Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலத்தடியில் புதைந்த கடந்தகாலமும், அகழப்படும் உண்மைகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

நிலத்தடியில் புதைந்த கடந்தகாலமும், அகழப்படும் உண்மைகளும்

1_wkI0YOZxviL2nM1UcwwGTg.jpeg

உண்மைகள் தங்களைத் தாங்களே என்றும் நிறுவிக்கொள்வதில்லை. அதிகாரத்தின் கரங்களே அவற்றை நிறுவகின்றன. புலனாகும் உண்மைகள், ஆங்கிலத்தில் ஃபாக்ட்ஸ் எனப்படுபவைகூட கருத்துசார் உண்மைகள் உருவாகும்போது அவற்றுள் புதையுண்டுவிடுகின்றன. ஜெயந்தன் ‘மனுஷா மனுஷா’ என்ற நாடகத்தில் எழுதியதுபோல,  மன்னனின் புத்தாடைகள் என்ற கதையில் வருவதுபோல கண்ணுக்குப் புலனாகாத மன்னனின் ஆடைகளை அனைவரும் பாராட்டும்போது மன்னவனின் நிர்வாணத்தைக் கேள்வி கேட்பவனே பைத்தியக்காரன், முறை தவறிப் பிறந்தவன். சுருக்கமாகச் சொன்னால் அனைவரும் ஏற்றுக்கொள்வதே உண்மை. அனைவரும் ஏற்றுக்கொள்ளும்போது பிறப்பதுதான் அதிகாரமும். பொது ஏற்பின் இரண்டு பரிமாணங்களே உண்மையும், அதிகாரமும் என்பதால் அதில் சாதாரணமாகப் புலனாகும் விஷயங்கள் கூட அடிபட்டுப் போகும் என்பதே யதார்த்தம்.

பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பிய சிந்தனையில் அகம், புறம் என்பவை புதியதாக வரையறை செய்யப்பட்டு சிந்தனை எனப்படும் புரிந்துணர்வு அகமாகவும், புலன் அனுபவங்களால் பெறப்படுபவை எல்லாம் புறவுலகம் என்றும் வரையறை செய்யப்பட்ட பிறகு, புற உலக உண்மைகளை அறிவியல்ரீதியாக நிறுவலாம் என்றும், இது ஐயத்திற்கு அப்பாற்பட்டது என்றும் ஒரு நம்பிக்கை உருவானது. அதாவது புலன் அனுபவத்தை அகமும், புறமும் சேர்ந்த கலவையாகப் பார்க்காமல் அனுபவத்திற்குக் காரணமான புற உலகாகவும், அனுபவத்தை உணரும் பிரக்ஞையை அக உலகமாகவும் பிரிப்பதன் மூலம் அகத்திற்கும், புறத்திற்கும் இடையில் புதியதொரு எல்லைக்கோட்டை, மதில் சுவரை, அகழியை உருவாக்கியதே நவீன காலம். இது புதியவகையான மக்களாட்சி அதிகாரத்திற்கு ஒத்திசைவாக இருந்தது. அதாவது அரசியல் என்பது விவாதங்களாலும். கருத்தொருமிப்பாலும் நிகழவேண்டும், அறிவியல் என்பதோ பரிசோதனைகளாலும், புள்ளிவிவரத்தாலும் புறவுண்மைகளை உருவாக்க வேண்டும்.

இப்படி மானுடப் பண்பாட்டையும், இயற்கை விதிகளையும் பிரித்துப் பார்ப்பது நவீன நோக்கின் அடிப்படையாக, நவீன அரசியல் மற்றும் அறிவியலின் அடிப்படையாக மாறியது. இயற்கையை ஆராய்வதும், புள்ளி விவரங்களைத் தொகுப்பதும் மனிதர்கள்தான் என்றாலும் இயற்கை அதுவாகவே இயங்குவதாகவே, புறவய (Objective) உண்மையாகவே கருதப்படும். மனிதர்களின் கருத்தொப்புமை, முடிவுகள் எல்லாம் முன்தீர்மானிக்கப்பட்டவையாகவே இருந்தாலும் அது அவர்களாகவே உருவாக்குவதாகக் (Subjective) கருதப்படும். இயற்கை (Nature) வேறு; மானுடச் செயல்பாடு (Culture) வேறு. இயற்கை புறவய விதிகளால் இயங்குகிறது. மானுடம் தனது விருப்புறுதியின் மூலம் இயங்குகிறது.

இப்படியான இயற்கை, மானுடப் பிரிவினையை நவீன சிந்தனையை நிர்ணயிக்கும் விதி என்கிறார் புரூனோ லதூர் (H.1947). இதன் முக்கிய விளைவு என்னவென்றால் புறவய உண்மைகள் என்று கூறப்படுபவற்றை நம்புவது. அறிவியல் பரிசோதனைகள் மூலம் பெறப்படும் எல்லாத் தகவல்களும் கேள்விக்கு அப்பாற்பட்டவையாக எடுத்துக்கொள்ளப்படுவது. அறிவியல்ரீதியாக நிறுவப்பட்ட உண்மைகளை அறிவியலே பிற்காலத்தில் மறுத்து வந்தாலும், இப்போதைக்கு எது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையோ, அதை முற்றிலும் புறவயமாக்கி நம்புவது. பிரபஞ்ச வெடிப்புக் கோட்பாடு என்று அறிவியலாளர்கள் சொன்னால் அது 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்தது என்று ஒரு கணக்கையும் சொன்னால் அதை இயற்கைசார் உண்மையாகக் கருதுவதுபோல பல்வேறு பரிசோதனைச்சாலை அவதானிப்புகளையும் இயற்கைசார் உண்மைகளாகவே கருத வேண்டும். பெண்களுக்கு மூளையின் அளவு சிறியது என்று சொன்னதையும் நம்பினார்கள். எய்ட்ஸ் நோய் ஓரினச்சேர்க்கையால் உருவானது என்றபோதும் நம்பினார்கள்.

வரலாறும் அறிவியலும்

பண்டைய வரலாற்றினை அறியும் ஆவலும் பதினேழாம் நூற்றாண்டிலிருந்து அதிகரித்து வந்துள்ளது. கடந்த காலத்தைக் குறித்த எழுத்துக்கள், இலக்கியப் பிரதிகள், கதையாடல்கள் ஆகியவற்றில் மட்டும் திருப்தி அடையாமல் பல்வேறு கல்வெட்டுகள், கட்டிடக் கலை, சிற்பக்கலை சார்ந்த அடையாளங்கள் ஆகியவற்றையும் முக்கியமாக ஆராயத் துவங்கியது மானுடம்.

