Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனா மீதான பகை: இந்தியா, அமெரிக்காவின் அடுத்த திட்டம் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • ஜுபைர் அகமது
  • பிபிசி செய்தியாளர்

உலகம் கொரோனா பெருந்தொற்றின் பிடியில் சிக்கியிருக்கும் வேளையில், அமெரிக்கா அடுத்த வாரம் அதிபர் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், டெல்லியில் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் முக்கிய தலைவர்கள் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.

இதன் முடிவில் இரு தரப்பினரும் பிஇசிஏ எனப்படும் அடிப்படை தகவல்கள் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் என்ற பாதுகாப்புத்துறை தொடர்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அமெரிக்க ராணுவ செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட அந்நாட்டின் ராணுவ தளங்களில் இருந்து நேரடி பாதுகாப்பு தரவுகளை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இந்தப் பின்னணியில் இந்த ஆய்வுக்கட்டுரையை எழுதியிருக்கிறார் பிபிசி செய்தியாளர் ஜுபைர் அகமது.

ஜெனரல் மார்ட்டின் டெம்ப்சி, 2014 ஆம் ஆண்டில் அமெரிக்க தலைமை தளபதியாக ஓய்வு பெறுவதற்கு முன்னர் சீனாவை பற்றிய ஒரு முக்கிய விஷயத்தை தெரிவித்தார்.

"பனிப்போரின்போது சோவியத் யூனியனை எதிர்கொண்டது போல, விரைவில் சீனாவை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கா இருக்கும்," என்பதுதான் அவருடைய கருத்து.

அவர் அன்று தெரிவித்த வார்த்தைகள், இன்று "சரி" என்று நிரூபணமாகியிருக்கின்றன.

இந்த நேரத்தில் அமெரிக்காவிற்கு "மிகப்பெரிய தலைவலி" சீனா என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த நாட்டுடன் 2018ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து 'கட்டண போர்' தொடர்கிறது . ஆய்வாளர்கள் அதை பனிப்போரின் நாட்களுடன் ஒப்பிடும் அளவிற்கு உறவுகள் மோசமடைந்துள்ளன.

2012 ல் கிழக்கு ஆசியாவிற்கு சாதகமாக இருந்த ஒபாமா நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கையின் பின்னணியில் ஜெனரல் டெம்ப்ஸி இந்த கருத்தை தெரிவித்தார்.

சீனாவின் வளர்ந்து வரும் வலுவை கட்டுப்படுத்த இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டது. இதன் கீழ் புதிய பலதரப்பு கூட்டணிகள் மற்றும் நட்பு நாடுகளுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்த திட்டங்கள் தீட்டப்பட்டன.

அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், 'இப்பகுதியில் ஒரு விரிவான ராணுவ நிலை வேண்டும்' என பரிந்துரைத்தார்.

சீன எதிர்ப்பில் ஒற்றுமை?

அப்போதிலிருந்து சீனாவுக்கு எதிரான தனது ராணுவ கூட்டணிகளில், இந்தியா உட்பட ஆசியாவின் பல நாடுகளை அமெரிக்கா ஈடுபடுத்த முயற்சித்து வருகிறது.

இந்தியாவை மட்டுமே தனது கூட்டணியில் சேர்ப்பது, அமெரிக்காவின் முயற்சி என்று சொல்ல முடியாது. இந்த இயக்கத்தில் அதிகமான நாடுகளை இணைக்க அந்நாடு முயற்சி செய்து வருகிறது.

ஆனால், சீனாவைத் தடுக்க உதவும் மிக முக்கியமான நாடாக, இந்தியாவை வெள்ளை மாளிகை கருதுவது நிச்சயம்.

சீனா மீதான பகைமை : இந்தியா அமெரிக்கா அடுத்து என்ன செய்ய திட்டமிடுகிறது?

பட மூலாதாரம், AFP

 

இந்தியாவிற்கும் மற்ற மூன்று நாடுகளுக்கும் பயணத்தை தொடங்குவதற்கு முன்னர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பேயோ " சீன கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க, சுதந்திர நாடுகள் எவ்வாறு இணைந்து பணியாற்றமுடியும் என்ற விஷயம் எனது சந்திப்புக்களில் விவாதிக்கப்படும் என்று நான் நம்புகிறேன், "என்று குறிப்பிட்டார்.

