதியினர் வலதுகையைப் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். பிஷாட மன்னனுக்கு உணவில் விஷம் கலந்து கொல்ல முயன்றது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களைத் தூமகேது மீது சுமத்தி, விசாரணை என்ற பெயரில் சிறையில் அடைக்கின்றனர். எளியவர்கள் தங்களுக்கான நீதியைத் தேடி அலைந்தாலும் விடிவு என்பது கேள்விக்குறிதான். நாவலின் தொடக்கத்தில் 89-வது வயதில் மரணத்தின் நிழலில் வசித்த ஔரங்கசீப்பின் இறுதி நாட்கள், வெறுமையும் கசப்பும் ததும்பிடச் சொல்லப்பட்டுள்ளன. அரியணையைக் கைப்பற்றிட சகோதர்களைக் கொன்றது முதலாக ஔரங்கசீப்பின் அதிகாரம் போர்களின் மூலம் ரத்தக் கவிச்சியுடன் எங்கும் பரவியது. அளவுக்கதிகமான அதிகாரம் தந்த போதையினால் கொன்று குவித்த மனிதர்களின் எண்ணிக்கைக்குக் கணக்கேது? யாரையும் நம்ப முடியாமல், நெருங்கிய உறவினர்களையும் அண்டவிடாமல், அரவாணியும் மஹல்தாருமான அஜ்வா பேகத்தின் உபசரிப்பில் வாழ்ந்திடும் ஔரங்கசீப்பின் இறுதி நாட்கள் வலியுடன் கண்ணீரில் கரைகின்றன. அவரின் இறப்பினுக்குப் பின்னர் மாறுகிற அரசியல் காட்சிகள் காரணமாக அரவாணியான அஜ்வா மீது குற்றங்கள் சுமத்தப்பட்டு, சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்து கொல்லப்படுகிறார். வரலாற்றின் மறுபக்கத்தில் அதிகாரத்தின் ஆதிக்கத்தினால் குரலற்றவர்கள் பட்ட துயரங்கள், காலந்தோறும் காற்றில் மிதக்கின்றன. அதிகாரத்தின் பிடியில் சிக்கி, உரிமை இழந்த ஒடுக்கப்பட்டவர்களுக்கான நீதி எப்பொழுதும் கேள்விக்குறியாவதை, நாவல் அழுத்தமாகப் பேசுகிறது. வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்து எழுதப்பட்டுள்ள நாவலான இடக்கை, சமகால அரசியலுடன் உரையாடுகிறது.

இரண்டாயிரமாண்டுப் பாரம்பரியமான தமிழர் வரலாற்றில் இழந்தவை அளவற்றவை. இழந்தது குறித்து புலம்பலையும், மரபு குறித்துப் பெருமையையும் படைப்பாக்கத்தில் சித்திரிப்பது அல்ல படைப்பாளியின் நோக்கம். இதுவரை சமூகம் கட்டமைத்திருந்த விழுமியங்களையும், அவற்றுக்கு எதிரான சிதலங்களையும் அடையாளப்படுத்திடவும் அறிந்துகொள்வதற்கும் ஒரேவழி படைப்புகள்தான். கடந்த நூற்றாண்டுகளில் செழிப்புடன் வாழ்ந்தவர்களும், துயரத்துடன் வாழ்ந்தவர்களும் மறைந்துபோன வரலாற்றைத் துன்பியல் / இன்பியல் நாடகத்தின் காட்சிகள் என்று சொல்லமுடியுமா? யோசிக்க வேண்டியுள்ளது. கடந்துபோன சமூகம் குறித்த நினைவுகளை வரலாறு என்ற சொல்லின் வழியாகக் கண்டறிந்திட முயன்ற படைப்பாளர்களின் ஆக்கங்களில், இன்றைய நவீன வாழ்க்கையில் எதைத் தொலைத்திருக்கிறோம், எதை மறந்துவிடக் கூடாது என்பவை அடியோட்டமாகப் பதிவாகியுள்ளன. வரலாறு என்பது பெரிதும் புனைவுகளின் தொகுப்பு என்ற கருதுகோள் நிலவும் சூழலில், கிடைத்துள்ள ஆதாரங்களின் வழியாகப் படைப்பாளி, புனைவின் வழியாகக் கட்டமைத்திட முயலுகிற நாவலின் கதைக்களன், ஒருவகையில் வரலாற்றை மீட்டுருவாக்கிட முயலுகிறது. வரலாறும் புனைவும் ஒத்திசைந்து மயங்கினாலும் வரலாறு, படைப்பு / வாசிப்பின்மூலம் அடுத்த தலைமுறைக்குப் பயணிப்பது, ஒருவகையில் விநோதம்தான்.

