Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிஸ்டல் காய் மேஜர் சுவர்ணன்.!

Last updated May 28, 2020

29.05.2000 அன்று  மன்னார் தீவு பகுதியில் படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு தழுவிய மேஜர் சுவர்ணன்  ஆகிய  மாவீரரின்    20 ம் ஆண்டு  வீரவணக்க நாள் இன்றாகும்


ஓயாத அலைகள் – 3 என்ற பெயரில் விடுதலைப் புலிகள் பெரும் தொடர்ச்சமரொன்றை சிறிலங்கா அரசபடைகளின் மேல் தொடுத்திருந்த நேரமது. 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதத் தொடக்கநாளில் வன்னிக் காடுகளில் சுழன்றடிக்கத் தொடங்கிய ஓயாத அலைகள் இப்போது யாழ்ப்பாணப் பக்கத்தை நோக்கித் திரும்பியிருந்தது. அதன் முதற்கட்டமாக கட்டைக்காடு – வெற்றிலைக்கேணிக் கடற்கரைகளைக் கைப்பற்றிய நிலையில் யாழ் சாலையில் நெஞ்சை நிமிர்த்தியிருந்த பரந்தன் படைத்தளத்தையும் புலிகள் கைப்பற்றி, அடுத்த கட்ட நகர்வுக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்த நேரம். இப்போது உமையாள்புரம் இராணுவ முகாமைச் சூழ அவ்வப்போது ‘சில்லறைச் சண்டைகள்’ மூண்டு தணிந்து கொண்டிருந்தன.

ஒருநாள் இரவு உமையாள்புரத்தில் புலிகளின் தாக்குதலணியொன்று எதிரி மீதான திகைப்புத்தாக்குலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. அவ்விடத்தில் நிலைகொண்டிருந்த இம்ரான் பாண்டியன் படையணியைச் சேர்ந்த மேஜர் சங்கர் தலைமையிலான ஒரு கொம்பனியே அந்தத் தாக்குதலுக்கான ஆயத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அது பெருமெடுப்பான நிலமீட்புத் தாக்குதலில்லை. எதிரிகள் சிலரைக் கடுமையான காயத்துக்குள்ளாக்கும் நோக்கத்தோடு நடத்தப்படும் தாக்குதல். இவை யாவும் சுவர்ணன் தலைமையிலான அணியொன்றை மையமாக வைத்துத்தான் நடத்தப்படுகிறது. இந்தத் தாக்குதல் திட்டம் நடைபெறப்போகும் நேரத்தில் சுவர்ணன் தனது அணியோடும் ‘பொருளோடும்’ இராணுவத்தின் முன்னணி நிலைகளைக் கடந்து தென்மராட்சிப் பகுதியில் நிலைகொண்டிருந்தான்.

Maj-Suvarnan.jpg1996 ஆம் ஆண்டு ஆனிமாதத்தின் நடுப்பகுதியில் ஒருநாள். வன்னிக் காட்டுப்பகுதியில் ஓரிடத்தில் நாங்கள் மும்முரமாக வேலை செய்துகொண்டிருக்கிறோம். வேறிடத்திலிருந்து கழற்றப்பட்டுக் கொண்டுவரப்பட்டிருந்த லக்சபானா மின்கோபுரமொன்றை காட்டுக்குள் ஓரிடத்தில் மீளப் பூட்டும் வேலைதான் அது. அதற்கான கற்றூணை நிலத்துள் நாட்டும் வேலை நடந்துகொண்டிருக்கிறது. ஆழக்கிண்டிய கிடங்கில் கற்றூணை இறக்கிவிட்டோம். இனி நிமித்திவைத்து மண்போட்டு மூடவேண்டும். கல்லோ தொன் கணக்கில் நிறையுடையது. மூன்றுபக்கமிருந்து கேபிள்கள் போட்டு இழுத்து நிமிர்த்திவைத்திருக்க ஒருவர் தூணில் கேடர்கள் பொருத்தி நிலைப்படுத்த வேண்டும். அதன்படி நாங்கள் மூன்றுபக்கமிருந்து இழுத்து தூணை நிமிர்த்திவிட்டநிலையில் கேடரைப் பூட்ட வேண்டிய சுவர்ணன் அதைச் செய்யாமல் எங்கோ பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தான். தூணை இழுத்து வைத்துக் கொண்டிருப்பவர்களுக்குக் கைகடுத்தது.

“டேய் சுவர்ணன்! என்ன மிலாந்திக் கொண்டிருக்கிறாய்? கெதியா கேடரைப் பூட்டு” இது ரகுவண்ணா.

