Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பண்டிதர் சரணாலயமும் கிட்டு பூங்காவும் - கானா பிரபா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பண்டிதர் சரணாலயமும் கிட்டு பூங்காவும் - கானா பிரபா

kiddu.jpg

அது ஒரு காலம், நல்லூர்த் திருவிழா மூட்டம் அந்தக் கோயிலே கதியென்று 25 நாட்களும் கிடப்போம். கோயில் திருவிழா ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் கடலை, கச்சான், இனிப்பு, ஐஸ்கிறீம் கடைகளும், பனை, தென்னை வழியே பிறக்கும் சுதேச உற்பத்திப் பொருட்களுமாகக் கோயிலைச் சூழவும் மூகாமிட்டிருக்கக், கோயில் முன்றலில் சங்கீதக் கச்சேரிகள், கதாப் பிரசங்களுமாகச் சாமம் தொடும் நிகழ்ச்சிகள்.

இதெல்லாம் அந்தக் கோயில் திருவிழாவுக்கான் தற்காலிக ஏற்பாடுகள். ஆனால் இதையெல்லாம் தாண்டி ஒரு நிரந்தரப் பொழுது போக்கு மையமாக அப்போது அமைந்தது பண்டிதர் சரணாலயம். நல்லூர்க் கந்தசாமி கோயிலுக்குத் தட்டாதெருச் சந்தியாலோ, பலாலி வீதியாலோ பயணப்படும் போது எதிர்ப்படும் கந்தர்மடச் சந்தியின் முடக்கில் பண்டிதர் சரணாலயம் அமைந்திருந்தது.

கப்டன் பண்டிதர் என்ற இயக்கப் பெயர் கொண்ட ப.ரவீந்திரன் வல்வெட்டித்துறைக்கு அருகேயுள்ள கம்பர்மலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1977ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் சேர்ந்து இயக்க வளர்ச்சிக்கு அயராது உழைத்தார். கடமையுணர்வு, கடும் உழைப்பு, இலட்சியப்பற்று ஆகிய சீரிய பண்புகள் நிறைந்த கப்டன் ரவீந்திரன், விடுதலைப் போராளிகளின் அன்புக்கும் மதிப்பிற்கும் பாத்திரமாக விளங்கினார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கு மிகவும் வேண்டியவராக, அவரது வலது கையாகத் திகழ்ந்தார். இயக்க நிர்வாகப் பொறுப்புக்களைச் சுமந்து வந்ததோடு மட்டுமல்லாது, கெரில்லாத் தாக்குதல் நடவடிக்கைகளிலும் இவர் பங்குபற்றி வந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லா வீரர்களுக்கும் சிங்கள இராணுவத்தினருக்கும் மத்தியில் நடைபெற்ற சமர் ஒன்றில், புலி இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் ப.ரவீந்திரன் (பண்டிதர்) வீரமரணம் அடைந்தார். இந் நிகழ்ச்சி 1985 ஐனவரி 9ஆம் திகதியன்று, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அச்சுவேலி எனும் கிராமத்தில் நடைபெற்றது.

அச்சுவேலியிலுள்ள விடுதலைப்புலிகளின் கெரில்லாத் தளமொன்றை, பெருந்தொகையான சிங்கள இராணுவப் படையினர் திடீரென முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து அத்தளத்திலிருந்த எமது விடுதலை வீரர்களுக்கும் இராணுவத்தினருக்கும் மத்தியில், பயங்கரச் சண்டை மூண்டது. நீண்ட நேரமாக நடைபெற்ற இச்சண்டையில் கப்டன் ரவீந்திரன் இறுதிவரை போராடி, விடுதலை இலட்சியத்திற்காகத் தனது உயரைத் தியாகம் செய்தார். கப்டன் ரவீந்திரனுடன் நான்கு இளம்புலிகள் வீரமரணம் அடைந்தனர். ஏனைய போராளிகள் முற்றுகையை உடைத்துக் கொண்டு தப்பினர். (கப்டன் பண்டிதர் குறித்த தகவல் உதவி : ஈழமலர் இணையம்)

இவ்விதம் வீரமரணமடைந்த கப்டன் பண்டிதர் அவர்கள் ஞாபகார்த்த்தமாகவே அப்போது பண்டிதர் சரணாலயத்தை விடுதலைப் புலிகள் உருவாக்கினர்.