உலகப் பேரரசாக விளங்கிய பிரிட்டிஷ் பேரரசின் பண்டைய காலத்தை அறிந்துகொள்ள ஸ்டோன்ஹிச் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வுகள் தொடங்கின. இத்தாலியிலும், கிரீஸிலும் உள்ள இடிபாடுகளைச் சுற்றிலும் அகழ் ஆய்வுகள் நடந்தன. நெப்போலியன் எகிப்தைக் கைப்பற்றியபோது ஒரு ஆய்வறிஞர் குழுவே வரவழைக்கப்பட்டு எகிப்தின் பண்டைய வரலாறு குறித்த ஆய்வுகளும், அகழ்வுகளும் தொடங்கின. வரலாற்று எழுதியலில் உயர்வு நவிற்சிக் கூற்றுகள், உருவகங்கள், கற்பனைகளைக் கலக்காமல் எழுதுவது, மானுட முயற்சிகளைக் காரண, காரியத் தர்க்கத்தில் வைத்து விளக்குவது ஆகியவற்றுடன் தக்க சான்றாதாரங்களுடன் எழுதும் புறவய நோக்கிலான அணுகுமுறையும் வலியுறுத்தப்பட்டது. அப்படியான சான்றாதாரங்களை எதிர்நோக்கிய பார்வையில் அகழ்வாராய்ச்சி முக்கிய இடம் பிடிக்கத் துவங்கியது. பண்டைய காலச் சான்றுகள் பூமிக்கடியில் புதையுண்டு இருக்குமென்பதால் அகழ்ந்து பார்த்தால் அந்த சான்றுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை பத்தொன்பதாம் நூற்றாண்டினூடாக வலுவடைந்தது.

இந்த இடத்தில் வரலாறு என்பது அகவயமான பிரக்ஞையாக, பண்பாட்டுச் செறிவாக இருப்பதிலிருந்து, புறவயமான நிரூபணங்களைக் கோரும், புறவய உண்மை சார்ந்ததாக மாறியதை நாம் கவனிக்க வேண்டும். இதன் விளைவுகள் பாரதூரமானவை. இதனை விரிவாகப் புரிந்துகொள்வது முக்கியம்.

அகம் புறம் ஆகியவை புதிய வரையறைகளைக் கொண்டவையாக மாறின என்று பார்த்தோம். அகம் என்பது சிந்திக்கும் ஆற்றலுள்ள பிரக்ஞையாக மாறியது; புலன் உணர்வுகளைச் சிந்தனை பரிசீலித்துதான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் நியதியானது. இதன் பொருள் என்னவென்றால் உணர்வு, உணர்ச்சி ஆகியவற்றைவிட பகுத்தறிவதையே நான் பின்பற்ற வேண்டும் என்பது. இதில் நிறைய நன்மைகள் உள்ளன. உதாரணமாக கோபம், காமம் போன்ற உணர்ச்சிகளை அப்படியே வெளிப்படுத்தாமல் சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்துக் கட்டுப்படுத்திக் கொள்வது, அவ்வுணர்ச்சிகள் அடுத்தவரை பாதிக்காமல் வெளிப்படுத்துவது போன்றவை நன்மைகள். இவை பண்டைக்கால அகம், புறம் வேறுபாட்டிலேயே பெறப்பட்டதுதான் என்றாலும் மேலும் வலுப்பெற்றதாகக் கூறிக்கொள்ளலாம். ‘மனத்துக் கண் மாசிலன் ஆதல்; அனைத்தறன் ஆகுல நீரபிற.’ என்றார் வள்ளுவர்.

ஆனால் அகவய உணர்வுகளைக் கணக்கிலேயே கொள்ளாமல், புறவய விதிகள், தேவைகள் ஆகியவற்றை மட்டுமே அங்கீகரிக்கும் புறவய நோக்கு மோகம் என்பது விரிவான போலித்தனங்களை, நுட்பமான அதிகார விளையாட்டுகளை உருவாக்கும் தன்மை கொண்டவையாக மாறின. உதாரணமாக அழகியல் சார்ந்த சிந்தனைகளிலும் கூட புறவய மதிப்பீடுகள் முக்கியமானவை என்பதும், பன்மை வெளிப்பாடுகள் என்பதைவிட பொதுவான அழகியல் மதிப்பீடுகளே முக்கியம் என்பன போன்ற எண்ணங்கள் வலுத்தன. இதனால் இலக்கியத்தில் தூய்மைவாத நோக்கு, தணிக்கை முறை போன்றவை உருவாயின.

இந்தப் பொதுவாக ஏற்றுக்கொள்ளும் புறவய சான்றுகளுடனான வரலாறு என்பது, அகவயமாக ஒருவர் தன் பாரம்பர்யத்தைக் குறித்துக்கொள்ளும் பிரக்ஞையுடன் முரண்படக்கூடியதாக மாறியது. அகவய நோக்கு மறப்பதையும், நினைவுகூர்வதையும் வாழ்தலின் நிமித்தம் தேவைக்கேற்றபடி கையாளும் தன்மை கொண்டது. ஆனால் புறவய வரலாற்று நோக்கு என்பது அவ்விதமான நெகிழ்ச்சிகளுக்கு இடம் கொடாமல் கடந்தகாலத்தை ஒரு இறுக்கமான சுமையாக மாற்றும் வாய்ப்புகளையும் கொண்டதாக மாறியது. இதனால் வரலாற்று எழுதியல் என்பதே தீவிரமான அரசியல் உட்கிடக்கை கொண்டதாக மாறியது. காலனீய கால வரலாற்று எழுதியல் இஸ்லாமிய இந்தியா, இந்து இந்தியா என்று பகுத்து எழுதியதும், இஸ்லாமிய ஆட்சியாளர்களின் படையெடுப்பைக் குறித்து எழுதியதும் இந்தியாவின் பாரம்பர்ய உணர்வையே புதியதாகக் கட்டமைக்கும் சாத்தியத்தை உருவாக்கியது. இஸ்லாமையும், இஸ்லாமியர்களையும் நிரந்தரமாக அந்நியர்களாக்கும் அபத்தம், அனர்த்தம், விபரீதம் நவீன வரலாற்று எழுதியலின் ‘புறவய’ நோக்கின் விளைவுகளில் ஒன்று என்றால் மிகையாகாது.

