Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெரியார் திரைப்படம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகில் முதன் முதலில் விண்வெளியில் பறந்த ரஷிய வீரர் யூரிககாரின் கூறியது...

வானில் உயரப் பறந்தபோது பூமியில் இருந்த -மனிதனால் உருவாக்கப்பட்ட -சீனப் பெருஞ்சுவர் மட்டுமே ஒரு சிறு கோடு போல கண்களுக்குத் தெரிந்தது

என்பதுதான். ஆதிக்க நாடுகளின் அழகு மிளிர் வானுயர் கட்டடங்களோ, கோபுரங்களோ, அடிமை தேசங்களின் அவலக் குடிசைகளோ அவர் கண்களுக்குத் தெரியவில்லை. பூமியில் இருந்தபோது புரியாத இந்த உண்மை வானில் உயரப் பறந்தபோதுதான் அவருக்குப் புலப்பட்டது. அது போல தன்னுடைய சமநோக்குப் பார்வையாலும், சீரிய சிந்தனையாலும் உயரப் பறந்த பெரியாரின் பார்வைக்கு ஏழை, பணக்காரன், கீழ் சாதி, மேல் சாதி, பால் பாகுபாடு போன்ற எவையும் தெரியவில்லை. அவருக்குத் தெரிந்ததெல்லாம் "மனிதன்' என்பது மட்டும்தான். அப்படிப்பட்ட ஒரு மாமனிதருக்கு மரியாதை செலுத்த விரும்பிய நல்ல மனிதர்களின் முயற்சியே "பெரியார்'.

பெரியாரின் வாலிபம் முதல் வயோதிகம் வரையிலான கால கட்டங்களின் பல அம்சங்களை எளிமையாகவும், தெளிவாகவும் காட்டியிருக்கிறார்கள். பெரியாரைப் பற்றி படித்தும், கேட்டும் அறிந்த இளைய தலைமுறையினருக்கும், அவரைப் பார்த்து, அவர் காலத்தில் வாழ்ந்த பலருக்கும் இந்தப் படத்தில் பல சுவாரஸ்யமான விஷயங்களும், சம்பவங்களும் இருக்கின்றன.

பூஜைக்குத் தடை ஏற்படுத்தி தந்தையிடம் செருப்படி வாங்குவது, காசியில் எச்சில் இலை உண்பது, தாழ்த்தப்பட்டவர் என ஒதுக்கப்பட்டவரின் வீட்டில் சுற்றுப்புறச் சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளாமல் அன்போடு உணவு உண்ணுவது, பிழைப்புக்காக பக்தர் வேஷமிடுவது, பெண்களுக்கு சிரமம் ஏற்படுத்தாத உடையை மலேசியாவிலிருந்து மனைவிக்கு வாங்கி வந்து அதை அணிந்து வரச் சொல்வது, கருத்து வேறுபாடு இருந்தபோதும் ராஜாஜியுடன் நண்பராக அன்பு பாராட்டுவது உள்ளிட்ட பல காட்சிகள் பெரியாரின் மேன்மையைப் பறைசாற்றுகின்றன.

"அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகளைத் தளர்த்தாவிட்டால் ரஷியா சிதறிவிடும்' என்று கூறுவதும், "மதவாதிகளால் உங்கள் உயிருக்கே ஆபத்து நேரலாம் என்று காந்தியடிகளிடம் கூறும்போதும், விதவை மறுமணக் காட்சிகளும் பெரியாரின் தொலைநோக்குப் பார்வையைத் தெளிவுபடுத்துகின்றன.

படத்துக்குப் பெரிய பலம் கதாபாத்திரத் தேர்வு. பெரியாராக நடித்துள்ள சத்யராஜின் நடிப்பைப் பாராட்ட வார்த்தைகளைத் தேட வேண்டியுள்ளது. பெரியாரின் குரலை ஏற்ற இறக்கத்துடன் உச்சரித்திருப்பதிலும், நடை உடை பாவனையிலும், பல ஆண்டு பிரிவுக்குப் பிறகு அண்ணாவைச் சந்திக்கும் காட்சியிலும் அவருக்குள் உறங்கிக்கொண்டிருந்த பெரியாரை நடமாடவிட்டிருக்கிறார். இந்தப் படத்துக்காக சத்யராஜ் எந்த விருதையும் இனி எதிர்பார்க்கத் தேவையில்லை; பெரியார் பாத்திரத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பே அவருக்கு உண்மையான, உரிய, உயரிய விருது.

அதே போல் முதல் மனைவி நாகம்மையாக வரும் ஜோதிர்மயி, பிற்காலத் துணைவி மணியம்மையாக வரும் குஷ்பு ஆகியோர் யதார்த்தத்தின் முழு வடிவையும் தங்களுடைய நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார்க

இந்தபடம் பார்ந்தேன் ஆனால் அவரின் கொள்கை ஒன்றோடு ஒன்று முரண்படுகின்ரதே

பெரியார் ரசிகர்கள், அவர் கொள்கைகளை எதிர்க்கிறவர்கள் எல்லோரும் நிச்சயமாக படிக்க வேண்டிய கட்டுரை. 19.9.2004 ஜூனியர் விகடனில் ஞாநி எழுதிய கட்டுரை.

