Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசமைப்புக்கான 20ஆம் திருத்தச் சட்டமூலமும் கட்சித்தாவல்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசமைப்புக்கான 20ஆம் திருத்தச் சட்டமூலமும் கட்சித்தாவல்களும்

-என்.கே. அஷோக்பரன்

அரசமைப்புக்கான 20ஆம் திருத்தச் சட்டமூலம், இலங்கை நாடாளுமன்றத்தில் ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி, 156 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறி உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களில் 65 பேர் எதிர்த்துள்ளனர். இதில், பிரதானமாக இரண்டு விடயங்கள், பொது வாதப்பிரதிவாதத்தின் பொருளாக மாறியிருக்கின்றன.  முதலாவது, 20ஆம் திருத்தச் சட்டமூலத்தின் பாரதூர விளைவுகள்.   இரண்டாவது, கட்சித்தாவல்கள்.   

20ஆம் திருத்தச் சட்டமூலத்தின் பாரதூர விளைவுகளைப் பற்றி, பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளும் விமர்சனக் கலந்துரையாடல்களும் பாரம்பரிய ஊடகங்களிலும் சமூக ஊடக வௌியிலும் குவிந்து கிடக்கின்றன.   

20ஆம் திருத்தச் சட்டமூலத்தின் சுருக்கம் யாதெனில், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்துக்கு, 17ஆம், 19ஆம் திருத்தங்களினூடாகக் கொண்டுவரப்பட்ட மட்டுப்பாடுகளைப் பலவீனப்படுத்தியும் இல்லாதொழித்தும், ஜனாதிபதியிடம் மீண்டும் நிறைவேற்றதிகாரத்தைக் குவிப்பதாக அமைகிறது.   

இங்கு, ‘மீண்டும்’ என்ற சொல் கவனிக்கப்பட வேண்டியது. ஜே.ஆர். கொண்டுவந்த இந்த அரசமைப்பில், ஜே.ஆர். தனக்குத்தானே வகுத்தளித்துக்கொண்ட நிறைவேற்றதிகாரங்களை, பெருமளவுக்கு ஒத்த நிறைவேற்று அதிகாரங்களை கோட்டாபய, தனக்குத்தானே தற்போது, வகுத்தளித்துக் கொண்டிருக்கிறார்.   

20ஆம் திருத்தச் சட்டமூலத்தின் அறிமுகத்தை, அதிர்ச்சியோடு எதிர்கொள்ள வேண்டியதில்லை. 2019ஆம் ஆண்டு நவம்பரில், கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகத் தெரிவானபோதே, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, இத்தகைய அரசமைப்புத் திருத்தம் வரும் என்பது, வௌ்ளிடைமலையாகவே இருந்தது.

அந்தச் சந்தர்ப்பத்தில், ராஜபக்‌ஷர்களின் பொதுஜன பெரமுன, தனித்து மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுமா என்பது, நிச்சயமற்று இருந்த நிலையில் கூட, அரசமைப்புத் திருத்தத்தை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றும் நாடாளுமன்றப் பலத்தைப் பெற்றுக்கொள்ளும் என்ற நிச்சயத்தன்மை உருவாகக் காரணம், இலங்கை அரசியலில் சர்வசாதாரணமாகிப் போயுள்ள கட்சித்தாவல் கலாசாரமாகும்.   

கட்சித்தாவுகின்றவர்களை, ஆங்கிலத்தில் turncoat அல்லது renegade என விளிப்பார்கள். Renegade என்றால், தான் சார்ந்திருந்த அமைப்புக்கோ நாட்டுக்கோ கொள்கைக்கோ  நம்பிக்கைக்கோ துரோகமிழைத்து, அதிலிருந்து நீங்கி, மாற்றுத்தரப்பை ஏற்பவரைக் குறிக்கும் சொல்லாகும். 

