Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஒரு நேரடிச் சாட்சியம் - “ஆறாத வலிகளுக்கு ஆண்டுகள் பதினொன்று”

Featured Replies

தமிழர் தாயகத்தில் மனிதாபிமான நடவடிக்கையின் பெயரால் முன்னெடுக்கப்பட்ட போர் பூமிப்பந்தின் இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த மிகப்பெரும் பேரவலத்தினை ஏற்படுத்தியிருந்தது.

2009ஆம் ஆண்டு மே 18இல் ஆயுதங்கள் மௌனிக்கச் செய்யப்பட்டுவிட்டதாக கூறினாலும், முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய மனிப் பேரவலங்கள் ரணமாகியுள்ளன.

அவலக்குரல்களும், அழுகை விழிகளும், அன்புக்குரியோரின் பிரிவுகளும், அகதி அவலங்களும் ஆண்டுகள் பதினொன்றாகியும் அனைவர் உளத்திலும் அகலாது உறைந்திருக்கின்றன.

அஞ்சலிகள் ஆண்டுதோறும் நடைபெற்றாலும் ஆத்மாக்களின் சாந்திக்கான நியாயமான நீதி எட்டாக்கனியாகவே இருக்கின்றது.

அதற்கான பயணங்களும் செல்வழியின்றி முடக்கப்பட்டிருக்கின்ற நிலையில், மற்றுமொரு நீதிக்கான எதிர்பார்ப்புடன் நகர்கிறது காலக்கண்ணாடி

p01.jpg


"கிளிநொச்சியை ஆமி பிடிச்சிட்டாங்களாம், சனமெல்லாம் அங்கேயிருந்து வெளிக்கிட்டினமாம். விசுவமடு, உடையார்கட்டு, சுதந்திரபுரம் பக்கமாய் போயினமாம் 2009 ஜனவரியில் எனது காதுகளில் இந்த வசனங்களாக சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அன்று ஆரம்பிச்சது எங்கட ஓட்டம் " என்றவாறு நீண்ட பெருமூச்சுடன் நிறுத்துகின்றார்.

"தம்பி, நடந்ததை செல்றன். நாங்கள் கடந்து வந்த பாதையில பார்க்க வேண்டிய எல்லாதையும் பார்த்திட்டம். இனி ஒன்றுமேயில்லை. பத்திரிகையில எழுதிப்போட்டு நீங்கள் சிக்கலுக்குள்ளாகிவிடாதீர்கள்", என்று கூறி மீண்டும் நிறுத்துகின்றார்.

ஆம், இந்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் வேறுயாருமல்ல. முல்லை மண்ணின் மைந்தன். விடுதலைப்போராட்டத்தில் பங்கேற்ற இரண்டு போராளிகளின் சகோதரர். ஒரு சமூக ஆர்வலர். செயற்பாட்டாளர். இப்படி அவருக்கு பலமுகங்கள் உள்ளன. (பெயர் குறிப்பிடவிரும்பவில்லை).

முள்ளிவாய்க்கால் வரலாற்றுத் துன்பியலில் மரணத்தினை வென்றவர் இப்போது சிந்தையை தீட்டி என்னுடன் நினைவுகளை மீட்டுகிறார். நாங்கள் வலைஞர் மடத்துக்கு இடம்பெயந்து வந்திருந்தோம். படைகளின் எறிகணை மற்றும் விமான தாக்குதல்களின் காரணத்தால் மக்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இப்படி நிலைமைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டவர் சட்டென தன் நினைவுக்கு வந்த முதற்சம்பவத்தை கூற ஆரம்பித்தார்.

p02.jpg


"மாசி மாதமெண்டு நினைக்கிறன், கேப்பாபுலவுக்குள்ளால் படைகள் முன்னேற முயற்சித்தன. நான் பணியொன்றின் நிமித்தம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு போயிருந்தபோது சரிமாரியாக எறிகணைகள் வரஆரம்பித்தன. அப்பிடியொரு நிலைமையில நான் சிக்கினது அதுதான் முதற்தடவை. சற்றுநேரத்தில் வெளியில் வந்து பர்த்தபோது எத்தனையோ பேர் இறந்து கிடந்தார்கள். இப்பவும் எனக்கு அந்த காட்சிகளை மறக்க முடியவில்லை"