தீண்டாமை என்ற மிகப் பெரிய சமூகக் கொடுமைக்கு எதிராக இருபதாம் நூற்றாண்டில் நடந்த முதல் மாபெரும் போராட்டம்... வைக்கம் போராட்டம்! 1924-ல் நடந்த அந்தப் போராட்டத்துக்குக் காரணம், மாதவன் என்ற ஈழவ சாதி வக்கீலை திருவனந்தபுரம் நீதிமன்றத்துக்குள் பணிக்குச் செல்லவிடாமல் தடுத்ததுதான். நீதிமன்றம் அரண்மனை வளாகத்தில் இருந்தது. மகாராஜா பிறந்த நாளுக்காக யாகம் நடந்துகொண்டிருந்தது. அப்போது ஈழவர் அந்த வளாகத்தில் நுழைந்தால் தீட்டாகிவிடும் என்று மாதவன் தடுக்கப்பட்டார்.

கேரளா முழுவதும் கோயில்களை சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டோர் நடக்கக்கூடாது என்ற தடை இருந்தது. இதையெல்லாம் எதிர்த்துதான் வைக்கம் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில், நுழைவுப் போராட்டம் தொடங்கப்பட்டது. போராட்டத்தை முன்னெடுத்த 19 முக்கிய தலைவர்களும் கைதானதும், போராட்டம் தொய்வடைந்தது. சிறையில் இருந்த தலைவர்கள் ஜார்ஜ் ஜோசப்பும் கேசவ மேனனும் அன்றைய சென்னை மாகாண காங்கிரஸ் செயலாளருக்குக் கடிதம் அனுப்பினார்கள். 'நீங்கள் வந்து தலைமை ஏற்றால்தான் போராட்டம் தொடர முடியும். உடனே வாருங்கள்' என்ற அந்தக் கடிதம் வந்தபோது, பண்ணைபுரத்தில் பொதுக்கூட்டம் பேசிவிட்டு, ஈரோடு திரும்பிவந்த காங்கிரஸ் செயலாளர் உடனே வைக்கம் சென்றார். அவர் தலைமை ஏற்றபிறகுதான் வைக்கம் போராட்டம் சூடுபிடித்தது. அவர்தான் 'அய்யா', 'பெரியார்', 'தந்தை பெரியார்' என்றெல்லாம் அன்புடன் பலராலும் அழைக்கப்படுகிற ஈ.வெ.ராமசாமி (1879-1973).

பெரியார் தன் அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் காரராகத்தான் தொடங்கினார். ஈரோடு நகராட்சித் தலைவராகவும் பெரும் வியாபாரியாகவும் இருந்தவரை அரசியலுக்கு அழைத்துவந்தவர்கள் ராஜாஜி, வரதராஜுலு நாயுடு இருவரும்தான்.

அரசியலுக்கு வந்ததும் அரசாங்கப் பதவிகளைப் பிடிப்பதுதான் பலருக்கும் லட்சியம். ஆனால், பெரியார் அரசியலுக்குள் நுழையும்முன்பு, தான் வகித்துவந்த பல்வேறு பதவிகளை உதறிவிட்டு வந்தார். வியாபாரிகள் சங்கத் தலைவர், தென்னிந்திய வியாபாரிகள் சங்க நிர்வாக சபை உறுப்பினர், இன்கம்டாக்ஸ் டிரிப்யூனல் கமிஷனர், டவுன் ரீடிங் ரூம் செக்ரெட்டரி, ஹைஸ்கூல் போர்ட் செக்ரெட்டரி, தாலூகா போர்ட் பிரசிடெண்ட், முனிசிபல் சேர்மன், ஜில்லா போர்ட் மெம்பர், வாட்டர் ஒர்க்ஸ் கமிட்டி செக்ரெட்டரி, ப்ளேக் கமிட்டி செக்ரெட்டரி, தேவஸ்தான கமிட்டி செக்ரெட்டரி, தேவஸ்தான பிரசிடெண்ட், உணவு கண்ட்ரோல் டிஸ்ட்ரிப்யூஷன் ஆபீஸர் உட்பட மொத்தம் இருபத்தொன்பது பதவிகளையும் விட்டுவிட்டு அரசியலில் நுழைந்தார். கடைசிவரை தேர்தலில் போட்டியிடவில்லை. எந்த அரசுப் பதவியையும் வகிக்கவில்லை. அவர் மறைந்தபோது அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார். காந்திய இயக்கம், பொது உடைமை இயக்கம், திராவிட இயக்கம் என்று தமிழ்நாட்டின் மூன்று பெரும் இயக்கங்களிலும் தீவிரப் பங்காற்றிய முதல் பெரும் தலைவர் அவர்தான். காங்கிரஸில் காந்தியின் தலைமையை ஏற்று இருந்தபோது, தமிழகம் முழுவதும் கதர் துணியைப் பரப்பினார். தன் குடும்பம் முழுவதும் கதர் உடுத்தச் செய்தார். மதுவிலக்குப் போராட்டத் துக்காக, தனக்குச் சொந்தமான கள் இறக்கும் தென்னைமரங் களையே வெட்டித் தள்ளினார். ஒத்துழையாமை இயக்கத்துக்காக நீதிமன்றப் புறக்கணிப்பு செய்து, வழக்குகளின் மூலம் தனக்கு வரவேண்டிய லட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களை இழந்தார்.

கொள்கையில் உறுதி என்பதை அவர் கடைசிவரை தளர்த்தியதில்லை. ராஜாஜியுடன் தனிப்பட்ட முறையில் நெருக்கமான நண்பராக இருந்தார். ஆனால், கொள்கைப் போராட்டத்தை விட்டுக்கொடுத்த தில்லை. ராஜாஜி இறந்தபோது தன் நோயையும் பொருட்படுத்தாமல், சக்கர நாற்காலியில் சென்று இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார். ‘சுயநலமற்ற வரான ராஜாஜி, இட ஒதுக்கீடு, சாதி ஒழிப்பு என்ற இரண்டையும் ஏற்றுக்கொண்டு, காங்கிரஸ் கட்சி மூலமாகவே அதைச் செயல்படுத்தியிருந்தால், நான் கடைசிவரை அவர் தொண்டனாகவே மகிழ்ச்சியுடன் என் காலத்தைக் கழித்திருப்பேன்’ என்று அப்போது பெரியார் எழுதினார்.

