Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டின் எதிர்காலம் கொரோனாவின் கையில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் எதிர்காலம் கொரோனாவின் கையில்

மொஹமட் பாதுஷா   / 2020 மார்ச் 27

நாடாளுமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தபோது, “அப்படியென்றால், வாக்கெடுப்பு எப்போது நடைபெறும்?” என்று, ஊடகவியலாளர் தரப்பில் வினாத் தொடுக்கப்பட்டது. அப்போது அவர்,  “தேர்தல் எப்போது நடக்க வேண்டும் என்பதைக் கொரோனா வைரஸ்தான் தீர்மானிக்கும்” என்று சொல்லியிருந்தார்.   

சுருக்கமாகச் சொன்னால், இதுதான் இந்த நாட்டினது நிலைமையாகும். கொரோனா என்ற, கண்ணுக்குப் புலப்படாத வைரஸ்தான் நமது அரசியல், பொருளாதார, சமூக ஸ்திரத் தன்மையையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கப் போகின்றது என்பதில் இருவேறு நிலைப்பாடுகள் இல்லை.   

உலக வரைபடத்தில், ஒரு கண்ணீர் துளிபோல இருக்கின்ற இலங்கையில் மட்டுமல்ல, அனைத்து உலக நாடுகளின் தலைவிதியும் ஒரு வைரஸின் கைகளிலேயே தங்கியிருக்கக் காண்கின்றோம்.  

விஞ்ஞானமும் அறிவியலும் கதிகலங்கி நிற்கின்றன; மருத்துவத்துறை என்னசெய்வதெனத் தெரியாமல் குழம்பிப் போயிருக்கின்றது; வளர்ச்சியடைந்த நாடுகள் சுருண்டு கிடக்கின்றன; உலக பொலிஸ்காரர் முதல், நாட்டாமை வரையான அனைவரது ஆட்டத்தையும் இயற்கை அல்லது, இறைவன் அடக்கி வைத்திருக்கின்றான். 

உலக சரித்திரத்தில், ஒரேகாலத்தில் இப்படியொரு நிலைமை ஏற்பட்டதாக, வரலாற்றுக் குறிப்புகளில் காணக் கிடைக்கவில்லை.  

இன்று (27) இப்பத்தி எழுதி முடிக்கப்படும் வரை, சுமார் 195 இற்கு மேற்பட்ட நாடுகளில், கொரோனா வைரஸ் பரவியுள்ளது; அல்லது, அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அதன்படி பார்த்தால், ஆபிரிக்க கண்டத்தில் ஓரிரு நாடுகளும், கியூபா போன்ற தேசங்களிலுமே இன்றைய நிலைவரப்படி, கொரோனா வைரஸ் பரவவில்லை எனலாம்.  

இதன்படி, உலகெங்கும் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், இவ்வைரஸ் தொற்றால் உயிரிழந்திருக்கின்றனர். ஐந்து இலட்சத்து 30ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி, சிகிச்சை பெறுகின்றனர். சுமார் 124,000 பேர் இதிலிருந்து குணமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆனால், கொவிட்-19 இனால் பாதிக்கப்படுவோர், மரணிப்போரின் தொகை, ஒவ்வொரு நொடியும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது என்பதே ஆபத்தான, கவலைதரும் அறிகுறியாகும்.  

இலங்கை நிலைவரம்  

இலங்கை, இதுவரைக்கும் ஓரளவுக்கு சிறப்பாக இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது என்று சொல்லலாம். இதற்கு, அரசாங்கத்தின் உறுதியான தீர்மானமும் வைத்தியர்கள்,  சுகாதாரப் பணியாளர்கள், பாதுகாப்புத் தரப்பினரின் அர்ப்பணிப்புமிக்க சேவையும் முக்கிய காரணம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 

அந்த வகையில், அரசாங்கத்தைப் பாராட்டுவதுடன், உயிர்களைக் காப்பாற்ற அயராது உழைக்கும் மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கும், பொலிஸார்,  முப்படையினர் உள்ளடங்கலான அரச அதிகாரிகளுக்கு, நாட்டு மக்கள் தலைவணங்குகின்றார்கள் எனலாம்.  

