Jump to content

"குஞ்சம்மா" ரிஷபன்


Recommended Posts

பதியப்பட்டது
"குஞ்சம்மா"
ரிஷபன்
சாருமதி சட்டென்று திரும்பிப் பார்த்தாள். அவளை யாரோ கூப்பிட்ட மாதிரி. அப்புறம்தான் ஞாபகம் வந்தது. அந்தப் பெயரில் அழைக்கிற ஒரே ஒருத்தரைப் பார்க்கத்தான் இன்று ஸ்ரீரங்க விஜயம். ரெயில்வே ஸ்டேஷனில் சிறு பெட்டியுடன் தனியே இறங்கியவளை அந்த அதிகாலை இருட்டில் யார் கவனிக்கப் போகிறார்கள்..
ரொம்ப நாளாச்சு. இப்படி விஸ்ராந்தியாய் வெளியே வந்து. எப்போது ஏசி கார். கூடவே தம்பூர் போடுகிற பெண். சுருதிப் பெட்டி.. சில சமயங்களில் கணவர் ராஜகோபாலன்.. எப்போதாவது மகள் மதுவந்தி..
இன்று யாரும் வேணாமென்று தனியே.
'நிஜமாத்தான் போறியா..'
"ஆமா'
'ஒரு வாரத்துக்கா'
'ஆமாப்பா' கேள்வி மேல் கேள்வி கேட்ட கணவரைக் குழந்தை போலப் பார்த்தாள்.
'ஏதாச்சும் கச்சேரி பேச வந்தா..'
"பார்த்துக்கலாம்பா.. என் நம்பரைத் தரவேணாம்..'
'ஆர் யூ ஓக்கே'
புருவம் சுழித்து அவளைப் பார்த்தவரை நேருக்கு நேர் பார்த்து சிரித்தாள்.
"ஐயாம் பைன்'
ஏசி டூ டயரில் ஏற்றிவிட்டு கடைசி நிமிடம் அவள் மனம் மாறுமா என்பது போலப் பார்த்தார்.
'ஸீ யூ பா.. டேக் கேர்'
இதை விடத் தெளிவாய் அவள் சொல்லமுடியாது. ராஜகோபாலன் திரும்பி நடந்து போனபோது லேசாய் கோபம் தெரிந்தது. இரவு பத்தரைக்கு என்றாலும் அத்தனை தூக்கக் கலக்கத்திலும் சிலர் அவளை அடையாளம் கண்டு கொண்டார்கள். சிலர் நாசூக்காய் ஒதுங்க ஓரிருவர் அருகே வந்து சிரித்தார்கள்.
'உங்க பாட்டுன்னா ரொம்பப் பிடிக்கும் மேடம்'
'ம்..'
'இப்ப எதுவும் கச்சேரியா மேடம் திருச்சில'
'இல்லம்மா. பர்சனல்'
'ஓ..'
அவள் இசையை நேசிக்கிறவர்கள்.. ஆத்மார்த்தமான அன்பில் வழிபவர்கள்.. மெல்ல நகர்ந்து குட் நைட் சொல்லிப் போனபோது அந்த நிமிடம் அவர்களுக்காய் ஏதாவது பாடலாமா என்று தோன்றிவிட்டது அவளுக்கு.
இதுதான்.. இந்த குணம்தான்.. அவளை இன்னமும் ஜீவனோடு வைத்திருக்கிறது.. அதுவே சிலரிடம் அவளை கேலிக்கு ஆளாக்குகிறது..
'அன்னிக்கு ஒரு கல்யாணத்துல பார்த்தேன்.. உக்கிராண அறையில் இவ ஒரு கிழிச பாய் மேல உக்கார்ந்துண்டு நகுமோமு பாடிண்டிருக்கா.. சுத்தி சமையக்காராளும்.. எச்செல எடுக்கிற மாமிகளும்..என்ன கூத்து இது'
இவள் காது கேட்கவே விமர்சனம்.