அநாதை இல்லக் குழந்தைகளுடன்..

வைக்கம் போராட்டத்திலேயே அவருடைய கொள்கை உறுதியைப் பார்க்கலாம். காந்தி, ராஜாஜி, சீனிவாச அய்யங்கார் என்று சக காங்கிரஸ் தலைவர்கள் கேட்டுக்கொண்டும்கூட போராட்டத்தை நிறுத்திவிட்டு, சென்னை திரும்ப மறுத்தார் பெரியார்.

இந்தப் போராட்டத்துக்காக கைதான பெரியார், சிறையில் இருந்தபோது, அவருக்கு எதிராக சத்ரு சம்ஹார யாகம் ஒன்றை கேரள சனாதனிகள் நடத்தி னர்கள். யாக முடிவில் எதிரி (ஈ.வெ.ரா.) சாகவேண்டும் என்பது நோக்கம். ஆனால், யாகத்தின் முடிவில் மகாராஜா இறந்துவிட்டார். பெரியாரைக் குறிவைத்து அனுப்பிய யாக பூதம் திருப்பிக்கொண்டு ராஜாவையே கொன்றுவிட்டது என்று சிறை வார்டன் தன்னிடம் சொன்னபோது, அப்படிச் சொல்வதும் மூட நம்பிக்கைதான் என்றார் பெரியார்.

தீண்டாமை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, வகுப்புவாரி இட ஒதுக்கீடு, பகுத்தறிவு, சுயமரியாதை போன்ற பெரியாரின் கொள்கைகள் அளவுக்கு முக்கியமானவை, அவருடைய பெண்ணுரிமைக் கோட்பாடுகள். தன் மனைவி நாகம்மாள், தங்கை கண்ணம்மாள் இருவரையும் போராட்டங்களுக்குத் தலைமை ஏற்க வைத்தார். சடங்குகள் இல்லாத எளிமையான சுயமரியாதை திருமண முறையை அறிமுகப்படுத்தியவர் அவர்தான். 1929-லிருந்து நான்கே ஆண்டுகளில் அப்படிப்பட்ட எட்டாயிரம் திருமணங்களை சுயமரியாதை இயக்கம் நடத்தி வைத்தது. திருமணம் செய்யும் உரிமை, செய்யாமல் இருக்கும் உரிமை, பிடிக்காத திருமணத்திலிருந்து வெளியேறும் உரிமை, திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழும் உரிமை, குழந்தை பெறும் உரிமை, பெறாமல் இருக்கும் உரிமை, இவையெல்லாம் பெண்ணுக்கு உரிய உரிமைகள் என்று அவர் முன்னோடியாக பிரசாரம் செய்திருக்கிறார். பெண்களுக்கு எல்லா உத்தியோ கங்களிலும் சரி, பாதி இட ஒதுக்கீடு செய்யவேண்டுமென்று 80 ஆண்டுகளுக்கு முன்பு தீர்மானம் போட்டவர் அவர்.

இன்று கல்வி நிலையங்களிலும் அரசு வேலைகளிலும் எல்லா சாதியினரும் இருப்பதற்கான முக்கியமான காரணங் களில் ஒருவர் பெரியார். அவர் இதற்காகப் போராடத் தொடங்கிய காலத்தில், கல்லூரிப் படிப்பு படித்தவர்களில் நூற்றுக்கு 65 பேர் பிராமணர்கள். மீதி 35 பேர்தான் எல்லா சாதியினரும். ஆனால், அன்று மக்கள் தொகையில் நூற்றுக்கு 97 பேர் பிராமணரல்லாதவர்கள்தான். அன்று அரசாங்க வேலைகளில் உயர் பதவிகளில் நூற்றுக்கு 47 இடங்களில் பிராமண அதிகாரிகள், 30 இடங்களில் ஆங்கிலேயர்கள், 23 இடங்கள்தான் மீதி எல்லா சாதியினருக்கும்.

ஒரு பெரும் சமுதாயத்தின் கல்வி நிலை, வேலை நிலையை மாற்றி அமைத்த பெரியார், மூன்றாவது வகுப்புக்கு மேல் படித்தவரல்ல. ஆனால், அவர் கொண்டுவந்த மொழிச் சீர்திருத்தத்தைப் பின்பற்றித்தான் இந்தக் கட்டுரைகூட எழுதப்படுகிறது. காந்தி, நேரு, போஸ், திலகர், ராஜாஜி என்று மெத்தப் படித்தவர்களே பெரும் தலைவர்களாக இருந்த காலகட்டத்தில், பெரியார்தான் மூணாங்கிளாஸ் படித்த தலைவர். ஆனால், பெரும் படிப்பு படித்த பலரை அவரது இயக்கம் ஈர்த்து, அவருக்குத் தொண்டர்களாகப் பணிபுரியச் செய்தது. காங்கிரஸிலிருந்து சுயமரியாதை இயக்கம்வரை பெரியார்கூட நெருக்கமாக இருந்து அவர் நடத்திய பத்திரிகைகளில் எழுதிய மற்றும் பொறுப்புவகித்த எஸ். ராம நாதன், குத்தூசி குருசாமி, அண்ணா, கி.வீரமணி, ஆனைமுத்து எனப்பலரும் முதுநிலைப் பட்டதாரிகள்.

ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக் காக சாகும்வரை ஓயாமல் பிரசாரம் செய்ததில் அவரை மிஞ்ச உலக அளவில் கூட யாரும் இல்லை. வருடத்தில் பாதி நாள் டூர்தான். மீட்டிங்தான்.

90-வது வயதில் 41 நாள் டூர். 180 கூட்டம்.

91-வது வயதில் 131 நாள் டூர். 150 கூட்டம்.

93-வது வயதில் 183 நாள் டூர். 249 கூட்டம்.

94-வது வயதில் 177 நாள் டூர். 229 கூட்டம்.

வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் (95-வது வயதில்) 38 நாள் டூர். 42 கூட்டம்.

இத்தனையும், கடும் நோயின் வலிகளுடன். ஹெர்னியா பிரச்னையினால் சரிந்துவிழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக்கொண்டு கூட்டம் பேசச் சென்றார். சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப்போட்டு குழாய் செருகப்பட்டிருந்தது.

பெரியாரின் வாழ்க்கை, சுமார் 500 எபிசோடுகளில் ஒரு மெகா சீரியலாக எடுப்பதற்கான தகுதியும் தகவல்களும் நிரம்பியது. அதை ஐந்து எபிசோடுகளாக எடுக்க பொதிகை சேனல் எனக்கு வாய்ப்பளித்தது. என் மீடியா அனுபவங்களில் இது மறக்கமுடியாத செறிவான அனுபவம். பெரியார் பெயரைச் சொல்லி அதிகாரத்தை, ஆட்சியைப் பிடித்தவர்கள் நடத்தும் சேனல்கள் எதுவும் இன்றுவரை பெரியார் பற்றி அரை மணி நேர நிகழ்ச்சிகூட தயாரித்ததில்லை என்பதும் பெரியார் வாழ்க்கையின் விநோதங்களில் ஒன்று. அவர்களுக்கு, பெரியாரின் தேவை முடிந்து விட்டிருக்கலாம்... ஆனால், தமிழக மக்களுக்கு இன்றும் பெரியார் தேவைப்படுகிறார் என்பதுதான் உண்மை

http://idlyvadai.blogspot.com/2007/02/blog-post_07.html

பெரியார் திரைப்படம்!

இந்தத் திரைப்படம் யாருக்காக என்று யாரேனும் என்னைக் கேள்விகேட்டால், "இன்று அரசியல் மற்றும் இதர வழிகளில் பொதுவாழ்வில் ஈடுபடுவோரின் படிப்பினைக்காக" என்று சொல்வதே என் விடையாக இருக்கும். அதோடு தற்போதையத் தலைமுறைக்குமிகச்சரியானதொரு புரிதலைத் தருமாறும் அமைந்திருக்கிறது.

அப்படியானதொரு ஆழ்ந்த சிந்தனைத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது பெரியாரின் வாழ்க்கை பற்றிய இந்தத் திரைப்படம்.

பெரியாரைப் பற்றித் தங்கள் பாட்டி சொன்ன கதை, உறவுகள் சொன்னதிரிப்பு, (பெரியாரைப்) படிக்காத சோம்பரின் கற்பனை உலகு, சாதிப்பிடிப்பில் பேதலித்துப் போனச் சார்புகள், அங்கொன்றும் இங்கொன்றுமாய்மேடைகளில் கேட்ட தரங்கெட்டப் பேச்சாளர்களின் பரப்புரைகள், மற்றும் இவற்றை அப்படியே அச்சு மாறாமல் ஏற்றிக் கொண்டு வழக்காடும் மிடையங்கள், இணையக் குமுகம், சிந்தனை வட்டம் போன்ற பல்வேறுநிலைகளுக்கு ஒரு உயர்வான புரிதலையும் படிப்பினையும் இந்தப் படம் தந்திருக்கிறது.

திராவிடக் காளைகளும் பாட்டாளிகளும் பலகணிப் பித்துக்குளிகளும் போட்டி போட்டுக் கொண்டு கருத்துச் சுதந்திரத்தைக் காலால்மிதி மிதி என்று மிதித்துக் கொண்டிருக்கிற கால கட்டத்தில் இந்தத் திரைப்படம், வெள்ளைக்காரஞ் சட்டமும்,வைதீகச் சட்டமும் முழுமையாகக் கோலோச்சிய கால கட்டத்தில், கட்டிலாக் கருத்துகளுடன் கருத்துரிமைக்காகப் போராடிய பெரியாரை அரிமாவாகக் காட்டுகிறது.

இன்றைக்கு கருத்துரிமை என்பது மிடைய முதலாளிகளின் எண்ணக்கிடக்கையாக இருந்து உலகுவாழ் தமிழர்களை நசுக்குவதாகஒருபுறமும், மிடையங்களின் சில்லறைக் கருத்துக்களுக்கே சினுங்கிக்கொள்ளும் அரசியல் தளங்களாக மறுபுறமும் நம்முன் காட்சியளிப்பது வெட்கக்கேடுகளில் ஒன்று.

சாதீயத்தின் மொத்த வடிவமாக வைதீகமும், அந்த வைதீகத்தின்மொத்த உரிமையாளராக பார்ப்பனக்குமுகமும் இருந்ததை இரண்டே காட்சிகளில் (ஈரோட்டுக்கு எழுந்தருளிய ஒரு சாமியார் காட்சியிலும், காசி அன்னதானச் சத்திரக் காட்சியிலும்)காட்டிப் பெரிய புரிதலை ஏற்படுத்தும் திரைப்பட வித்தையை இராசசேகரன் செய்திருக்கிறார்.