இப்பத்தி எழுதி முடிக்கப்படும் தருவாயில், இலங்கையில் தற்போது 106 கொரோனா வைரஸ் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆறு பேர் குணமடைந்து, வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர். இதுதவிர, வெளிநாட்டுப் பிரஜைகள் ஐந்து பேர் உட்பட, 237 பேர் இன்னும் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கின்ற சமகாலத்தில், வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள், கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் நெருங்கிப் பழகியவர்கள் எனப் பல நூற்றுக்கணக்கானோர் நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  

மக்களில் பெரும்பகுதியினர், வைத்தியர்களின் அறிவுரைகளையும் அரசாங்கத்தின் ஒழுங்குவிதிகளையும் கடைப்பிடிக்கின்ற போதிலும், ஒரு குறிப்பிட்டளவானோர் அதனைப் பொருட்படுத்தாமல் நடந்து கொள்கின்றனர். 

குறிப்பாக, தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் ஊரடங்கை மதிக்காமல் சிலர், அவிழ்த்துவிட்ட ‘எதையோ’ போன்று, தெருக்களில் நடமாடுவதைக் காண முடிகின்றது. அத்துடன், ‘சமூக இடைவெளியை’ப் பேணாமல், மக்கள் சந்தைப் பகுதிகளில் முண்டியடிக்கின்றனர். இந்த நோயின் பாரதுரம் பற்றிய அறியாமையே, இதற்கு அடிப்படைக் காரணம் எனலாம்.  

இது இவ்வாறிருக்க, நமக்குள் சில கொரோனா வைரஸ் நோய்க்காவிகள், மறைந்து கொண்டு இருக்கின்றார்கள்; அல்லது, மறைந்திருந்து நோயைப் பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற விடயமும் இப்போது தெரியவந்து, நம்மை அச்சுறுத்தத் தொடங்கி இருக்கின்றது. 

குறிப்பாக, 11ஆம் இலக்க நோயாளி எனப்படும் மக்கொன பிரதேசத்தைச் சேர்ந்த மாணிக்கக்கல் வியாபாரி, பொலிஸ் புகைப்படம் வெளியிட்ட ஒரு நோயாளி, கேகாலைப் பகுதியைச் சேர்ந்த உள்ளூராட்சி சபை உறுப்பினர், மட்டக்களப்பில் பதிவான, இலண்டனில் இருந்து வந்த நபர், யாழ்ப்பாணத்தில் வழிபாடு நடத்தி, பலருக்குக் கொரோனா வைரஸைப் பரவச் செய்த சுவிஸ் போதகர் என, இந்தப் பட்டியல் நீள்கின்றது.  

இலங்கையில் கடந்த புதனன்று, புதிய நோயாளிகள் யாரும் அடையாளம் காணப்படவில்லை. இந்தப் பின்னணியில், கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் இருப்பது போன்று நமக்குத் தோன்றினாலும், பொறுப்புவாய்ந்த மருத்துவ நிபுணர்கள் அதற்கு மாற்றமான நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றனர். “இலங்கையில் இனிவரும் நாள்களில் நிலைமைகள் மோசமடையலாம்” என்று, அச்சம் வெளியிட்டுள்ள அவர்கள், நாட்டைத் தொடர்ந்தும் முற்றாக மூட வேண்டும் என்றே சிபாரிசு செய்து வருகின்றனர். அதுகுறித்து, அரசாங்கம் கடுமையாகப் பரிசீலித்து வருகின்றது.  

அரசுக்கு நெருக்கடி  

இந்த வைரஸ் தொற்றின் காரணமாகவும் அதைக் கட்டுப்படுத்துவதில் ஆட்சியாளர்கள் விட்ட தவறின் எதிர் விளைவாகவும் உலகப் பொருளாதார ஜாம்பவான் நாடுகளே இன்று பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. சீனா, இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் என, கடந்த மாதம் வரை, நாம் பார்த்து வியந்த நாடுகள் இன்று, மற்றைய நாடுகளிடம் உதவி கோரும் நிலைக்கு வந்திருக்கின்றன. உலகமே ஒட்டுமொத்த பொருளாதார வீழ்ச்சியையும் அரசியல் பின்னடைவையும் சந்தித்து நிற்கின்ற ஓர் இக்கட்டான காலமாக, இதைக் குறிப்பிடலாம்.  

