Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லொள்ளா சாச்சப்பா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாய்க்கும் நமக்குமான பிணைப்பிற்கும் ஒரு செவிவழி தொன்மம் உண்டு. சிறு வயதின் ஒரு தூக்க வேளையில், என் உம்மா வழியாக எனக்கு கடத்தப்பட்ட செய்தியை உங்களுக்கும் சொல்கின்றேன்.

முதல் மனிதர் ஆதம் நபியை இறைவன் மண்ணிலிருந்து படைக்கும் சமயத்தில், மலக்குகளில் முதன்மையானவனாக இருந்த இப்லீஸ் அது குறித்து பொறாமைப்பட்டானாம். நெருப்பால் படைக்கப்பட்ட தன்னை விட மண்ணால் படைக்கப்படும் இந்த உயிரினம் மிஞ்சி விடுமே என்ற எரியும் பொறாமையில் ஆதமை நோக்கி உமிழ்ந்திருக்கின்றான். அந்த எச்சில் அவரின் வயிற்றில் போய் விழ, இறைவன் அதை கிள்ளியெறிந்துவிட்டானாம். கிள்ளப்பட்ட இடம் மனிதர்கள் அனைவருக்கும் தொப்புளாகிவிட்டது. கிள்ளியெறியப்பட்ட எச்சிலானது உலகின் முதல் நாயாக பிறப்பெடுத்ததாம். எனவே, நாய் நமக்கு சாச்சப்பா முறையாகும். நாயினுள் ஷைத்தான், மலக்கு, இன்ஸான் என்ற மூவரின் குணக்கலவைகளும் உண்டு.

அதுட ஷைத்தாண்ட கொணத்தாலாதான் நாயத் தொட்டா நஜீஸ்னு சொல்லீக்கீது. ஒரு தடவ மண்ணக் கொண்டும் ஆறு தடவ தண்ணியக் கொண்டும் கழுவறது சட்டம். நடு சாமத்துல நாய் ஊள உடுறது எதுக்கு தெரியுமா? வானத்துலேருந்து பூமிக்கு எறங்குற பலாய் முஸீபத்துகளும் ஷைத்தானின் குறுக்கு மறுக்கான ஓட்டங்களும் அதுக்கு தெரியறதுனாலத்தான். அப்பம் நாமோ அல்லாஹுட்ட கார்மானம் தேடணும். இந்த மாதிரி அது வந்து செய்யுறது மலக்குட கொணத்துனால. மத்த முருவ ஜாதிகளவிட நாய்தான் மனுசம் பேச்ச நல்லா கேக்கும். இது வந்து அதுட இன்ஸான் கொணம்.

கறியும் ஆணமும் விரவிய சோற்றை என் தம்பி உண்டு முடிக்கும்வரையில் நாயின் முக்குணம் பற்றிய பொழிப்புரையை இழுத்து இழுத்து சொல்லி முடித்தாள் உம்மா.

உம்மா எவ்வளவுதான் சொல்லியிருந்தாலும் நாய்மீதான எனது அணுகுமுறையானது சராசரி சிறுவர்களுக்கு ஒத்ததாகவே இருந்தது, அந்த இரண்டு நிகழ்வுகளும் நடக்கும் வரைக்கும்.

முதல் நிகழ்வு பழைய வீட்டில் என் குடும்பம் இருந்தபோது நடந்தது. அப்போது நான் சென்னைக்கு சென்றிருந்தேன். ஒரு வைகறைப்பொழுதில் கூடுதல் தொடர்பில்லாத ஒரு ஆளின் எண்ணிலிருந்து தொலைபேசி ஒலித்தது. அழைத்தவன் என் சிறுபருவத்து நண்பன். ஆனால் தொலைபேசியில் உரையாடும் அளவிற்கு நட்பில்லை. இவன், ஏன் இந்த நேரத்தில் அழைக்கின்றான்? என்ற குழப்பத்தோடு பேசினேன். இவன், தனது சொந்த வீட்டை இடித்துக் கட்டுவதால் எனது பக்கத்து வீட்டில் ஆறு மாதங்களாய் வாடகைக்கு குடியிருக்கிறான். அவனும் கொல்கத்தாவிலிருந்துதான் என்னை அழைத்திருந்தான்.

