Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெப் 4. சுதந்திரக் கேலிக்கூத்து : காலனித்துவத்திலிருந்து நவகாலனித்துவத்திற்கு - என்.சரவணன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
z_pxi-p11-the-1948-edits.jpg
 
காலனித்துவத்திலிருந்து நவகாலனித்துவத்துக்கு கைமாற்றும் சதியே நமது சுதந்திர நாள். ஆட்சியையும், அதிகாரங்களையும். பொறுப்புகளையும் தமிழர்களிடமிருந்து பறித்து சிங்களவர்களிடம் ஒப்படைத்த நாள் இது. தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை நசுக்குவதற்கான அரச இயந்திரத்தை சிங்களவர்களிடம் கொடுத்த நாள் இது. இலங்கையின் சனத்தொகையில் 11 வீத இந்திய வம்சாவழித் தமிழர்களை நாடற்றவர்களாக ஆக்குவதற்காக வழங்கப்பட்ட லைசன்ஸ் இந்த சுதந்திரம்.
 
டொனமூர் யாப்பு தொடக்கம் இறுதி யாப்பு வரை தமிழர்கள் எதிர்த்தே வந்துள்ளனர். சோல்பரி யாப்பு மாத்திரம் விதிவிலக்கு. சுதந்திரத்துக்கு வித்திட்ட அந்த யாப்பு தமிழர்களை நசுக்க மட்டுமே பயன்பட்டது.
 
“சுதந்திரம்” என்பதை விட தமிழர்களுக்கு அது ஆங்கிலேயர்களும், சிங்களவர்களும் சேர்ந்து செய்த “தந்திரம்” மட்டுமே. சுதந்திர நாள் என்பது தமிழர்களுக்கு ஒரு கரி நாள். சட்டபூர்வமாக உரிமை பறிபோன நாள். அவ்வப்போது சற்று தணிந்தும், கொதித்தும் வந்த போதும் பண்பளவில் எந்த மாற்றமும் நிகழ்ந்ததில்லை. யுத்தத்திற்குப் பின்னர் தமிழ் மக்கள் தரப்பிலும் சுதந்திர தினத்தில் தம்மையும் இணைத்து அனுஷ்டிக்கும் போக்கு ஆங்காங்கு காண முடிகிற போதும். உணர்வு பூர்வமான பங்களிப்பாக அது இல்லை என்பதே நிதர்சனம். அகதிகளாகவும், ஆனாதரவாகவும், குடும்பங்கள், சொத்துக்கள் இழந்தவர்களாகவும், அரசியல் உரிமைகளையும் அடிப்படை உரிமைகளை பறிகொடுத்தவர்களாகவும் இருக்கும் அரசியல் அனாதைகளுக்கு  சுதந்திரம் ஒரு கேடா என்கிற நிலை. சமத்துவமும், சக வாழ்வும், சமவுரிமையும் சகல மக்களுக்கும் கிடைக்கக் கூடிய நாளே இலங்கைக்கு உண்மையான சுதந்திர நாள்.
 
(சு)தந்திரம் கைமாறிய கதை
 
இலங்கையில் காலனித்துவத்தின் இறுதிக் காலப்பகுதியில் அரசியல் சீர்திருத்தத்துக்கு வழிகோலிய உடனடி பின்புலக் காரணியாக இருந்தது இரண்டாம் உலக மகா யுத்தமே. இதன் போது பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் ஆட்சிக்குட்பட்டிருந்த நாடுகளில் வெளிக்கிளர்ந்த சுதந்திரப் போராட்டங்களும் உக்கிரம் பெற்றுக் கொண்டிருந்தது. இலங்கையின் அண்மைய நாடான இந்தியாவிலும் சுயராஜ்யப் போராட்டம் வேக முற்றுக் கொண்டிருந்த போது இலங்கையர்களும் இலங்கைக்கான சீர்திருத்தக் கோரிக்கைகளை உயர்த்திப் பிடித்தனர்.
 
அன்று அரசாங்க சபையில் அங்கம் வகித்து வந்த உயர் மத்திய தர வர்க்கத் தலைவர்கள் டொனமூர் திட்டம் தொடர்பாகவும் அதிருப்தியுற்றிருந்தனர். அது போதுமானதல்ல என்றும், அதற்கு மாற்றாக மேலதிகமாக சீர்திருத்தக் கோரிக்கைகளையும் வேண்டி நின்ற போது அதனை கருத்திற் கொள்ளாமலிருக்க பிரித்தானியருக்கு இயலவில்லை.
 

