Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதரிடம் கையேந்துகிறவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்புக் கட்டுரை: மனிதரிடம் கையேந்துகிறவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

spacer.png

அ. குமரேசன்

மனதைத் தொடும் மனிதநேயச் செயல்பாடுகள் தொடர்பான பல செய்திகள் கொரோனா காலத்தில் வருகின்றன. அத்தகைய ஒரு செய்தி மனதைத் தொட்டதுடன், சம்பந்தப்பட்டவரின் செயல்பாடு குறித்த விரிவான சிந்தனைக்கு இட்டுச் சென்றது. தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி (66) என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கொரோனா தடுப்புப் பணிகளுக்காகப் பத்தாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கியிருக்கிறார். பலரும் நிதியுதவி செய்கிறார்கள், இதைவிடப் பெரிய தொகை வழங்குகிறார்கள் என்றாலும் இந்தச் செய்தி ஏன் மனதைத் தொடுகிறது என்றால், பாண்டி அந்தத் தொகையைப் பிச்சை எடுத்துத் திரட்டி வழங்கியிருக்கிறார்!

செய்தியைப் பின்தொடர்ந்தபோது, அவர் இதையே பிழைப்பாக வைத்திருக்கிறார் - அதாவது பிச்சையெடுத்துக் கிடைக்கிற வருவாயிலிருந்து இப்படிப்பட்ட உதவிகளைச் செய்து வருகிறார் - என்று தெரியவந்தது. குறிப்பாக அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான பொருள்களை வழங்குகிறார். அண்மையில் கூட குமரி மாவட்டத்தில் மூன்று பள்ளிகளுக்குக் குடிநீர் சுத்திகரிப்புக் கருவிகளை நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார்.

 

வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் அவர். 10 ஆண்டுகளுக்கு முன் இணையர் இறந்துவிட, அந்தத் துயரத்தாலும், உறவினர்களோடு ஏற்பட்ட மனவருத்தங்களாலும் வீட்டை விட்டு வெளியேறி, திருச்செந்தூர் கோவிலருகில் பிச்சையெடுத்துப் பசியாற்றியிருக்கிறார். பிச்சையில் தான் எதிர்பார்த்ததைவிட அதிகப் பணம் கிடைத்த நிலையில், அதைப் பயனுள்ள வகையில் செலவிடக் கருதி, அரசுப் பள்ளிகளுக்கு தேவையான உதவிகளை செய்வது என்று முடிவு செய்தாராம். மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளைச் சந்தித்து எந்தப் பள்ளிக்கு என்ன உதவி தேவை என விசாரித்தறிந்து அதை வாங்குவதற்கான நிதிக்காக அந்தந்த வட்டாரங்களிலேயே மக்களிடம் பிச்சையெடுக்கத் தொடங்கிவிடுவாராம். தேவையான தொகை சேர்ந்ததும் புதிய பொருட்களை வாங்கி பள்ளிக்குச் சென்று அதிகாரிகள் முன்னிலையில் ஒப்படைத்துவிடுவாராம்.

தொடர்கதையில் மூன்றுவகை

இரந்துண்டு வாழ்கிற வாழ்க்கை தாழ்வானது, மானக்கேடானது என்றுதான் காலங்காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. ஆயினும் காலங்காலமாகப் பிச்சை தொடர்கிறது. பொதுவாகப் பிச்சையில் மூன்று வகையினர் இருக்கிறார்கள். வாய்ப்பு வாசல்கள் அனைத்தும் அடைக்கப்பட்ட நிலையில் வறுமைக் கொடுமையால் கையேந்துகிறவர்கள், உழைத்து உண்பதற்குத் தயாராக இல்லாத சோம்பேறிகளாகப் பிச்சையில் சுறுசுறுப்புடன் ஈடுபடுகிறவர்கள், குற்றக் கும்பல்களால் அடித்துமிரட்டி, உடல் அங்கங்களைச் சிதைத்துப் பிச்சையில் இறக்கிவிடப்படுகிறவர்கள்.

