Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஓடாதே - ரிஷபன்

Featured Replies

ஓடாதே

ரிஷபன்

‘வாச்சா மடத்துக்கு தென்கோடில வீடு. அங்கே வந்து சுந்தர்னு கேட்டா யாரும் சொல்வாங்க. மறக்காம வந்துரு’

என் இலையில் இன்னொரு மால்பூவாவை வைத்து விட்டு இந்த வார்த்தைகளைக் கிசுகிசுத்து விட்டு மோர் வாளியுடன் ஓடினான். ஹோசூரில் ஒரு திருமணம். முதல் தடவை நான் ஹோசூர் மண்ணை மிதிக்கிறேன். முகநூலில் நட்பாகி இன்று தன்னுடைய பெண்ணுக்குத் திருமணம் என்று  அழைக்கும் அளவுக்கு நெருக்கம்.. ஆறு மணிக்கு நிச்சயதார்த்தம்.. இப்போதே மணி ஐந்தரை. பஸ் நிலையம் அருகில்  ரூம் போட்டிருந்தார். நாலாவது தளத்தில் ரூம்.  தகவல் சொன்னதும் நண்பர் நேராகவே வந்து விட்டார்.

“காபி குடிச்சீங்களா”

“ஆச்சு. ரூம் சர்வீஸ்.  இப்போதான் காலி ப்ளாஸ்க்கும் பணமும் வாங்கிட்டு போறார்”

“ப்ச்.. பணம் வாங்கக் கூடாதுன்னு சொல்லி இருந்தேனே” நண்பரின் முகம் சட்டென வாடியது.. 

“ ஆறு மணிக்கு கீழே வந்தீங்கன்னா வேன் வரும். கல்யாண மண்டபம் வந்துரலாம்..  மத்தவங்களையும் எட்டிப் பார்த்துட்டு போயிடறேன்... வரட்டுமா”

பெண் கல்யாணம் என்கிற அழுத்தச் சுவடு துளிக்கூட இல்லை. அதை அவரே சிரித்துக் கொண்டு சொல்லி விட்டுப் போனார்.

சுந்தரைப் பார்த்தது டைனிங் ஹாலில் தான். டிபன் சாப்பிட்டு வந்துருங்க என்று ஒருவர் அழைத்துப் போனார். முகநூல் நண்பர்   எங்களைக் கவனிக்க ஒரு படையையே இறக்கியிருந்தார் என்பது பின்னால் புரிந்தது.  டைனிங் ஹாலே பெருசு. அறுநூறு பேர் ஒரே நேரத்தில் சாப்பிடலாம். வெள்ளைச் சீருடை அணிந்த அறுபது எழுபது பேர் பரபரவென்று இயங்கிக் கொண்டிருந்தனர். 

‘கல்யாணத்துக்கு வந்தவங்களை விட இவங்க தான் ஜாஸ்தியா இருப்பாங்க போலிருக்கே’

பெயர் தெரியாத சுவையான பலகாரங்கள் பரிமாறப்பட்டன. ‘இதென்ன.. ‘  பக்கத்து இலைக்காரர்  கேட்டார்.  ப்ருந்தாவன் போன அனுபவத்தில் சொன்னேன். ‘மால்பூவான்னு பேரு’ அவருக்குப் புரியவில்லை. ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்தேன். ம்ஹூம். ‘யோவ் சாப்பிடுய்யா’ என்கிற என் அதட்டல் பார்வையில் எடுத்துக் கடித்தார். ‘இன்னொண்ணு கிடைக்குமா’ 

முறுகலான ரவா தோசைக்கு சட்னி கேட்டபோது வந்தான்.  நகராமல் நின்றவனை நிமிர்ந்து பார்த்தேன். ‘கண்ணா எப்படிடா இருக்கே’ என்றான் . சுந்தர். என் திறந்த வாயில் ரவா விள்ளல். எங்கே போனான், என்ன ஆனான் என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்த பால்ய சிநேகிதன்.. . ‘நீயாடா.. எங்கேடா போனே’ உதட்டில் விரல் வைத்து உஷ் என்றான். சாப்பிடு என்று சைகை காட்டிவிட்டு போய் விட்டான்.

எனக்கு அதன் பிறகு கல்யாணத்தில் மனம் லயிக்கவில்லை. முதலில் நான் இங்கு வருவதாகவே இல்லை.  இவ்வளவு தூர அலைச்சல்.. முகநூல் நட்பு.. எந்த அளவுக்குக் கவனிப்பு இருக்கும்.. 

