Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் ஜனாதிபதியை நோக்கி விரலை நீட்டியுள்ள கயானா நாட்டு முன்னாள் ஜனாதிபதி டொனல்டு ரமோத்தர் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2009ம் ஆண்டு போருக்கு பின்னராக நடந்தேறிய பாரிய தொடர்பில் சரியானதொரு புலனாய்வு விசாரணையினை அனைத்துலக சமூகம் பெரிதாக செய்திடவில்லை என்பதோடு, பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொலையுணக் காரணமாக, சிறிலங்காவின் தற்போதைய ஜனாதிபதியே இறுதிப்போரின் போது பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் என மத்திய அமெரிக்க கயானா நாட்டு முன்னாள் ஜனாதிபதி டொனல்டு ரமோத்தர் தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலுக்கு பின்னராகவும் தமிழ்மக்கள் அச்சங்கொண்டு வாழ்வதைப் தன்னால் புரிந்து கொள்ள முடிவதறகு இப்போது நாட்டின் அதிபராக இருப்பவர்தான் உள்நாட்டுப் போரின் குருதி தோய்ந்த காலக்கட்டத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் என்பதே காரணம் எனவும் முன்னாள் ஜனாதிபதி டொனல்டு ரமோத்தர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இணையவழி அரசவை அமர்வின் தொடக்கநாள் நிகழ்வின் போது சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுப்போதே இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நடந்த குற்றங்களுக்கான உரிய புலானய்வுவிசாரணையினை செய்யப்படாமல் இருக்கின்றமை இன்னமும் தொடர்வதோடு, அனைத்துலக சமூகம் கூடுமான விரைவில் இதனைச் சரிசெய்தாக வேண்டும் எனவும் சர்வதேச சமூகத்தினை நோக்கி கோரிக்கையினை விடுத்துள்ள அவர், தற்போதை உலகின் ஆபத்தான போக்குள்ளேயே ஈழத்தமிழ் மக்கள் தமது போராட்டத்தை நடத்தியாக வேண்டிய நிலை உள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவரது உரையின் முழுவடிவம் :

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்பேரவையில் உரையாற்ற என்னை அழைத்தமைக்காக முதற்கண் நன்றி சொல்ல விழைகிறேன். எனக்களித்த தனிப் பெருமையெனக் கொண்டு, உங்கள் அன்பழைப்பை ஆழ்ந்து போற்றி மகிழ்கிறேன்.

உங்களது அரசவை ஈழத்தமிழ் மக்களை ஒன்றுசேர்ப்பதிலும் அமைதிக்கும் விடுதலைக்கும் நீதிக்குமான பெருமுயற்சியில் அவர்களை ஒற்றுமைப்படுத்துவதிலும் முதன்மைப் பங்கு வகிக்கும் தனித்துவமான ஓரமைப்பு ஆகும்.

இந்த அரசவையின் பிறப்பு தமிழர்களின் தாயகத்திலும் புலம்பெயர் தமிழுலகிலும் வாழும் தமிழர்களின் நெஞ்சகத்தே சுடர் விடும் உறுதிக்கும் ஊக்கத்துக்கும் எதிர்ப்புணர்வுக்கும் சான்றாகும்.
இந்தச் சீரிய பேரவை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத் தலைமையின் மகத்தான அமைப்புத் திறன்களையும் படைப்பாற்றலையும் மெய்ப்பித்துக் காட்டுவதாக உள்ளது.

