Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைச்சு ஊடாக வெல்லப்பட உள்ள அகங்கள்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சு ஊடாக வெல்லப்பட உள்ள அகங்கள்?

காரை துர்க்கா   / 2019 டிசெம்பர் 24

தமிழர்களின் மனங்களை வெல்ல, விசேட அமைச்சு விரைவில் உருவாக்கப்படல் அவசியம் என, ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.  

“இதற்காகத் தனியான அமைச்சொன்றை உருவாக்க வேண்டும்; தமிழ் பேசும் அரசியல்வாதிகளை அன்றி, மக்களை இணைத்துக் கொண்டு, இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்; அந்தப் பொறுப்பை என்னிடம் வழங்கினால், அதை நான் சிறப்பாக வழி நடத்தி, வடக்கையும் தெற்கையும் இணைப்பேன்” என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.  

தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்ன, அவர்களின் உணர்வு என்ன, தமிழ் மக்களின் அபிமானத்தை எவ்வாறு பெற்றுக் கொள்வது? போன்ற விடயங்களை, உள்ளடக்கியதான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  

இவருடைய வேலைத்திட்டம் குறித்தும், அதற்கான அணுகுமுறைகள் குறித்தும் எவரும் அறியாதது அல்ல; மாறாக, அனைவரும் அறிந்த ‘இனப்பிணக்கு’ என்பதுவே, அவர் வெளிப்படுத்திய கேள்விகளுக்கான ஒற்றைச் சொல் விடை ஆகும்.  

இலங்கை சுதந்திரம் கண்ட காலப் பகுதிகளில் (1948) அபிவிருத்தியில் முன் வரிசையில் இருந்தது. அன்று, கடை நிலையில் இருந்த பலநாடுகள் இன்று, இலங்கையைப் பின் தள்ளி விட்டு, அபிவிருத்திச் சுட்டியில் வேகமாக முன்னேறிச் சென்று விட்டன.  

இன்று, அந்த நாடுகளை எட்டிப் பிடிக்க முடியாத நிலையில், நம்நாடு இருப்பதற்கான காரணம், இனப்பிணக்கும் அது ஏற்படுத்திய வடுக்களுமாகும். இதை ஏற்க மறுக்கும் ஒவ்வொரு கணமும், இன்னும் பின்நோக்கிச்  செல்வதற்கே நாம் ஆயத்தமாகின்றோம் என்பதே நிதர்சனம் ஆகும்.  

இதையே நாடு சுதந்திரம் அடைந்த போது, இலங்கைக்குச் சமமாக இருந்த ஜப்பான், தற்போது பல மடங்கு முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால், பூகோள அமைவிட முக்கியத்துவத்துடன், பெருமளவான வளங்களைக் கொண்டிருந்த எமது நாடு, வேகமான அபிவிருத்தியை என்ன காரணத்தால் அடைய முடியவில்லை என்பதைச் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என, அண்மையில் சபாநாயகர் கரு ஜயசூரியா தெரிவித்து உள்ளார்.  

‘எமக்கு என்ன நடந்தது’ எனக் கேட்பதைக் காட்டிலும், ‘எமக்குள் என்ன நடந்தது’ எனக் கேட்பதன் மூலம், இதற்கான விடையும் கிடைக்கின்றது. 

முற்போக்கான சமூகத்தின் அடையாளச் சின்னம், இசைவாக்கம் என்பார்கள். அதுபோலவே, இலங்கையில் இனங்களுக்கு இடையிலான இசைவாக்கம், இல்லாமல் போனமையே அனைத்துப் பின்னடைவுகளுக்கும் காரணம் ஆகும்.  

இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர், ஆட்சி அமைத்த ஆட்சியாளர்கள், சகல இனமக்களையும் ஒரே தேசத்தைச் சேர்ந்த இலங்கையராகப் பார்க்காமல், இனரீதியாகப் பாகுபடுத்திப் பார்த்தமை, தொடர்ந்தும் பார்த்து வருகின்றமையே, நாட்டின் வீழ்ச்சிப் பாதைக்குக் காரணம் ஆகும்.  

இது இவ்வாறு நிற்க, 2015ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி தொடக்கம் 2019ஆம்ஆண்டு நவம்பர் 15ஆம் திகதி வரையான ஐந்து ஆண்டு காலப் பகுதியில், ஆட்சி புரிந்த மைத்திரி, ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கம், ‘நல்லாட்சி அரசாங்கம்’ எனத் தங்களைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.  

