Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடந்த காலத்தை மறக்கச் சொல்பவர்கள் அனுராதபுரத்தில் சத்தியப்பிரமாணம் செய்வது சரியானதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உரிமைக்கான போராட்டம் நடைபெற்ற ஒருநாட்டில், அபிவிருத்தி மூலம் தீர்வு காணப்பட்ட ஒரு நாட்டை உங்களால் உதாரணம் காட்ட முடியுமா என பிரான்ஸ் நாட்டின் மனித உரிமைகள் செயற்பாட்டு மையத்தின் இயக்குனரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமாகிய ச.வி. கிருபாகரன் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு எழுதியுள்ள பகிரங்க மடலில் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவரின் பகிரங்க மடலில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்கட்கு,

வணக்கம்!

உங்களுக்கு என்னைபற்றிய அறிமுகம் தேவையில்லையென நம்புகிறேன்! சுருக்கமாக, எது எப்படியானலும் இன்று இக் கடிதத்தை உங்களுக்கு எழுதகூடிய நிலையில் உள்ளேன்! ஸ்ரீலங்காவின் நிறைவேற்று ஜனாதிபதியாக நீங்கள் அண்மையில் பெற்ற வெற்றிக்கு, எனது உணர்வு உங்களை வாழ்த்த அனுமதிக்கவில்லை இதுவே எனது சக தமிழர்களது நிலையாக இருக்குமென நம்புகிறேன்.

உங்கள் வெற்றி பற்றிய ஆருடத்தை ஜூலை 2019 இல் நான் கணித்திருந்தேன் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்களென நம்புகிறேன். "கோட்டாபயவை சரத்பொன்சேகா மிக எளிதில் தோற்கடிப்பார்!" என்ற எனது கட்டுரையை நீங்கள் படித்திராது இருந்தால் ஒருமுறை படித்து பார்க்கவும்.

இக் கட்டுரையில், சரத்பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால், நீங்கள் தோற்கடிக்கப்படுவீர்கள் என்று கூறத் தவறவில்லை. சிங்கள பௌத்த வாக்காளர்களைப் பொறுத்தவரையில், இரண்டு "யுத்தத்தின் கதாநாயகர்களுக்கு" இடையேயான தேர்வாக இருந்திருக்கும். இதில் பொன்சேகாவிற்கு வாய்ப்பு அதிகம்.

நான் உங்கள் இருவரையும் ‘சில்லறை வீராங்கனைகள் ’என்றே என்றும் கூறுவதுண்டு. காரணம், அண்டை நாடான இந்தியாவும் சர்வதேச சமூகமும், ஸ்ரீலங்காவின் போர் முயற்சிகளை ஆதரிக்கவில்லை என்றால், இப்பொழுது ஒன்றில் தமிழீழ மக்கள் தங்கள் வெளிவாரியன சுயநிர்ணய உரிமையை அடைந்திருப்பார்கள், இல்லையேல் தமிழீழ மக்களது ஆயுத போராட்டம் இன்றும் நீடித்திருக்கும். நீங்களும் உங்கள் சகோதரர் மஹிந்த ராஜபக்சவும், போரில் இந்தியாவின், அதாவது இந்திய காங்கிரஸின் ஈடுபாடு பற்றி போர் முடிந்தவுடன் கூறியவற்றை மறந்திருக்க மாட்டீர்களென நம்புகிறேன்.

இருப்பினும், உங்கள் வெற்றியும் உங்கள் வெற்றிக்கு நீங்கள் பயன்படுத்திய வழிகளும் பல்வேறு பகுப்பாய்வுகளைக் கொண்டுள்ளன. அந்த பகுப்பாய்வுகளை பற்றி மிக சுருக்கமாக கூறுவதுடன், சில விடயங்களை உங்களுக்கு கூற விரும்புகிறேன்.

ஸ்ரீலங்காவில், நிறைவேற்று ஜனாதிபதி முறை, 1978 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன், ஸ்ரீலங்காவின் உச்ச மன்றமாக நாடாளுமன்றம் திகழ்ந்தது. 1970 மே மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒருவர் கருத்தில் கொள்ளும்போது, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையில், இலங்கை சுதந்திரக் கட்சி – இடதுசாரிக் கட்சிகளுடன் ஐக்கிய முன்ணணி என்று அழைக்கப்படும் கூட்டணியால் தெற்கில் பெரும்பான்மையான தொகுதிகளில் பெரும் வெற்றியை பெற்று கொண்டது.