Turncoat என்ற சொல்லுக்கு இன்னும் சுவாரசியமானதொரு வரலாறு இருக்கிறது. 12ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில், பிரித்தானியாவில் இரண்டு சீமான்கள், வில்லியம் மார்ஷலுக்கு அளித்துவந்த விசுவாசத்தைக் கைவிட்டு, ஜோன் மன்னருக்குத் தமது விசுவாசத்தை வழங்கினார்கள். இதன்மூலம், வில்லியம் மார்ஷலின் இலச்சினையை (coat of arms) மாற்றி, ஜோன் மன்னரின் இலச்சினையை ஏற்றதால், ‘Turncoat’ என்ற சொல் உருவானதாக ஒரு கதையுண்டு. 

இதுபோன்ற, 1,000 கட்சித்தாவல்களையும் அரசியல் துரோகங்களையும் உலகம் எங்கிலுமுள்ள வரலாறுகளில், இலக்கியங்களில் நிறைந்தளவில் காணலாம். ‘தக்கன பிழைக்கும்’ என்பது, இயற்கையின் நியதி; எனில், உயிர்கள் இயல்பாகவே பிழைத்துக்கொள்வதற்காகத் தம் இயல்புகளை மாற்றிக்கொள்வதும் நியதியேயாகும். இந்த நெகிழ்ச்சித் தன்மை இயல்பானதாகும். 

ஆனால், இந்த இடத்தில்தான் விழுமியங்களும் ஒழுக்கங்களும் நியதிகளும் சட்டங்களும், மனித வாழ்வை நெறிப்படுத்த உருவாகின. அவை, நெகிழ்ச்சித் தன்மையைத் திடப்படுத்த, சில சட்டகங்களை ஸ்தாபித்தன. ‘ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்’, ‘மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்’ போன்ற, உயர் ஒழுக்கக் கோட்பாடுகள், இத்தகைய சட்டகங்களை ஸ்தாபித்தன. 

இதில் மதங்களின் பங்கு முக்கியமானது. ‘சத்தியமேவ ஜயதே நான்றதம், சத்யேன பந்தா விதாதோ தேவயானா’ என்று, முண்டக உபநிஷதம் உரைப்பதும் ‘பொய்யான பேச்சைத் தவிர்க்க’ என்பது, பௌத்தத்தின் எட்டுக் கட்டளைகளில் ஒன்றாக இருப்பதும் ‘பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே’ என்று யூத, கிறிஸ்தவ மதங்கள் சொல்வதும் ‘பொய்யான சொல்லையும் நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள்’ என்று குர்ஆன் சொல்வதும் ஆகிய எல்லாம், இந்த ஒழுக்கக்கட்டுப்பாட்டின் பாற்பட்டவையே.   

இந்த ஒழுக்கக் கட்டுக்கோப்பின் வழியாகத்தான், அடையாளபூர்வ சத்தியப்பிரமாணங்கள், வாக்குறுதிகள் முக்கியத்துவம் பெறத்தொடங்கின. ஒருவன், ஓர் ஆட்சியாளனுக்கு விசுவாசமாக இருப்பேன் என்ற சத்தியப்பிரமாணத்தை வழங்கிவிட்டு, அதற்கு முரணாகத் துரோகமிழைத்தால், அது ராஜதுரோகமாகவும் மரணதண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்பட்டது. இது, அரசியல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; சில மதங்களில், அந்த மதத்தைவிட்டு மாறுபவர்களுக்கு, மரணதண்டனையே தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது. 

இன்றைய நவீன காலத்தில், விசுவாசப்பிறழ்வுக்கு, அரசியல் துரோகத்துக்கு மரண தண்டனை வழங்கப்படாவிட்டாலும், சிறைத்தண்டனைகள், இன்னும் பல நாடுகளின் தண்டனைச் சட்டக்கோவையில் இருக்கிறது. பண்பாட்டு, விழுமிய ரீதியாக விசுவாசப்பிறழ்வும் நம்பிக்கைத் துரோகமிழைத்தலும் கீழ்த்தரமான செயற்பாடுகளாகவே கருதப்படுகின்றன.   

