Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரும் வாழ்வும்...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மப்பும் மந்தாரமான வானம் , மழை மேகங்கள் கருக்கட்டி கதிரவனை மறைக்க,  பேறு கால தாய் போல் வீங்கிப்பெருத்திருக்கும் முகில்கள் எப்போதும் மீண்டும் மழை உடைத்துக் கொண்டு கொட்டலாம் என்கின்ற நிலைமை..... 

இடைக்கிடை மேகங்கள் மோதி காதைக்கிழிக்கும் இடியும் மின்னலுமான காலநிலை .... கடந்த கிழமை தொடக்கம் பெய்த மழையில் நிரம்பிய குளத்துக்குள் இருந்து தவளைகள் போடும் சத்தம் எரிச்சலை தந்து கொண்டிருந்தது.......

வீதியால் செல்லும் மாட்டு வண்டியில் கொழுவியிருக்கும் அரிக்கன் விளக்கு வெளிச்சம் தவிர வேறோன்றும் கண்ணுக்குத் தெரியவில்லை....

A9 கண்டி வீதி ஆள் அரவாரமற்று அமைதியாய் கிடந்தது.....

தனித்திருக்கும் யாரையும் பயம் கொள்ளச்செய்யும் கும்மிருட்டு மணி பின்னேரம் ஆறைத் தாண்டி இருக்காது ஆனாலும் இருட்டுக்கட்டி கிடந்தது மாங்குளம் எனும் சிறு நகரம்!


நகரமா அல்லது கிராமமா? இன்னும் தெளிவில்லா ஊர் அது!

கண்டி வீதியில் வன்னியின் மத்தியில் ஒட்டுசுட்டான் ,மல்லாவி ,கிளி நொச்சி ஓமந்தை என வன்னியின் நான்கு முக்கிய நகர்களுக்கு மத்தியில் பரந்து விரிந்து அமைதியாய் கிடக்கும் ஊர் மாங்குளம்....

இந்த நிலத்திற்க்காக உயிர்கொடுத்த பிள்ளைகள் ஏராளம்....

கந்தகம் ஏற்றி வெடித்த மாங்குளம் மண்ணின் மைந்தன் போர்கின் சிரித்த முகம் மாங்குளம் சந்தியை கடக்கும் ஒவ்வொரு தடவையும் வந்துபோகும்...

எத்தனை துனிச்சல்…. தன்னலமில்லா உயிர்க்கொடை... எத்தனை உயர்ந்த உள்ளங்களோடு வாழ்ந்திருந்தோம்!

அந்த புனிதங்களின் மகத்துவம் எத்தனை பேருக்கு அப்போது புரிந்தது என்று தெரியவில்லை!


இபோது புரியும்போது அவர்கள் இல்லை!

எல்லா நினைவுகளையும் தன்னில் தாங்கிய படி காலத்தை வென்று அமைதியாய் கிடக்கிறது மாங்குளம்!

95ம் ஆண்டு யாழ்ப்பாணதில் இருந்து சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை எனும் பெரும் அழிவு துரத்த பாதுகாப்பு தேடி வந்தோருக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அடைக்கலம் கொடுத்த வன்னிப்பெரு நிலம்!!

எப்போதும் நினைத்துப்பார்துண்டு யாழ்ப்பாணம் நோக்கி வன்னி மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை வந்திருந்தால நாங்கள் இவர்களைப்போல் அவர்களை அன்போடு அரவனைத்திருப்போமா என!

எத்தனை உயர்ந்த மனதோடு மனம் கோணாமல் அரவனைத்து பாதுகாத்தார்கள்!

மாங்குளமும் இடம்பெயர்ந்து வந்தோரால் நிரம்பிவழிந்தது. புதிய புதிய கடைகள் , வைத்திய  நிலையங்கள் , குடியிருப்புக்கள் என ஒரு சிறு நகரமாய் உருக்கொள்ளத் தொடங்கியிருந்த காலம் அது.

கண்டி வீதியும் ஒலுமடு வீதியும் சந்திக்கும் சந்தியில் பழைய மின்சாரசபை வளவு முன்னொரு காலத்தில் இந்திய இராணுவமுகாமாக இருந்த இடம் இப்போது தமிழீழ பொருன்மிய மேம்பாட்டுக்கழகத்தின் வாகன திருத்துமிடமாக மாறி இருந்தது. இது தான் எனது முதல் வேலைத்தளம்.