வெறும் சீர்திருத்தவாத கோரிக்கைகளை மாத்திரமே முன் வைத்து வந்த இலங்கையை தமது காலனித்துவ நாடுகளிலேயே  சிறந்த ''மாதிரிக் காலனி” (Model Colony) என்றே பிரித்தானியா அழைத்து வந்தது. எனவே சீர்திருத்தக் கோரிக்கைகளில் ஓரளவானதை வழங்கி இலங்கையரை திருப்திப்படுத்திவிட பிரித்தானியாவும் தயாராக இருந்தது. என்ற போதும் 1939 செப்டம்பரில் ஆரம்பித்த இரண்டாம் உலக மகா யுத்தத்தைக் காரணம் காட்டி அச் சீர்திருத்தக் கோரிக்கைகளைக் கூட பின்போட்டு வந்தது. 1940ம் ஆண்டு பிரித்தானிய அரசு தமது அறிக்கையொன்றின் மூலம் போர் நிலை காரணமாக அரசாங்க சபையின் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதாக அறிவித்தது. அதன் காரணமாக 1941ம் ஆண்டு நடத்தப்படவிருந்த பொதுத்தேர்தலும் பின்போடப்பட்டது. இப்படிப் பின் போட்டமைக்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுவதுண்டு. அப்போது மிக வேமாக வளர்ச்சியுற்று வந்த இடதுசாரிகளின் செல்வாக்கானது தமது இருப்புக்கு அச்சுறுத்தலாதென்றும் சீர்திருத்தவாத தேசிய சக்திகளை தமக்கு சாதகமாகத் தயார் படுத்துவதற்கான அவகாசத்தை ஏற்படுத்துவதற்காகவுமே இத்தேர்தல் பின்போடப்பட்டதும் ஒரு காரணம்.
 
1941ம் ஆண்டு பிரித்தானிய அரசாங்கம் இன்னொரு அறிவித்தலையும் விடுத்தது. யுத்தம் முடிவடைந்தவுடனேயே அரசியல் சீர்திருத்தம் இடம் பெறும் என்பதே அது. சீர்திருத்தவாதத் தலைவர்கள் இம்முறை சீர்திருத்தக் கோரிக்கைகளுடன் மாத்திரம் நின்று விடாது ''டொமினியன்”” அந்தஸ்தைக் கோரிநின்றனர்.
 
உலக மகா யுத்தம் பல நாடுகளுக்குப் பரவி தீவிரமடைந்து கொண்டிருந்த போது பிரித்தானியா தமது நற்குணத்தைக் காட்ட வேண்டியதன் அவசியம் இருந்தது. இந்நிலையில் 1943இல் இன்னொரு அறிக்கையைப் பிரித்தானியா வெளியிட நேரிட்டது.
 
அதன்படி யுத்தம் முடிந்ததன் பின் பொறுப்புடன் கூடிய அரசியலமைப்பொன்று வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது. அவ் ஆட்சி முறையானது பிரித்தானிய முடிக்குட்பட்ட சுயாட்சி முறையாக இருக்குமென்றும், இதனை உருவாக்குவதற்கான ஒரு நகலொன்றை அமைச்சரவையை உருவாக்கும்படி பிரித்தானிய அரசு வேண்டியது. இதனை 1943க்குள் தயாரிக்கும்படியும் நான்கில் மூன்று பெரும்பான்மை பகுதியினரின் ஒப்புதலைப் பெற்ற பின் இதனை நடைமுறைக்கு கொண்டு வரலாமென்றும் அதிலிருந்தது.
independenceagreement-1948.jpg
"சுதந்திர சாசனம்" கையெழுத்தான போது
”அமைச்சர்களின் நகல்” (Minister’s Draft) எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நகல் உண்மையிலேயே அமைச்சர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. இதனை உருவாக்கியவர் அன்றைய இலங்கைப் பல்கலைக்கழக (பேராதனைப் பல்கலைக் கழக) உபவேந்தராகவிருந்த சேர். ஐவர் ஜெனிங்ஸ் என்பவரே. இது தன்னாலேயே உருவாக்கப்பட்டது என பிற்காலத்தில் சேர்.ஐவர் ஜெனிங்ஸ் எழுதிய ”இலங்கையின் அரசியலமைப்பு” (Constitution of Ceylon) எனும் நூலில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிட்டிருந்தது.
 
இந்த நகலுக்கு சிறுபான்மை இனத்தவர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. குறிப்பாக தமிழ்த் தலைவர்கள் இதனை எதிர்த்தனர். தம்மிடமிருந்து எந்தவித யோசனைகளையும் கேட்டறியாமல் தயாரிக்கப்பட்ட இந் நகல் சிறுபான்மையினங்களுக்கு எதிரானவை என அவர்கள் தெரிவித்தனர்.
 