“சுவர்ணன் மாஸ்டர் எண்டெல்லோ கூப்பிடச் சொன்னனான்? அப்பிடிக் கூப்பிட்டு வேலையைச் சொல்லுங்கோ, செய்யலாம்.” இது சுவர்ணன்.

“டேய்! ஆளப்பார் தேவாங்கு மாதிரி இருந்துகொண்டு மாஸ்டரோ?…. பகிடியை விட்டிட்டு கெதியாப் பூட்டடா, கை கடுக்குது” ஒருபக்கத்தில் கேபிளை இழுத்துப்பிடித்திருந்த மைந்தன் கத்துகிறான்.

சுவர்ணன் அசைவதாயில்லை. செங்கோல் பிடித்த மன்னன் போல ஒருகையில் கேடரைப்பிடித்தபடி மறுகையை இடுப்பில் வைத்தபடி ஒயிலாக ‘போஸ்’ கொடுத்துக் கொண்டிருந்தான். அவ்விடத்தில் வேறு ஆட்களுமில்லை. அடிக்கப் போவதென்றாலும் ஒருவர் கேபிளை விட்டுவிட்டுத்தான் போகவேண்டும்.

“சுவர்ணன் மாஸ்டர், அச்சா மாஸ்டரெல்லோ, ஒருக்கா கேடரைப் பூட்டிவிடுங்கோ மாஸ்டர்”… ஒருமுனையிலிருந்த குமுதன் கெஞ்சினான். அதன்பிறகுதான் சுவர்ணன் தனது வேலையைச் செய்தான். அன்றைய செயலுக்குப் பரிகாரமாக தேங்கிநின்ற சேற்றுநீரில் எங்களால் புரட்டியெடுக்கப்பட்டான்.

இப்படித்தான் இருப்பான் சுவர்ணன். எந்தநேரமும் ‘சீரியசாக’ பகிடி விட்டுக் கொண்டிருப்பான். தன்னை மாஸ்டர் என்றுதான் அழைக்க வேண்டுமென்று அடிப்படைப் பயிற்சி முடிந்து சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தொடங்கிய காலத்திலேயே கதைக்கத் தொடங்கிவிட்டான். உச்சிவெயிலில் வாட்டியெடுக்கப்பட்ட நிலையில் கொட்டிலுக்கு வந்தால் சுவர்ணனின் சேட்டைகள் இன்னும் கொதியைக் கிழப்பும். அதுவும் கோபம் உச்சத்துக்கு வரும்போது திக்கத் தொடங்கிவிடும் ரகுவண்ணாவை வேண்டுமென்றே அவன் படுத்தும்பாடு சொல்லி மாளாது. தன்னை மாஸ்டர் என்று சொல்லச் சொல்லிச் நச்சரிக்கும் எந்தவிடத்திலும் சிறுபுன்னகைகூட அவனிடம் வராது. புதிதாக அவனோடு பழகுபவர்கள் அவன் சீரியசாகவே கதைப்பதாக நினைத்துக் கொள்வார்கள். அவன் இருக்குமிடம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். ஆனால் சுவர்ணன் சிரிப்பதில்லை. எல்லாவற்றையும் சீரியசாகவே கதைத்துக் கொண்டிருப்பான்.

யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக் காட்டுக்குள் வந்த புதிதில் சுவர்ணின் அணி பட்டபாடு சொல்லி மாளாது. மிகக்கடுமையான வேலைகள் எமக்கிருந்தன. கிணறு வெட்டுவது, காட்டுக்குள் பாதைகள் போடுவது, தளம் அமைப்பது, பதுங்கு குழிகள் வெட்டுவது என்று மிகமிகக் கடுமையான வேலைகள். அந்தநேரத்தில் சுவர்ணன் செய்யும் சேட்டைகள் சம்பந்தப்பட்டவர்களை விட மற்றவர்கள் வயிறு குலுங்கிச் சிரிக்குமளவுக்கு இருக்கும்.

ஒருகட்டத்தில் எமது கொம்பனி மறுசீரமைக்கப்பட்டது. அப்போது புதிதாக 50 கலிபர் ஆயுதத்துக்கான எட்டுப் பேர் கொண்ட அணியொன்று உருவாக்கப்பட்டது. அதில் சுவர்ணனும் ஒருவன். இவ்வளவுநாளும் சுவர்ணன் வேறு அணியிலிருந்ததால் அவனது குறும்புகளை ரசித்துக் கொண்டிருந்த எமக்கு இப்போது அனுபவிக்க வேண்டியிருந்தது. அதிலொன்றுதான் மேற்சொன்ன கற்றூணை நிறுத்தும் வேலையின்போது நடந்தது. இதுபோல் ஏராளம் சம்பவங்களுள்ளன. ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக ஏதாவது குறும்பு செய்துகொண்டிருப்பான். அவனது ‘மாஸ்டர்’ பம்பல் எத்தனை மாதமானாலும், எத்தனை தடவைகள் திரும்பத் திரும்ப நடந்தாலும் ஒவ்வொரு முறையும் மறக்க முடியாத நினைவாகவே பதிந்துவிடும்.

