Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'பௌத்த விகாரையின் பெயரால் முஸ்லிம்கள் இடம் அபகரிப்பு' - இலங்கையில் சர்ச்சை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'பௌத்த விகாரையின் பெயரால் முஸ்லிம்கள் இடம் அபகரிப்பு' - இலங்கையில் சர்ச்சை

யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த ஆலயமும் சுற்றுச் சூழலும்

இலங்கையின் அம்பாறை மாவட்டம் - பொத்துவில் பிரதேசத்திலுள்ள முஹுது மகா விகாரை எனும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடம் உள்ளது.

இந்த இடத்தை மையப்படுத்தி, அப்பகுதியிலுள்ள பொதுமக்களின் வசிப்பிடங்களை கையகப்படுத்துவதற்கு தொல்பொருள் திணைக்களத்தினர் எடுத்துவரும் முயற்சிக்கு எதிராக அங்குள்ள மக்கள் தொடர்ச்சியாக தமது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (19ஆம் திகதி) நூற்றுக்கணக்கான போலீஸார் மற்றும் படையினர் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டு, அவர்களின் பாதுகாப்புடன், முஹுது மகா விகாரையைச் சுற்றியுள்ள 72 ஏக்கர் பரப்பளவுள்ள காணிகளை நில அளவீடு செய்து அடையாளப்படுத்தும் முயற்சியொன்று இடம்பெற்றது. இதற்கு எதிராக மக்கள் பாரிய ஆர்ப்பாட்டமொன்றினை நடத்தினார்கள்.

இவ்வாறு அடையாளப்படுத்தப்படவுள்ள 72 ஏக்கர் நிலப் பகுதியினுள் சுமார் 300 முஸ்லிம் குடும்பங்களின் வசிப்பிடங்கள் அமைந்துள்ளதாக, பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ். வாஸித் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். 

குறித்த 300 குடும்பங்களும் வாழும் காணிகள் அவர்களுக்கு சட்டப்படி சொந்தமானவை என்றும், அவர்களின் காணிகளுக்கான உறுதிப் பத்திரங்கள் - 'ஜயபூமி' திட்டத்தின் கீழ், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் வழங்கப்பட்டதாகவும் தவிசாளர் வாசித் கூறினார்.

மக்கள் போரட்டம்

பொத்துவில் பிரதேசத்தில் தற்போது முஹுது மகா விகாரை எனப் பெயர் பெற்றுள்ள இடத்தில், பல தசாப்தங்களுக்கு முன்னர் சில தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதனையடுத்தே, அந்தப் பகுதி தொல்லியல் திணைக்களத்துக்குச் சொந்தமாக்கப்பட்டது.

பின்னர் அந்த இடத்தில் புதிதாக பௌத்த விகாரையொன்று நிர்மாணிக்கப்பட்டு அங்கு வணக்க வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமான நிலப்பகுதிக்குள், புதிதாக பௌத்த விகாரையொன்று நிர்மாணிக்கப்பட்டமை சட்டவிரோதமான செயற்பாடு எனக் குறிப்பிட்டு, பொத்துவில் பிரதேச சபைக்கு தொல்லியல் திணைக்களம் கடிதமொன்றை சில காலங்களுக்கு முன்னர் அனுப்பி வைத்திருந்ததாகவும் தவிசாளர் வாஸித் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

முஹுது மகா விகாரை பகுதியை சுற்றியுள்ள இடங்களில் தொல்பொருட்கள் இருப்பதாகத் தெரிவித்து, அங்குள்ள 72 ஏக்கர் நிலப்பரப்பை தொல்லியல் திணைக்களத்துக்கு சொந்தமானதென பிரகடனப்படுத்தி 1951ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டது.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடுத்து, குறித்த 72 ஏக்கர் காணியில் 42 ஏக்கர் பரப்பளவுள்ள நிலம் விடுவிக்கப்பட்டு, 1965ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டது. அந்த வர்த்தமானி அறிவித்தலில் - தொல்லியல் திணைக்களத்துக்குச் சொந்தமாக 30 ஏக்கர் 03 றூட் 02 பேர்ச் பரப்புள்ள நிலப்பகுதி மட்டுமே அங்கு உள்ளதாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறான பின்னணியில்தான், 1951ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ளவாறு முஹுது மகா விகாரையைச் சுற்றியுள்ள 72 ஏக்கர் பரப்பளவுள்ள காணியையும் தொல்லியல் திணைக்களத்தினூடாக கைப்பற்றுவதற்கான முயற்சியொன்றில், அங்குள்ள பௌத்த ஆலயத்தின் பிரதம பிக்கு முயற்சித்து வருகின்றார் என, பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த சட்டத்தரணி முஷர்ரப் குற்றம் சாட்டுகின்றார்.

