Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ ஏன் பதிவு செய்யப்பட வேண்டும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ ஏன் பதிவு செய்யப்பட வேண்டும்?

என்.கே. அஷோக்பரன்   / 2020 பெப்ரவரி 17

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தனித்ததொரு கட்சியாக அல்லது கூட்டணிக் கட்சியாகப் பதிவுசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை, மிக நீண்ட காலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றது.   

இருந்தபோதிலும், பதிவுசெய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெறுவதற்கான எந்தவொரு சமிக்ஞையும் தென்படுவதாக இல்லை.   

மறுபுறத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரளவிலான அமைப்பிலிருந்து, கூட்டுக்கட்சிகளும் அக்கட்சிகளின் உறுப்பினர்களும் விலகி, தனிவழி சென்று கொண்டிருக்கின்ற போக்கை, நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.   

தமிழ் மக்களிடம், “நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; ஒன்றுபட்டால்தான் உண்டு வாழ்வு” என்று, விழுமிய வகுப்பெடுக்கும் இந்தக் கூட்டமைப்பின் தலைமைகள், கூட்டமைப்பைத் தனிக்கட்சியாகப் பதிவுசெய்து, முறையான கட்டமைப்பை உருவாக்கி இயங்குவதில், தொடர்ந்தும் மெத்தனம் காட்டி வருவது என்பது, முரண்நகை.   

சுதந்திர இலங்கையில், ஒன்றுக்கொன்று வைரிகளாக இருந்த தமிழ்க் கட்சிகள், கூட்டணியாக ஒன்றிணைந்த சந்தர்ப்பங்கள் இரண்டு.   

முதலாவது, 1972இல் அன்றைய சிறிமாவோவினதும் அவரது ‘தோழர்’களினதும் ஆட்சியில், தமிழ் மக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டது. அதன்போது, தமிழர்கள் கட்சி ரீதியாகப் பிளவடைவது, தமிழ் மக்களையும் அவர்களது அரசியலையும் பலவீனப்படுத்தும் என்றுணர்ந்த அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர், கணபதிப்பிள்ளை காங்கேசர் பொன்னம்பலம், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸில் இருந்து பிரிந்து, இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஸ்தாபித்த சாமுவல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோர் ஒன்றிணைந்து தமிழர் ஐக்கிய முன்னணியை உருவாக்கினர்.   

தமிழர் ஐக்கிய முன்னணி, 1976இன் வட்டுக்கோட்டை தனிநாட்டுத் தீர்மானத்தையொட்டி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஆனது. தமிழர்களிடம் பொதுவழக்கில், ‘கூட்டணி’ என்று அறியப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, தனித்த கட்சியாக இருந்ததுடன், அதற்கெனத் தனியான சின்னத்தையும் கொண்டிருந்தது. அதுதான், 1977ஆம் ஆண்டுத் தேர்தல் முதல், 2004ஆம் ஆண்டுத் தேர்தல் வரை, தமிழ் மக்களின் செல்வாக்கைப் பெற்ற சின்னமாக இருந்தது. தமிழ் அரசியலில் உதயம் பெற்ற இந்த முதலாவது கூட்டானது, முறைப்படி, தனிக்கட்சியாகப் பதிவுசெய்யப்பட்ட கூட்டாகவே அமைந்தது.  

2001இல், ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ என்ற கூட்டை ஸ்தாபிப்பதில், கிழக்கிலங்கை ஊடகவியலாளர்களின் முதன்முயற்சி முக்கியமானது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, விடுதலைப் புலிகள் அமைப்பால் உருவாக்கப்பட்டது என்பதில் எந்த உண்மையும் இல்லை. அது அடிப்படையில்லாத ஒரு மாயை.   

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் கூட, அந்த மாயையை, தமக்கு வாக்குவங்கி ரீதியான செல்வாக்கை அதிகரிப்பதால், அதை மறுப்பதுகூட இல்லை.   

ஆனால், உண்மையான அரசியல் வரலாறு என்னவென்றால், ஊடக மற்றும் சிவில் சமூகத்தின் முயற்சியாலேயே, ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ என்ற தமிழ்க் கட்சிகளின் கூட்டுச் சாத்தியமானது. இந்தக் கூட்டை, அடுத்த இரண்டு வருடங்களில், தமது அரசியல் முகவர்களாக, விடுதலைப் புலிகள் சுவீகரித்துக் கொண்டார்கள்.  

