Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வியப்பூட்டும் நக்சிவன் பிராந்தியம் குறித்து நீங்கள் அறிவீர்களா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேற்காசிய - கிழக்கு ஐரோப்பிய எல்லையில் உள்ள காகஸஸ் மலைத்தொடர்ப் பகுதியான ட்ரான்ஸ் காகேசியாவில் உள்ள நக்சிவன் (NAKHCHIVAN) என்ற இடம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இது அஜர்பைஜானில் உள்ள தன்னாட்சிக் குடியரசுப் பகுதியாகும்.

ஆர்மீனியா, இரான் மற்றும் துருக்கியால் சூழப்பட்டுள்ள இது, முன்னாள் சோவியத் யூனியனின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும். இங்கு, சுற்றுலாப் பயணிகளின் வருகை மிக அரிதாகவே உள்ளது.

80-130 கி.மீ அகலமுள்ள ஆர்மீனியாவின் ஒரு பகுதி அஜர்பைஜானைச் சேர்ந்த நக்சிவனை அதனிடமிருந்து பிரிக்கிறது. முழுவதும் பிற நாடுகளால் சூழப்பட்ட உலகின் மிகப் பெரிய எக்ஸ்க்லேவ் (ஒரு நாட்டின் ஒரு நிலப்பகுதி, முற்றிலும் அதனிடமிருந்து பிரிந்திருப்பது) இதுவாகும். இதன் மொத்த மக்கள் தொகை நான்கரை லட்சம் ஆகும்.

அதன் பரப்பளவு பாலிக்குச் சமமானதாகும். சோவியத் காலத்தின் கட்டடங்கள் இங்கே உள்ளன. தங்கம் பதிக்கப்பட்ட குவிமாடங்கள் கொண்ட மசூதிகளும் இரும்பின் துரு போன்ற சிவப்பு நிற மலைகளும் இங்கு உள்ளன.

இங்குள்ள உயரமான கல்லறை ஒன்றில் ஹஸ்ரத் நபி அடக்கம் செய்யப்பட்டுள்ளார். பயணம் மற்றும் சுற்றுலா குறித்த இதழான லோன்லி பிளானெட் இங்குள்ள மலைமீது கட்டப்பட்ட இடைக்காலக் கோட்டையை "யூரேசியாவின் மச்சு பிச்சு" என்று குறிப்பிடுகிறது.

தூய்மையான தலைநகர்

நக்சிவனின் தலைநகரம் மிகவும் தூய்மையாக உள்ளது. ஒவ்வொரு வாரமும் அரசு ஊழியர்கள் இங்கு மரங்களை நட்டு, தூய்மைப் பணிகளையும் திறம்பட மேற்கொள்கிறார்கள்.

உலகின் ஆகச் சிறந்த தற்சார்புள்ள நாடு நக்சிவன் குறித்து அறிவீர்களா?

பட மூலாதாரம், ANAR ALIYEV/GETTY IMAGES

 

சிதறிய சோவியத் யூனியனில் இருந்து லிதுவேனியா சுதந்தரம் பெறுவதற்குச் சில மாதங்களுக்கு முன்னர், தன்னைச் சுதந்தர நாடாக அறிவித்த முதல் நாடு இது தான். இரு வாரங்களுக்குப் பிறகு தான் இது அஜர்பைஜானுடன் இணைந்தது.

அஜர்பைஜானின் தலைநகரான பாக்குவிலிருந்து (Baku) 30 நிமிட விமானப் பயணத்துக்குப் பிறகு நக்சிவன் நகரத்தை அடைவதற்கு முன்பு இதுகுறித்து எனக்கும் எதுவும் தெரியாது.

கடந்த 15 ஆண்டுகளில் நான் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த பல தொலைதூரப் பகுதிகளுக்குப் பயணம் செய்து வருகிறேன்.

நான் ரஷ்ய மொழியை கற்றுக்கொண்டேன், டிரான்ஸ்னிஸ்ட்ரியா போன்ற ஒரு சிறிய நாடுகளுக்குச் சென்றேன். தஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தானில் நடைபெற்ற தேர்தல்களைக் கண்டேன். ஆனால் நக்சிவனுக்கு பயணிக்க முடியவில்லை.