நல்லாட்சி அரசாங்கம், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அமைச்சு எனத் தனியான அமைச்சை உருவாக்கினார்கள். 

யாழ்ப்பாணம், கீரிமலையில் ‘நல்லிணக்கபுரம்’ என ஒரு கிராமத்தை உருவாக்கினார்கள். நல்லிணக்கச் செயற்பாடுகள் பல நடைபெற்றன. விஜதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்தது போல, வடக்கையும் தெற்கையும் இணைக்க, பல்வேறு வகையிலான உறவுப்பாலம் நிகழ்ச்சிகளையும் செய்தார்கள். ஆனால், இந்த ஐந்து ஆண்டு காலப்பகுதி நிகழ்ச்சித் திட்டத்தின் செயற்பாடுகள் ஊடாக,  பெற்ற பெறுபேறுகள்தான் என்ன, சாதித்ததுதான் என்ன?

தமிழ் மக்களின் பார்வையில், பூச்சியமே பதி(வாகி)லாக உள்ளது. ஏன் இவ்வாறு நடந்தது? இதற்கான காரணங்கள் இரண்டைக் கூறலாம்.  

முதலாவது, நல்லாட்சி அரசாங்கம், இவ்வாறான நல்லிணக்கச் செயற்பாடுகளை, மானசீகமாகச் செய்யவில்லை. சர்வதேச நாடுகளையும் அமைப்புகளையும் திருப்திப்படுத்தவே செய்தது. அதாவது, தனது கடமையாகச் செய்யவில்லை; மாறாக, கடமைக்குச் செய்தது.  

இரண்டாவது, நல்லிணக்க செயற்பாடுகள் நடைபெற்ற அளவிலும் பார்க்கக் கூடுதலான அளவில், சிங்கள, பௌத்த பேரினவாதத்தை விஸ்தரிக்கும் நடவடிக்கைகள், சிறுபான்மை இனங்களைச் சிறுமைப்படுத்தும் நடவடிக்கைகள், சிறுபான்மை இனங்களின் பூர்வீக வாழ்விடங்களைக் கைப்பற்றும்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டே வந்தன.  

“நாம் ஜனாதிபதித் தேர்தலில் இழைத்த தவறுகளைக் கண்டறிந்து உள்ளோம். அடுத்த பொதுத் தேர்தலுக்கான தேர்தல் பரப்புரைகளை, விகாரைகளிலிருந்தே ஆரம்பிக்க எண்ணி உள்ளோம்” என, ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்து உள்ளனர். 

இவைகள் சுட்டிக்காட்டுவது, பேரினவாத சிந்தனைகளிலிருந்து, மீண்டு எழுந்து வெளியே வர முடியாத அளவுக்கு, நம்நாடு அதற்குள் சிக்கி விட்டது என்பதையாகும்.  

இவ்வாறன நிலைப்பாட்டிலேயிலேயே, இலங்கையை மாறிமாறி ஆண்டு வருகின்ற இரண்டு பேரினவாதக் கட்சிகளும் உள்ளன. இதனால், எழுபது ஆண்டு காலமாகத் தமிழினம், அவர்களது அடி(கெடு)பிடிக்குள் சிக்கித் தனது வாழ்வைத் தொலைத்து வருகின்றது.   

நம்நாட்டில், இன்றும் தீர்வின்றித் தொடரும் தமிழ், சிங்கள இனப்பிணக்குக்குக் காரணமாகத் தமிழர்கள் தொடர்ந்து புலம்பெயர்ந்து வருகின்ற நிலை காணப்படுகின்றது. இவ்வாறாக, அண்ணளவாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள்.  

அத்துடன் அவர்களது அடுத்தடுத்த சந்ததியும் அங்கேயே வாழ்ந்து வருகின்றனர்; அங்கு தேர்தல்களில் போட்டியிடுகின்றனர்; வெற்றி பெறுகின்றனர்; உயர் பதவிகளை அலங்கரிக்கின்றனர்; பல வர்த்தக, வணிக நிலையங்களை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். ஆங்காங்கே, சில சம்பவங்கள் நடைபெற்றாலும், ஒட்டுமொத்தத்தில் அங்கு அவர்கள் சிறப்பான நிலையில் வாழ்கின்றனர்.  