புறவய வரலாற்றின் பலன்களை நம்பக்கூடியவர்கள், எப்படி புறவய வரலாற்றின் விரிவுகளுக்குள், தகவல்களுக்குள் ஆழமாகப் பயணிக்கும்போது வரலாற்றின் பன்முக ஆற்றல்களை, பரிமாணங்களைப் புரிந்துகொள்வதன்மூலம் ஒற்றைப்பட்டையான பார்வைகளைத் தவிர்க்கலாம் என்பதை வலியுறுத்துவார்கள். ஆனால் இதில் ஒரு பிரச்சினை என்னவென்றால், புறவயத் தகவல்கள் கொடுப்பதைச் சுலபமாக சில தேர்வுகளுக்கு உட்படுத்தி வடிகட்டி ஒற்றைப்பரிமாண பார்வைகளை உருவாக்கிவிட முடியும் என்பதுதான். ஔரங்கசீப் இந்துமத விரோதி என்ற ஒரு கட்டமைப்பை புறவய வரலாறு சில தகவல்கள் அடிப்படையில் உருவாக்கிவிட்டால், பின்னர் பல தகவல்களை, புறவய ஆதாரங்களைக் கொண்டும் அதை சரிசெய்ய முடியாது. பலவகையான அகவய கதையாடல்களின் முரண்களில் உருவாகும் பாரம்பர்ய உணர்வினை, ஒரு சில புறவய வரலாற்று முன்முடிவுகள் ஒற்றைப்பரிமாணம் கொண்டவையாக மாற்றிவிடும் தன்மை கொண்டவை என்பதால், வரலாற்று எழுதியல் நன்மைகளை அதிகம் தருகிறதா, தீமைகளை அதிகம் தருகிறதா என்பதே கேள்விக்குறியாக மாறிவிடுகிறது.

ஆனால் அறிவியலின் புறவய நோக்கினை புதிய உண்மையின் தளமாக, அதாவது இறைவன் மற்றும் மீமெய்யியல் சித்தரிப்புகளிலிருந்து விடுபட்டு மனிதன் சுதந்திரமாக இயங்கும் ஆற்றலை வழங்கும் தளமாக நம்பத்துவங்கிய நவீன மனம் புறவய ஆதாரங்களையே எப்போதும் மிக முக்கியமானதாக கருதத் துவங்குகிறது. இந்த ஆதாரங்களைப் பெறுவதில் மானுடத் தேர்வுகள், பல யூகங்கள், அனுமானங்கள் ஆகியவை பங்கேற்றாலும், புறவய ஆதாரம் என்பதற்குக் கடவுளுக்கு இணையான அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இவ்வகையான புறவய ஆதாரப்பித்தின் ஒரு முக்கியமான களம் அகழ்வாராய்ச்சி. இது பண்டைக்காலம் என்பதே நிலத்தடியில் புதைந்து கிடக்கும் தகவல்கள்தான்; அவற்றை அகழ்ந்தெடுத்து நாம் நமது வரலாற்றை அறிய வேண்டும் என்பதை ஒரு மானுடத் தேவையாக மாற்றியது.

இதை நாம் புரிந்துகொள்ள காலப் பெட்டகம், டைம் காப்ஸ்யூல் என்ற ஒரு வேடிக்கையான சமாசாரத்தை நினைவு கூர வேண்டும். சமகால பயன்பாட்டு பொருட்கள், சமகால வரலாற்றுத் தகவல்களை ஒரு உறுதியான பெட்டியில் இட்டு, பூமிக்குள் புதைத்து வைப்பதுதான் டைம் காப்ஸ்யூல். இதை எதிர்காலத்தில் ஆய்வாளர்கள் அகழ்ந்தெடுத்து நம் காலத்தைக் குறித்து தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை ஏதோவொரு விபத்தில் இன்றுள்ள நூலகங்கள், ஆவணக்காப்பகங்கள் அழிந்துபட்டால் இவை உதவும் அல்லவா? இப்படியொரு பழக்கமும் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே அமெரிக்காவில் துவங்கிவிட்டது என்றாலும் இந்தியாவில் இந்திரா காந்தி புதைத்த டைம் காப்ஸ்யூல்தான் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானது. எதிர்க்கட்சிகள் எல்லாம் அவர் தப்பும் தவறுமாக எழுதி வைத்துவிட்டார்; எல்லோரிடமும் காட்டவில்லை என்று கண்டனம் செய்தன. நெருக்கடி நிலைக்குப் பிறகு இந்திரா தோல்வியடைந்து ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது அந்த டைம் காப்ஸ்யூலைத் தோண்டியெடுத்துப் பார்த்தார்கள். என்ன இருந்தது என்று வெளியே சொல்லவில்லை.

இதே பிரச்சினைதான் கல்வெட்டு போன்றவற்றிற்கும். அதை செதுக்கியவர் சரியாகத்தான் செய்தார் என்று எதை வைத்து சொல்லமுடியும்? ஒரு நம்பிக்கைதான். பொதுவாக வரலாற்றுப் பாடப்புத்தகத்தைப் படித்தால் திட்டவட்டமாக தகவல்களைச் சொல்வார்கள். அசோகர் கலிங்கப் போருக்குப் பின் புத்தமதத்தை தழுவினார் என்பார்கள். நீங்கள் விரிவாக அது தொடர்பான வரலாற்றுத் தகவல்களை ஆராய்ந்தால், அப்படிக் கூறுவதற்கு வலுவான சான்றுகள் கிடையாது, அது ஒரு யூகம் என்று தெளிவாகும் அல்லது ஒரு மாற்றுக் கருத்து இருப்பதாவது தெரிய வரும். ஆனால் பாடநூலில் யூகங்களை மட்டும் எழுதினால் பிறகு மாணவர்கள் வரலாற்றை அறியவே முடியாது என நினைத்துவிடுவார்கள் என்பதால், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட யூகங்களை, முற்றிலும் நிறுவப்பட்ட உண்மைகள் போல எழுதிவிடுவார்கள்.

வரலாற்று எழுதியல் என்பது சொல்லாடல்கள், கதையாடல்கள் மூலம் கடந்தகாலத்தைச் சித்தரித்து சில உண்மைகளாக கட்டமைப்பதுதான். இது முற்றிலும் பொய் என்பதல்ல; முற்றிலும் உண்மையும் அல்ல. பலவகைப்பட்ட யூகங்களின் தொகுப்பு எனலாம். சான்றாதாரங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவில் கிடைத்தால் அவற்றைப் பொருத்திப் பார்க்கும் யூகங்கள் வலுப்பெறும். உதாரணமாக, புத்தர் கிறிஸ்து பிறப்பதற்கு ஐநூறு, அறநூறு ஆண்டுகள் முன்னால் பிறந்தார் என்பதைப் பரவலான தடயங்கள் சார்ந்து ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அவரைக் குறித்த கதையாடல்கள் அனைத்தையும் நிறுவப்பட்ட உண்மைகளாகக் கொள்ள முடியாது. அவை வாய்மொழியாக வழங்கப்பட்டதில் பல கற்பனைக் கூறுகள் கலந்திருக்கலாம் என்பதுதான் உண்மை. ஆனால் சில கிட்டத்தட்ட ஏற்கத்தக்க யூகங்களை உண்மைகளாலான சரடாகக் கொண்டு பல  யூகங்களையும் தொகுத்துதான் வரலாறு எழுதப்படுகிறது. அப்படி உருவாகும் வரலாறு குறித்த சித்தரிப்புகளுக்கு ஏற்ப சான்றாதாரங்களைத் தொகுக்கும் துறையாக அகழாய்வு இருக்கிறது. அதே சமயம் அகழாய்வு சில பல புதிய கதையாடல்களுக்கும் வழிவகுக்கும். மொஹஞ்சதாரோ, ஹராப்பா ஆய்வுகளில் நிகழ்ந்தது அதுதான்.