இதே போன்று 1977ம் ஆண்டு ஜூலை மாதம், ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் தலைமையில், ஐக்கிய தேசியக் கட்சி தெற்கில் ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றது. யாரும் விரும்பினார்களோ இல்லையோ, இந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களும், தூய்மையான சிங்கள பௌத்த வாக்குகளால் பெற்ற வெற்றிகளே. ஆகையால் தற்பொழுது நீங்களும், உங்கள் குடும்பத்தினரும், உங்கள் கட்சியும், உங்கள் ஆதரவாளர்களும், உங்கள் வெற்றியைப் பெருமைப்படுத்துவதற்கு விசேடமாக ஒன்றுமில்லை.

உங்கள் பதவியேற்பு உரை, இந்திய தொலைக்காட்சி பாரத் சக்தி தொலைக்காட்சியுடனான உங்கள் முதல் நேர்காணல், இந்துஸ்தான் டைம்ஸ், இந்து ஆகியவற்றுடனான உங்கள் நேர்காணல்கள், மற்றும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு உங்கள் பத்திரிகையாளர் மாநாடு ஆகியவற்றில் நீங்கள் கூறிய கருத்துக்கள் பற்றிய சில விடயங்களை உங்களிற்கு கூற விரும்புகிறேன், சகல நேர்காணல்களிலும் நீங்கள் 'அபிவிருத்தி என்பது நல்லிணக்கம்' என்ற புதிய கோட்பாட்டை அறிமுகம் செய்துள்ளீர்கள். அத்தனை நேர்காணல்களிலும், வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்கள் உட்பட முஸ்லிம்களது நீண்டகாலமாக தீர்க்கப்படாத அரசியல் அபிலாஷைகள் உள்ளது என்பதை நீங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.

நீங்கள் கூறும் கருத்துக்களை வெளிநாட்டவர்கள் கேட்கும் பட்சத்தில் - வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்கள் படிக்காதவர்கள், வேலையற்றவர்கள், வறுமை மற்றும் பல சமூகப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்று நினைக்க தோன்றும். இதில் வேடிக்கை என்னவெனில், இலங்கைதீவின் சுதந்திரத்திற்கு பின்னர் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களை மிக தவறான பாதையில் இட்டு சென்றார்களென என குற்றம் சாட்டுகிறீர்கள்.

உண்மை என்னவெனில், சுதந்திரம் பெற்றதிலிருந்து, சிங்கள பௌத்த அரசியல்வாதிகள், தமிழ் தலைவர்கள் மீதும், வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் மீதும் சவாரி செய்தனர் என்பதற்கு ஆயிரம் உதாரணங்கள் உண்டு. சிங்கள தலைவர்களினால், பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம் ஆகியவை தன்னிச்சையாக கிழித்து எறியப்பட்டதுடன், அரசாங்கத்தினால் ஏவிவிடப்பட்டு தமிழர்கள் மீதான இனரீதியான தாக்குதல்கள், கல்வி தரப்படுத்தல், போர்நிறுத்த ஒப்பந்தங்களை ரத்து செய்தல், மனித உரிமை மீறல்களில் சிங்கள குடியேற்றம், பௌத்தமயம், இராணுவமயம், சிங்களமயம் ஆகியவற்றை உள்ளடக்கிய மிக கொடுரமான மனித உரிமை மீறல்கள், போர்குற்றங்கள், இன அழிப்பு போன்றவற்றை நீங்கள் முற்று முழுதாக மூடி மறைத்துள்ளீர்கள். இலங்கை சுதந்திரம் பெற்ற 1948 ஆம் ஆண்டு முதல் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட முப்பது சாத்வீக போராட்டம், முப்பது ஆண்டுகள் ஆயுதப் போராட்டத்தின் காரணிகளை நீங்கள் அறவே அலட்சியம் பண்ணியுள்ளீர்கள்.

உலகில், விடுதலைப் போராட்டம் அல்லது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் நடைபெற்ற ஒருநாட்டில், அபிவிருத்தி மூலம் தீர்வு காணப்பட்ட ஒரு நாட்டை உங்களால் உதாரணம் காட்ட முடியுமா? கோட்டாபய, இலங்கைதீவில், சிங்கள ராஜ்யங்களைப் போல்ஒரு தமிழ் இராச்சியம் இருந்துள்ள வரலாற்றை நீங்கள் முற்றிலும் அலட்சியம் செய்துள்ளீர்கள். எங்களை கடந்த காலத்தை மறக்கும்படி அசட்டையாக கேட்கிறீர்கள். மாறாக, இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக, ஒரு புராதன புனித புத்த கோவிலில் சத்திய பிராமாணம் செய்வதற்கு நீங்கள் கொழும்பிலிருந்து அனுராதபுரத்திற்குச் சென்றீர்கள்.

தமிழ் மன்னர் எல்லாளனை தோற்கடித்ததன் நினைவாக சிங்கள மன்னர் துட்டகைமுனு இந்த கோவிலைக் கட்டினார் என்பது சரித்திரம். கடந்த காலத்தை நாங்கள் மறந்துவிடுவதை நீங்கள் விரும்பினால், நீங்கள் மட்டும் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு அனுராதபுரம் செல்வது சரியானதா?

