Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

லெப். கேணல் நரேஸ்

 

 

Commander-Lieutenant-Colonel-Nares.jpg

தென்றலாக வீசிய புயல்:

கிளிநொச்சிக் கோட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் நரேஸ் / நாயகன்.

பூநகரிச் சமர்தான் புலிகள் இயக்கத்தின் பலத்தையும், அதன் போரிடும் சக்தியையும் எடுத்தியம்பியது. ஆனாலும், ‘புலிகளுக்கே உரித்தான சண்டை’ என்று, புலிகளின் போர்த் திறனைப் பறைசாற்றிய சண்டையென்று புலோப்பளைச் சமரைத்தான் சொல்ல வேண்டும்.

பட்டப்பகற் பொழுதில், கவசங்களற்ற வெட்டவெளிப் பிரதேசத்தில், மணலோடு மணலாகி மறைந்திருந்த புலிகள், கவசங்களுடனும் கனரக ஆயுதங்களுடனும் நகர்ந்த எதிரிகளுக்கு முன்னால், ஆக்ரோசமாக எழுந்த போது, உலகையே வியப்பிலாழ்த்திய அந்தச் சண்டை வெடித்தது.

டாங்கிகளும், பீரங்கிகளும், நவீன போர்க்கலங்களும் மனஉறுதிக்கு முன்னால் மண்டியிட்டன. சாவுக்கு அஞ்சாத துணிவுக்கு முன்னால், பகைவனின் படை துவம்சமாகிப் போனது. நுட்ப தந்திரோபாயமான போர் வியூகத்திற்குள் சிக்கி, சிங்களச் சேனை சிதைந்தழித்தது. டாங்கிகளும், கவச வண்டிகளும் நொருங்கின. ‘எக்கச்சக்கமான’ ஆயுதங்களை எதிரி பறிகொடுத்தான்.

வரலாறு காணாத படுதோல்வியைப் பரிசளித்து, புறப்பட்ட இடத்திற்கே பகைவனைத் திருப்பியனுப்பி வைத்தனர் புலிகள்.

யாழ். குடாநாட்டின் உயிருக்கு உயிர் கொடுத்த, யாழ்ப்பாண மக்களின் வாழ்வுக்கு வாழ்வளித்த அந்தச் சண்டைக் களத்தில்தான் வன்னி நிலத்தின் போர் மறவன், எங்கள் நரேஸ் வீழ்ந்தான்.

புலோப்பளையில் – பெருவெற்றியை பெற்றுத்தந்த, ஒரு சண்டை முனையை வழிநடாத்திக்கொண்டிருந்த போது நரேசுக்கு முன்னால் விழுந்த எதிரியின் பீரங்கிக் குண்டொன்று அந்த வீரத்தளபதியை எங்களமிடமிருந்து பிரித்துக் கொண்டது.

அவனோடு கூட இன்னும் 85 தோழர்கள், அந்த வெற்றிக்கு விறகானார்கள்.

அப்போது அவனுக்குப் பதினாறு வயது. புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருக்கும் போது பத்தாம் வகுப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு தாய்நாட்டிற்காக அவன் துப்பாக்கியைத் தூக்கினான்.

எட்டு வருடங்களுக்கு முன்னர்; ஒரு மாலைப்பொழுது மங்கிக்கொண்டிருந்தது. காலையிலேயே வந்துவிட்டதால், பொறுமையை அடக்க முடியாமல் அவன் காத்துக்கொண்டிருந்தான். “எப்படியாவது போய்விட வேண்டும்” கூட்டிச்செல்பவரைக் காணவேயில்லை.

புதுக்குடியிருப்பில் ஒதுக்குப்புறமாக இருக்கும் அந்த வீடுதான் புலிகள் இயக்கத்தின் தொடர்பு இடம்.

