Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் ஆயுதமாக உணவைப் பயன்படுத்த வேண்டாம்

Featured Replies

அரசியல் ஆயுதமாக உணவைப் பயன்படுத்த வேண்டாம்

* உலக உணவுத் திட்ட வதிவிடப் பிரதிநிதி விசேட பேட்டி

- அ.ரஜீவன் -

உணவை அரசியல் ஆயுதமாக பயன்படுத்த வேண்டாமென வேண்டுகோள் விடுக்கின்றது உலக உணவு திட்டம்.

வன்னி மீது உணவு தடை விதிக்கப்படக் கூடாது என எதிர்பார்ப்பினையும் வெளியிட்டுள்ள உலக உணவுத் திட்டம் அரசியல் இலாப நோக்கங்களுக்காக அப்பாவி பொதுமக்களை பகடைக்காயாக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றது.

ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஜெவ்டவ்ட் டிக் `தினக்குரல்' இற்கான பேட்டியின் போதே இதனைத் தெரிவித்தார்.

மோதல்கள் தீவிரமடையும் சாத்தியக்கூறுகள் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள டிக் இது மேலும் பலர் இடம்பெயரும் சூழ்நிலையை உருவாக்கலாம் என்றும் எச்சரித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கான உணவு விநியோகம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும். அங்கு போதுமான உணவு கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுவது குறித்து திருப்தியடையவில்லை எனவும் டிக் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு உணவு விநியோகத்திற்கு கப்பல்களை ஒழுங்குபடுத்துவதில் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றோம். அங்கு சந்தைகளில் உணவிருந்தாலும், அதனை கொள்வனவு செய்ய முடியாத நிலையில் மக்கள் உள்ளனர். அவர்களுக்கு உணவு விநியோகம் அவசியம்.

சர்வதேச சமூகம் கடந்த சில மாதங்களாக மிகச் சிறந்த விதத்தில் நிதியுதவியை வழங்கி வருகின்றது. அதேவேளை, இலங்கை அரசாங்கம் மனிதாபிமான உதவிகள் வழங்கும் விடயத்தில் சர்வதேச சமூகத்தை எதிர்பாராமல் தானே செயற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. அதேவேளை, எமக்கு வளங்கள் அவசியம் தற்போது கிடைப்பது போதுமானதல்ல. ஒரு வாரத்திற்கு ஒரு மில்லியன் டொலர்கள் செலவாகின்றது.

மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு சென்றடைவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.

சர்வதேச சமூகம் இது குறித்து நம்பிக்கையிழக்கும் பட்சத்தில் உதவிகளை நிறுத்தும் அபாயமுள்ளது.

இலங்கையில் தற்போது உருவாகியுள்ள மனிதாபிமான நெருக்கடி குறித்த உங்களது மனவுணர்வு எவ்வாறுள்ளது?

பதில்: கடந்த வருடத்திலிருந்து உருவாகியுள்ள சூழ்நிலையால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.

மோதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளமை குறித்தும் அது மக்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறிப்பாக யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை கடந்த வருடமும், மட்டக்களப்பில் இவ்வருடமும் பற்றியும் நாங்கள் கவலையடைந்துள்ளோம்.

நாங்கள் உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்களுக்காக பெருமளவு உணவுப் பொருட்களையும் நிதியையும் சர்வதேச சமூகத்திடமிருந்தும் உலக உணவு ஸ்தாபனத்திடமிருந்தும் திரட்ட வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளோம்.

மேலும் பாதுகாப்பு காரணங்களால் தமது தொழில்வாய்ப்பை இழந்த பலர் உள்ளனர் யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல கிழக்கிலும். ஆகவே உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் குறித்து மாத்திரமல்ல தமது தொழில்வாய்ப்புக்களை இழந்தவர்கள் பற்றியும் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இவர்களும் துயரத்தில் சிக்கியுள்ளனர்.

கேள்வி: மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவக்கூடிய நிலையில் உள்ளீர்களா? அவர்களை சென்றடைவதற்கு அனுமதி மறுப்புள்ளதா?