இந்தப் பின்னணியில் நோக்கினால், இலங்கை அரசாங்கத்துக்கும் இது ஒரு நெருக்கடியான காலமாகவே தெரிகின்றது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதிலேயே நமது நாட்டின் சமூக, பொருளாதார ஸ்திரத்தன்மை மட்டுமன்றி, அரசியல் ஸ்திரத்தையும் உறுதிப்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கும். அதைவிடுத்து, ‘விடுதலைப் புலிகளை அழித்தொழித்த எங்களால் இந்த வைரஸை அடக்க முடியாதா?’ என்று முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப் போட்டு பேசிக் கொண்டிருப்பதால் எதுவும் நடக்கப் போவதில்லை.  

கொவிட்-19 பரவுவதை, உள்நாட்டில் கட்டுப்படுத்தினாலேயே நாட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்றலாம். அத்துடன், இந்த அரசாங்கத்தின் செயற்றிறனும் வெளிப்படும். இது, ராஜபக்‌ஷ அரசாங்கம் பற்றிய நல்ல அபிப்பிராயத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்படுத்தும். 

இதனால், கொவிட்-19 இலிருந்து, பாதுகாப்புப் பெற்ற நாடாக,  இலங்கை மாறுவது என்பது, நாட்டுக்குப் பொருளாதார, அரசியல் அனுகூலங்களைக் கொண்டு வரும். அதனூடாக, சமூக நன்மைகள் கிடைக்க வாய்ப்பிருக்கின்றது.  

கொரோனா வைரஸிடம் தோல்வியடைந்தால் இவ்வரசாங்கம் பற்றிய பிரக்ஞை அல்லது தோற்றப்பாடு சிதைவடைந்து விடும். அது அரசியல் உட்பட, எல்லா விடயங்களிலும் நீண்டகால அடிப்படையில் இன்னுமொரு விதமான வைரஸ்போல, பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். ஆகவே, இலங்கையில் கொவிட்-19 இனைக் கட்டுப்படுத்துவது, அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமன்றி, அதற்குப் பின்னால் வேறுபல பலாபலன்களும் இருக்கின்றன.  

அந்தவகையில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு, அரசாங்கம் முற்படுகின்ற போது, சில நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பும் விமர்சனங்களும் எழுவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. 

சில முன்னெடுப்புகளுக்கு, ஒரு குறிப்பிட்ட வகுதியினர் ஆதரவளிக்காமல் இருப்பதையும் எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை முன்வைப்பதையும் அவதானிக்க முடிகின்றது. எனவேதான், கிட்டத்தட்ட இருமுனைக் கத்தியைப் போன்ற இவ்விவகாரத்தை, மிகவும் நுட்பமான முறையில் கையாள வேண்டியிருக்கின்றது.  

கொரோனா வைரஸை அரசாங்கம் கட்டுப்படுத்துவதில் பெற்றுக் கொள்கின்ற அடைவு, வெற்றி என்பன, இந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளில் கணிசமான இடத்தை வகிக்கும் எனலாம். அதாவது, கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தி விட்டு, ‘கொவிட்-19 இல்லாத’ என்ற அடையாளத்தோடு, ராஜபக்‌ஷக்கள் இந்தத் தேர்தலை எதிர்கொள்வார்கள் என்றால், பொதுஜன பெரமுனவுக்கான ஆதரவு அதிகரிக்கும். 

ஒருவேளை, அதில் அரசாங்கம் தோல்வி காணுமாக இருந்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வைத்தே, மைத்திரி-ரணில் ஆட்சி வீழ்த்தப்பட்டது போன்ற நிலையே, இந்த ஆட்சிக்கும் ஏற்பட்டாலும் ஏற்படலாம் என்பதை, நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.  

எனவேதான், இந்த விடயத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் மிகவும் சரியாகப் புரிந்து கொண்டிருப்பதாகவே தெரிகின்றது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் ஆரம்பத்தில் சில தாமதங்கள், தவறுகள் இடம்பெற்றிருந்தாலும் கூட, மார்ச் இரண்டாம் வாரத்தில் இருந்து, அரசாங்கம் எடுத்த தீர்க்கமான தீர்மானங்கள், அதிரடியான அறிவிப்புகள், மூன்று வலயங்களாக நாட்டைப் பிரித்து, நடைமுறைப்படுத்தப்படும் நாடு தழுவிய ஊரடங்கு போன்ற விடயங்கள், கொவிட்-19 இனை,  அரசாங்கம் குறைமதிப்பீடு செய்யவில்லை என்பதைப் புலப்படுத்துகின்றன.  