நல்லூர்த் திருவிழாவுக்கு இணுவிலில் இருந்து போகும் சாக்கில் தான் பண்டிதர் சரணாலத்துக்கும் முற்றுகை இடுவோம். அம்மாவுடன் போனால் கைலாசப் பிளையாரடியால் பஸ்ஸில் தான் பயணிக்க வேண்டும். இதைத் தவிர்த்து அப்பாவின் சைக்கிளில் குந்தியிருந்து போனால், கோயிலில் சுவாமி தரிசனம், நல்லூர்த் தேர்முட்டி அடியில் இருந்து யோகர் சுவாமிகள் குறித்து அப்பாவின் சிந்தனைகளைப் பொறுமையாகக் கேட்டு நல்ல பிள்ளையாக நடந்து, வழி தெருவில் கச்சான் கடலைக்கும் அடம் பிடிக்காமல் பண்டிதர் சரணாலயத்துக்கு முன் வரை அமைதிய வந்து பேச்சைக்  கிளப்பி விடுவேன்.

IMG_0838.JPG

“அப்பா அப்பா உள்ளுக்கை ஒருக்கால் எட்டிப் பார்த்து விட்டு வரட்டோ?”

சரி இவன் நல்ல பிள்ளைக்கு நடிக்கிறானே என்று அப்பாவும் சைக்கிளை ஓரம் கட்டி விட்டு வெளியே கூட்டத்தோடு நிற்பார். சில சமயங்களில் தானும் கூட வருவார். சிறுவருக்கு ஐம்பது சதம், பெரியவர்களுக்கு ஒரு ரூபாய் நுழைவுக் கட்டணம் என்று நினைவு.

உள்ளே கிளிகள், குருவிகள் என்று ஏகப்பட்ட பறவை இனங்கள், ஆட்டம் போடும் குரங்குகளில் இருந்து வன்னிக் காடுகளில் பிடித்த அரிய வகை உயிரினங்கள் எல்லாம் கூண்டுக்குள் நின்று வேடிக்கை காட்டும். ஒவ்வொரு கூண்டிலும் அழகு தமிழில் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும். என் ஞாபக அறிவில் வித விதமான தாவரங்களும் அவற்றின் விஞ்ஞானப் பெயர்களோடும், தேனீ வளர்ப்பு முறைமையும் இருந்ததாகவும் நினைப்பு.

அந்தக் காலத்தில் வீடுகளில் லவ் பேர்ட்ஸ் வளர்க்கும் மோகம் முளை விட்டிருந்த காலத்தில் இப்படி பண்டிதர் சரணாலத்த்தில் வித விதமான வன விலங்குகளைப் பார்த்து ரசிப்பதே அப்போது எங்களுக்கு ஆச்சரியமான அனுபவம்.

1987 ஆம் ஆண்டு இந்திய அமைதிப் படையாக வந்து இலங்கை அரசிடம் சோரம் போனதோடு எழுந்த போரோடு பண்டிதர் சரணலயம் காடானது. எந்த வித பராமாரிப்போ, எடுக்க ஆள் இன்றியோ புதர் மண்டிக் கிடந்தது பல காலம். அத்ற்குப் பின் அந்தப் பக்கமே போவதற்கு ஏனோ தோன்றியதில்லை.

