Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொக்கட்டிச்சோலைப் படுகொலை.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொக்கட்டிச்சோலைப் படுகொலை.!

On Jan 28, 2020

kokka-300x200.png

 

தமிழீழத்தில் மீன்பாடும் தேநாடு என வர்ணிக்கப்படும் மட்டுநகர்மண் தேநாடு மட்டுமல்ல. நெல்விளையும் பொற்பூபியும்கூட அழகொளிரும் கிராமங்களை காணவிரும்பும் மனிதர்கள் எங்கும் அலையத்தேவையில்லை. நேராக மட்டுநகர் மண்ணில் காலடி வைத்தால்போதும். திரும்பும் திசையெல்லாம் பொன்விளையும் நெல்வயல்கள். நடுவே ஒரு பெரும்மேடு. அந்தமேட்டின் பத்துப் பன்னிரண்டு தென்னை அவற்றின் நடுவே அழகோடு ஒரு வீடு. நாற்புறமும் நீரால் சூழப்பட்டு தீவு என்ற பெயர்பெற்ற கிராமங்கள் போல நாற்புறமும் வயலால் சூழப்பட்டதீவு மகிழடித்தீவு, அரசடித்தீவு, போரதீவு என வருகின்ற கிராமங்கள் வயல்வெளிகளைச் சார்ந்தது. பெருக்கெடுத்து வரும் அருவிகளின் அருகே பொண்டுகல் சேனை, இலுப்படிச்சேனை, மாவடிச்சேனை என வரும் கிராமங்கள். இவையெல்லாம் மட்டுநகர் மண் வழங்குன்றாமண் என்பதைப் பார்ப்பவர்களுக்கு எளிதில் புலப்படுத்திவிடும்.

சிறுகட்டிப் பெருகவாழும் வீடுகளில் பொற்குவியல் போல் செல்விருந்தோம்பி வரவிருந்து காத்திருக்கும் பண்பாடுமாறாத மனித உள்ளங்கள் தமிழீழ சுதந்திரப்போருக்காயப் பிள்ளைகளை அனுப்பி வைத்த வெற்றிக்காய்க்காத்திருக்கும் வீரமிகுதாய்க்குலம். இவையெல்லாம் தமிழனின் இருப்பு இன்னும் அழிந்துவிடவில்லை என்பதை எடுத்துக்காட்டும்.

மண்ணை நம்பி வாழ்ந்திருக்கும் இந்தமக்கள் தங்கள் மண்ணை சிங்கள ஆக்கிரமிப்பில் பறிகொடுத்துவிட விருப்பில்லை மண்ணை மாத்திரமில்லாது தங்கள் வாழ்வின் அடித்தளமாய் விளங்கும் பண்பாட்டையும் இழந்துவிடத்தயாரில்லை. ஆனால் இவ்விரண்டையும் அழித்து ஆக்கிரமித்துவிட சிங்கள பேரினவாதம் கங்கணம் கட்டிநின்றது. வகைதொகையின்றி கொடூரமாக இவர்களை கொலைசெய்வதன்மூலம் அச்ச உணர்வினை ஏற்படுத்தி இம்மண்ணையும் பறித்து, பண்பாட்டையும் பறித்துவிட முடிவு செய்தது. சிங்கள பேரினவாதத்தின் இந்த முடிவின் விளைவுதான் கொக்கட்டிச்சோலைப் படுகொலை, சத்துருக்கொண்டான் படுகொலை, வந்தாறுமூலைப்படுகொலை, புல்லுமலைப்படுகொலை, உடும்பன்குளப் படுகொலை, தோணிதாண்டான்மடுப் படுகொலை என நீண்டுசெல்லும் தமிழ்ப்படுகொலைகள்.

சர்வதேச உலகமும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், கண்மூடிக் காணாதது போலிருந்துவிட்டன. இப்படுகொலைகளை மரணத்துக்கஞ்சி படித்த மேதைகள் என்று தமக்கப் பட்டம் வாங்கிக்கொண்ட எங்கள் மக்களும் எழுதிவைக்கத் தவறிவிட்டார்கள். ஒரு பெரும் இன அழிப்பின் துயரத்திலிருந்து மீண்டுவிட எழுந்ததுதான் எங்கள் விடுதலைப்போர். ஆண்டுகள் பல மறைந்தாலும் படுகொலையிலிருந்து தப்பித்துக் கொண்ட ஒருசில மக்களின் மனங்களிலிருந்து அந்தக் கொடூர நினைவுகளை அகற்றிவிட முடியாது. அவர்களின் மனச்சிறைக்குள் அடங்கிக் கிடக்கும் அந்தக் கொடூர நினைவுகனை எங்கள் இனத்திற்கு அறியக்கொடுப்பது வரலாற்றுக்கடமையாகும்.

22.03.2001 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி படுவானில் சூரியன் விழுந்துகொண்டிருந்தாலும் பங்குனிப் புழுக்கம் குறைந்து விடவில்லை.

