Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாற்றுப் பாடநூல்களில் பௌத்த சமயத்திணிப்பும் பல்கலைக்கழகத் தமிழ்ச் சமூகத்தின் கவனயீனமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றுப் பாடநூல்களில் பௌத்த சமயத்திணிப்பும் பல்கலைக்கழகத் தமிழ்ச் சமூகத்தின் கவனயீனமும்

குருபரன் விடயத்திலும் உரியமுறையில் நியாயங்கள், சர்வதேச விதிமுறைகள் தொடர்பாகச் சுட்டிக்காட்டப்பட்டு அழுத்தங்கள் கொடுக்கப்படவில்லை. பேராசிரியர் விக்னேஸ்வரன் விலக்கப்பட்டபோதும், பல்கலைக்கழகப் பீடாதிபதிகள். பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் எவருமே அதற்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை. பல்கலைக்கழகத் தொழிற்சங்கம் கூட போராட்டம் நடத்தவில்லை

-அ.நிக்ஸன்-

இலங்கை ஒற்றையாட்சி அரசின் கீழான இலங்கைத் தேசியம் என்பதற்குள், ஈழத்தமிழர்களையும் இணைத்துவிட வேண்டுமென்ற நோக்கம் 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில், சிங்கள அரசியல் கட்சிகளிடையே மேலோங்கி வருகின்றது. இதன் உச்சத்தை 2015ஆம் ஆண்டு மைத்தரி- ரணில் அரசாங்கத்தில் காணமுடிந்தது. இலங்கைத் தேசியத்தை மையமாகக் கொண்டு தமிழ்த்தேசிய அரசியல் நீக்கத்துக்கான முதற்கட்ட ஏற்பாடாகவே ஜெனீவா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரனை வழங்கியிருந்தது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அதற்கு ஒத்துழைப்பும் கொடுத்திருந்தது.

2015ஆம் ஆண்டுக்கு முன்னரான மகிந்த ராஜபக்சவின் ஆட்சியிலும் அதற்கு முந்திய சந்திரிகா மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலும் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் காணி அபகரிப்புகள், சிங்களக் குடியேற்றங்கள் போன்றவற்றுக்கு இலங்கை இராணுவமே காரணமாக இருந்தது.

-கொழும்பு ஆலோசனை-
கொழும்பின் ஆலோசனையோடு இலங்கை இராணுவமே இவற்றைச் செய்துமிருந்தது. ஆனால் மைத்திரி- ரணில் அரசாங்கமே இந்த விகாரங்களை கொழும்பை மையப்படுத்திய இலங்கை அரச திணைக்களங்கள் மூலமாகப் பிரயோகிக்கும் முறைமையை அறிமுகப்படுத்தியிருந்தது.

குறிப்பாகக் காணி அபகரிப்பு என்றால். கொழும்பை மையமாகக் கொண்ட காணிப் பதிவு ஆணையாளர் அலுவலகம், சிங்களக் குடியேற்றம் மற்றும் மண் அகழ்வென்றால் வீடமைப்பு அதிகார சபை, அல்லது நகர அபிவிருத்தி அதிகார சபை, புத்தர் சிலை வைத்தல், தாதுகோபுரம் கட்டுதல் என்றால் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம் ஆகிய அரச திணைக்களங்கள் மூலம் பொலிஸாரின் உதவிகளைப் பெற்று தாயகப் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன.

2019ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரான நிலையிலும்கூட இவ்வாறு அரச திணைக்களங்களைப் பயன்படுத்தியே வடக்குக் கிழக்கில் தமிழர் மரபுரிமைகள் அழிக்கப்பட்டுச் சிங்கள மரபுரிமைகள் செயற்கையான முறையில் சேர்க்கப்படுகின்றன. சிங்கள அரசியல் தலைவர்கள் வெவ்வேறுபட்ட கட்சிகளாக இருந்தாலும், ஈழத்தமிழர் விவகாங்களில் அவர்களுடைய செயற்பாடுகள் நன்கு திட்டமிடப்பட்ட பொறிமுறை ஒன்றின் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை வரலாறு.