2001இல், தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி (இது பெரும்பாலும் தமிழரசுக் கட்சியினரையும் குமார் பொன்னம்பலத்தோடு பிரிந்து சென்று, மீண்டும் தமிழ்க் காங்கிரஸை ஸ்தாபிக்காது கூட்டணியுடன் தொடர்ந்த எம். சிவசிதம்பரம், ஆனந்தசங்கரி உள்ளிட்ட முன்னாள் தமிழ்க் காங்கிரஸினரையும் கொண்டமைந்தது), தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பீ.ஆர்.எல்.எப் - சுரேஷ் பிரேமசந்திரனின் அணி) ஆகிய நான்கு கட்சிகள், பொது இணக்கப்பாடொன்றில் கையொப்பமிட்டதன் மூலம் பிறப்பெடுத்தது.   

தமிழர் ஐக்கிய முன்னணியைப் போன்று, ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ இன்னொரு தனியமைப்பாகப் பிறப்பெடுக்கவில்லை. மாறாக, இது இந்த நான்கு கட்சிகளிடையேயான பொது இணக்கப்பாட்டை வௌிப்படுத்தும் தளமாகவும் தேர்தல் கூட்டாகவுமே பிறப்பெடுத்தது.  

‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ என்ற பதாகையின் கீழ் இயங்கிய கட்சிகளிலும் ஒரு நிரந்தரத் தன்மையும் தொடர்ச்சியும் இருக்கவில்லை என்பதையும், நாம் காணக்கூடியதாக உள்ளது.   

விடுதலைப் புலிகள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சுவீகரித்துக் கொண்டதன் பின்னர், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்குள் இருந்த, விடுதலைப் புலிகள் அமைப்பு மீது நல்லபிப்பிராயம் இல்லாத தலைவர்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் தொடர்ந்திருக்க விரும்பவில்லை. ஆகவே, கூட்டமைப்பில் முதல் பிரிவாக, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி கூட்டமைப்பிலிருந்து விலகியமை அமைந்திருந்தது.   இந்தப் பிரிவோடு கூட்டமைப்பு, தனது தேர்தல் சின்னத்தையும் இழந்திருந்தது. ஏனெனில், உதய சூரியன் சின்னம், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் சின்னமாகும்.   

இந்தப் பிரிவைத் தொடர்ந்துதான், அதுவரை காலமும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த தமிழரசுக் கட்சியினர், மீண்டும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு உயிர்கொடுத்தார்கள். தமிழரசுக் கட்சியின் சின்னமான ‘வீடு’, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தேர்தலில் போட்டியிடும் சின்னமாக, விடுதலைப் புலிகள் அமைப்பால் சிபாரிசு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.   

இது, விடுதலைப் புலிகள் அமைப்பின் முடிவாக இருந்திராவிட்டால், நிச்சயமாக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், இதை ஏற்றுக்கொண்டிருக்கக் கூடிய வாய்ப்பு இல்லவேயில்லை எனலாம்.   

2009 வரை விடுதலைப் புலிகள் அமைப்பே, கூட்டமைப்பின் இணைக்கும் சக்தியாக இருந்தது. அவர்களுக்குப் பின்னர், கூட்டமைப்பு பிளவடையத் தொடங்கியது. இன்று கூட்டமைப்பு என்பது, இலங்கைத் தமிழரசுக் கட்சிதான். டெலோவும் புளொட்டும் வெறும் தேர்தல் பங்காளிகள் மட்டுமே.   

அரசியல் முடிவுகளில், நிலைப்பாடுகளில் டெலோவோ, புளொட்டோ எதுவிதப் பங்களிப்பும் செய்வதாகத் தெரியவில்லை. தமிழரசுக் கட்சித் தலைமைகளின் முடிவுகளை, அங்கிகரிக்க வேண்டிய நிலையில்தான் அவர்கள் தொடர்கிறார்கள்.   

உண்மையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, பதிவு செய்யப்பட வேண்டும் என்ற மிக நீண்ட காலமாகக் குரல்கொடுத்த ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் அதன் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர், இப்போது கூட்டமைப்பில் இல்லை. கூட்டமைப்பிலுள்ள டெலோ, புளொட் ஆகியவை, தமக்குத் தேவையான தேர்தல் ஆசனங்கள் ஒதுக்கப்படும் வரை, தமிழரசுக் கட்சி எடுக்கும் முடிவுகளோடு, அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதாகத் தெரியவில்லை.   

எமக்கு, எமக்கான ஆசனங்களும் நாடாளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி மன்றம் போன்றவற்றுக்கான பதவிகள் இருந்தால் போதும் என்ற நிலையிலேயே, அவர்கள் இருக்கிறார்கள்.   