கொக்கட்டிச்சோலையிலிருந்து மகிழடித்தீவுக்கு வந்திருந்தேன். மகிழடித்தீவுச் சந்தி கொடூர படுகொலைகளால் மகிழ்வை இழந்து போய்க்கிடந்தது. சந்தியின் அருகே கிறிஸ்தவ தேவாலயமொன்று. சிலுவை சுமந்த யேசுவின் முன்னாலேயே இப்பெரும் படுகொலைகள் அரங்கேறிவிட்டன. தேவாலயத்தினருகே வசதிகள் பலகொண்ட வைத்திய சாலையொன்று இருந்தது, ஆனால் இரும்புப் பூட்டுக்கள் நாலைந்தினால் கம்பிக்கதவுகள் இழுத்துப் பூட்டப்பட்டிருந்தன. டாக்டர்கள் யாரும் இங்கு வந்திருந்து வைத்தியம் செய்யத் தயாரில்லை. படுகொலைகள் நடந்து ஒரு தசாப்தம் கடந்திருந்தாலும் அந்தக் கொடூர நினைவுகள் உயிரை இன்னும் விரட்டிக் கொண்டிருப்பதை அந்த வைத்தியசாலை காட்டியது. சந்தியில் நின்று பார்த்தால் பெரும் வயல்வெளியையும், வயல்வெளியைக்கடந்து மட்டுநகரின் எழு வான்கரையினையும், படுவான்கரையினையும் பிரிக்கும் வாவியையும் துல்லியமாகக் காணலாம்.

எழுவான்கரையிலிருக்கும் மண்முனை இராணுவமுகாம் மகிழடித் தீவிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்திலயே இருந்தது. மகிழடித்தீவை நோக்கி அவர்கள் வைத்திருக்கும் பீரங்கிக் குழல்கள் இன்னும் கொலைப்பசியோடுதான் இருக்கின்றன.

மகிழடித்தீவு சந்தியிலிருந்து சில நூறு மீற்றர் தூரத்தில் அமெரிக்காவின் நிதியுதவித் திட்டத்தோடு உருவான இறால்ப் பண்ணைத் திட்டத்தின் எச்சசொச்சங்கள் சில தெரிந்தன. 1987ம் ஆண்டு தைத்திங்கள், 28ம் நாள் இறால்பண்ணை தமிழ் மக்களின் இரத்தப்பண்ணையாக மாறியநாள். தைபிறந்தால் வழிபிறக்குமென்றிருந்த நாளில் கொடும்கொலைகள் நடந்துபோனது. வாய்பேசமுடியாத கண்ணீரால் மட்டும் கதைபேசி நிற்கும் பல விதவைகளை உருவாக்கிவிட்ட நாள். இன்றும் இன்னும் வாய்விட்டு அழுதால் கொல்லப்பட்டுவிடுவோம் என்று அஞ்சிநடுங்கும் நிலையை உருவாக்கிய நாள்.

உலகப் பொலிஸ்காரன் எனச்சொல்லப்படும் அமெரிகாவின் நிதியுதவியோடும், கண்காணிப்போடும் இயங்கிய இறால்பண்ணையில் 135 தமிழ்மக்களின் குருதிச்சேறுபடிந்த துயரம் ஏன் வெளியுலகுக்குத் தெரியவில்லை? ஏன் தெரிவிக்கப்படவில்லை? இந்த கேள்வி மனதில் எழுந்துநிற்க, செல்லத்துரை- ரவிந்திரன் ஆசிரியர் வீட்டு முற்றத்தில் அமர்ந்தேன்.

இறால்பண்ணைப் படுகொலையில் தப்பிவிட்ட ஒரு சிலரில் இவரும் ஒருவர். அன்று இறால்ப்பண்ணையின் இரவுநேரக் காவலாளியாகக் கடமைபுரிந்தவர். கொலை நடந்த அன்று பகல் நேரக்காவலாளியாக மாற்றம்பெற்றிருந்தார். கொலைத் தாண்டவத்தின் ஒரு பகுதிக்குள் சிக்கித்தடுமாறி தப்பித்துக்கொண்ட இவரிடம் அந்த நாள் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டேன்.

‘நான் அதிகாலையிலேயே வேலைக்குப் போக வெளிக்கிட்டேன். வெளிக்கிடேக்க ஒருநாளும் இல்லாத மாதிரி ரெண்டு மூண்டு கெலி சுத்திச்சுத்தி அடிச்சுக் கொண்டிருந்தான். ஏதோ நடக்கப்போகுதெண்டு தெரிஞ்சிட்டுது. இறால்பண்ணையை நோக்கி ஓடினேன். ஆம்பிளைங்க கனபேர்பண்ணையை நோக்கி ஓடிவந்தாங்க. வெள்ளக்காரன்ர பண்ணதான் எதுவும் செய்ய மாட்டானெண்டு எல்லோருக்கும் நம்பிக்கை. முதலும் ரெண்டுதடவை இப்பிடி சுத்தி வளைச்சுப் பிடிச்சு விசாரிச்சிட்டு விட்டிருந்தான். அதால, அந்த நம்பிக்கையில ஓடினம். சந்தியில பவல்வாகனம் வந்து நிண்டுது. அதில இருந்து ஆமி குதிச்சுக் குதிச்சு ஒடிப்போய் வீதி ஒரத்தில பதுங்கினாங்க….