 1001004001580545-195x300.jpg

அகழாய்வுகள் என்பது எப்படி ஏற்கனவே நிலவும் வரலாற்றுக் கதையாடல்களுக்கு வலு சேர்ப்பவையாகின்றன என்பதை அறிய பாலஸ்தீனப் பகுதியில் நடந்த ஆய்வுகள், அங்கே பண்டைய யூத மதம் சார்ந்த கதையாடல்களுக்கான ஆதாரங்கள் தொகுக்கப்பட்ட விதம், அவை எப்படி இஸ்ரேல் என்ற நாட்டினைக் கட்டமைக்க உதவின என்பதையெல்லாம் பேராசிரியர் நாடியா அபு எல் ஹாஜ் எழுதிய “Facts on the Ground:Archeological Practice and Territorial Self-Fashioning in Israeli Society” என்ற நூலில் விரிவாகப் படித்தறியலாம். இவர் அறிவியல்புல ஆய்வுகள் என்ற பொருளில் வழங்கும் சயன்ஸ் ஸ்டடீஸ் என்ற அறிவுத்துறையின் பார்வைகளைக் கைக்கொண்டு அகழாய்வின் தேர்வுகள், அவற்றின் முடிவுகள் தொகுக்கப்படும், உள்வாங்கப்படும் முறைகள் ஆகியவற்றின் கட்டமைக்கப்படும் தன்மையை விவரித்துள்ளார். ஆதாரங்களுக்கும், யூகங்களுக்கும் உள்ள மெல்லிய இடைவெளியை எப்படி சொல்லாடல்களும், கதையாடல்களும் இட்டு நிரப்புகின்றன என்பதே இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உண்மையா, பொய்யா, புறவயமாக நிறுவப்பட்டதா, நல்ல அறிவியலா, மோசமான அறிவியலா என்ற விவாதத்தை விட எவ்வளவு சுலபமாக கட்டமைப்புகள் நிகழ்கின்றன என்பதற்கான மிகப்பெரிய உதாரணம் என இஸ்ரேல் என்ற யூதர்களுக்கான புதிய தேசம் இரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவான விதத்தையும், அங்கு வசித்த பாலஸ்தீனியர்களுக்கு இழைக்கப்பட்ட, தொடர்ந்து இழைக்கப்பட்டுவரும் அநீதியையும் கூறலாம். அதில் அகழாய்விற்கும் இருந்த பங்கினைத்தான் நாடியா அபு எல் ஹாஜ் நூல் விவரிக்கிறது.

வரலாறு என்றுமே நமக்குத் தொடர்பில்லாத கடந்தகாலத்தை தெரிந்துகொள்வதாக இருக்க முடியாது. நாம் அறியும் ஒவ்வொரு கடந்தகால ‘உண்மையும்’ நம் நிகழ்காலத்தைத் தகவமைப்பதாகத்தான் இருக்கும். இஸ்ரேல் என்ற புராணங்களில் யூதர்களுக்கு கடவுள் கையளித்த நிலமாக கூறப்பட்டது, வெகுகாலமாக அரேபியர்களான பாலஸ்தீனியர்கள் வசித்துவந்த பகுதியாக இருந்தது. இது நிலப்பகுதியை ஆராய்ந்து புராணக் கதையாடல்கள் கூறுவதற்கான சான்றுகளைத் தேடும் பணி பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கியது. ஜெர்மனியில் நிகழ்ந்த யூதப் படுகொலைக்குப் பிறகு அவர்களுக்கென்று ஒரு தேசம் வேண்டும் என்னும்போது அந்த ஆய்வுகளின் அடிப்படையில் யூதர்களின் பண்டைய நிலமான இஸ்ரேலில் அவர்களுக்கான தேசம் உருவாக்கப்பட்டபோது அங்கு வசித்து வந்த பாலஸ்தீனியர்களை அப்புறப்படுத்தவேண்டி வந்தது. ஜெருசலேம் நகரை வெவ்வேறு மதத்தவர்களின் பகுதிகளாகப் பிரிக்கவேண்டி வந்தது. அதன் பிறகும் தொடர்ந்து பாலஸ்தீனியப் பகுதிகளில் குடியேற்றமும், இஸ்ரேலின் விரிவாக்கமும் தொடர்கிறது. தங்களுக்கான ஒரு சுயாட்சிப் பிரதேசத்தை, தேசத்தை உருவாக்கிக்கொள்ள பாலஸ்தீனியர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள்.

இந்த உதாரணத்தை, வரலாறு சமகாலத்தில் கடுமையாக ஊடுருவும் உதாரணத்தை கருத்தில்கொண்டு இந்தியாவில் சமீபத்தில் நிகழ்ந்த இரண்டு அகழாய்வு தொடர்பான பிரச்சினைகளை சுருக்கமாகப் பார்ப்போம். ஒன்று, பாபர் மசூதி தொடர்பான அகழாய்வு பிரச்சினை. இரண்டு, தமிழகத்தில் கீழடியில் நிகழ்ந்த அகழாய்வு, அதைக் குறித்த விவாதம்.