ஆனாலும் இந்நகலை மீளப் பரிசீலிக்கும்படி அமைச்சர்களால் குடியேற்ற நாட்டுக் காரியதரிசியிடம் கோரப்பட்டது. இந்நகலைப் பரிசீலிப்பதற்குப் பதிலாக பிரித்தானிய அரசு இன்னொரு அறிவித்தலை விடுத்தது. ”1944 அறிக்கை” எனும் பெயரில் அழைக்கப்படும் இவ்வறிக்கையில் ''அமைச்சர்களின் நகலை” நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியப்பாட்டை ஆராய்வதற்காக ஒரு ஆணைக்குழு இலங்கைக்கு அனுப்பப்படுமென்றும், யுத்தம் இன்னமும் தொடர்ந்து கொண்டிருப்பதால் அரசாங்க சபையின் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
”1944 அறிக்கை”யை அமைச்சர்கள் எதிர்த்தார்கள். அதனை அரசாங்க சபைக்கு முன்வைக்கு முன்பே அதனை நிராகரித்தார்கள். ஆனாலும் அமைச்சர்களின் எதிர்ப்பின் மத்தியிலும் அது நடைமுறைப்படுத்தப்பட்டது.
 
இதன் பிரகாரம் 1944 செப்டம்பர் மாதம் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை பரிசீலிப்பதற்கென சோல்பரி ஆணைக்குழு 1944 யூலை 5இல் அமைக்கப்பட்டது. இக்குழு டிசம்பர் 22 இலங்கை வந்தது.
 
சோல்பரி ஆணைக்குழுவினருக்கு செய்வதற்கு ஒன்றுமிருக்கவில்லை. ”அமைச்சர்களின் நகல்” எனும் பெயரில் சொல்லப்பட்ட ஐவர் ஜெனிங்ஸ் தயாரித்திருந்த அதே திட்டத்தையே தமது ஆணைக்குழுவின் சிபாரிசாக முன்வைத்தது. செனட் சபை எனும் பேரில் மேற்சபையொன்றும் உருவாக்கப்பட வேண்டுமென்றும் அவ்வாணைக்குழு கூறியிருந்தது. சிறுபான்மை இனங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அம்மேற்சபை அனுகூலமாக இருக்குமென சோல்பரி குழு நம்பியது. வேறும் சில சிறு சிறு திருத்தங்கள் செய்த போதும் ஜெனிங்ஸின் அடிப்படையான திட்டத்தில் பாரிய மாற்றமெதனையும் இது செய்யவில்லை. இறுதியில் ஜெனிங்ஸ் திட்டமானது சோல்பரித் திட்டமாக  1945 ஒக்டோபர் 09இல் முன்வைக்கப்பட்டது.
 
சோல்பரி அரசியலமைப்பு டொமினியன் அந்தஸ்தை விட சற்றுக் குறைந்திருந்தது. இரண்டாவது உலக யுத்தத்துக்குப் பின் நடந்த தேர்தலில் பிரித்தானியாவில் தொழிற்கட்சி பதவியிலமர்ந்தது. இலங்கைக்கான சீர்திருத்தமும் இந்த தொழிற் கட்சி அரசாங்கத்தாலேயே பரிசீலிக்கப்பட்டது.
 
The-Rt.-Honourable-Lord-Soulbury.jpg
"சோல்பரித் திட்டம்" பற்றி அன்றைய சபைத் தலைவர் டி.எஸ்.சேனநாயக்கவுடன் பிரித்தானிய அரசு பேச்சுவார்த்தை நடாத்தியது. அதன் பின் இது ஒரு மசோதாவாக பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த மசோதா 1945ம் ஆண்டு நவம்பர் 8 இல் அரசாங்க சபையில் வாக்குக்கு விடப்பட்ட போது 51 வாக்குகள் ஆதரவாகவும் 3 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. (எஸ்.நடேசன், பீ.தியாகராஜா, ஏ.மகாதேவா ஆகியோர் இதற்கு ஆதரவளித்திருந்தனர்).
 
1947ம் ஆண்டு அது இலங்கைக்கு அனுப்பப்பட்டது. ”1947 அரசியல் திட்டம்” என அழைக்கப்படுவது இது தான்.
 