உன் வீட்டிற்கு கள்ளன் வந்த செய்தி தெரியுமா?. குடலுக்குள் வெட்டி மின்னிய கலக்கத்தோடு, “இல்லையே, என்னாச்சு? என்றேன். இரவு இரண்டரை மணியிருக்குமாம். நாயின் கடுமையான குரைப்பைக் கேட்டு அவன் மனைவி கண் விழித்திருக்கிறாள். காது தாழ்த்தியபோது நாய் அவள் வீட்டுக் சுவரை கடுமையாகப் பிறாண்டியவாறே குரைப்பது தெளிவாக விளங்கியிருக்கிறது. கடகடத்துக் கொண்டிருந்த கிழட்டு மின்விசிறியை அவள் நிறுத்திவிட்டு இன்னும் காதை கூர்மையாக்கியவள், கர கர என எதுவோ அறுபடும் ஓசையை கேட்டிருக்கிறாள்.

Dog-_-03-200x300.jpgஇதை மேலும் விவரிப்பதற்குமுன் உங்களிடம் ஒரு தகவலைச் சொல்ல வேண்டும். இந்த முதல் நிகழ்வை வேறொரு குறுங்கதையாக எழுதியிருப்பதால் ஓரிரு வரிகளைத்தவிர நான் மேற்கொண்டும் விவரிக்க மாட்டேன். ஏற்கனவே நானொரு கதை எழுதியிருக்கிறேனே என பெருமையடிக்க இதுதானே நல்லவாய்ப்பு.

இனி, விட்ட இடத்திலிருந்து தொடர்வோம். கடைசியில், அவள் ஜன்னலைத் திறக்க அஞ்சி வீட்டுக் கதவிற்கும் நிலைக்கும் உள்ள இடைவெளியில் பார்த்திருக்கிறாள். காட்சி தெளிவாகியிருக்கின்றது. இரண்டு கள்ளர்கள் என் வீட்டுப் பூட்டை அறுக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டிருந்திருக்கின்றனர்.

இவள் அக்கம்பக்கத்து வீடுகளுக்குத் தகவல் சொல்ல, முடுக்கில் விளக்கெரிந்திருக்கின்றது. மேற்படியான்கள் தப்பிவிட்டனர். வீடும் தப்பிவிட்டது.

இரண்டாம் நிகழ்வு. எனது தற்போதைய வீட்டில் நடந்தது. இச்சமயம் நான் வீட்டில்தான் இருந்தேன்.. வீடே இரண்டாகப் பிளந்தாலும் பகல் தூக்கத்திலும்கூட அசையாத என் மகள், நள்ளிரவு ஒரு மணியைத் தாண்டியவுடன் நாய்களின் மண்டை தெறிக்கும் குரைப்பில் அவளுக்கு விழிப்புத் தட்டியிருக்கிறது. உம்மாவை எழுப்பியிருக்கின்றாள். இருவரும் வீட்டின் பக்கவாட்டு விளக்கை எரிய விட்டிருக்கின்றனர். அப்போதும் நாய்களுடைய குரைப்பின் தீவிரம் குறையவில்லை. தோட்டத்து விளக்கையும் எரியவிட்டிருக்கின்றனர். இரவின் ஆழ்ந்த அமைதியில் தொம்ம் என்ற ஓசை இரட்டித்து துல்லியமாகவும் அதிக அதிர்வின்றியும் கேட்டிருக்கிறது. அதன் பிறகு பைக்கில் ஆட்கள் புறப்பட்டுச் செல்லும் ஓசை. அன்று நான் ஒற்றைத்தலைவலியின் விளைவாக தூங்கிவிட்டபடியால் எனக்கொன்றும் விளங்காது.