வெளியுலகின் கண்களுக்கு அதிகம் தெரியாத பகுதி

நேட்டோ உறுப்பு நாடான துருக்கியின் சோவியத் ஒன்றியத்தை ஒட்டிய எல்லையாக நக்சிவன் இருந்தது. இது இரானுடனும் எல்லையைப் பகிர்ந்து கொண்டதால், சோவியத் யூனியனின் பெரும்பாலான குடிமக்கள் இங்கு எளிதில் செல்ல முடியவில்லை.

உலகின் ஆகச் சிறந்த தற்சார்புள்ள நாடு நக்சிவன் குறித்து அறிவீர்களா?

பட மூலாதாரம், MICROSTOCKHUB/GETTY IMAGES

 

சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து 30 ஆண்டுகள் கடந்தும் கூட, இது ரஷ்ய மொழி பேசும் மக்களுக்கும் வெளி உலகிற்கும் தெரியாத ஒரு இடமாகவே இருந்து வருகிறது.

ஒருவர் அஜர்பைஜான் விசா பெற்றிருந்தால் இங்கு செல்லலாம். நடைப் பயணத்திற்கு மிகவும் பாதுகாப்பான இடமாக இருந்தாலும், வெளிநாட்டினர் வருகை தந்தால், இங்குள்ள அதிகாரிகள் விழிப்புடன் இருக்கிறார்கள்.

அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து இறங்கியபின் நான் குடிவரவு நடைமுறைகளை முடித்தபோது, ஒரு நபர் என் காதில் காவல் துறையினர் என்னைப் பற்றி பேசுவதாகக் கிசுகிசுத்தார். "நான் யார் என்று அவர்களுக்கு எப்படித் தெரியும்" என்று கேட்டேன்.

"ஒரு பிரிட்டிஷ் குடிமகன் சிவப்பு ஷார்ட்ஸ் அணிந்து வந்திருப்பதாக அவர்களுக்குத் தகவல் வந்துள்ளது" என்றார் அவர். பாகு (Baku) விமான நிலையத்திலிருந்தே நான் வருவது குறித்து நக்சிவன் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கலாம். என் உடையை வைத்து என்னை எளிதாக அடையாளம் கண்டு கொண்டிருக்க வேண்டும்.

ஹஸ்ரத் நோவாவின் பூமி

நக்சிவனின் பளிங்கு போன்ற விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து, நான் ஒரு டாக்ஸியை எடுத்துக்கொண்டு மற்றொரு பெரிய நகரமான ஓர்துபாத்தை நோக்கி செல்ல தொடங்கினேன்.

நக்சிவன் நாடு

பட மூலாதாரம், HEMIS/ALAMY

 

பளபளவென மின்னும் கருப்பு மெர்சிடிஸை ஓட்டிய மிர்சா இப்ராஹிமோவ் ஒரு வழிகாட்டியாகவும் இருந்தார். நகரின் குப்பைகளில்லா தெருக்களை கடந்து செல்லும் போது, "நீங்கள் இங்கே ஒரு குப்பையைக் கூடப் பார்க்க முடியாது" என்றார்.

இங்குள்ள சாலைகள், நாற்சந்திகள் மற்றும் சோவியத் காலத்தின் குடியிருப்புக் கட்டடங்கள் யாவும் இவ்வளவு தூய்மையாக இருப்பது எப்படி என்று நான் கேட்க நினைத்தேன். அப்போது, என் கவனம் எண்கோணக் கோட்டை ஒன்றை நோக்கித் திரும்பியது. இஸ்லாமிய பாணியில் அமைக்கப்பட்ட இந்தச் சிறு கோபுரம் பளிங்கு ஓடுகளைக் கொண்டுள்ளது. உள்ளூர் மக்களின் இதயத்தில் இதற்கு ஒரு சிறப்பு இடம் இருப்பதாக இப்ராஹிமோவ் கூறினார்.