அது மட்டுமல்ல, அந்த வைதீகப் பார்ப்பனீயத்தைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்த பார்ப்பனரல்லாத சாதியினர் மற்றும் பணக்காரர்களின் முகத்திரையையும் நார் நாறாகக் கிழித்துவிடுகின்றது காசி அன்னச்சத்திரக்காட்சி. இராமசாமி நாயக்கரின் தந்தையாரும், காசிச் சத்திர செட்டியாரும் சாதியக் கொடுமைகளின் வேரை விளங்கவைத்து விடுகின்றனர் இப்படத்தில்.

"பார்ப்பனீயத்தின் உரிமையாளராகப் பார்ப்பனர்களே இருந்தபோதும், அதன் பங்காளிகளாக மாறிவிட்டிருந்த ஏனைய சாதியரையும் எடுத்துக்காட்டின இந்த இரண்டு காட்சிகளும், தண்ணீர்க் குழாய் உள்ளிட்டஇன்ன சில காட்சிகளும்", என்று சொன்னால் மிகையாகாது.

"பார்ப்பனக் கொடுமைகளுக்குப் பக்க வாத்தியமாக இருந்த பாவத்தின் சம்பளம்"தான் அண்மையில் கூட நாம் கண்டு மனம் வெகுண்ட பாப்பாப்பட்டி,கீரிப்பட்டி, நாட்டார் மங்கலக் கிராமத் தீண்டாமை.

பெரியாரின் பேரில், பார்ப்பனர்களை மட்டும் சாடுமாறு குமுகத்தைத் திருப்பிவிட்டு "பார்ப்பனீயத்தின் பங்காளியம்" சாமர்த்தியமாகத் தப்பிக்கொண்டதன் விளைவுதான் தமிழகத்தில் இன்றும் நடக்கும் சாதிச்சண்டைகளும் சாதி அரசியலும்.

பார்ப்பனீயத்தைப் பெரியார் எதிர்த்தார் என்று சொல்லி சொல்லியேபார்ப்பனீயப் பங்காளிகள் தம்மை வளப்படுத்திக் கொள்கின்றனர் என்றமறுக்கமுடியாத உண்மையை இந்தப் படம் சிந்தனைக்கு இழுத்து வருகிறது.

"பார்ப்பனர்களும் சரி சாதீயத்தில் அவர்களின் பங்காளிகளாக உள்ளவர்களும் சரி, இன்றைக்கும், உள்ளுறும நுட்பவியல் (informationtechnology) துறையில் இருந்து வேளாண்மைத் துறை வரை தாங்கள்பேணி வருகிற மிகையான சாதீய வெறிப் போக்கை மீள் பார்வை செய்துகொள்ள இப்படம் ஒரு நல்ல வாய்ப்பு".

ஒரு சிக்கலான, நெருடலான, மிக நீண்ட போராட்ட வரலாற்றின் வேரைசில காட்சிகளில் விளக்கி விட்ட இராசசேகரனின் உழைப்புவியக்க வைக்கிறது.

குழந்தை மணத்தின் கொடுமையை, பாவேந்தர் பாரதிதாசன் இப்படிக் கூறத் துவங்குவார்.

"ஏழு வயதே எழிற் கருங்கண் மலர்,

ஒரு தாமரை முகம்,

ஒரு சிறு மணி இடை,

சுவைத்து அறியாத சுவை தருங் கனிவாய்,

கூவத் தெரியாத குயிலின் குஞ்சு,

தாவாச் சிறு மான்,

மோவா அறும்பு,

தாலி அறுத்துத் தந்தையின் வீட்டில்...."

இந்த வரிகளை அப்படியே மனத்தில் கொண்டு வந்து தாக்கியது

பெரியாரின் இல்லச் சிறுமிக்கு நடந்த மணமும், அதைத் தொடர்ந்து அந்தச் சிறுமிக்கு தாலி அறுத்த நிகழ்வும். சற்றே மனத்தை உறையவைக்கின்ற காட்சி கண் முன் வந்து சென்றது.

ஊருக்கு மட்டும் உபதேசம் செய்வது கை வந்த கலை. அப்படி இல்லாமல், அந்தச் சிறுமிக்குத் மீண்டும் திருமணம் செய்து வைத்து, தன் இல்லத்தில் இருந்து குமுகப் பணியைத் துவக்கிய பெரியாரின் ஆன்மா மிக நேர்மையானது.

நாகம்மையாரை இழந்து அவர் குலுங்கி அழுத காட்சியும், தனிமையும்

அதன் பின்னர் "நான் யார்" என்ற அவரின் ஆன்மத் தேடலும் மனிதத்தின் இயல்பைக் காட்டியது.

பெரியார் என்றவுடன் குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்வது போல பாய விளைவோருக்கும், பெரியார்என்று பேசும்போழ்து ஆன்மத்தையும் மனித இயல்பையும் தத்துவங்களையும் தொலைத்துவிட விளைவோருக்கும் பெரியாரின் ஆழ்ந்த அக உணர்வுகளைஎடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

யாக்கை நிலையாமை ஒவ்வொரு மனிதனையும் கலக்கிவிடத்தான் செய்கிறது. அந்தக் கலக்கம் இயல்பானது. தவிர்க்க முடியாதது.

பட்டினத்தார் தனது தாயாரை இழந்தபோது புலம்பியதற்கும், பெரியார் அவரின் மனைவியாரை இழந்தபோது புலம்பி நின்றதற்கும் யாரால் வேறுபாடு

காணமுடியும்?

இந்தச் சூழலை இராசசேகரன் காட்சியாக்கி விதம், சத்யராசின் நடிப்பு,தங்கர் பச்சானின் ஒளியோவியம் என்ற இந்த மூன்றன் கூட்டணியின் உழைப்பு பாராட்டத் தக்கது.

