Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்‌ஷர்களின் அரசியலை எதிர்கொள்ளுதல்

Featured Replies

ராஜபக்‌ஷர்களின் அரசியலை எதிர்கொள்ளுதல்

ஓர் அரசியல்வாதிக்கும் (politician) ஓர் அரசியலாளுமைக்கும் (statesman) உள்ள வித்தியாசம் என்னவென்றால், ஒர் அரசியல்வாதி அடுத்த தேர்தலைப் பற்றிச் சிந்திக்கும்போது, அரசியலாளுமை அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்திக்கிறார்” என்கிறார் ஜேம்ஸ் க்ளார்க்.   

சமகால இலங்கையின் தன்னிகரில்லா ‘அரசியல்வாதிகள்’, ராஜபக்‌ஷர்கள்தான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதேவேளை, ஒருவகையில் பார்த்தால் அவர்கள், மிகச்சிறந்த அரசியலாளுமையும் கூட! ஏனென்றால், அவர்கள் அடுத்த தலைமுறையைப் பற்றியும் மிகத் தௌிவாகச் சிந்திக்கிறார்கள். ஆனாலென்ன, அது ராஜபக்‌ஷர்களினுடைய அடுத்த தலைமுறையாகவே இருக்கிறது; அவ்வளவுதான் வித்தியாசம். இதற்காகவே அவர்கள், தமக்கானதொரு கட்சியையும் உருவாக்கி, பலம் மிக்க சக்தியாக நிலைநிறுத்திவிட்டார்கள். மறுபுறத்தில், இலங்கையின் பாரம்பரியக் கட்சிகளையும் அதன் செல்வாக்கையும் தகர்த்தெறிந்து விட்டார்கள்.   

ராஜபக்‌ஷர்களின் அரசியலை எதிர்கொள்வது பற்றிப் பார்க்கும் முன்னர், ராஜபக்‌ஷர்களின் அரசியல் என்ன என்பதைப் பார்த்தல் உசிதம். அவர்களது அரசியல் அடிப்படை, ‘சிங்கள-பௌத்த’ இனத்தேசியவாத - பெருந்திரள்வாதம் ஆகும்.   

‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் இரத்தினச்சுருக்கம் இதுதான்: சிங்களவர்களே பௌத்தத்தைப் பாதுகாக்க புத்தரால் தெரிவு செய்யப்பட்டவர்கள். இலங்கை என்பது, சிங்களவர்களுக்கு உரித்துடைய நாடு. ஆகவே, இலங்கையில் ‘சிங்கள-பௌத்த’ அடையாளங்களைப் பாதுகாப்பதே, சிங்கள-பௌத்தர்களுடைய கடமையாகும்.   

மானிடவியல் ஆய்வுகள், இன்றைய ‘சிங்கள-பௌத்த’ அடையாளம் என்பது, 19ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றியது என்கிறது. இனத்தினதும் மதத்தினதும் அடையாளத்தின் இணைப்பாக அது இருந்தாலும், அடிப்படையிலும் உருவாக்கத்திலும் குணத்திலும் அது ஓர் அரசியல் அடையாளம் ஆகும்.   

அந்த அரசியல் அடையாளம், இலங்கையின் மய்யவோட்ட அரசியலுக்குள் நுழைந்து, இலங்கை அரசியலில் ஆதிக்க சக்தியாக, இன்று உருவாகியிருக்கிறது. இந்தச் ‘சிங்கள-பௌத்த’ இனத்தேசிய அரசியலை, பெருந்திரள்வாத அடிப்படையில் ராஜபக்‌ஷர்கள் முன்னெடுக்கிறார்கள். ஏதோவோர் அடிப்படையில், தம்மை ஒரு ‘மக்களாக’ அடையாளம் காணும் மனிதக் கூட்டமொன்றை, தம்மில் வேறுபட்ட மற்றையவர்களுக்கு எதிராக நிறுத்தும் சித்தாந்தமே பெருந்திரள்வாதமாகும்.   

இந்தச் ‘சிங்கள-பௌத்த’ இனத்தேசியவாத - பெருந்திரள்வாத அரசியலின் விளைவு, குறித்த பெரும்பான்மை இனத் தேசிய அரசியல் அடையாளத்துக்கு உட்படாதவர்கள் மீதான, மாற்றாந்தாய் மனப்பான்மையும் வெறுப்பும் அந்நியப்படுத்தலும் ஆகும்.   

மறுபுறத்தில், இனத்தேசிய வாக்குவங்கியைத் தக்கவைத்துக் கொள்வதிலும் ராஜபக்‌ஷர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். இலங்கை மக்களிடையே, நிலப்பிரபுத்துவ மனநிலையின் தொடர்ச்சிகளை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. சர்வாதிகாரமுள்ள ஜனாதிபதிமுறையைச் சுவீகரிக்கும் மனப்பாங்கு கூட, இந்த நிலப்பிரபுத்துவ மனநிலையின் தொடர்ச்சி எனலாம்.   