திடீரென படலையடியில் கேட்ட சத்தத்தில் “அவர்தானா……?” என ஆவலோடு எட்டிப்பார்த்தவன் அதிர்ந்து போனான். வந்து கொண்டிருந்தது இவனது அண்ணன். தன்னைக்கூட்டிச் செல்லத்தான் அவர் வருகின்றார் என்பதை ஊகிக்க அவனுக்கு நேரமெடுக்கவில்லை. இலேசாகப் பயம் பிடித்துக் கொண்டது. ஆனாலும் மனதுக்குள் பொருமினான். “தாங்களும் போகமாட்டினம், போற ஆட்களையும் விடமாட்டினம்” அப்படியே சொல்லித் திருப்பி அனுப்பி விட வேண்டும். நினைத்துக் கொண்டான். ஆனால், விசயம் தலைகரணமாக நடந்தபோது, அவனால் நம்பமுடியவில்லை. வந்த அண்ணனும் வீட்டின் ஒரு மூலையில் போய்க் குந்திக்கொண்டார். கண்கள் சந்தித்த போது, ஆளையாள் ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டார்கள். யாராவது ஒரு ஆள் வீட்டுக்குத் திரும்பியே ஆக வேண்டும் என்றது இயக்கம். “நீ சின்னப் பையன் தானே வயசு வரட்டும்.” என்று நரேசைத்தான் வீட்டுக்குப் போகச் சொன்னான் அண்ணன். தம்பி மறுத்து விட்டான்; “வீட்டுக்கு ஆள் வேணுமென்டால் நீயே போ” என்று அண்ணனுக்குச் சொன்னான். அண்ணன் மறுத்துவிட்டான். இருவருமே பிடிவாதமாக இருந்தார்கள். முடிவெடுக்க முடியாத சிக்கலில் முகாம் பொறுப்பாளர் மாட்டிக்கொண்டார்.

கடைசியில், வன்னியின் ‘ஜீவன்’ பயிற்சி முகாமின் முதலாவது அணியில், அண்ணனும் – தம்பியும் ஒன்றாகவேதான் பயிற்சி எடுத்து, முடித்து வெளியேறினார்கள்.

நரேசின் போராட்ட வாழ்வு இப்படித்தான் ஆரம்பித்தது.

துடிதுடிப்பாகத் துள்ளித்திரிந்த அந்தப் பொடியனை ஊரில் எல்லோரும் ‘குரு’ என்று தான் செல்லமாகக் கூப்பிடுவார்கள். 07.11.1969 அன்று, சிங்கராஜா – மேரிகமலீன் தம்பதிகளின் இரண்டாவது குழந்தையாக அவன் கண்திறந்தபோது, பெற்றவரும், பேரர்களும், சுற்றவரும் சேர்ந்து வைத்த ‘அருள்நாயகம்’ என்ற பெயர் பள்ளிக்கூட பதிவுக்கு மட்டும் செல்லுபடியானது. அந்தச் சின்னவன் குறும்புத்தனம் அதிகமானவனாக இருந்த போதும், பசுமையாகப் பழகும் பண்பும், இலகுவில் இரக்கப்பட்டுவிடும் சுபாவமும், கோபம் வந்தால்கூட எவரையும் அளவுக்கதிகமாகக் கோபித்துக் கொள்ளாத இயல்பும் அவனிடம் குடிகொண்டிருந்தன. கதைகளுக்கு அவ்வளவு இடம் கொடுக்காது, காரியங்களில் மட்டும் கண்ணான ஒரு குணாம்சமும், எதனையும் துருவித்துருவி ஆராய்ந்து விடயங்களை அறிய விழையும் ஆர்வமும் அவனிலிருந்த சிறப்பான தன்மைகள் எடுத்துக் கொண்ட எந்த முயற்சியையும், நிறைவெய்தும் வரை நிறுத்திக்கொள்ளாத உழைப்பாளி அவன். பிஞ்சுப் பருவத்திலேயே அறிவும், ஆற்றலும் அவனுக்குள் விதைபோட்டு வளரத் துவங்கியிருந்தன. அவனுக்குள் ஊறிப்புரையோடியிருந்த இத்தகைய உயர்ந்த தன்மைகள்தான் படிப்படியாகப் பரிணமித்து பிற்காலத்தில், சண்டைக் களங்களின் அதிபதியாகச் செயற்படக்கூடிய தகமைக்கும்; நிர்வாகப் பொறுப்பாளனாகப் பணியாற்றக்கூடிய தகுதிக்கும் அவனை வளர்த்துச் சென்றன என்று சொல்லலாம்.