முதல் முதல் STF எப்பிடி இருப்பாங்க எண்டதை அண்டைக்குத்தான் பார்த்தம் வீதி ஓரத்தில் பதுங்கி இருந்தவங்க எல்லோருமே இறால்பண்ணையை நோக்கித்தான் துப்பாக்கிய நீட்டியிருந்தாங்கள். ஒருத்தன் எழும்பி நம்மள நோக்கி துவக்க நீட்டினபடி வந்தான். இதப் பார்த்தவுடனேயே எங்களோட நிண்ட ரெண்டுமூண்டுபேர் குனிஞ்சு கொண்டு தண்ணீக்கால மெதுமெதுவாக ஓடினாங்க. ‘அம்பிகைபாதம், ஓடாதேங்கோ. ஓடினா எல்லோரையும் சுடுவான். திரும்பிவாங்கோ’ என மெதுவாய் கூப்பிட்டம். திரும்பி வந்தாங்க. வரேக்க முகமெல்லாம் ஒருமாதிரியா மாறிட்டுது.

முதலைக்குடா, முனைக்காடு,மகிழத்தீவு, அம்பிளாந்துறை என எல்லா இடங்களிலுமிருந்து வந்தவங்களும் இதுக்க பட்டிட்டாங்க. வயல்வேலையில நிண்டிட்டு வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்த நாரயணப்பிள்ளை திரும்பி பண்ணைக்குள்ள ஓடிவந்தார். முதல் வெடி அவருக்குத்தான் விழுந்தது. அவர் நல்ல வாட்டசாட்டமான மனுசன். முறுக்குமீசையும், எழும்பின தோற்றமும், நல்ல பலசாலி, மூண்டு ஆமி நாங்க நிக்கிற இடத்துக்குவந்திட்டான்.

வந்து எல்லாரையும் ஒரு இடத்துக்கு வருமாறு கத்திக்கூப்பிட்டான். எல்லாரும் நடுங்கிக்கொண்டு நிற்க ஒரு சூடு சுட்டான். உடன கும்பியா நிண்டவங்க எல்லாம் சிதறினாங்க. நான் என்ன செய்தனெண்டா, இறால்பண்ணைக்குள்ள கிடந்த சின்னச்சின்ன கொட்டில்களோட மெதுமெதுவாக மறஞ்சு ஒடினேன். தெய்வநாயகமெண்ட இளைஞனும் எங்களுக்கு முன்னால ஓடினவர். தீடீரெண்டு ஒரு வெடிச்சத்தம். அவருக்கு என்ன நடந்ததெண்டு தெரியாது நான் உடன தண்ணிபாயிற வாய்க்காலுக்க படுத்திட்டன். எனக்கு முன்னால நேசதுரை எண்ட இளைஞனும் வாய்க்கால் பக்கம் பதுங்கிட்டாங்க, அவன் என்ன செய்தானெண்டா, ஓடினபக்கமா பவல் வாகனத்திருப்பிவிட்டிட்டு அடிக்கத் தொடங்கிட்டான். இஞ்சால குருகிக் காவலுக்கு வந்த சின்னப் பொடியங்களையெல்லாம் சுட்டுச்சுட்டு போடுறான். பாவம், கஸ்ரத்தில காலைலேயே இறாலை காக்காய் தூக்காமல் பாதுகாக்கிறதுக்கு வந்து நிப்பாங்க. காக்காய் காவலுக்கு வந்தா ஏதாவது கிடைக்குமெண்டு வேளைக்கே வந்திடுவாங்க அவங்கள எல்லாம் சுட்டுச்சுட்டுப் போட்டாங்க.

