Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெல்சன் மண்டேலா நினைவுரை: உண்மைகள் உறைக்குமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெல்சன் மண்டேலா நினைவுரை: உண்மைகள் உறைக்குமா?

 

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2020 ஜூலை 23 , பி.ப. 01:27

 

சில கதைகளைக் கேட்கும் போது, நன்றாக இருக்கிறதே என்று தோன்றும். இன்னும் சில கதைகள் கடுப்பூட்டும்; சிரித்துவிட்டு அப்பால் நகரச் செய்யும்.   

ஆனால், உலக அரசியல் அரங்கில், அதிகார மய்யங்களில் இருப்பவர்களின் கதைகளும் இதற்கு விலக்கல்ல. சில கதைகளைக் கேட்கும்போது, தெளிவாகி விட்டார்களோ என்று எண்ணத் தோன்றும்; பின்னர் அவர்கள் தம் நடத்தைகள், அவர்கள் திருந்துவதற்கான வாய்ப்பே இல்லை என்பதை இடித்துரைக்கும்.   

இலங்கையர்கள் இதை நன்கறிவார்கள். அதிலும், குறிப்பாகத் தமிழர்கள், இதை நன்கு உணர்ந்திருக்கிறார்கள். ஆனாலும், இன்னமும் மேற்குலகின் மீதான நம்பிக்கை விதைப்புகள் குறையவில்லை.   

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குத்தேரஸ், தென்னாபிரிக்காவின் ஜோஹானஸ்பேர்க் நகரில், நெல்சன் மண்டேலா நினைவுரையை கடந்த வாரம் ஆற்றியிருந்தார். மிகுந்த சர்ச்சைக்குரியதாக மாறிவிட்ட, அந்த உரை சொல்லுகின்ற விடயங்கள் கவனிப்புக்குரியன. ஆனால், அவற்றைக் கணக்கில் எடுப்பதற்கு, அரசுகள் தயாரா என்பது ஒருபுறமிருக்க, குத்தேரஸ் தலைமையேற்றுள்ள ஐக்கிய நாடுகள் சபை கூடத் தயாரா என்பதே முக்கிய வினாவாயுள்ளது.  

image_1d6c07afe9.jpg 

முதலில், அந்தோனியோ குத்தேரஸ், தனது உரையில் குறிப்பிட்ட விடயங்களைச் சுருக்கமாகப் பார்த்து விடலாம்:   

“நண்பர்களே! உலகில் நிகழுகின்ற அநீதிகள், அநியாயங்கள் மீது, இந்தக் கொவிட்-19 பெருந்தொற்று, தீர்க்கமான ஒளியைப்  பாச்சியுள்ளது. உலகம் மிகுந்த நெருக்கடியில் உள்ளது. பொருளாதாரங்கள் எந்தவிதக் கட்டுப்பாடுமின்றிச் சரிந்து விழுகின்றன. இப்பெருந்தொற்று, உலகை நெருக்கும் தன்மையை எம்மனைவருக்கும் உணர்த்தி உள்ளது.   

“பல தசாப்த காலமாக, நாம் புறக்கணித்து வந்த சுகாதார அமைப்புகளின் செயன்முறைகளின் போதாமை, சமூகப் பாதுகாப்புக் குறைபாடுகள், கட்டமைப்புசார் சமத்துவமின்மை, சுற்றுச்சூழல் அழிவு, காலநிலை மாற்றத்தின் நெருக்கடிகள் போன்றவற்றை, கொவிட்-19 பெருந்தொற்று வெட்டவெளிச்சமாக்கி உள்ளது.   

“வறுமை ஒழிப்புக்கு, பல ஆண்டுகளாகப் போராடி நாம் சாத்தியமாக்கியதைச் சில மாதங்களில், இந்தத் தொற்று இல்லாமலாக்கி விட்டது. இன்னும் 100 மில்லியன் மக்கள், வறுமைக்குள் தள்ளப்படும் சாத்தியத்தை, எதிர்நோக்கி நிற்கின்றோம்.   