முஷரஃப்

இவ்வாறு 72 ஏக்கர் நிலம் கைப்பற்றப்படும்போது அங்கு ஆகக்குறைந்தது நூறு வருடங்களாக வசித்து வரும் 300 குடும்பங்கள் தமது வாழ்விடங்களை இழக்கும் நிலை ஏற்படும் என பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் வாஸித் கூறுகின்றார்.

இதேவேளை, தொல்லியல் திணைக்களத்துக்கு சொந்தமானதென 1965ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள 30 ஏக்கர் பரப்பளவுள்ள காணி எல்லைக்குள்ளும், 40 குடும்பங்கள் வசித்து வருவதாகத் தெரிவித்த வாஸித், அவர்ககளில் பெரும்பாலனோருக்கும் 'ஜய பூமி' திட்டத்தின் கீழ், அவர்கள் வசிக்கும் காணிகளுக்கான உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

இதனையடுத்து பொத்துவில் முஹுது மகா விகாரையின் விகாராதிபதி வரகாபொல இந்து ஸ்ரீ என்பவரை பிபிசி தமிழ் சந்தித்துப் பேசியது. அதன்போது அவர் கூறுகையில்;

"முஹுது மஹா விஹாரை தொடர்பாக வெவ்வேறு தலைவர்கள் உண்மைக்குப் புறம்பான பல விதமான கருத்துகளை முன்வைக்கின்றனர். இலங்கையில் தொல்பொருட்கள் எனக் கூறப் படுபவை பண்டைய விஹாரைகளாகும். இங்குள்ளது 2300 வருட வரலாற்றைக் கொண்ட பழைய விகாரை. அதனால் தொல்பொருள் திணைக்களத்தினரை விடவும் பிக்குகளுக்கே இந்த விஹாரை மீது உரிமை உள்ளது.

யாரும் இச்சந்தர்ப்பத்தில் இனவாத, மதவாதப் பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டியதில்லை.

இங்குள்ள காணிகளுக்குள் தொல்பொருட்கள் மறைந்து கிடக்கின்றன. முஸ்லிம் மக்களை தாக்குவதோ இங்கிருந்து துரத்துவதோ எமது நோக்கம் அல்ல. தொல்பொருட்களைப் பாதுகாப்பதே எங்கள் நோக்கமாகும்.

72 ஏக்கர் ஆகட்டும் அல்லது அதற்கு மேலதிகமாகக் கூட இருக்கட்டும். இதன் பிதான நோக்கம் தொல்பொருட்களைப் பாதுகாப்பதேயாகும்.

இது தேர்தல் காலம் என்பதால் முஸ்லிம் அரசியல்வாதிகள் தமக்கான விருப்பு வாக்குகளை கூட்டிக் கொள்வதற்காகவே இந்த விடயத்தை தூக்கிப் பிடித்துள்ளதாக எனக்குத் தோன்றுகின்றது.

வரலாற்றிலும் இந்த விகாரையை முஸ்லிம்கள் பாதுகாத்துள்ளனர். எனவே முஸ்லிம் மக்கள் கலவரமடைய வேண்டாம். தொல்பொருள் அகழாய்வுப் பணிகளின் போது அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுமாயின் அவர்களுக்காக நான் நீதியைப் பெற்றுத் தருவேன்" என்றார். .

வரலாறு

1000 வருடங்களுக்கு முன்னர் காவன்திஸ்ஸ எனும் மன்னன் முஹுது மகா விகாரையை நிர்மாணித்ததாக பௌத்த வரலாறு கூறுகின்றது.

இந்த இடம் பழைய றுகுண ராஜியத்தின் லங்கா ராமய பகுதியாக இருந்தது என, 'ராஜவல்லிய' என்ற பௌத்த கிரந்தம் கூறுவதாக, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல்துறை மூத்த விரிவுரையாளரும் தொல்லியல் வரலாற்று ஆர்வலருமான முபிஸால் அபூபக்கர் தெரிவிக்கின்றார்.

