Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை நடாளுமற்றத் தேர்தல் 2020 – தமிழர் எடுக்க வேண்டிய நிலை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நடாளுமற்றத் தேர்தல் 2020 – தமிழர் எடுக்க வேண்டிய நிலை.

elections-300x169.jpg

காப்புச்  விளங்கிய தமிழரது ஆயுதபலம் மௌனிக்கப்பட்டநிலையில் இன்று மிஞ்சியிருப்பதென்னவோ வாக்குச் சக்தி மட்டுமே. அப்படியென்றால் 30ஆண்டுகால ஆயுதப்போராட்ட காலத்தில் தமிழ் மக்கள் வாக்குச் சக்தியைப் பயன்படுத்தவில்லையா(?) என்ற வினா எழுவது தவிர்க்கமுடியாதது. அது யதார்த்தபூர்மானதும் கூட. வாக்குச் சக்தியூடாக தமிழர்தரப்பாக யார் நாடாளுமன்றம் சென்றாலும் தமிழர்கள் தொடர்பான செயல்நிலைக் கையாளுகைத் தரப்பாகவும், சிறீலங்கா அரசுக்கும் அனைத்துலக தரப்புக்கும் ஆணித்தரமாகத் தமிழர் நிலைப்பாட்டை உரைக்கும் தரப்பாகவும், 2009 முள்ளிவாய்க்கால் வீழ்ச்சிவரை தமிழீழ விடுதலைப் புலிகளே இருந்தார்கள்.

2009இன் பின்னான காலம் என்பது தமிழினம் திக்குத்தெரியாத காட்டில் விட்டது போன்ற நிலையில், வழிகாட்டுவார்கள் என்று நம்பிய கூட்டமைப்பு இன்று குறுஅமைப்பாக மாறியுள்ள சூழலில், 16ஆவது நாடாளுமன்றத் தேர்தலை ஈழத்தீவும் தமிழினமும் எதிர்கொண்டு நிற்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வாக்களித்த தமிழ் மக்களின் நலனைப் புறந்தள்ளியதோடு, இன்று தமிழரசுக் கட்சியாகக் குறுகிவிட, ஒன்றில் இருந்து ஒன்று என்பதுபோன்று பல்வேறு கட்சிகளாகப் பல்கிப்பெருகி நிற்கும் சூழலை இதுதானே சனநாயகத்தின் உச்சம் என்றும், பல்கட்சி ஆட்சிதானே சனநாயகத்தின் அடிப்படையென்றும் கொண்டாடுவோர் கொண்டாடட்டும் எமக்கென்ன என்று கண்மூடிக்கடந்து கடந்து செல்ல முடியுமா?

கடந்த 72 ஆண்டுளாக இலங்கையின் சனநாயகம் தமிழினத்தை எப்படிக் காவுகொண்டு வருகின்றது என்பதைப் பட்டறிவு சுட்டிநிற்க, எதிர்வரும் தேர்தற் களத்திலே ஒவ்வொரு தமிழ் வாக்காளரும் தீர்க்கமாகச் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தினைச் களநிலை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழர் தாயத்திலே (வட-கிழக்கிலே) தமிழரது பூர்வீக நிலங்களைப்பறித்து, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுவி இனப்பரம்பலை மாற்றியமைத்து வருகின்றபோதும், வாக்களிப்பு என்று வரும்போது இரு தேசங்களாகவே எப்போதும் பிரிந்துநிற்கும் நிலையை மாற்றியமைத்துத் தமிழினத்தின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இல்லாமற் செய்வதூடாக, அரசியலரீதியாகவும்(0)சுழியத்தை நோக்கித் தள்ளி, முள்ளிவாய்க்காலைப் போன்று புதைத்துவிடும் வகையில் மிகவும் சாதுரியமாகக் கையாளப்படும் நிலையைத் தமிழினம் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதிலேயே அடுத்த கட்ட அரசியற் செயற்பாடு தங்கியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்தோர் 2009வரை ஒரு தோற்றப்பாட்டையும் 2009இன் பின் மாறுபட்டதொரு தோற்றப்பாட்டையும் காட்டியதன் விளைவாக அதனது கூட்டானது உடைந்து சிதறுண்டு நலிந்துவிட்ட ஒரு தரப்பாக நிற்கிறது. தமிழரசுக்கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி,தமிழீழ விடுதலைக் கழகம் என்று கூட்டாக இருந்தவரை அரசியல்ரீதியாக அரசினது கையாட்களல்லாத தமிழருக்கான ஒரு தரப்பாக என்றாலும்; உள்ளரரெனத் தமிழர்கள் எண்ணி நின்றவேளையிற் சிதைவடைந்து நிற்கிறது. அதேவேளை புற்றீசல்கள் போற் பல்கிப்பெருகிவிட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் குறித்து ஆழமாகத் தமிழினத்தின் அலைவுகளோடும், வாழ்வியலோடும் இணைத்தே இந்த நாடாளுமன்றத் தேர்தலை வாக்களிக்க இருக்கும் ஒவ்வொரு தமிழ்க்குடிமகனும் நோக்க வேண்டியது அவசியமாகும். ஆயுதப் போராட்ட மௌனிப்பின் பின்னரான சிங்களத்தின் செயற்பாடுகள் தமிழினத்தை அரசியல்ரீதியாகவும் முறியடித்துவிடும் முனைப்போடு காய்நகர்த்தி வருகிறதென்பதைச் சிங்களத்தின் அரசியலை உற்றுநோக்கும் அனைவரும் அறிவர்.