இந்திய ஆக்கிரமிப்புப் பூதம் எங்கள் நிலமகள் மேனியில் கோரத் தாண்டவமாடிய ஆரம்ப நாட்களில் ஒன்று அது. புதுக்குடியிருப்பில், சிற்றூர்ப் பொறுப்பாளனாக, நரேஸ் அப்போது அரசியல் வேலை செய்துகொண்டிருந்தான். அடிக்கடி மேலால் பறந்து இலக்கற்றுச் சுட்டுக்கொண்டு திரிந்த இந்திய வல்லூறு ஒன்று, அன்றும் வந்து சுட்டுக்கொண்டுபோனது. இலக்கு வைத்துச் சுட்டதோ, இலக்கின்றித்தான் சுட்டுவிட்டுப் போனதோ தெரியவில்லை. ஆனால், அதன் ரவைச் சன்னங்கள், நரேசின் நாரியையும் உடைத்து, இடது காலையும் துளைத்துச் சென்றுவிட்டன. அருகிலேதான் வீடு. யாரோ ஓடிச்சென்று சொல்லிவிட பெற்றெடுத்த தாய் மனது ஓலமிட்டது. ஓடோடி வந்த அன்னை, ஊறிப்போகாமல் நிலத்தில் தேங்கிநின்ற குருதியில் விழுந்து, விம்மி வெடித்துக் கதறிக் கொண்டிருக்க, வைத்தியசாலைக் கட்டிலில் தனது காயத்துக்குக் கட்டுப்போடுவதை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தான் மைந்தன்.

காயம் மாறி வந்தவன் கண்ணிவெடிக்கு இலக்குத்தேடினான். வைக்கக்கூடிய இடத்தையும் தேடினான். வசதியான இடம் அவனது சொந்த வீட்டிற்கு அருகில்தான் இருந்தது.

வேவு பார்த்து, நேரம் குறித்து, படை வண்டித் தொடரில் இத்தனையாவதுக்கு என இலக்கு வைத்து, கண்ணிவெடி புதைத்து, வயரிழுத்து, பற்றைக்குள் பதுங்கி அவன் அமத்தக் காத்திருந்தபோது காட்டிக் கொடுப்பவன் காரியம் பார்த்துவிட்டான். அந்த “நல்ல வேலையை” செய்தவன் நரேசின் வீட்டையும், குடும்பத்தையும் சேர்த்தே காட்டிக்கொடுத்தான்.

இந்தியர்கள் வளைத்துப் பாய்ந்தார்கள். இந்த விடுதலைப்புலி தப்பிவிட்டான். அம்மாவும் பிள்ளைகளும்கூடத் தப்பிவிட்டார்கள். ஆனால், அப்பா சிக்கிக்கொண்டு விட்டார்.

அவரது கையாலேயே தீ மூட்ட வைத்து, அனல் வாய்கள் அவர்களது குடிசையைத் தின்று தீர்த்துச் சாம்பாராக்கும் அக்கிரமத்தைக் கண்களாலும் காணவேண்டிய கொடுமைக்கு அப்பாவை உள்ளாக்கிய இந்தியர்கள், அவரை இழுத்துக் கொண்டு போனார்கள். அன்று கொண்டு போனவர்கள்தான் அதன் பிறகு அப்பா வரவில்லை; இன்றுவரை…. வரவேயில்லை.

அப்பா இனி வரவே மாட்டார் என்பது தெரிந்தபோது, அம்மா துவண்டு போனாள்.