பதில்: நாம் எதிர் கொள்ளும் சவால்கள் பல குறிப்பாக (humanitarian Access) தொடர்பாக, அரசாங்கம் யாழ்ப்பாணத்திற்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனுப்பி வைப்பதற்காக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

எனினும், விநியோகம் தொடர்ச்சியாகவும் இடைவிடாதும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வது பற்றியும் அந்த வேகம் தொடர்வது குறித்தும் நாங்கள் கவலை கொண்டுள்ளோம். இது கைவிடப்படக்கூடாது என்பதில் கரிசனை கொண்டுள்ளோம்.

யாழ்ப்பாணத்திற்கு உணவுப் பொருட்களை கொண்டு செல்வதற்கு நாங்கள் மிகுந்த சிரமப்படுகின்றோம். நாங்கள் இந்த விடயத்தில் அரசாங்க அமைச்சுகளுடனும் திணைக்களங்களுடனும் இணைந்து செயற்படுகின்றோம். தேசத்தை கட்டியெழுப்பும் அமைச்சு போன்றவை எமது உணவு விநியோகம் போன்றவற்றிற்கும் அது கொண்டு செல்லப்படுவதற்கான நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாகவுள்ளன.

எனினும் நாங்கள் உணவு விநியோகத்திற்காக கப்பல்களை ஒழுங்குபடுத்துவதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளோம். இவ்வாறான உணவு விநியோகம் யாழ்ப்பான மக்களுக்கு மிகவும் அவசியமானது.

யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை அங்கு சந்தைகளில் உணவுப் பொருட்கள் இருந்தாலும் கூட அதனை வாங்குவதற்கான வழியில்லாதவர்களாக பெருமளவு மக்கள் உள்ளனர். கடந்த ஆறு, ஏழு மாதங்களாக இவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் உணவு விநியோகத்திற்கான தேவையும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான அவசியமும் அங்கு அதிகரித்துள்ளன.

கிழக்கை பொறுத்தவரை இடம் பெயர்ந்து கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப செயற்பட முயல்கின்றோம். மோதல்கள் காரணமாக இவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர். ஆரம்பத்தில் வாகரையிலும் பின்னர் மேற்கு மட்டக்களப்பிலும்.

இந்த மக்கள் தமது சுய விருப்பத்தின் பேரில் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிய பின்னரும் அவர்களுக்கு உதவப் போகின்றோம். உணவு பொதிகளை வழங்கப் போகின்றோம், அவர்கள் தமது தொழில்களை மீண்டும் ஆரம்பிக்கும் நிலை வரும் வரை உதவுவோம்.

ஆகவே இன்னும் கடினமான சவால்கள் உள்ளன. இவை அடுத்த பல மாதங்களுக்கு நீடிக்கும், பாதுகாப்பு நிலைமை, சட்டமொழுங்கு நிலைவரம் மிக மோசமானதாக மாறினால் இந்த சவால்கள் மிகவும் சிக்கலானவையாக மாறும் அபாயமுள்ளது.

கேள்வி: மனிதாபிமான அமைப்புகளும், பணியாளர்களும், எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து?

பதில்: இதுவும் எங்களது கவலைக்குரிய விடயம். குறிப்பாக மனிதாபிமான பணியாளர்கள் குறித்தும் அவர்களை ஏனைய தரப்புகளுடனும் தொடர்பு படுத்தியும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகும் போது அது எங்களுக்கு கவலையளிக்கின்றது.

இது அரசசார்பற்ற அமைப்புக்களினதும் ஐக்கிய நாடுகளினதும் பணியாளர்களின் பாதுகாப்பு உயிராபத்து குறித்த கவலையை உருவாக்குகின்றது.

இவர்கள் மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்த தமது கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்காக கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பணியாற்றுகின்றனர். அவர்களை தமது செயற்பாடுகளிலோ அல்லது மனிதாபிமான உதவி விநியோகத்திலோ பக்கச் சார்பாக நடந்து கொள்கின்றனர் என ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் அவர்கள் தங்களது பணிகளை நிறைவேற்றுவதற்கு உதவப் போவதில்லை.