இந்த மூன்று வகையினரையுமே நம் வீட்டு வாசலில் வந்து அம்மா தாயே என்று குரல்கொடுப்பவர்களாக, சாலையோரத்தில் கால்கள் பெருத்தும் கைகள் சூம்பியும் அமர்ந்திருப்பவர்களாக, வழிபாட்டுத் தலங்களில் வழிமறிக்கிறவர்களாக, சுற்றுலா மையங்களில் சுற்றி வருகிறவர்களாக, நகரங்களின் போக்குவரத்து விளக்கடிச் சந்திப்புகளில் வண்டிகளின் சன்னல்களுக்கு வெளியே ஏக்கத்தோடு நிற்பவர்களாகப் பார்க்கலாம்.

 

பகல்நேர ரயில் பயணங்களில் கண்டிப்பாக இவர்களைக் காணலாம். சிலர் நேரடியாகக் கை நீட்டி வருவார்கள். சிலர் பாட்டுப் பாடி சில்லரைப் பாத்திரத்தைக் குலுக்கியபடி வருவார்கள். சிலர் இசைக்கருவிகளோடு வருவார்கள். சிறிய ஒலிபெருக்கிக் கருவிகளை ஏந்தியபடி வருகிறவர்களும் உண்டு. சிலர் உண்மையிலேயே ரசிக்கத்தக்க வகையில் பாடுவார்கள், புல்லாங்குழல் போன்றவற்றை இனிமையாக இசைப்பார்கள். அதற்காகவேப் பலர் விரும்பிக் காசுகளைப் போடுவார்கள்.

முன்பு அலுவலகத்திற்குப் புறநகர் ரயில்களில் வந்துசென்ற நாட்களில் இப்படிப்பட்டவர்களைத் தினமும் கவனித்திருக்கிறேன். அப்போது சக பயணி ஒருவர் “இன்ஸ்ட்ரூமென்டு, மைக்கு, ஸ்பீக்கர்னு ஷோ காட்டுறாங்க. எடுக்கிறதென்னவோ பிச்சைதானே,” என்று முகச்சுளிப்புடன் கூறினார். “ஏன் சார், பெரிய சபாக்கள்லேயும் ஸ்டேடியத்திலேயும் டிக்கட் போட்டு வசூல் பண்ணி, நவீன ஒலி ஒளி ஏற்பாடுகளோடு பாடுறதைப் பிச்சைன்னுதான் சொல்வீங்களா,” என்று நான் கேட்டேன். அவர் மௌனமாகி விட்டார். பின்னொரு நாளில், பார்வையற்ற பட்டதாரிகள் சங்க ஆண்டுவிழாப் பட்டிமன்றத்தில் இரு அணிகளிலும் அவர்களே வாதாட, நான் நடுவராகப் பங்கேற்று இந்த உரையாடலை நினைவுகூர்ந்தபோது, அது அவர்களது மௌனத்தை உடைத்துப் பல நிமிடங்கள் கைத்தட்டலாகவும் விசிலாகவும் ஒலிக்க வைத்தது.

நாணயம் கீழே விழுகிறபோது…

உங்கள் ரயில் பயணங்களில் கைத்தட்டியபடி வந்து நிற்கிற மாறுபாலினத்தவர்களைக் கண்டிப்பாகப் பார்த்திருப்பீர்கள். காசு தருகிறவர்களின் தலையில் கைவைத்து ஆசி வழங்கிவிட்டுப் போவார்கள். இந்த நிலைமைக்குத் தள்ளிய குடும்பம், சமூகம், அரசாங்கம் ஆகியற்றை விட்டுவிட்டு அவர்களைச் சோம்பேறிகள் என்று சொல்வது ஒரு வக்கிரமென்றே சொல்லலாம். அண்மைக்காலமாகத்தானே அவர்களுக்கான அங்கீகாரங்களும், பாதுகாப்புகளும் ஓரளவுக்காவது வந்திருக்கின்றன? இந்த ஓரளவு மாற்றங்களுக்கே அவர்கள் எவ்வளவு போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது! மத்திய அரசு கொண்டுவந்த ஒரு சட்டமுன்வரைவு அவர்கள் பிச்சையெடுப்பதைக் குற்றமென்று சொல்லிக் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளது.