நவீன ஜனநாயகத்தின் கட்சி அரசியலைப் பொறுத்தவரையில், கட்சி விசுவாசம், அதன் முக்கிய அம்சங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, கட்சி மைய அரசியல், கட்சிசார் தேர்தல்கள் நடைமுறையில் உள்ள நாடுகளில், இதன் முக்கியத்துவம் அதிகமாகும். 

‘வெஸ்ட்மின்ஸ்டர்’ நாடாளுமன்றப் பாரம்பரியத்தைப் பின்பற்றும் நாடுகளில், நாடாளுமன்றத்தில் ‘கொறோடா’ (Whip) என்ற பதவியுண்டு. ஆளுங்கட்சிக்கு ஒரு கொறோடா பதவி; எதிர்க்கட்சிக்கு ஒரு கொறோடா பதவி உண்டு. இவர்களின் பணி, கட்சிக் கட்டுப்பாட்டை, தம்கட்சி சார்ந்த உறுப்பினர்கள் மீது தக்கவைத்துக் கொள்வதாகும். 

Whip என்ற சொல் whipping என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். Whipping என்பது, சவுக்கால் அடித்து, கட்டுக்கோப்பில் வைத்திருத்தல் என்ற பொருளையுடையது. கொறோடாவின் பணியும், அடையாள ரீதியில் அத்தகையதே என்பதால், Whip என்ற பெயர் வழக்கமானது. கொறோடாவின் உத்தரவை மீறி நடத்தலானது; நாடாளுமன்றக் குழுவிலிருந்தான நீக்கத்துக்கும் தொடர்ந்து கட்சியில் இருந்தான நீக்கத்துக்கும் வழிவகுக்கும்.   

பிரித்தானிய ‘வெஸ்ட்மின்ஸ்டர்’ முறையின் வெற்றிகரமான இயக்கத்துக்கு, மரபுகள் மீதான மதிப்பு அடிப்படையானது. ஆனால், அத்தகைய மாண்புகள் சகல இடங்களிலும் சகல சந்தர்ப்பங்களிலும் எதிர்பார்க்கப்பட முடியாதவை. 

இலங்கையின் அரசமைப்பு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவதைத் தடுக்கும் ஏற்பாட்டைக் கொண்டிருக்கிறது. அரசமைப்பின் 99(13) சரத்தானது, நாடாளுமன்ற உறுப்பினர், கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, ஒரு மாதகாலத்தில் அவரது நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமாகும் என்று வழங்குகிறது.ஆனால், அந்த ஒரு மாதகாலப் பகுதிக்குள், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர், அவரின் கட்சி உறுப்பினர் நீக்கத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றத்துக்கு மனுச்செய்ய முடியும் என்றும், அவரது நீக்கம் செல்லுபடியானது என்று உயர்நீதிமன்ற அமர்வு தீர்மானிக்கும் போது, அது அவ்வாறு தீர்மானிக்கும் தினத்திலிருந்து, அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பார் என்றும் வழங்குகிறது.   

ஒரு கட்சிக்கு, அதன் உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும், கட்சியிலிருந்து தகுந்த காரணங்களுக்காக நீக்கும் உரிமையுண்டு. ஆனால், அத்தகைய செயற்பாடானது, எதேச்சதிகாரமான முறையில், முன்முடிவுகளின் படியான மனநிலையுடன், இயற்கை நீதிக்கு விரோதமாகச் செய்யப்பட முடியாது.அவ்வாறு செய்யப்படும் போது, அது செல்லுபடியற்ற நீக்கமாக அமையும். 

ஆகவே, இயற்கை நீதியின்படி, தவறிழைத்த உறுப்பினரிடம் விளக்கம் கோருவதும், முறையான ஒழுக்காற்று விசாரணை நடத்துவதும், அதன் முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதுமே பொருத்தமான வழிமுறையாகும். 

