Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யானைப் பலம் கொண்டது ராஜபக்சாக்களின் ஆட்சி -- அடி சறுக்கினால் எதிர்காலம் மிக மோசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யானைப் பலம் கொண்டது ராஜபக்சாக்களின் ஆட்சி -- அடி சறுக்கினால் எதிர்காலம் மிக மோசம்

VP.jpg?fit=228%2C300&ssl=1
அ.வரதராஜா பெருமாள்

அதிமேன்மைக்குரிய கோத்தபாயா அவர்கள் இலங்கைக் குடியரசின் ஜனாதிபதியாகி ஒரு வருடம் நிறைவடைகிறது. இலங்கை மக்கள் குறிப்பாக சிங்கள பௌத்தர்கள் அவரின் ஆட்சி மீது பெரும் நம்பிக்கை வைத்து மிகப் பெருமளவில் அவருக்கு வாக்குகளை அளித்ததால் ஜனாதிபதியானார்.

2015ம் ஆண்டு ஆட்சிக் கட்டிலேறிய மைத்திரி – ரணில் கூட்டாட்சி 2016ம் ஆண்டே குழப்பமான ஆட்சியாக ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது. இலங்கையின் ஆட்சியை மாறி மாறிப் பிடிக்கின்ற இரண்டு கட்சிகளும் கூட்டாக ஆட்சியை அமைத்தபோது இலங்கை மக்கள் மட்டுமல்ல உலக அரசியல் அவதானிகளும் இது எப்படி சாத்தியமாயிற்று எனவும் – இலங்கையில் தேர்தல் ஜனநாயகம் ஒரு புதிய பரிமாணத்தை உலகத்துக்கு தந்து விட்டது போலவும் அதிசயித்தார்கள்.

ஒரு குடும்ப உறுப்பினர்களின் கூட்டு எதேச்சாதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது போலவும்,  ஊழல் மோசடிகள் மற்றும் பொது நிதியை விரயம் செய்தல் போன்றவற்றை முடிவுக்குக் கொண்டு வந்தது போலவும், இனிமேல் சிவில் நிர்வாகங்களில் இராணுவம் தலையிடவே மாட்டாது என்பது போலவும் காட்சிகள் தோற்றமளித்தன.

ஆனால் ஒரு குறுகிய காலத்துக்குள்ளேயே எல்லாம் நீர் மேல் எழுத்துப் போலாயிற்று.

மக்களிடம் ஒரே மேடையில் நின்று வாக்குக் கேட்ட ஜனாதிபதியும் பிரதமரும் பதவிக் கதிரைகளில் உட்கார்ந்த பிறகு ஆளை ஆள் செயற்பட விடாமல் இழுத்து விழுத்தும் வேலைகளில் ஈடுபட்டார்கள்.  ஆட்சிக்கு வந்து சில மாதங்களுக்குள்ளேயே பெரும் நிதி மோசடிகளைப் புரிந்தனர்.

1978ம் ஆண்டு தொடக்கம் இலங்கையின் அரசியலில் இருந்து வந்த தனிமனித எதேச்சாதிகார ஆட்சி முறைக்கு அரசியல் யாப்பின் 19வது திருத்தத்தின் மூலம் ஒரு தடுப்பணை போடப்பட்டதாக ஜனநாயக விரும்பிகள் மகிழ்ச்சி கொண்டனர். ஆனால் அந்தத் திருத்தம் அரசின் உச்சத்தில் இருந்த இருவரையும் குடும்பி பிடிச் சண்டையில் இறக்கி விட்டது.

செயற்திறன் கொண்ட ஆட்சியை ஏற்படுத்துவதற்கு மாறாக செயற்படவே முடியாத ஆட்சியை உருவாக்கியது.

மைத்திரி – ரணில் கூட்டாட்சி இரண்டு வருடத்துக்குள்ளேயே பெரும்பான்மையான மக்களின் வெறுப்புக்கு உள்ளாகியது. 

2018ம் ஆண்டு இரண்டாம் மாதத்தில் நடந்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலின் போது ரணில் மற்றும் மைத்திரி ஆகிய இருவரது கட்சியையும் மிகப் பெரும்பாலான இடங்களில் தோல்வியடையப் பண்ணி மைத்திரி – ரணில் கூட்டாட்சி மீதான தமது விரக்தியையும் வெறுப்பையும் மக்கள் மிகத் தெளிவாகவே வெளிப்படுத்தினர்.