50 கலிபர் அணி தேர்வு செய்யப்பட்டு விட்டது என்றாலும் எமக்கான ஆயுதம் வழங்கப்படவில்லை. சும்மா ‘கலிபர் ரீம்’ என்ற பேரில் அலைந்துகொண்டிருந்தோம். உண்மையில் அது கனரக ஆயுதங்களுக்கான பிரிப்பாக இருக்கவில்லை, கனரக வேலைகளுக்கான அணிப்பிரிப்பாகவே அமைந்துவிட்டது. வேலைகள் பங்கிடப்படும்போது ஆகக்கடுமையாக வேலைகளே எமது 50 கலிபர் அணிக்கு வழங்கப்படும். அந்த வழியே வந்ததுதான் ரவர் பூட்டும் வேலையும். ‘உவங்கள் கலிபர் ஒண்டும் தரப்போறேல. உது சும்மா மடார் வேலை செய்யிறதுக்கு ஒரு ரீம் தேவையெண்டதுக்காக பிரிச்சதுதான்’ என்று எமக்குள் பம்பலாகப் பேசிக் கொள்வோம். இந்த ‘மடார்’ வேலைகளைச் செய்யும் அணியில் சுவர்ணன் இருப்பது எப்பேர்ப்பட்ட விளைவு? பின்னாளில் GPMG ஆயுதத்துக்கென ஓரணி பிரிக்கப்பட்டபோது அதிகம் மகிழ்ந்தது நாம்தான். எமது கொம்பனிக்கு நல்லதொரு கனரக ஆயுதம் கிடைக்கிறது என்பதற்காகவன்று, எமது சுமைகளைப் பங்கிட இன்னோர் அணி வந்த மகிழ்ச்சியே அது. எமது கலிபர் அணிக்கான கடின வேலைகள் அவர்களோடும் பங்கிடப்பட்டன.

சுவர்ணின் நகைச்சுவையுணர்வு அலாதியானது. எமது கொம்பனியிலிருந்த அணிகள் காட்டுக்குள்ளிருந்த தளத்திலேயே தனித்தனிக் கொட்டில்களில் தங்கியிருக்க, எமது 50 கலிபர் அணி சற்றுத்தள்ளி வெட்டைக்கு அண்மையாகத் தங்கியிருந்தது. அதிகதூரம் எம்மை நடக்கவைத்த கடுப்பு எமக்குள் இருந்தது. ‘கலிபரைத் தந்திட்டு வெட்டைக்குப் பக்கத்தில விட்டாலும் அதில விசயமிருக்கு. இது சும்மா பேருக்கு ஒரு ரீமை வைச்சுக்கொண்டு வெட்டைக்குப் பக்கத்தில இருங்கோ எண்டா என்ன நியாயம்?’ என்று சுவர்ணன் பேசிக்கொண்டிருப்பான்.

அதுவரை அணியின் பெயரில் மட்டுமே கொண்டிருந்த கலிபர் ஒருநாள் இரவில் எமது கொட்டிலுக்கு வந்தது. அதற்கு முன்பு நாங்கள் 50 கலிபர் பார்த்திருக்கிறோம். அமைப்பில் இணையமுன்பும் பார்த்திருக்கிறோம், இணைந்தபின்னரும் பார்த்திருக்கிறோம். சிறப்புப் பயற்சி பெற்ற தளத்தில் 50 கலிபர் அணியொன்றும் பிறிம்பாகப் பயிற்சியெடுத்துக் கொண்டிருந்தது. அப்போது இன்னும் நெருக்கமாக அவ்வாயுதத்தை அறிந்திருக்கிறோம். தூக்கிப் பார்த்திருக்கிறோம். அதுவரை நாம் பார்த்ததெல்லாம் பெல்ஜியத் தயாரிப்பான 50 கலிபர் ஆயுதம். நல்ல உருப்படி. நல்ல நிறையும்கூட. அதைத் தூக்குவதற்கும் இயக்குவதற்கும் மிகுந்த உடற்பலமும் பயற்சியும் தேவை. ஆயுதத்தைப் பார்த்தாலே ஒரு பயமும் மதிப்பும் தோன்றும். அதை இயக்குபவர்களை வித்தியாசமாகப் பார்க்கத் தோன்றும்.