இதை முறையாகச் செய்யும் போது, கட்சிகள், கட்சியின் கட்டுக்கோப்புக்குக் குந்தகம் விளைவிக்கும், கொறோடாவின் கட்டளைக்கு உட்பட்டு நடவாத நாடாளுமன்ற உறுப்பினர்களை, கட்சியிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க முடியும்.   

இதைச் செய்வதில், இலங்கையின் சமகால அரசியலில் இன்னொரு சிக்கல் இருக்கிறது. அதுதான், தற்காலிகமாக உருவாகும் பெயரளவிலான ‘கூட்டணிகள்’. எந்தவித முறையான கட்டமைப்புமின்றி உருவாகும் ‘கூட்டணிகள்’, ஏதோ ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகின்றன. அப்படிப் போட்டியிடுபவர்கள், அந்தக் கட்சியின் உறுப்பினர்களாக இருப்பதில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில், அவர்களைக் கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம், அந்தக் கட்சிகளுக்கு இருப்பதில்லை; அதன் விளைவாக, அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்க முடியாது. பஷீர் சேகுதாவூத் எதிர் பேரியல் அஷ்ரப் வழக்கில், இந்தவிடயம் உயர் நீதிமன்றினால் தீர்மானிக்கப்பட்டிருந்தது. 

ஆகவே, பெயரளவிலான கூட்டணிகளை, முறையாகப் பதிவு செய்யாமல், ஏதோ ஒரு கட்சியின் பதாகையின் கீழ் இயக்கும் போது, கட்சிக்கட்டுக்கோப்பை மீறினாலும், கட்சிதாவினாலும் கூட, எதுவும் செய்ய முடியாத நிலையே, யதார்த்தத்தில் காணப்படுகிறது.   

இந்த நிலையின் மாற்றம், முதலில் முறையான கட்சி அமைப்பின் ஸ்தாபிப்பிலிருந்து தொடங்கவேண்டும். அல்லாவிடில், கட்சித்தாவல் என்பது, சர்வசாதாரணமான ஒன்றாகவே தொடரும்.    

 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அரசமைப்புக்கான-20ஆம்-திருத்தச்-சட்டமூலமும்-கட்சித்தாவல்களும்/91-257494

முஸ்லிம்களை விற்றுப் பிழைத்தல்

 

மொஹமட் பாதுஷா

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக, உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம், இரு பௌத்த உயர்பீடங்களின் எதிர்ப்பறிக்கை, கொரோனா வைரஸின் இரண்டாவது அலை, ஆளும் தரப்பின் உள்ளக முரண்பாடுகள், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உறுதிப்படுத்த முடியாத சிக்கல் போன்ற பல்வேறு தடைகளைத் தாண்டி, இச் சட்டமூலத்தை அரசாங்கம் நிறைவேற்றி இருக்கின்றது. 

கடந்த 22ஆம் திகதி, வாக்கெடுப்புக்கு விடப்பட்ட அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் கிடைத்தன. 148 எம்.பிக்களின் வாக்குகளையே பெற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் ஆளும் தரப்பு இருந்த போதிலும், எதிர்த்தரப்பின் எட்டு எம்.பிக்கள் ஆதரவளித்ததன் காரணமாக, அரசாங்கத்தின் அங்கலாய்ப்பு, அமோகமாக நிறைவேறி இருக்கின்றது. 

தற்போது 223 எம்.பிக்களே நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற சூழலில், 19ஆவது திருத்தத்தை முன்னின்று கொண்டு வந்த, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. 

மறுபுறத்தில், 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்த பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் உதவிச் செயலாளர் டயானா கமகேயும் எதிரணியில் அங்கம் வகிக்கும் சிறுபான்மைக் கட்சி  எம்.பிக்களான நஸீர் அஹமட், எச்.எம்.எம்.ஹரீஸ், ஷாபி ரஹீம், பைசல் காசிம், எம்.எஸ்.தௌபீக், அ. அரவிந்த்குமார், இர்ஷாக் ரஹ்மான்  ஆகியோர், 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.  