இந்தத் தேர்தற்களத்தையும் சிங்களம், குறிப்பாக ஆளும்தரப்பானது தனது படைபலமுட்பட அனைத்து வளங்களையும் கொரொனோவைச் சாட்டாகப் பற்றிக்கொண்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நோக்கி நகர்த்திவரும் சூழலிற் தமிழர்களும் பல்வேறுகட்சிகளாகி உதிரிகளாக மாறியுள்ள ஆரோக்கிமற்றதொரு நிலையே தென்படுகின்றதெனலாம். இந்தப் பேராபத்தான நிலையில் ஈழத் தீவிலே வாழும் தமிழர்களனைவரும் மிகவும் சரியாகச் சிந்தித்து முடிவெடுத்து வாக்களிக்க முன்வரவேண்டியது அவசியமானது. இங்கு போட்டியிடும் வேட்பாளர்களை எப்படித் தேர்வு செய்தல் என்பதை மிகவும் தீர்க்கமாக முடிவுசெய்ய வேண்டும். இங்கே அறிந்தவர், தெரிந்தவர், எமது அயலவர், எமது உறவினர், நண்பர் மற்றும் இன்னொருமுறை வாய்ப்பளிப்போம் போன்றவற்றைக் கடந்து ஒரு வாக்குப் போராளிகளாகத் தமிழினம் சிந்திக்க வேண்டிய காலகட்டமாக இந்தத் 2020 தேர்தற்காலம் உள்ளது.

ஏன் வாக்குப்போராளிகளாகச் சிந்திக்க வேண்டும்?