'மைக் செட் இல்ல..எல்லாம் சேரிக் கூட்டம்..புள்ளையார் கோவிலாம்.. கும்பாபிஷேகமாம்.. வந்து பாடுவீங்களான்னு கேட்டதும் உடனே சரின்னுட்டாளாம். போக வர ஆட்டோவாம்..'
'புரட்சிக்காரின்னு நினைப்பு'
லோயர் பர்த்தில் படுத்திருந்தவளுக்கு நினைவலைகளின் அதிர்வுகள். தூக்கம் வரவில்லை. எதனால் கிளம்பினாள் என்று புரியவில்லை. அதுவும் இன்றே கிளம்பணும்போல ஒரு படபடப்பு..
'குஞ்சம்மா'
குரல் மனசுக்குள் கேட்டுக் கொண்டே இருக்கிறது. எந்த வேலையும் பார்க்க விடாமல். இன்று சாதகம் செய்யும் போதும். அந்த நிமிஷம் தான் முடிவெடுத்து விட்டாள்.
'நான் ஸ்ரீரங்கம் போறேன்.. ஒரு வாரம் அங்கேதான்'
சாருமதியின் குணம் தெரியும் அவள் தீர்மானித்து விட்டால் அவ்வளவுதான். அவசரமாய் டிக்கட் ஏற்பாடு செய்து வந்து ஏற்றியும் விட்டாச்சு. ராஜகோபாலன் சும்மா இல்லை. போகும்போதே ஸ்ரீரங்கத்திற்கு போனும் செய்து விட்டார். ' அவ தனியா வரா'
ரயிலடியை விட்டு வெளியே வந்தபோது ஆட்டோக்காரர் வந்தார்.
'ஆட்டோ வேணுமா'
பதில் சொல்வதற்குள் கைப்பெட்டியை யாரோ பிடுங்கிய மாதிரி இருந்தது.
'யா.. யாரு.'
உடம்பெல்லாம் தேமல். முகத்தில் சிரிப்பு வந்த சுவடே இல்லை. 'ஹ்ம்ம்' என்கிற கனைப்பு மட்டும்.
"சேது.. நீயா"
கோணலாய் சிரித்தான். நிச்சயம் அவளை விட வயசு கூடுதல்தான் அவனுக்கு. ஆனால் சாரு அவனை பெயர் சொல்லிக் கூட அழைத்ததில்லை.
"அம்மா சொன்னா.. நீ வரேன்னு"
அம்மா. எப்படித் தெரியும். சாரு விக்கித்தாள்.
"வா.. போகலாம்"
"ஆட்டோல போலாம் சேது"
உள்ளடங்கி உட்கார சேது நுனியில் பட்டும் படாமலும் அமர்ந்தான். தெருப் பெயர் சொன்னாள். ஆட்டோ கிளம்பியது.
"அம்மா சொன்னாளா.. நான் வரேன்னு.. எப்படி தெரியும்.."
இதென்ன குழந்தைத் தனமாய் ஒரு கேள்வி என்பது போல சேது அவளைப் பார்த்தான்.
"போன வாரமே சொல்லிட்டா.. நீ வரப் போறேன்னு.. இன்னிக்கு காலைல அவதான் எழுப்பினா. போடா ஸ்டேஷனுக்குன்னு"
சாருமதிக்கு அழுகை வந்தது.
"யார் வரப் போறான்னு கேட்டேன்.. நம்ம குஞ்சம்மாடான்னு சிரிச்சா.. அம்மா சிரிசசு ரொம்ப நாளாச்சு தெரியுமோ"
ஆட்டோ போன வேகம் குறைவு போலத் தோன்றியது சாருமதிக்கு. அப்போதே அந்த வினாடியே அம்மாவைப் பார்க்கணும்..