ஜே.ஆர்.ஜவர்த்தானவின் ஆட்சியில் 1983ஆம் ஆண்டு திருகோணமலை அரச அதிபராகச் சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டது முதல், மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் வவுனியா, மன்னர் மாவட்டங்களில் சிங்களவர்கள் அரச அதிபார்களாக நியமிக்கப்பட்டமை உள்ளிட்ட பல உதாரணங்கள் உண்டு.

அதேவேளை, கல்விச் செயற்பாடுகள் மூலமாகவும் இனவாதக் கருத்துகள், சிங்கள வரலாறுகள் தமிழ் மாணவர்கள் மத்தியில் திணிக்கப்பட்டுள்ளன.

ஆண்டு ஆறில் இருந்து கல்விப் பொதுத்தராதரச் சாதாரண தரம் வரையான வரலாறுப் பாடநூல்களில் பௌத்த சமயத்துக்கான முக்கியத்துவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வரலாற்றுப் பாடநூலில் பௌத்த சமயநாகரீக வரலாறு எதற்கு என்ற கேள்விகள் தமிழ்க் கல்வியாளர்களினால் அவ்வப்போது எழுப்பப்பட்டுமிருக்கின்றன.

-பௌத்த சமயக் கலைகள்-

ஆனாலும் சைவ சமயக் கலைகள் நாகரீகங்கள் அதுபற்றிய வரலாறுகள் மறைக்கப்பட்டு அல்லது பௌத்த சமயத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுப் பாடநூல்களில் சேர்க்கப்பட்டுள்ளன. ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் ஆட்சியில் இவ்வாறான இனவாதக் கல்வி முறை ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை தொடருகின்றது. இதற்கும் பல உதாரணங்கள் உண்டு.

பொலன்னறுவை அனுராதபுரக்காலங்களில் நிர்மாணிக்கப்பட்ட திராவிடக் கட்டடக்கலை மரபுகளைச் சார்ந்த சைவ சமயம் கட்டடங்கள், (ஆலயங்கள்) வரலாற்றுப் பாடநூல்களில் பௌத்த சமயக் கட்டடங்களாகக் காண்பிக்கப்பட்டுள்ளன. உதாரணமாகத் தரம் எட்டு பாடநூலில் கண்டகச் சைத்தியம் எனக் காண்பிக்கப்பட்டிருக்கும் கட்டடம், திரவிடக் கட்டடக்லையைச் சார்ந்த கட்டடமாகும்.

வரலாற்றுப் பேராசிரியர் பத்மநாதன், இலங்கையின் இந்து சமயம் என்ற நூலில் இக் கட்டடம் திராவிடக் கட்டடக்கலையைச் சேர்ந்ததெனக் கூறியுள்ளார். ஆகவே சர்வதேச பாடநூல் நியமங்களின்படி, குறித்தவொரு மொழியில் எழுதப்படும் வரலாற்றுப் பாடநூல்கள் பிறிதொரு மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுக் கற்பிக்கப்படுதல் சர்வதேச நியமச் சட்டங்களுக்குப் பொருந்தாதது ஒன்று.

இதற்கு எதிராக வழக்கும் தொடர முடியும். அவ்வாறு வழக்குத் தொடரப்பட்டால் ஈழத்தமிழ் மாணவர்கள் இந்த வரலாற்றுப் பாடநூல்களைப் படிக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் தமிழ்க் கல்வியார்கள் எவருமே சர்வதேச நியமங்களின் பிரகாரம் வழக்குத் தொடருவது பற்றிக் கவனம் செலுத்தவில்லை.

அரசியல் விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காரணங்களில் தமிழ் மாணவர்கள் மீதான கல்வித்தரப்படுத்தலும் ஒன்று என்பது வெளிப்படை. ஆனால் இன்று வரலாற்றுப் பாடநூல் திரிபுபடுத்தல்களோடு, குறிப்பிட்ட சில தமிழ்க் கல்வியிலாளர்களும் ஓரம்கட்டப்படுகின்றனர். இராணுவத்துக்கு மரியாதை கொடுப்பதற்குரிய முறையிலும் இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்புச் சட்டங்கள் தேவைக்கு ஏற்றவாறு சட்டவியாக்கியாணம் செய்யப்படுகின்றன. அதற்குக் கல்வித்துறைச் சட்டங்கள் நிமயங்களும் விதிவிலக்கல்ல.