அப்பாவைப் பறிகொடுத்த சோகம் பெரும் சுமையாய் அம்மாவை அழுத்திக் கொண்டது. அப்பா உயிரிழந்ததோடு, அம்மா உயிரிருந்தும் இல்லாதது போலாகிவிட்டார். கொஞ்ச காலத்திற்கு முன்னர்தான் ஆசைத்தங்கை கனிஸ்ராவை இயற்கையிடம் இழந்து போயிருந்தது அந்தக் குடும்பம். இது அடுத்த இடி. இந்த வேதனையின் தொடர் இத்தோடு முடிந்ததா? இல்லையே! அம்மாவின் ஆத்மாவைப் பிழிந்த கொடுந்துயர் நீளத்தானே செய்தது; இதன் பிறகு அவள் பாசத்தைக் கொட்டி வளர்த்த குழந்தைகள் இருவரை அம்மா அடுத்தடுத்து இழந்த துன்பம் நிகழ்ந்தது! லூர்து நாயகத்தையும், மரிஸ்ரலாவையும் கொடிய நோய்கள் பிரித்துக் கொண்டு போனபோது அம்மாவை நடைப்பிணமாக்கிய அந்தச் சோகத்தை! அம்மாவின் மனநிலைக்கு உருக்கொடுக்க வார்த்தைகள் கிடையா.

இந்தியப்படையின் இடைவிடாத நெருக்கடி; அம்மாவுக்கும் தம்பி தங்கைக்கும் ஆறுதல் சொல்லித் தேற்றிவிட்டு நரேஸ் தலைமறைவாகி விட்டான்.

இந்தியாவை எதிர்த்துப் புலிகள் நிகழ்த்திய ஆச்சரியமரமான வரலாற்றுப் போரில் அதன் பிறகு அவனது பணி அடர்ந்த காடுகளுக்குள் தொடர்ந்தது. “சூரியஒளி உட்புகாத வளங்களில் புலிகளைத் தேடுகிறோம்” என இந்தியர்கள் வர்ணித்த இடங்களிலெல்லாம், அவன் இந்தியர்களைத் தேடினான். எதிரிகளுக்காகக் காத்துக் கிடந்தான். அவர்களது அசைவுகளையெல்லாம் வேவு பார்த்தான். கேட்டுக் கேள்வியின்றிப் புகுந்தவர்களுக்குப் புலிகள் புதைகுழி தோண்டிய சண்டைகளில் அவனது துப்பாக்கி இலக்குத் தவறாமல் இயங்கியது.

குமுழமுனையில் ஒரு சண்டை இதே இடத்தில் வைத்து எங்கள் வீரர்கள் மீது இந்தியர்கள் பதுங்கியிருந்து தாக்கியதற்குப் பதிலடியாக அது நடாத்தப்பட்டது. அன்று, வீழ்ந்துபோன எங்கள் தோழன் ஒருவனின் தலையை இந்தியர்கள் அறுத்தெடுத்துப் போய்விட்டார்கள். ‘அவர்களுடைய பாணியில் அவர்களுக்குப் பதிலளிப்பேன்’ என்று சொல்லிச் சென்ற நரேஸ் சொன்னதைச் செய்தான்.

போர் புரிவதன் நவீன வழிமுறைகள் பற்றி, பிரபாகரனின் படைகளிடம் பாடம் கற்றுக்கொண்டு, இந்திய வல்லாதிக்கத்தின் பட்டாளங்கள் வெளியேறியபின் மீண்டும் போரோசை அதிர, ‘இரண்டாவது ஈழ யுத்தம்’ ஆரம்பித்தபோது, வன்னியின் சண்டைமுனைகளில் ஒரு முன்னணிச் சண்டைக்காரனாக நரேஸ் முழங்கத்துவங்கினான்.

இராணுவத்தினரைத் தாக்கி முகாம்களுக்குள் முடக்கிய புலிகள், படிப்படியாக முகாம்களைத் தாக்கி அழிக்கத் துவங்கிய போது, போர் புதிய பரிமாணத்தைப் பெற்றது.