இன்றுள்ள எதேச்சதிகார அரசின் அரசுத்தலைமை முதல் அடிமட்டப் படைக்கட்டுமானங்கள் மற்றும் அரசகுடியியற் குமுகாய அமைப்புகள் வரை மேலோங்கிநிற்கும் சிங்கள பௌத்த மேலாதிக்கப் போக்கை முறியடிக்க வேண்டிய களச்சூழலைக் காத்திரமாக எதிர்கொள்ளத் தமிழரிடம் தற்போதுள்ள ஆயுதமாக இருப்பது வாக்குச்சக்தி மட்டுமே என்பதைத் தமிழினம் அறியாததல்ல. இலங்கை நாடாளுமன்றூடாக எந்தவொருகாலத்திலும் தமிழருக்கு நியாயமான தீர்வொன்றைப் பெறமுடியதென்ற உண்மையைப் புரிந்துகொண்டு குறைந்தபட்சம் தமிழினத்தின் நியாயத்தைத் துணிவோடு முன்வைக்கக் கூடியவர்களாகவும், தமிழ்தேசியத்தை நிலைநிறுத்தக்கூடியவர்களாகவும் உள்ள வேட்பாளர்களை இனங்கண்டு தெரிவுசெய்ய வேண்டிய வரலாற்றுக் கடமையைச் சரியாகச் செய்யவேண்டியது அவசியமாக உள்ளதைத் தமிழினம் புரிந்துகொண்டு செயற்படுமாக இருந்தால் மட்டுமே அரைஞாண்கயிறாவது தப்பும். இல்லையேல் அதையும் உருவிச் சிங்களத்திடம் சலுகைகளைப் பெற்றுத் தருகிறோம் என்று கொடுத்துவிடுட்டுச் சென்றுவிடுவார்கள் என்பதைக் கடந்தகாலத்திற் தமிழர் தரப்பென்றும் எதிர்கட்சியென்றும் நல்லாட்சியின் பங்காளரென்றும் கூறியவாறு ஆற்றிய உரைகள் முதல் செயற்பாடுகள்வரை மீள்நினைவூட்டிப் பார்ப்பதனூடாக காத்திரமான பங்காளர்களாகத் தமிழ்வாக்காளர்கள் செயற்படவேண்டியநிலை குறித்து ஆழமாக உற்று நோக்க வேண்டும். இன்றைய சலுகைகளுக்காக வாக்களித்தல் ஊடாக நாளைய எமது தலைமுறையை அழிக்கும் செயற்பாட்டிற்குத் துணைபோகும் செயற்பாடா அல்லது உரிமைககளுக்காக வாக்களித்து எமது அடுத்தலைமுறையை வாழவைக்கும் செயற்பாடா சிறந்தது என்று சீர்தூக்கிப்பார்த்து வாக்குப்போராளிகாகச் சிந்தித்து வாக்களித்தல் அவசியமாகும்.

உரிமைக்கா அல்லது சலுகைக்கா வாக்களித்தல்?

இத்தனை அர்பணிப்பு, இத்தனை உயிர்கொடை, இத்தனை அழிவுகள் என்று பெரும் துன்பத்தைச் சுமந்தோமே வெறும் சலுகைகளுக்காகவா? சலுகைகளைப் பெறுவதற்காகவா பெரும் போராட்டத்தைத் தமிழினம் நடாத்தியது. சலுகைகளைப் பெறுவதற்காகத் தமிழர்களுக்குக் கட்சிகள் எதற்காக? அரசுகள் மக்களுக்கு சலுகை செய்வதா அல்லது கடமையைச் செய்வதா? சனநாயக நாடொன்றுக்கான கடப்பாடு அனைத்து மக்களையும் சமமாக நடாத்துதல் மற்றும் பாதுகாத்தல் என்பது பொதுவானது. அதில் என்ன சலுகை? தாம் வென்றால் அரசிடம் பேசிச் சலுகை பெற்றுத் தருவதகாக் கூறும் கட்சிகள் இதனைத் தெளிவுபடுத்துவார்களா? உரிமைகளுக்கான போராட்டத்தை அபிவிருத்தி அரசியலாக்கிச் சமன்செய்ய முனையும் அரசுக்கும் இவர்களுக்கும் ஏதும் வேறுபாடு உண்டா? அதேவேளை உரிமைகளுக்காக வாக்களித்தவுடன் உடனடியாக சிங்கள நாடாளுமன்றம் தமிழர்பிரதிநிதிகளிடம் கொடுத்துவிடுமா? அப்படியென்றால் நாடளுமன்றுக்கு யார்போனால்தான் என்ன? ஏன் வாக்களித்து அனுப்ப வேண்டும்? போன்ற வினாக்கள் தவிர்க்க முடியாததே. ஆனால், நாடாளுமன்றிலே குறைந்தபட்சம் தமிழர் நலன்சார்ந்து பேசுவதற்காவது பிரதிநிதிகளை அனுப்பும் நோக்கிலேயே இந்தத் தேர்தலை நாம் பார்க்க வேண்டும். கடந்த 11ஆண்டுகளாக தமது நலன்சார்ந்தும் சிங்கள அரசின் நலன்சார்ந்தும் இயங்கியோரை மீண்டும் நாடாளுமன்றிற்கு அனுப்ப வேண்டுமா? அவர்கள் மீண்டும் ஏக்கிய ராச்சிய என்றும் பௌத்தத்துக்கு முன்னுரிமை என்றும் பழைய பல்லவியை எடுத்தாள்வார்களேயன்றி வேறில்லை. பல்லின மற்றும் பல்வேறு மத நம்பிக்கைகளைப் பின்பற்றும் நாட்டில் ஏன் பௌத்தத்துக்கு முன்னுரிமை என்று எப்போதாவது கேட்டார்களா? எனவே உரிமைகளுக்காகப் போராடிய இனத்தைச் சலுகைகளுக்காக வாக்களிக்கக் கேட்போரை ஏற்கமுடியுமா? அந்தச் சலுகைகளைக் காட்டி இனத்தையே விற்றுவருகிறார்கள் என்பதே களயதார்த்தம். இதனை இன்னொரு விதமாகவும் சுட்டலாம். ஆனால் நாகரிகம் கருதித் தவிர்த்துவிட்டு எமக்கான கடப்பாடுகள் என்ன? எமது தெரிவுகள் எம்மையே அழிக்குமா? அல்லது ஆக்கபூர்வமாக நகர்த்துமா? அதேவேளை தமிழரிடம் இன்றிருப்பதென்னவோ வாக்குப்பலம் மட்டுமே போன்ற கோணங்களிற் சீர்தூக்கி ‘நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டுமென்பதை எதிரியே தீர்மானிக்கின்றான் „ என்ற சீனப் புரட்சியாளரான மாவோ சேதுங் அவர்களின் கூற்றிற்கிசைவாகத் தமிழரது கையிலே இன்று இருக்கும் வாக்குப்பலத்தை பயன்படுத்தி உரிமைகளுக்காக வாக்களித்தலே காலப்பொருத்தமான செயற்பாடாகும்.