கேள்வி: இது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது?

பதில்: இது அவர்களது பணிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

கடந்த வருடம் விடுதலைப் புலிகளின் பதுங்குகுழிகளுக்குள் எமது அடையாளம் பொறிக்கப்பட்ட பைகள் இருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியானது.

அனைவரும் எங்களுக்கு எதிராக கடும் சீற்றம் வெளிட்டனர். தொலைக்காட்சிகளில் எமது அமைப்பின் இலச்சினை பொறிக்கப்பட்ட பைகள் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகளில் இருப்பதாக காண்பிக்கப்பட்டதே இதற்கு காரணம்.

நாங்கள் விடுதலைப் புலிகளுக்கு எவ்விதமான உணவு விநியோகத்தையும் மேற்கொள்வதில்லை.

நாங்கள் இடம் பெயர்ந்தவர்களுக்கு மாத்திரம் உணவு விநியோகத்தை மேற்கொள்கின்றோம். இந்த பைகள் விடுதலைப் புலிகளின் பதுங்குகுழிகளுக்கு பல வழிகளில் போய்ச் சேர்ந்திருக்கலாம். இந்த தகவலை பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்த பலர் சீற்றமடைந்தனர். இதனால் எமது பணியாளர்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடிய சூழ்நிலை உருவானது.

கேள்வி: யாழ்ப்பாணத்திற்கு உணவு விநியோகத்தை மேற்கொள்வதற்கான அரசாங்கத்தின் அக்கறை குறித்து?

பதில்: அரசாங்கம் கடந்த வருடம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. இது தொடர வேண்டும் என்பதே எமது கரிசனைக்குரிய விடயம், இதனை கைவிடக் கூடாது.

யாழ்ப்பாணத்தில் போதுமான அளவு உணவுப் பொருட்கள் சேமிப்பில் உள்ளன. தேவைக்கு அதிகமாகவுள்ளன போன்ற தகவல்கள் வெளியாகின்றன.

எனினும் இது குறித்து நாங்கள் திருப்தியடையவில்லை. அலட்சியமாக இருக்கப் போவதுமில்லை.

ஏனைய சில பகுதிகளுக்கான உணவு விநியோகம் குறைக்கப்பட்டுள்ளது குறித்து (வன்னி) நாங்கள் கவலை கொண்டுள்ளோம், சில பகுதிகளில் மோதல் வெடித்தால் (நாங்கள் பணியாற்றும் பகுதி) இடம்பெயர்ந்த மக்களுக்கு, புதிதாக இடம் பெயரும் மக்களுக்கு எங்களால் உணவு விநியோகத்தை மேற்கொள்ள முடியுமா என்பது பற்றி கவலை கொண்டுள்ளோம்.

ஆகவே அப்பகுதிகளுக்கான உணவு விநியோகத்தை அதிகரிப்பதற்கும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடியை எதிர்கொள்ளவும் அரசாங்கத்துடனும் எமது சக அமைப்புகளுடனும் இணைந்து நடவடிக்கைகளை எடுக்க முயலுகின்றோம். ஏ-9 பாதை மூடப்பட்டது நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் செஞ்சிலுவை சங்கம் ஓமந்தையிலிருந்து தற்காலிகமாக வெளியேறியது.

ஓமந்தை பணியாளர்களின் நடமாட்டத்திற்கு அவசியமானது எமது பணியாளர்கள் பலர் வன்னிக்குள்ளேயே வாழ்கின்றனர். மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பணியாற்றுகின்றனர். அவர்களுடைய நடமாட்டத்திற்கு ஓமந்தை மிக முக்கியம்.

அங்குள்ள மின் பிறப்பாக்கிகளுக்கு (ஜெனரேட்டர்கள்) எரிபொருள் அவசரமாக தேவைப்படுகின்றது. அதனை கொண்டு செல்வதற்காக கடந்த இரு மாதங்களாக முயன்று வருகின்றோம். ஆக ஏ-9 மூடப்பட்டது, ஓமந்தை மூடப்பட்டது. ஆட்கள், பொருட்களினது போக்குவரத்து குறைக்கப்பட்டது போன்றவை எமது செயற்பாடுகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றன.