சிங்கள பௌத்தரின் வரலாறு உங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஆனால் தமிழர்களாகிய நாங்கள் எங்கள் வரலாறு, எங்கள் தாயக பூமி, எங்களிற்கு செய்யப்பட்டுள்ள அட்டூழியங்கள், போர்க்குற்றங்கள், காணாமல் ஆக்கப்பட்டோர், விசேடமாக உங்களதும், உங்கள் சகோதரர் காலகட்டத்தில் செய்யப்பட்ட அனைத்து மீறல்களையும் மறந்துவிட வேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்.

சிறுபான்மையினர், பெரும்பான்மையினரை தொந்தரவு செய்யவோ அவர்கள் சந்தேகிக்கும் எதையும் செய்யக்கூடாது என்று நீங்கள் எமக்கு நிபந்தனை போடுகிறீர்கள். முதலாவதாக, தமிழர்களாகிய நாங்கள் ஒரு ‘தேசிய’ இனம். தெற்கில் உள்ள சந்தர்ப்பவாதிகள் கூறுவது போல் நாம் சிறுபான்மையினர் அல்ல.

உங்கள் நோக்கங்களுக்கு ஏற்ப புதிய சொற்களைக் கண்டுபிடிப்பதில் நீங்கள் அனைவரும் வல்லவர்கள். உங்களுடைய வேண்டுகோளை உங்களுடன் இணைத்திருந்து அடிமை வாழ்வு வாழும் தமிழர்களால் முழுமையாக ஏறக்கப்படலாம். ஆனால் தமது அரசியல் அபிலாஷைகளுக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்யும் தமிழர்கள் ஏற்க மாட்டார்கள்.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானத்தை நீங்கள் ஏற்க முடியாது என்பதுதான் உங்கள் மற்றைய கோட்பாடு – இது இவ் நூற்றாண்டின் பெரிய நகைச்சுவையாகும். முன்னைய அரசாங்கத்துடன் சம்மதத்துடன் நிறைவேற்றப்பட்ட ஐ.நா.மனித உரிமை சபையின் தீர்மானமான 40/L1 என்பது, உங்கள் சகோதரர் காலத்தில், அதாவது 2012 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமை சபையினால் நிறைவேற்றப்பட்ட 19/2 தீர்மானத்தின் தொடர்ச்சி என்பதை நீங்கள் அறியவில்லை போலும்.

இருப்பினும், ஐ.நா. அங்கத்துவ நாடுகள் தமது சர்வதேச கடமைகள் காரியங்களை எவ்வாறு பின்பற்றுகின்றன, தொடருகின்றன என்பதை உங்களிற்கு இலகுவாக விளங்கும் வகையில், புரிய வைக்க விரும்புகிறேன். உங்களுக்கு மிக நட்பு நாடான சீனாவை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் சகோதரர் ஜனாதிபதியாக கடமையாற்றிய காலத்தில், ஸ்ரீலங்கா சீனாவிடமிருந்து பெரும் தொகையான பணத்தை கடனாக பெற்று கொண்டது. இது ஸ்ரீலங்காவை பெரும் சிக்கலான நிலைக்கு தள்ளிவிட்டது. ஆட்சிக்கு வந்த மற்றைய அரசாங்கம், அதை சமாளிக்க நிர்பந்திக்கப்பட்டது. உங்கள் கோட்பாடு சரியாக இருந்தால், மற்றைய அரசாங்கம், சீனாவிடம், உங்கள் சகோதரர் காலத்தில் நீங்கள் கொடுத்ததாக கூறியிருக்கலாம். ஆனால் அவர்கள் உங்களை போல் சிந்திக்கவில்லை.

உலகம் இந்த முறையில் இயங்கவில்லை. பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் போன்றவர்கள் உங்களுக்கு ஆலோசனை கூறும்பொழுது, இந்த கோட்பாட்டைப் பற்றி ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இவை சர்வதேச அரங்கில் உங்களுக்கு அவமானத்தையும் வெட்கத்தையும் சம்பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.

உங்கள் அரசியல் கட்சியான எஸ்.எல்.பி.பி, சிறந்த கல்வியாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸைக் கொண்டுள்ளது என்று சிலர் நினைக்கிறார்கள். உங்கள் பத்திரிகையாளர் கூட்டத்தில் அவர் கூறியதாவது, ‘ஸ்ரீலங்காவின் அரசியலமைப்பு எந்தவொரு ஐ.நா. தீர்மானத்தையும் அனுமதிக்காது, ஏற்றுக்கொள்ளாது’ என்பது நகைப்புக்குரிய விடயம்.