ஜனாதிபதியென்றால், அவரது அதிகாரத்துக்கு மட்டுப்பாடு இருக்கக்கூடாது; அவரால் எதையும் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும் போன்ற சிந்தனைகளும், ஜனாதிபதியை “அதியுத்தம” என்று விளிக்கும் மனநிலையும் நிலப்பிரபுத்துவச் சிந்தனையின் தொடர்ச்சியாகும்.  

இலங்கையின் பெரும்பான்மையின மக்களின் மனநிலையை, ராஜபக்‌ஷர்கள் மிக நன்றாகப் புரிந்தவர்கள். உண்மையில், இதுதான் அவர்களின் வெற்றியின் இரகசியம். “இதுவே என் கட்டளை; என் கட்டளையே சாசனம்” என்ற மன்னராட்சி மனநிலையைக் கொண்டாடிச் சிலாகிக்கும் மக்கள் கூட்டம், “எனது வார்த்தைகள்தான் சுற்றறிக்கை” என்று சொல்வதை வரவேற்பதில் ஆச்சரியமில்லை.   

நாட்டின் நிர்வாகம் சிறப்பாக நடைபெறுகிறதா என்பதைக் கவனிக்க, மன்னர்கள் ரோந்துபோவது போல திடீர் விஜயங்களை மேற்கொண்டு, தலைமையாசிரியர் மாணவர்களை ஒழுக்கவிசாரணை செய்வது போல அதிகாரிகளை விசாரணை செய்வதை, ஜனநாயக அரசமைப்புக் கட்டமைப்புக்கு உள்ளான ஜனாதிபதியின் நடத்தைப்போக்கைக் கைதட்டி வரவேற்கும் மக்கள் கூட்டம் இருக்கும்வரை, ராஜபக்‌ஷர்களின் அரசியல் வெற்றி பெற்றுக்கொண்டேயிருக்கும்.   

அப்படியானால், வெற்றிகரமானதொரு சூத்திரத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் ராஜபக்‌ஷர்களின் இந்த அரசியலை, எவ்வாறு எதிர்கொள்வது என்ற கேள்வி எழுகிறது. ராஜபக்‌ஷர்கள் சர்வாதிகார அரசியலை விரும்பகிறவர்கள்; இதற்கு அவர்கள் கொண்டுவந்து, கொண்டுவர விளைகிற அரசமைப்புத் திருத்தங்களே சாட்சி. எல்லாச் சர்வாதிகாரிகளுக்கும் குறிப்பாக, ஜனநாயகக் கட்டமைப்புக்குள் சர்வாதிகாரத் தன்மையான ஆட்சியை முன்னெடுப்பவர்களுக்கு, தமது ஆட்சிக்கான சட்டபூர்வத் தன்மையை நிரூபிக்க வேண்டிய உணர்வு இருந்துகொண்டே இருக்கும். இது ஒருவிதமான பாதுகாப்பின்மை உணர்வு.   

அதனால் அவர்கள் தொடர்ச்சியாகத் தேர்தல்களை நடத்துவார்கள். நேர்மையான தேர்தலா, இல்லையா என்பது இங்கு முக்கியமல்ல. தேர்தல் வெற்றியைத் தமது ஆட்சிக்கான மக்கள் அங்கிகாரமாக முன்னிறுத்தும் அதேவேளை, தேர்தலில் தோல்வியடையும் எதிர்க்கட்சிகளை வலுவற்றதாகவும், அவர்களுக்கு மக்கள் அங்கிகாரம் இல்லை என்றும் உணரச் செய்வார்கள். வெற்றியடைந்தவர் 51 சதவீதமும், தோல்விகண்டவர் 49 சதவீத வாக்குகளையும் பெற்றால் கூட, தோல்வியடைந்தவருக்கு மக்களாதரவு இல்லை என்ற மனநிலை, பலமான பிரசாரத்தினூடாக முன்னெடுக்கப்படும்.   

தேர்தல்கள், உண்மையில் எதிர்க்கட்சிகளின் பலத்தை மதிப்பிட சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு. எதிர்க்கட்சி கொஞ்சம் பலமடைகிறது என்று தெரிந்தால் கூட, அதைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.   

மறுபுறத்தில், அவ்வப்போது மக்களிடையே எழக்கூடிய அதிருப்தி, கோபத்துக்கான வடிகால்களையும் உருவாக்குவார்கள். அடிக்கடி நிகழும் அமைச்சரவை மாற்றங்கள், விசாரணை ஆணைக்குழுக்கள், அதிரடி நடவடிக்கைகள் என்பதெல்லாம் இத்தகைய வடிகால்களே ஆகும். இவை எல்லாவற்றின் ஊடாகவும், ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைப்பது ஒன்றே அவர்கள் எண்ணமாக இருக்கும்.  

இந்த அரசியலை எதிர்கொள்ளவது மிகச்சிக்கலானது. மிகுந்த பொறுமையும் அரசியலறிவும் அனுபவமும் ஆற்றலும் கொண்ட அரசியல் தலைமைகளால் மட்டுமே, இத்தகைய வல்லமை பொருந்திய அரசியலை எதிர்கொள்ள முடியும். ஆனால் இன்றைய எதிர்க்கட்சி(கள்) அப்படியாகவா இருக்கின்றது(ன)?  