“இப்பெருந்தொற்றானது, நாம் உருவாக்கி வைத்திருக்கும் சமூகத்தின் பலமற்ற எலும்புகளில் காணப்படும் முறிவுகளை, ஓர் ‘எக்ஸ்‌ரே’ போல உள்ளூடுருவிக் காட்டியுள்ளது. இது, நாம் கட்டமைத்து உருவாக்கி வைத்திருக்கும் மாயங்களை, தவறான கற்பிதங்களை உடைத்துள்ளது.   
“குறிப்பாக, அனைத்து மக்களுக்குமான சுகாதார வசதிகளை, இலவசச் சந்தைகள் வழங்கும் என்ற பொய்யையும் ஊதியம் வழங்கப்படாத நலன்சார் கவனிப்பு, ‘வேலை அல்ல’ என்ற புனைவையும் இனவெறியற்ற ஓர் உலகில் நாம் வாழ்கின்றோம் என்பது மாயை என்பதையும் நாம் அனைவரும் ஒரே பாதையில்தான் பயணிக்கின்றோம் என்பது கட்டுக்கதை என்பதையும் இந்தக் கொவிட்-19 நமக்குத் தெரியப்படுத்தியுள்ளது.  

“உண்மை என்னவென்றால், கொரோனா வைரஸ் பெரும் தொற்றின் விளைவாலும், இவ்வருடம் உலகளவில் கிளர்ந்தெழுந்த பாரியளவிலான இனத்துவேசங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் காரணமாகவும் பூகோள அடிப்படையில் ஏற்பட்டுள்ள சமூக சமநிலைத் தளர்வால், உலகம் உடைவுறும் கட்டத்தில் உள்ளது. இந்த யதார்த்தத்தை நாம் ஏற்றாக வேண்டும்.   

“தனிநபர்களின் செல்வவளத்தின் அடிப்படையிலான ஒப்பீடொன்றைச் செய்வோமாயின், உலகில் அதிகபட்ச சொத்துடைய முதல் 26 செல்வந்தர்கள், உலகளாவிய ஏனைய அனைத்துச் சனத்தொகையின் பாதிக்கும் மேற்பட்ட மக்களது மொத்தச் சொத்தை விட, அதிகளவு செல்வம் படைத்தவர்களாகத் திகழ்கின்றனர்.   

“அதேவேளை, இனம், பால், வர்க்கம், பிறந்த இடம் போன்றவற்றால், சமத்துவமின்மை தீர்மானிக்கப்படுகிறது. புதிய தலைமுறையினருக்கு சமூகப் பாதுகாப்பு அவசியமாகின்றது. இதில், உலகளாவிய சுகாதார வழங்குதல், இலவசக் கல்வி மட்டுமன்றி, உலகளாவிய அடிப்படை வருமானம் போன்ற திட்டங்களும் அவசியமானவை. இவை குறித்து இனியாவது நாம் மனந்திறந்து பேச வேண்டும்”   

ஐ.நா: காலம் கடந்த கதை   

செயலாளர் நாயகத்தின் உரை, மிக முக்கியமான பல செய்திகளைச் சொல்கிறது. அந்தோனியோ குத்தேரஸ், மிகுந்த துணிவுடன் தனது கருத்துகளை முன்வைத்துள்ளதோடு, திறந்த சந்தைப் பொருளாதாரத்தை மய்யமாகக் கொண்ட முதலாளித்துவம் மீது, கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இது, அதிகார மய்யங்களில் இருப்பவர்களுக்கு (அரசாங்கங்கள், பல்தேசியக் கம்பெனிகள், தனியார்துறை) உவப்பானதாக இராது.   

இந்த உரை எழுப்புகின்ற பல கேள்விகளில் பிரதானமானது, உலகின் தலையாய அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை, இவ்வளவு காலமும் என்ன செய்தது என்பதேயாகும்.   

உலகில் அமைதியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டு, துணை அமைப்புகளின் ஊடு, நீதியையும் சமத்துவத்தையும் ஏற்படுத்த கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாகச் செயற்படும் ஓர் அமைப்பின் தலைவர், உலகளாவிய ரீதியில் சமத்துவமின்மையின் மோசமான முகத்தை வரைகின்றபோது, இதற்குப் பொறுப்பாளி யார்?  

image_130f6ec239.jpg

ஐக்கிய நாடுகள் சபை, முழுமை யாகச் செயற்பட வில்லை என்று சொல்லவியலாது. ஆனால், வினைத்திறனுடன் பயனுறுதி வாய்ந்த முறையில் செயற்பட்டதா என்பது கேள்விக்குரியது. இதன் பின்னால், பல நலன்கள் ஒளிந்திருக்கின்றன. இதை விளக்க, இலங்கை உதாரணமே போதுமானது.   