நபி அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் உலகின் ஐந்து இடங்களில் நோவாவின் கல்லறையும் ஒன்றாகும். இங்குள்ள மக்கள் தங்கள் தாய்நாடு தான் "ஹஸ்ரத் நோவாவின் பூமி" என்று உறுதியாக நம்புகிறார்கள்.

"நக்சிவன்" என்பது ஆர்மேனிய மொழியில், "சந்ததியினரின் இடம்" என்று பொருள் படும் இரண்டு சொற்களின் கலவையாகும் என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள்.

உள்ளூரில் நிலவும் புனைவுகள்

பழைய பாரசீகத்தின் நக் (நோவா) மற்றும் (ச்) சிவன் (இடம்) ஆகிய சொற்களின் சேர்க்கையால் இது நக்சிவன் அதாவது "நோவாவின் இடம்" என்றானதாகச் சிலர் நம்புகிறார்கள்.

ஊழிப் பேரலையின் நீர்மட்டம் குறைந்த போது, நோவாவின் படகு இலெண்டாக் மலையில் முட்டி நின்றது என்றும் அதன் சுவடு இன்றும் மலை உச்சியில் காணப்படுகிறது என்றும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

ஹஸ்ரத் நோவாவும் அவரின் சீடர்களும் தங்கள் வாழ்நாள் முழுவதையும் அங்கேயே கழித்தார்கள் என்றும் தாங்கள் அவரின் சந்ததியினர் என்றும் நக்சிவன்வாசிகள் கூறுகிறார்கள்.

நோவாவின் படகு, மலையின் உச்சியில் எப்படித் தாக்கியது என்று இப்ராஹிமோவ் என்னிடம் சொன்ன சில நாட்களுக்குப் பிறகு, ஒரு வயதான மனிதர் ஓர்துபாத்தில் ஒரு பூங்காவில் இருக்கையில் அமர்ந்து, எரியும் சிகரெட்டால் ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டி, "அந்த இடத்தில், நோவாவின் படகு மலையின் மேல் முட்டி, தானாகவே நின்றது" என்று கூறினார்.

கடந்த 7,500 ஆண்டுகளில், நோவாவும் அவரின் சீடர்களும் இலெண்டாக் மலையிலிருந்து (சிலர் அருகிலுள்ள அராரத் மலை என்றும் கூறுவார்கள்) இறங்கியபோது, அவர்களின் சந்ததியினர் பாரசீக, ஒட்டோமான் மற்றும் ரஷ்ய ஆட்சியின் கீழ் இருந்தனர். ஆர்மேனியாவுடனான இதன் நில தகராறும் கடந்த சில தசாப்தங்களாக நடந்து வருகிறது.

ஆர்மேனியாவுடன் போர்

அடிபணிந்த குடியரசுகள் மீது சோவியத் ஒன்றியத்தின் பிடி, 1988ஆம் ஆண்டில், பலவீனமடைந்து கொண்டிருந்தபோது, ஆர்மேனியாவின் இனக்குழுக்கள் அஜர்பைஜானுடன் தென்மேற்கு அஜர்பைஜானில் நக்சிவனுக்கு அருகிலுள்ள நாகோர்னோ-கார்பாக்கில் போர் தொடுத்தன. 1994 போர் நிறுத்தத்தின் முடிவில், சுமார் 30,000 பேர் இறந்திருந்தனர்.

1988ஆம் ஆண்டில், ஆர்மேனிய இனக் குழுக்கள், நக்சிவனை அஜர்பைஜான் மற்றும் சோவியத் யூனியனுடன் இணைக்கும் ரயில் பாதை மற்றும் சாலைகளை மூடின. இரான் மற்றும் துருக்கியில் ஆரஸ் ஆற்றில் கட்டப்பட்ட இரண்டு சிறிய பாலங்கள் நக்சிவனை பஞ்சம் மற்றும் அழிவிலிருந்து காப்பாற்றின.