";பிறகு ஒருநாள் ஓ; வகை இரத்தம் அவசரமாக போராளியொருவருக்கு தேவையெண்டு தெரிந்த ஒருவர் கோரவும் நான் அவருடன் போனேன். மாத்தளன் பாடசாலையில் ஓரளவு வசதியோட இயங்கிய வைத்தியாசலை அது. அங்கே மேசைகளை கட்டில்களாக்கி சிசிகிச்சை நடந்துகொண்டிருந்தது. ராஜா டொக்டரோட சிலபேர் இருந்தவை. நான் காயமடைந்த அந்த போராளிக்கு இரத்தம் வழங்கவும் கொஞ்ச நேரத்திலேயே அவர் இறந்துபோயிட்டார். இந்த இரண்டு சம்பவங்களும் என்ட மனதில ஆழமாய் பதிஞ்சிட்டுது என்று கூறி சிறிநேரம் அமைதியானார்.

யுத்த சூனிய வலங்கள் அமைக்கப்பட்டதால் மக்கள் அந்த வலங்களை நோக்கி நகரவில்லையா என்று அவருடைய அமைதியைக் நான் குலைக்கவும்,  ஓம், தம்பி, சுதந்திரபுரம் உடையார்கட்டு பகுதி முதலாவதாகவும், அடுத்ததாய் மாத்தளன் பகுதியென்று அறிவித்துக்கொண்டிருந்தவையள். ஆனால் அங்கையும் எறிகணை தாக்குதல்கள் நடந்தன. சாதாரண எறிகணைகள் அல்ல. பல்குழல் எறிகணைகள் மூலம் தாக்குதல்கள் நடத்தினவையள். ஒவ்வொருநாளும் மாத்தளன் வைத்தியசாலையில மரங்களுக்கு கீழ இறந்தவையின்ர உடலங்களை அடுக்கி வைத்திருப்பதை நான் பார்த்திருக்கின்றேன். இப்படி பல சம்பவங்களை அடுக்கி கொண்டே போகலாம், என்றார்.

உங்களுடைய சகோதரர்களுக்கு என்னவாகிவிட்டது என்றபோது, அவையள் இரண்டுபேரும் போராளிகள். மார்ச் மாதத்தில ஒருத்தருக்கு காலில காயமேற்பட்டு பொக்கனை வைத்தியசாலையில மருத்துவம் செய்தபோதும் அவருக்கு சரியாகவில்லை. கால் அழுகிவிட்டது. பிறகு அதை அகற்ற வேண்டியதாகிவிட்டது. ஏப்பரல் மாதமெண்டு நினைக்கிறன் மற்ற சகோதரருக்கு படையினரின்ர சினைப்பர் தாக்குதலில் ஒரு கண் முழுசா பாதிக்கப்பட்டுவிட்டது என்றார் சற்றே தழுதழுத்த குரலில்.

P03.jpg


தன்னை சுதாகரித்துக்கொண்ட அவர், ஏப்ரல் 19,20ஆம் திகதிகளில் அம்பலவன் பொக்கணையை ஊடறுத்து படையினர் பெரியொரு நகர்வை முன்னெடுத்தவையள். அதில ஒருஇலட்சத்துக்கும் அதிகமான மக்களை தங்களிண்ட கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டுவந்து விட்டினம். அதுக்கு பிறக்கு தான் படையினரின்ட கட்டுப்பாட்டுக்குள்ள போகதவையள் முள்ளிவாய்க்காலை நோக்கி பயணங்களை ஆரம்பிச்சவை

இதனை பார்த்த நாங்களும் வலைஞர் மடத்திலிருந்து கடற்கரை ஓரமாக நகர ஆரம்பிச்சம். கடற்கரையில குழியை தோண்டி அதுக்குள்ளே இருப்போம். மறுநாள் அங்கிருந் நூறு மீட்டர் தள்ளியிருப்போம். நாங்கள் இருந்த இடத்தில எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கும். இப்படியாக கடற்கரையால மெல்ல மெல்ல நகர ஆரம்பிச்சம்...என்று ஒரே மூச்சில் கூறி நிறுத்தினார்.