பன்னாட்டுச் சூழல்

அநேகமாய் வாழ்க்கைத் துறைதோறும் விரைவான மாற்றங்கள் ஏற்பட்டு வரும் பன்னாட்டுலகச் சூழலில் அரசவை கூடியுள்ளது. மாற்றங்கள் மட்டுமல்ல, உறுதியின்மைகளும் பேராபத்துகளும் பெருத்த அறைகூவல்களும் கூட இச்சூழலில் நிறைந்துள்ளன. வாய்ப்புகளும் நிறைந்திருப்பதாக நான் நம்புகிறேன்.
நம்மில் மூன்றாம் உலகில் வாழ்வோர்க்கு அந்த அறைகூவல்கள் இன்னும்கூட அழுத்தமானவை.
மிகவும் உடனடியான சிக்கல் என்றால், புவியைப் பிடித்தாட்டும் உலகளாவிய பெருந்தொற்று நோயைத்தான் சொல்ல வேண்டும். இந்த நோய்க்கிருமி தொடர்ந்து பரவிக்கொண்டும், உலகெங்கும் நூறாயிரக்கணக்கான சாவுகள் விழக் காரணமாகிக் கொண்டும் இருக்கிறது.

அதன் முழுத் தாக்கம் இன்னும் மெய்ப்பட்டு விடவில்லை; ஆனால் இப்போதே உலகின் ஆகப்பெரிய, ஆக முதன்மையான பொருளியலமைப்புகளில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டிருக்கக் காண்கிறோம். இது உலகளாவிய பொருளியல் சுணக்கத்தின் தொடக்கமாக அமைந்து விடுமென நம்பப்படுகிறது. இவ்வாறான நேரங்களில் அநேகமாய் எப்போதுமே வளர்பருவ உலகின் மக்களினங்களே சிக்கன நடவடிக்கைகளின் சுமைதாங்கிகள் ஆகின்றனர்.

மறுபுறம் நாமெல்லாம் எவ்வளவு நெருக்கமாய் ஒன்றுபட்டுள்ளோம் என்பதை இந்த கொவிட்-19 நோய்க்கிருமி நமக்குச் சொல்கிறது. கெடுவாய்ப்பாக உலகத் தலைவர்களில் சிலர் இந்த உண்மைநிலையை உள்வாங்கத் தவறி விட்டதாகத் தோன்றுகிறது; நோய்க்கிருமியிலிருந்து விடுபட நம் செல்வவளங்களைப் பயன்படுத்தாமல் இவர்களில் சிலர் அற்பப் பூசல்களில் ஈடுபட்டுள்ளனர்.

காலநிலை மாற்றத்துக்கும் முகங்கொடுக்க வேண்டியவர்களாக உள்ளோம். நீங்களே கூட, வரலாற்றில் வந்துற்ற படுமோசமான இயற்கைப் பேரிடர்களில் ஒன்றான ஆழிபேரலையால் துயருற்றீர்கள். கடுஞ்சூறாவளிகள், வறட்சிகள், பெரும்புயல்கள், வெள்ளப்பெருக்குகள் முன்னைக்காட்டிலும் அடிக்கடியும் கூடுதல் வலுவோடும் தாக்குவதுதான் புதிய செய்தி.

சமூகக்களத்தில் நாடுகளுக்கிடையிலும் அந்தந்த நாட்டுக்குள்ளேயுமான ஏற்றத்தாழ்வு வளர்ந்து சமூகப் பொருளியல் அமைப்பை நார் நாராகக் கிழித்துப் போடும் ஆபத்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு செல்வக் குவிப்பும் வளர்ந்து வரும் சார்பியல் வறுமையும் முற்றிச் செல்கின்றன. செல்வந்தருக்கும் வறியவர்க்குமான உடையார்க்கும் இல்லார்க்குமான இடைவெளி குடாக்கடல் போல் விரிந்துள்ளது. ஒருபுறம் வறுமை வளர்ந்து செல்ல, மறுபுறம் வீண்விரயம் மீப்பெருமளவில் தலைவிரித்தாடுகிறது.