 

https://uyirmmai.com/article/வரலாற்றை-மீட்டுருவாக்கு/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளர் சிலாகித்த நாவல்கள் என்னிடம் இல்லை. ஆனால் அவரால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான காவல் கோட்டம் நூலை சாகித்திய அகாடமி விருது பெற்ற காரணத்தால் வாங்கிவைத்துள்ளேன். 

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளார் கூறிய நாவல்கள் என்னிடமும் இல்லை, ஆனால் நான் சமீபத்தில் வாசித்த நாவல் “ மணிபல்லவம்” (நா. பார்த்தசாரதி) கூட பண்டைய பூம்புகார், மணிபல்லவத்தின் சாதாரண மனிதர்களை பற்றி கூறுகிறது

திருநங்கூர் அடிகள், பெளத்த துறவி விசாகை, பெருநிதி செல்வர், அவரது புதல்விகள், கபாலிகர், நாகர்  போன்றவர்களின் வாழ்க்கை முறை, சமய வாதங்கள், வாழ்க்கை சித்தாந்தங்கள், போராட்டங்கள், என பண்டைய காலத்தில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கையை மணிபல்லவம் கூறுகிறது. 

சரித்திர நாவல்கள் என்றாலே, அரசர் அரசி, படைத்ததலைவர், அமைச்சர்கள் பற்றிய அதிகம் கூறுவது வழமை, அதிலிருந்து விலகி அரசர் வாழ்ந்த காலத்தில் சாதாரண மனிதர்களும் வாழ்ந்திருப்பார்கள் தானே, அவர்களைப்பற்றி கூறுகிறது மணிபல்லவம் 

7480-F217-511-B-4-F8-A-82-B4-F438-D537-F

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 11/15/2019 at 1:16 PM, பிரபா சிதம்பரநாதன் said:

சமீபத்தில் வாசித்த நாவல் “ மணிபல்லவம்” (நா. பார்த்தசாரதி)

நா. பார்த்தசாரதியின் நாவல்களை பதின்ம வயதுகளில் படித்திருக்கின்றேன். இலட்சிய கதை மாந்தர்கள் உலவும் உலகமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/18/2019 at 5:34 AM, கிருபன் said:

நா. பார்த்தசாரதியின் நாவல்களை பதின்ம வயதுகளில் படித்திருக்கின்றேன். இலட்சிய கதை மாந்தர்கள் உலவும் உலகமாக இருக்கும்.

உண்மைதான்.. இதில் வரும் கதாபாத்திரங்களில் இளங்குமரனின் வாழ்க்கையை ஓர் அழகிய தத்துவம் என கூறிகிறார். என்னைப்பொறுத்தவரை, அதை ஏற்க முடியவில்லை. 

நான் இவருடைய  நாவல்களில் “பாண்டிமா தேவி” வாசித்திருக்கிறேன், “ மணி பல்லவம்”  இரண்டாவது நாவல்.

சமயம் கிடைக்கும் போது இவருடைய மற்றைய நாவல்களையும் வாசிக்க முயற்சிக்கிறேன்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.