தேர்தல் தள்ளிப்போகும்  

எது எப்படியிருப்பினும், நாடாளுமன்றத் தேர்தல் மிகக் கிட்டிய காலத்தில் நடைபெறப் போவதில்லை. நாட்டில் ஒரு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தாமல், தேர்தல் ஒன்றை நடத்துவது சாத்தியமில்லை. 

அதுமட்டுமன்றி, மேலும் ஊரடங்கை நீடிப்பதற்கும், நாட்டை மூடுநிலையில் வைத்திருப்பதற்கும் சிபாரிசு செய்யப்படுகின்ற நிலையில், தேர்தலை நடத்தி, மக்களை வீதிக்கு இறக்குவதற்கும் வாக்கெடுப்பை நடத்துவதற்குமான ஆரோக்கியமற்ற முடிவொன்றை அரசாங்கம் எடுக்காது என்றே, அனுமானிக்க முடிகின்றது.  

ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வெற்றியின் அதிர்வுகள் அடங்குவதற்கு இடையில், நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்தி, நாடாளுமன்றப் பெரும்பான்மையை உறுதி செய்ய வேண்டும் என்றே, முன்னர் அரசாங்கம் நினைத்தது. 

ஆனால், ‘ஒரு’ வைரஸ் எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கின்ற சூழலில், தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அவசரப்படவில்லை என்றே தெரிகின்றது. அத்துடன், மே 14ஆம் திகதிக்குப் பிறகு, நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கெடுப்பு தினம் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டிருந்த போதும், அது இன்னும் தள்ளிப்போகும் சாத்தியம் இருக்கின்றது.  

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, மூன்று மாதங்களில் புதிய நாடாளுமன்றத்தைக் கூட்டியாக வேண்டும் என்ற அடிப்படைச் சட்டத் தேவைப்பாடு காணப்படுகின்ற போதிலும், நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர கால நிலையைக் கருத்திற் கொண்டு, ஜூன் மாதத்துக்கும் அப்பால் தேர்தலை ஒத்தி வைப்பதற்குச் சட்டத்தில் ஏதேனும் சூட்சுமமான ஏற்பாடுகள் இருக்கின்றனவா என்பது குறித்து, அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.  

இது தொடர்பாகக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் பேசப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான காலத்திலும், முகநூலில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்காக சண்டையிட்டுக் கொள்ளும் முகநூல் போராளிகளைப் போல, ஒரு பொறுப்புவாய்ந்த அரசாங்கம் செயற்படவும் முடியாது.  

எனவே, இப்போதைக்குத் தேர்தல் அவசரமாக நடைபெறப் போவதில்லை என்பதைக் கருத்திற் கொண்டு, முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகள் தேர்தல் பிரசாரங்களை நிறுத்திக் கொள்வதுடன், தங்களைப் பாதுகாப்பது மட்டுமன்றி மக்களுக்கு முடியுமான சேவைகளைச் செய்வதற்கான வழிவகைகளைத் தேட வேண்டும். அரசியல் இலாபம் தேடாமல், தனிமைப்பட்டிருக்கும், தமக்கு வாக்களித்த மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்யத் தம்மாலான முயற்சிகளைச் செய்ய வேண்டும்.  

எது அத்தியாவசியம்?  

கொவிட்-19ஐக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் சிறப்பானவை என்றாலும் இதை இன்னும் ஒழுங்குபடுத்தி. பொறிமுறைப்படுத்த வேண்டிய அவசியம் காணப்படுகின்றது. குறிப்பாக, ஊரடங்கு காலத்தில் சில துறை சார்ந்தோருக்கு வீதியில் நடமாடுவதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அதை வேறு சிலர் துஷ்பிரயோகம் செய்கின்றனர். இவ்வாறானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.  