உச்சத்திலும் உச்சமான படைக்கலன்கள் செய்வதற்குக் கோடானுகோடி டாலர்கள் செலவிடப்படுகின்றன. சாவு வணிகர்கள் நம்முலகின் பல்வேறு பகுதிகளிலும் பூசல்களைத் தூண்டி வருகின்றார்கள். இவற்றில் பலவும் மாந்தக் குல இருப்பையே அச்சுறுத்தும் அளவுக்கு ஆபத்தானவை. இது போதாதென்று நமது விண்வெளியை இராணுவமயமாக்குவது பற்றியும் பேசக் கேட்கிறோம். மிகவும் ஆபத்தான இந்தப் பன்னாட்டுலகச் சூழலில்தான் ஈழத்தமிழ் மக்கள் தமது போராட்டத்தை நடத்தியாக வேண்டும்.

இன்றைய உலகில் நிலவும் இந்த நிலைமைகளில் இந்நேரத்துக்கான ஆகச் சிறந்த போராட்ட வடிவத்தை நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அமைதிவழி என்பது வீர்மிகு தமிழ் மக்களின் நியாயமான நலன்களை மக்களிடையே கொண்டுசெல்லவும் வளர்த்தெடுக்கவும் ஆகப்பெரும் வாய்ப்பை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். பெருந்திரளான மக்கள் தமது நியாயமான குறிக்கோளில் இன்னும் பெரிய அளவில் பங்கேற்கவும், பன்னாட்டுலகத் தோழமையை ஈட்டவும் ஊக்கமளிப்பதாகவும் அமையும்.

மக்களை அணிதிரட்டவும், தமிழர்களுக்கும் மற்ற ஆற்றல்களுக்கும் இடையில் பரந்த ஒற்றுமை ஏற்படச் செய்யவும் ஆகச் சிறந்த வாய்ப்பை அது எற்படுத்திக் கொடுக்கும். 

இப்போது நீங்கள் ஈடுபட்டுள்ள போராட்ட வடிவம் சிறிலங்காவின் ஏனைய மக்கள் பிரிவினரிடையே அமைதியை விரும்பும் ஜனநாயக ஆற்றல்களுடன் நேசக் கூட்டணிகள் அமைத்துக் கொள்ளவும் உங்களுக்கு உதவும் என்பது என் நம்பிக்கை.
சமவுரிமைகளுக்கும் நீதிக்குமான உங்கள் போராட்டங்கள் எழுபத்திரண்டு ஆண்டுகள் முன் 1948இல் நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் தொடங்கியவை ஆகும். உங்கள் இயக்கம் செறிவான பட்டறிவு பெற்று, நீதியும் நிகர்மையுமான குறிக்கோளில் உரம் பெற்றதாகும்.

சுதந்திரம் பெற்ற நேரத்திலிருந்து போரட்டத்தின் தன்மை மாறியது. தேசியக் குறிக்கோள்களை அடைய முயலாமல் புது வகையானதொரு காலனியாதிக்கம் வளர்ந்து, காலனியாதிக்கம் செலுத்தியவர்களும் செலுத்தப் பெற்றவர்களும் ஒரே நாட்டில் வாழும் நிலை ஏற்பட்டதே காரணம்.

அடுத்தடுத்த சிறிலங்க அரசுகள் தமிழர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக முயன்றன. இதற்காக, அவர்களை நிரந்தரமாகவே உரிமை மறுக்கப்பட்டவர்களாக வைத்துக் கொள்ளும் சட்டங்கள் இயற்றப்பட்டன. 1956ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தனிச் சிங்களச் சட்டம் தேசிய ஓர்மையை வார்ப்பதற்கு எதிரான பேரிடியாயிற்று. அது மெய்ந்நிலையில் இரு தேசங்களைத் தோற்றுவித்தது. ஒன்று ஒடுக்குண்ட தேசம், மற்றது ஒடுக்கும் தேசமெனத் தோன்றியது.