பாபர் மசூதி அகழாய்வு

பாபர் மசூதி என்ற கட்டிடம் ஐநூறு ஆண்டுகளாக அயோத்தியில் இருந்து வந்ததை அனைவரும் ஏற்கின்றனர். முகலாய வம்ச ஆட்சியைத் துவங்கி வைத்த பாபர் காலத்தில் இது கட்டப்பட்டு அவருடைய பெயரில் வழங்கி வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த மசூதி கட்டப்பட்ட இடம் ராமஜென்ம பூமி என்ற ஒரு நாட்டார் வழக்காற்றியல் நம்பிக்கை இருந்ததாகவும், அங்கே இருந்த கோயில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாக ஒரு வாய்மொழிக் கதையாடல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. நயத்தகு இந்துத்துவ பிரசாரகரும், தமிழ் இலக்கியவாதியுமான ஜெயமோகன் கூறுவதுபோல ராமர் கோயில் இடிக்கப்பட்டதும், முந்நூறு ஆண்டுகளாக இந்துக்கள் அந்த இடத்தை மீட்கப் போராடுவதும் “வரலாற்று உண்மைகளாக” நிறுவப்பட்டதாகத் தகவல் இல்லை. ஜெயமோகன் சமீபத்தில் அயோத்தி தீர்ப்பு குறித்து எழுதியுள்ள கட்டுரையில் வரலாற்று உண்மைகள், தொல்லியல் ஆதாரங்கள் என்று முழங்கியிருப்பது நான் இந்த கட்டுரையின் துவக்கத்தில் கூறியவற்றிற்கான நல்ல உதாரணங்கள் ஆகும். பிரச்சினை தொல்லியல் ஆய்வுகள் ஐயத்திற்கு இடமின்றி எதைக் கூறியிருக்கிறது என்பதல்ல. தொல்லியல் ஆய்வு சில யூகங்களுக்கு இடம் கொடுத்ததே யூகங்களை உண்மைகளாகக் கூறப் போதுமானதாக உள்ளது.

அயோத்தியில் இந்துக்களும், முஸ்லிம்களும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வந்துள்ளதை ஆய்வாளர்கள் விரிவாகப் பதிவு செய்துள்ளனர். இந்து கோயில்களுக்கு பரம்பரையாக பூ கட்டி கொடுப்பவர்கள் முஸ்லிம்களாக இருந்துள்ளனர். முஸ்லிம் அரசர்கள் இந்து கோயிலுக்கு நிவந்தங்கள் கொடுத்துள்ளனர். ராமர் கோயிலை இடித்து மசூதி கட்டியது அப்படி இந்துக்கள் நினைவில் இருந்திருந்தால் நிலவியிருக்கக் கூடிய பகைமை எதுவும் அங்கே நிலவியதாகத் தெரியவில்லை. பாபர் மசூதி சமீப காலங்களில் வழிபாட்டிடமாக இருக்கவில்லை. அதே போல இந்தியாவின் எந்தப் பகுதியிலும் புகழ் பெற்ற கோயில் எதுவும் ராமருக்காக கட்டப்பட்டது இல்லை. ராம்லீலா போன்ற நிகழ்வுகள் கூட பதினெட்டாம் நூற்றாண்டில் உருவானவைதான். இந்தியாவின் தொன்மையான கோயில்கள் அனைத்தும் சிவலிங்கங்களை, பாம்பின் மேல் சயனித்திருக்கும் விஷ்ணுவை, பல்வேறு பெயர்களில் வழங்கப்படும் சக்தி வடிவான பெண் தெய்வங்களையே வழிபாட்டின் மையமாகக் கொண்டவை. பிற்காலத்தில் ராமனின் பக்தரான ஹனுமானுக்குப் பல கோயில்கள் எடுக்கப்பட்டன. அப்போதும் கூட ராமருக்குக் கோயில் கட்டுவது என்பது ஒரு பரவலான பழக்கமாக இல்லை. மதுராந்தகம் போன்ற சில இடங்களில் அபூர்வமாக ராமர் கோயில்கள் இருக்கின்றன. இவை தொன்மையானவை இல்லை.Babri-Masjid1-300x169.jpg

அயோத்தியின் ஒட்டுமொத்த வரலாறு, இந்திய வழிபாட்டு முறைகள், ஆலயங்கள் எடுக்குவிக்கப்பட்டமை ஆகியவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்க்கும்போது அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடமே ராமஜன்ம பூமி, அங்கே ராமர் கோயில் இருந்தது போன்ற எண்ணங்கள் மிகவும் பிற்காலத்தில், பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான வாய்மொழிக் கதைகளாக மட்டுமே இருக்க முடியும் என யூகிக்கலாம். இந்து, முஸ்லிம் கலவரங்கள் நிகழத்துவங்கிய பத்தொன்பதாம் நூற்றாண்டில் இது போன்ற கதைகள் உருவாகியிருக்கலாம். இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகள் தோன்றி மிகப்பெரிய கலவரங்கள் நிகழ்ந்த பின்னணியில்தான் ராம் லல்லா என்ற குழந்தை ராமர் சிலைகள் ஒரு இரவில் பாபர் மசூதி வளாகத்திற்குள் எடுத்துச் செல்லப்பட்டு நிறுவப்பட்டன. இதற்கு உறுதுணையாக இந்துத்துவ சக்திகள் இருந்தன. அப்போதிருந்துதான் பாபர் மசூதி பிரச்சினைக்குரிய இடமாக மாறியது.

இந்தியா ஒரு சுதந்திர நாடாக, புதிய குடியரசாக உருவான பிறகு, அதில் இருக்கும் தொல்லியல் அடையாளங்கள், வழிபாட்டு இடங்கள் ஆகியவை எவற்றையும் யாரும் பல நூற்றாண்டிற்கு முந்தைய நிலைகளை குறித்த யூகங்களின் அடிப்படையில் கோர முடியாது. அப்படி செய்யத் துவங்கினால் ஏராளமான வழிபாட்டு இடங்களை குறித்து எண்ணற்ற சர்ச்சைகள் கிளம்பலாம். ஏனெனில் நம்பிக்கைகளுக்கும், வாய்மொழிக் கதைகளுக்கும் பஞ்சமே கிடையாது. சமண, பௌத்த வழிபாட்டிடங்களே இந்து கோயில்களாக மாறியதாக பலர் கூறுவார்கள். இதையெல்லாம் ஆராயத் துவங்கினால் எதுவும் மிஞ்சாது.

ஆனால் பாபர் மசூதி பிரச்சினை வலுத்து. அத்வானி தலைமையில் இந்துத்துவர்களால் இடிக்கப்பட்ட பிறகு, அங்கே அகழாய்வு ஒன்றை நீதிமன்றம் நடத்தச் சொன்னது. அகழ்ந்து பார்த்தவர்கள் அந்த இடத்தில் ஒரு கட்டடம் இருந்திருக்கிறது என்று சொன்னார்கள். அது ஒரு இந்துக் கோயிலாக இருந்திருக்க சாத்தியமுண்டு என்றும் சொன்னார்கள். பல வரலாற்றாசிரியர்கள் அத்தகைய கூற்றைக் கடுமையாக மறுத்தார்கள். ஒரு அகழாய்வில் கிடைக்கும் தடயங்கள் யூகங்களுக்கே வழிவகுக்கின்றன. அவை சிலரால் ஏற்கப்படலாம்; சிலரால் மறுக்கப்படலாம்.