நான் போட்டிருந்த உடுப்பெல்லாத்தையும் களட்டிட்டு தலையைத் தூக்கிப் பார்க்கிறதும், ஓடுறதும், படுக்கிறதுமாய் கண்ணாக்காட்டை நோக்கி ஓடினன். கண்ணா ஓரமாய் ஓடீட்டிருக்கும்போதே சூட்டுச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் பண்ணைப்பக்கம் சத்தத்தை காணல்ல. திரும்பிப் போய்ப்பாப்பமென்று யோசிச்சன். திரும்பி வரேக்க, தம்பி , உங்கால போகாத, பண்ணேல நிண்ட எல்லாரையும் சுட்டிட்டாங்க என சொல்லித் தடுத்தார். ஒரு முதியவர். நான் ஓடினதுக்கு காரணம், ஏற்கனவே நான் ஆசிரிய நேர்முகப்பரீட்சைக்குப் போகும்போது கரடியானத்து காம்பில மறிச்சு என்ர இறால்ப்பண்ணை அடையாள அட்டையை பறிச்சிட்டாங்ககள் நேர்முகப் பரிட்சை முடிஞ்சு திரும்பி வரேக்க கரடினயனாத்தால வாற பயத்தில, புல்லுமலையில பஸ்சால இறங்கி, நடந்து வந்தனான். அடையாள அட்டை இல்லாத பயத்திலதான் ஓடினனான். கிடந்திருந்தா, நானும் பட்டிருப்பன். இறால்பண்ணைப் படுகொலையில் மககையும் மருமகன் இருவரையும பறிகொடுத்து விதவையாக ஏளைக் குடிசைக்குள் வாழும் திருமதி தம்பிப்போடி ஞானம்மாவை அவரது வீட்டில சந்திச்சுக் கேழுங்கோ என ரவிநாதன் ஆசிரியர் அன்றைய நாளின் ஒரு பகுதியை நினைவுக்குக் கொண்டு வந்தார்.

இந்தக் கொலை முழுவதையும் முடியும்வரையும் நிண்டு பார்த்துத் தப்பினது றைவர் செல்லத்தம்பியண்ணன் மட்டுந்தான்.அவங்களிட்ட கேட்டாத்தான் இந்தக் கொலைபற்றி முழுமையாய் அறியலாம் என ரவிநாதன் ஆசிரியர் சொல்லிக்கொண்டிருக்கும் போது, ‘நம்மட அண்ணன் ஓராளும் இதில பட்டுத் தப்பினவங்க. இதைப்பாத்த அதிர்ச்சியில நாலஞ்சு நாளாய் மூளை குழம்பி இருந்தவங்க. அவங்களிட்ட கேட்டாலும் சொல்லுவாங்க’ என கணபதிப்பிள்ளை மோட்சமலர் என்ற முன்பள்ளி ஆசிரியர் கூறினார். இவ்வாசிரியர் இறால்ப்பண்ணைப் படுகொலையிலும், மகிழடித்தீவு, அரசடியில் நடந்த படுகொலையிலும் தப்பியபர்களில் ஒருவர். 1991ம் ஆண்டு மகிழடித்தீவு படுகொலையில் சூட்டுக் காயங்களோடு உயிர்தப்பியவர்.

இறால்ப்பண்ணைப் படுகொலையில் மகனையும், மருமகனையும் பறிகொடுத்து விதவையாய் ஏழைக்குடிசைக்குள் வாழும் திருமதி தம்பிப்போடி ஞானம்மாவை அவரது வீட்டில் சந்தித்து உரையாடினேன். ‘மகன், காலேல குளிச்சிட்டு பள்ளிக்குப்போக வெளிக்கிட்டான். துறைக்கு அங்கால கல்லடி சிவானந்தாக் கல்லூரியிலதான் யுஃடு படிக்கிறவன். அவனோடு படிக்கிற இன்னோரு பொடியன் வந்தான். அவனோடு சைக்கிள்ள தொத்திட்டு மகனும் போய்த்தான். போய்த்த இடையில திரும்பிவந்து சொன்னான், ‘துறைக்கு அங்கால கொமாண்டோஸ் நிக்கிறான், திரும்பிப் போங்கோ எண்டு திரும்பி அனுப்பீட்டாங்கம்மா’ எனசொல்லீட்டிருந்தான்.

அப்ப, மகள் வந்து சொன்னாள் ‘அம்மா எல்லாரும் இறால் பண்ணைப்பக்கம் போறாங்க, தம்பியையும் அவங்களோட அனுப்புவம்’ என சொல்ல ‘மாமா நிக்கிறார், அப்பா நிக்கிறாரு, அந்தா, சீனியப்பா நிக்கிறாரு. எல்லாரும் நிக்க நான் மட்டும் போகல்ல’ என மகன் மறுத்திட்டான். என்னண்டாலும் செய்யுங்கோ எண்டு சொல்லிட்டு நிக்க சந்தியில இருந்து நாலு கொமாண்டோஸ் இஞ்சநோக்கி வாறாங்க, வந்தவங்க வளவுக்கு உள்பட்டு, குசினிக்க புகுந்து கதவோட மறஞ்சுநிண்ட தங்கச்சிட புருசன புடிச்சிட்டு வெளியில கொண்டு வந்தாங்க. பிள்ளையை தூக்கிவச்சிருந்த மகளாரின்ர புருசனனை ‘அடே குழந்தையை கீழபோட்டிட்டுவா’ என அதட்டி அவரையும் மகனையும் கூட்டீட்டு ஒழுங்கையால போனாங்க. பின்னால அழுதிட்டு ஓடினன் ஒழுங்கையால வந்த மூண்டு கொமாண்டோஸ் மற்ற மகளோட புருசனையும் பிடிச்சிட்டு வந்தான்.