மே மாதம் எட்டந்திகதியென்று நினைக்கிறன்..என்று கூறிய அவர் சற்றே நிதானித்த, ஆம், அன்று தான் நாங்கள் முள்ளிவாய்க்காலுக்கு கிட்டவாய் ஒரு பங்கரில இருந்தம். அண்ணாவுக்கு கால் இல்லை. தம்பிக்கு கண் இல்லை. இரண்டு பேருக்கும் மருந்தே இல்லை. அவையளையும் வைத்துக்கொண்டு பங்கருக்குள்ள நாலைந்து நாட்கள் இருந்தம்.

மே 13ஆம் திகதி எங்களால தொடர்ந்தும் அங்க இருக்க முடியாததால அங்கிருந்து வெளிக்கிட்டு ஒரு 25மீற்றர் போயிருப்போம் நாங்கள் இருந்த பங்கருக்குள் எறிகணை வீழ்ந்து வெடிச்சுது. எங்களுக்கு பிறகு அந்த பங்கருக்குள்ள வந்தவர்கள் அதிலேயே மரணித்தார்கள்.

P04.jpg


அங்கிருந்து உயிரைக் கயில பிடித்துக்கொண்டு நகர்ந்த நாங்கள் முள்ளிவாய்காலுக்கு அருகில இருந்த திட்டொன்றில போராளிகளால அமைக்கப்பட்ட பத்தடி பங்கருக்குள்ளே சென்றோம். அதற்குள்ளே 23பேர் இருந்தோம். குடிக்க தண்ணி மட்டும் தான் கிடைக்கும்...

போராளிகளுக்கு கிடைக்கிற சாப்பாட்டில சில நேரம் ஒருபார்சல் கிடைக்கும். அதனை பங்கிட்டு சாப்பிட்டு இருந்தம். மே 13ஆம் திகதியிலிருந்து 17ஆம் திகதி 12மணி வரைக்கும் அந்த பங்கருக்குள்ளேயே இருந்தம். அதுக்கு பிறகு சகோதரர்களையும் தூக்கிக்கொண்டு படையினரின்ட பகுதிநோக்கி நகர்ந்தோம்  என்று குறிப்பிட்டு மீண்டும் அமைதியானார்.

அந்த அமைதிக்கு பின்னால் அத்தனை சோகம் இருந்தது. அவரின் நகர்வின்போது ஆங்காங்கே மரணத்திதவர்களின் உடலங்கள், வீதிகளில், வாகனங்களில் குற்றுயிர்களாக இருந்தவர்கள், காயமடைந்தவர்கள் என்று ஆயிரக்கணக்கானவர்கள் காணப்பட்டதாக கூறிய அவர் தனது சகோதரர்களை கையில் தாங்கியவாறு ஏனையவர்கள் உதவிகளை கேட்டபோதும் அவர்களுக்கு எதனையும் செய்ய முடியாத துரதிஷ்டவசமான நிலையில் கடந்த செல்ல வேண்டியேற்பட்டதாகவும் அந்த காட்சிகளை வார்த்தைகளால் விபரிக்க முடியாதென்று கனத்த நெஞ்சத்துடன் குறிப்பிட்டார்.

P05.jpg

 

பின்னர், 17ஆம் திகதி படையினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிபிரயோகம் நடந்துகொண்டிருக்கும்போது நாங்கள் படையினரின்ர பகுதிக்குள்ளே 2மணி போல சென்று விட்டோம். நாங்கள் படையினரின்ர பகுதிக்குள்ளே நுழைகின்றபோது எங்களுக்கு குடிக்கிறத்துக்கு தண்ணீரை வாளிகளில வைத்துவிட்டு அள்ளிக்குடிப்பதற்கு எறிகணைகளின் கோதுகளை தான் வைத்திருந்தவை

அவர்களின்ட கட்டுப்பாட்டுக்குள்ள முழுசாய் போன பிறகு எங்கள வட்டுவாகல் பாலத்தின் மற்றைய கரைக்கு கொண்டு சென்று விடுதலைப்புலிகளில் யார் யார் இருந்தீர்கள் என்று விசாரணைக்கு உட்படுத்தி அதில் வேறுபடுத்தல்களைச் செய்தார்கள்.