அவர் சொல்லும் விதத்தில், ஐக்கிய நாடுகள் சபை தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு முன்னர், ஒவ்வொரு நாட்டின் அரசியலமைப்பையும் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

செப்டம்பர் 2007 இல் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை சபையின் 6 ஆவது கூட்டத்தொடரின் வேளையில், ஸ்ரீலங்காவின் தூதுவரலாயத்தினால் நடாத்தப்பட்ட ஒரு கூட்டத்தில், பேராசிரியர் ஜி.எல். பீரிஸிற்கும் எனக்கும் இடையில் நடைபெற்ற விவாதத்தை இவர் மறந்திருக்க மாட்டார் என நம்புகிறேன். அவ்வேளையில் ஸ்ரீலங்காவின் ஊடகங்கள் இது பற்றிய செய்தியை பெரிதுபடுத்தி வெளியிட்டிருந்தன.

ஸ்ரீலங்காவிற்கு வருகை தராமல், அறிக்கைகள் எழுதப்பட்டதாக நீங்கள் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தீர்கள். மன்னிக்கவும், அது உண்மை இல்லை.

ஸ்ரீலங்கா பற்றிய ஒவ்வொரு ஐ.நா. அறிக்கைகளும் எழுதப்பட்ட வேளையில், ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் உள்ளிட்ட ஐ.நா. பணியாளர்கள் வருகை தந்த பின்னரே, சகல அறிக்கைகளும் வெளியிடப்பட்டிருந்தன.

ஐ.நாவின் வழமை என்னவெனில், ஒரு நாடு பற்றி அறிக்கை வெளியிடுவதற்கு முன்பு அவர்கள் எப்பொழுதும் சம்பந்தப்பட்ட நாட்டிற்கு முன்கூட்டியே அறிக்கையை வழங்குகிறார்கள்.

நீங்கள் என்றும் ‘பௌத்தம்’ மற்றும் அதன் ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாறு போன்றவற்றைப் பற்றி பேசுகிறீர்கள். பௌத்த மதமும் அதன் சரித்திரம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வதற்கு முன், இந்த மாபெரும் ஞானியான புத்தர் யார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்? புத்தரின் வரலாறு மற்றும் தமிழர்கள் அவர்களது மொழி, வரலாறு பற்றி அறியாமல், உங்களிடம் ஆட்சி இருப்பதற்காக வெறுமனே விடயம் விளங்காது கதைக்கின்றீர்கள்.

உங்கள் மொழி, மதம் மற்றும் இனத்திற்காக நீங்கள் இருப்பதுபோல், ஒவ்வொரு தமிழர்களும் முஸ்லிம்கள் உட்பட, தங்கள் மொழி, மதம், இனம் ஆகியவற்றை மனிதநேயத்தின் அடிப்படையில், தமது அரசியல் உரிமைக்காக உள்ளனர். கடந்த காலத்தை மறந்துவிடுங்கள், எதிர்காலத்தைப் பற்றி மட்டும் பேசுங்கள், சிந்தியுங்கள் என்று நீங்கள் கூறுவதன் அர்த்தம் என்னவோ?

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றி என்ன சொன்னார் என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். அவர் கூறியதாவது, "கடந்த காலம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு ஒரு பிடிவாதமான தொடர்ச்சியான மாயை மட்டுமே" என கூறியுள்ளார். பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் பற்றி நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை நீங்கள் ஏற்கனவே முடிவு செய்துள்ளீர்கள். ஆகையால் இப்போது நீங்கள் அனைவரையும் முட்டாளாக்குகிறீர்கள்.

கோட்டாபய, நீங்கள் கடந்த காலத்தைப் பற்றி அரசியலின் அடிப்படையில் தீவிரமாக சிந்திக்காவிட்டால், நீங்கள், சத்தியப்பிரமாணம் செய்துள்ள அனுராதபுரத்திற்கு ஏன் சென்றீர்கள்? நீங்கள் கூறுவது போல், நீங்கள் ஸ்ரீலங்காவிற்கு உள்ள அனைவருக்கும் ஜனாதிபதியாக இருந்தால், சத்தியப்பிரமாணம் செய்வதற்கான இந்த இடத்தின் தேர்வு என்பது விஷம், இனவாதம் மற்றும் இனவெறி ஆகியவை நிறைந்து காணப்படும் இடம் என்பது சரித்திரம்.

நீங்கள் எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே கருத்தில் கொண்டால், நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் எவ்வாறு புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றோம் என நீங்கள் மக்களிற்கு கூறி, எப்படி தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியும்? நாங்கள் யாவரும் ‘இலங்கையர்களாக’ வாழ்வோம் என்று சொல்கிறீர்கள். உங்கள் சகோதரர் மகிந்த யுத்தம் முடிந்த உடனேயே, 'இந்த நாட்டில் சிறுபான்மையினர் என்று யாரும் இல்லை' என்று சொன்னதற்கும் இதற்கும் வேறுபட்டில்லை.