தமிழரைப் பலவீனப்படுத்தும் நகர்வுகளில் மறைகரங்களாய் அரசா?

தமது பங்காளர்களின் வாக்குவங்கி தாக்குதலுக்குள்ளாகிவிட்டதை சிங்களம் மதிப்பீடுசெய்துள்ளதன் விளைவாகவே இத்தனை சுயேட்சைக்குழுக்கள் வெளிக்கிளம்பியுள்ளமையானது உணர்த்துகின்றது. வட-கிழக்கிலே போட்டியிடும் கட்சிகளுக்கு நிகராகச் சுயேச்சைக்குழுக்கள் அதிகரித்துள்ளமையே இதற்குச் சான்றாகும்.

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்:

571,848 வாக்களரைக்கொண்ட யாழ் தேர்தற் தொகுதியிலே 7 ஆசனங்களுக்காக 19 அரசியற் கட்சிகளும் 14 சுயேட்சைக் குழுக்களுமாக 33 அணிகள் 330 வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளன.

வன்னித் தேர்தல் மாவட்டம்:

287,024 வாக்களரைக்கொண்ட வன்னித் தேர்தற் தொகுதியிலே 6 ஆசனங்களுக்காக 17 அரசியற் கட்சிகளும் 28 சுயேட்சைக் குழுக்களுமாக 45 அணிகள் 405 வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளன.

திருகோணமலைத் தேர்தல் மாவட்டம்:

288,868 வாக்களரைக்கொண்ட திருமலைத் தேர்தற் தொகுதியிலே 4 ஆசனங்களுக்காக 13 அரசியற் கட்சிகளும் 14 சுயேட்சைக் குழுக்களுமாக 27 அணிகள் 189 வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளன.

மட்டக்களப்புத் தேர்தல் மாவட்டம்:

409,808 வாக்களரைக்கொண்ட மட்டக்களப்புத் தேர்தற் தொகுதியிலே 5 ஆசனங்களுக்காக 16 அரசியற் கட்சிகளும் 22 சுயேட்சைக் குழுக்களுமாக 38 அணிகள்; 304 வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளன.