கேள்வி: உணவு ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாக கருது கிறீர்களா?

பதில்: இது நடைபெறாததை உறுதி செய்வதே எமது பணிகளில் ஒன்று. நாங்கள் அரசாங்கத்துடனும் உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமாக இணைந்து செயற்பட்டு வருவதுடன் உணவு விநியோகத்தை கண்காணித்து வருகின்றோம். உணவு பிழையான கைகளுக்கு செல்வது குறித்து நாங்கள் அவதானமாக உள்ளோம்.

எங்களுக்கு உதவி வழங்குபவர்களும் (DONORS) இது குறித்து மிகவும் அவதானமாக உள்ளனர். உலக உணவு ஸ்தாபனமும் எமது சகாக்களும், அரசாங்கமும் உணவு சரியான கரங்களிற்குப் போய்ச்சேருவதை உறுதிப் படுத்த முடியாத நிலையில் உள்ளனர் என கருதும் பட்சத்தில் (DONORS) எங்களுக்கு உதவி வழங்கப்போவதில்லை ஆகவே இந்த விடயத்தில் மிகுந்த கவனத்துடனும் பிடிவாதத்துடனும் உள்ளோம்.

கேள்வி: உணவுத் தடை அமுல்படுத்தப்படுவதாக கருதுகீறீர்களா?

பதில்: வன்னி மீதோ அல்லது வேறு எந்த பகுதி மீதோ உணவுத் தடை விதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை.

அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர் அவர்களுக்கு உணவு மறுக்கப்படுகின்றது. அரசியல் மோதல்களுக்காக அப்பாவி மக்களை பகடைக் காய்களாக்க கூடாது. ஆகவே நாங்கள் அவர்கள் குறித்து கவலையடைந்துள்ளோம். மனிதாபிமான அமைப்பு என்ற ரீதியில் எங்களது பணிகளை நிறைவேற்ற நாங்கள் அந்த மக்களிடம் செல்ல வேண்டும் எமது ஆணையை நிறைவேற்ற விநியோகங்கள் வேண்டும்.

ஆகவே இந்த சூழ்நிலையில் உணவை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது எனக் கருதுகின்றோம்.

கேள்வி: மட்டக்களப்பில் அகதி முகாம் வாழ்க்கை பற்றி?

பதில்: மிகச் சிறந்த முறையில் திட்டமிடப்பட்டவற்றை அவதானித்தோம், அடிப்படை வசதிகள் உள்ளன. அங்குள்ள நிலைமைகள் ஏற்றுக் கொள்ளக் கூடியனவாக உள்ளன, இந்த முகாம்கள் மிக வேகமாக அமைக்கப்பட்டன என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

ஐக்கிய நாடுகளின் பல அமைப்புகளும் அரச சார்பற்ற அமைப்புகளும் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுகின்றன. மிகச் சிறப்பான பணி தற்போது தமது சொந்த பகுதிகளில் குடியேற விரும்புபவர்களுக்கான திட்டமொன்று தயாரிக்கப்படுகின்றது. அந்த மக்கள் சுய விருப்பத்துடனும் பாதுகாப்பாகவும் மீளக் குடியேறும் பட்சத்தில் அவர்கள் தமது வாழ்வை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சகல உதவிகளையும் வழங்கத் தயாராகவுள்ளோம். இவ்வளவு பெருந் தொகையானவர்கள் இடம்பெயர்ந்தனர் என்பதை கொழும்பில் உள்ளவர்களால் எண்ணிப்பார்ப்பது கடினமாக இருக்கும். இவர்களில் சிலர் பல முறை இடம் பெயர்ந்துள்ளனர். ஆகவே, ஒட்டு மொத்தமாக சிறப்பான செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது, தாற்போது நாங்கள் அவர்களுடைய மீள் குடியேற்றத்தில் கவனம் செலுத்துகின்றோம்.