ரெண்டு மருமகனையும், மகனையும், தம்பியையும் சேத்து நாலுபேரையும் கொண்டு போனான். பின்னால அழுது கொண்டு ஒடின எங்கள சுட்டுப் போடுவம் திரும்பி ஓடுங்க என வெருட்டி துப்பாக்கியை நீட்டினான். சந்திக்கு கொண்டு போகும்வரை பின்னாலேயே ஓடினம். சந்தக்கு போனதும் தங்கச்சீட புருச ரைக்ரரில ஏத்தினாங்க (மயில்வானம்) ஏத்தின உடனேயே தலேல வெடி விழுந்தது. பின்னாடி அடுத்த தங்கச்சியோட புருசன் (கனகசூரியம்) பண்ணப் பக்கம் கூட்டீட்டு போய் அங்க இருந்த ரயர்களை உருட்டீட்டு வாறதப்பார்த்தம். மகனை சந்தியில வேத கோயிலுக்கு முன்னால இருத்தி வச்சிருந்தாங்க, ரயரை உருட்டீட்டு வந்ததுதான் தெரியும். மறுகா என்ன நடக்கு தெண்டு தெரியேல்ல வெடிச்சத்தம் கேக்குது, நான் ஓடிட்டுபோய் கோயிலுக்குப் பக்கத்து வேலியால எட்டிப்பார்த்து கத்தி அழுதன். என்னோட நிறையப் பேரின்ர தாய்மாரெல்லாம் நிண்டு கத்தினாங்கள். மழைதூறீட்டிருந்தது.

இறால்குளத்துக்குக்க சுட்ட வொடியெல்லாத்தையும் வச்சிருந்த ஆக்கள கூட்டிட்டுப் போய் தூக்கிவந்து மெசின் பெட்டிக்க அடுக்கிறாங்கள். கொஞ்ச கொமாண்டோஸ் அடுக்கின வொடிக்குமேல மிரிச்சி உழக்கி நடக்கிறாங்க, மறுகாப்பத்தா நம்மடமகன மெசின் பெட்டியில ஏத்திறாங்க. முதுகுப்பக்கமா தெரியுது. முதுகுப் பக்கம் திரும்பச்சொல்லீட்டு வச்சான் வெடியொண்டு. நான் வீரிட்டு கத்தீட்டு ஓடினன். ‘என்ர மகன சுட்டிட்டாங்க. பனமரம் போல என்ரபிள்ளை விழுந்ததைப்பார்த்தன். என ஒப்பாரி வச்சு அழுதாள். (மகன் தில்லைநாதன்) என்ர மகன், இரண்டு மருமகன் தம்பி நாலு பேரையுமே சுட்டிட்டாங்க’ என சொல்லிவிட்டு சேலைத்தலப் பால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். விதவைகளாய் நிற்கும் இவரது மகள் இரண்டு பேரின் அருகேயும் அவர்களது பிள்ளைகளும் கண்கலங்கி நின்றனா. ஞானம்மாவின் கணவரும் இறந்துவிட்டதால் விதவைகள் நொந்து, வெந்து வெம்பி அழுதபடி வாழும் மாறாத வடுவினை அந்தப்படுகொலை உருவாக்கிவிட்டது.

‘இறால் பண்ணைப் படுகொலையின் முழுமையும் கண்டு தப்பிய ஒரேயொரு உயிர், றைவர் செல்லத்தம்பியண்ணதான்’ என மகிழடித்தீவில் யாரைக்கேட்டாலும் வியப்போடு கூறினார்.அவரிடம் இந்த உண்மைகளை அறிந்திட விரும்பி அவர்முன்னே ஆவலோடு அமர்ந்தேன். உழைத்துழைத்து வலுவேறிப்போன உடற்கட்டு முதுமையிலும் ஒரு கம்பீரம் இவரிடம் தெரிந்தது.

‘நான் வழக்கமாய் இரவிலேயும், பகல்லேயும் வேலை செய்ளயிறனான்தம்பி. சம்பவம் நடந்த அண்டைக்கு காலேல 5மணிக்கெல்லாம் கப்பல் (கெலிகொப்டர்) சுத்திச்சுத்திப் பறப்கிறதும் போறதும் வாறதுமாயிருந்தான். நான் என்ன செய்தனெண்டால், இறால்பண்ணை ஒபீசுக்கு வந்தன். அப்ப ஒரேவெடிச்சத்தம் கேக்குது. கப்பல் அங்க போறதும் இஞ்ச வாறதுமாய் நிக்குது. நான் பண்ண வாகனத்தை எடுத்துக் கொண்டுபோய் நிக்கிற இடங்களில் நிப்பாட்டினன். நிப்பாட்டிப் போட்டு ஒபீசுக்கு வந்திட்டன்.