எல்லோரையும் கடந்த காலத்தை மறக்கச் சொல்லவதற்கு உங்களிற்கு பல காரணங்கள் உள்ளன என்பதை நாம் அறிவோம். நீங்கள் இராணுவத்தில் சேவையாற்றிய காலம், நீங்கள் இராணுவத்திலிருந்து வெளியேறிய கால கட்டம், உங்களது அமெரிக்க குடியுரிமை, நீங்கள் காரணமாகவுள்ள போர்குற்றங்கள், மற்றும் உங்கள் சகோதரரின் ஆட்சி காலத்தில் நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் செய்த ஊழல்கள் அனைத்தும், மற்றவர்களை கடந்த காலத்தை மறக்குமாறு கூற நீங்கள் ஊக்குவிக்கபடுகின்றீர்கள்.

நீங்கள் ஜனதிபதியாக சத்திய பிரமாணம் எடுத்தவுடன் ஆற்றிய ஆரம்ப உரையில், “நான் இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, எனது நிறைவேற்று அதிகாரத்தை நாட்டின் நலனுக்காக பயன்படுத்த ஒருபொழுதும் தயங்க மாட்டேன் என்று கூறியது, உங்கள் மொழியில் நீங்கள் கூறும் சிறுபான்மையினருக்கான அச்சுறுத்தல் என்பதை முழு உலகமே அறியும்.

உங்களிடம் வெளிப்படையான எனது கேள்வி என்னவெனில், ஸ்ரீலங்காவில் அபிவிருத்தி முக்கியமானது என்பதை நீங்கள் எப்போது நினைத்தீர்கள்? நீங்கள் உண்மையில் உங்கள் நாடான ஸ்ரீலங்காவிற்கும், பௌத்த மதத்திற்கான தேசபக்தர் என எண்ணியிருந்தால், நீங்கள் ஏன் இலங்கையை விட்டு ஓடி அமெரிக்க குடியுரிமையை பெற்று கொண்டீர்கள்? உங்கள் சகோதரர் மகிந்த, நான்காவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாததால், நீங்கள் இன்று ஜனாதிபதியாகியுள்ளீர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

இப்பொழுதுது நீங்கள் கூறும் ஆசிய பிராந்தியத்தில் உங்கள் நடுநிலைமை என்பது உண்மையானது அல்ல. இந்தியா மற்றும் அமெரிக்காவை முட்டாளாக்குவதற்காக, இச் சிந்தனை மிகவும் தாமதமாக உங்களிற்கு வந்துள்ளது. ஒருவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், சீனா ஏற்கனவே இலங்கையில் ஒரு நிரந்தர தளத்தை அமைத்துள்ளது.

இது உங்கள் சகோதரரின் ஆட்சி காலத்தில், மற்றும் நீங்கள் பாதுகாப்பு செயலாளராக இருந்துள்ள காலத்தில் செய்யப்பட்வை. இப்பொழுது யாரோ ஒரு புத்திசாலியின் ஆலோசனையில் பிராந்தியத்தில் நடுநிலைமை பராமரிக்கப்படும் என்று போலியாக கூறி, இந்தியாவையும் அமெரிக்காவையும் மகிழ்விப்பதற்காக முதலை கண்ணீரை சிந்த ஆரம்பித்துள்ளீர்கள்.

நீங்கள் ஜனாதிபதியாக கடமை ஏற்றது முதல் கச்சதீவை சீனாவிற்கு தாரை வார்த்து கொடுக்க நடைபெறும் ரகசிய பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களின் முயற்சிகளை வல்லரசுகளின் புலனாய்வுகள் அறிந்துள்ளன. அத்துடன் மேலும் நானூறு ஏக்கர் காணியை தெற்கில் சீனாவிற்கு வழங்க இருப்பதையும் யாவரும் அறிவார்கள்.

ஸ்ரீலங்காவிற்கு 1976ஆம் ஆண்டு கச்சதீவை வழங்கியதையிட்டு, இந்தியா தற்பொழுது மிகவும் கடுமையாக கவலைப்படுவதை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்களென நம்புகிறேன். அம்பாந்தோட்டை துறைமுகத்தை, மற்றைய அரசாங்கத்திடமிருந்து, சீனா தொண்ணூற்றொன்பது ஆண்டுகள் குத்தகைக்கு எடுக்கப்படுவதற்கு முன்பு, சீனாஉங்களுடன் மற்றும் உங்கள் சகோதரர் மகிந்தவுடனும் ஆலோசனை நடத்தியுள்ளது.