உலகின் ஆகச் சிறந்த தற்சார்புள்ள நாடு நக்சிவன் குறித்து அறிவீர்களா?

பட மூலாதாரம், HEMIS/ALAMY

 

முற்றுகையில் சிக்கியிருந்த நக்சிவன் மக்களிடையே தன்னம்பிக்கை எழுந்தது. பாலங்கள் மற்றும் அண்டை நாடுகளைச் சார்ந்து இருப்பதற்குப் பதிலாக, அவர்கள் தற்சார்புடன் வாழ முடிவு செய்தனர்.

2005இல் அஜர்பைஜானின் வருமானமும் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் கச்சா எண்ணெயால் அதிகரித்த போது, நக்சிவானில் முதலீடும் அதிகரித்தது.

இதனால், நாடு முழுவதும் தற்சார்பு என்ற உணர்வு பரவத் தொடங்கியது.

இன்று வட கொரியாவைப் போலவே, அஜர்பைஜானின் இந்த தனிப்பகுதியும் வெளி நாட்டுப் பொருளுதவி அல்லது சர்வதேச வர்த்தகத்தைச் சாராத ஒரு குடியரசாக, உலகின் பல நாடுகளுக்கும் உதாரணமாக திகழ்கிறது.

நக்சிவனின் பொருளாதாரக் கொள்கை இங்குள்ள உணவுப் பழக்கத்தையும் மாற்றியமைத்தது. இங்குள்ள மக்கள் கடுமையில்லாத உணவு மற்றும் இயற்கை வேளாண்மையை நோக்கித் திரும்பினர். இந்த இடத்திற்கு அங்கீகாரம் அளித்தது ஒரு தேசிய பெருமைக்கு ஆதாரமாக அமைந்தது.

ஆரோக்கியமான உணவு

உணவு இங்கு மிகவும் மதிக்கப்படுகிறது. இரான் எல்லைக்கு அருகே மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, "இதை எங்களால் செய்ய முடியும் என்பதால் நாங்கள் இப்படிச் சாப்பிடுகிறோம்," என்று இப்ராஹிமோவின் நண்பர் எல்ஷாத் ஹசனோவ் கூறுகிறார்.

உணவுப் பஞ்சத்தின் நினைவுகள் அவரது மனதை விட்டு இன்னும் நீங்கவில்லை. ஆனால் சோவியத் பொருளாதார சார்புக் கொள்கையை விட்டு வெளியேறிய பிறகு நக்சிவன் தனது சுயமான கொள்கையை உருவாக்கிக் கொண்டது. ரசாயனப் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, இயற்கை வேளாண்மையை பின்பற்றத் தொடங்கியது.

உடல்நலம் குறித்த விழிப்புணர்வால், தாங்கள் உண்ணும் பல்பஸ் (BALBUS) இன ஆடுகள் நக்சிவன் வயல்களில் வளர்ந்தவையாகவே இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். உள்ளூர் ஏரிகளின் மீன்களையே அவர்கள் உட்கொள்கின்றனர்.

அவர்கள் நக்சிவன் மலைகளின் அடிவாரத்தில் இருந்து கிடைக்கும் மூலிகைச் செடி கொடிகளையே பயன்படுத்துகிறார்கள். உப்பு கூட நக்சிவனின் நிலத்தடி குகைகளிலிருந்து தான் எடுக்கப்படுகிறது. ஆட்டு இறைச்சி சாப்பாட்டு மேசையில் வைக்கப்பட்டது. இதனுடன், காய்கறி சாலட், சீஸ், ரொட்டி, வறுத்த மீன், பீர் மற்றும் ஓட்காவும் பரிமாறப்பட்டன.

உலகின் ஆகச் சிறந்த தற்சார்புள்ள நாடு நக்சிவன் குறித்து அறிவீர்களா?

பட மூலாதாரம், DAVID MCARDLE

 

அருகிலுள்ள மலைகளிலிருந்து கொண்டு வரப்பட்ட ஓட்காவில் 300 வகையான மூலிகைகள் சேர்க்கப்பட்டன. ஒவ்வொரு மூலிகையும் ஒவ்வொரு நோயை குணப்படுத்துகிறது.