இந்தியாவைத் தொடர்ந்து இலங்கை, மாலத்தீவுகள், இந்தோனீசியா ஆகிய நாடுகளுக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் செல்கிறார்.

பிரதமர் நரேந்திர மோதிக்கும் அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையே நல்லுறவு உள்ளது என்பது, அனைவருக்குமே தெரியும். இதைக் கருத்தில் கொண்டு, உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகளை டிரம்ப் நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கிடையே , கிழக்கு லடாக்கில் சீனாவுடனான பதற்றம் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் சாய்வு அமெரிக்காவை நோக்கி அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.

மலபார் கடற்படை பயிற்சி

இந்தியாவின் அமெரிக்கா நோக்கிய சாய்விற்கு சீனா தான் பொறுப்பு என்று சீன விவகார நிபுணரும், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ராணா மித்தர் கூறுகிறார்.

லாஸ் ஏஞ்சலஸில் உள்ள இந்திய வம்சாவளி பத்திரிகையாளரான ஜோதி மங்கள் இது பற்றி கூறுகையில், "கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டும், இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ச்சியான தூதாண்மை வருகைகள் மற்றும் கூட்டங்கள் தொடங்கியுள்ளன. இந்தியாவுக்கு இதில் அதிக விரும்பம் இல்லையென்றாலும் கூட, மெதுவாக அமெரிக்காவை நோக்கி அது சாய்ந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், இந்தியா எச்சரிக்கையுடன் இருக்கிறது," என்கிறார்.

சீனா மீதான பகைமை : இந்தியா அமெரிக்கா அடுத்து என்ன செய்ய திட்டமிடுகிறது?

பட மூலாதாரம், EPA / LUONG THAI / REUTERS / ADNAN ABIDI / JONATHA

 

முன்னாள் தூதரும் மும்பையைச் சேர்ந்த 'கேட்வே ஹவுஸ்' என்ற சிந்தனைக் குழுவின் உறுப்பினருமான நீலம் தேவ் இந்த கூற்றை அவ்வளவாக ஏற்கவில்லை. அவரது பார்வையில், அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவுகள் கடந்த 20 ஆண்டுகளாக சீராக முன்னேறி வருகின்றன. "உள்வரும் அதிபருக்காக, இந்தியாவுடன் சிறந்த உறவை தற்போதைய அதிபர் உருவாக்கி வைத்துள்ளார்,"என்று அவர் குறிப்பிடுகிறார்.

டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மூன்றாவது அமைச்சர்கள் நிலை 2 + 2 கூட்டத்தை, இந்த பின்னணியில் பார்க்க வேண்டும்.

அடுத்த மாதம் அரபி கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் இந்தியா தலைமையிலான மலபார் கடற்படைப் பயிற்சியின் பின்னணியிலும் இதைக் காண வேண்டும். இந்த கூட்டுப் பயிற்சியில் பெரிய அளவில் பங்கேற்கும் நாடுகளாக இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் உள்ளன.

குவாட் குழு, இந்த நான்கு நாடுகளை அடிப்படையாகக் கொண்டது. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சீனாவின் நெருக்குதலின் கீழ், மலபார் கடற்படைப் பயிற்சிகளில் இருந்து ஆஸ்திரேலியா விலகியது. இந்த முறை ஆஸ்திரேலியாவை அழைத்ததன் மூலம் இந்தியா, சீனாவுக்கு பகிரங்கமாக சவால் விடுத்திருப்பதாக பார்க்கப்படுகிறது.

விவாதிக்ப்பட்ட முக்கிய விஷயங்கள்

செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சர்கள் நிலையிலான 2 + 2 கூட்டத்தில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்வார்கள். அமெரிக்கா சார்பாக அதன் வெளியுறவு செயலாளர் மைக் பொம்பேயோ மற்றும் பாதுகாப்பு செயலாளர் மார்க் டி எஸ்பர் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்திய பசிஃபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை நிலவ இந்தியா, அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பு அவசியமாவதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பெர் கூறினார்.