அந்த வளவை மூடி கிளைபரப்பி வளர்ந்திருக்கும் வாகை மரம் அதன் கீழ் ஒரு அறையுடன் கூடிய சிறிய அலுவலகம் வாயிற்காப்பாளருக்கென வாசலில் சிறு தகரத்தால் செய்யப்பட்ட கொட்டில்  மோட்டார்  சைக்கிள் திருத்தும் கொட்டகை   விமானத்தாக்குதலால் இடிந்து கிடக்கும் அயல் வீடு  , யாழ்ப்பாணத்தில் இருந்து கடைசி நாள் இடப்பெயர்வின் போது கிளாலிக் கடற்கரையில் கைவிடப்பட்ட ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள் , திருத்தம் செய்யவென வந்த  இயக்க வாகனங்கள், முல்லைத்தீவில் இயக்கத்தால் கைப்பற்றபட்ட பெரிய  ட்றக் , ஓமந்தை விவசாயி ஒருவரின் ட்றாக்க்டர்  என  அந்த வளவு வாகனங்களால் நிரம்பிக்கிடந்தது!


இங்கே தான் உதயன் எனக்கு அறிமுகமானான்...  அவன் ஒரு டீசல் எஞ்சின் மெக்கானிக்....

எனக்கு தரப்பட்ட பணி அந்த திருத்த பட்டறையை நிர்வகிக்கும் தொழில்... கணக்கு வழக்கு பார்ப்பதில ஆரம்பித்து மெக்கானிக்மாருக்கு சாவி எடுத்துக்கொடுக்கும் எடுபிடி வேலை தொடக்கம் சாப்பாடு எடுத்துவரும் வேலை வரை செய்ய வேண்டும்.....

சொகுசாக வீடு , கோயிலடி , வாசிகாகசாலை அரட்டல் , விளையாட்டு மைதானம்  என சொகுசாக யாழ்ப்பாணத்தில்  வாழ்ந்த எங்களுக்கு இது புது ஒரு அனுபவம்...தீடிரென வாழ்க்கையை மறுவளமாக புரட்டிப்போட்டது போன்ற நிலைமை...

இடப்பெயர்வால் எல்லாமே விட்டுப்போக குடும்பத்தை காப்பாற்ற ஏதாவது வேலை செய்ய வேண்டிய கட்டாய நிலைமை....

இடம்பெயரும் போது எந்த ஆவணத்தையும் தூக்கிக்கொண்டு வராததால்  வேலை எடுப்பதென்பது வன்னியில் முயற் கொம்பு....

எந்த வேலைக்கு இன்ரவியூவுக்கு போனாலும் குறைந்தது நூறு பேராவது இன்ரவியூக்கு வருவாங்கள் இதில  ஒன்டுமே இல்லாத நாங்கள் எங்க எடுபடுறது!

ஏலவல் சோதனை எழுதி றிசல்ட் இன்னும் வரவில்லை மனதுக்குள் கம்பஸ் கிடைக்கும் என்ட ஒரு நம்பிக்கை இருந்திச்சு... இதுக்குள்ள இயக்கத்தின்ட கடைகளிளோ அல்லது ஒபிசுகளிளோ வேலை செய்தா கம்பஸ் கிடைச்சாலும் வன்னியைவிட்டு வெளியில போக ஏலாது எண்டு எல்லோரும் பயப்படுத்தினாங்கள்.....

அவங்கள் சொல்லுறதும் சரி போலத்தான் இருந்திச்சு!

எதுக்கு வம்பு சோதனை மறுமொழி வரும் வரைக்கும் ஏதாவது பள்ளிக்கூடம் அல்லது ரியூட்டறியில மட்டுமே வேலைக்கு போறதென்டு முடிவா இருந்தன்.

அக்காலத்தில் வன்னியில் இருந்த ஒரே ஒரு புளுக்கொலர் வேலையான ஆசிரியர் தொழில் தான் அதுதான் எல்லோரினதும் முதன்மை விருப்பத்தேர்வாக இருந்தது!  அதைவிடவும் பெருமையான வேலையென்டா NGO வேலை... அது வேற லெவல்...  அதெல்லாம் நாங்க கனவிலையும் நினைச்சு பாக்க இயலாது.

பெரும்பாலும் அனேகமானவை வோக்கின் இன்டவியூக்கள்...   நேரடியா நேர்முகத்தெரிவு அன்று போய் கலந்து கொள்ளவேண்டியதுதான்.... போய் வாசலில இறங்கேகயே முடிவு அனேகமாக தெரியும்...

சங்க கடைக்கும் இன்டவியூக்கும் தான் சனம் அதிகம் கூடும்....