கேணல் கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார்) ஈழப் போராட்டத்தில் இணைந்து பரவலாக அறியப்பட்ட மாவீரர் என்பது உலகறிந்தது. அப்போது நான் உயர் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் ரீயூசன் சென்ரருக்குப் போன தினம் கேணல் கிட்டுவின் வீரமரணச் செய்தி கிட்டுகிறது. சின்னக் கரும்பலகை ஒன்றை எங்கள் CCA கல்வி நிலையத்தில் இருந்து எடுத்து வந்து நண்பர்களோடு சேர்ந்து சோக்கட்டியால்

“கிட்டு அம்மானுக்குக் கண்ணீர் அஞ்சலிகள்” என்று எழுதியது இன்னும் பசுமையாக் இருக்கின்றது.

அந்த வார இறுதி எல்லாக் கல்விச் சாலைகளும் மூடப்பட்டுத் துக்கம் அனுஷ்டிக்கிறார்கள்.

சில காலத்துக்குப் பின்னர் நல்லூர் முத்திரைச் சந்தியடியில் தேவாலய வளவுக்கு முகப்பில் எழும்புகின்றது “கேணல் கிட்டு பூங்கா”.

குகைப் பயணம், சறுக்கல், ஊஞ்சல் என்று சிறுவர்ககளுக்கான எல்லா விதமான வித விதமான களியாட்டு வித்தைகள், விளையாட்டுகள் காட்டும் உபகரணங்கள் என்று நேர்த்தியாக அமைக்கப்பட்ட பூங்கா இது. நல்லூர்க் கோயிலில் இருந்து பொடி நடையாக வந்து சேரலாம். அப்போது வளர்ந்தவர்கள் நாம் சிறுவர்களின் விளையாட்டை வேடிக்கை பார்த்து, சீமெந்துப் புட்டிகளில் ஏறி நடந்து விட்டு வருவோம். 95 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாண முற்றுகையோடு கிட்டு பூங்காவும் வேரோடு பிடுங்கப்பட்டது.

யாழ்ப்பாணத்து மக்களுக்கு குறிப்பாக வடமராட்சி தவிர்ந்த பிரதேசங்களில் முக்கிய பொழுதுபோக்கு மையங்களாக இருந்த சுப்பிரமணியம் பூங்கா எண்பதுகளின் முற்பகுதியோடு கோட்டையில் மையம் கொண்ட இராணுவ அச்சுறுத்தலால் கை விட்ட சூழலில், காரைநகர்ப் பக்கம் இருந்த கசூரினாக் கடற்கரை, கீரிமலைக் லடற்கரை போன்றவை கடற்படை அச்சுறுத்தல் போன்றவற்றால் முடக்கப்பட்டிருந்த தமிழரது பொழுது போக்க்கு வாழ்வியலில் நல்லூர்த் திருவிழாவும் பண்டிதர் சரணாலயமும், கிட்டு பூங்காவும் அழிக்க முடியாத வரலாற்றுச் சுவடுகள்.

இன்று தமிழரது பூர்வீக நிலங்கள் அழிக்கப்பட்டுச் சிங்களப் பெயர் மாற்றும் சூழலில் நம் கண்ணுக்கு முன்னே எழுப்பப்பட்டு இருந்த தமிழரது அடையாளங்களைத் தாங்குவது நம் நினைவுகள் மட்டுமே.

கானா பிரபா

https://vanakkamlondon.com/news/2020/11/92163/

  • கருத்துக்கள உறவுகள்
On 27/11/2020 at 16:05, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இன்று தமிழரது பூர்வீக நிலங்கள் அழிக்கப்பட்டுச் சிங்களப் பெயர் மாற்றும் சூழலில் நம் கண்ணுக்கு முன்னே எழுப்பப்பட்டு இருந்த தமிழரது அடையாளங்களைத் தாங்குவது நம் நினைவுகள் மட்டுமே.

ஊருக்குப்போய் வரும் சமயங்களிலெல்லாம் பல இடங்களைப்பார்க்கும் பொழுது  பழைய நினைவுகளுடன் ஏற்படும் வலியை தவிர்க்கமுடியாது.. அதில் இதுவும் ஒன்று.. 

பகிர்ந்தமைக்கு நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.