கூட்டமாக இல்லாமல் தனியாகப் பிச்சையெடுக்கிற பெண்களைப் பார்க்க முடியும். அவர்கள் ஆகப் பெரும்பாலும் கணவனின் சித்திரவதை, குடும்பத்தார் பாராமுகம், சுற்றத்தார் கைவிரிப்பு, மீளவே முடியாத வறுமை போன்ற காரணங்களால் வீதிக்கு வந்தவர்கள்தான் என்று பதிவு செய்திருக்கிறார் ஆய்வாளர் உஷா ராமநாதன். தில்லியைச் சேர்ந்தவரான அவர் வறுமையும் சட்டமும் தொடர்பான தனது ஆய்வுக் கட்டுரையில் இதுபற்றி விரிவாக எடுத்துரைத்திருக்கிறார்.

 

எழுத்தாளர் சு. சமுத்திரம் எழுதிய ‘கீழே விழும் நாணயங்கள்’ என்ற சிறுகதை நினைவுக்கு வருகிறது. கணவனால் பணத்திற்காகப் பெற்றோர் வீட்டுக்குத் திரும்பத் திரும்ப விரட்டப்படும் ஒரு பெண் கடைசியில் ஏதோவொரு கோயில் தெருவில் தரையில் உட்கார்வதோடும், அவளுடைய தட்டில் நாணயங்கள் விழுவதோடும் முடியும். இதில் சோம்பேறி யார்? அந்தப் பெண்ணா, அவளுடைய கணவனா?

என்கரேஜ் பண்ணலாமா?

ஆனாலும், “இவங்களையெல்லாம் என்கரேஜ் பண்ணக் கூடாது. பிச்சை போடுறவுங்க இருக்கிற வரைக்கும் , பிச்சை எடுக்கிறவங்களும் இருப்பாங்க. என்னதான் சட்டம் கொண்டுவந்தாலும், மறுவாழ்வு இல்லம் ஏற்படுத்தினாலும் இவங்க திருந்த மாட்டேங்கிறாங்களே...’’ என்ற பேச்சுகளும் எழுத்துகளும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. பிச்சையில் ஈடுபடுகிறவர்கள் எல்லோருமே உழைக்கத் தயாராக இல்லாதவர்கள், மக்களின் பரிவுணர்வைப் பயன்படுத்தி உடல் நோகாமல் சம்பாதிக்கிறவர்கள், பிச்சையெடுத்தே பணக்காரர்களாக வாழகிறவர்களும் இருக்கிறார்கள் என்று பொதுப்புத்தியில் ஏற்றப்பட்ட எண்ணத்திலிருந்தே இப்படிப்பட்ட கருத்துகள் கூறப்படுகின்றன.

அதிலும் குழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டு பிச்சை எடுப்பவர்களை நம்பவே முடியாது, இதற்காகக் குழந்தைகளை வாடகைக்கு எடுக்கிறவர்களும் வாடகைக்கு விடுகிறவர்களும் இருக்கிறார்கள், பசியால் வாடிக்கிடப்பது போலக் காட்டுவதற்காகக் குழந்தைக்குப் போதை மருந்து கொடுத்து மயக்க நிலையில் வைத்திருக்கிற காட்சி காட்டப்படுகிறது. குற்றக் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் குழந்தைகளைக் கடத்தி, ஈவிரக்கமின்றி அவர்களின் அங்கங்களைச் சிதைத்துத் தெருவில் இறக்கிவிடுகிற கொடுமையும் சுட்டிக்காட்டப்படுகிறது.