ஊரடங்கு தளர்த்தப்படும் போது, அத்தியாவசிய தேவைகளுக்காக வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும் போது, அத்தியாவசியமற்ற பொருள்களை விற்கும் கடைகளும் சில இடங்களில் திறக்கப்படுவதாகவும் அங்கு தேவையற்ற மக்கள் கூட்டம் அலைமோதுவதாகவும் அறிய முடிகின்றது. இது தடுக்கப்பட வேண்டும். 

அதிக விலைக்குப் பொருள்களை விற்போர் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அத்தியாவசிய பொருள் கொள்வனவுக்காக ஊரடங்கு தளர்த்தப்படுவது, சில மணித்தியாலங்களே என்பதால், சனநெரிசல் ஏற்படுகின்றது. இதைத் தணிப்பதற்கான பொறிமுறையை அரசாங்கம் உருவாக்க வேண்டியுள்ளது.  

அதேபோல், ஊரடங்கு நேரத்தில் மருந்துக் கடைகள் இயங்குவதற்கும், மீனவர், விவசாயிகள் தங்களது நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில், வேறு சில அத்தியாவசிய பொருள்கள் விற்பனை நிலையங்களும் திறக்கப்படலாம். ஆனால், ஊரே அடங்கிப் போயிருக்கின்ற நேரத்தில் இவ்வாறு கடைகள், வங்கிகள் திறக்கப்படுவது மக்களுக்காக என்றபடியால், அதற்கு மக்கள் சென்று வருவதற்கான முறையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.  

மக்களின் பொறுப்பு  

அரசாங்கம் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்கின்றது; மக்களைத் வீட்டிலிருக்குமாறு அறிவிக்கின்றது; பாதுகாப்புத் தரப்பினர் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டப் பாடுபடுகின்றனர். மறுபுறத்தில், வைத்தியர்களும் தாதியர்களும் இரவுபகல் பாராது, கொரோனா வைரஸுடன் போராடிக் கொண்டிருக்கின்றனர். 

வளர்ச்சியடைந்த நாடுகளின் செல்வந்தர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. கனடா பிரதமரின் மனைவி பாதிக்கப்பட்டுள்ளார். ஹங்கேரி நாட்டுக்கான, பிரிட்டனின் பிரதித் தூதுவர் இதனால் பலியாகியுள்ளார். ஏன், உலகையே ஆட்சிசெய்த சக்கரவர்த்தி பரம்பரையில் வந்த இளவரசர் சார்ள்ஸூக்குக் கூட கொவிட்-19 தொற்றியுள்ளது என்றால், ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.  

எனவே, வீடுகளை விட்டு வெளியேறாமல் இருப்பதுடன், பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பேண வேண்டும். மறுஅறிவித்தல் வரை, சுகாதார அறிவுறுத்தல்களைப் பேண வேண்டியது நமது பொறுப்பாகும். அத்துடன், மக்களுக்குள் மறைந்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்,  வெளிநாட்டில் இருந்து திரும்பிய சந்தேகத்துக்கு இடமான நபர்கள் தொடர்பில் உரிய தரப்பினருக்கு அறிவிக்க வேண்டும். மிக முக்கியமாக, முஸ்லிம், தமிழ் சமூகம், ஊரடங்கு போன்ற ஒழுங்குவிதிகளுக்கு முழுமையாகக் கட்டுப்பட வேண்டும்.  

எனவே, அரசாங்கமும், வைத்திய துறையினரும், பாதுகாப்புத் தரப்பினரும் மட்டுமன்றி ஒவ்வொரு பொதுமகனும் கூட்டிணைந்து பணியாற்றினால் மாத்திரமே, கொரோனா வைரஸில் இருந்து தப்பித்துக் கொள்வதுடன், இலங்கைத் தேசம் தற்போது வேண்டிநிற்கின்ற அரசியல், பொருளாதார, சமூக ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.    

இல்லாதோரையும் நினைப்போம்

‘வெளியே வந்துபார், போதும் போதும் என்றே, நம்மில் பலரின் தேவைகள் உண்மையில், அளவுக்கதிகமாக பூர்த்தி செய்யப்பட்டிருப்பதைக் காண்பாய்...’  
- இது, பிறமொழிக் கவிதையொன்றின் வரிகளாகும்.  