இலங்கையில் போர் உச்சமடைந்திருந்த வேளை, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் கொபி அனான் கவலை தெரிவித்தார். கவலை தெரிவித்திருக்க வேண்டிய காலங்களில் எல்லாம் கையைக் கட்டிக் கொண்டிருந்த பலர், காலம் கடந்து கவலை தெரிவித்தனர்.   

கண்டனம் தெரிவிக்க வேண்டிய இடங்களிலெல்லாம் கவலை தெரிவிப்பதும் அரசாங்கத்தைக் குற்றம் கூறுவதைத் தவிர்க்கும் முகமாக, இரு தரப்பினரையும் குற்றம் கூறிப் பேச்சுவார்த்தைகளில் இறங்குமாறு வற்புறுத்தி அறிக்கை விடுவதும் பயனற்ற செய்கைகள் மட்டுமல்ல, அவை எல்லாமே வெறும் மாயமாலம்.   

கொபி அனான் போல, வெட்கக் கேடான ஐ.நா பொதுச் செயலாளர் ஒருவர் இருந்திருக்க இயலாது. ஆனால், அவரையும் மிஞ்சுபவராக பான் கீ மூன் வந்து வாய்த்தார். இன்னொரு புறம் யோசித்துப் பார்த்தால், ஐ.நா சபை அண்மைக் காலத்தில், மிகவும் வெட்கக்கேடான ஒரு நிலைக்குத் தன்னைக் கீழிறக்கியுள்ளது என்கிற நிலையில், அந்தப் பதவிக்கு ஒருவர் வருவதாக இருந்தால், தனது நேர்மை, சுய மரியாதை, பெருமிதம் போன்ற விலைமதிப்பற்ற உடைமைகள் எல்லாவற்றையும் தியாகம் செய்ய ஆயத்தமாக இருக்க வேண்டும்.   

அப்படி இல்லாத பட்சத்தில், அவர் மிகவும் அவமரியாதைப்படவும் பலவிதமான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகவும் பதவியை இழக்கவும் நேரலாம். கொபி அனான், ஈராக் போர் தொடர்பாக, அமெரிக்காவுக்கு அதிருப்தி ஏற்படுத்துகிற விதமாக எதையோ சாடைமாடையாகச் சொன்ன பின்பு, அவர் தொடர்பாக நிதி மோசடி பற்றிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதை, நாம் நினைவு கூர்வது நல்லது.   

கொபி அனானுக்கு முன்பு பதவியிலிருந்த பூட்ரஸ் பூட்ரஸ் காலி, தனது முதலாவது தவணை முடியும் முன்பே, அமெரிக்காவின் ஆணைக்குக் கீழ்ப் படியாத விதமாகச் சிறிது பேசியதால், அவருக்கு இரண்டாவது தவணை மறுக்கப்பட்டது.  

கொபி அனான், சூடு கண்ட பூனையைப் பார்த்து, பாடங்கற்ற பூனை என்பதாலேயே, இரண்டாவது தவணையைப் பெற்றார். அதற்கு மேல் பதவி நீடிப்பு இல்லை என்ற தைரியத்தில், அவர் ஒரு வேளை வாய்திறந்திருக்கலாம். அதற்கே, நிதிமோசடிக் குற்றச்சாட்டுகள் மூலம், அவர் அவமதிக்கப்பட்டார். இந்தப் பாடங்கள் சொல்லும் செய்தி யாதெனில், ஒருவேளை அந்தோனியோ குத்தேரஸுக்கு இரண்டாவது தவணை கிடைக்காமல் போகலாம்.   
எதிர்காலம் குறித்து  

தனது உரையில் அந்தோனியோ குத்தேரஸ் வலியுறுத்திய விடயங்கள் முக்கியமானவை. ஆனால், அவை குறித்துப் பேசுவதற்கு அரசுகள் தயாராக இல்லை. இன்று பெரும்பாலான அரசுகள், தீவிர வலதுசாரி முதலாளித்துவ நிலைப்பாட்டில் இருக்கின்றன; அதன்வழித்தடத்தில் இயங்குகின்றன.   