நக்சிவனின் இயற்கை மற்றும் உள்ளூர் உணவைப் பற்றி நான் கேட்டபோது, ஹசனோவ் மகிழ்ச்சியாக, "எங்கள் மக்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள், நாங்கள் முன்பு போல, நோய்களால் பாதிக்கப்படுவதில்லை, ஏனென்றால் நாங்கள் உட்கொள்ளும் அனைத்தும் இயற்கையானவை" என்று பெருமை கொள்கிறார்.

குகை சிகிச்சை

நான் ஒரு பெரிய தக்காளியை எடுத்துச் சுவைத்தேன். அதன் இனிப்புச் சுவை என் நாவில் இன்னும் ஊறுகிறது. நிச்சயமாக, நான் இதுவரை அப்படி ஒரு ருசியான தக்காளியை ருசித்ததில்லை.

நக்சிவன் மக்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவை (GMO- Genetically Modified Organisms) உட்கொள்வதில்லை. அது மட்டுமல்ல, தலைநகரிலிருந்து 14 கி.மீ தொலைவில் டஸ்டாக்கின் உப்பு குகை ஒன்று உள்ளது. முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் இந்த உப்புச் சுரங்கத்திற்குள் ஒரு மருத்துவமனையே இயங்குகிறது என்றால் அது மிகையாகாது.

இங்குள்ள 130 மில்லியன் டன் தூய இயற்கை உப்பு, ஆஸ்துமா முதல் மூச்சுக்குழாய் அழற்சி வரை பலவிதமான சுவாச நோய்களைக் குணப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இப்ராஹிமோவும் நானும் அந்த இருள் நிறைந்த குகைக்குள் நுழைந்தபோது, நக்சிவானின் 30 டிகிரி செல்சியஸ் வெப்பம் மாயமாக மறைந்தது. இப்ராஹிமோவ் நீண்ட பெரும் மூச்சை உள்ளிழுத்தார். அதிகம் புகைபிடிப்பவரான இப்ராஹிமோவ், இந்த குகை சிகிச்சையால் பயனடைந்தார்.

"உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் மக்கள் இங்கு வருகிறார்கள். கடந்த ஆண்டு உருகுவேவைச் சேர்ந்த ஒருவருக்கு கடுமையான ஆஸ்துமா இருந்தது. அவர் இங்கிருந்து குணமடைந்து சென்றார்."

அந்த நேரத்தில், பள்ளி குழந்தைகள் மற்றும் அவர்களது ஆசிரியர்கள் அடங்கிய ஒரு குழு உப்பு குகையில் இரவைக் கழிக்க வந்தது. மீண்டும் நகரத்தை அடைந்ததும் நான், அவர்களின் தூய்மையின் தீவிரம் குறித்து அறிய விரும்பினேன். தூய்மையின் எந்த அம்சத்தின் படி பார்த்தாலும் அஜர்பைஜானின் அதிதூய்மையான நகரம் நக்சிவன் தான்.

வாரந்தோறும் தூய்மைப் பணி

சாலைகள் மற்றும் பாதைகள் துடைக்கப்பட்டது போல் காணப்படுகின்றன. மரங்கள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. களைகள் எங்கும் காணப்படவில்லை.

நார்வே ஹெல்சின்கி கமிட்டியின் விரிவான அறிக்கையின்படி, இந்த சாதனைக்கான புகழ் அரசு ஊழியர்களையே சாரும். ஆசிரியர்கள், போர் வீரர்கள், மருத்துவர்கள் மற்றும் பிற அரசு ஊழியர்களே இதற்காகப் போற்றப்பட வேண்டியவர்கள். விடுமுறை நாட்களில் தெருக்களை சுத்தம் செய்வதில் அவர்கள் தோள் கொடுக்கின்றனர்.