மறுபுறம் இந்திய பிரதமர் நரேந்திர மோதியும், கேந்திர பொது நலன்கள் அடிப்படை கோட்பாடுகளை இரு தரப்பு உறவுகள் அடித்தளமாகக் கொண்டுள்ளதாக பெருமிதப்பட்டார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

வலிமையான பாரம்பரியம் கொண்ட இந்தியாவுடன் அமெரிக்கா நெருக்கமாக இருப்பது, ஒட்டுமொத்த உலகுக்கும் பயனுள்ள வாய்ப்புகளை உருவாக்கியிருப்பதாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பேயோவும் தெரிவித்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

ராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்த இதுபோன்ற சந்திப்புகள் உதவும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். கூடவே, பிராந்தியத்தில் உள்ள எந்த ஒரு நாட்டின் விமானங்களின் இயக்கம் மற்றும் அவற்றின் விமான பாதை குறித்த சரியான தகவல்கள் இந்தியாவிடம் இருக்கும்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், வான்வழியில் விமானங்கள் மற்றும் தரையில் பீரங்கிகளின் பாதைகள் மற்றும் செயல்பாடுகளைக் கண்காணிப்பது குறித்த சரியான தகவல்களை அமெரிக்கா இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளும். இந்தியா பதிலடி கொடுக்க விரும்பினால், இந்த தகவலின் அடிப்படையில் தனது ஏவுகணைகள் மற்றும் ஆயுத ட்ரோன்கள் மூலம் குறிவைத்து துல்லியமாக தாக்க முடியும்.

"நாங்கள் இந்தியாவுடன் பல பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப் போகிறோம். 'அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம்' மற்றும் பிற விஷயங்கள் இந்தப்பட்டியலில் உள்ளன என்பதை நான் அறிவேன்," என்று அமெரிக்க வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரி டீன் தாம்சன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

"இது ஒரு விரிவான உலகளாவிய கூட்டாண்மை மற்றும் அனைத்து பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் இதன்கீழ் விவாதிக்கப்படும்" என்று நிகழ்ச்சி பற்றிய விவரங்களை வெளியிட்ட, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், இந்தியாவின் ஜனநாயகத்தை பாராட்டியது.

"கடந்த இரண்டு தசாப்தங்களில் பாதுகாப்பு வர்த்தகம் கணிசமாக வளர்ந்துள்ளது. அமெரிக்காவுக்கு பிறகு, சி -17 மற்றும் பி -8 விமானங்களின் பெரிய அணி, இந்தியாவிடம் உள்ளது. அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. பாதுகாப்பு உபகரணங்களின் இணை உற்பத்தி மற்றும் மேம்பாடு குறித்து அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்படுகின்றன, "என்றும் இரு நாடுகளுக்கும் இடையே செவ்வாயன்று நடைபெற உள்ள பேச்சுவார்த்தை பற்றி குறிப்பிட்ட இந்த செய்திக்குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.

இந்த ஆண்டுவரை, அமெரிக்கா 20 பில்லியன் டாலருக்கும் அதிகமான பாதுகாப்பு உபகரணங்களை இந்தியாவுக்கு விற்றுள்ளது.

'அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம்' இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்கனவே உள்ள வலுவான பாதுகாப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்தும்.

 

முதல் இரண்டு கூட்டங்களில் என்ன நடந்தது?

முன்னதாக 2016 ஆகஸ்டில் இரு நாடுகளும், 'லாஜிஸ்டிக்ஸ் எக்ஸ்சேஞ்ச் மெமோராண்டம் ஆஃப் அக்ரிமெண்ட்' அல்லது LEMOA வில் கையெழுத்திட்டன. உடன்படிக்கையின் முழுமையான ஒப்புதலுக்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆனது. இது ஒபாமா நிர்வாகத்தின் கடைசி மாதங்களில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஒவ்வொரு நாட்டின் ராணுவமும் ஒருவருக்கொருவர் நில வசதிகள், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களிலிருந்து பொருட்கள், உதிரி பாகங்கள் மற்றும் பிற சேவைகளை அணுக ஒருவருக்கொருவர் தளங்களை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள ஒன்பது படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை எளிதாக்கியுள்ளது. கூடுதலாக, இந்தியாவும் அமெரிக்காவும் COMCASA என்ற மற்றொரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

சீனா மீதான பகைமை : இந்தியா அமெரிக்கா அடுத்து என்ன செய்ய திட்டமிடுகிறது?