பெரியார் - இராசாசி என்ற இருவரின் சித்தாந்த வேறுபாட்டுக்கிடையேயும் இருந்த நட்பும் பண்பும் போற்றத்தக்கது. அதை மாண்புடன் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தக் கால கட்டத்தில் அரசியல் வாதிகள் ஒருவருக்கொருவர் காறிக் காறி உமிழ்ந்து கொள்கிற கேவலமான அரசியலும், அவர்களின் மொழிகளும், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ளச் சகிக்காத பண்பாட்டுச் சீரழிவும் மனதில் ஆடி மிகவும் வருந்த வைத்துவிடுகிறது.

ஏற்பட்ட அரசியல் மாற்றங்களில் மணியம்மையாருடன் ஆன திருமணமும் சிக்கிக் கொண்டது சங்கடமான ஒன்று. அந்தக் குழப்பமான அரசியலின் தொடக்கையும் பின்னர் பேரறிஞர் அண்னா அதனைக் குறித்து வருந்திச் சொன்ன சேதியும் மிகப் பக்குவமாகக் கையாளப்பட வேண்டிய விதயங்களில்ஒன்று. பலரது எதிர்பார்ப்பையும் கடந்த பக்குவத்தோடு படமாக்கியிருக்கிறார்கள். பாராட்டுகள் இங்கு பலமாகக் கொடுக்க வேண்டும்.

பெருகியிருந்த நமசுகாரங்களும் இன்ன பிற சமற்கிருதப் பேச்சுவழக்கும், தற்போதைய அவற்றின் மாற்றங்களும் புரிந்து கொள்ளுமாறு

பதியப்பட்டிருப்பது, நம்பிக்கையை அளிக்கிறது.

பெண்களை முன்னணிப் படுத்திய இரு பெரும் தமிழ்த் தலைவர்கள் என்றால் அந்தப் பெருமை பெரியாரையும் பிரபாகரனையும்தான் சேரும்.

இருபெரும் தலைவர்களில் முதுபெரும் தலைவரான பெரியார் கள்ளுக் கடை மறியலுக்காக தனது சொந்தத் தென்னைகளையெல்லாம் வெட்டி, தன் இல்லப் பெண்களையே அந்தப் போராட்டத்துக்குத் தலைமை தாங்க வைத்தது அவரின் கொள்கைப்பிடிப்பையும் சூதற்ற அரசியலையும் முன்மாதிரியையும் காட்டுகிறது. சொல்லவேண்டிய முக்கிய செய்திகளைச் சுருக்காக அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள்.

வைக்கம் போராட்டத்தின் பகுதியாக வைக்கப் பட்ட "கடவுளா அல்ல கல்லா" என்ற பாடல் பெரியார் குமுகத்திற்கு சிந்திக்க வைத்த வினாக்களை எல்லாம் பட்டியலிட்டு விடுகிறது. இந்தப் பாடல் பெரியாரின் பல மேடைப்பேச்சுக்களை அகத்தில் கொண்டு படத்திற்கு சிறப்பு சேர்க்கிறது.

வைக்கம் போராட்டத்தின் எதிரொலியாக பெரியார் தெய்வ நிந்தனையாளராகச் சித்திரிக்கப் பட்டு அவரின் "எளிமையான கேள்விகளை" எதிர் கொள்ளமுடியாதவர்கள் "கடுமையான யாக வேள்விகளை", மந்திர தந்திரங்களைச்செய்வதானச் சூழலை எண்ணிப் பார்க்க வைத்து அதிர வைக்கிறது படம். இப்பொழுது கூட அரசியலாளர்கள் ஊர் ஊராக மாநிலம் மாநிலமாகச் சென்று யாக வேள்விகள் செய்து அரசியல் செய்வதை நாம் கண்டு கொண்டிருப்பது, பெரியாரை எதிர்த்துச் செய்யப்பட்ட இந்த மந்திர தந்திரப் போராட்டத்தை நம்ப வைக்கிறது.

ஈரோட்டில் சேர்மனாகப் பணியாற்றும்போது சாலையை அகலப் படுத்துவதற்கு ஏற்பட்ட எதிர்ப்பும், தற்காலத்திலே கூட சாலை அகலப்படுத்த இடம்தரமாட்டேன் என்று சொல்லி அடம் பிடிக்கும் அரசியலையும் காணும்போது இன்னும் நாம் போக வேண்டிய தொலைவு நிறையவே இருக்கிறதுஎன்று தோன்றியது.

பெரியாரை மய்யமாகக் கொண்ட படத்தில் எங்கே பிற தலைவர்களின் காட்சிகள் அதிகமாகிடுமோ என்ற அய்யம் முன்பு இருந்தது. ஆனால், மிகப் பக்குவமாக அப்படி ஆகிடாமல் செய்திருக்கிறார் இராசசேகரன். இராசாசி மட்டும் அடிக்கடி வருவார் படத்தில். சிறு வயதில் இருந்தே அரசியல் பொதுவாழ்வில் நண்பரானவர்கள் என்பதால் இராசாசி சம்பந்தப்பட்டக் காட்சிகள் அதிகம் இருந்தது மிகப் பொருத்தமாகவும் தேவையாகவும் இருந்தன. எதிர்பார்த்த அளவிற்குக் கூட அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் தொடர்புடையக் காட்சிகள் இல்லாமல் அதே நேரத்தில் வைத்தவற்றில் நேர்த்தியாகவும் கையாண்டிருக்கிறார்கள்.