தமிழரசுக் கட்சியைப் பொறுத்த வரையில், “தமிழரசுக் கட்சியும் நானே; கூட்டமைப்பும் நானே” எனத் தமிழரசுக் கட்சித் தலைமைகள் மிகச் சுதந்திரமாக, கூட்டுக் கட்சிகளின் எந்த அழுத்தமுமின்றிச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், கூட்டமைப்பைப் பதிவதற்கு, அவர்களுக்கு எந்த அவசியமும் தேவையும் ஆர்வமும் இருக்காது என்பது யதார்த்தமானதே.   

ஆக, இவ்வாறானதொரு சூழ்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, பதியப்பட வேண்டும் என்பதற்கான தேவை என்ன என்ற கேள்வி எழலாம். அதற்கான பதில், தமிழர் அரசியலின் எதிர்காலம் என்பதாக அமைய வேண்டும்.  

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம் என்பதே, நாம் பொதுவாக எண்ணுவதைவிட, மிகப்பெரியதொரு சாதனை. ஒன்றுக்கொன்று வைரிகளாக இருந்த கட்சிகளை, ஒரு மேடைக்குக் கொண்டுவருவது, அவ்வளவு எளிதானதொரு காரியமல்ல.   

விடுதலைப் புலிகள் இருந்தவரை, கொள்கை ரீதியிலும் செயற்பாட்டு ரீதியிலும் தனிமனிதர்களால் கூட்டமைப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆகவே, கூட்டமைப்புக்கு உள்ளான ‘தடைகள் மற்றும் சமப்படுத்தல்களை’ விடுதலைப் புலிகளே செய்துவந்தார்கள்.   

விடுதலைப் புலிகளுக்குப் பிறகு, கூட்டமைப்பு என்பது, தமிழரசுக் கட்சியின் கைப்பொம்மையாகவும் அதன் பின்னர், அது ஒன்றிரண்டு தமிழரசுக் கட்சித் தலைமைகளின் கைப்பொம்மையுமாக மாறிவிட்டது.  

இதன்காரணத்தால், கூட்டுக் கட்சியினருக்கு மாற்றுக் கருத்துகளைத் தெரிவிக்கவோ, தமிழரசுக் கட்சி தலைமைகளின், கூட்டமைப்பின் மீதான அதிகாரச் செல்வாக்கை மட்டுப்படுத்தவதற்கானதொரு கட்டமைப்பு முறையோ இல்லாததன் காரணத்தால், தேர்தல் வெற்றி, பதவி ஆசை என்பவற்றைத் தாண்டி, தமது கொள்கை மீதும் அக்கறைகொண்ட தரப்பினரால், கூட்டமைப்புக்குள் நீடிக்க முடியவில்லை.   

உண்மையில், இன்று கூட்டமைப்பென்பது தமிழரசுக் கட்சியும் அவர்களது சின்னத்தில் போட்டியிட்டால் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்ற தரப்புகளும்தான். கூட்டமைப்பிலுள்ள டெலோ, புளொட் கொள்கை சார்ந்த முடிவுகளில் மட்டுமல்ல, இராஜதந்திரச் சந்திப்புகளில் கலந்துகொள்வதுகூட மிக அரிதே!   தமிழரசுக் கட்சிக்காரருக்கு வேண்டுமானால், இது சாதகமான ஒன்றாக இருக்கலாம்; ஆனால், ‘தமிழரின் ஒற்றுமை’ என்று, மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்லிக் கொண்டிருக்கும் கூட்டமைப்பின் தலைமைகள், உச்சரிக்கின்ற ‘ஒற்றுமையை’ச் சிதைத்து, இன்று தமிழ் மக்களின் அரசியல் பலத்தைக் கூறுபோட்டுக் கொண்டிருக்கிறது.  

கூட்டமைப்பில் இருந்து பிரிந்து செல்பவர்களை விமர்சிப்பதற்கு அவசரப்படுபவர்கள், அவர்கள் ஏன் பிரிந்து செல்கிறார்கள் என்று சிந்திப்பதற்கு ஒரு நிமிடத்தையேனும் செலவளிப்பதில்லை.   

உண்மையில், அவர்களுக்குப் பதவி ஆசை இருந்தால், அவர்கள் பிரிந்து சென்றிருக்கவே மாட்டார்கள். இன்றைய சூழலில், தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டிபோடுவது நிச்சயமான வெற்றியைத் தரும் என்பதைச் சிறுபிள்ளைகூட அறியும். அதையும் மீறி, அவர்கள் பிரிந்து செல்வதற்கு, என்ன காரணம் என்பதைச் சிந்திக்க வேண்டும்.   

பல கட்சிகளினதும் அமைப்புகளினதும் கூட்டு என்பது, அனைத்துத் தரப்பையும் ஒன்றிணைக்கக் கூடியதொரு கட்டமைப்பைக் கொண்டதாக அமைய வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், அந்தக் கூட்டு நிலைக்காது.   