பேமன்னரா வேலைசெய்யிறாக்களும் கசுவலா வேலைசெய்யிறாக்களும் சேர்ந்து ஒண்டாய் நிண்டம். வெள்ளக்காரன்ர பண்ணேல வேலைசெய்யிற எங்கள ஒண்டும் செய்யமாட்டானெண்ட நம்பிக்கையிலதான் நிண்டனாங்கள். அப்பிடி நிற்க, சந்திப்பக்த்hல வந்த கவசவாகனத்தை எங்கடபக்கம் திருப்பிவிட்டு கடகடண்டு அடிக்கத்துவங்கீட்டான். நாங்களெல்லாம் நிலத்தில விழுந்து படுத்திட்டம், நாங்கள் அண்டைக்குத்தான் கொமாண்டோசைக் கண்டோம். பெரியபெரிய புள்ளிப் புள்ளி உடுப்போட மூண்டுபேர் நாங்க நிக்கிற இடத்தக்கு வாறங்க. ஒரு 50யார் தூரதத்துக்கு வந்ததும், அடோ எல்லாம் வெளியிலவா எண்டு சொல்லி படபடெண்டு மேலே சுட்டான். கொச்சத் தமிழில அவன் கூப்பிட்டது எங்களுக்கு விளங்கினதால வெளியில நிரையாய் வந்து நிண்டம். கிடுகிடெண்டு எல்லாரும் நடுங்கத் தொடங்கீட்டம் நடுங்கின நடுக்கத்தில எல்லாற்ற கால்களும் சேத்தில மெது மெதுவாய் புதஞ்சுகொண்டிருந்தது.

அவன் வந்தவரத்தில கம்பியப்பிடிச்சு இழுத்தான். பதினொருபட்டுக் கம்பி அடிச்சிருந்தது. ஆனால் கட்டை இறந்து போச்சுது அவன் இழுத்த வேகத்தில கட்டபெயர்திட்ட வந்து அவன்ர தலையில அடிச்சிட்டுது. நெத்தியில சின்ன காயம் வந்து ரத்தம் ஒடிச்சுது அவனுக்கு அதுவும் நல்லா ஏறிச்சுது, அடே அடு அடு எண்டு ஏதோ கேட்டான். நமக்கு ஒண்டும் விளங்கல்ல. கருணா சொன்னான் குறடு இருக்குதா எண்டு கேட்கிறான் எனக்கூறிவிட்டு, குறட்டை எடுத்துக் கொண்டு வந்து குடுத்தான். ரெண்வரி கம்பியை வெட்டிப்போட்டு அடோ எல்லாம் ரைக்ரரில ஏறு ஏறு என சொல்லிக்கொண்டே படபடெண்டு சுட்டான். எல்லாரும் உடன பாஞ்சு ஏறி ரைக்ரரை எடுத்தன்.

அப்ப பாத்தன் எங்கட கொக்கட்டிச்சோலை கந்தையா டொக்டரையும் அவரின்ர மகனையும் கண் தெரியக் கூடியதாய் முகத்தை மூடிக் கட்டிக்கொண்டு கூட்டிட்டு வந்திருந்தாங்கள். அவர் பிசாமா சாறத்தால இழுத்து கொடுக்கு கட்டியிருந்தார். ரைகரரொட பண்ணைல இருந்த நம்ம இருபத்தேழுபேரையும் சந்திக்கு கொண்டுவந்தாங்கள். டொக்டரின்ர மேலெல்லாம் ரத்தம் வழியுது. அவர் விம்மி விம்மி அழுதார். எல்லோரையும் ரைக்டரால இறக்கிக் கவசவாகனத்தின்ர ரயருக்கு நேரே வரிசையாய் இருக்கச் சொல்லீட்டு, எல்லாரும் கண்ண இறுக்கி மூடுன உடனே கவசவாகனம் இரஞ்சுது எல்லாருக்கும் மேலால ஏத்தப் போறானெண்டு தெரியுது.

அப்ப ‘அடே ஆரது றைவர்’ எண்டு கூப்பிட்டான். ரயருக்கு அருகிருந்த நான் எழும்பினன். எல்லாற்ற சேட்டிலேயும் வெள்ளைக் காரண்ட ஐரென்ரிக்காட் குத்தியிருந்தது. அதையெல்லாம் அவன் பாக்கேல்ல. நம்மட கொக்கட்டிச்சோலை வைரமுத்தரும் இன்னொருவரும் கையெடுத்துக் கும்பிட்டாங்க. அவன் தூசணத்தால் பேசிப்போட்டு காலால அடிச்சான். பிறகு, இரண்டு மூண்டு பேரைக் கூட்டிக்கொண்டு போய் எங்கட பண்ணேல கிடந்த ஒம்பதிஞ்சி பம்மொண்டத் தூக்கச் சொன்னான். சாதாரணமா எட்டுப்பேர் சேர்ந்துதான் அதை தூக்கிறனாங்கள். ஆனால் அண்டைக்கு விழுந்த அடியில் வயதுபோன ஒரு ஐயா தனியவே தூக்கினாரு.