தமிழ்மக்கள் ஒதுக்கப்படும் நிலையும்  ஒரு மக்களினப் பண்பாட்டின் மிக அடிப்படைக் கூறாகிய அவர்தம் மொழி இழிவுபடுத்தப்படும் நிலையும் இந்தச் சட்டத்திலிருந்து தொடங்கின. புகழ்மிகு தமிழ் நூலகம் போன்ற பண்பாட்டு நிறுவனங்கள் அழிக்கப்பட்டன. இது மனிதகுலத்திற்கே இழப்பாயிற்று.
அதுமுதல் இந்தப் போராட்டம் தேசத்தின் சுயநிர்ணய உரிமைக்கான சமராயிற்று. இந்த உரிமை ஐக்கிய நாடுகளும் பன்னாட்டுலக அமைப்புகளும் அங்கீகரித்துள்ள உலகு தழுவிய உரிமை ஆகும்.

மக்களது பண்பாட்டின் மீதான தாக்குதலும் விட்டுக்கொடாமையும் நவீனக்கால வரலாற்றில் மிக மூர்க்கமான உள்நாட்டுப் போர்களில் ஒன்றுக்கு இட்டுச் சென்றன. நீண்டநெடிய போரில் ஆயிரக்கணக்கானோர் மடிந்தனர். அவர்களில் பெரும்பாலார் தமிழர்கள். இங்கேயும் போராட்ட வடிவங்களின் முக்கியத்துவம் நமக்குப் புலப்படுகிறது. போராட்டம் நியாயமானதே. தமிழர்களின் நியாயமமான போராட்டத்தையும் கூட பயங்கரவாதச் செயல்களாக சாக்கிட்டு தமிழர்களின் தேசிய விடுதலைக் குறிக்கோளைச் சிறுமைப்படுத்தவும், அப்பாவித் தமிழ் மக்கள் மீது பாரிய அளவில் கொடுந்தாக்குதல் தொடுக்கவும் செய்தனர்.

குறிப்பாக அந்தப் போரின் இறுதிக் கட்டங்கள் குருதிதோய்ந்தவை, காட்டுவிலங்காண்டித்தனமானவை என்றே சொல்லலாம். இறந்தவர் தொகை பற்றிய மதிப்பீட்டில் சற்றே பெரிய வேறுபாடுள்ளது. மிகவும் குறைத்து மதிப்பிட்டால் கூட 40.000 பேர் மடிந்தனர். அவர்கள் பெரும்பாலும் அப்பாவிப் பொதுமக்கள். 70,000 பேர் மடிந்தாகச் சொல்லும் செய்திகளும் உள்ளன.

நடந்தவற்றில் பெரும்பகுதி சிறிலங்காவின் ஆய்தப்படைகள் இனவழிப்பு செய்த தன்மைகளைச் சுட்டிநிற்கிறது.

'சூட்டுத் தவிர்ப்பு' வலையம் என்று ஒப்புக்கொண்ட இடத்திலும் கூட ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவமனைகளும் கல்விக் கூடங்களும் பிறவகை முகன்மைக் கட்டமைப்புகளும் அழிக்கப்பட்டன. மேலும், சித்திரவதை இடம்பெற்றது பற்றியும், ஆயிரக்கணக்கானோர் காணாமற்செய்யப்பட்டது குறித்தும், அதே போது பாலியல் வல்லுறவு ஒரு போர்க்கருவியாகப் பயன்படுத்தப்பட்டது குறித்தும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

சிறிலங்காவில் இந்நிலைமை கெடுவாய்ப்பாகக் குடும்ப அரசவம்ச ஆட்சி தலையெடுப்பதற்கான சூழல்களையும் தோற்றுவித்திருக்கிறது. சமூக வாழ்க்கையில் பல எதிர்மறை நிக்ழ்ச்சிப்போக்குகளுக்கு இது வழிகோலி விட்டது.
இதனால் ஊழலும், வேண்டியவர்களுக்குச் சலுகையும், அன்றாடச் சமூக வாழ்வில் பயங்கரமும் தலையெடுத்திருப்பதாகச் சில குழுக்கள் அறிக்கையளித்துள்ளன.