மேலும், ஒரு புராதன விகாரை அமைந்திருந்தமைக்கான தொல்லியல் ஆதாரங்கள் இங்கு உள்ளதாக பௌத்த தரப்பு கூறுவதை நிரூபிப்பதற்குரிய அகழ்வாராய்வுச் சான்றுகள் அங்கு உள்ளதாகவும் முபிஸால் கூறுகின்றார்.

தொல்பொருட்கள், சிலைகள்

பண்டைய முஹுது மகா விகாரை அமைந்திருந்ததாகக் கூறப்படும் இடத்தில் சதுர வடிவிலான கட்டடமொன்று அமைந்திருந்தமைக்கான தொல்லியல் ஆதாரங்கள் அங்கு காணப்படுகின்றன. அந்த கட்டடம் கருங்கல் தூண்களாலும், செங்கற்களாலும் ஆனவையாகும். அதேவேளை, அந்த இடத்தில் தொன்மையான மூன்று சிலைகளும் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று புத்தர் சிலை என்றும், ஏனைய இரு சிலைகளில் ஒன்று விகார மகா தேவியினுடையது என்றும், மற்றையது காவன் திஸ்ஸ மன்னனுடையது எனவும் இது குறித்து வெளியிடப்பட்ட நூல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்லியல் இடங்களை பாதுகாப்பதற்கான ஜனாதிபதி செயலணியொன்று சமீபத்தில் உருவாக்கப்பட்டு, அந்த செயலணியின் அங்கத்தவர்களாக சிங்களவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்ட நிலையிலேயே, பொத்துவில் முஹுது மகா விகாரை விவகாரம் சூடுபிடித்துள்ளது.

தொல்பொருட்கள், சிலைகள்

இதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜஹம்பத் உள்ளிட்ட குழுவினர், கடந்த மே மாதம் நடுப்பகுதியளவில் பொத்துவில் முஹுது மகா விகாரைக்கு விஜயம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பேச்சுவார்த்தை

இந்த நிலையில், பொத்துவில் முஹுது மகா விகாரையை மையப்படுத்தி அங்குள்ள காணிகளைக் கையயகப்படுத்தும் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தையொன்று அம்பாறை மாவட்ட செயலாளர் தலைமையில், கடந்த சனிக்கிழமை (20ஆம் திகதி) அம்பாறை கச்சேரியில் இடம்பெற்றது.

இதில் போலீஸ், தொல்லியல் மற்றும் அளவீட்டுத் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளும், பொத்துவில் மக்கள் சார்பான பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது தமது பக்க நியாயங்களை அங்கு தெரிவித்ததாகவும், சர்ச்சைக்குரிய பகுதிகளில் தொல்லியல் ஆராய்ச்சி மற்றும் அளவீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை, நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை ஒத்தி வைக்குமாறும் தாம் வேண்டுகோள் விடுத்ததாகவும், அந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் அன்வர் சதாத் தெரிவித்தார். 

நீதிமன்றம் உத்தரவு

இவ்வாறான சூழ்நிலையில், பொத்துவில் முஹுது மகா விகாரை அமைந்துள்ள பகுதியில் நில அளவீட்டு நடவடிக்கைகளை, நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை முன்னெடுக்க வேண்டாம் என, பொத்துவில் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொல்லியல் திணைக்களத்துக்கு உரித்தான அங்குள்ள 30 ஏக்கர் காணி தொடர்பில், நில அளவை அறிக்கை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே அப்பிரதேச குடியிருப்பாளர்களின் நிலை தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முஹுது மகா விகாரையினை மையப்படுத்திய காணி விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையையடுத்து, பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் தொல்லியல் திணைக்களம் கடந்த 2019ஆம் ஆண்டு தாக்கல் செய்திருந்த வழக்கு, நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீதிமன்றம் மேற்படி உத்தரவை பிறப்பித்தது.

பொத்துவில் முஹுது மகா விகாரைக்கு உரித்தான காணியில் குடியிருப்போர், சட்டவிரோத கட்டிடங்களை அமைக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டி கடந்த 2019 நவம்பர் மாதம் தொல்லியல் திணைக்களம் மேற்படி வழக்கை தாக்கல் செய்திருந்தது.

இவ்வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 05 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவிருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அப்பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையையடுத்து விடுக்கப்பட்ட முன்நகர்த்தல் மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் இவ்விசாரணை இடம்பெற்றது. 

 

https://www.bbc.com/tamil/sri-lanka-53196659

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.