'என்னவோ பெத்த அம்மா மாதிரில்ல துள்ளறா..' குரல்கள் மறுபடி கேட்க ஆரம்பித்துவிட்டன.
'போடி வெளியே.. பாட்டு கத்துக்கணும்ன.. சரின்னு விட்டா இப்ப சொத்துக்கு ஆசை வந்துருச்சா'
'எனக்கு எதுவும் வேணாம்.. அம்மா மட்டும் போதும்'
'இந்த ஜாலக்கெல்லாம் வேணாம். இழுத்து இழுத்து ஸ்வரம் பாடறதுல்லாம் மேடையோட வச்சுக்கோ.. '
அம்மா எதுவும் பேசாமல் படுத்திருந்தாள் அன்று. சாருமதியை வலுக்கட்டாயமாய் வெளியேற்றியபோது. அன்றும் ஸ்டேஷனுக்கு சேதுதான் ஓடி வந்தான்.
'சாதகம் பண்றதை விட்டுராதேன்னு அம்மா சொல்லச் சொன்னா.. இந்த விபூதியை இட்டுக்க சொன்னா'
'நீயே இட்டு விடு சேது'
ஒரு மகானைப் போல நெற்றியில் பூசி விட்டான். கண்ணில் விழுந்து கரித்தது.
'அம்மாவைப் பார்த்துக்கோ'
தலையாட்டினான். போய் விட்டான்.
இத்தனை நாட்கள் கழித்து இதோ மீண்டும் அம்மாவைப் பார்க்க..
வீடு சூரிய வெளிச்சத்தின் வரவிற்காகக் காத்திருந்தது. ஆட்டோவை அனுப்பி விட்டு படியேறினாள். உள்ளே ஹாலில் இருட்டு. கூடத்தின் மூலையில் கட்டில் அதே இடத்தில். பழம்புடவை போர்த்திக் கொண்டு படுத்திருந்த உருவம்.
சேது பின் பக்கம் கிணற்றடிக்குப் போய் விட்டான்.
'குஞ்சம்மா'
அம்மாவின் குரல் தீனமாய்க் கேட்டது. ஒரு காலத்தில் கணீரென்று இவளுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்தவளா...
"அ..ம்மா" ஓடிப் போய் அவள் அருகில் நின்றாள்.
''உக்காருடி' சைகை செய்தாள்.
"எப்படி இருக்கே"
"ம்ம்.. என்னம்மா ஏன் என் கிட்ட சொல்லல"
அம்மா சிரித்ததில் நிறைய அர்த்தங்கள்.
"பாடிண்டிருக்கியா"
"ம்ம்"
"ரெண்டு நாள் என் கூட இருக்கணும்னு தோணித்தா"
"ஆமாம்மா"
"தெரியும். நீ வருவேன்னு.. போ குளிச்சுட்டு வா. பூஜை ரூம் இப்போ பொம்மனாட்டி கை படாம சோபை போயிடுத்து.. சேதுதான் இப்போ விளக்கேத்தறான்"
கிணற்றடிப் பக்கம் போனாள், சேது அம்மாவின் புடவைகளை அலசி உலர்த்திக் கொண்டிருந்தான். ஆங்காங்கே கிழிசல்.
அவனும் அன்னியம் தான். அவளைப் போல. ஆனால் அவனுக்கு எந்தத் தொல்லையும் வரவில்லை. அவனை விரட்டவில்லை யாரும். போன வருஷம் அம்மாவைப் பற்றி கேள்விப்பட்டு அவள் இங்கே வந்தபோது சேது இருந்தான். பார்த்ததும் வெளிப்பார்வைக்கு தெரியாமல் ஒரு சிலிர்ப்பு. அழுக்கு வேட்டி. காவித் துண்டு. அவனைப் பார்க்கவே என்னவோ செய்தது. ஆனால் மிக நாசூக்காய் அதைக் காட்டிக் கொள்ளாமல் அம்மாவை நமஸ்கரித்தாள்.