மசூதி இடிக்கப்பட்ட பிறகு உச்சநீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் இருந்தன. ஒன்று, அந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற கேள்வி. இரண்டு, இடித்தவர்கள் யார் என்ற வழக்கு. அந்த இடத்திற்கு சொந்தம் கொண்டாடுபவர்களில் ஒருவராக ராம் லல்லா என்ற குழந்தை ராமரும் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டார். ஒரு தெய்வீக அடையாளத்தினாலும் உரிமை கோர முடியும் என்று கூறப்பட்டது. மசூதியைப் பல நூற்றாண்டுகளாக நிர்வகித்து வந்த சுன்னி வக்ஃப் போர்டு மற்றொரு தரப்பு.  மற்றுமொரு இந்துத் தரப்பும் உரிமை கொண்டாடியது. அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பதில்தான் அங்கே ராமர் கோயில் கட்ட முடியுமா என்று கேள்வி அடங்கியிருந்தது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வினோதமாக இருந்தது. அது பாபரி மசூதி கட்டப்பட்ட இடத்தில் வேறொரு கட்டடம் இருந்துள்ளது என்ற தொல்லியல் ஆய்வின் முடிவை ஏற்றது. அது ஒரு இஸ்லாமிய கட்டடம் அல்ல என்ற யூகத்தை ஏற்றது. அது ராமர் கோயில் என திட்டவட்டமாகக் கூற முடியாது என்றும் சொன்னது. ஆனால் இந்து கட்டடம் என்று கூறலாம் என்றது. இது போன்ற யூகங்களின் அடிப்படையில் பல நூற்றாண்டுகளாக அங்கே இருந்த மசூதியை நிர்வகித்து வந்தவர்களிடமிருந்து அந்த நிலத்தை பறிக்க முடியுமா என்பதே கேள்வி. அங்கேதான் உச்சநீதிமன்றம் வியத்தகு முடிவை எடுத்தது. அந்த நிலத்தை ராம் லல்லாவிற்கே கொடுத்து விட்டது. காரணம் இந்துக்களின் நம்பிக்கை.

இங்கேதான் மிகவும் சுவாரசியமான சங்கதி அடங்கியுள்ளது. ஒரு நீதிமன்றத்தால் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை மட்டும் காரணம் காட்டி தீர்ப்பு வழங்க முடியாது. அதற்கு ஏதாவது புறவய சான்றுகள் வேண்டும். தொல்லியல் ஆராய்ச்சியின் முடிவுகளோ திட்டவட்டமாக எதையும் சொல்லவில்லை. ஆனால் யூகங்களுக்கு இடமளிக்கிறது. அவை யூகங்களாக இருந்தாலும் புறவய சான்றுகள் உள்ள யூகங்கள். அதைவைத்து நில உரிமையை தீர்மானிக்க முடியாதுதான். ஆனால் வெறும் நம்பிக்கையை ஆதாரமாகக் கொள்வதைவிட, எவ்வளவுதான் சர்ச்சைக்குரிய யூகங்களாக இருந்தாலும், புறவய சான்றுகளைப் பற்றும் யூகங்களை தீர்ப்பிற்கு ஆதாரமாகக் கொள்ள முடிகிறது. இங்கேதான் புறவய உண்மைகளின் உருவாக்கம் என்பது எப்படிப்பட்டது என்பது துலக்கமாகிறது. புறவய உண்மை சார்ந்து அறிதல் என்பது அதிகாரத்தின் பாற்பட்டது என்று நாடிய அபு எல் ஹாஜ் கூறுவது இங்கே தெளிவாகிறது. மசூதி கட்டப்படுவதற்கு முன் அங்கு வேறொரு கட்டடம் இருந்திருக்கிறது. அது இஸ்லாமிய கட்டடமாகத் தோன்றவில்லை. அநேகமாக அது “இந்து கட்டடமாக” இருக்கலாம். இந்து கோயில் என்று சொல்லமுடியாதுதான். ஆனால் அந்த இடம் ராம் லல்லாவிற்குத்தான் சொந்தம்! நம் உண்மைகள்தான் எவ்வளவு ஆழமானவை.

கீழடி ஆராய்ச்சி

இந்திய தேசம் உருவானதற்கான ஆதாரமான கற்பனைகள், கற்பிதங்கள் ஐரோப்பிய அறிஞர்களால் உருவாக்கப்பட்டன. அதில் வேதகால நாகரீகம், ஆரியர்கள் இந்தியாவெங்கும் பரவியது, சமஸ்கிருத மொழியின் தொன்மை, மேன்மை, அதிலிருந்து வேதங்கள், உபநிடதங்கள், புராணங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான மிக விரிவான பண்பாட்டுப் பரப்பு ஆகியவையே இந்திய தேசத்தின் தோற்றுவாய்களாகக் கொள்ளப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக சில ஐரோப்பியர்கள் தென்னிந்தியாவில் வசித்தார்கள். அவர்கள் தமிழ் மொழியும் மிகவும் தொன்மையானதாக இருப்பதையும், அது சமஸ்கிருதத்திலிருந்து திட்டவட்டமாக வேறுபட்டு இருப்பதையும் கண்டார்கள். திராவிட மொழிக் குடும்பம் என்ற சிந்தனை தோன்றியது. அதன் தலையாய மொழியாக தமிழ் கணிக்கப்பட்டது.

 