நீங்கள் இருவரும் ஆட்சியில் இல்லாதபொழுது, சீனாவுக்கு பல தடவை பயணங்களை செய்துள்ளீர்கள் என்பதை நீங்கள் மறுக்க முடியாது. இந்தியாவில் இந்திய காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபொழுது, யுத்தம் முடிவடைந்தவுடன், 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுவதாக மட்டுமல்லாமல், பதின்மூன்று பிளஸையும் செயல்படுத்துவார் என்ற போலி வாக்குறுதியுடன் உங்கள் சகோதரர் இந்தியாவின் உதவியை நாடினார்.

போர் முடிந்த உடனேயே, உங்கள் சகோதரர் இந்தியாவிற்கு அளித்த தனது வாக்குறுதிகளிருந்து நளுவியுள்ளார். துர்அதிர்ஷ்டவசமாக, மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகியோர் உங்கள் சகோதரருக்கு அழுத்தம் கொடுக்க முடியவில்லை. ஏனெனில் நீங்கள் இருவரும், நடைபெற்று முடிந்த போரில் இந்தியாவின் பங்கு பற்றி கூறுவோமென கூறி இந்தியாவை மிரட்டினீர்கள்.

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததும், உங்கள் சகோதரர், மோடியிடம் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயல்படுத்துவார் என்று மற்றொரு போலி வாக்குறுதியை அளித்தார். இந்த காலகட்டத்தில், உங்கள் சகோதரரின் அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்துள்ளதுடன் அவரும் நிறைவேற்று அதிகாரத்தை கொண்டிருந்தார். ஆனால் இவரினால் வடக்கு மற்றும் கிழக்கு வாழ்மக்களின் அரசியல் அபிலாசைகள் எதையும் நிறைவேற்றவில்லை.

2010 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு வாக்களிக்காத வடக்கு மற்றும் கிழக்கு மக்களை இவர் பழிவாங்கினார் என்பதே உண்மை. இப்பொழுது நீங்களும் அதேபாணியில் தான் பயணிக்கிறீர்கள்!

உங்கள் சகோதரரின் காலத்தின் பின்னர், நல்லாட்சி என்று அழைக்கப்படும் பேய்காட்டு ஆட்சி பதவிக்கு வந்தது. அதில் உங்கள் நல்ல நண்பர்கள், மற்றும் மங்கள சமரவீர போன்ற பேய்காட்டு வீரர்கள் உங்கள் சகோதரரின் பாதையை மென்மையான குரலுடன் பின்பற்றினர்.

வெளிப்படையாகச் சொல்வதானால்,பெயர் மற்றும் புகழுக்காக பெரிதாக ஆசைப்படும் சில அனுபவமற்ற புலம் அல்ல புலன் பெயர்ந்த தமிழர்கள், இந்த பேய்காட்டு ஆட்சி வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்களின் அரசியல் குறைகளைத் தீர்க்கப் போகிறது என்று உறுதியாக நம்பினர்கள்.

மங்கள சமரவீர இவர்கள் சிலரின் பிறந்தநாட்களிற்கு வாழ்த்து சொல்வதுடன், அவர்களுடன் விருந்துகளை நடத்தி இவர்களை மடையர்கள் ஆக்கினார். நீங்களும் இவர்களிற்கு இவற்றை செய்வீர்களானால், இப்புலன் பெயர்ந்த தமிழர்கள், உங்கள் சார்பாக பல அறிக்கைகளை வெளியிடுவார்கள்.

நீங்கள் ஜனதிபதியாக சத்திய பிரமாணம் எடுத்தவுடன் ஆற்றிய ஆரம்ப உரையில், நான் இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி. எனது நிறைவேற்று அதிகாரத்தைநாட்டின் நலனுக்காக பயன்படுத்த ஒருபொழுதும் தயங்க மாட்டேனென கூறியுள்ளீர்கள்.

எது எப்படியானாலும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் உங்களிற்கு இரண்டில் மூன்று பெரும்பான்மையை பெறும் வரை, நீங்கள் மிகவும் கவனமாக செயல்படுவீர்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை. தற்பொழுது சிறைச்சாலையில் உள்ள போர் குற்றவாளிகள், ஊழலில் ஈடுபட்ட பாதுகாப்பு வீரர்கள் மற்றும் துணை இராணுவ ஒட்டு குழு உறுப்பினர்களை விடுவிக்க மட்டுமே நீங்கள் பயன்படுத்துவீர்கள்.

நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் இது வேறு கதையாக இருக்கும். முன்னைய அரசாங்கத்தால் பலர் அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நீங்கள் கூறுகிறீர்கள். உங்கள் அரசியல் நோக்கம் கொண்ட செயல்பாடுகளை பார்ப்பதற்கு அனைவரும் காத்திருக்கிறார்கள்.