கொக்காவில் படை முகாமை நிர்மூலமாக்கிய போது, ரவைகள், நரேசின் இடதுகாலில் துளையிட்டன. மாங்குளம் முகாமைத் தகர்த்தழித்த தாக்குதலின் போது, காயம் இடது கையில் பட்டது. முல்லைத்தீவு முகாம் முற்றுகைக்குள், முடக்கப்பட்டவர்களுக்கு முண்டு கொடுக்க, கடல்வழியாகத் தரையிறங்கி வந்தவர்களை எதிர்கொண்ட சண்டையில், இயந்திரத் துப்பாக்கியின் சன்னங்கள் இடுப்பை உடைத்துச் சென்றன.

இப்படியிருக்கையில் 1991 இன் முடிவுப்பகுதியில் அது ஒரு துயர நாள். படையினரின் பதுங்கித் தாக்குதல் ஒன்றில் எமது முல்லைத்தீவு மாவட்டச் சிறப்பத் தளபதி மேஜர் காந்தனை நாங்கள் இழந்துபோனோம். அதன் பிறகு, அவனின் இடத்திற்கு, ஆற்றலும், ஆளுமையும் கொண்ட நரேஸ், தளபதி பால்ராஜின் பரிந்துரையின் பேரால் நியமிக்கப்பட்டான்.

மக்களின் குடிசைக்குள்ளேதான் அந்த விடுதலைப்புலி குடியிருந்தான். அவர்களின் மேல் அளவுகடந்த பாசத்தைப் பொழிந்து நின்று, அவர்களது இன்பங்களிலும், துன்பங்களிலும் பங்காளியானான். முகாமில் கூடியிருக்கும் போது, “அந்த ஊர்ச்சனங்கள் சரியாகக் கஸ்டப்படுதுகள்” என எங்களுக்குள் கதைத்துக்கொள்வது அவனது காதில் விழுந்ததனால் அடுத்த நாள் கையிலுள்ளவற்றை எல்லாம் கொண்டுபோய் வைத்துக் கொண்டு அந்தக் கிராமத்தில் நரேஸ் நிற்பான். மக்களது குறைகளை நிவர்த்தி செய்ய, தன்னால் இயலுமானவரைக்கும் வழிசெய்து கொடுத்தான். மக்களை அணிதிரட்டித் துணைப்படையை உருவாக்கி, போர் அரங்குகளில் மெச்சத்தக்க விதமாகச் சேவையாற்ற வைத்தான். எதிரி நகரக்கூடும் என அரவம் தெரிந்த இடங்களிலெல்லாம், அந்தத் தளபதி ஊன் உறக்கமின்றிக் கிடந்தான். ஒவ்வொரு துப்பாக்கிக்கும் ‘நிலை’ காட்டினான். அல்லும் பகலும் ஓய்வின்றி நின்று, அரண்களுக்கு அமைவிடம் சொன்னான்.

அந்த நாட்களில் லெப்ரினன்ற் கேணல் நவநீதனின் உற்ற துணையோடு அவன் செய்து முடித்த பணிகள் ஏராளமானவை.

அன்றொருநாள், வற்றாப்பளை அம்மன் கோவிலில் கொடியேறி திருவிழா ஆரம்பித்திருந்தது. சிங்களப் படையிடம் அனுமதி வாங்கி, செஞ்சிலுவைச் சங்கத்திடம் அனுசரனை பெற்று, வன்னி நில மக்கள் கோலாகலமாகக் கொண்டாடிய அந்தப் பெருவிழா மீது, சிங்கள வெறியர்கள் பீரங்கிக் குண்டு பொழிந்து நாசப்படுத்திய கொடூரம் நடந்தது. செய்தியறிந்தபோது நரேஸ் கொதித்தான். அந்தத் துயரம் அவனது இதயத்தில் அம்புகளாய்த் தைத்தது. “பதிலடி கொடுத்தே தீருவேன்” அந்த மணித்துளியிலேயே சொல்லிவைத்தான். காயமடைந்தவர்களுக்கு உதவவென அவன் அவன் அனுப்பி வைத்த வாகனங்கள், கோவிலை நோக்கி விரைந்து கொண்டிருக்க, முல்லைத்தீவு முகாமின் கரையோரக் காவல் வியூகத்தை வேவுபார்க்க ஆட்களை ஒழுங்கு செய்துகொண்டிருந்தான் அந்தத் தளபதி.