ஆனால் இப்போது எமக்குத் தரப்பட்டிருப்பது அப்படிப்பட்ட ஆயுதமில்லை. அதை 50 கலிபர் என்று சொன்னபோது சிரிப்புத்தான் முதலில் வந்தது. 50 கலிபர் ஆயுதத்துக்கென எமது மனதிலிருந்த விம்பம் இவ்வாயுதத்தோடு பொருந்தவில்லை. இது மிகவும் நிறைகுறைந்த, ஒல்லியான ஓர் ஆயுதம். சீனநாட்டுத் தயாரிப்பு. வந்தவர்கள் இறக்கிவைத்துவிட்டுப் போய்விட்டார்கள். நம்பமுடியாமல் குமுதன் குழல்விட்டத்தை அளந்தான். 12.7 mm வருகிறது, அப்போ சரிதான், இது 50 கலிபர் தான்.

முன்பு எம்மை ‘பிஸ்டல் காயாக’ எரிச்சல்படுத்திய, மகிழ்ச்சிப்படுத்திய சுவர்ணன் உண்மையிலேயே ஒரு கைத்துப்பாக்கியைத் தனது திறமைக்கான பரிசாகப் பெற்றுக்கொண்டான்.

Ratha_M-768x496-1.jpgமறுநாள் காலை ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு எமது தளத்தின் ஒன்றுகூடலுக்குச் செல்ல வேண்டும். இதைக் கொண்டுபோனால் 50 கலிபர் என்று யாரும் நம்பப்போவதில்லை. நம்பினாலும் எமக்கான மதிப்பு இருக்கப்போவதில்லை. ‘இதைவிட ஒரு PK LMG யே திறம் போல கிடக்கு’ என்று யாராவது நக்கலடிக்கக் கூடும். இதுவரை கட்டியெழுப்பியிருந்த விம்பம் கலைந்துபோய்விடும். சுவர்ணன் ஒரு திட்டத்தைப் போட்டான். ஆயுதத்தைப் பாய்களால் சுற்றி, பிறகு படுக்கை விரிப்பால் சுற்றி கொஞ்சம் பெரிய உருப்படியாக்கினான் சுவர்ணன். அடுத்துவந்த ஒருகிழமைக்கு எமது கொம்பனிக்கு அப்படி உருப்பெருப்பிக்கப்பட்ட உருப்படியைத்தான் எமது 50 கலிபர் என்று காட்டிக் கொண்டிருந்தோம். எமது கொட்டில்பக்கம் யாரையும் வரவிடாமலும் பார்த்துக் கொண்டோம்.

மீட்கப்பட்ட முல்லைத்தீவில் 1997 தைமாதம் 50 கலிபர் பயிற்சிக்காகப் போயிருந்தோம். அங்கும் அவனது சேட்டைகள் தொடர்ந்தன. கடற்புலி அணியிலிருந்து பயிற்சிக்கு வந்திருந்த சிலர் இவனை உண்மையிலேயே ஒரு பயிற்சியாசிரியர் என்று நினைக்க வைத்துவிட்டான். பயிற்சியின் இறுதிக்கட்டத்தில் தொடர்சூட்டுப் பயிற்சிக்கான நாள். பத்து ரவைகளைத் தந்து பனையில் கட்டப்பட்டிருக்கும் பட்டத்துக்குச் சுடச் சொன்னார்கள். ஒரு விசையழுத்தத்தில் எவ்வளவு குறைவான ரவைகளைச் செலுத்துகிறோமோ அவ்வளவுக்கு எம்மால் அதிக மதிப்பெண்கள் பெறமுடியும். ஒரு விசையழுத்தத்தில் அதிகபட்சம் மூன்று ரவைகளுக்கு மேல் சுடாமலிருப்பதே நல்ல பெறுபேற்றைப் பெற உதவும். அதேநேரம் மொத்தச் சூட்டு நேரமும் கவனிக்கப்படும். பத்து வினாடிகளுக்குள் பத்து ரவைகளையும் சுட்டிருக்க வேண்டும். நாங்களெல்லோரும் மூன்று அல்லது நான்கு விசையழுத்தங்களில் பத்து ரவைகளைச் சுட்டோம். ஓரளவு நல்ல பெறுபேறுதான். சுவர்ணனின் முறை வந்தது. ஒரே விசையழுத்தல்தான். பத்தும் பறந்து போனது. முக்காலியின் முன்கால் அப்படியே எழுந்து அந்தரத்தில் நின்றது. அந்த நிலையிலேயே எங்களைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தான். ‘எருமை!! எல்லாத்தையும் காத்தில பறக்கவிட்டிட்டு பெரிய றம்போ மாதிரி போஸ் குடுக்கிறான் பார்’.
ரகுவண்ணா சொன்னார். சூட்டுப்பயிற்சிக்குப் பொறுப்பான பயிற்சியாசிரியர் முகத்தில் கடுப்பு. ஆனால் சுவர்ணனைப் பொறுத்தவரை எல்லாம் நல்லபடியாகவே நடந்தது போல் நடந்துகொண்டான்.