 

ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 50,000 குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். அவர்களில் 10,000 பேர் வீடு திரும்புவதே இல்லை, அவர்கள் என்ன ஆனார்கள் என்று கண்டுபிடிக்க முடிவதில்லை என்று ஒரு தொண்டு நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் குழந்தை கடத்தல், வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கடத்தல் என்றெல்லாம் வருகிற செய்திகளில் பின்னணியில் இப்படிப்பட்ட கொடூரக் கும்பல்கள் இருக்கின்றன.

அகராதியும் சட்டமும்

நாடு முழுவதும் 5 லட்சம் பேர் பிச்சை எடுக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. ஆயினும் அது துல்லியமான கணக்கெடுப்பாக இருக்குமென்று சொல்வதற்கில்லை. ஏனெனில் பிச்சை என்பதற்கு அகராதியில் விளக்கம் இருக்கிறதேயன்றி, முழுமையான சட்டப்பூர்வ வரையறுப்புகள் இல்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்தியாவில் 20 மாநிலங்களில் பிச்சை எடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளபோதிலும் அந்த மாநிலங்களில் கூட அது தொடர்கிறது. அமெரிக்காவில் பிச்சை கேட்பதைக் குற்றமாக அறிவிக்கும் சட்டம் வந்தபோது, அது வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு எதிரானது என்று கூறி நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக ஒரு செய்தி உண்டு.

சிந்தித்துப் பார்த்தால், பிச்சைக்குக் காரணமான வறுமையையும், குற்றக் கும்பல்களுக்குத் தோதான நிலைமையையும் ஒழிக்க வழி செய்யாமல், பிச்சையை ஒழிக்கச் சட்டம் போடுவது கொள்கை உறுதியற்ற கையாலாகாத்தனம் என்றே சொல்லவேண்டும்.

பண்பாட்டுப் பின்புலம்

பிச்சையை வரையறுக்க முடியாமலிருக்கிறது என்று பார்த்தோமல்லவா? அதற்கு மரபு சார்ந்த, பண்பாட்டுப் பின்புலம் ஒரு முக்கியக் காரணம். துறவிகள், ஆன்மீகக் குருமார்கள், சமய வழிகாட்டிகள் போன்றோர் மீது பெரும் மதிப்பு வைத்திருப்பவர்கள் மக்கள். எல்லா மாநிலங்களிலும், எல்லாக் காலங்களிலும் அந்த மக்கள் இருந்து வந்திருக்கிறார்கள். விதிவிலக்காக சமுதாயத் தொண்டாற்றிய சிலரைத் தவிர, மற்றவர்களெல்லாம் உண்மையிலேயே எதிலும் ஒட்டாத துறவிகளாக இருந்தார்களா, அரசியல் சித்துவிளையாட்டுகளில் இறங்காமல் விட்டார்களா, மக்களிடையே அறியாமையை வளர்க்கத் தவறினார்களா என்ற கேள்விகளைத் தவிர்க்க முடியாதுதான். ஆயினும் அவர்கள் மீது மக்கள் கொண்டிருந்த மரியாதையைக் குறைத்து மதிப்பிட்டுவிடவும் முடியாது.

அந்த மரியாதையின் பின்னணியில் இருக்கிற முக்கியமானதொரு காரணம், அவர்கள் தங்களுடைய தேவைகளுக்காகச் சொத்து எதுவும் வைத்துக்கொள்ளாமல் மக்களிடம் வந்தார்கள் என்பதுதான். செல்வம் குவிக்கக்கூடாது, பணம் சேர்க்கக்கூடாது, வசதியான வாழ்க்கையை நாடக்கூடாது என்ற கோட்பாடுகளைக் கொண்டிருந்தவர்கள் அவர்கள். இன்றைக்கு நாம் காணக்கூடிய, ஆன்மீகத்தின் பெயராலும் மக்களின் நம்பிக்கைகளைப் பயன்படுத்திக்கொண்டும் நிலங்களையும் வளங்களையும் வளைத்துப்போட்டு சகல நவீன வசதிகளோடும் வலம் வருகிறவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் குழப்பிக்கொள்ள வேண்டாம். இங்கே நாம் பேசுவது உண்மையாகவே தங்களின் போதனைகளுக்குத் தகுதி உள்ளவர்களாக வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொண்டவர்கள் பற்றித்தான்.