ராஜபக்ச சகோதரர்கள் சிறி லங்கா பொதுஜன பெரமுன என புதிய கட்சியொன்றை 2016ம் ஆண்டு 11ம் மாதம் ஆரம்பித்து ஒரு வருடமும் மூன்று மாதங்களும் நிறைவடைவதற்குள்ளேயே உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் மிகப் பெரும் வெற்றியை ஈட்ட முடிந்தது.

ராஜபக்ச சகோதரர்கள் இராணுவத்தை முன்னிறுத்தி குடும்ப எதேச்சாதிகார ஆட்சியை நடத்திய போதிலும் பொருளாதார அபிவிருத்தி விடயத்தில் அவர்கள் சாதனைகாரர்கள் என்ற நல்லெண்ணத்தை மக்களிடம் பெற்றிருந்தார்கள்.

யுத்தத்தில் சிதைந்து போயிருந்த நாட்டை மீளக்கட்டி எழுப்பும் வேலைத்திட்டங்களில் மட்டுமல்லாது, சமூக பொருளாதார உட்கட்டுமானங்களை நவீனமயப்படுத்தும் செயற் திட்டங்களையும் பாரிய அளவில் மேற்கொண்டார்கள்.

மைத்திரி – ரணில் கூட்டாட்சிக்கு நல்லாட்சி என்று தங்களுக்குத் தாங்களே பெயர் சூட்டினார்களே தவிர நடைமுறையில் அந்த ஆட்சி ஒரூ குறுகிய காலத்துக்குள் மக்களால் வெறுக்கப்படும் அளவுக்கு குழப்பமான ஒரு கூடாத ஆட்சியாகவே இருந்தது. அபிவிருத்தித் திட்டங்கள் எல்லாம் வெற்று வாக்குறுதிகளாகவும் காட்சிப் படங்களாகவும் இருந்தனவே தவிர நடைமுறையில் செயற்திறனற்ற ஓர் ஆட்சியாகவே அது அமைந்தது.

ஆட்சிக் காலம் முடிந்து போன மாகாண சபைகளுக்கு தேர்தல்களை நடத்துவதற்கு அஞ்சியவர்கள் ஏற்கத்தகாத காரணங்களைக் காட்டி அவற்றை அடுத்தடுத்து பின் தள்ளிப் போட்டார்கள்.

மைத்திரி – ரணில் கூட்டாட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கென்றே நிகழ்ந்தது போல 2019 ஏப்ரலில் சஹ்ரான் குழுவினர் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் கொழும்பு மையத்தில் இருக்கும் ஹோட்டல்களிலும் நடத்திய பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்ந்தன.

மைத்திரி – ரணில் கூட்டாட்சியில் விலைவாசிகள் கட்டுப்பாடின்றி ஏறின இளைஞர்களுக்கு வேலையில்லாப் பிரச்சினைகள் அதிகரித்தன  வரிச் சலுகைகள் பெற்றுக் கொண்டிருந்த துறையினருக்கு அவை மறுக்கப்பட்டதால் அவர்கள் கொடுத்த நெருக்கடிகள் இலங்கையின் பணப் பெறுமதி வீழ்ச்சியடைந்தது ஏற்றுமதி – இறக்குமதி இடைவெளி ஒன்றுக்கு இரண்டு எனும் நிலையில் நகர்ந்தது

வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துவது தொடர்பான நெருக்கடிகள்: எதிர்பார்த்த அளவுக்கு வெளிநாட்டு உதவிகள் கிடைக்காமை இந்தியாவையும் சந்தோஷப்படுத்த முடியாமல் சீனாவையும் சந்தோஷப்படுத்த முடியாமல் அமெரிக்காவின் பாட்டுக்கு முழுசாக ஆடவும் முடியாமல் கூட்டாட்சி திணறியது.

இவையெல்லாம் ஒட்டு மொத்தமாகி மைத்திரி ரணில் ஆகிய இருவரது அரசியல் எதிர்காலத்தையும் கடந்த தேர்தல் சூனியமாக்கி விட்டுள்ளது. 1931ம் ஆண்டு தொடக்கம் மொத்தத்தில் 50 ஆண்டுகள் இலங்கையை ஆண்ட சேனநாயக்கா – விஜயவர்ததனா குடும்ப வாரிசுகளால் 2020ம் ஆண்டு தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாமற் போயுள்ளமை இலங்கையின் அரசியலில் நிகழ்ந்துள்ள இன்னொரு அதிசயமாகும்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாற்றாக இலங்கையை 27 ஆண்டுகள் ஆட்சி புரிந்த பண்டாரநாயக்கா குடும்ப வாரிசுகளையும் அரச அதிகார அரங்கிலிருந்து அகற்றி விட்டுள்ளது.