TH10KEEZHDI-300x187.jpg

ஆரிய மையவாத சிந்தனைக்கு இது எரிச்சலூட்டியது. தமிழும் பெருமளவு சமஸ்கிருத மொழியுடன் உறவு கொண்டிருந்தது. அதைச் சுட்டிக்காட்டி அவர்கள் தமிழின் தொன்மை என்பது சமஸ்கிருதத்துடன் போட்டியிட முடியாது என்றே கருதினர். ஆனால் தமிழின் வேர்சொற்கள், பண்டைய இலக்கியம் எல்லாம் தனித்தன்மையுடன் இருப்பதும், தொன்மையானதாக இருப்பதும் ஆரிய மையவாத சிந்னைக்குப் பெரும் இடரினை ஏற்படுத்தியது. ஆரிய மையவாத சிந்தனையை, சமஸ்கிருதத்தை தங்களுடைய தனிப்பெரும் அடையாளமாகக் கொண்ட பார்ப்பனர்கள். தமிழையும் அவ்வாறே போற்றிய பார்ப்பனர்கள் ஆகியோருக்கிடையேயும் இந்த சர்ச்சை வலுத்தது. ஐயர் என்ற சைவ பார்ப்பனர்கள், ஐயங்கார் என்ற வைணவப் பார்ப்பனர்கள் ஆகிய இருசாராரிலும் தீவிர தமிழ்மொழி பற்றாளர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்களில் பலரும் சமஸ்கிருதம் அண்ணன், தமிழ் தம்பி என்று ஏற்றக்கொள்ளக்கூடியவர்களாகவே இருந்தார்கள். ஆயிரம் சொன்னாலும் வேதங்கள் சமஸ்கிருதத்தில்தான் இருந்தன. காயத்ரி மந்திரத்தை தமிழில் சொன்னால் சூரியன் ஓடிப்போய்விடுவான் அல்லவா? எனவே பார்ப்பனர்களின் தமிழ்ப்பற்று சமஸ்கிருதத்தின் ஆதாரத் தொன்மையைக் கேள்வி கேட்காமலேயே இருந்தது. இவர்கள் பெரும்பாலோர் நோக்கில் நாகரீகமற்ற காட்டுமிராண்டிகளாக இருந்த திராவிடர்களிடையே நாகரீகத்தைக் கொண்டுவந்தது ஆரியர்கள்தான். தமிழ் சைவ வேளாளர்களும் கூட சிவனை “ஆரியம் கண்டாய்! தமிழும் கண்டாய்!” எனவே போற்றினார்கள்.

இந்த ஆரிய மைய வாதக் கதையாடலில் பெரும் உடைப்பை ஏற்படுத்தியது தொல்லியல் அகழாய்வுதான். மொஹஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய சிந்து நதிக்கரை கழிமுகம் சார்ந்த தொல்லியல் ஆய்வுகள் மிகத் தொன்மையான நகர நாகரீகத்தின் இருப்பைக் காட்டின. பிரச்சினை என்னவென்றால் வேதங்களில் நகர நாகரீகத்திற்கான சான்றுகள் இல்லை. அவை மேய்ச்சல் நிலப் பண்பாட்டையே பிரதிபலித்தன. அதனால் சிந்து சமவெளி நாகரீகம் ஆரியர்கள் வருகைக்கு முந்தியது என்ற ஒரு அனுமானம், யூகம் எழுந்தது. ஆரியர்கள் வருகைக்கு முன்னால் நகர நாகரீகம் என்றால் அங்கே யார் இருந்திருக்க முடியும், திராவிடர்கள்தான் என்றார்கள் சிலர். சிந்து சமவெளியில் கிடைத்த வரி வடிவங்கள், சின்னங்கள் ஆகியவற்றை திராவிட தென்னிந்தியாவில் கிடைத்த வரிவடிவங்களுடன் ஒப்பிட்டு சில ஒப்புமைகளைக் காண்பவர்களும் தோன்றினார்கள். இதில் மேலும் பெரிய சிக்கல் என்னவென்றால் மேய்ச்சல் நில நாகரீகத்தைவிட, நகர நாகரீகம் “முன்னேறியது” என்ற கருதுகோள்தான்.

ஆரிய மையவாதத்தால் இதுபோன்ற சிந்தனைகளை சகித்துக்கொள்ளவே முடியவில்லை. அவர்களில் இந்துத்துவர்கள் ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடிகள். அவர்களே நகர நாகரீகத்திற்கும் சொந்தக்காரர்கள் என்று நிறுவ முயன்று வருகிறார்கள். ஆனால் மேன்மேலும் ஆராய்ச்சிகள் ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்ற கூற்றையே வலுப்படுத்துகின்றன. இமயமலையின் கைபர், போலன் கணவாய்கள் வழியாக கங்கை சமவெளிக்கு வந்தவர்கள் என்ற வரலாற்று யூகம் திராவிட இயக்கத்தவர்களிடையே பிரசித்தமானது. ஆரிய மையவாதத்தில் இந்துத்துவத்தை வெளிப்படையாக ஏற்காதவர்கள் பொதுவாக் தமிழ் மிகவும் தொன்மையானதுதான், ஆனால் அது  எவ்வளவு தொன்மையானதோ அதைவிடக் கொஞ்சம் அதிக தொன்மையானது சமஸ்கிருதம் என்று சொல்வார்கள்.

உள்ளபடியே தொன்மைக்கும், மேன்மைக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பதை பகுத்தறிவுள்ள எவரும் சொல்ல முடியும். ஆங்கிலம் சமஸ்கிருதம் அளவோ, தமிழ் அளவோ, கிரேக்க, லத்தீன் மொழிகள் அளவோ தொன்மையானது இல்லை. ஆனால் ஷேக்ஸ்பியர் போன்ற படைப்பூக்க ஆர்டீசியன் ஊற்று அந்த மொழியில் வெடித்தெழுந்த பின்னால் அது உலகின் எந்த மொழிக்குத்தான் குறைவுபட்டதாக இருக்க முடியும்? எந்தவொரு மொழியும் தன்னகத்தே ஆழ்ந்த பண்பாட்டு மூலகங்களைக் கொண்டுள்ளது எனலாம். ஆனால் தமிழ் மொழி விஷயத்தில் ஆரிய மையவாதம் இத்தகைய பகுத்தறிவு சார்ந்த நிலைபாட்டை சாத்தியமாக விடாமல் தமிழின் தொன்மையை வலியுறுத்தவேண்டிய கட்டாயத்தை உருவாக்குகிறது. பாப்பனரல்லோதோரின் சமூக நீதி அரசியலுடன் இது ஆழ்ந்த தொடர்புகொள்வதால் ஒரு அரசியல் பிரச்சினையாகவே தொடர்ந்து ஒலிக்கிறது.

தொல்லியல்துறை என்பது மத்திய அரசின் கையில் இருக்கிறது. தமிழக ஆய்வுகளுக்கு முன்னுரிமை தரப்படாதது மட்டுமல்லாமல், கூடியவரை முட்டுக்கட்டை போடுவதும் நிகழ்ந்துள்ளது. தொல்லியல் துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால், மத்திய அரசின் அனுமதி தேவை என்ற தளை இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் தமிழகத்தில் விரிவான ஆகழாய்வுகள் நடந்திருக்கும். பொதுவாக அகழாய்வு என்பது எல்லா இடத்திலும் பூமியைத் தோண்டுவது என்பதல்ல. சில குறிப்பிட்ட வரலாற்று அனுமானங்களின் அடிப்படையில் சில இடங்களைத் தேர்வு செய்து அகழ்ந்து பார்ப்பது. இதன்படி பார்த்தால் மல்லைக் கடற்கரையில் அகழாய்வுகள் என்றோ நடந்திருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை நடக்கவில்லை. கடலில் மூழ்கிய கோயில்கள் இருக்கலாம் என தெளிவான யூகம் இருந்தும், கடலடி அகழாய்வு என்பது நடக்கவில்லை. தமிழகத்தின் உட்பகுதியிலும் பல தொன்மையான வாழ்விடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால் அகழாய்வுகள் அபூர்வமாகவே நடக்கின்றன.