யாழ் பல்கலைக்கழகச் சட்டத்துறை மூத்த விரிவுரையாளர் கலாநிதி குருபரன் குமாரவேல், நீதிமனற்ங்களில் வழக்கு விசாரணைகளுக்காக முன்னிலையாகக் கூடாதெனக் கொழும்பில் உள்ள பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை யாழ் பல்கலைக்கழகமும் ஏற்றுள்ளது.

1996ஆம் ஆண்டு யாழ் நாவற்குழியில் காணாமல்போன 24 இளைஞர்களில் மூன்று இளைஞர்களின் ஆட்கொணர்வு மனுத் தொடர்பான விசாரணையில் பாதிக்கப்பட்ட உறவினர்களின் சார்பில் கலாநிதி குருபரன் முன்னிலையாகின்றார். அதனைத் தடுக்கும் நோக்கிலேயே இவ்வாறன உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதென்ற குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லாமலில்லை.

இந்த வழக்கில் பிரதான எதிரியாக இலங்கைக் இராணுவத்தின் உயர் அதிகாரியான துமிந்த கெப்பிடிவலான என்பவர் மீதே சந்தேகம் தெரிவிக்கப்பட்டுக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், 2015ஆம் ஆண்டு நல்லாட்சியெனக் கூறிக் கொண்டு பதவிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கமே துமிந்த கெப்பிடிவலானவுக்கு இலங்கை இராணுவத்தின் காலால்படையின் பணிப்பாளர் பதவி உயர்வை வழங்கியிருந்தது.

இனரீதியான கொலை வழக்கு ஒன்றில் குற்றம் சுமத்தப்பட்டதாகத் தெரிந்தும் இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தது. பதவியுயர்வு வழங்கப்பட்டதொரு நிலையிலும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, கலாநிதி குருபரன் முன்னிலையாகியிருந்தார்.

Guruparan

இதனால் யாழ் பல்கலைக்கழகச் சட்டத்துறை விரிவுரையாளர் ஒருவர், எந்த அடிப்படையில் வழக்கு ஒன்றில் முன்னிலையாக முடியுமென இலங்கை இராணுவத் தரைப்படையின் சட்டப் பணிப்பாளர் ஈஎஸ்.ஜயசிங்கே கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி கொழும்பில் உள்ள பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு அனுப்பியிருந்த கடிதம் ஒன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.

-மானிய ஆணைக்குழுவின் கடிதம்-
அந்தக் கடிதத்தின் அடிப்படையிலேயே யாழ் பல்கலைக்கழக உப வேந்தரிடமும் விளக்கம் கோரப்பட்டுப் பின்னர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொகான் டி சில்வா கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். இந்தக் கடிதம் பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்கள், பல்கலைக்கழகப் பதிவாளர்கள், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் உயர் கல்வி அமைச்சு உள்ளிட்ட தறைசார்ந்த 17அரச திணைக்கள், நிறுவனங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சட்டத்துறை விரிவுரையாளர்கள் நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் ஈடுபட அனுமதியில்லை என்பதே கடிதத்தின் உள்ளடக்கமாகும். நாவற்குழி வழக்கு விசாரணையின் பின்னணியிலேயே இவ்வாறான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டுமென்ற சந்தேகத்தை கலாநிதி குருபரன் ஏற்கனவே எழுப்பியிருந்தார்.

யுரொப்பியன் ஜேர்னல் ஒப் இன்ரர்நஷனல் லோ ( EuropeanJournal of International Law) என்ற கட்டுரை ஒன்றைத் தனது முகநூல் பதிவில் மேற்கோள்காட்டியுள்ள கலாநிதி குருபரன், சர்வதேச நீதிமன்றங்களில் முன்லையாகும் சட்டத்தரணிகளில் 60 வீதமானோர் சட்டத்துறைப் பேராசிரியர்கள் என்று அந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்-ஆனால் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவும் யாழ் பல்கலைக்கழகமும் மாத்திரமே அவ்வாறு முன்னிலையாக முடியாதெனக் கூறுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

துறைசார்ந்தவர்கள் தமது தொழில்சார்ந்து வெளியில் பணியாற்ற முடியுமெனப் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு கூறுகின்றது. ஆனால் சட்டத்துறையில் இருப்போருக்கு மாத்திரம் நீதிமன்றங்களில் முன்னிலையாக முடியாதெனக் கூறுவது நியாயமற்றது என்ற கருத்துக்கள் தற்போது எழுந்துள்ளன.