ஏதோ ஒரு சக்திதான் என்னை வற்புறுத்தி அழைத்து வந்திருக்கிறது. சுந்தர். பள்ளி, கல்லூரியில் ஒன்றாகப் படித்தோம். தப்பு, அவன் புத்திசாலித்தனம் யாருக்கும் வராது. நான் பாஸ் செய்வதற்காகப் படித்தேன். அதுவும் கல்லூரியில் சேர்ந்த புதிதில் கட் அடித்து விட்டு ப்ளாசா, அருணா, ராமகிருஷ்ணா என்று தியேட்டர்கள்.. முதல் வருட ரிசல்ட்டில் மூன்றாம் வகுப்பு.. புரபசர் ஒவ்வொரு மாணவராய் அழைத்து விசாரணை. என் முறை வந்தபோது மற்றவர்களிடம் பேசியது போல் கடுமை இல்லை. ‘உன்கிட்ட நம்பிக்கை வச்சிருந்தேன்.. முதல் வகுப்புல வரக் கூடியவர்களில் ஒருத்தன்னு’ அவ்வளவுதான். அடித்திருந்தால் கூட இத்தனை வலித்திருக்காது.

வெளியே வந்தபோது சுந்தர்  நின்றிருந்தான். . ‘ உங்க வீட்டுக்கு வரேன்.. சேர்ந்து படிக்கலாம்’ . திருவானைக்காவலில் இருந்து நடந்து வருவான். பதினொரு மணி வரை படிப்போம். வாசல் திண்ணையில் தான் படுக்கை.  விரித்து விட்டு அவனுடன் நடந்து போவேன். அவன் வீட்டில் விட்டு வர. அடுத்த வாரம் அவன் வீட்டில். அவன் ஸ்ரீரங்கம் வரை நடப்பான். பிறகு ரெயில்வே கேட்டை எல்லையாக வைத்துக் கொண்டோம். 

பிகாம் பாஸ் செய்தது அவன் புண்ணியத்தில். இரு அம்மாக்களும் இருவருக்கும் சேர்த்துத்தான்  தட்டு போடுவார்கள். அது ஒரு காலம். திருச்சியிலேயே பெரிய கம்பெனியில் வேலை. அவன் சிஏ சேர ஆசைப்பட்டு சென்னையில்  ஆடிட்டரிடம் போக வாழ்க்கை கொஞ்சங் கொஞ்சமாய் எங்களை வெவ்வேறு பாதையில் செலுத்தத் தொடங்கியது.

இசைக் கச்சேரி வைத்திருந்தார்கள். ப்ளுட், வயலின் இசை. தேர்ந்தெடுத்த பாடல்களில் தேர்ந்தெடுத்த வரிகளை மட்டும் இசைத்து அதகளம் செய்தார்கள் .  கைத்தட்டல்கள் பலமாய் கேட்கும்போது  அனிச்சையாய் கை தட்டினேன்.  டின்னரின் போது தான் சுந்தர் சொன்னான்.  ‘வாச்ச மடத்துக்கு தென்கோடில வீடு. '

ஆடிட் கம்பெனியை விட்டு வேறேதொ கம்பெனிக்குப் போனதாய் ஒரு முறை கடிதம் போட்டான். ‘ரொம்ப செலவாகும் சிஏ பண்ண. வீட்டு நிலைமைல  முடியாது. .’ மதுரையில் இருப்பதாய் இன்னொரு கடிதம். எனக்கும் கல்யாணம் ஆகி’, சுந்தர் வந்திருந்தான்.. அந்த அமளியில் அவனோடு அதிகம் பேச முடியவில்லை.. மகன் பிறந்து.. ஏண்டா.. நீ கல்யாணம் பண்ணிக்கலன்னு கேட்டதற்குப் பதிலே இல்லை.

உயிரென்று நினைக்கிற சில பரிச்சயங்களைப் பறித்து வேடிக்கை காட்டுவதுதான் வாழ்க்கையின் வினோத விளையாட்டு.  சிலரைக் கொண்டு வந்து இணைக்கும்.. சிலரை விலக்கி வைத்து கண்ணாமூச்சி காட்டும். ஏதோ ஒரு இரவில் சட்டென விழித்து வாழ்வின் முற்பகுதியை அப்படியே திரைப்படமாய் மனதில் ஓட்டி அழ வைக்கும். என் ஒரே காதலை நான் இழந்த போது கலங்கியதை விடக் கூடுதலாய்க் கசிவு சுந்தரைப் பிரிந்தபோது.  சட்டென தொடர்பெல்லைக்கு அப்பால் போய் விட்டான். கடிதங்கள் நின்றன. இங்கே அவன் வீட்டில் காலி செய்து போய் விட்டார்கள் எந்தத் தகவலும் தராமல்.  இருபது வருடத்திற்குப் பின் இதோ சுந்தர். 

மறுநாள் அவனைப் பார்க்க முடியவில்லை. ஏதோ அவசரம் என்று கிளம்பி விட்டதாய்ச் சொன்னார்கள் விசாரித்தபோது. அவர்களிடமே விலாசம் விசாரித்தேன். அது வீடு என்று சொன்னால் மற்ற வீடுகள் அழும். கதவு சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு நின்றிருந்தது. ‘சுந்தர்’ என்று கூப்பிட்டபோது உள்ளிருந்து இருமல் தான் கேட்டது. ’வாடா’ என்றான் எதிர்பார்த்தது போல. நாலைந்து பாத்திரங்கள். ஒரு ட்ரங்க் பெட்டி. ஒரு அட்டை டப்பா நிறைய புத்தகங்கள். பயங்கரமான வாசிப்பாளி. 