பல தளங்களிலும் பல ஆண்டுகள் தொடர்ந்து நின்று போராடிய,வரையறுக்கப்பட முடியாத அந்த மாமனிதரின் பல்வேறு செயல்களையும் படத்தில் குறுகிய நேரத்தில் காட்டிவிடுவது என்பது மிக அரிய செயலாகும். அந்த முயற்சியில் மிகப் பெரிய அளவு வெற்றியை இந்தப் படத்தில் செய்திருக்கிறார்கள். இந்தப் படத்தையே முழுமையாக ஆய வேண்டுமானால் நிறைய பக்கங்கள் பிடிக்கும். அந்தளவுச் செறிவுடன் செய்திருக்கிறார்கள்.

தொடக்கக் காட்சிகள் சில காட்சித் தொகுப்பு போல் இருந்ததாகப் பட்டாலும்15, 20 நிமிடங்களில் படத்திற்குள் முழுமையாகக் கொண்டு போய்விடுகிறார்கள்.

இறுதிக் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றியது. கலைஞரின் அறிக்கையோடும் அரசு மரியாதையோடு அவர் மறைவு காட்டப்பட்டதோடு மேலும் மக்களின் உள்ளங்கள் அங்கே சேர்க்கப் பட்டிருக்கலாம்.

பாரதிதாசன், அண்ணா, கலைஞர், நாவலர், மதியழகன் போன்றோர் வந்துபோகிறார்கள். அண்ணா மற்றும் கலைஞர் இவர்களின் ஒப்பனையில் சற்று கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அவர்களாக நடித்தவர்களும் இன்னும் சிறப்பாக செய்திருக்க இடமிருக்கிறது. அண்ணாவின் மீசை மிகையான வெள்ளையாக இருந்தது. கலைஞரின் கண்ணாடி நடிகருக்கு அவ்வளவாகப் பொருந்தவில்லை. வீரமணியாக நடித்தவரின் உரையாடல்

ஒத்து வரவில்லை.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குசுபுவின் நடிப்பு முழுமையாக வெளியாகி இருந்ததாகத் தெரியவில்லை. அவரை அறிமுகம் செய்த காட்சியமைப்பிலும் இன்னும் சற்று இயல்பைக் கூட்டியிருக்கலாம்.

சத்யராசு ஒரு சில இடங்களில் பெரியாராகவே ஒன்றிப் போயிருக்கிறார். அருமையான நடிப்பு. அவரின் ஒப்பனையும் கவனமாகச் செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், உடலில் இருந்த முதுமையை, கரங்களை ஆட்டிப்பேசும்போது சத்யராசின் கரங்களில் இருக்கும் இளமை காட்டிக் கொடுத்திருக்கிறது. இந்த இடத்தில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.

அதேபோல, மிக முதியவராக இருந்த காலங்களில் படுக்கையில் இருந்து எழுவதில்,மேடைகளில் கைகளை ஆட்டிப் பேசும்போதும் இருந்திருக்க வேண்டியஇயல்பான நிதானத்தில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். இராசாசியை மட்டும் ஆரம்பம் முதல் இறுதி வரை அதே இளமை அல்லது முதுமையோடு காட்டியதாகத் தெரிந்தது. அவரின் முதுமைக் காட்சியில் இன்னும் கொஞ்சம் ஒப்பனையில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

இப்படத்தை இவ்வளவு கவனமாக எடுத்திருப்பதைப் பார்த்ததும்

இளையராசா தனக்குக் கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்டு விட்டார்

அல்லது அவரை இந்தப் படத்தினர் தவற விட்டு விட்டார்கள்

என்றே இப்போது எனக்கு சொல்லத் தோன்றுகிறது.

பெரியார் குறித்த புரிதல்கள் அறவே இல்லாமலும், சரியாக இல்லாமலும்,

குழப்படியாகவும், குழப்ப முற்பட்டும் கிடந்த இச்சூழலிற்கு பெரியாரின்ஆன்மாவை அப்படியே எடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.

பெரியாரின் சில உரைகளை மட்டுமே வைத்துக் கொண்டுஅவரை ஆதரித்தும் வெறுத்தும் கருத்து கொண்ட அனைவருக்கும் இந்தப் படம் ஒரு நல்ல அறிதலாக இருக்கும்.

இந்த அளவு பணியாற்றிக் கூடவா இன்னும் இந்த மண்ணில்இத்தனை சாதீய அட்டூழியங்கள் அரசுத்துறை, தனியார்த் துறை, ஆன்மீகம் மற்றும் குமுகத்தின் பல நிலைகளிலும் பார்ப்பனீயமும் பார்ப்பனீயத்தின் பங்காளியமும் பெருகிக் கிடக்கின்றனவே என்று எண்ணும்போது திருமூல நாயனாரின் திருமந்திரத்தில் இருந்து ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.

"ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டு

பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு

சூரையங் காட்டிடைக் கொண்டு போய் சுட்டிட்டு

நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே"

திருமந்திரம்: 145

இந்தப் பாடலின் துவக்கத்தில் பெரியார் என்ற பெயரைச் சேர்த்துப் படித்தால் நமது குமுகாயம் எந்த அளவுக்குப் பெரியாரின் நேரிய எண்ணங்களில் இருந்து விலகி, "நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தது போல்" போலியாகப் பிதற்றிக் கொண்டிருக்கிறது என்பது புரியும்.

அன்புடன்

நாக.இளங்கோவன்

17/மே/2007

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

• படத்தின் டைட்டில் கறுப்பு வண்ணத்தில் சிகப்பு எழுத்துக்கள் என திராவிடர் கழக கொடி நிறத்தில் மெல்லிய இசையுடன் ஆரம்பிக்கிறது.

• படத்தில் நகைச்சுவைக்கு என்று தனியான கேரக்டர்கள் எதுவும் இல்லை. உயர்சாதியினரின் அக்காலத்திய நடவடிக்கைகள் சித்தரிக்கப்படும் காட்சிகளே வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன.