எப்போதும் அவளின் நெடுந் தூக்கத்திற்காக நான் என் மகளை குறை சொல்வேன். கள்ளர்களை விரட்டிய பெருமையை முகம் நிறைய ஏந்திக்கொண்டு வந்தவள் நடப்பு முழுவதையும் சொன்னாள். ‘நாய் குரச்சதுனாலத்தானே நீ முழிச்சே, என்றேன்… போ லூஸு. ஒனக்கு நாய் மட்டுந்தான் பிடிக்கும். நான் பேசாம இருந்திருக்கணும். அழகா ஒண்ட இரும்பு தட்டு சாராயக்கடைக்கு போயிருக்கும்’ என முகம் ஒளிரச் சொன்னாள்.

அவளை ஒருவாறு சமாதானப்படுத்தியவாறே எந்தப் பக்கம் என்ன நடந்திருக்கின்றது? என்பதை பார்க்க வீட்டை வட்டமடித்தோம். தோட்டத்தில்தான் திருட்டு முயற்சி நடந்திருக்கின்றது. அங்குள்ள மரம், செடி, கொடிகள் எந்த பங்கமும் இல்லாமல் தங்களுடைய இலை நாளங்களை கதிரவனின் இளமஞ்சள் திரவத்திற்குள் மூழ்கடித்து திளைத்துக் கொண்டிருந்தன. தோட்டத்து சுற்று சுவரில் கண்ணாடிச் சில்லுகள் பதிக்கப்பட்டிருக்கும் இல்லையா? அதில் ஒரு பகுதியை பல்லைப் பிடுங்குவதுபோல் துப்புரவாக கிட்டத்தட்ட தொண்ணூறு சென்டிமீட்டர் அளவிற்குப் பொறுமையாக மெனக்கெட்டு அகற்றியிருக்கிறார்கள்.

படரும் கொடிவகைகளான பீர்க்கங்காய், சுரைக்காய் செடிகளுக்காக தோட்டத்தில் இரும்புச் சட்டகம் இரண்டை மூவாயிரம் செலவில் செய்து மாட்டியிருந்தோம். அவற்றிற்கு வண்ணம்பூசிய பின் காய்வதற்காக என தரையில் இறக்கி வைத்திருந்தோம்.

பக்கத்து வீட்டில் கட்டுமான வேலை நடந்துகொண்டிருக்கிறது. அங்கிருந்து பார்த்தால் தோட்டத்தின் நாற்சதுரமும் தெரியும். ஒருமுறை, அப்படி சாரத்தில் நின்றிருந்த ஒருவன் தோட்டத்தை பார்த்திருப்பான் போலும். அங்கு பேண்டழித்துக் கொண்டிருந்த வாத்து குஞ்சுகளின் எண்ணிக்கையை சரியாகச் சொன்னான். வீட்டுக்காரரின் சம்பளத்தில் இவன் அடுத்த வீட்டு வேலையைப் பார்க்கிறான். விளங்குமா இது ?

இவனைப்போலவே ஒருவர் சம்பளத்தில் அடுத்தவர் வேலையை பார்க்கும் களவாணியின் கண்ணில் இரும்புச் சட்டகம் பட்டிருக்கவேண்டும். அரைக்கால் விலைக்கு விற்றாலும் மிச்சம்தான். சும்மா கிடைப்பதுதானே.. கூட்டு கள்ளனுடன் அதை தள்ளிக் கொண்டு போக வந்திருக்கிறார்கள். நாய் குரைப்பு, மகள் விழிப்பு, விளக்கெரிவு என்ற தொடர்வினையில் புலப்பெயர்விலிருந்து காக்கப்பட்டன இரும்புச் சட்டகங்கள்..