யூன் 18ஆம் திகதி அரசாங்க சபை கூடிய போது பிரித்தானியா இலங்கைக்கு சுயாட்சி (டொமினியன்) வழங்கும் தனது திட்டத்தை அறிவித்தது. அடுத்த மாதமே 4ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. ஓகஸ்ட் 23 – செப்டம்பர் 20 வரை பொதுத் தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் (ஐ.தே.க.வானது இலங்கை தேசிய காங்கிரசும், பண்டாரநாயக்காவின் சிங்கள மகா சபை உட்பட சில அமைப்புக்களையும் இணைத்தே அமைக்கப்பட்டிருந்தது) இருந்த சிங்கள மகா சபையைச் சேர்ந்தவர்கள் கூடிய ஆசனங்களைக் கைப்பற்றியிருந்த போதும் இறுதி நேரத்தில் பண்டாரநாயக்காவால் டி.எஸ்.சேனநாயக்கா பிரதமராக ஆவதற்கு ஆதரவளிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இத் தேர்தலில் சோல்பரி அரசியல் திட்டத்துக்கு ஆதரவு வழங்கிய எஸ்.நடேசன் யாழ்ப்பாணத்தில் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தினால் தோற்கடிப்பட்டார். ஏ.மகாதேவா (சேர்.பொன் அருணாசலத்தின் மகன்) ஜி.ஜி.பொன்னம்பலத்தினால் தோற்கடிக்கப்பட்டார்.
 
செப்டம்பர் மாதம் 24 அன்று டி.எஸ். பிரதமராகப் பதவியேற்றார். ஒக்டோபர் மாதம் முதலாவது பாராளுமன்றம் கூடியது. அதே மாதம் பிரதமர் யாழ்ப்பாணம் விஜயம் செய்த போது அங்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன் பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டது.
 
இதே வேளை 1947 டிசம்பர் ஆளுனர் சேர். ஹென்றி மொங்க் மேசன் மூர் மற்றும் டி.எஸ். சேனநாயக்க ஆகியோருக்கிடையில் மூன்று ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டது. இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அல்லது அமைச்சரவையுடன் எவ்வித கலந்துரையாடலையும் செய்யாமல் இந்த ஒப்பந்தம் தன்னிஷ்டப்படி பிரித்தானிய விசுவாசியாக தன்னைக் காட்டிக் கொள்வதற்காக செய்து கொண்டார் சேனநாயக்கா. பாதுகாப்பு, வெளிநாட்டலுவல்கள், அரசாங்க நிர்வாகம் ஆகியன தொடர்பாக 3 ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. அவ்வொப்பந்தங்கள் 1948 பெப்ரவரியிலிருந்து நடைமுறைக்கு வரும்படி செய்து கொள்ளப்பட்டது. இதன் பிறகே 1947 நவம்பர் 26 அன்று பிரித்தானியப் பாராளுமன்றத்தில் ”சதந்திரச் சட்டம்” (The Ceylon Independence Act 1947) நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் இலங்கையில் 1947 டிசம்பர் 1ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டு 3ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. இச் சட்டத்துக்கு 59 வாக்குகள் ஆதரவாகவும், 11 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. 29 பேர் வாக்களிப்பிலிருந்து தவிர்த்துக் கொண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (பார்க்க அட்டவணை)
stat1.jpg
 
 
stat2.JPG
stat3.JPG
 
இச்சட்டத்தின் பின் தான் 1948 பெப்ரவரி 4ஆம் திகதி ”சுதந்திரம்” என்ற கேலி நாடகம் அரங்கேற்றப்பட்டது. சோல்பரி கொமிசனின் செயலாளராக செயற்ப்பட்ட பில்லிஸ் மில்லர் (Phyllis Miller) அம்மையாரின் பிறந்த நாளைத் தான் சுதந்திரத் தினத்துக்காக தெரிவுசெய்திருந்தார்கள் என்கிற ஒரு கதையுமுண்டு. சேர் ஒலிவர் குணதிலக்க 1962 அரச கவிழ்ப்புச் சமபவத்தின் பின் லண்டனில் குடியேறியிருந்த காலத்தில் பில்லிஸ் மில்லர் அம்மையாரைத் தான் 1968இல் திருமணம் செய்துகொண்டார்.

இப்படித்தான் காலனித்துவத்திலிருந்து நவ காலனித்துவத்திற்கு பரிமாறப்பட்டது. காலனித்துவத்துக்கு முன் பன்முக சமூகங்களின் வெவ்வேறு  அரசாட்சிகளைக்  கொண்டிருந்த இந்தத் தீவு காலனித்துவம் முடிவுக்கு வரும்போது “ஒற்றையாட்சியாக்கி” ஒட்டுமொத்தமாக சிங்கள -பௌத்த கொவிகம - ஆணாதிக்க - சுரண்டும் - வர்க்கத்துக்கு கைமாறப்பட்டது. உலக ஏகாதிபத்திய முதலாளிய நவகாலனித்துவத்திற்கும் படிப்படியே இலங்கை பலியாக்கப்பட்டது இந்த சக்திகளினாலேயே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.