கீழடி ஆய்வு துவங்கப்பட்டு வைகை நதிக்கரையில் தொன்மையான நகரங்கள் இருந்திருக்கலாம் என்று எண்ணம் வலுப்படும்போது அந்த ஆய்வை முடக்குவதற்கான முயற்சிகள் நிகழ்ந்துள்ளன. பாராளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், ரவிகுமார் ஆகிய இருவருமே இந்த முடக்குவதற்கான முயற்சிகள் குறித்து தெளிவாகவே ஆதாரங்களுடன் விளக்குகிறார்கள். மக்களைத் திரட்டி, கருத்தை திரட்டி கண்டன ஆர்பாட்டங்கள் நடந்த பிறகே ஆய்வைத் தொடர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அப்போது கூட நிதி அளிக்கவில்லை. மாநில அரசே நிதியளித்துள்ளது. திட்டவட்டமாக நகரங்களின் இருப்பிற்கான ஆதாரங்களும், எழுத்துக்களுடன் கூடிய பானையோடுகளும் கிடைத்துள்ளன.

 

2018062330-1024x768-300x225.jpg

இப்போது சர்ச்சை என்னவென்றால் இந்த பானையோடுகளின் காலம் என்ன என்பதுதான். பொது ஆண்டிற்கு முன்னூறு ஆண்டுகள் முந்தையதா, அறுநூறு ஆண்டுகள் முந்தையதா என்பதுதான். இது ஒரு பிரச்சினையா என்று சாதாரண மக்களுக்கு தோன்றலாம். ஆனால் ஆரியமையவாதம் தமிழில் எழுத்து, வடநாட்டில் தோன்றிய பிறகே தோன்றியது என்பதை நிறுவ விரும்புகிறது. அதனால் கீழடி பானையோடுகளின் காலம் புறவய ஆதாரங்களின் மூலம் நிறுவப்படவில்லை என்று ஒரு வாதம் ஆவேசமாக முன்வைக்கப்படுகிறது. அந்தப் பானையோடுகள் இருந்த இடத்தில் கிடைத்த கரித்துண்டுகளின் வயதை வைத்து பானையோடுகள் வயதைத் தீர்மானம் செய்யலாமா என்பது முக்கிய கேள்வியாக இருக்கிறது.

இந்தக் கேள்விகளின் போதாமை என்னவென்றால் தமிழ் மொழியின் தொன்மை என்பது சுலபமாக ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஏனெனில் களப்பிரர் காலத்திற்கு முன்பே முற்காலச் சோழர்கள், பாண்டியர்கள், சேரர்கள் என மூவேந்தர்களும். அவர்கள் பேரரசுகள் உருவாவதற்கு முன்னமே வேளிர்கள் எனப்படும் குறுநில மன்னர்களும் இருந்துள்ளதை இலக்கிய சான்றுகள் மூலம் அறிய முடிகிறது.  சங்க இலக்கியத்தின் சில பகுதிகளாவது பொது ஆண்டிற்கு முன்னால் இரண்டாம் நூற்றாண்டினைச் சேர்ந்தவை என்று எண்ணமுடியும். நெடுங்கிள்ளி, நலங்கிள்ளி, தலையானங்கானத்து செருவென்ற பாண்டியன், பாரி என்றெல்லாம் பெயர்கள் அந்தக் காலத்திற்கு உரியவையாக உள்ளன. அத்தகைய இலக்கிய செயல்பாடுகள் நிகழ்ந்திருக்க வேண்டுமென்றால் வெறும் வாய்மொழி பண்பாட்டில் நிகழ்ந்திருக்குமா என்பதும் எண்ணத்தக்கது. வாய்மொழி இலக்கியங்களின் தன்மையும், சங்க இலக்கியங்களின் தன்மையும் ஒன்றல்ல. எனவே தமிழில் பொது ஆண்டுக்கு முந்தைய ஆறாம் நூற்றாண்டில் வரி வடிவங்கள் இருந்திருந்தால் அதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை என்றே மானுடவியல் கோணத்தில் கூறமுடியும்.

தமிழின் தொன்மை குறித்த அனுமானங்களை ஆராய மனமற்று இருப்பதும், ஆய்வு நடந்தாலும் கூட புறவய ஆதாரங்கள் போதவில்லை என்று ஆவேசப்படுவதும் இந்திய தேசியத்தின் ஆதார விசையான ஆரிய மையவாத சிந்தனையின் பிரச்சினைகள்தான். அதிகாரமும், உண்மையும் ஒரே தோற்றுவாய் கொண்டன என்று நாம் கட்டுரையின் துவக்கத்தில் கண்டதற்கு மற்றுமொரு சான்றுதான் கீழடி ஆய்வுகள் நடந்த விதமும், அதன் கண்டடைவுகள் சர்ச்சிக்கப்படும் விதமும் என்றால் மிகையாகாது.

தமிழ் மொழியின் தொன்மை குறித்து யூகம் என்ற அளவில் பேசுவதில் இந்திய ஆரிய மையவாதத்திற்கு பிரச்சினையில்லை. ஆனால் புறவய ஆதாரங்கள், அவை சார்ந்த யூகங்கள் தோன்றுமானால் அது ஆரிய மையவாதிகளின் பெருந்தன்மையான அங்கீகரிப்பைத் தேவையற்றதாக்கிவிடும். இந்திய தேசிய கற்பிதத்தின் கட்டுமானத்தையே அத்தகைய புறவய ஆதாரங்கள் தகர்த்துவிடும். வேதங்களே இந்திய நாகரீகத்தின் அடிப்படை என்ற தேசிய கற்பிதம் மிக விரிவானதும், அடிப்படையானதும் ஆகும். அதையொட்டிய அசோகர் கால கல்வெட்டு, எழுத்துரு தோற்றம் போன்ற பெருமிதங்களும் உள்ளன. தமிழ் தன் தொன்மையினை சுட்டும் புறவய ஆதாரங்களைப் பெறுவதை ஆரிய மையவாதம் ஒருபோதும் விரும்பாது. நிலத்தடியில் நமது கடந்தகாலம் புதைந்திருக்கலாம். ஆனால் அதை அகழ்ந்து உண்மையாக்கும் அதிகாரம் யாரிடம் என்பதே கேள்வி.

https://uyirmmai.com/article/நிலத்தடியில்-புதைந்த-கடந/

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

108165148_925658364581147_24046035409533

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.