இந்த இரண்டு நிகழ்வுகளுக்குப் பிறகு நாய்களின்மேல் அன்பும் மதிப்பும் கூடிவிட்டது. எந்த நாயைப் பார்த்தாலும் சீண்ட நினைக்கும் நான் அவற்றை அன்புடன் பார்க்க தொடங்கினேன். ‘இது மட்டும் போதாதப்பா’ என உள்ளுணர்வு சொல்ல அவற்றை பார்த்து புன்னகைக்கவும் தொடங்கினேன். புன்னகைக்கு முன்னர் அக்கம்பக்கத்தில் யாருமில்லை என்பதையும் உறுதி செய்யவேண்டியிருந்தது. பழி பட்டங்களை அதுவும் நாய்க்காக பகிரங்கமாக சுமக்கும் தெம்பு சித்திக்கவில்லை. முதல் முயற்சியாக கமுக்கமாக நாயைப் பார்த்து இளித்தபோது அது திரும்பவும் முறைத்தது. நாம் சிரித்ததுபோதாது போலிருக்கிறது என்று நினைத்து இன்னும் இளித்தபோது அது காதுகளை விடைத்து வாலின் நுனி வளைத்து நிமிர்த்தி சீரியஸாவது தெரிந்தது. உறுதியாகவே அது தன் பற்களின் கூர்மையை சோதித்தறிவதற்கான முயற்சியின் முந்திய கணம்தான். மெதுவாக பின்வாங்கினேன். ரொம்பவும் பின்னால்தான் தெரிந்தது அது ஏன் முறைத்தது என்று? நாயும் நாயும் ஒன்றுக்கொன்று முறைக்கும்போது இரண்டு நாய்களுமே கடைவாய் பற்கள் தெரியும் அளவிற்கு ஒன்றையொன்று எதிர்கொள்ளுமல்லவா? என்னதான் அதனைப்பார்த்து மனிதன் அன்பு ததும்பச் சிரித்தாலும் நாயை பொறுத்தவரை, அது சண்டைக்கான அழைப்பாகும் என வானொலியின் இன்று ஒரு தகவலில் தென்கச்சியார் சொல்லித்தான் விளப்பமாகியது.

என் சிரிப்பை நாய் புரிந்துகொள்ளவிட்டாலும், கைமாறாக அவற்றிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உள்ளுணர்வு மட்டும் தொடர்ந்து உந்திக்கொண்டே இருந்தது. என் வீட்டின் அருகே வீட்டு மனையொன்று வெட்டையாக கிடக்கிறது. நான் என் வீட்டின் பக்கவாட்டு கதவை அடைய அந்த வெட்டையை குறுக்காக கடந்துதான் வர வேண்டும்.

அப்போதுதான் அது கண்ணில்பட்டது. தெருவிளக்கின் சோம்பேறித்தனமான வெண்ணொளியும் இருளும் முட்டும் ஒரு இடத்தில் முன்னங்கால்களை நீட்டி அமர்ந்திருந்தது. நீண்டு மெலிந்த உடல் & வாயுடன் சதைப்பற்றற்ற விலா எலும்புகள் புடைத்துக் கொண்டிருந்தன. அழுக்கு விரவிய வெள்ளைநிற உடலில் இங்கொன்றும் அங்கொன்றுமாக செவலைத்திட்டுக்கள். வடிகட்டும் வெள்ளைத்துணியில் படிந்த தேயிலைக்கறை போலிருந்தது. நெற்றியில் மெலிந்த நேர்கோட்டு செவலை வகிடு. நான் அதை பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. நான் பள்ளிவாசலுக்கு போகும்போதும் வரும்போதும் அது வீட்டைச் சுற்றியே நிற்பதும் படுப்பதுமாக இருந்தது. பசியும் தாகமும் ஏறிய ஒளி வற்றிய கண்கள். வீட்டில் இருந்த மேரி பிஸ்கட்டில் இரண்டெடுத்து போட்டேன். அதை வந்து தின்பதற்கும் அஞ்சியது. நான், நிலம் அதிராமல் விலகி வீட்டின் படிமேல் ஏறினேன். மெதுவாக அடிமேல் அடிவைத்து வந்து பிஸ்கட்டினருகில் மூக்கை சுருக்கி வாசம் பிடித்தது. பின்னர் தலையைத் தூக்கி என்னைப் பார்த்தது. கொஞ்ச நேரம் அசைவற்று நின்றது. மீண்டும் தலையை பணித்து நாக்கின் நுனியால் துளாவியது.. பிஸ்கட் புரண்டு புரண்டு விழுந்ததுதான் மிச்சம். நாக்கால் அதைப் புரட்டி கவ்வக்கூட சீத்துவம் இல்லை… ஒருவழியாக தின்று முடித்தது. இப்போது அதன் கண்கள் ஈரத்துடன் துலங்கின. கருவண்டொன்று என் தலைக்குமேல் அரையடி உயரத்தில் பல எண்களை எழுதி எழுதி அழித்தவாறு நடனமிட்டுக் கொண்டிருந்தது