‘கரெக்டா கண்டு பிடிச்சு வந்துட்டியே.. இரு டீ வாங்கிட்டு வரேன்’

எழுந்தவனைக் கை பிடித்து நிறுத்தினேன். ‘நானும் வரேன் வா’ போனோம். டீ பாய்லருக்குப் பின் நின்றவரிடம் ஏதோ ஜாடை காட்டினான். ரெண்டு ஸ்பெசல் டீ சொன்னதாய் என்னிடம் சொன்னான். டீக்கடைக்கு அருகில் இருந்த மளிகைக் கடைக்காரர் அவனை அழைக்கவும் ஓடினான். ‘அடுத்த வாரம் அவங்க வீட்டுல ஏதோ விசேஷமாம்.. இருபது பேருக்கு சமைக்கணுமாம்’

‘என்னடா ஆச்சு உனக்கு.. வேலையெல்லாம் விட்டுட்டு.. என்னை மாதிரி முட்டாள்களே நல்ல போஸ்ட்ல இருக்கோம்டா..’

சுந்தரின் சிரிப்பு அப்போது தெய்வீகப் புன்னகை. ‘உன் தங்கை இப்போ எங்கே இருக்கா’

கை உயர்த்தி மேலே காட்டினான். ‘எப்படின்னே தெரியல.. நெருப்பு பிடிச்சு.. ப்ச்.. காப்பாத்த முடியல.. அம்மா அதே சோகத்துல போயிட்டா.. அப்பாவும் அடுத்த வருஷம்..

அறைக்குத் திரும்பி வந்தோம். ஒரு கிழிந்த பாயை விரித்துப் போட்டான். எப்படி எனக்குத் தெரியாமல் வாங்கினானோ.. எனக்குப் பிடித்த ஆரஞ்சு க்ரீம் பிஸ்கட் பாக்கெட்டை என்னிடம் கொடுத்தான். இத்தனை நாள் நடந்ததை அவன் இஷ்டத்தில் எடிட் செய்து எனக்காக ஸ்பெஷல் ஷோ நடத்தினான். கழிவிரக்கம் இல்லை. துளி விமர்சனம் இல்லை. யார் மீதும் கோபம் இல்லை. அப்படியே சொல்லிக் கொண்டு போனான். எப்போதும் நேருக்கு நேராய்ப் பார்த்துக் கொண்டு பேசுபவன் வேறு திசையில் பார்த்து பேசினான். இது என் சுந்தர் இல்லை என்று பட்சி ஏனோ அலறியது. அந்த நாளில் பாசிட்டிவ் எனர்ஜி கொடுத்துக் கொண்டிருந்தவனைக் காலம் பிய்த்துப் போட்டு விட்டது. 

‘என்னோட வந்துரேன்’ . ஏறக்குறைய கெஞ்சினேன்.  சிரித்தான். ‘கண்ணா.. நீ நல்லவன் டா’ 

போடா.. உன் சர்டிபிகேட் எனக்கு வேண்டாம்.. 

நாளை எனக்கு ஆடிட்டர் வருகிறார். அவசியம் கிளம்பியே ஆக வேண்டும். என் பாஸ் இந்தக் கல்யாணத்திற்குப் போய் வர அனுமதி கொடுத்ததே அரை மனசில் தான். ‘கட்டாயம் உடனே கெளம்பிரு.. உன்னை நம்பறேன்’ 

‘இன்னிக்கு போறேண்டா.. திரும்ப வருவேன்.. அப்போ உன்னை அழைச்சுண்டுதான் போவேன்..’

‘பஸ் ஸ்டாப் தெரியும் தானே.. போயிருவீல்ல.. ’

‘அந்த நாள் ல நீயும் நானும் மாத்தி மாத்தி நடந்துருக்கோம்’ 

சிரித்தான். ‘நிகழ் காலத்துக்கு வா. பழசைப் பிடிச்சுண்டு தொங்காதே’

வீட்டுக்குள் இருந்தே டாட்டா காட்டினான். புரிந்தது. அடுத்த முறை வரும்போது  இங்கே இருக்க மாட்டான். வீட்டிற்கு வந்ததும் புவனாவிடம் சொன்னேன். ‘ஏன் விட்டுட்டு வந்தீங்க’ என்றாள் அவள் பங்கிற்கு.  என் குற்ற உணர்ச்சியைக் குறைத்துக் கொள்ள, மளிகைக்கடை, டீக்கடையில்சுந்தரின் பெயரில் இருந்த கடன் பாக்கியைக் கொடுத்து விட்டுத்தான் வந்தேன். அடுத்த முறை தற்செயலாய் அவனைச் சந்தித்தால் கூட பார்க்காதது போல் போய்விடப் பழக வேண்டும். பாவம் என்னால் அவன் இன்னொரு முறை இடம் பெயரக் கூடாது.

நன்றி : குங்குமம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.