சுட்டுவிட்டு நேரே ஆசிரியரிடம் போன சுவர்ணன், நிறுத்தற் கடிகாரத்தைப் பார்த்தபோது அது இரண்டு வினாடிகள் சொச்சத்தைக் காட்டியது.

‘உது பிழை மாஸ்டர், பத்து ரெளண்ட்சும் ஒரேயடியா அடிக்க ஒரு செக்கனுக்கும் குறைவாத்தான் பிடிக்கும். நீங்கள் சரியான நேரத்தில அமத்தேல’ என்றான். வாத்தியாரின் முகத்தைப் பார்க்க வேண்டும்.

பயிற்சி முழுவதும் முடிந்து முல்லைத்தீவிலிருந்து எமது தளத்துக்குத் திரும்பியிருந்தோம். அப்போது புதிதாக வேறு படையணியிலிருந்து நூறுபேர் வரை எமது தளத்துக்கு வந்திருந்தார்கள். வேறோர் அலுவலாக சுவர்ணன் தவிர்த்து நாங்கள் சிலர் வெளியே ஒருகிழமை சென்றுவிட்டுத் தளம் திரும்பியபோது புதிதாக வந்த கொம்பனி ‘சுவர்ணன் மாஸ்டர்’ என்று அவனைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தது. இவ்வளவுநாளும் அவன் பட்ட கஸ்டங்கள் வீண்போகாமல் தனது இலக்கை அடைந்திருந்தான் சுவர்ணன். நாங்கள் தலையிலடித்துக் கொண்டோம்.

இப்போது அவன் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருந்தான். தான் ஒரு ‘பிஸ்டல் காய்’ என்று சொல்லவும் அதை நடைமுறைப்படுத்தவும் தொடங்கியிருந்தான். இந்தக் கொடுமைகளைச் சகித்துக் கொண்டு நாங்களும் பயணித்தோம். இயக்கத்தில் பிஸ்டல் என்பது தகுதியை நிர்ணயிக்கும் ஓர் ஆயுதமாக அப்போது இருந்தது. ‘பிஸ்டல் காய்’ என்றால் அவர் பெரிய தளபதி என்பது கருத்து. சுவர்ணன் தன்னை பிஸ்டல் காயாக பாவனை பண்ணத் தொடங்கியிருந்தான். இந்தப் புதுக்கொடுமை தொடங்கியதால் ‘மாஸ்டர்’ கொடுமையிலிருந்து நாங்கள் தப்பித்திருந்தோம்.

கணேஸ் தான் அதிகம் மாட்டுப்படுபவன். கணேஸ் தன்னுடைய மெய்க்காப்பாளன் என்று சொல்லிக்கொள்வான். ‘கணேஸ்! அண்ணனின்ர பிஸ்டலை ஒருக்கா எடுத்தா’ என்று கட்டளைகள் வரும். அந்தநேரத்தில் கையில் கிடைக்கும் கட்டைகளைத் தூக்கி எறிந்து ‘இந்தா உன்ர பிஸ்டல்’ என்று கணேஸ் பதிலளிக்கத் தொடங்கியபிறகு சுவர்ணன் தனது மெய்க்காப்பாளனை மாற்றிவிட்டான்.

முகத்தில் சின்னச் சிரிப்புக்கூட இல்லாமல் அவன் அடிக்கும் லூட்டிகள் அளவு கணக்கற்றவை. மிகமிக அவசரமாக அணியை வரச்சொல்லி அழைப்பு வந்திருக்கும். எல்லோரும் ஆயத்தமாகி வரிசையாக நிற்கும்போது சுவர்ணன் மட்டும் அங்கிங்கென்று ஏதோ தேடிக்கொண்டிருப்பான்.

‘டேய் சுவர்ணன்! என்ன கோதாரியத் தேடுறாய்?’

‘என்ர பிஸ்டலைக் காணேல. நீயே எடுத்தனீ?’

அணிமுழுவதிடமும் உதைவாங்கித்தான் அன்று வெளிக்கிடுவான்.