இரவு வகுப்பு முடிந்து வீட்டிற்கு வந்த இளைய மகன் நாயாரைப் பார்த்தவுடன் பொங்கினான். அதற்கு ஜாய்ஸன் எனக் கொண்டாட்டமாக பெயரும் சூட்டினான். நான் பைக்கை வீட்டின் வளாகத்தினுள் ஏற்றி விடும்போது பக்கத்து வீட்டு படியிலிருந்து மெல்ல இறங்கி பாதுகாப்பான தொலைவில் நின்றுகொண்டு என்னை ஜாய்ஸன் பார்க்கும். நானும் வீட்டிலுள்ள பிஸ்கட்டில் ஒன்றிரண்டை எடுத்துப் போடுவதுண்டு. அரிதாக அடி வயிற்றிலிருந்து எக்கி கிளம்பும் வ்வூ என்ற ஓசை முழு அளவிளான வள் வள் குரைப்பாக மாறாமல், அதே வ்வூ அளவிலேயே சில நொடிகளுக்குள் அதன் தொண்டைக்குள்ளேயே மடிந்துவிடும். நன்றியா? போதாமையா? யார் அதனிடம் கேட்டுச் சொல்வது ?

இரண்டு மூன்று நாட்கள்தான் கழிந்திருக்கும். ஒவ்வொருநாளும் மேரி பிஸ்கட்டின் அடுக்கு குறைவது பற்றி வயிற்றுப்புண்காரியான என் கொழுந்தியாள் முணுமுணுப்பது கேட்டது. அது அவளின் காலை தேநீருக்கான பிஸ்கட்டாம்.

அடுத்த நாளே ஐம்பது ரூபாய்களுக்கு பிஸ்கட் பொட்டலங்களை வாங்கி அதற்கென தனியாக நீலநிற டப்பாவும் ஒதுக்கியாகிவிட்டது. போன வருடம், யாருக்கோ நடந்த திருமண சீருக்கான பிளாஸ்டிக் டப்பா. மணமகனின் பெயரில் பாதி உரிந்து அழிந்திருந்தது.

பிஸ்கட்டுக்கு அப்பால் இறைச்சி உணவுக்கழிவுகளும் ஜாய்ஸனுக்கு வாராந்திர சிறப்பு உணவாக கிடைத்து வந்தது. பிஸ்கட் இரவில் என்றால் எலும்புத் துண்டங்கள் அதற்கு பகலில்தான் போடப்படும். அடியே! நாயையுமா பேய் பிடிக்கும்? என்றதற்கு தன் செயற்கை பற்களால் இளித்தாள் என் மனைவி.

‘நீங்க என்ன அதுக்கு தீனி போடுறது ? அதுகளா சீச்சு பொறுக்கி திங்கும்’ என்ற அவளின் புலம்பலை பொருட்படுத்தவிடாமல் என்னை செய்தது ஜாய்ஸனின் பாமரத்தனமான முழிதான். ஜாய்ஸனுக்கு பிஸ்கட் போடும் பொறுப்பை பிள்ளைகளிடம் ஒப்படைத்தேன். ஜாய்ஸனை ஒல்லியாக இருக்கும் தனது காக்காவுடன் ஒப்பிட்டு சலங்கை குலுங்குவதுபோல் சிரித்தான் என் இளைய மகன். எல்லாம் சுமுகமாக இருக்க, நான் சென்னைக்கு தொழில்நிமித்தம் புறப்பட்டுவிட்டேன்.