இத்தகையவர்கள் இங்கு வாழ்ந்திருப்பின், தமிழர்கள் என்ற அடையாளத்துக்காகப் பல அசௌகரியங்களை நிச்சயம் சந்தித்து இருப்பார்கள். பல உயர் பதவிகளை இழந்திருப்பார்கள். இவர்கள், தங்களது வாழ்வில் முன்னேறத் தமிழ் என்ற அடையாளம், அவர்களுக்குப் பல தடைகளைக் கொடுத்திருக்கும்.  

இன்று, போர் இல்லாத சூழலிலும், தமிழ் மக்களால் சொந்த நாட்டுச் சீவியத்தைக் காட்டிலும், பிற நாட்டுச் சீவியமே கூடுதல் விருப்பம் உடையதாக உள்ளது.   

வெந்ததைத் தின்று, நொந்து வாழ்கின்றோம் என்ற சொற்றொடர் போன்று, ‘ஏதோ பிறந்து விட்டோம் வாழ்கின்றோம்’ என்பது போலவே, தங்கள் சொந்த மண்ணில் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.  

எந்தக் கடினமான காரியத்தைச் செய்து முடிப்பதற்கும் என, ஒரு சுலபமான வழி இருக்கும்; ஆனால், அதனைக் கண்டு பிடிப்பதே கடினமான காரியமாக இருக்கும். அதுபோல, இனப்பிணக்கைத் தீர்க்க, தமிழ் மக்களது மனங்களை வெல்ல வேண்டிய தேவை இல்லை.  

உண்மையில், இவர்கள் அன்று தொடக்கம் இன்று வரை, சிங்கள மக்களது மனங்களை இனவாதத்தாலும் மதவாதத்தாலும் வென்று, வெற்றி வாகை சூடிவிட்டுத் தமிழ் மக்களது மனங்களை எவ்வாறு வெல்லலாம் எனச் சிந்திக்கின்றனர்.  

ஆகவே, சிங்கள மக்களது மனங்களை வெள்ளை அடிக்கும் செயற்பாடுகளையே முதலில் ஆரம்பிக்க வேண்டும். இன்று எங்கும் எதிலும் இனவாதமும் மதவாதமும் இரண்டறக் கலந்து விட்டன. அவை இல்லாது, அரசியல் இல்லை என்ற நிலை வந்து விட்டது.  

தமிழ் மக்களது அரசியல் கோரிக்கைகள், நியாயமானவை; நீதியானவை. வெறும் 12 சதவீத மக்களது கோரிக்கைகள் என்று பார்க்காது, பல்லாண்டு காலமாக இந்த மண்ணில் வாழ்ந்து வருகின்ற மக்களது அறம் சார்ந்த கோரிக்கைகள் என, எப்போது சிங்கள தேசம் நோக்கத் தொடங்குதோ அன்று, எம் நாட்டுக்கான வெளிச்சம் தானே பிரகாசிக்கும்.  

இது ஒரு சுலபமான காரியம் அல்ல. ஏனெனில், எழுபது ஆண்டு காலமாகத் தமிழ் மக்கள் தொடர்பாகத் தப்பான எண்ணம், சிங்கள மக்களுக்கு ஊட்டி, அவர்கள் உரு ஏற்றப்பட்ட நிலையில் உள்ளார்கள்.  

ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் வலிகள், அடக்கப்பட்ட தமிழ் மக்களின் உணர்வுகள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும். அதுவே, தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்ன, அவர்களின் உணர்வுகள் என்ன, தமிழ் மக்களின் அபிமானத்தை, எவ்வாறு  பெறுவது போன்ற கேள்விகளுக்கான விடைகளைக் கொண்டு வரும்.  

இது வரை காலமும் கவலையாலும் கண்ணீராலும் களங்கப்பட்ட வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள், இன்று பயத்தாலும் பதற்றத்தாலும் பதறுகின்ற நிலை இருக்கின்றது. 

இவ்வாறான ஒரு நிலையில், முற்றிலும் வேறுபட்ட இரு  மனநிலையில் உள்ள, இரு வேறுபட்ட இன மக்களது மனங்களை, வெறும் தனி அமைச்சு இணைக்குமா?  

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அமைச்சு-ஊடாக-வெல்லப்பட-உள்ள-அகங்கள்/91-242903

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.