 

உணவுக்காக மட்டுமே அவர்கள் கையேந்தியது பிச்சையல்ல, யாசகம். குறிப்பாக, வைதீகச் சமயவாதிகளால் நியாயப்படுத்தப்பட்ட சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான இயக்கங்களாகவே புறப்பட்ட புத்தர், மகாவீர் போன்ற தலைமைக் குருமார்கள் இத்தகைய வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டவர்கள்தான். அன்று, எந்தச் சமயத்தினரானாலும் இப்படிப்பட்ட தன்னலம் கருதாத குருமார்களுக்கு உணவளிப்பதும் பணிவிடைகள் செய்வதையும் மக்கள் தங்களுடைய கடமையாகவே கருதினார்கள். அந்தக் கடமையை நிறைவேற்றுவது தங்களுக்குப் புண்ணியம் சேர்க்கும் என்று நம்பினார்கள்.

இன்று தங்கள் முன் ஏந்தி நீளும் கைகளில் பரிவுணர்வோடு மனம் கசிந்து காசு போடுகிறவர்கள் ஒரு பகுதியினர்தான். மற்றவர்கள் புண்ணியக் கணக்குக்காகச் செய்கிறவர்கள்தான். இவ்வாறு தலைமுறை தலைமுறையாக வளர்ந்து வந்துள்ள சமூக உளவியல் சம்பந்தப்பட்ட செயலை வெறும் சட்ட நடவடிக்கைகளால் எப்படித் தடுக்க முடியும்? தங்களுடைய சுகபோகத்திற்காகக் குழந்தைகளைக் கடத்துகிறவர்கள், அங்கங்களைச் சிதைத்துத் தெருவில் இறக்கி விடுகிறவர்கள் போன்றோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதும் உரிய தண்டனைகளை உறுதிப்படுத்துவதும் தொடர வேண்டும். மற்றபடி, அடிப்படையான வாழ்க்கை நிலைமைகளை மாற்றிய, அறிவியல்பூர்வமான சமத்துவச் சமுதாயம் உருவாகிற வரையில் இந்த சமூக உளவியல் தொடரவே செய்யும்.

சமூகமாகவே பிச்சையெடுப்போர்

சில ஆண்டுகளுக்கு முன் மாறுபட்டதொரு குழந்தைகள் இல்லம் பற்றிக் கேள்விப்பட்டுச் செய்தியாக்குவதற்காகச் சென்றேன். அந்தக் குழந்தைகள், பிச்சை எடுப்பதையே வாழ்வாதாரமாகக் கொண்ட ஒரு நாடோடிச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிந்து அதிர்ந்து போனேன். மற்றவர்கள் தங்களை அவமதிப்பது பற்றியெல்லாம் கவலைப்படாதவர்கள் அந்தச் சமூகத்தினர். பிச்சையெடுத்து வாழ்வது ஒரு தாழ்வான வாழ்க்கை என்ற சிந்தனையே இல்லாதவர்களான அவர்களுக்கு இருந்த ஒரே குழப்பம், ஏன் திடீர்த்திடீரென்று அதிகாரிகள் வந்து கெடுபிடி செய்கிறார்கள் என்பதுதான். பெற்றோர்களிடம் திரும்பத்திரும்பப் பேசிய பிறகுதான் தங்கள் குழந்தைகளை அந்த இல்லத்திற்கு அனுப்ப ஒப்புக்கொண்டார்கள் என்று அமைப்பாளர்கள் தெரிவித்தார்கள்.

இப்படிப்பட்ட சமூகங்கள் எத்தனை இருக்கின்றன? இத்தகைய இல்லங்கள் எத்தனை இருக்கின்றன? இவர்களுக்கு உதவவும், வழிகாட்டவும் அரசாங்க அமைப்புகள் இருக்கின்றனவா? நிறையவே விசாரித்தறிய வேண்டியுள்ளது.