ஏறத்தாழ ஒன்றரை மாதங்கள் கழித்து வீடேகியபோது ஜாய்ஸனுக்கான தீனி போடுதல் நின்றிருந்தது. காரணத்தை இல்லாளிடம் கேட்டேன். நாய்கள்மீது எனக்குப் புதிய பார்வையை உண்டாக்கிய நிகழ்வு அது.

Dog-_-02-296x300.jpgஎங்கள் வீட்டிற்கு பால் போடும் சிறுவனுக்கு பதிமூன்று வயது மட்டில் இருக்கும். ஆள் கட்டையாக இருப்பான். ஒரு நாள் காலை ஏழு ஏழரை மணி சமயம். வீட்டின் கதவு உரமாக இடிபடுகிறது. ‘யம்மா என்னக் காப்பாத்துங்கோ என்னக் காப்பாத்துங்கோ’ என்ற அழுகை கூப்பாட்டுடன் பலத்த நாய்களின் குரைப்பும் கேட்க என் மனைவி பதறிப்போய் கதவைத் திறந்திருக்கிறாள்.

மேல்படியில் பால்கார சிறுவனும் கீழ்படியில் ஒரு நாயும் நிற்க படியைச் சுற்றி அரை வட்டமாக நின்ற நான்கைந்து நாய்கள் உச்சபட்ச வெறியில் பற்கள் தெறித்து விழுவதுபோல குரைத்திருக்கின்றன. பையனும் அடித்துப் புரண்டு வீட்டினுள்ளே வந்து விழுந்திருக்கிறான். கொஞ்சம் சுணங்கியிருந்தாலும் அவைகள் அவனை குதறி எடுத்திருக்கும். அவனுக்கு தேநீர் தண்ணீரெல்லாம் கொடுத்து ஆறுதல்படுத்தி அரைமணி நேரம் நாய்களை விரட்டிய பின்னர் அனுப்பியிருக்கின்றாள். அதன்பின்னர் இரண்டு நாட்களாக அவன் எங்கள் வீட்டிற்கு பால் போட வரவில்லை. அந்த நாட்களின் பின்னிரவுகளில் மூன்று நாய்கள் எதிர் வீட்டு முடுக்கில் வட்டமாக நின்றுகொண்டு ஊளையிட்டிருக்கின்றன.

இத்தனைக்கும் அந்த பால்கார சிறுவன், எங்கள் வீட்டிற்கு புதியவனில்லை. எங்கே நடந்தது பிழை என்பது அடுத்த ஓரிரண்டு நாட்களுக்குள் தலைக்குப் பிடிபட்டது.

ஜாய்ஸனுக்கு போடும் பிஸ்கட்டை பெரும்பாலும் அதுவே வந்து தின்றுவிடும். சில நாட்களில் அது வரத் தாமதமாகும்போது தெரு வலம்வந்த வேறுசில புதிய நாய்கள் அந்த பிஸ்கட் துண்டங்களைத் தின்றிருக்கின்றன. இது அவ்வப்போது நடக்கவே கொஞ்சம் கொஞ்சமாக கிட்டத்தட்ட ஏழெட்டு நாய்கள் எங்கள் வீட்டைச் சுற்றி வருவதை பழக்கமாக்கி கொண்டன. இதில் சாட்டைபோல நீளமான முதுகும் உயரமான கால்களையும் கொண்ட ஒரு நாய் மட்டும் விதிவிலக்கு. அதன் கழுத்தில் தோல் பட்டையொன்று இருந்தது. கைவிடப்பட்ட வேட்டை நாய். அது உள்ளூர் நாய்களைப்போல கண்டதையும் அவ்வளவு எளிதில் தின்றுவிடாது. பிஸ்கட்டை சுற்றி நிற்கும் உள்ளூர் நாயார்களையும் அது பொருட்படுத்துவதேயில்லை. அதன்பாட்டுக்கு எதையோ தேடும் நினைவில் பெரிய மனித தோரணையில் போய்க்கொண்டே இருக்கும். இதைக் கொண்டு எந்த தொல்லையுமில்லை. ஒரே ஒருநாள் மூன்றாம் வீட்டு பூனையை கவ்வுவதற்காக சாட்டையார் பாய, வால் விரைக்க அந்த பூனை எதிர்வீட்டு படிமேல் தாவி பாதி திறந்திருந்த ஜன்னல்வழியாக தன்னை ஒடுக்கிக்கொண்டு வீட்டுக்குள் போய் விழுந்தது. படிக்குக் கீழே பல மணி நேரமாக ஒருக்களித்து சாந்தமாக எச்சிலொழுக காத்திருந்தார் சாட்டையார்.