ஓர் ஆண்டை கடந்துள்ள ராஜபக்சாக்கள்

இரண்டாவது வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் ஜனாதிபதி கோத்தபாயாவின் ஆட்சி கடந்த ஒரு வருடத்தில் சாதித்துள்ளவை பற்றி பரிசீலிக்க வேண்டி உள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன? ஜனாதிபதியாக வந்தால் எதையெல்லாம் சாதிப்பார் என மக்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்புக்களை எந்தளவு தூரம் அவரது ஆட்சி திருப்திப்படுத்தியிருக்கிறது? என்ற பல கேள்விகள் இன்று இலங்கை அரசியலில் தலைதூக்கத் தொடங்கியிருக்கின்றன.

ஜனாதிபதி ஆட்சிக் கதிரையில் அமர்ந்து நான்காவது மாதமே கொரோனா நாட்டை உலுக்கத் தொடங்கியது.

“புலிகளைத் தோற்கடித்தது போல கொரோணாவையும் தோற்கடிப்போம் என சவால்களும் விட்டார்கள். அவர்களின் ஆட்சித் திறமை காரணமாகவே கொரோணா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என மக்கள் நம்பும் வகையாக செயற்பட்டார்கள்.

ஆயுதம் தாங்கிய பயங்கரவாதத்திடமிருந்து மட்டுமல்ல கொரோணா பயங்கரத்திலிருந்தும் பாதுகாப்புத் தரக் கூடியவர்கள் ராஜபக்ஷாக்களே என மக்கள் நம்பியதன் விளைவாகவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அண்மிக்கும் அளவுக்கு வாக்குகளை அள்ளி வழங்கனார்கள்.

அவர்கள் நினைத்தபடி மீண்டும் சர்வ அதிகாரங்களையும் ஜனாதிபதி கொண்டிருக்கும் வகையாக 20வது அரசியல் யாப்புத் திருத்தத்தையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி விட்டார்கள்.

ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்துக்கு மட்டுமல்ல,  நீதிக்கும் அவரே தலைவர் ஏனெனில் நீதிபதிகளை அவரே தான் விரும்பியபடி நியமிப்பார்.

நாடாளுமன்றத்தின் தலைமையில் அவரது சகோதரர் இருப்பதால் நாடாளுமன்றத்தின் கட்டுப்பாடும் அவருக்கு உரியதாகும்.

முடியாட்சிகளில் நாட்டின் இறைமை அந்தந்த நாடுகளின் மன்னர்களுடையதே.

நாடாளுமன்றம், நீதித்துறை,நிறைவேற்றதிகாரம் என்பவற்றிற்கிடையில் தெளிவான வலுவேறாக்கம் ஒரு ஜனநாயகக் கட்டமைப்புக்கு மிகவும் அடிப்படையானது.

ஜே.ஆர். ஜெயவர்த்தனா, ரணசிங்க பிரேமதாசா, சந்திரிகா பண்டாரநாயக்கா இறுதியாக மகிந்த ராஜபக்ஷா ஆகியோர் தேர்தலில் மக்களின் வாக்குகளால் ஆட்சிபீடமேறிய மன்னர்களே.

மைத்திரிபால சிறிசேனாவுக்கே அந்தக் கொடுப்பனவு இருக்கவில்லை. இப்போது மீண்டும் 1978ம் ஆண்டு அரசியல் யாப்பானது 19வது திருத்தத்துக்கு முந்திய நிலைமைகளைக் கொண்டதாக மீள நிறுவப்பட்டுள்ளது.

அரச அதிகாரிகள் தனது கட்டளைகள் கொண்ட சுற்றறிக்கைகளுக்காகக் காத்திராமல் தனது வார்த்தைகளையே கட்டளையாக ஏற்று நிறைவேற்றும்படி ஜனாதிபதி கோத்தபாயா கூறியுள்ளார்.

எனவே ஜனாதிபதியின் வார்த்தைகளே கட்டளைகள் அவையே அரச சாசனங்கள் எனும் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே “சட்ட ஆட்சி” என்பது இங்கு “ஜனாதிபதி ஆட்சி” என அர்த்தமாகிறது.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டைப் பெற்றிருக்கிறார்கள் அரசியல் யாப்பின் 20வது திருத்தம் மூலமாக ஜனாதிபதி சர்வ அதிகாரங்களும் கொண்டவராக ஆக்கப்பட்டிருக்கிறார்.