எத்தனை நேர்முகத்தேர்வுகளுக்கு சென்றாலும் இறுதியில் நிராகரிக்கப்பட  என்ன செய்வது என்று தெரியாத திரிசங்கு நிலை.....

ஈழநாதம் பேப்பரில வாற ஆட்கள் தேவை விளம்பரங்கள்  ஒன்டும் தவறவிடுறதில்லை. ரியூட்டறி ஆசிரியர் தேவையில் இருந்து பள்ளிக்கூட ஆசிரியர் தேவை வரை விண்ணப்பித்தும் ஒரு வேலையும்  கிடைக்காத வெறுப்பில் வன்னி முழுக்க வேலை தேடி அலைந்து கொண்டிருந்தேன்....

குடும்ப நிலைமை மோசமாகிக் கொண்டிருந்தது.... அம்மாவின் நகைகள் ஒவ்வொன்றாய் விற்று முடித்துவிட ... மூன்று வேளை உணவு  இரண்டு  வேளையாய் குறைந்தது.....


வறுமை எங்கள் கொட்டிலுக்குள் தாண்டவமாடிக்கொண்டிருந்தது…

எப்படியாயினும் வேலை எடுத்தே ஆகவேண்டிய நிலை….

தம்பி உப்பிடி இருந்து ஓன்டும் செய்யேலாது ஏதாவது கடையில அல்லது சங்கத்தில வேலைக்கு சேர்... வேலையாவது  பழகுவாய்....

என தெரிந்த உறவினர்கள் நச்சரிக்க தொடங்கினர்....


முருகண்டி ஆலயத்துக்கு அருகில் ஒரு கிருஸ்தவ பாதிருயார் நடாத்தும் தொண்டு நிறுவனம் ஒன்று உள்ளது அங்கு போய் வேலை கேட்டுப்பார் என  எங்கள் கொட்டிலுக்கு பக்கத்து கொட்டிலில் தங்கியிருந்த இளவாலையில் இருந்து இடம் பெயர்ந்திருந்த அலோசியஷ் அண்ணர்   சொன்னார்....

அந்த பாதிரியார் நல்லவராம் போய் கதைத்துப்பார்  தம்பி!  ஏதாவது உதவிசெய்வார்......

மருமகன் போன கிழமை அங்க போய் கதைச்சு தான் வேலை எடுத்தவன் என்றார் அலோசியஸ் அண்ணர்!

அவரின் பேச்சு நம்பிக்கையை தந்தது!  மனதுக்குள் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை துளிர்விட்டிருந்தது.

அடுத்த நாள் விடிய  வேளைக்கு எழும்பி வாய்க்காலில் குளித்துவிட்டு

அம்மா ஊத்திய பிளேன் ரீயை குடித்துவிட்டு, சைக்கிளை எடுத்தேன்....

இஞ்ச ஒருக்கா நில்லு தம்பி...என்டு அம்மா என்னை போகாமல் தடுத்தார்...

என்னனை…

நல்ல  விசயத்து போகேக்க பிறத்தால கூப்பிட்டுக்கொண்டு...

என்று அம்மாவை கடிந்தேன்….

இந்தா இதைக்கொண்டு போய் அடைவு வைச்சுட்டு மத்தியானத்துக்கு அரிசி வாங்கிகொண்டு வா! எண்டு ஏதோ ஒன்றை என் கையில் திணித்தாள்.

நான் உதிலை இரண்டு மாங்காயை புடுங்கி கறிவைக்கிறன்... நேற்று இரவும் சின்னவன் சாப்பிட சோறு இருக்கேல்ல...

எத்தினை நாளைக்கு சாப்பிடாம கிடக்கிறது... அம்மா நிறுத்தாமல் புலம்பினாள்!

என்னனை உது...

அம்மாவின் பழைய கை லேஞ்சியால் கட்டப்பட்டிருந்த சரையை அவிழ்த்துப்பார்த்தேன் அம்மாவின் தாலி மின்னியது....


உங்களுக்கு என்ன விசரே பிடிச்சுருக்கு ... கொண்டு போய் உள்ளுக்கு வையுங்கோ என சத்தமாக கத்திவிட்டு அம்மாவின் கையில் தாலியை   திணித்துவிட்டு

அம்மாவின் பதிலுக்கு காத்திராமல் விறுக்கென்று சைக்கிளை எடுத்துக்கொண்டு

முருகண்டி நோக்கி பயணமானேன்!

நிச்சயமாய் தெரியும் அம்மா இப்போது அழத்தொடங்கியிருப்பாள்!  மனது வலித்தது!