திருகோணமலையை சேர்ந்த இடம் பெயர்ந்தவர்கள் தாங்கள் எப்போது தமது பகுதிகளுக்கு திரும்பிப் போகின்றோம் என்பது குறித்து எதுவும் தெரியாத நிலையில் உள்ளனர், அவர்களுக்கு தங்களது பகுதிகள் குறித்து தகவல்கள் தெரியாததை அறிகிறோம், இதனால் உளவியல் ரீதியாக அவர்கள் மீள் குடியேற்றத்திற்கு அதற்கு தயாரில்லை.

எனினும், மேற்கு மட்டக்களப்பிலிருந்து இடம் பெயர்ந்தவர்களுக்கு தங்களது பகுதி நிலைவரங்கள் தெரியும். ஏற்பட்ட இழப்புகள் தெரியும். இதனால் அவர்கள் மீள குடியேற விருப்பம் கொண்டுள்ளனர்

கேள்வி:மக்கள் தமது சொந்த விருப்பில் மீளக் குடியேறுகின்றனரா?

பதில்: வாகரைக்கு திரும்புபவர்கள் குறித்து சில அச்சம் காணப்பட்டது. நாங்கள் இதனை உணர்ந்தோம் கண்காணித்தோம். மக்கள் பாதுகாப்பாகவும் விருப்பத்துடன் திரும்புகிறார்களா அங்கு நிம்மதியாக வாழ முடிகின்றதா என்பதை பார்த்தோம்.

சமீபத்தில் வாகரையில் அதிகளவு இராணுவ பிரசன்னம் குறித்து அச்சம் வெளியிடப்பட்டுள்ளது, மீள் குடியேற்றத்தில் அதிகளவு அரச அதிகாரிகள் பொது அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட வேண்டும். நாங்கள் இதனை தொடர்ந்து கண்காணித்து அவசியம் என்றால் அரசிற்கு பரிந்துறைகளை முன்வைப்போம்.

கேள்வி: இலங்கையில் ஒட்டு மொத்தமாக உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் நிலை எவ்வாறுள்ளது?

பதில்: இலங்கையில் எத்தனைபேர் உள்நாட்டில் இடம் பெயர்ந்துள்ளனர் என்பது குறித்து சரியான புள்ளி விபரங்கள் ஆராய்ச்சிகள் இல்லை. எனினும் இவர்கள் பல தடவை இடம் பெயர்ந்துள்ளனர் என்பது தெரியும். அடுத்த சில மாதங்களில் மோதல் தீவிரமடைந்தால் மேலும் பலர் இடம் பெயர வேண்டிய நிலை ஏற்படலாம் என்பது குறித்து அச்சமடைந்துள்ளோம். இது கடும் சவாலாக அமையப் போகின்றது. அரசாங்கத்திற்கும் மனிதாபிமான அமைப்புகளும் புதிய மனிதாபிமான நெருக்கடியை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.

ஒரு பக்கத்தில் இராணுவ வெற்றி குறித்த கவனம் மாத்திரமே இருக்கும். அதனால் மக்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்பு குறித்து அக்கறை இருக்காது.

ஆகவே குறுகிய காலத்தில் இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் இந்த மக்கள் தமது பகுதிகளுக்கு மீண்டும் செல்வதை உறுதிப்படுத்துவதே சகலரும் மேற்கொள்ளக் கூடிய சிறந்த செயல்.

கேள்வி: வட கிழக்கில் காணப்படும் போஷாக்கின்மை, பட்டினி நிலை பற்றி?

பதில்: இலங்கையில் குறிப்பாக வடகிழக்கில் பெருமளவு போஷாக்கின்மை காணப்படுகின்றது. உலக உணவு ஸ்தாபனம் இதனை பல தடவை புள்ளி விபரங்களுடன் வெளியிட்டுள்ளது. தேசிய விகிதாசாரத்தை விட இரண்டு மடங்காக இது காணப்படுகின்றது.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.