ஜனாதிபதி,  பிரதமர், மந்திரிகள்,  தளபதிகள் எல்லோரும் திருப்தியாக உள்ளனர் என்பதில் சந்தேகமில்லை.

பொதுமக்களின் நிலை என்ன?

பொதுமக்களின் நிலை என்ன? நாட்டின் பொருளாதார நிலை என்ன? அரசாங்கம் தொடர்பாக இப்போது பொதுமக்களின் மனநிலை என்ன? இவையே இங்கு பிரதான கேள்விகளாக உள்ளன.

இப்பொழுது மீண்டும் திடீர் பாய்ச்சல் செய்துள்ள கொரோணாவை கட்டுப்படுத்த முடியாமல் அரசாங்கம் திணறுவது போலுள்ளது.

அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை – அதன் இயலாமையை மறைக்க கொரோணா பயங்கரமாக தலைவிரித்தாடுவது போல பாசாங்கு நாடகம் ஒன்றை அரங்கேற்றுகிறதா என்ற கேள்வி மக்களிடையே எழும்பத் தொடங்கியுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் தொடர்பாக ஜனாதிபதி வெளியிடும் விலைக் கட்டுப்பாட்டை வியாபாரிகள் எவரும் கடைப்பிடிப்பதாக இல்லை.

பொருட்கள் தட்டுப்பாடு: பதுக்கல் வியாபாரங்கள் அதிகரித்துள்ளமை: வழமையை விட 20 தொடக்கம் 30 சதவீதம் வரை விலைகள் சந்தையில் உயர்ந்துள்ளமை – இவை அரசாங்கத்தின் கையாலாகாத நிலையைப் பிரதிபலிப்பதாக உள்ளது.

வியாபாரிகளும் அரசாங்கமும் சேர்ந்து விளையாடுகின்றன என மக்கள் பேசத் தொடங்கி விட்டார்கள்.

கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்கும் நாடுகளிடம் கால அவகாசம் தரும்படி அரசாங்கம் கெஞ்சுகிறது.

சோழியன்கள் சும்மா ஆட்டுவாங்களா தலையை! அவசியமாகத் தேவைப்படும் அளவுக்கு கடன் தருவதற்கு வெளிநாடுகள் தயாராக இல்லை.

நாட்டை யாருக்கும் தாரை வார்க்க மாட்டோம் என்று கூறியவர்கள் இப்போது எந்த நாடாயினும் சரி எந்த ஒப்பந்தமாயினும் சரி பணம் தந்தால் சரி என்ற கணக்குக்கு போக வேண்டியவர்களாக உள்ளனர்.

நாட்டின் ஏற்றுமதி 10 ரூபா என்றால் இறக்குமதி 18 ரூபாவாக இருப்பதே இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகம்.

இந்த இடைவெளியை சரிக்கட்டியது வெளிநாடுகளில் உழைக்கும் இலங்கையர்கள் அனுப்பும் பணமும், உல்லாசத் துறையுமே. இப்போது அந்த மூலங்களும் சுருங்கிவிட்டன.

உள்ளுர் உற்பத்தியைப் பெருக்குவோம்! இறக்குமதியை குறைப்போம்! என்று இறக்குமதிக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளார்; ஜனாதிபதி. நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தில் இந்தக் கட்டுப்பாடும் கணிசமான பங்கை வகிக்கின்றது.
அரசாங்க வருமானம் வெகுவாகக் குறைந்து விட்டது.

1995ல் அரசாங்க வருமானம் நாட்டின் தேசிய வருமானத்தில் 20 சதவீதமாக இருந்தது. அது படிப்படியாகக் குறைந்து கடந்த வருடம் 12.5 சதவீதமாகி உள்ளது. கொரோணாவின் தாக்கத்தினால் அது மேலும் மோசமான நிலையை அடைந்திருக்கும் என்பது கணிப்பிடக் கூடிய ஒன்றே.

ஒழுங்குமுறைப்பட்ட தொழிற் துறைகள் பெரும்பாலும் மூடப்பட்ட நிலையிலுள்ளன. நகரங்களெல்லாம் கொரோணா என்பதால் உள்ளுர் வர்த்தகங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

இறக்குமதிக் கட்டுப்பாட்டினால் வெளிநாட்டு வர்த்தகம் எனும் வழியாக வரும் வரிகளெல்லாம் சுருங்கிவிட்டன.

வருமானமே இல்லை வருமான வரியை எங்கிருந்து கட்டுவது என்பார்கள் வருமான வரி செலுத்துவோர். எனவே இந்த வருடம் என்னதான் முயற்சித்தாலும் தேசிய வருமானத்தில் 10 சதவீதமளவாக அரசாங்கம் வருமானம் பெறுவதே மிகச் சிரமம்.