நீங்கள் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற பின்னர், நிச்சயம் இவை நடைபெறும். 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர், சரத் பொன்சேகா மற்றும் வேறு பலருக்கு எதிராக, உங்கள் நடவடிக்கையும் அரசியல் நோக்கம் கொண்டது என்பதை மறந்துவிடாதீர்கள்.

ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச சமூகம் மற்றும் இந்தியா போன்றவை, நீங்கள் எவ்வாறு அதிகாரங்களை பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பார்க்கிறார்கள். பௌத்த சிங்களவருக்கு முன்னுரிமை அளிப்பதன் அடிப்படையில் இது பயன்படுத்தப்படும் என்பது வெளிப்படையானது.

இந்துஸ்தான் பத்திரிகைக்கு நீங்கள் அளித்த பேட்டியில், நீங்கள் கூறிய பின்வரும் விடயம் தமிழர்களை மட்டுமல்ல, 13வது திருத்தத்தின் முக்கிய நடுவராக இருக்கும் இந்தியாவுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள்.

எங்கள் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் சில பகுதிகள் எங்களால் செயல்படுத்த முடியாது. எனவே எங்களுக்கு சில மாற்றங்கள் தேவை. ஆனால் தமிழ் அரசியல் பிரச்சனை என்று அழைக்கப்படுவதை ஒரே கோணத்தில் மட்டுமே நாம் ஏன் எப்பொழுதும் அணுக முயற்சிக்கிறோம்? நமது தமிழ் அரசியல்வாதிகள் இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து அதிகாரப்பகிர்வு மற்றும் பிற மாதிரிகள் பற்றிப்பேசுகிறார்கள்.

இறுதியாக சில முக்கிய விடயங்களை உங்களிற்கு அழுத்தம் திருத்தமாக கூற விரும்புகிறேன். சுதந்திரம் பெற்றதிலிருந்து, தமிழர்கள் என்று கூறும்பொழுது, அது எப்பொழுதும், முஸ்லிம்களையும் இணைத்து குறித்தது. முன்பு முஸ்லிம்களுக்கு என ஒரு அரசியல் கட்சியிருக்கவில்லை. இருப்பினும், ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பத்தை தொடர்ந்து, தெற்கின் உங்கள் அரசியல்வாதிகள், தமிழ் முஸ்லிம்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி, பிரித்து ஆளும்’ கொள்கையை நடைமுறை படுத்தியிருந்தனர். அத்துடன் நீங்கள் போரில் வெற்றிகளை பெற்று கொள்வதற்காக, முஸ்லிம்களை தமிழர்களுக்கு எதிராக புத்திசாலித்தனமாக பயன்படுத்தினீர்கள்.

தற்பொழுது நீங்கள் முட்டாள்தனமான தமிழர்களை, முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்தத் தொடங்கியுள்ளீர்கள். இந்த மாற்றத்தை நாம் தினமும் காணுகிறோம். உங்கள் ஜனாதிபதி காலத்தில், வடக்கு மற்றும் கிழக்கில் அல்லது கொழும்பில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டால் அதில் ஆச்சரியபடுவதற்கு ஒன்றுமில்லை.

எதிர்காலத்தில், அதாவது ஐந்து வருடத்தின் பின்னர் மற்றொரு ஜனாதிபதித் தேர்தல் இருக்குமானால், பௌத்தம் பற்றி உங்கள் சொந்த விளக்கத்தை கொண்டுள்ள நீங்கள், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், மஞ்சள் அங்கி அணிந்து ஒரு பௌத்த துறவியாக காணப்பட்டால், யாரும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

முன்பு உங்களுடன் இராணுவத்தில் கடமையாற்றிய உங்கள் தோழர்கள் சிலர், இப்போது மஞ்சள் அங்கி அணிந்திருப்பதை நாங்கள் ஏற்கனவே பார்த்துள்ளோம். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள சில புகைப்படங்களை பார்த்ததன் மூலம், ஒன்றை மட்டும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், உங்களிற்கு எதிராக உங்கள் குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் போட்டியிட முன்வருவதற்கான சாத்வீக கூறுகள் பெரிது காணப்படுகின்றன.

உங்கள் வீட்டு கூண்டில் உள்ள பறவைகளுக்கு சுதந்திரம் கொடுப்பது போல், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு வாழ் மக்களிற்கும் சுதந்திரம் தேவை என்பதை மனதில் கொள்ளுங்கள். உங்கள் தகவலுக்கு - சுப்பிரமணியம் சுவாமி அல்ல இந்தியா; இந்தியா அல்ல சுப்பிரமணியம் சுவாமி என்பதை புரிந்து கொள்ளுவீர்களென நம்புகிறேன். உங்கள் குடும்பம், லஞ்சம் வாங்குவதில் சிறந்தது போல், லஞ்சம் கொடுப்பதிலும் வல்லவர்கள் என்பதை யாவரும் அறிவார்கள்.