எப்படியாவது இண்டைக்கு வேலைகி டைக்க வேணும் எண்டு அண்ணா சிலை அருகில் இருந்த கோவிலில் கும்பிட்டுவிட்டு சைக்கிளை மிதித்தேன்!

கட்டாயம் எப்பிடியும் இது கிடைக்கும்..  கிடைச்சா முதல் மாத சம்பளத்தில முருகண்டியானுக்கு  ஒரு தேங்காய் உடைப்பன் என்கின்ற நேத்திக்கடனோட முருகண்டி நோக்கி சைக்கிள் பறந்தது!

அம்பலபெருமாள் சந்திதாண்டி  அக்கராயன் ஆஸ்பத்திரிக்குன் கிட்ட வரேக்க மணியண்ணை அக்கராயன் குளத்துக்கு குளிக்க போய்க்கொண்டிருந்தார்....

எங்க விடியவே கிளப்பிடாய் எனக்கேட்டார்...

மணியன்னை வேற லெவல் இவ்வளவு நேர்மையான ஆளை யாரும் வாழ்க்கையில கண்டிருக்க முடியாது. மனைவியை சிறுவயதில் இழந்து தனி மரமாய் இரு பிள்ளைகளோடு வாழ்ந்துகொண்டிருப்பவர்....

மனதில் இருந்ததை மணி அண்ணையிடம் கொட்டினேன்….. எனக்கு கண்கள் பனித்தன!

பயப்படாத உனக்கு கட்டாயம் வேலை கிடைக்கும் , நான் வீட்டுக்கு அரிசி வாங்கி குடுக்கிறன் நீ ஆறுதலாய் கவலைப்படாமா போட்டுவா! என தெய்வம் போல் வார்த்தைகளை உதிர்த்தார் மணி அண்ணை!

அவருக்கும் எனக்கும் எந்தப் சம்பந்தமும் கிடையாது அவர் வன்னியில் ஒரு மூலையிலும் நான் யாழ்ப்பாணத்தின் இன்னோர் மூலையிலும் நேற்றுவரை வளர்ந்தவர்கள்!  இடப்பெயர்வு எம்மை இணைத்தது ....

ஒரு சில நாள் பழகினாலும் உடன் பிறந்த சகோதரன் போல் உறவு எடுத்துக்கொளவார்! நல்ல மனம் படைத்த உயர்ந்த மனிதர்!

அவருக்கு நன்றி சொன்னால் பிடிக்காது! உங்கட யாழ்ப்பாணத்து பழக்கத்தை இஞ்ச காட்டாமல்  மனிசருக்கு மனிசர் உண்மையா இருக்க பழகுங்கோ எண்டு பேசுவார்!

மணி அண்ணையின்ட கையை என்ட இரண்டு கையாலேயும் பிடித்தேன் ... நன்றி சொல்ல வார்த்தை வரவில்லை கதைத்தால் அழுதுவிடுவேன் என புரிந்தது!

மணி அண்ணைக்கு  அது  புரிந்திருக்கும் .. அவர் சிரிப்பில் இருந்து புரிந்து கொண்டேன்....

அதற்க்கு மேல் நிற்க்காமல் சைக்கிளை மிதிக்க தொடங்கினேன்....


காலை ஒன்பது மணி இருக்கும் அலோசியஷ்  அண்ணை சொன்ன இடத்தை போய் சேர்ந்தேன்! வாசலில் வெள்ளை நிற கையஸ் வாகனம் ஒன்று நீல நிறத்தில் அரசசார்பற்ற அந்த நிறுவனத்தின் இலச்சனை பொறித்தபடி எங்கேயோ புறப்படுவதற்க்கு தயாராக்கி கொண்டிருந்தது!

மனதுக்குள் தேவாரத்தை முனுமுனுத்தபடி….

பாதரை சந்திக்கலாமோ....

வாசலில் நின்ற நடுத்தர வயது மதிக்க தக்க ஒருவரிடம் கேட்டேன்!

என்ன அலுவல்?..  என்றார் பதிலுக்கு...

வேலை அலுவலா வந்திருக்கிறேன் என்றேன்! பவ்வியமாக...

அக்கா ஏதாவது வேலைக்கு பேபரில விளம்பரம் குடுத்தனீங்களோ என வாசலிலே நின்றபடியே உள்ளுக்குள் இருக்கும் ஓர் யுவதியை நோக்கி கூவினான்!

பதிலுக்கு அறைக்குள் இருந்து யுவதி

உதுகளுக்கு வேற வேலையில்லை…..