இருக்கிற அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கே அரசாங்கம் திண்டாடுகிற வேளையில் 60,000 பட்டதாரிகளுக்கு அரசாங்க உத்தியோகம் 10ம் வகுப்புக்கு மேலே படிக்காத 100,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதற்கெல்லாம் என்ன நடக்கப் போகிறது என யாரறிவார் பராபரமே!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைத்தியர்கள் மற்றும் உயர் அரச அதிகாரிகளுக்கான சொகுசு வாகன வரிச்சலுகைகள் கிடைக்குமா? எப்போது கிடைக்கும்? இது அவர்கள் கவலை.

சுமார் 50 லட்சம் வீடுகள் கொண்ட இலங்கையில் வீட்டுத் தோட்டம் போடச் சொல்லி 20 லட்சம் வீடுகளுக்கு விதைகள் மற்றும் கன்றுகள் வழங்கியதாக அரச அறிக்கைகள் அறிவித்தன. அறிக்கைகள் வெளிவந்த 5 மாதங்களாகி விட்டன. அந்த வீட்டுத் தோட்டங்களின் நிலை என்ன?

இறக்குமதித் தடையால் மஞ்சள் கள்ளக்கடத்தல் பண்டமாகி விட்டது. இந்தியாவில் மஞ்சள் விலை கிலோ 150 ரூபா. இலங்கையில் 5000 ரூபாவுக்கும் கிடைப்பது சிரமம்.

இவ்வருட பொருளாதார வளர்ச்சி 1.7 சதவீதமாக இருக்கும் என அரச அறிக்கை கூறுகிறது. ஆனால் பொருளாதார ஆய்வாளர்களின் கணக்குப்படி பொருளாதார வீழச்சி மைனஸில் 5சதவீதத்தையும் தாண்டும் என்கின்றனர்.

அடுத்த வரவு செலவுத் திட்டம் தயாராகிறது. 2021ம் வருடம் 180,000 கோடி ரூபா மூலதனச் செலவாக மேற்கொள்ள திட்டமிடப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

மீண்டெழும் செலவுகளுக்கான தொகையை விட அரசாங்க வருமானம் மிக குறைவாகவே இருக்கிறது. அரசாங்கம் பெற்ற கடன்களையும் அவற்றிற்கான வட்டியையும் திருப்பிச் செலுத்த அதற்கும் மேலாக கடன் வாங்குவதே வழமை.

இந்நிலையில் ஆசைப்பட்டுள்ள மூலதன வெலவீனங்களுக்காக எவ்வளவுக்கு – எங்கிருந்து அரசாங்கத்தினால் கடன் வாங்க முடியும் என்ற கேள்விக்கு பதிலில்லை.

அண்ணன் பிரதமராகவும் தம்பி ஜனாதிபதியாகவும் இருந்தால் மைத்திரி-ரணில் ஆட்சி போலல்லாது நல்லாட்சி நடக்குமென நம்பித்தான் மக்கள் வாக்களித்தார்கள்.

கடந்து வந்துள்ள ஓராண்டு நல்லதாக அமையவில்லை. எல்லாப் புறமும் போதாமைகளும் புறுபுறுப்புகளும் நெருக்கடிகளுமே சூழ்ந்துள்ளன.

ஆட்சியாளர்களின் அகத்துக்குள் முறுகல் வராதிருக்க வேண்டும். அது உள்ளே புகுந்தால் குடும்பக் கூட்டாட்சியும் மக்களுக்குக் கூடாத ஆட்சியாகிவிடும்.

மாயையிலும் இனமத போதையிலும் மக்களை வைத்திருக்கும் முயற்சிகளை விட்டு நாட்டு மக்களுக்கு உண்மையாக இருப்பதுவும் நாட்டுக்குள்ளே தீர்க்கக் கூடிய விடயங்களுக்கு விரைந்து தீர்வு காண்பதுவும். மக்களின் புரிந்துணர்வுடனான ஒத்துழைப்பைப் பெறுவதுமே அசாதாரண நெருக்கடிகளை எதிர்கொள்ள அவசியங்கள் என்பதை ஆளுபவர்கள் புரிந்து கொள்வார்களா?.

https://sdptnews.org/2020/11/09/யானைப்-பலம்-கொண்டது-ராஜப/?fbclid=IwAR0KVBSc_c_OZcIkBV6-ZMxKlpWPcgYmR_0YAkg8Q-vvvmFqhe9M8qIK8ec

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.