"அம்மா.. உங்க கிட்ட பாட்டு கத்துக்கணும்னு வந்திருக்கேன்மா"
அம்மா அப்போது இன்னும் கொஞ்சம் தெம்பாய் இருந்தாள். கொல்லைப் பக்கம் போக நடக்க முடிந்தது. புடவையை தானே அலசி உலர்த்தினாள். துலா ஸ்னானத்திற்கு காவேரி போனாள்.
சரியென்றும் சொல்லவில்லை. போ என்றும் விரட்டவில்லை. கூடத்தில் தன் பெட்டியை வைத்துவிட்டு அம்மா முன் அமர்ந்தவளை கவனிக்காதவள் போல சேதுவிடம் ஏதோ ஜாடை செய்தாள்.
பார்த்தாலே அசூயை வழிகிற அந்த ரோக உடம்பிலிருந்து சாஸ்வதமான ராகம் பீரிட்டுக் கிளம்பியது.
தோடியை ஆலாபனை செய்தான். கொஞ்சமும் பிசிர் தட்டவில்லை. அது சேது இல்லை.. கண்ணை மூடிக் கொண்டு கேட்டால். யாரோ ஒரு மகா வித்வான்.
சாருமதிக்கு ஏதோ புரிந்தது. எழுந்து அம்மாவை நமஸ்கரித்தாள். திரும்பி சேதுவையும். சேதுவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. யாரையோ அவள் நமஸ்கரிக்கிறாள் என்பதுபோல அமர்ந்திருந்தான்.
"யார்னே தெரியல.. கேட்டா பேர் மட்டும் சேதுவாம்.. என்ன பிறவியோ.. கர்மாவைக் கழிச்சுட்டு போக வந்திருக்கு. போடான்னாலும் கேக்கல.. கூடவே ஒட்டிண்டு..'
அம்மா சிரித்தாள்.
சாருமதி இப்போது தன் பால்யத்திற்கு திரும்பி விட்டாள். சங்கீத பாடம் ஆரம்பித்த நாட்கள். குருவே சரணம். குருவே தெய்வம்.
அடுத்தடுத்த நாட்களில் அம்மாவுக்கு இவள் மீதும் கரிசனம் திரும்பியது. இது நாள் வரை இருந்த பாடாந்தரம் மறந்து புதிதாய் ஒரு உலகத்தில் பிரவேசித்த மாதிரி. ராஜகோபாலன் எப்போது அழைத்தாலும் 'அப்புறம் பேசலாமே' என்று தவிர்த்து அம்மாவின் அருகிலேயே இருந்தாள். ஒரு தடவை அவள் தாய் மனசு தளும்பி விட்டது. மதுவந்தியின் பிஞ்சுக் குரல் கேட்டு.
'வந்துருவேன்டா செல்லம்.. பிளீஸ்டா.. பாட்டி இருக்காளோல்லியோ.. உனக்கு.. எதுவானாலும் கேளுடா'
அப்புறம் அன்று புது சிட்சையில் மகள் மறந்து போனாள்.
சேதுவின் குரல் கேட்டது. "குளிச்சாச்சா"
அட.. தன்னை மறந்து இது என்ன.. வேகமாய் வெளியே வந்தாள். தலைக்கு துண்டை சுருட்டி வைத்துக் கொண்டு.
அழகாய் ஸ்ரீசூர்ணம் நெற்றியில்.. அம்மாவுக்குப் பிடிக்கும்.. ஆண்டாள் மாதிரி இருக்கேடி.. பூஜை அறை ஒரு வித நெடி அடித்தது. துடைத்து சுத்தம் செய்ய அரை மணி ஆனது. இரு குத்து விளக்குகளையும் சேது தேய்த்து வைத்திருந்தான். ஐந்து திரிகளையும் போட்டு விளக்கேற்றினாள். ஊதுபத்தி மணம் கமழ்ந்தது. கூடம் பிரகாசமானது.