இதன் மூலம் சில விடயங்கள், பட்டவர்த்தனமாகி உள்ளன. அதாவது, கடந்த தேர்தலில், சிறுபான்மை மக்களின் குறிப்பாக, முஸ்லிம்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை என்ற தோரணையிலேயே பொதுஜன பெரமுன கட்சி செயற்பட்டது. தனிச் சிங்கள ஆட்சியை நிறுவப் போவதாகப் பிரசாரம் செய்தது. ஓரளவுக்கு அதைச் செய்தும் காட்டியது. அதன்பிறகும், “முஸ்லிம் கட்சிகளுடன் கைகோர்க்கும் எண்ணம், ‘மொட்டு’க்குக் கிடையாது” என்றே, ஆளும் தரப்பினர் கூறிவந்தனர்.

ஆனால், ஆறு முஸ்லிம் எம்.பிக்களின் ஆதரவுடனேயே 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் வெற்றி, உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அப்படிப் பார்த்தால், 69 இலட்சம் வாக்குகளுடன் சிங்களப் பெரும்பான்மையைப் பெற்ற பொதுஜன பெரமுனவின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியை, சிறுபான்மைக் கட்சிகளே தீர்மானித்திருக்கின்றன.   

இவ்வாறு, முஸ்லிம் எம்.பிக்கள் ஆதரவளித்தமை, இரண்டு கோணங்களில் பார்க்கப்படுகின்றது. “இந்த ஆட்சியில் நம்பிக்கை வைத்து, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்போதுதான், சரியான பாதைக்கு வந்திருக்கின்றார்கள்” என்று, ராஜபக்‌ஷ ஆதரவு முஸ்லிம் கட்சிகளும் ஆதரவாளர்களும் கூறுகின்றனர். 

மறுபக்கத்தில், 19ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு வாக்களித்த போது இருந்த நிலைப்பாட்டை, 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளித்ததன் மூலம், தலைகீழாக மாற்றிக் கொண்டு உள்ளமையானது, அதிகபட்ச அதிகாரமுள்ள ஆட்சிக்குத் துணைபோவது மட்டுமன்றி, முஸ்லிம் சமூகம் வழங்கிய ஆணைக்கு மாறுசெய்வதும் ஆகும். 

இதன்மூலம், முஸ்லிம்கள் விமர்சிக்கப்படுவதற்கு ஆறு எம்.பிக்களும் வழிவகுத்துள்ளனர் என்ற கருத்து, கடுந்தொனியில் முன்வைக்கப்படுவதைக் காண முடிகின்றது. 

முஸ்லிம்களில் கணிசமானோர், இத்தீர்மானம் சரியென்ற நிலைப்பாட்டுக்கு வந்திருக்கின்றனர். இச்சூழலில், சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்க்கட்சி முஸ்லிம் எம்.பிக்கள் பணத்துக்காகவும் பதவிகளுக்காகவும் விலைபோய்விட்டதாகக் குற்றம் சாட்டுகின்றனர். முஸ்லிம் கட்சிகள், அர்த்தமற்றதும் தளம்பலானதுமான நிலைப்பாட்டில் இருப்பதாகத் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். 

இவ்வாறு, வெளியில் இருந்து முஸ்லிம் எம்.பிக்கள் மீது சொல்லப்படுகின்ற அரசியல் விமர்சனங்கள், சில நாள்களில் ஓய்ந்து விடலாம். முஸ்லிம் காங்கிரஸூம் மக்கள் காங்கிரஸூம் சிலவற்றுக்கு விளக்கமளிக்கலாம், பலதைக் கண்டும் காணாமல் விட்டுவிடலாம். துரதிர்ஷ்டவசமாக, இவ்வாறுதான் தமக்கெதிரான விமர்சனங்களை, எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளும் காலாகாலமாகக் கடந்து வந்து கொண்டிருக்கின்றனர். 