பல்கலைக்கழக மருத்துவப் பேராசிரியர்கள் பலர் அரச வைத்தியசலைகளிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் பணயாற்றுகின்றனர். அதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. 1997ஆம் ஆண்டு சந்திரிகாவின் ஆட்சியில் சுகாதார அமைச்சராக இருந்த ஏ.எச்.எம்.பௌசி. அரச மருத்துவர்கள், மருத்துவபீடப் பேராசிரியர்கள் கடமை நேரங்களில் தனியார் வைத்தியசாலையில் கடமைபுரிய முடியாதென்ற உத்தரவொன்றைப் பிறப்பித்திருந்தார்.

ஆனால் இலங்கை மருத்துவர் சங்கம் அதற்குக் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. வேலை நிறுத்தப் போராட்டங்களும் நடத்தப்பட்டிருந்தன. சுமார் ஒரு மாதமாக நீடித்த இந்தப் பிரச்சினையில் அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா தலையிட்டார். மருத்துவர்கள், மருத்துவப் பேராசிரியர்கள் கடமை நேரங்களிலும் தனியார் வைத்தியசாலைகளுக்கும் கடமைக்குச் செல்ல முடியுமென உத்தரவிட்டிருந்தார். இதனால் அமைச்சர் பௌசியின் உத்தரவும் வாபஸ் பெறப்பட்டது.

ஆகவே சட்டத்துறை விரிவுரையாளர்கள், பேராசிரியர்களுக்கு மாத்திரம் ஏன் இப்படியொரு தடையுத்தரவு என்றவொரு கேள்வி எழாமலில்லை. கலாநிதி குருபரனின் விவகாரத்தில் இலங்கைச் சட்டத்திரணிகள் சங்கம் மௌனம் காக்கிறது. தனிப்பட்ட மருத்துவப் பேராசிரியர் ஒருவருக்கான அரசியல் பழிவாங்கல் நோக்குடனேயே அன்று அமைச்சர் பௌசி மருத்துவர்களுக்கான மேற்படி உத்தரவைப் பிறப்பித்திருந்தாக அன்றைய ஊடகங்கள் விமர்சித்திருந்தன.

ஆனால் இலங்கை மருத்துவர் சங்கம் அரசியல் வேறுபாடுகள் இன்றி மருத்துவர்கள் என்ற அடிப்படையில் ஒற்றுமையாக வேலை நிறுத்தம் செய்ததால், அந்த உத்தரவை ஜனாதிபதியே வாபஸ் பெறும் நிலை ஏற்பட்டிருந்தது. ஆனால் இங்கே கலாநிதி குருபரன் தமிழர் என்பதாலும் தமிழ்த்தேசிய அரசியல்நோக்கு நிலையில் அவர் கருத்துக்களை வெளியிட்டுவதாலும் பழிவாங்கப்படுகிறார் என்பது கண்கூடு.

-இராணுவ அதிகாரியின் கடிதம்-
ஏனெனில், இலங்கை இராணுவத் தரைப்படையின் சட்டப் பணிப்பாளரின் கேள்விக்குக் கொழும்பில் உள்ள பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு செவிசாய்த்திருக்கிறது. அதற்கு யாழ் பல்கலைக்கழக உப வேந்தரும் கட்டுப்பட்டேயாக வேண்டும் என்ற நிலையும் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் அந்தத் தீர்மானத்தை எதிர்த்து இதுவரை எந்தவொரு நடவடிக்கைகளையுமே எடுக்கவில்லை என்பதும் விமர்சனத்துக்குரியதே.