இன்று, கூட்டமைப்பு ஒரு முடிவை எடுக்கும் போது, அது வெறுமனே, தமிழரசுக் கட்சியின் முடிவாக மட்டுமோ, அவர்களால் திணிக்கப்படும் முடிவாக மட்டுமோ இந்தால், ஏனைய கட்சிகளால் அத்தகைய கூட்டுக்குள், எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்க முடியும் என்பது கேள்விக்குறியே.   

ஆகவே தான், கூட்டமைப்பு ஒரு சுயாதீனமான கூட்டணியாகவும் அதற்கெனத் தனித்த ‘தடைகள் மற்றும் சமப்படுத்தல்களை’ உள்ளடக்கிய கட்டமைப்பையும் கொண்டமைய வேண்டும். அத்தகைய கட்டமைப்பு ஏற்படும் போது, அது தனிமனிதர்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப அல்லது ஒரு கட்சியின் விருப்பத்துக்கு மட்டுமே ஏற்ப இயங்கும் அமைப்பாக அல்லாது, அர்த்தபூர்வமான கூட்டமைப்பாக அமையும். இல்லாவிட்டால், கூட்டமைப்பென்பது ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை’யாகவே அமைந்துவிடும்.  

மறுபுறத்தில், கூட்டமைப்பைப் பதிவுசெய்வதில் தமிழரசுக் கட்சிக்கு சட்டரீதியான நன்மையொன்றும் உள்ளது. இன்றைய சூழலில், தமிழரசுக் கட்சி அல்லாத ஏனைய கூட்டுக்கட்சி உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு, தேர்தலில் வெற்றிபெற்றுப் பின்னர் கட்சிதாவினாலோ, கட்சிக் கோட்பாடுகளுக்கு மாறாக நடந்தாலோ, தமிழரசுக் கட்சியால் அவர்களுக்கு எதிராக, எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.   

அவர்களது மிக அடிப்படையான வாதமாக, “நாம், உங்கள் கட்சியின் உறுப்பினர் அல்ல; ஆகவே, எங்கள் மீது நடவடிக்கை எடுக்க, உங்களுக்கு எதுவித அதிகாரமோ நியாயாதிக்கமோ கிடையாது” என்பதாக அமையும்.   

அரசியல் கட்சியொன்றின் வேட்பாளர் பட்டியலூடாகத் தெரிவுசெய்யப்பட்ட அல்லது பிரேரிக்கப்பட்ட நபரொருவர் குறித்த, அரசியல் கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே எமது சட்டமாகும். பஷீர் சேகுதாவூத் எதிர் பேரியல் அஷ்ரப் மற்றும் ஏனையோர் என்ற பஷீர் சேகுதாவூத் பதவி விலக்கல் வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், ‘பஷீர் சேகுதாவூத் தேசிய ஐக்கிய கூட்டணியின் உறுப்பினர் அல்ல; அவர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரே ஆவார். ஆகவே, தமது கட்சியின் உறுப்பினரல்லாத ஒருவரை, தேசிய ஐக்கிய கூட்டணியால், தமது கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்க முடியாது என்பதோடு, அதனால் அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க முடியாது’ என்று வழங்கியிருந்த தீர்ப்பு, இங்கு கவனிக்கத்தக்கது.   

இதனால்தான், தனிக்கூட்டணியாகப் பதிவுசெய்யப்பட்டு ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, தனது யாப்பில், கூட்டணிக் கட்சியின் அங்கத்தவர்கள், கூட்டணியின் அங்கத்தவர்களாகக் கருதப்படுவார்கள் என்ற ஏற்பாட்டைக் கொண்டிருக்கிறது.   

ஆகவே, தமிழரசுக் கட்சி அல்லாத கூட்டமைப்பின் ஏனைய கட்சி உறுப்பினர்கள் கட்சிதாவினாலோ, கட்சிக் கட்டுக்கோப்புக்கு முரணாகச் செயற்பட்டாலோ, இன்றைய சூழலில் தமிழரசுக் கட்சி எனப்படும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பால், எதுவுமே செய்ய முடியாது என்பதுதான், பட்டவர்த்தனமான உண்மையாகும்.  

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை, தனித்த கூட்டமைப்பாகப் பதிவு செய்வதில் தமிழரசுக் கட்சியின் சுயநலத்தைத் தவிர வேறெதுவும் தடையாக இல்லை என்பதுதான், நடப்பவற்றை வைத்து, யூகிக்கக் கூடியதாக இருக்கின்ற விடயம் ஆகும்.  
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்த்-தேசிய-கூட்டமைப்பு-ஏன்-பதிவு-செய்யப்பட-வேண்டும்/91-245596

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.