பட மூலாதாரம், Getty Images

 

இது 'தகவல் தொடர்பு இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம்' என்று அழைக்கப்படுகிறது. இது 2018 செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெற்ற முதலாவது 2 + 2 உரையாடலின் போது கையெழுத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தம் இந்திய மற்றும் அமெரிக்க இராணுவத் தளபதிகள், போர் மற்றும் சமாதான காலத்தின் போதும் அவர்களின் விமானம் மற்றும் பிற உபகரணங்களுக்கிடையில் என்க்ரிப்டெட்(குறியீட்டுச்சொற்களால் மறைத்தல்) மற்றும் பாதுகாப்பான தகவல் தொடர்பு வலையமைப்பின் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள உதவும்.

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் புதுதில்லியில் நடைபெற்ற முதல் இரண்டு "2 + 2 அமைச்சர்கள் நிலை பேச்சுவார்த்தைகள் " தலைப்புச் செய்திகளில் இல்லை. ஆனால் செவ்வாய்க்கிழமை கூட்டம் மிகவும் முக்கியமானது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இதற்கான காரணம் சீனா. இந்தியாவும் அமெரிக்காவும் சீனாவுடன் மோத வெவ்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால் , சீனாவை நிறுத்துவதே இரு நாடுகளின் நோக்கமாகும்.

 அதிபர் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு இந்த வருகை ஏன்?

அமெரிக்காவின் சில வல்லுநர்கள், அதிபர் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் நிகழ்ந்துள்ள இந்தப் பயணத்தின் நேரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் இது இந்தியாவில் ஒரு பிரச்சனை அல்ல.

சீனா மீதான பகைமை : இந்தியா அமெரிக்கா அடுத்து என்ன செய்ய திட்டமிடுகிறது?

பட மூலாதாரம், Getty Images

 

தேர்தல்களுக்குப் பிறகு யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பது குறித்து இந்திய அரசு அதிகம் கவலைப்படுவதில்லை என்று வெளியுறவு அமைச்சக அதிகாரி தெரிவிக்கிறார். அதிகாரம் மாறினாலும் இந்தப் பகுதியின் நிலைமையை அது மாற்றாது. ஆகவே அமெரிக்க முன்னுரிமைகளும் மாறாது. இந்தியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான 10 வருட பேச்சுவார்த்தைகள் மற்றும் இரண்டு அதிபர்களின் மாற்றங்களுக்குப் பிறகும், 2016 ஆம் ஆண்டில் லாஜிஸ்டிக்ஸ் எக்ஸ்சேஞ்ச் மெமோராண்டம் ஆஃப் அக்ரிமெண்ட் கையெழுத்தானது. எல்லா நேரங்களிலும் அதிகார மாற்றங்களால் வெளியுறவுக் கொள்கைகள் பாதிக்கப்படுவதில்லை என்பதை இது குறிக்கிறது.

இந்தியா தொடர்பான அமெரிக்க கொள்கைகள் குறித்து ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியில் ஒருமித்த கருத்து இருப்பது இந்திய அரசுக்குத் தெரியும். ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் வெற்றியின் மூலம் காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவுக்கு சிக்கல் இருக்கலாம் என்று இந்தியாவில் சிலர் நம்புகிறார்கள்.

ஆனால் பல அதிபர்கள் காஷ்மீர் பிரச்சனையை முன்னரும் எழுப்பியுள்ளனர். ஆனாலும் இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு தொடர்ந்து வளர்ந்து வந்தது என்று நீலம் தேவ் கூறுகிறார்.

அவரது பார்வையில் பைடன் அதிபரானால், சீனாவை சமாளிப்பது இந்தியாவுக்கு எளிதாக இருக்கும். ஏனெனில் பைடன் பலதரப்பு அணுகுமுறையையும் ஒருமித்த கருத்தையும் ஆதரிப்பவர். அதே நேரத்தில் டிரம்ப், தனியாக அல்லது ஒரு சில நாடுகளுடன் மட்டுமே இணைந்து சீனாவை எதிர்க்க விரும்புகிறார்.https://www.bbc.com/tamil/india-54706085

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.