இருள் விலகாத ஒரு அதிகாலையில் அந்தப் பதிலடித் தாக்குதல் நடந்தது. முன்னணி வீரர்களுள் ஒருவனாக நரேஸ் களத்திலிறங்கினான். பகைவனுக்கு அடி பிடரியில் விழுந்த, அதிசயமான தாக்குதல் அது. எப்படி அது சாத்தியமானது என்பதை, இன்றுவரை எதிரியால் ஊகிக்க முடியவில்லை. 25 சிங்களப் படையாட்களைக் கொன்று, ‘பிப்ரிகலிப’ரோடு ஆயுதங்களையும் எடுத்து வந்த அந்தத் தாக்குதலில் இழப்பேதுமில்லைப் புலிகளுக்கு. ‘புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் சிங்களப் படை அகலக்கால் வைத்தால், அது மிக ஆபத்தாகவே முடியும் என்பதையே இத்தாக்குதல் உணர்த்துகிறது” என்று சொன்னது பி.பி.சி.

முல்லைத்தீவு பழைய இராணுவ முகாமுக்கு அருகிலிருந்த மினி முகாமைத் தாக்கி, 9 படையினரின் உடல்களையும், ஆயுதங்களையும் எடுத்து வந்த சண்டை, கடற்கரையோர ரோந்து அணியொன்றினைத் தாக்கி 6 படையினரைக் கொன்று ஆயுதங்களைக் கைப்பற்றிய சண்டை. முல்லைத்தீவிலிருந்து அலம்பில் நோக்கி நகர்ந்த படையினரை எதிர்கொண்டு, ஓய்வு உறக்கமின்றி பதினொரு நாட்கள் மோதிய தொடர்ச் சண்டை என, அந்த வீரனின் சாதனை வரிசை நீளமானது.

இப்போது, கிளிநொச்சிக் கோட்டச் சிறப்புத் தளபதியாகப் பணி. எவருக்குத் தெரியும் இதுதான் நாங்கள் அவனோடு வாழப்போகும் கடைசி வருடம் என்று? அந்த மக்களின் உயர்வுக்காக, அந்தப் பிரதேசத்தின் மேம்பாட்டிற்காக அவனது நாட்கள் உரமாகின. ஏற்கெனவே பட்ட வெடிகளினால் இயற்கை அமைப்பு மாறிப் போன இடது காலுடன், ஆனையிறவுப் படைத்தளத்தின் தென்பகுதி அரண்களைச் சுற்றிச் சுற்றி நடந்து தாக்குதலுக்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்த பொழுதுகளிலும் – சமூக மேம்பாட்டுப் பணிகளில் நேரமொதுக்கி ஈடுபட்டான். துவங்கப்பட்ட வேலைத்திட்டங்களுக்குத் தடங்கல்கள் வந்தபோது, நீக்கி நிவர்த்தி செய்தான். உதவிகேட்டு வந்தவர்கள் கைநீட்டி, நின்றபோது, கைகொடுத்தான். “செய்து தருவேன்” எனக் கொடுத்த வாக்குறுதிகளை, தலைமேல் வைத்து செய்து முடித்தான். ஒவ்வொரு கிராமத்துக்குள்ளும், அந்தத் தளபதி, மக்களின் குறை துடைக்க நடந்தான். பாடசாலைக்குச் செல்லாத பள்ளிச் சிறுவர்களுக்கு, படிப்பின் முக்கியத்துவத்தைப் பரிவோடு எடுத்துரைத்தான். குப்பையாகத் திரிந்த பையன்களைக் கூப்பிட்டு அணைத்து, துப்புரவைப்பற்றிச் சொல்லிக் கொடுத்தான். நகம்வெட்டி, தலைக்கு எண்ணை தேய்த்து, சுத்தமாய் இருக்கச் சொல்லி அனுப்பி வைத்தான்.