நீங்கள் ஒரு சிங்கள பௌத்தராக இருப்பதில் பெருமிதம் கொள்வது போல், தமிழர்களாகிய நாமும் பல மதங்களின் அடிப்படையில் ஈழத் தமிழர்கள் என்பதில் பெருமை கொள்கிறோம். தற்பொழுது, உங்களை வாழ்த்திய நாடுகள், சர்வதேச தலைவர்கள் யார் யார் என்பதை சற்று பார்ப்போம். சீனா, பாகிஸ்தான், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியவை உங்களுக்கு தமது வாழ்த்துக்களை கூறியுள்ளன.

இருப்பினும், இந்தியாவும் அமெரிக்காவும் உங்களை நிபந்தனைகளுடன் வாழ்த்தியுள்ளது என்பதை நீங்கள் மறுக்க முடியாது. அப்படியானால் – பிரித்தானியா, கனடா, ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றுடன் மற்றைய நாடுகளின் நிலை என்னவாயிற்று? தமிழீழ மக்களது அரசியல் அபிலாசைகள், பொறுப்புகூறல் ஆகியவற்றின் அடிப்படையில், நீங்கள் தற்பொழுது கடைபிடிக்கும் நிலை, உரை, கதைகளை நீங்கள் தொடர்ந்துகடைபிடிக்க வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம்.

இது வடக்கு மற்றும் கிழக்கு வாழ் மக்களும், புலம் பெயர்வாழ் மக்களும் தங்கள் அரசியல் அபிலாஷைகளின் முக்கியத்துவத்தை மறக்காது இருக்க வைப்பதுடன், அரசியலில் ஆர்வம் இல்லாத தமிழர்களும் தமதுஅரசியல் உரிமைகளிற்கு குரல் கொடுப்பதற்கு முன்வருவதற்கு நிச்சயம் வழிஅமைக்கும்.

யுத்தம் முடிவடைந்ததிலிருந்து, அண்டை நாடான இந்தியாவும் சர்வதேச சமூகமும் ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் குறித்த ஆட்சியாளரின் கபட நாடகங்களை தினமும் அவதானித்த வண்ணம் உள்ளார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களென நம்புகிறேன்.

உங்கள் தகவலுக்கு - ஜெர்மனியின் அடோல்ப் ஹிட்லரைப் பற்றி யாராவது பேசும்போது அல்லது சிந்திக்கும்போது, உடனடியாக இவர் ஒரு ‘சர்வாதிகாரி’என்று நினைக்கிறார்கள். உண்மை என்னவெனில், இவர் ஜெர்மனியில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பதை பலர் அறிந்திருக்கவில்லை.

ஆனால் காலப் போக்கில், அவர் தன்னை ஓர் சர்வாதிகாரியாக, அரசாங்க வழிமுறைகளை பாவித்து மாற்றி கொண்டார். இறுதியில், ஹிட்லரை ஆதரித்த மக்கள் அவரை நாம் ஏன் தெரிவு செய்தோம் என வருத்தப் பட்டனர்.

நீங்கள் ஹிட்லரின் வாழ்க்கை வரலாற்றைப் முன்பு படித்திருக்காவிட்டால் , ஒரு முறை படியுங்கள். உங்களை அவமானப்படுத்துவது என் நோக்கம் அல்ல. உங்கள் இருவருக்கும் இடையில் பல ஒற்றுமைகள் காணப்படுவதை நீங்களே கண்டு கொள்வீர்கள். உதாரணத்திற்கு ஜெர்மன் குடியுரிமை விடயத்தில் ஹிட்லருக்கு சர்ச்சைகள் இருந்துள்ளன.

இறுதியாக, ஐசாக் நியூட்டனின் ‘ஈர்ப்பு’ கோட்பாட்டை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என நம்புகிறேன்! அவரது கோட்பாட்டிற்கு அமைய, ‘மேலே செல்வது யாவும் கீழே வர வேண்டும்’ என்பதை நிரூபிக்கிறது. உங்கள் எல்லா முயற்சிகளுக்கும் எனது நல்வாழ்த்துக்கள், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்வின் 

இதன் ஆங்கில வடிவம். 

முடிந்தால் சமூக வலைத்தளங்களில் தரவேற்றுங்கள், உங்கள் நாட்டின் வெளிவிவகார அமைச்சருக்கு உங்கள் தொகுதிபாரளுமன்ற உறுப்பினருக்கு சில மாற்றங்களுடன் அனுப்பி வையுங்கள். 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.