முற்றுகையின் போது, மக்கள் எரிபொருளுக்காகக் காடுகளை அழித்தனர். அதை ஈடுசெய்ய, இப்போது மக்கள் மரங்களை நடவு செய்கிறார்கள். இந்த பாரம்பரியம் சோவியத் கால சுபோதனிக் பாரம்பரியத்தின் அடியொற்றியதாகும். மக்கள் தானாக முன்வந்து மரங்களை நடுகிறார்கள். அவர்களுக்கு எந்தவிதமான ஊதியமும் இதற்காக வழங்கப்படுவதில்லை.

ஒரு சனிக்கிழமை காலை, இப்ராஹிமோவ் மெர்சிடிஸை நிறுத்தி அருகிலுள்ள வயல்களை சுட்டிக்காட்டினார். சிலர் வெயிலில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். "அவர்கள் பழ மரங்களை நடவு செய்கிறார்கள்" என்றார். சுபோதனிக் பாரம்பரியம் தெளிவாகத் தெரிகிறது. ஒவ்வொரு மரமும், இங்குள்ள ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்கிறது, மக்களின் நுரையீரல் வலுவடைகிறது மற்றும் சுவையான பழங்களின் மகசூலும் அதிகரிக்கின்றது.

தன்னார்வமா கட்டாயமா?

நார்வே ஹெல்சின்கி கமிட்டியின் அதே அறிக்கையின்படி, இந்த "தன்னார்வ" வேலைக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் எவரும் உடனடியாக அரசாங்க வேலையை ராஜிநாமா செய்ய வேண்டும் என்பது கட்டாயமாகிறது.

பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்தின் ஊழியர்கள் இதை ஏற்றுக்கொண்டார்கள். ஒரு சர்வாதிகாரியாகப் பலரால் கருதப்படும் ஆட்சியாளர் வாசிஃப் தாலிபோவ், கூலியின்றி உழைக்கும் மக்களின் உழைப்பால் அதிக வருமானம் ஈட்டுகிறார் என்று நக்சிவன் மாகாணப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் கூறுகிறார்.

பயணத்தின் இறுதிக் கட்டத்தில், நக்சிவனின் துப்புரவான தோற்றம், எனக்கு சிங்கப்பூரை நினைவுபடுத்தியது. அங்கும் இப்படித் தான், மலிவான உழைப்பு கிடைப்பதாலும், அரசாங்கத்தின் கோபம் குறித்த அச்சத்தினாலும் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நக்சிவன் என்பது, தன்னம்பிக்கை கொண்ட மக்களைக் கொண்டு, முன்னேற்றப் பாதையில் தற்சார்புடன் நடைபோடும் ஒரு எக்ஸ்க்லேவ் என்பதா அல்லது இது வெறும் வெளித்தோற்றத்துக்காக மட்டுமா அல்லது இவையிரண்டின் கலவையா என்பது விடை காண முடியாத ஒரு புதிராகவே உள்ளது.

ஆனால் இது முன்பு போன்ற ஒரு நிலையில் இல்லை என்பது மட்டும் நிச்சயம். சோவியத் காலத்தைப் போல, மக்கள் உணவகங்களில் ரகசியமாக, ஒளிந்து பேசுவதில்லை. மாறாக, வெளியாட்களுடனும் வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.

கடந்த 15 ஆண்டுகளில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 300 சதவீதம் அதிகரித்துள்ள போதிலும், இங்குள்ள அரசு ஊழியர்கள் வார இறுதியில் தன்னார்வத் தொண்டு தான் புரிகிறார்கள்.

இங்குள்ள மக்கள் தங்கள் கலாசார அடையாளத்தை தொலைதூர நாட்டிலிருந்து வந்த நபியுடன் தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள். ஆனால் உள்ளூர் நிர்வாகம் ஒரு சிறிய வட்டத்தில் தன்னை உள்ளடக்கியிருக்கிறது.https://www.bbc.com/tamil/global-54091433

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்திகள்......இந்த இடத்தை கார்ப்பரேட் கம்பெனிகள் ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கின்றன என்றுதான் தெரியவில்லை.......!  👍

பகிர்வுக்கு நன்றி பிழம்பு ......! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.