உண்மைதான், நாம் இருக்கின்றது போதும் போதும் என்று சொல்லிச் சொல்லியே, ஏழை மக்களை விடக் கொஞ்சம் வசதியாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை, நாம் பல நேரங்களில் மறந்து விடுகின்றோம். ஆனால், நாட்டில் கொவிட்-19 பரவி, ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்தத் தருணத்திலாவது வசதியில்லாத, அன்றாடங்காய்ச்சிகளான மக்களை நினைத்துப் பார்க்க வேண்டிய ஒரு தார்மீகப் பொறுப்பு நம்மீது உள்ளது.  

image_5f3a4e7830.jpg

கொரோனா வைரஸைகக் கட்டுப்படுத்துவதற்காக, அரசாங்கம் நாட்டின் எல்லா மக்களையும் வீடுகளில் இருத்தியுள்ளது. அத்தியாவசியச் சேவைத் துறையினர் தவிர, அரச ஊழியர்களும் வீட்டில் இருந்து பணிசெய்கின்றார்கள். தனியார்துறை நிறுவனங்களும் விடுமுறைச் சலுகைகளை வழங்கியுள்ளன.  

இவர்களில் அநேகமானோருக்கு இதுவரை வருமானம் ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை. தமது சம்பளத்தை எடுத்துக் கொண்டு சென்று, ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட வேளைகளில் பொருள்களைக் கொள்வனவு செய்கின்றனர். பணம் படைத்தோருக்கும் ஒரு பிரச்சினையில்லை.  
ஆனால், வறிய குடும்பங்கள், கூலித் தொழிலாளிகள், நாள் சம்பளத் தொழிலில் தங்கி வாழ்வோர்கள், வீதிவீதியாகத் தள்ளுவண்டியில் வியாபாரம் நடத்துவோர், ஓட்டோ ஓட்டுநர்கள், நடைபாதை வியாபாரிகள், சுமைதூக்குவோர், பிறரின் உதவியையே நம்பி வாழ்கின்ற யாசகரின்  நிலைமைகள் படுமோசமானதாகக் காணப்படுகின்றது.  

நாம் வீடுகளுக்குள் இருந்து, சாப்பிட்டு, பாதுகாப்புத் தேடும் இந்தத் தறுவாயில் நமது குடும்பத்தில் உள்ள, நமது பிரதேசத்தில் வாழ்கின்ற வறிய குடும்பங்கள் உள்ளடங்கலாக மேற்குறிப்பிட்ட வகையான மக்கள் பிரிவினருக்கு உதவ வேண்டிய கடமையை இறைவனால் நமக்கு தரப்பட்டுள்ளது.  

அந்த வகையில், சில சமூக நலஅமைப்புகள் நன்கொடைகளைப் பெற்று, உலர் உணவுப் பொருள்களை விநியோகிக்கின்றன. பல தனிநபர்கள், தம்மால் முடியுமான எல்லா உதவிகளையும் ‘தேவையுள்ளோருக்கு’ வழங்குவதில் முன்மாதிரியாகத் திகழ்கின்றனர். இவ்வாறானவர்களைப் பாராட்டுகின்றோம்.  

அதேநேரத்தில், மனிதர்கள் என்ற வகையில், இந்த இக்கட்டான காலத்தில், ஏனைய அனைத்து மக்களும் இதுபோல நம்மைச் சுற்றிப் பசியோடும், உதவி கேட்பதற்கு வெட்கத்தோடும் வாழ்கின்ற குடும்பங்களை, தனிநபர்களைப் பற்றி ஒரு கணம் சிந்தித்து, முடியுமான உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும் என்று மனிதாபினமானத்தின் பெயரால் கேட்டுக் கொள்கின்றோம்.    

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நாட்டின்-எதிர்காலம்-கொரோனாவின்-கையில்/91-247513

1 hour ago, கிருபன் said:

கொவிட்-19 பரவுவதை, உள்நாட்டில் கட்டுப்படுத்தினாலேயே நாட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்றலாம். அத்துடன், இந்த அரசாங்கத்தின் செயற்றிறனும் வெளிப்படும். இது, ராஜபக்‌ஷ அரசாங்கம் பற்றிய நல்ல அபிப்பிராயத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்படுத்தும். 

அவ்வாறு இலங்கை அறிவித்தாலும், வெளிநாடுகள் தாமும் ஒரு பரிசோதனையை செய்தே தமது நாட்டிற்குள் விடலாம்.   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.