அதைவிட, அங்க கிடந்த தங்களுக்குத் தேவையான சாமானெல்லாத்தையும் தூக்கி ஏத்தச் சொன்னான். மாறிமாறி அடியும் உதையும் விழுந்தது. சுடப் போறானெண்ட பயத்தில் அடி உதை நோவொண்டும் தெரியேல்ல. எல்லாத்தையும் ஏத்திக்கொண்டு திரும்பவும் சந்திக்குக் கொண்டு வந்தான். ஒரு கொமாண்டோஸ் வந்து என்ர தலைமயிரைச் சுத்திப் பிடிச்சு இழுத்தான். அப்ப எனக்கு நல்ல தலைமயிர் இருந்தது.

அவன் செய்த சித்திரவதைக்குப் பிறகுதான் வேதனையில மயிரெல்லாம் கொட்டுப்பட்டுது. தலைமயிரைப்பிடிச்சு இழுத்து விழுத்திப் போட்டு சந்தி மதில்கரையோட இழுத்திட்டுப்போய் இருத்தினான். பிறகு வேறொருவன் ஏறி ரைக்ரரையும் கொண்டு முதலைக் குடாப்பக்கம் போறான். நம்மட பண்ணேல வேலைசெய்யிற இருபத்தியேழு பேரையும் ஏத்தீட்டுப் போனான். ஒரு பத்து நிமிசத்தில் படபடெண்டு வெடிகேட்குது இஞ்ச சந்தியில நிண்டவங்கள் சுத்தியிருந்த வீடுகளுக்குள் புகுந்து அங்க இருந்தவங்க ளெல்லாரையும் பிடிச்சுக்கொண்டு வந்து சந்தியில இருத்தினான். கொஞ்சநேரத்தில ரைக்ரர் திரும்பி வந்து மண்முனையைப்பாக்க நிண்டுது. மழை பெய்திட்டிருக்கிறது. அமிர்தநாத்தெண்டு ஒரு பெடியன் பண்ணேல வேலைசெய்யிறவன். அவன் கூட்டிட்டுப் போனான். படாரென்று ஒரு வெடி அவன்ர தலேல விழுந்தது. ரத்தம் சீறிப் பாயிற சத்தம் பெரிசாய் கேட்டது. அரைக்கண்ணால பார்த்தன். தலையில பாயிற ரத்தம் நிலத்தில குழிபறிக்குது.

திடீரென்று பார்க்க, ரைக்ரரை யெடுத்துக்கொண்டுபோய் அன்ரி மலேரியாவுல வேலை செய்யிற நம்மட சின்னப்பாதான் மயிலுப் போடியார். அவர் மாடு மேய்க்கப்போன மகனத்தேடி வந்திருக்கார். வேட்டியோட வந்த அவர கவேட்வாகனத்தால பளீரெண்டு ஒரு அடிஅடிச்சான். விழுந்திட்டார். அவரை ஏத்திறதுக்கு ரைக்ரரை கொண்டுபோனான். ரைக்ரரை கொண்டுபோய் திரும்ப பேக்க நொக்கடிச்சு நிண்டிட்டு. உடன றைவரை கொண்டுவா என ஒரு கொமாண்டோச அனுப்பியிருந்தாங்கள். ஏற்கனவே இருபத்தேழு பேரையும் சுட்டுப்போட்டு பெட்டீக்க அடுக்கி வச்சிருந்தான். நடக்கேக்க கால்ல ஏதோ பிசுபிசெண்டு ஒட்டுது, மெதுவாய் குனிஞ்சு பாத்தான் றோட்டு நீட்டுக்கு ரத்தம் படிஞ்சு போய்கிடக்குது.

போய் மயிலுப்போடியரையும் தூக்கிப்போட்டிட்டு ஸ்ராட் எடுத்துக் கொடுத்தான. ஸ்ராட் வந்தவுடன் சொன்னான், இறங்கிப் பின்னாலபோய் சவத்துக்கு மேல ஏறு எண்டு. நான் வீமில நிக்கிறனெண்டு ஏறிநிக்க, விட்டான் அடியொண்டு. தாங்கேலாமல் மற்றப் பக்கம் ஓடினன். மற்றப்பக்கமும் வந்து அடிச்சான். தாங்க முடியாமல் சவத்துக்குமேல ஏறிநிண்டன். நாராயணபிள்ளை, கருணேஸ்சேர், குணேஸ், சௌந்தர் ராஜன், கந்தசாமி எல்லாரும் அழுதழுது சவத்துக்குமேல ஏறி இருந்தம். மதியம் 12 மணியைத் தாண்டீடடுது, சந்தி மறைப்பில மெசினக் கொண்டுவந்து நிப்பாட்டீட்டான். தண்ணி விடாய்க்குதெண்டு கேட்டான், பக்கத்தில சோமர் எண்டவர் கடை வச்சிருந்தவர், அவரிட்ட ஒரு உப்புவிஸ்கற் பெட்டி வாங்கினான். ‘ஏய், தண்ணி கொண்டு வா’ என அவரை மிரட்டி தண்ணி எடுப்பிச்சான். ஒரு உப்பு விஸ்கற்ரும் ஒரு முடறு தண்ணியும் எல்லாருக்கும் தந்தான்.