எதிர்பாராத சந்தர்ப்பமொன்றில் கொம்பனிப் பொறுப்பாளர் சுவர்ணனை அணித்தலைவராக்கிவிட்டார். நாங்கள் ஆனந்தக் கூத்தாடினோம். அப்பாடா! இனி உவனின்ர தொல்லைகள் இருக்காது என்று பெருமூச்சு விட்டோம். ஆனால் இரண்டு நாட்களின்மேல் அது நீடிக்கவில்லை. அவன் அடித்த பிஸ்டல் குழறுபடியில் மீண்டும் பழையபடி கலிபர் சூட்டாளனாகவே நியமிக்கப்பட்டான்.

இப்படியெல்லாம் பிஸ்டலை வைத்துக் கனவு விளையாட்டுக்களை நடத்தி எங்களை எரிச்சல்படுத்தியும் மகிழ்வித்தும் வைத்திருந்த சுவர்ணன் நிசமாகவே ‘பிஸ்டல் காய்’ ஆனான். அதுவும் தேசியத் தலைவரிடமிருந்து கைத்துப்பாக்கியைப் பரிசாகப் பெற்றுக் கொண்டான்.

ஒன்றாக இருந்த நாம் காலவோட்டத்தில் பிரிந்து பணிகள் மேற்கொண்ட போது சுவர்ணன் லெப்.கேணல் ராதா வான்காப்பு அணியில் கடமையாற்றினான். 2002 இல் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் யுத்தநிறுத்த ஒப்பந்தம் ஏற்படும்வரைக்கும் லெப்.கேணல் ராதா வான்காப்பு அணி இம்ரான் பாண்டியன் படையணியின் ஓரங்கமாகச் செயற்பட்டு வந்தது.

இப்போது உமையாள்புரத்தில் ஆயத்தப்படுத்தப்பட்ட சண்டைக்கு வருவோம். ஆனையிறவைச் சூழவுள்ள பகுதிகளின் தாக்குதல் நடத்தப்படும்போது கடுமையான காயங்களுக்கு உள்ளாகும் படையினரை பலாலி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல சிறிலங்கா வான்படையின் பெல் ரக உலங்கு வானூர்தியே பயன்படுத்தப்பட்டு வந்தது.. வரும்வழியிலோ அல்லது திரும்பிச் செல்லும்போதோ அவ்வானூர்தியைத் தாக்கியழிக்கும் விதமாக ஒரு திட்டம் தீட்டப்பட்டது. இதற்காக, விமான எதிர்ப்பு ஏவுகணையைச் சுமந்தபடி ஓர் அணி தென்மராட்சிப் பகுதிக்குள் ஊடுருவி நிலையெடுத்திருந்தது. அந்த அணியின் தலைவனாகவும் ஏவுகணையை இயக்குபவனாகவும் சுவர்ணன் இருந்தான். வானூர்தியின் பாதையொழுக்கு ஏற்கனவே வேவு பார்க்கப்பட்டிருந்தது. சுவர்ணனுக்கான இலக்கை வரவைப்பதற்காகவே இம்ரான் பாண்டியன் படையணியின் ஓரணி மேஜர் சங்கரின் தலைமையில் களத்தில் இறங்குகிறது. ஆனால் அத்தாக்குதலின் பின்னாலுள்ள உண்மைக்காரணம் சிலரைத் தவிர வேறெவருக்கும் தெரியாது.

உமையாள்புர இராணுவத் தளம் மீதான தாக்குதலுக்கான திட்டம் மட்டுப்படுத்தப்பட்ட அளவைக் கொண்டது. இராணுவத்தரப்பில் கடுமையான காயக்காரரை உண்டாக்குவதன் ஊடாக குறிப்பிட்ட உலங்கு வானூர்தியை வரவைப்பதே முதன்மை நோக்கம்.

திட்டத்தின்படி தாக்குதல் நடத்தப்பட்டு எதிரிக்குச் சேதம் ஏற்படுத்தப்பட்டது. திட்டமிட்டபடியே காயக்காரரை ஏற்ற உலங்குவானூர்தி வந்தது. வரும்போது தாக்குதல் நடத்தப்படவில்லை. திட்டம் தெரிந்தவர்களுக்கு பதட்டம். ஏவுகணையோடு நிலையெடுத்திருக்கும் சுவர்ணனின் வீச்செல்லையைத் தாண்டி வானூர்தி பயணித்தாலேயே திட்டத்தில் பிசகு ஏற்பட வாய்ப்புண்டு. அல்லது எதரியின் பகுதிக்குள் நிலையெடுத்திருக்கும் அணியை எதிரியணிகள் கண்டு தாக்குதல் நடத்தினாலும் பிசக வாய்ப்புண்டு. சுவர்ணனுடன் சீரான தொடர்பு இருந்தது. எல்லாம் சரியாக நடக்குமென்று தகவல் தந்துகொண்டிருந்தான்.