பல நாள் பிஸ்கட் கிடைக்காத கடுப்பில் பால்காரப் பையனை தீனிப் பொட்டலமாக நினைத்திருக்கின்றன ஜாய்ஸனின் புதிய கூட்டாளிகள். சிறுவன்மேல் எப்போதும் வீசும் பச்சை பால் மொச்சையும் நாயார்களின் எச்சிலை இன்னும் ஊறச் செய்திருக்கலாம்.

ஊருக்குள் நாய் பெருக்கத்திற்கு காரணம் ஊர் ஊராகப் போய் தெரு நாய் பிடிப்பவர்களின் வேலைதானாம். அவர்கள் ஒரு ஊரில் பிடித்த நாய்களை அடுத்த ஊரின் எல்லையில் போய் திறந்துவிடுவார்களாம். ஒரு வாரங்கழித்து அந்த ஊரின் பஞ்சாயத்தில் போய் நாய் பிடிக்கவா? என ஒன்றும் தெரியாததுபோல கேட்பார்களாம். மாலைநேர கடற்கரை அரட்டையொன்றில் முன்னாள் தலையாரி ராஜாதான் இந்த நாய்பிடி தந்திரத்தை Dog-_-04-208x300.jpgசொன்னான்.

நான் வீட்டைவிட்டு இறங்கும்போது வீட்டின் முன்பக்கச் சுவரின்கீழ் ஓரத்திலிருந்து இணை கண்களும் உயர்ந்த காதுகளும் முதலில் மெல்ல எட்டி பார்த்தன. அந்த உறுப்புகள் ஜாய்சனுடையதில்லை. இடையில் வந்தவருடையது. கண்களையும் காதுகளையும் ஒரு புள்ளியில் என்னை நோக்கிக் குவித்து பிஸ்கட்டுக்காக மௌனமாக யாசித்தது. நான் பைக்கை நிறுத்திவிட்டு அதனிடம் பேசினேன். அக்கம்பக்கம் யாருமில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டுதான் பேச்சைத் தொடங்கினேன்.

‘ஒங்கள்வலுக்கு எரக்கப்பட்டு தீனி போட்டா நீங்கள்லாம் சேந்து பால்காரப் பையனை சாகடிக்க பாத்தீங்கள்ல. இனி பிஸ்கட்டும் கிடையாது ஒன்னும் கிடையாது போங்கோ, எனச் சொன்னேன். கொஞ்ச நேரம் என்னையே பார்த்தபடி அமைதியாக நின்றது. அந்த பார்வையின் கெஞ்சலை எதிர்கொள்ள இயலாமல் நான் அங்கிருந்து அகன்றேன். அதன் பிறகு அதைக் காணவே இல்லை.

இஷா தொழுதுவிட்டு வீட்டுப் படியேறும்போது ஜாய்ஸன் வெட்டையின் நட்ட நடுவே தன் முகத்தை நெஞ்சுக்குக் கீழே பதித்து பாதி தூக்கமும் விழிப்புமான அதன் வறண்ட கண்களோடு அரைவட்ட வடிவில் படுத்துக் கிடந்தது. நான் வீட்டிற்குள் செருப்பைக் கழற்றிக் கொண்டிருக்கும்போது ஹக்கென்ற சிரிப்பொலியின் கீற்றொன்று கதவில் மோதி சிதறியது. என்னையும் ஜாய்ஸனையும் தவிர அங்கு யாருமில்லை.

https://uyirmmai.com/article/லொள்ளா-சாச்சப்பா/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.