பாடினாள். இந்த நிமிஷம் யார் கைதட்டலும் தேவையில்லை. ஆராதனை போல. மனம் விட்டு. மனம் லயித்து. மனம் கசிந்து. ராகம் குழந்தையாய் மாறி கூடம் முழுக்க தவழ ஆரம்பித்தது. அது தவழ்ந்த இடமெல்லாம் பூக்களின் வாசனை..
அம்மாஎப்போது எழுந்தாள் என்று தெரியவில்லை.. எப்படி நடந்து வந்தாள் என்று புரியவில்லை.. ஏதோ ஒரு உணர்வில் கண் விழித்துப் பார்த்தபோது அம்மா அவள் மடியின் அருகில் வந்து.. சாருமதி உடனே பற்றிக் கொண்டு விட்டாள்.
"அம்மா"
சேதுவுக்குக் கூட கண்களில் ஆச்சர்யம். உணர்ச்சியே காட்டாத பரப்பிரும்மம்.
"நன்னா இருப்பேடி குழந்தே.. ஷேமமா இருடி"
அம்மாவின் எச்சில் தெறித்தது அவள் மேல். தன் புடவையால் துடைத்து விட்டாள். இருவருமாய் அம்மாவை மெல்லப் பற்றிக் கொண்டு போய் கட்டிலில் விட்டார்கள். கஞ்சியை மெல்ல புகட்டி விட்டாள். தன் எலும்புக் கையால் அம்மா சாருவைப் பிடித்துக் கொண்டு விட்டாள். விடவே இல்லை.. கடைசி மூச்சு பிரிகிறவரை.
அக்கம்பக்கம் வந்தார்கள். சொந்தங்களும்.
பரபரவென்று இறுதிக் காரியங்கள். திருமங்கை மன்னன் படித்துறையில் கொழுந்து விட்டெறிகிற நேரம் வரை சாரு மனசுக்குள்ளேயே பாடிக் கொண்டிருந்தாள். கொள்ளிடத்தில் குளித்து வீடு திரும்பி அம்மாவின் கட்டில் முன் அமர்ந்து மறுபடியும் வாய் விட்டு.. சேதுவும் கூடவே.
அம்மா வந்தாள். 'போதும்டி குழந்தே.. எனக்கு திருப்தியாச்சு.. கிளம்புடி.. '
ரெயிலுக்கு சேது வந்தான். அவன் கையிலும் ஒரு துணிப்பை.
எதுவும் பேசவில்லை. இவளை பெட்டியில் ஏற்றி விட்டான். திரும்பிப் பார்க்காமல் போய்விட்டான்.
சென்னை எக்மோரில் ராஜகோபாலனுடன் மதுவந்தியும் வந்திருந்தாள்.
"அ..ம்மா" அந்தக் குழந்தை அழுதபோது இந்த வளர்ந்த குழந்தையும் அழுததை எல்லோரும் தான் பார்த்தார்கள்.
 
 
(நன்றி : கல்கி சீஸன் ஸ்பெஷல் )
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இசை இலையில் ரசம்போல் ஓடுவதில்லை ஆனால் இதயத்துக்குள் புகுந்து விட்டால் போதும் இரத்த நாளங்களில் எல்லாம் புகுந்து புறப்படும்...... அருமையான கதை அபராஜிதன் நன்றி........!   🌹

  • 4 weeks later...
Posted
On 1/8/2020 at 20:41, suvy said:

இசை இலையில் ரசம்போல் ஓடுவதில்லை ஆனால் இதயத்துக்குள் புகுந்து விட்டால் போதும் இரத்த நாளங்களில் எல்லாம் புகுந்து புறப்படும்...... அருமையான கதை அபராஜிதன் நன்றி........!   🌹

நன்றி தல :)

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.