விடிஞ்சா பொழுதுபட்டா எத்தனை பேர் வேலை தாங்கோ என்டு வருகுதுகள்!  என ஒருமையில் பதிலளித்தார் அந்த யுவதி!

வாசலில நிக்கிற செக்கி ஐயாக்கு எத்தனை தரம் சொன்னனான் எல்லாரையும் உள்ளுக்க விட வேண்டாம் என்டு என்று அந்த யுவதி கத்திக்கொண்டே வெளியே வந்தார்!

என்ன வேணும் என்றார் இறுக்கமாக!

பாதரை சந்திக்க வந்திருக்கிறேன் என்றேன்....

பாதர் இப்ப அவசரமா வவுனியா போறார் பிறகு வாங்கோ என்றார்! சொல்லும்போதே பாதர் இன்னொரு அறைக்குள் இருந்து வெளியே வந்தார்!

என்ன பிரச்சனை தம்பி என நேரடியாகவே என்னைக்கேட்டார்...

பாதர் ஏதாவது வேலை இருந்தா தாங்கோ? குடும்ப நிலைமையை சொல்ல மனது தடுத்தது.

என்ன படிச்சிருக்கிறீர்?

ஏலவல் சோதனை எடுத்துட்டு றிசல்ட்டுக்கு வெயிட் பண்ணுறன்.  என்றேன்...

தம்பி இஞ்ச கம்பஸ் படிச்ச பெடியளே வேலை இல்லாம திரியிறாங்கள்..... உம்மட தகுதிக்கு இப்ப இஞ்ச ஒண்டும் இல்லை ...

நான் அவசரமா இப்ப போக வேனும் எண்டு சொல்லிவிட்டு என் பதிலுக்கு காத்திராமல் வாகனத்தில் ஏறினார்....

எனக்கு தலைசுற்றியது.... விழுந்துவிடுவேன் போல இருந்தது....

ஓவெனக் கதறலாம் போல் இருந்தது!

வாசலில் நின்ற யுவதி ஏளனமாய் பார்த்தாள்.. இதைத்தானே நானும் சொன்னனான் என்று சொல்லிவிட்டு சிரித்தாள்...

அவமானமாய் இருந்தது! அவளைப்பார்க்கால் வெளியேறினேன்!!! அவள் வாசலில் நின்ற செக்கிறுட்டி ஐயாவோடு சண்டை இட்டுக்கொண்டிருந்தாள்....

என்னை உள்ளே விட்ட பாவத்திற்க்கு அந்த வயோதிப ஐயா பேச்சுவாங்கிக்கொண்டிருந்தார்....

கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது!!

வீட்டுக்கு திரும்ப செல்ல மனம் தடுத்தது முருகண்டி பிள்ளையார் கோயிலில் நோக்கி சைக்கிளை மிதித்தேன்...

இக்கால முருகண்டி போல் அல்லாது வழிப்போக்கர் இளைப்பாறவென சிறு சிறு குடில்களும் திண்ணையும் முருகண்டிப்பிள்ளையார் கோயிலின் பின் வீதியில் அக்காலத்தில் அமைந்திருக்கும்.

அந்த திண்ணையில் சைக்கிளை சாத்திவிட்டு ஓரமாய் சார்ந்து கண்களை மூடி மனதுக்குள் அழுதேன்..

என்ன செய்வதென்று தெரியவில்லை ....

எவ்வளவு நேரம் அப்படி இருந்தேனோ தெரியவில்லை.....

விதியை நொந்துவிட்டு... கோயிலிக்கு அருகில் இருந்த  பெரிய தண்ணீர் தொட்டியில் முகத்தை கழுவிட்டு நிமிர்ந்தபோது எதிரே இருந்த  பெரிய கட்டவுட்டில்  தீலிபன் அண்ணா சிரித்தபடி நின்றார்... மரணம் ஒரு தடவைதான் வரும். அதற்காக மானத்தை விற்றுச் சீவிக்கமுடியுமா? எனும் அவரின் வாசகம் ஏதோ ஒன்றை எனக்கு சொல்லுவது போல் இருந்தது.


பயணம் தொடரும்.... 
 

https://sarinikar.blogspot.com/2020/01/blog-post_28.html?_sm_au_=iHVrqWVq605kFFWNBJ3vvK7RJCBJt

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பமே அலங்க மலங்க வைத்து போட்டியள் .....நல்ல அனுபவம் போல் இருக்கு , தொடர்ந்து எழுதுங்கள்.....!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 உங்கள் உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கு! நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.