ஆனால், இங்கிருக்கின்ற பிரச்சினை, முஸ்லிம் சமூகத்தை வைத்து, அரசியல் பிழைப்பு நடத்துவதும் சிங்கள தேசியத்துக்கு எதிரான கேடயமாகப் பயன்படுத்துவதும் தமக்குத் தேவை என்று வருகின்ற வேளையில், தமது சொந்த இலாபங்களின் அடிப்படையில் ‘பல்டி’ அடிப்பதுமே பிரச்சினையாகும். 

இதைத்தான் சமூகத்தைக் காட்டிக் கொடுத்தல் என்று கூறப்படுகின்றது. இது, காலாகாலமாக இடம்பெற்றுக் கொண்டு வருவதையும், இவ்விடத்தில் நினைவில் கொள்ள வேண்டியிருக்கின்றது. 

கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் எம்.பியுமான ரிஷாட் பதியூதின், 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் மீதான வாக்கெடுப்பு நாளன்று சபைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். ரிஷாட்டின் கைது தொடர்பாக, முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஒருவிதமான மனக் கிலேசமும்  முஸ்லிம் அரசியல்வாதிகளிடையே அதிர்ச்சியும் ஏற்பட்டிருந்த சமயத்திலேயே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

இவ்வாக்கெடுப்பில் முஸ்லிம் கட்சித் தலைவர்களான ரவூப் ஹக்கீமும் ரிஷாட் பதியூதீனும் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகவே வாக்களித்தனர். ரிஷாட்டோடு சேர்ந்து, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.முஸாரப் எதிராக வாக்களித்திருந்தார். மற்றைய இருவரும் ஆதரவளித்திருந்தனர். இருப்பினும் முஸாரப், இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பான சரத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார். 

இதேசமயம், மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமும் எதிர்த்து வாக்களித்தார். அவருடன் சேர்ந்து 20 இற்கு எதிராக, அக்கட்சியின் ஓர் உறுப்பினர் கூட வாக்களிக்கவில்லை. ‘20 வேண்டாம்’ என்ற சிகப்பு கைப்பட்டியுடன் சபைக்கு வந்திருந்த எம்.எஸ்.தௌபீக் எம்.பி உட்பட, நான்கு உறுப்பினர்களும் ஆதரவளித்திருந்தனர். இது, சபையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நஸீர் எம்.பியிடம், 20 ரூபாய் நாணயத்தாள் ஒன்றைக் கொடுத்து, நையாண்டி செய்ததையும் காண முடிந்தது. 

அரசியலில் எல்லாக் காலத்திலும், ஒரே விதமான நிலைப்பாடுகள் இருப்பதில்லை. 1978ஆம் ஆண்டு, ஜே.ஆர் ஜெயவர்தன இரண்டாம் குடியரசு யாப்பைக் கொண்டு வந்தது முதற்கொண்டு, அதை எதிர்த்துவந்த சுதந்திரக் கட்சிக்காரர்கள்தான், இன்று ஆளும் தரப்பில் இருந்துகொண்டு, ஜனாதிபதிக்கான அதிகாரங்களை அதிகரிக்க வழிகோலும் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தைக் கொண்டு வந்தனர்.

நிறைவேற்றதிகாரத்தை அறிமுகப்படுத்திய ஐ.தே.கட்சியினரே, 2015இல் 19ஆவது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக, ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கு முன்னின்றனர். 