பிறகு நாலுபக்கமும் முள்ளுக்கம்பி வேலிக்குள்ளை எங்களை அடைத்து வைத்தார்கள். அதுக்குள்ளே இலட்சக்கணக்கான மக்கள் இருந்தார்கள். அன்று இரவு, இலேசான மழைத்துறலுடன் பரந்த வெளியிலே கழிந்தது  என்று அவர் குறிப்பிட்டார்.

p06.jpg


மே-18 காலை புலர்கின்றது. பசி வையித்தைக் கிள்ளவும் தண்ணீரையாவது பிடிக்கலாம் எண்டு நினைச்சுக்கொண்டு அந்த பரந்த வெளியைச் சுத்தி வைக்கப்பட்டிருந்த முள்ளுக்கம்பிக்கு அருகில சென்று தேடிக்கொண்டிருந்தபோது தகர கொட்டகையொன்று இருந்தது

அதனை உற்றுப் பார்த்தபோது, அருட்தந்தை ஜோசப் பிரான்ஸிஸ் நின்றுகொண்டிருந்தார். அவரை முன்னரேயே அறிந்திருந்தமையால் அவருடன் சற்று பேசினேன். அப்போது போராளிகளை அழைத்துக்கொண்டு இராணுவத்திடம் செல்லப்போவதாக சொன்னார்.

எட்டிப்பார்த்தேன், நான் முகமறிந்த போராளிகளான, புதுவை அண்ண, எழிலன் அண்ண, மணலாறுமாவட்ட தளபதி சித்திரங்கன் அண்ண, விளையாட்டுத்துறை பொறுப்பாளரான இன்பண்ண என்று இருந்தவை. படையினரிட்ட தாங்கள் போவதற்கு துணையாகத்தான் பாதரை கூட்டிக்கொண்டு போறதாக சொன்னார்கள்.

p07.jpg


அன்று ஒரு எட்டு மணியிருக்கும், வாகனங்களில் சில படைஅதிகாரிகள் வந்தார்கள். பாதருடன் ஆங்கிலத்தில் உரையாடினார்கள். அதில் வந்த அதிகாரியொருவர் இப்போது இராணுவத்தில உயர் பதவியில இருக்கின்றார்.

அதுக்கு பிறகு பாதரோட ஒரு 50 முதல் 55போராளிகள் பஸ் ஒன்றில ஏற்றினார்கள். அதனை நான் நேரில் கண்டிருந்தேன்...

அதுக்கு பிறக்கு என்ன நடந்தது எண்டு எங்களுக்கு தெரியாது. எங்களுடைய பொழுதுகள் பஸ்ஸிலையும், வீதிகளிலையும் போனது. வட்டுவாகலில இரந்து ஓமந்தைக்கு வர இரண்டு நாட்களானது. அதுவரைக்கும் பஸ்ஸிலேயே இருந்தோம்...

22 ஆம் திகதி ஆனந்தகுமராசுமவாமி இடைந்தங்கல் முகாமுக்கு நாங்கள் வந்து சேர்ந்தம். எல்லாம் முடிந்து விட்டது. பிறகு மீள்குடியேற்றத்தின்ர பெயரால

சொந்த இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டோம். அதில் ஒரு நிம்மதி என்றார் ஒரு நீண்ட பெருமூச்சுடன்.

p09.jpg


முல்லையிலிருந்து முள்ளிவாய்கால் ஊடாக வெளியேறிய ஒவ்வொருவரினதும் அனுபங்களுக்குள் ஆயிரமாயிரம் வலிகளும், வேதனைகளும் உறைந்திருக்கின்றன என்பதற்கு இதுவே சாட்சியமாகின்றது.

இவ்வாறு ஆயிரமாயிரம் சாட்சியங்கள் உள்ளன. ரணமான வடுக்களை சுமந்து கொண்டிருக்கும் நேரடிச் சாட்சியங்களின் மனதிலிருக்கும் ஒரே கேள்வி, நாம் நேரில் கண்ட அநீதிகளுக்கு நீதி கிட்டுமா என்பதே??

https://www.virakesari.lk/article/82232

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.