அம்பாறைத் தேர்தல் மாவட்டம்(திகாமடுல்ல)

513,979 வாக்களரைக்கொண்ட மட்டக்களப்புத் தேர்தற் தொகுதியிலே 7 ஆசனங்களுக்காக 20 அரசியற் கட்சிகளும் 34 சுயேட்சைக் குழுக்களுமாக 54அணிகள்; 540 வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளன.

20,71 527 வாக்காளர்களைக் கொண்ட தமிழர் தாயகமான வட-கிழக்கிலே 29 ஆசனங்களுக்காக அரசியற் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுமாக 1768 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ள சூழலைத் தமிழர்கள் அறிவுபூர்வமாகவும் ஆக்கபூவமாகவும் ஆய்ந்தறிந்து வாக்குச் சக்தியைப் பயன்படுத்துவது அவசியம்.

வாக்குப்பலத்தால் என்ன சாதிக்க முடியும்?

எதுவும் சாதிக்க முடியாதென்றால் ஏன் இவ்வளவு அடிதடியும் ஆரவாரமும் இழுபறிகளும் என்பதையும் உற்றுநோக்க வேண்டும். சனநாயகத்தினது திரட்சியாகத் தேர்தல்முறை மலர்ந்தபோதிலும், அந்த சனநாயகத்திற்கு எதிரான நிலையியே கணிசமான வேட்பாளர்களின் செயற்பாடுகள் உள்ளதை இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவினது ஊடக மற்றும் உள்ளக அறிக்கைகள் சுட்டுகின்றன. இதில் அரசினுடைய அல்லது ஆளும் தரப்பினருடைய மற்றும் ஆளும் தரப்பினது ஆசீர்வாதத்தைப் பெற்ற கட்சிகள் மற்றும் குழுக்கள் எதிர்த்தரப்பை எப்படியாவது தோற்கடிக்கவேண்டும் என்ற நோக்கிற் செயற்படுவதையும் ஊடகச் செய்திகள் உறுதி செய்கின்றன. எடுத்துக்காட்டாக அண்மையில் கரும்புலிகள் தினத்தையண்டிய நாளில் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் கட்சிப்பணியகத்தின் மீதான முப்படைகளின் சோதனை நடவடிக்கையை நாம் பார்க்கலாம்.

சனநாயக விழுமியங்களைத் தழுவிய தேர்தலை உறுதிசெய்யும் கடப்பாட்டை உண்மையாக மேற்கொள்ளப் பார்வையாளராக இல்லாது பங்காளர்களாக மக்கள் மாறும்வரை அராஜகங்களோ அல்லது அத்துமீறல்களோ குறைவடையாது. மக்களிடம் வாக்குக் கேட்டுவரும் வாக்காளர்களே வாக்கினது பலமறியும் சாட்சியாக உள்ளனர் என்பதை மறுக்கமுடியுமா? எனவேதான் வாக்குப்பலத்தால் என்ன சாதிக்க முடியும் என்பதைவிட யாருக்கு வாக்களிப்பது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். வாக்களிக்கும் போது, விடுதலைத் தீயில் தம்மை அர்பணித்த இலட்சக்கனக்கான மக்களையும் , பல்லாயிரம் இளையோரையும் நினைத்துப் பார்ப்பதோடு, „இலட்சியத்தால் ஒன்றுபட்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது’ என்ற தேசியத் தலைவரின் சிந்தனையை அகமேற்றித் தமிழ் தேசியமே ஈழத்தீவிலே எமது இருப்பிற்கான உறுதிப்பாடென்பதைக் கருத்திலே கொண்டு சரியானவர்களை தேர்வுசெய்யும் களமாக இந்த2020 தேர்தற் களத்தைப் பயன்படுத்த வேண்டும். குறைந்த பட்சம் ஈழத்தீவிலே இரு தேசங்கள் என்று துணிந்து சொல்லவதற்கும் ஒரு துணிவு வேண்டுமென்பதை நாம் மனம்கொள்வோமாக இருந்தால் மாற்றங்கள் நிகழும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாதல்லவா?

மா.பாஸ்கரன் – யேர்மனி.

https://www.kuriyeedu.com/?p=271490

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.