காயக்காரரை ஏற்றிக்கொண்டு பலாலி திரும்பிக் கொண்டிருந்த உலங்கு வானூர்தி எதிர்ப்பார்த்தபடியே சுவர்ணனின் எல்லைக்குள் வந்தது. அன்று அந்த இலக்கு சுவர்ணனால் அழிக்கப்பட்டது.

அவ்வெற்றிகரத் தாக்குதலை நடத்தியதற்குப் பரிசாக கைத்துப்பாக்கியொன்று தேசியத் தலைவரால் சுவர்ணனுக்குப் பரிசளிக்கப்பட்டது.

முன்பு எம்மை ‘பிஸ்டல் காயாக’ எரிச்சல்படுத்திய, மகிழ்ச்சிப்படுத்திய சுவர்ணன் உண்மையிலேயே ஒரு கைத்துப்பாக்கியைத் தனது திறமைக்கான பரிசாகப் பெற்றுக்கொண்டான்.

ஈழவிடுதலைக்கான போராட்டப்பயணித்தில் தொடர்ந்து லெப்.கேணல் ராதா வான்காப்பு அணியில் பணியாற்றிய மேஜர் சுவர்ணன் பின்வந்த ஒருநாளில் தாயக விடுதலைக்காக தனது மூச்சை நிறுத்திக் கொண்டான்.

-அன்பரசன்-


 

https://www.thaarakam.com/news/133895

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள். . .

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்.

  • 11 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

spacer.png

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிப் போராளி ஒருவர் எழுதும் பெல்லைச் சுட்டு விழுத்திய வான்காப்புப் போராளியுடனான அனுபவக் குறிப்பு

 

 

https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid02QCe82AjRUgM9vWsM7aNuMgHaGcQBDkzm6euvLHdC4cvDvgaduymY8z3TDsx1xgHwl&id=203560776450352&locale=ta_IN


இந்திய இராணுவத்தாலும்,ஒட்டுக்குழுவாலும் எமது குடும்பம் இலக்குவைக்கப்பட்டபோது குடும்பத்துடன் தலைமறைவு வாழ்வொன்றிற்குள் தள்ளப்பட்டோம். வலிகாமத்திலிருந்து வடமராட்சிக்கு வந்து சேர்ந்தபோது கூடவே கல்வியும் தடைப்பட்டிருந்தது.

தும்பளை சைவப்பிரகாச மகா வித்தியாலயத்தில் தரம் ஆறில் கல்வியைத் தொடர்ந்தபோது நண்பனானவன் ஜெயசீலன்.குடும்ப உறவாக இருந்தபோதும் பாடசாலைதான் எமது நட்பின் உருவாக்கத்திற்கு காரணமாய் அமைந்தது.

நான் இயக்கத்திற்கு போனபிறகு பல வருடங்கள் அவனைச் சந்திக்கவில்லை. விடுமுறையில் வீடுசென்றபோது அவனது வீட்டிற்கு சென்றபோதுதான் தெரியும் அவனும் இயக்கத்திற்கு வந்துவிட்டான் என்பது. ஆனாலும் அவனது இருப்பிடங்களை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை.

1999 ஆனையிறவு பெருந்தளத் தாக்குதலுக்காக எமது படகுத்தொகுதிகள் தயாரானபோது கடற்கரை வெளியில் விமான எதிர்ப்புக் கருவியுடன் நின்றிருந்தான்.

எமது போராளிகளில் ஒருவர் என்னைக் கூப்பிட்டுச் சொன்னபோதுதான் அதிர்ந்துபோனேன் என்னைப் பார்ப்பதற்கு ஜெயசீலன் சுவர்ணனாக மாறி குத்துவரிச் சீருடையில் வந்திருந்தான். ஏழு ஆண்டுகளின் பின்னர் அவனைச் சந்தித்தபோது தொலைந்துபோன ஏதோவொரு பொக்கிசம் மீளக்கிடைத்ததான உணர்வு மேலிட்டது. அன்றிரவு தாக்குதலுக்காக எமது படகுகள் தயார்நிலையில் நின்றதால் தூக்கம் தொலைத்து நீண்டநேரம் உரையாடிக்கொண்டே இருந்தோம்.