20 ஆண்டுகளுக்கு முன்னர் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த இராணுவ அதிகாரிக்கு 2015ஆம் ஆண்டு பதவியுயர்வு வழங்கப்பட்டிருக்கிறதென்றால், அந்த இராணுவ அதிகாரிக்கு எதிரான கொலை வழக்கில் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரைரையாளர் ஒருவர் எவ்வாறு முன்னிலையாக முடியுமென்ற கேள்வியும் சந்தேகமும், யாழ் பல்கலைக்கழகச் சட்டத்துறைக் கல்வியின் நன்மைக்கானதல்ல.

மாறாக அந்தக் கேள்வியும் சந்தேகமும். பௌத்ததேசியச் சிந்தனையில் இருந்து உதித்ததே. இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கொதிராகத் தமிழ்ச் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகக் கூடாதென்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறதெனலாம். ஆகவே இலங்கை நீதித்துறை பௌத்ததேசிவாதச் சிந்தனையின் நோக்கில் செயற்படுகிறது. கல்வி உயர்கல்வி அமைச்சும் அவ்வாறுதான் செயற்படுகின்றதென ஏலவே நான் முன்னைய அரசியல் பத்தி எழுத்துக்களில் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

இராணுவத்தின் தேவைக்கேற்ப பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவும் பல்வேறு சந்தர்ப்பங்களில் செயற்படுகின்றது. ஆனால் விரிவுரையாளர் ஒருவரைக் குறிப்பிட்ட பணியொன்றில் இருந்து நிறுத்த வேண்டுமென்ற தடையுத்தரவு, இது முதற்தடவையே. ஆனால் இது கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில் தீர்மானிக்கப்பட்டதல்ல. மைத்திரி- ரணில் அரசாங்கம் பதிவியில் இருந்தபோதே எடுக்கப்பட்ட முடிவு.

-பேராசிரியர் விக்னேஸ்வரன்-

அதேபோன்று யாழ் பல்கலைக்கழக உபவேந்தராகப் பதவி வகித்திருந்த பேராசிரியர் ரட்னம் விக்னேஸ்வரன். கடந்த ஆண்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோது திடீரென விலக்கப்பட்டிருந்தார். செயல்திறன் போதியதாக இல்லையென்ற குற்றச்சாட்டிலேயே அவரை விலக்குவதாக ஜனாதிபதி செயலகம் அப்போது கூறியிருந்தது.

ஆனால் உபவேந்தர் ஒருவரை ஜனாதிபதி பதவி நீக்குவதாக இருந்தால். பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு அறிவித்திருக்க வேண்டும். அல்லது அவர்களின் ஆலோசனை பெறப்பட்டிருக்க வேண்டும். ஆகவே உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாமலேயே சிலருடைய அழுத்தங்களினால் மைத்திரிபால சிறிசேன, பேராசிரியர் விக்னேஸ்வரனை விலக்கியிருக்கிறார். அன்று அவருக்கு இழைக்கப்பட்டது பெரும் அநீதியே.

ஆகவே கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், இலங்கை அரச கட்டமைப்பு என்பது ஈழத்தமிழர்களுக்கெதிராக இப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறதென்பதை வரலாற்று ரீதியாகக் காணமுடியும்.

Wigneswaran

 

-அமெரிக்கச் சட்டக் கல்லூரி-

சட்டத்துறைப் பேராசிரியர்கள் சட்டக் கல்வியையும் கற்பித்துக் கொண்டு நீதிமன்றங்களிலும் முன்னிலையாக முடியுமென அமெரிக்கச் சட்டத்துறைப் பேராசிரியர் அலிஸ் பேக்கர் (AliceBaker) கூறுகிறார். அமெரிக்கச் சட்டத்துறைக் கல்லூரிகளில் இந்த நடைமுறை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

சட்டத்துறைப் பேராசிரியர்கள் தமது கடமை நேரங்களில் சட்டத்தொழிலிலும் ஈடுபட முடியுமா என்ற என்ற தலைப்பில் அவர் தனது கட்டுரையில் விளக்கமளிக்கின்றார். 2001ஆம் ஆண்டில் இருந்து 2008ஆம் ஆண்டு வரை சட்டத்துறைப் பேராசிரியராகக் கடமையாற்றிய அலிஸ் பேக்கர், கற்பித்தலோடு சட்டத்தொழில்சார் நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டுமென வலியுறுத்துகின்றார்.