• தந்தை பெரியார் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் பல வரிசைக்கிரமமாக பதிவு செய்யப்படாமல் திரைக்கதையின் வசதிக்காக முன்பின்னாக மாற்றி படமாக்கப்பட்டிருக்கிறது.

• பின்னணி இசைக்கு அதிக வேலையில்லாத படம். பல காட்சிகள் இசையில்லாமலேயே நகருகிறது.

• தந்தை பெரியாருக்கு புத்திர பாக்கியம் இல்லை என்று பலர் கருதுவார்கள். அவருக்கு ஒரு மகள் பிறந்து ஐந்து மாதங்களிலேயே இறந்து விட்டதை இப்படத்தின் வசனம் ஒன்றின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.

• நிறைய சம்பவங்களை காட்சிகளாக காட்டாமல் சிறு வசனங்கள் மூலமாக சொல்கிறார்கள். 94 ஆண்டுகள் வாழ்ந்த மாபெரும் சிந்தனையாளரை 3 மணிநேர படத்தில் குறுக்க வேண்டிய தர்மசங்கடம் இயக்குனருக்கு இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

• படத்தின் முன்பாதியில் காட்டப்படும் பெரியார் நம் இப்போதைய தலைமுறைக்கு அவ்வளவாக அறிமுகமில்லாதவர். இந்தியாவிலேயே முதன்முறையாக வீடுகளுக்கு குழாய் மூலமாக தண்ணீர் வினியோகித்த முனிசிபாலிட்டி சேர்மன் தந்தை பெரியார் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

• மதுவிலக்கு மறியல் போராட்டங்களின் போது தனக்கு சொந்தமான தென்னந்தோப்பு மரங்களை பெரியார் வெட்டி வீழ்த்தியதை காட்சியாக வைத்திருக்கலாம்.

• வைக்கம் போராட்டத்தின் போது பெரியாரை அழிக்க உயர்சாதி எதிரிகள் யாகம் வளர்க்கிறார்கள். யாகத்தின் பயனாக (?) எதிர்பாராவிதமாக திருவாங்கூர் மகாராஜா மரணமடைகிறார்.

• பெரியாரின் பிரச்சார வண்டியை வழிமறித்து தொண்டர் ஒருவர் தன் குழந்தைக்கு பெயர் வைக்கச் சொல்லி அய்யாவிடம் ஒரு ரூபாய் அளிக்கிறார். ஒரு ரூபாய்க்கு சுமாரான பெயர் தான் வைக்க முடியும். ரெண்டு ரூபாய் கொடுத்தால் சூப்பர் பெயர் வைக்கிறேன் என்கிறார் அய்யா. ரெண்டு ரூபாய் வாங்கிக் கொண்டு அய்யா வைக்கும் பெயர் “காமராஜி”

• பெரியாரின் இளமைக்காலம் வரையிலான காட்சிகளின் போது பெரியாராக நடிப்பவர் சத்யராஜ் என்ற உணர்விருக்கிறது. வெள்ளை தாடி வைத்த பெரியாராக காட்சிகள் மாறும்போது சத்யராஜ் என்ற நடிகர் ஒருவரையே மறந்து விடுகிறோம்.

• தந்தை பெரியார் தன் வாழ்க்கையில் அதிகமாக உச்சரித்த “பார்ப்பான்” என்ற வார்த்தை படத்தில் எங்குமே இடம்பெறவில்லை.

• திமுக ராபின்சன் பூங்காவில் உருவாகும்போது மேடையில் கலைஞர் கருணாநிதியும் இருப்பதாக காட்டியிருப்பது தேவையற்றது.

• அறிஞர் அண்ணா பெரியாரின் பத்திரிகை ஒன்றில் தலையங்கம் எழுதியபோது தடியில்லாமல் மாடி ஏறிச்சென்று அண்ணாவை பாராட்டுகிறார். பெரியார் முதுமை காரணமாக தடியை கையில் எடுக்கவில்லையாம். ஸ்டைலுக்காக தடியெடுக்க ஆரம்பித்தார் என்று நண்பர் ஒருவர் சொன்னார்.

• பெரியாரின் ரஷ்ய பயணத்தின்போது ரஷ்ய அதிபர் ஸ்டாலினுடனான அவரது அப்பாயிண்ட்மெண்ட் கடைசி நேரத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் கைவிடப்பட்டிருக்கிறது.

• பெரியாரின் இறுதி ஊர்வலத்தின் ஒரிஜினல் காட்சிகளை க்ளைமேக்ஸில் இணைத்திருப்பது சிறப்பு.

• இப்படத்தில் தந்தை பெரியாரின் வாழ்க்கையில் வந்த பல கட்டங்கள் இல்லாதிருக்கலாம். எனினும் இப்படம் தந்தை பெரியாரை சாமானியனுக்கும், விளிம்பு நிலை மனிதனுக்கும் எளிய அறிமுகத்தை கொடுக்கும் நோக்கத்துடன் சரிவிகிதத்தில் வணிகநோக்கும் கலந்து எடுக்கப்பட்டிருக்கிறது.

• படம் எப்படி இருக்கிறது? என்ற கேள்விக்கு என்னால் பதில் அளிக்க இயலவில்லை. ஆனந்த விகடன் இதழே இந்த வரலாற்றுக் காவிய முயற்சிக்கு யாராலும் மதிப்பெண் இட முடியாது என தெரிவித்திருக்கிறது.

Posted by லக்கிலுக் at 11:41 AM

Labels: பெரியார் திரைக்காவியம்

Tuesday, May 15, 2007

-நன்றி: dravidatamils.blogspot.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.