ஒருமணி இருக்கும் ‘டேய் எல்லாம் கண்ண முளி’ என சொல்லேக்கயே ஒராளுக்கு ஒரு அடிவிழும். நீவா நீவா என விரலால காட்டி நாலுபேர கூட்டீட்டுப்போய் மெசின் பெட்டியில கிடந்த சவத்துக்குமேல ஏத்துவான். பளீர் பளீரெண்டு நாலுவெடி கேக்கும் மாறுகா வருவான். ‘ கண்ணமுளி’ எண்டு சொல்லி அடிவிழும். நீவா நீவா என் நாலுபேரை அல்லது அஞ்சுபேரை கூட்டீத்தும் போவான். பளீர்ப் பளீரெண்டு நாலஞ்சு வெடிக்கேக்கும். அடுத்ததரம் வந்து டேய் கண்முளி…. இப்படியாய் எடுத்தெடுத்துக் கொண்டுபோய் சுட்டுக்கொண்டேயிருந்தான். ‘ஐயா நாங்கள் வறுமைப் பட்டனாங்களய்யா, இரண்டு மூண்டு பிள்ளையளய்யா’ என பலர் கும்பிட்டார்கள். காலால் கும்பிட்ட்டகைக்கு அடிச்சாங்கள் ‘அடோ எங்களுக்கும் அப்பிடித்தாண்டா’ என சொல்லிவிட்டு மறுபடியும் நீவா நீவா என நாலு நாலாய் கொண்டுபோய் சுட்டுக்கொண்டேயிருந்தாங்கள். பெட்டீக்க சவம் நிரம்பிட்டுது, பக்கத்தில மாக்கற் கட்டடமிருந்தது.

அதுக்கு கொஞ்சத்தை இழுத்துப்போட்டிட்டு திரும்பவும் சவத்துக்குமேல ஏத்தி ஏத்தி சுட்டாங்கள். பொழுதும் பட்டுக்கொண்டு வந்துவிட்டது. வாகனமொண்டு இரையிற சத்தமொண்டு கேட்டுது கொஞ்சநேரத்தில் அதில வாகனமொண்டு வந்து நின்றது. அடோ எல்லாம் கண்ணமுளி எண்டு சொன்னாங்கள். அப்ப பத்தா கனகசூரியம் என்டவனையும் மகேஸ்வரன் என்டவரையும் கொண்டு போய் அவங்கட முடரை கொறட்டால நசிக்கிறாங்கள். துடிக்கத் துடிக்க குறட்டால நசிச்சே அவங்களக் கொண்டாங்கள். கொடித்துவக்கு கொடித்துவக்கு எண்டு அவங்கட பெரியவன கூப்பிட்டாங்கள். வாகனத்தில வந்திறங்கின பெரியவன சென்விரட்ண என சொன்னாங்கள்.

சவத்த எல்லாம் பெட்டியில ஏத்திக் அடுக்கினாங்கள். அடுக்கி தேடாகயிற்றால இறுக்கி இறுக்கி கட்டினாங்கள். மேல மேல உயரமாய் அடுக்கி நூற்றி முப்பத்தேழுபேரையும் ஏத்தி கட்டினாங்கள். நான் மெதுவாய் பின்பக்கத்தால நழுவி ஓடினேன். அடோ றைவர் மெதவாக இருண்டதால என்ன அவங்கால காணமுடியேல்ல. சவத்தெல்லாம் எங்க கொண்டு போனங்களோ தெரியாது. அப்படியேபோய் கல்ச்சேனையில புதிதாய் ஒரு காம்ப்போட்டிட்டு இருந்தாங்கள்.

சவத்தையெல்லாம் எங்க தாட்டாங்கள், எங்க எரிச்சாங்களண்ட தெல்லாம் இண்டைக்குவரைக்கும் யாருக்குமே தெரியாது. முதல் முதல் கொமாண்டோசின்ர சித்திரவதையை அண்டைக்குத்தான் கண்டம் அவங்களைப் போலக் கொலைக்காரப் பாவியள் எங்கேயுமில்ல மகன்’ எனச் செல்லத் தம்பியண்ணன் சொல்லும் போது உடலெல்லாம் வியர்ந்துக் கொட்டியது. பதின்நான்கு ஆண்டுகள் மறைந்துபோனாலும் அவரது வியர்வையும் நடுக்கமும் அந்த கொடூர கொலையிலிருந்து அவரது உள்ளம் விடுபடவில்லை. என்பதைக் காட்டியது.

ஆக்கம்: மணலாறு விஜயன்

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

https://www.thaarakam.com/news/110853

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.