காஞ்சிபுரம் கிராமத்தில், இராணுவத்தின் மிதிவெடியில் காலை இழந்த ஒரு ஏழைச் சிறுவன், பள்ளிக்கூடம் செல்லாமல் முடங்கிக் கிடக்கும் நிலை அறிந்த போது, நரேஸ் துடித்துப் போனான். செயற்கைக்கால் செய்து அனுப்பி வைத்துவிட்டு, பொருத்திக்கொண்டு பையன் படிக்கப்போவதை, மகிழ்வோடு பார்த்துச் சிரித்து நின்றது அந்த உள்ளம்.

நாயகன்!

தமிழல்லாத பெயர்களை மாற்றச் சொன்ன போது, வன்னி மாநிலத்தின் அந்த நாயகனுக்கு, ஆசையோடு நாங்கள் இட்ட பெயர் அதுதான். எவ்வளவு அற்புதமாக அந்தப் பெயர் அவனுக்குப் பொருந்தியிருந்தது.

தாய்பிள்ளை ஆகி இருந்து எங்களை நல்வழிப்படுத்தினானே, தவறிழைக்கும் போதெல்லாம் சின்னக் குழந்தைக்குப்போல பாசத்தைக் கொட்டியல்வலா சொல்லித் திருத்தினான்… எங்கே போய்விட்டான்?

காலையிலிருந்து இருளும்வரை, உணவு உடையிலிருந்து உறங்கும் வரை எங்கள் ஒவ்வொரு அசைவுகளிலும் கண்ணுக்கு இமையாக இருந்தானே…. ஏன் இப்படித் திடீரென இல்லாமல் போனான்?

தலைவனின் சிந்தனைக்கெல்லாம் செயல் வடிவம் கொடுத்து வென்று, தளபதி தீபனின் தோளுக்குத் தோள் கொடுத்து நின்று, வன்னி மண்ணுக்குப் பெயரையும் புகழையும், பெருமையையும் சேர்த்துத் தந்தானே…. இனி வரவேமாட்டானா?

கறுத்த மேனி, கவர்ந்திழுக்கும் வசீகரம், வட்ட முகத்தில் பளிச்சிடும் சிரிப்பு. உருளும் விழிகளால் கதைபேசி, எங்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட அந்த நாயகனை, இனி நாங்கள் பார்க்கவே முடியாதா?

அந்த நாள் 28.08.1993.

நம்ப முடியாமலல்லவா இருந்தது!………

இடியென மோதி, எங்கள் நெஞ்சங்களைப் பிளந்து சென்ற அந்தச் செய்தி பொய்யாகிப் போகாதா என்று நாங்கள் ஏங்கினோமே.

கிளாலிக்கு எதிரி படையெடுக்கப் போகிறானாம் என்றபோது, விழி சிவந்தல்லவா நின்றான்! “எங்கள் மக்கள் பாதை வழியே எதிரி வந்து தடுத்து நிற்பதா?” என்று பொங்கினானே. போருக்குப் புறப்படும்போது கூட, “வென்றுவருவேன்” என்று தானே சொல்லிவிட்டுச் சென்றான்!…….. வெற்றியைத் தந்துவிட்டு வராமலே பொய்விட்டானே……

யாழ். குடாநாட்டின் உயிரிற்கு உயிர் கொடுத்த, யாழ்ப்பாண மக்களின் வாழ்வுக்கு வாழ்வளித்த புலோப்பளைச் சமரில், வன்னி நிலத்தின் அந்தப் போர்த் தளபதி, எங்கள் நரேஸ் வீழ்ந்து போனான்!

எதிரி ஏவிவிட்ட பீரங்கிக் குண்டொன்று எங்களிடமிருந்து அவனைப் பிரித்துக் கொள்ளும் அந்தக் கணப்பொழுதை ‘ஒளிவீச்சு’ எங்களுக்குக் காட்டியது.

நெஞ்சு தவிக்க நாங்கள் பார்த்தோம். தென்றலாக வீசிய அந்தப் புயல் ஓய்ந்து போனது!

நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (பங்குனி, 1994).

 

https://thesakkatru.com/commander-lieutenant-colonel-nares/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கம்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.