அப்போதுதான் தரமான நடைமுறைப் பயிற்சியுள்ள சட்டக் கல்வியை மாணவர்களுக்கு வழங்க முடியும் என்றும் அலிஸ் பேக்கர் தனது கட்டுரையில் கூறுகின்றார். வராமொன்றில் 168 மணித்தயாளங்கள் என்றும் அவற்றில் எவ்வாறு நேரத்தைப் பங்கிட்டுச் சட்ட விரிவுரைகளிலும் சட்டத் தொழிலிலும் ஈடுபட முடியும் என்ற தனது விளக்கத்தை அவர் பகுப்பாய்வு செய்கிறார். ஆகவே உலகத்தில் அதற்கு உதாரணங்கள் உண்டு.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான கல்வித் தரப்படுத்தல் 1972இல் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியில் கொண்டுவரப்பட்டு இன்று வரை அந்தத் தரப்படுத்தல் பல்வேறு வடிவங்களில் தொடருகின்றன.

உயர்கல்விக்கான பங்கடு இன விகிதாசாரத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதில்லை. மாறாக மாணவர்கள் பெறும் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே உயர்கல்விப் பங்கீட்டை இலங்கை அரசாங்கம் செய்கின்றது. ஆகவே குருபரன் விடயத்தில், ஏனைய சட்டத்துறைப் பேராசியர்கள், விரிவுரையாளர்கள்கூட அமைதிகாப்பது அல்லது அந்த விவகாரத்தை வெறுமனே கடந்து செல்வது என்பது இனரீதியான பார்வையே.

இதுவே ஒரு சிங்களச் சட்டத்துறை விரிவுரையாளருக்கு நடந்திருந்தால், இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் வாய் திறந்திருக்கும். வேலைநிறுத்தப் போராட்டமே நடந்தருக்கும். நீதித்துறைச் செயற்பாடுகள் நின்றிருக்கும்.

அதேவேளை, இலங்கை இராணுவம் ஈழத்தமிழர்கள் தொடர்பான விடங்களில், இலங்கை அரச திணைக்களங்களில் எந்தவேளையிலும் தலையிடும் அல்லது இலங்கை இராணுவம் சொல்வதையே பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு உள்ளிட்ட அரச திணைக்களங்கள் கேட்க வேண்டும் என்ற செய்தியும் கலாநிதி குருபரன் விடயத்தின் மூலமாகக் உறுதிப்படுத்தப்படுகின்றது.

-இராணுவத்துக்கு மரியாதை-

அதுவும் 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான ஒரு தசாப்பத காலம் சென்றுவிட்ட நிலையிலும், போர்க்குற்றம் மனித உரிமை மீறல் தொடர்பாகச் சர்வதேச நீதி விசாரணையே அவசியம் என்று கூறப்பட்டுவரும் சூழலிலும், இலங்கை இராணுவத்தின் முக்கியத்துவத்தையும் மரியாதையையும் இலங்கை அரசாங்கம் உயர் கல்வித்துறை ஊடாகப் பறைசாற்றியுள்ளதெனலாம்.

ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளரின் தீர்மானத்தில் சர்வதேச நீதியரசர்களையும் உள்ளடக்கிய கலப்புமுறை விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை இராணுவத்துக்கு இவ்வாறு வழங்கப்பட்டுள்ள மரியாதை, ஜெனீவாத் தீர்மானத்துக்கும் சவாலாகவே அமைந்துள்ளதெனலாம். அல்லது அந்தத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டு விட்டதென்ற முடிவுக்கும் வரலாம்.

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கூறிப் பெருமைப்படுகின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்த விடயம் தொடர்பாக மெளனமாக இருப்பது தொடர்பாகவும் கேள்விகள் எழாமலில்லை. இதனைத் தனியொரு குருபரனுக்கு எதிரான தீர்மானமாகவோ அல்லது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் கல்வித்துறை மீதான அக்கறையில் எடுக்கப்பட்ட முடிவாகவுமோ கருதிவிடலாகாது.