அந்தவகையில், முஸ்லிம் கட்சிகளினதோ சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களினதோ நிலைப்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்; ஏதாவது, சுய ‘பேரங்களின்’ அடிப்படையில், பதவிகள் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் ஆதரவளித்திருக்கலாம். அன்றேல், முஸ்லிம் கட்சிகள், ராஜபக்‌ஷ ஆட்சியாளர்களுடன் முரண்பட்டுச் செயற்படுவது, நல்லதல்ல என்ற நியாயமான காரணத்தின் அடிப்படையில், ஆதரிக்கும் தீர்மானத்தை எடுத்திருக்கலாம். 

ஆயினும், இவ்விரு முஸ்லிம் கட்சிகளும் ஒரு கட்சியாக, ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்காமையும் தலைவர்கள் ஒருபுறமும் எம்.பிக்கள் மறுபுறமும் நின்றமையும் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது. 

கட்சிகளின் கட்டுக்கோப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போயிருக்கின்றது. அவர்கள் தரப்பில், என்னதான் விளக்கமளிக்கப்பட்டாலும் கூட, இதுவொரு நாடாக பாணியில் திட்டமிட்ட அரசியல் நகர்வு என்பதே நிதர்சனமாகும்.  

20ஆவது திருத்தச் சட்டமூலமானது  முஸ்லிம்களுக்கு எந்தப் பாதிப்பையும் கொண்டு வரவில்லை. இந்த நாட்டில் வாழும் எல்லா இன மக்களுக்கும், ஒரேவகையான தாக்கத்தையே உண்டுபண்ணும். இவ்வாறான காரணங்களால், அதை ஆதரிக்கலாம். 

அதேபோன்று, இத்திருத்தமானது மீண்டும் நிறைவேற்றதிகாரத்தைப் பலப்படுத்தும் என்ற அடிப்படையிலும் ஏற்கெனவே, 19ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு முஸ்லிம் கட்சிகள் ஆதரவளித்தன என்ற அடிப்படையிலும் 20 இனை எதிர்த்திருக்கலாம். ஆனால், இங்குள்ள பிரச்சினை அதுவல்ல; மாறாக, இதில் முஸ்லிம் சமூகம் பகடைக்காயாக ஆக்கப்பட்டமை ஆகும். 

2015ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற எல்லாத் தேர்தல்களிலும், இரு பிரதான முஸ்லிம் கட்சிகளும் ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான பிரசாரத்தைச் செய்தன. அவர்கள், முஸ்லிம் அரசியல்வாதிகளைக் காட்டி, சிங்கள வாக்குகளைப் பெற்றது போல, இவர்கள், ராஜபக்‌ஷர்களைச் சர்வாதிகாரிகள் போல விமர்சித்தே, முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்றனர். 

இதனாலும், பொதுஜன பெரமுனவின் பிரசாரங்களாலும் சிங்கள மக்கள், முஸ்லிம் சமூகத்தை வெறுப்புடன் பார்க்கும் நிலை தோன்றியது. சிங்கள மக்களை, முஸ்லிம்களும் வித்தியாசமாகப் பார்த்தனர்.  இவ்வாறு, சிங்கள - முஸ்லிம் மக்களுக்கு இடையில், முரண்பாட்டை ஏற்படுத்தி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராக வாக்குகளைப் பெற்றுக் கொண்ட மு.கா, ம.கா, எம்.பிக்கள், இப்போது திடீரென நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டமையே, இங்கு பிரச்சினைக்குரிய விடயமாகும். 

20ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்தமையை நியாயப்படுத்த முடியும். ஆனால், மக்களிடையே இனவாத உரைகளை நிகழ்த்தி, மக்களை ராஜபக்‌ஷர்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, இன்று மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு, நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதை சம்பந்தப்பட்ட முஸ்லிம் எம்.பிக்களும் கட்சிகளும் நியாயப்படுத்தவே முடியாது. இதைவிட, ராஜபக்‌ஷர்களும் அவர்களுக்கு நேரடியாக ஆதரவளித்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் எவ்வளவோ மேல்!

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முஸ்லிம்களை-விற்றுப்-பிழைத்தல்/91-257581

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.