நான் இயக்கத்திற்கு வந்ததற்கு காரணம் இருக்கு அது உனக்கும் தெரியும் ஆனால் நீ இயக்கத்திற்கு வந்தது ஏன் என்று எனக்கு தெரியேல ஏன்டா வந்தனி என்றபோது அவன் கூறியது.... நீயும் போனாப்பிறகு பலபெடியள் வெளிக்கிட்டிற்றாங்கள்.அவங்கள் வீரச்சாவடைந்து சிலரின்ர வித்துடலும் ஊரில் ஊர்வலத்தோட கொண்டுவந்து பார்வைக்கு வச்சவங்கள்.அதெல்லாம் பார்த்தாப்பிறகு நான் மட்டும் படிச்சு பட்டம்பெற்று சுயநலமானதொரு வாழ்க்கைக்குள் போவதற்கு விரும்பவில்லை.அதுதான் வந்திட்டன் என்று இழுத்தான்.

அவனது தந்தை அரேபிய நாடொன்றிலும் அவனது தாயும் தங்கையும் பருத்தித்துறையிலும் இருப்பதாக கூறியவன் யாழ்ப்பாணச் சண்டை வெற்றியுடன் முடிந்தால் வீட்டிற்குச் சென்று அனைவரயும் பார்க்கலாமெனத் தெரிவித்திருந்தான்.

ஒரு வாரமாக அடிக்கடி வோக்கியிலும்,நேரடியாகவும் எமது சந்திப்புகள் தொடர்ந்திருந்தபோது அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாற்போல் அவனுக்கான முக்கிய பணியொன்று வழங்கப்பட்டது.

சாவகச்சேரிப் பகுதிக்குள் சென்று எம்.ஐ. 24 தாக்குதல் உலங்குவானூர்தியை தாக்கி வீழ்த்துவதற்காக புறப்படத் தயாராகினான்.

பத்திரமாக மூவர் கொண்ட அவனது அணியைத் தரையிறக்குவதற்காக எமது படகுகளைத் தயாராக்கி கச்சாய்ப் பகுதியில் தரையிறக்கித் திரும்பினோம்.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றவன் தலைமையின் கட்டளைப்படி பெல் 206 தாக்குதல் உலங்குவானூர்தியை சுட்டுவீழ்த்திவிட்டு வரும்வழியில் இராணுவச் சுற்றிவளைப்பில் அகப்பட்டுக்கொண்டான். அதை ஊடறுத்து அவன் களமாடியபோது சன்னக்கள் துளைத்து அந்த மண்ணிலே மடிந்து சரித்திரமானான்.

அவன் வித்துடல்கூட எமக்கு கிடைக்கவில்லை, அவன் குடும்பமும் அவனின் வித்துடலைக்கூட பார்க்கவில்லை. அவனின் சாதனைகள் எதுவும் அவர்கள் அறியவில்லை. இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாழ்ந்திருந்த அவர்கள் தங்கள் மகன் மாவீரனாகிவிட்ட செய்திகூடத் தெரியாமல் அவனை நினைத்து அழுதுகொண்டிருந்தனர். ஒருபுறம் தேடிக்கொண்டிருந்தனர். சமாதான உடன்படிக்கையின் பின்னரே எமது இயக்கம் உத்தியோகபூர்வமாக நேரடியாகச் சென்று அவனது சிரித்த முகத்துடனான வீரவணக்கப்படம் ஒன்றையும் அவன் போட்டிருந்த சேட் ஒன்றையும் கொடுத்து அவனது வீரச்சாவை அறிவித்திருந்தது.

அக்காலப்பகுதியில் நான் அங்கு சென்றபோது அவர்கள் தங்கள் ஒரேயொரு மகனை இழந்து தவிக்கும் தவிப்பிற்கு என்னால் ஆறுதல் வார்த்தைகள் எதுவும் கூறுவதற்கு இயலாமல் போனது. தொண்டைக்குழிக்குள் ஏதோவொன்று உருண்டுகொண்டேயிருந்தது.

"என்ர பிள்ளையை கடைசியாக ஒருக்கால்கூட பார்க்க குடுத்துவைக்காத பாவியாகிப் போனேனே ஐயோ....." என்று அவனின் அம்மா படத்தை அணைத்துக் கதறியது இன்றும் என் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.

நினைவுகளுடன்
புலவர்
கடற்புலிகள்.

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்+

 

இவர் 17/02/2000 ஆம் ஆண்டு சரியாக மாலை 6.25 மணிக்கு கொடிகாமத்தில் வைத்து பெல் 206 வகையைச் சேர்ந்த உலங்குவானூர்தி ஒன்றை 9கே34 ஸ்டெர்லா-3 வகையைச் சேர்ந்த மேற்பரப்பிலிருந்து வான்நோக்கி ஏவும் ஏவுகணை செலுத்தியிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தினார்.

 

மூலம்: இவர் பயன்படுத்திய ஏவுகணை செலுத்தியில் புலிகளால் எழுதப்பட்டிருந்த ஆவணப்படுத்தப்பட்ட தகவல்.

 

 

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.