 

குடியிருக்கும் தெருவுக்குள் ஒலிபெருக்கி கட்டப்பட்ட மூன்று சக்கர மோட்டார் வண்டி ஒன்று இந்தி மொழிப் பக்திப் பாடலை ஒலிபரப்பியபடி வருகிறது. அதன் முன் பக்கத்தில் கடவுள் படம் பெரிதாக வைக்கப்பட்டிருக்கிறது. கணவன் வண்டியை ஓட்டி வர, மனைவி ஒவ்வொரு வீட்டின் வாசலுக்கும் செல்கிறார். சிலர் அந்தப் படத்தை வணங்கியபடி பணம் அல்லது தானியம் தருகிறார்கள். சிலர் வீட்டைவிட்டு நகர்ந்தால் சரி என்று காசு தருகிறார்கள். பலர் இவர்களைப் பொருட்டாகவே கருதாமல் நகர்கிறார்கள். சென்னையில் ஒரு ஒதுக்குப்புறமான திறந்தவெளியில் ஒரு சமூகமாகவே கூடாரங்கள் அமைத்துக் குடியிருக்கிற, காலையில் எழுந்து வண்டியைத் துடைத்துப், படத்திற்குப் பூமாலை அணிவித்துப் புறப்படுகிற இவர்களை எந்த வரிசையில் சேர்ப்பது? பக்தியைப் பயன்படுத்தும் பிச்சையா அல்லது நடமாடும் ஆன்மீக சேவை யாசகமா? இவர்களுடைய குழந்தைகள் இன்று என்ன செய்கிறார்கள், நாளை என்ன செய்வார்கள்?

அய்யோ பாவம் என்றோ, உடல் நோகாச் சோம்பேறிகள் என்றோ, குற்றக் கும்பல் என்றோ ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட முடியாத கேள்விகள் நிறைய இருக்கின்றன. ஆனால் சரியான பதில்களும், ஆரோக்கியமான தீர்வுகளும் கிடைத்தாக வேண்டும். அதுவரையில் சமுதாயத்தில் ஒரு பிரிவினர் இப்படித்தான் பிழைக்கிறார்கள் என்றால், அதற்கு ஏதோ ஒரு வகையில் நாமும் பொறுப்பு என்ற உணர்வோடு உதவியாக வேண்டும்.

சரி, யாருக்கு உதவுவது, யாரைக் கண்டுகொள்ளாமல் விடுவது? நம் முகத்தின் முன்னால் நீள்கிற உள்ளங்கைகளைப் பார்க்கிற அந்தக் கணத்தில் ஏற்படும் உணர்வு சார்ந்து முடிவெடுக்கலாம். எனது ரயில் பயணங்களில் ஒரு பழக்கம் வைத்திருக்கிறேன். பொதுவாக அந்தக் கைகளில் சில்லறைகளைப் போடுவேன் என்றாலும், சாமிப்பாட்டு பாடியபடி வருகிறவர்களைத் தவிர்த்துவிடுவேன். அந்தக் கடவுள் காப்பாற்றுவாரென்றால் என்னிடம் ஏன் வருகிறாய் என்று மனதில் எண்ணம் ஓடும். இது நியாயமற்ற அணுகுமுறையாக இருக்கலாம் என்றாலும் சில பழக்கங்கள் நம்மை விடுவதில்லை என்பது போல இது என்னோடு ஒட்டிக்கொண்டுவிட்டது!

பிச்சையெடுப்போரை நகர அழகின் உறுத்தலாகப் பார்க்காமல், பிச்சையெடுக்கும் அவலம் நீடிப்பதை அரசு/சமூக லட்சணத்தின் உறுத்தலாகப் பார்க்கிற புரிதல் பொதுப்புத்தியாக மாறுவதில் இருக்கிறது தீர்வு.
 

https://minnambalam.com/public/2020/05/26/15/what-do-you-think-about-beggars-in-streets-special-article-by-akumarasen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.