இந்தச்சூழலில் இன்றைய எதிர்க்கட்சியின் நிலை என்ன? ராஜபக்‌ஷர்களின் அரசியல் வெற்றிக்கான காரணம், ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதம் என்பதை இன்றைய எதிர்க்கட்சி உணர்ந்திருக்கிறது. ஆகவே, தேர்தலில் வெற்றியடைய வேண்டுமென்றால், அதே ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தைத் தாமும் முன்னிறுத்த வேண்டும் என்ற சிறுபிள்ளைத்தனமான புரிதலில், எதிர்க்கட்சி இயங்கிக் கொண்டிருக்கிறதாகவே தெரிகிறது.   

இத்தகைய அரசியல், ராஜபக்‌ஷர்களின் அரசியலுக்கான மாற்றாக அமையப் போவதில்லை; மாறாக, ராஜபக்‌ஷர்களின் அரசியல் சித்தாந்தத்தைப் பலப்படுத்துவதோடு, அவர்களது வாக்கு வங்கியையும் நிலைக்கவே செய்யும்.   
இன்றைய நிலையில், ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் தன்னிகரற்ற தலைவர்கள் ராஜபக்‌ஷர்களே. அந்த நிலையை அவர்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்கவோ, சமரசம் செய்யவோ போவதில்லை. ஆகவே, ராஜபக்‌ஷர்களின் அதேநிலைப்பாட்டை, எதிர்க்கட்சியினர் எத்தனை உரக்கச் சொன்னாலும், ‘சிங்கள-பௌத்த’ வாக்கு வங்கியின் ஆதரவை ராஜபக்‌ஷர்களிடமிருந்து உடைத்தெடுத்துவிட முடியாது.   

ஆகவே, ராஜபக்‌ஷர்களின் அதே அரசியலை எதிர்கட்சியினர் முன்னெடுக்கும் போது, அவர்கள் எப்போதும் ராஜபக்‌ஷர்களின் பின்னால், இரண்டாம், மூன்றாம் நிலைகளிலேயே தொடர்ந்து கொண்டிருப்பார்கள். இதனால்தான், ராஜபக்‌ஷர்களின் அரசியலுக்கான வலுவான மாற்றை முன்வைப்பது அவசியமாகிறது. 

அரசியல் என்பது நீண்டகாலச் செயற்பாடு. ராஜபக்‌ஷர்களின் அரசியலுக்கான வலுவான மாற்றை விடாமுயற்சியுடன் தொடர்ந்து மக்கள் முன்னால் கொண்டு செல்லும் போது, அது குறுங்காலத்தில் அல்லாவிட்டாலும், நீண்டகாலத்தில் நிச்சயமான வெற்றியைப் பெற்றுத்தரும்.  

மாறாக, ராஜபக்‌ஷர்களின் அரசியலையே எதிர்க்கட்சிகள் தாமும் முன்னெடுக்கும் போது, எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் இரண்டாவது நிலையிலேயே இருக்கும். ஏனென்றால், மேற்சொன்னது போலவே, ராஜபக்‌ஷர்களின் அரசியலில் ராஜபக்‌ஷர்களைத் தோற்கடிக்க முடியாது.   

ஆனால், இன்றைய எதிர்க்கட்சி செய்யும் காரியங்கள் நாகரிகமானதாகக் கூட இல்லை. இன்று பேரினவாத அரசியலை ராஜபக்‌ஷர்களைவிடவும் மிகமோசமாக முன்னெடுப்பவர்களாகப் பிரதான எதிர்க்கட்சியினர் இருக்கிறார்கள் என்பது, அவர்களது அண்மைய நடவடிக்கைகளிலிருந்து காணக்கூடியதாக இருக்கிறது.  தமது உறுப்பினர்களின் இந்த இனவாத, நாகரிகமற்ற நடத்தைகளைக் கட்டுப்படுத்தவோ, கண்டிக்கவோ முடியாத நிலையில்தான் பிரதான எதிர்க்கட்சியின் தலைமையும் காணப்படுகிறது என்பதும் கவலைக்குரியது.   

“ரணில் விக்கிரமசிங்க ஒரு பலமற்ற தலைவர்” என்று சொல்லி, பலமான எதிர்க்கட்சித் தலைமைக்காகப் போராடியவர்கள்தான் இவர்கள். ஆனால், உண்மையில் இவர்களது பலமும் நேர்மையும் எத்தகையது என்பது வெட்டவௌிச்சமாகி, சந்தி சிரித்து நிற்கிறது. இனியாவது பிரதான எதிர்க்கட்சி விழித்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அதுவும் ராஜபக்‌ஷர்களின் வெற்றிதான்.    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ராஜபக்-ஷர்களின்-அரசியலை-எதிர்கொள்ளுதல்/91-256036

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.