இந்நிலைமைகளில் சர்வாதிகாரம் செழிப்பது பற்றி வரலாறு நமக்குப் பாடம் நடத்துகிறது. இது சில நேரம் ஒற்றைச் செயலில் வெளிப்படாமல் பல செயல்களின் திரட்சியில் வெளிப்படுகிறது. இதன் முதலடிகள் மக்களுக்குரிய விடுமைகளையும் உரிமைகளையும் பையப்பைய அரித்தெடுப்பதாகும். முதலில் சிதைக்கப்படும் உரிமைகளில் ஒன்று கருத்து வெளியிடுவதற்கான உரிமை ஆகும்.

இதன் நீட்சியாக வருவது அரசியல் வகையிலும் பிற வகையிலும் பொது வாழ்வில் இருப்பவர்களை மனம்போன போக்கில் தளைப்படுத்துவதாகும். தொடர்ந்து பெண்களைக் கேடுறுத்துவதாகும். அவர்களில் பலர் அச்சத்தில் வாழ நேரிடுகிறது,

2009ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின் அப்போது நடந்த ஆயிரக்கணக்கான குற்றங்கள் பற்றிய செய்திகளைப் புலனாய்ந்திடப் பெரிதாக எதுவும் செய்யப்படவில்லை என்பது மிக மிக வருந்தத்தக்கது. இன்றும் அதே நிலை தொடர்கிறது. பன்னாட்டுலகச் சமுதாயம் கூடுமான விரைவில் இதனைச் சரிசெய்தாக வேண்டும். சிறிலங்காவில் கடைசியாக நடந்த தேர்தலுக்குப் பின் இன்னுங்கூட இதற்கான தேவை கூடியுள்ளது. உங்கள் நாட்டில் தமிழ்மக்கள் அச்சங்கொண்டு வாழ்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால் இப்போது நாட்டின் அதிபராக இருப்பவர்தான் உள்நாட்டுப் போரின் குருதி தோய்ந்த காலக்கட்டத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர்; அப்போதுதான் பெரும்பாலும் பொதுமக்கள் கொலையுண்டார்கள்.

எனவேதான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பணி இத்துணை முக்கியத்துவம் பெறுகிறது.
பன்னாட்டுலகக் களத்தில் அறிவூட்டினால் போதாது. சிறிலங்காவில் கட்டமைப்புகள் கட்டியெழுப்பவும் மக்களிடம் நம்பிக்கை வளர்க்கவும் வேண்டிய தேவை உள்ளது.

இந்தப் பெரும்பணியில் பன்னாட்டுலகத் தோழமையைக் கட்டியெழுப்புவது போலவே சிறிலங்காவில் உரிமைநேய மக்களுடன் இணைப்புகளை வளர்த்தெடுக்க வேண்டியதும் முக்கியமானது.
தமிழர்களின் போராட்டம் என்பது அமைதிக்கும் ஆய்த நீக்கத்துக்குமான போராட்டத்தில் ஒரு பகுதியாகும். பாலத்தீன மக்களும் உலகெங்கும் ஏனைய ஒடுக்குண்ட மக்களும் நடத்தி வரும் எதிர்ப்பியக்கத்தின் பிரிக்கவொண்ணாப் பகுதியாகும்.

நம் உலகமயப்பட்ட உலகில் பன்னாட்டுலகத் தோழமை பெரிதும் பொருள்பொதிந்தது. சுரண்டப்படும், ஒடுக்கப்படும் அனைவரின் நன்னலனுக்கும் உங்களது வெற்றி பங்களிக்கும். அதே போல் பன்னாட்டுலகில் அடையும் நன்மைகளும் உங்கள் போராட்டங்களில் தாக்கங்கொள்ளும்.

இறுதியாக, முதலில் உங்கள் மக்கள் மீது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி கோரியும், தேசிய ஒடுக்குமுறையிலிருந்து அவர்களின் விடுமைக்காகவும் விடுதலைக்காகவும் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள் குவியட்டுமென வாழ்த்துகிறேன் என கயானா நாட்டு முன்னாள் ஜனாதிபதி டொனல்டு ரமோத்தர்  தெரிவித்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.