முதலாளித்துவத்தின் அடியொற்றி, தனது அமைப்புகளையும் நிறுவனங்களையும் பெரும்பாலான அரசுகள் கட்டமைத்துள்ளன. இன்று முதலாளித்துவம் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், அது குறித்துப் பேசாமல் திசைதிருப்பலை அரசுகள் செய்கின்றன. சிறிய முரண்பாடுகள், பெரும் முரண்பாடாகின்றன; தேசியவாதம் கிளறிவிடப்படுகின்றது. இதன்மூலம் தமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள, அரசுகள் முனைகின்றனவேயன்றி, பிரச்சினைகளைத் தீர்க்க அவை முயலவில்லை. இது, எம்முன்னுள்ள முக்கியச் சவால் ஆகும்.  

எவ்வாறு, கொவிட்-19 சமூக அசமத்துவத்தின் அடிப்படைகளை இன்னொருமுறை வெளிக்காட்டியுள்ளதோ, அதேபோலவே அதிகார வர்க்கம் செயலாற்றாமல் தவிர்க்கின்ற இன்னோர் அம்சம், காலநிலை மாற்றம் உருவாக்கியுள்ள நெருக்கடி ஆகும்.  காலநிலை மாற்றமானது, வறுமையில் தவிக்கின்ற மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கத்தக்க கோரமான விளைவுகளை ஏற்படுத்த வல்லது. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள சிறந்த செயல் முறையை நாம் எட்டினாலும் கூட, மில்லியன் கணக்கான மக்கள் உணவின்மையால் நோய்களால் பாதிக்கப்படுவார்கள்.   

இது கட்டாய இடப்பெயர்வையும் உணவுக்கான போர்களையும் நீர் பற்றாக் குறையும் ஏற்படுத்த வல்லது. இதைச் சரியாகச் சொல்வதானால், காலநிலை மாற்றம் என்பது, கடந்த 50 ஆண்டுகளில் மனித குலம் முன்னேற்றம் கண்ட அபிவிருத்தி, உலகளாவிய சுகாதாரம், வறுமை ஒழிப்பு ஆகியவற்றை இன்னும் 50 ஆண்டுகள் பின்னோக்கிக் கொண்டு செல்லும் வல்லமை படைத்ததாக இருக்கிறது.   இப்போது நாம், இரட்டைச் சவாலை எதிர்நோக்கி இருக்கிறோம். இப்பெருந்தொற்று ஏற்படும் முன்னரே, காலநிலை மாற்றத்தின் விளைவுகள் பயங்கரமாக இருந்தன. அந்தப் பயங்கரத்தை, கொவிட்-19 இருமடங்காக்கி உள்ளது.   

இந்தப் பெருந்தொற்றையும் காலநிலை மாற்றம் உருவாக்கியுள்ள நெருக்கடியையும் எதிர் கொண்டு, அதற்கான தீர்வுகளை நோக்கி நகர்வதற்கு, உலகப் பொருளாதார செயல்முறை மீதான அடிப்படையான மாற்றம் அவசியமாகிறது. நிதி மூலதனத்தை மய்யப்படுத்திய உலகப் பொருளாதார கட்டமைப்பு மாற்றம் பெறாமல், நின்று நிலைக்கக் கூடிய நீண்டகால நோக்குடைய தீர்வொன்றைக் காண இயலாது.  

அந்தோனியோ குத்தேரஸ் தனது உரையில், கொவிட்-19 பெருந்தொற்று உடைத்தெறிந்த கற்பிதங்களையும் மாயைகளையும் பற்றிக் குறிப்பிட்டார். அவை அனைத்தும், முதலாளித்துவம், திறந்த சந்தை, கட்டற்ற வர்த்தகம், உலகமயமாக்கல் ஆகியவை உருவாக்கிய மாயைகளே ஆகும். இந்த உண்மைகள், எட்டவேண்டிய காதுகள் உண்டு. அவற்றைக் கேட்க அக்காதுகள் தயாராக இருக்கின்றனவா என்பதே கேள்வி.   

இந்த உண்மைகள், உறைக்குமா என்பதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஏனெனில், மக்களின் திரட்சியாக வெகுண்டெழுந்த போராட்டங்கள், அதிகாரத்தை அசைத்து உண்மையை உறைக்கச் செய்யும். 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நெல்சன்-மண்டேலா-நினைவுரை-உண்மைகள்-உறைக்குமா/91-253560

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.