-தவறவிட்ட விடயங்கள்-
ஆகவே பல்கலைக்கழகச் சமூகம் கருத்திலெடுக்க வேண்டிய பிரதான விடயங்களில் கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக வரலாற்றுப் பாடநூல்களில் உள்ள பிழையான தகவல்கள் சுட்டிக்காட்டப்பட்டுச் சா்வதேச நியமங்களுக்கு ஏற்ப அமைய வேண்டுமென்ற கோரிக்கைகள் துறைசார்ந்த பேராசிரியர்களினால் உரிய முறையில் முன்வைக்கப்படவில்லை.

மொழியாக்கம் செய்யப்பட்ட பின்னர் தமிழ் மொழிமூலப் பேராசிரியர்களும் அதில் கையொப்பமிடுகின்றனர். ஆனால் வரலாற்று்க்கு மாறான திணிப்புகள் பற்றிச் சுட்டிக்காட்டினார்களா என்பது கேள்வியே.

குருபரன் விடயத்திலும் உரியமுறையில் நியாயங்கள், சா்வதேச விதிமுறைகள் தொடர்பாகச் சுட்டிக்காட்டப்பட்டு அழுத்தங்கள் கொடுக்கப்படவில்லை. பேராசிரியர் விக்னேஸ்வரன் விலக்கப்பட்டபோது. பல்கலைக்கழகப் பீடாதிபதிகள். பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் எவருமே அதற்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை. பல்கலைக்கழகத் தொழிற்சங்கம் கூட போராட்டம் நடத்தவில்லை.

அவ்வாறு போராட்டம் நடத்தப்பட்டு எதிர் நடவடிக்கைகள் அன்று எடுக்கப்பட்டிருந்தால் இன்று குருபரன் மீது இவ்வாறான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் பல்கலைக்கழச் சமூகம் அந்தப் பாரிய பொறுப்பில் இருந்து தவறிவிட்டதெனக் கூறினால், அங்கு மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை.

அதேவேளை, போரின் பின்னரான சூழலில், தமிழ்ச் சமூகத்தின் அரசியல், பொருளாதார மற்றும் கல்விச் செயற்பாடுகளில் யாழ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகச் சமூகத்துக்குப் பாரிய பொறுப்பு இருந்தது. ஆனால் அது பற்றிய ஆய்வுகள் எதனையுமே பல்கலைக்கழகத் தமிழ்ச் சமூகம் மேற்கொள்ளவில்லை.

அப்படி ஆய்வுகளை மேற்கொள்ள முடியாதென்று எந்தவொரு தடையுமில்லை. ஆனால் பல்கலைக்கழகத் தமிழ்ச் சமூகம் வெறுமனே கலைத்திட்டத்திற்கு உள் நின்றவாறு கற்பித்தல் செயற்பாடுகளில் மாத்திரமே ஈடுபடுகின்றது. துனிஷியாவில் 2010ஆம் ஆண்டு புரட்சி ஏற்பட்டு ஆட்சிமாறியவுடன், அங்குள்ள பல்கலைக்கழகச் சமூகம் கடந்த 30 ஆண்டுகள் பின்னோக்கியிருந்த அரசியல், பொருளாதார மற்றும் கல்வித்துறைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு எதிர்காலத்துக்கான சீர்திருத்தங்களில் ஈடுபட்டிருந்தன.

அவ்வாறே இந்தோனிஷியாவின் அச்சே மாநிலத்திலும் கல்விச் சமூகத்தினால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதனடிப்படையில், முன்னேற்றங்களுக்கான பொறிமுறைகள் வகுப்பட்டன.  ஆனால் பல்கலைக்கழகத் தமிழ்ச் சமூகம் அந்தப் பொறுப்புகளை ஏற்கத் தயங்குகின்றது. அல்லது அரசியல் காரணங்களைக் கூறித் தப்பித்துக்கொள்கிறது என்றும் கூறலாம்.

 

http://www.samakalam.com/அரசியல்/வரலாற்றுப்-பாடநூல்களில்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.