Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்.பி.எல் (LPL) கிரிக்கெட்டும் வடக்கு கிழக்கு விளையாட்டு வீரர்களின் எதிர்காலமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

எல்.பி.எல் (LPL) கிரிக்கெட்டும் வடக்கு கிழக்கு விளையாட்டு வீரர்களின் எதிர்காலமும்

(வே போல் பிரகலாதன்)

sdpt-lpl-2020நிலத்திலும் புலம்பெயர்ந்தும் வாழுகின்ற அனைத்து இலங்கை சார்ந்த மக்களும், விளையாட்டுப்பிரியர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் லங்கா பிரேமியர் லீக் கிரிக்கெட் ஆட்டங்கள் வியாழன் 26/11/2020 இன்று ஆரம்பமாகவிருக்கிறது. இந்தியன் பிரேமியர் லீக் ஆரம்பிக்கப்பட்டு அது உலகளாவிய பெயரையும் ஈர்ப்பையும் விளையாட்டிலும் முதலீட்டிலும் பெற்று புகழடைந்த மாத்திரத்தில் Twenty20 என்ற கிரிக்கெட் ஆட்டம் பல கிரிக்கெட் விளையாடும் நாடுகளையும் கவர்ந்து அந்தந்த நாடுகளிலும் அவ்வாறான போட்டிகளை வைப்பதில் சில நாடுகள் ஆர்வம் காட்டியதோடு அவ்வாறான போட்டிகளை IPL பாணியில் நடாத்தவும் தொடங்கிவிட்டன. அதில் குறிப்பாக அவுஸ்திரேலியாவையும் மேற்கிந்திய கரிபியன் பிரேமியர் லீக்கையும் குறிப்பிடலாம். ஆனால் இந்தியன் IPL அளவில் பெயரையும் பண வருவாயையும் இந்த இரண்டு நாடுகளின் T20 விளையாட்டு எட்டவில்லை. தற்பொழுது இலங்கையின் கிரிக்கெட் அமைப்பான SLC யும் LPL லங்கா பிரேமியர் லீக் என்ற பெயரில் IPL இனை ஒத்த வகையில் போட்டிகளை நடாத்த விளைந்திருக்கிறது. இதற்கான முக்கிய செலவீனங்களை My11Circle என்கின்ற இந்திய ‘இணையத்தள கற்பனா விளையாட்டு’ (Online Fantacy Sports ) இனை நடாத்துகின்ற பந்தய கம்பனியின் அனுசரணையுடன் நடாத்துகின்றது. இந்த போட்டியில் 5 போட்டிக்குழுக்கள் பங்குபற்றுகின்றன. இந்தியாவின் பிரேமியர் லீகினைப்போல ஏலத்தில் அல்லாது தனிப்பட்ட முறையிலான ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை ஒவ்வொரு குழுவின் உரிமையாளர்களும் அனுசரணையாளர்களும் கொடுப்பனவு முறையில் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அந்த குழுக்களாவன,

1) Jaffna Stallion 2) Colombo Kings 3) Kandy Tuskers 4) Galle Gladiators 

5) Dambulla Vikings என்பனவாகும்.
விளையாட்டு விபரங்களின் நேர அட்டவனையை காண இங்கே அழுத்தவும்.

இலங்கை கிரிக்கெட் உலகத்தரத்தில் ஒரு முக்கியமான இடத்தில் உள்ளதற்கான காரணம் கிரிக்கெட் இலங்கையின் முதல்தரமான விளையாட்டாக விளங்குவதே. பள்ளிக்கூட மட்டத்திலும் கழகங்கள் மட்டத்திலும் கிரிக்கெட் விளையாட்டு ஆர்வத்துடனும் உயர்தரத்துடனும் விளையாடப்படுகிறது. 50 ஓவர்கள் விளையாட்டில் உலக கிண்ணத்தையும் இங்கிலாந்துக்கு முன்னதாகவே வென்ற பெருமை இலங்கைக்கு உள்ளது (1996).

சரி, இனி விடயத்துக்கு வருவோம். இந்த LPL கிரிக்கெட் போட்டிகளில் யாழ்ப்பாணம் ஸ்டால்லியன் என்ற பெயரில் ஒரு அணி விளையாடுவதும் அந்த அணியில் யாழ் மண்ணின் இளம் வீரர்களான விஜயகாந்த் வியாச்காந்த் (யாழ் மத்திய கல்லூரி வீரர்), கனகரத்தினம் கபில்ராஜ் (முன்னாள் யாழ் பரி யோவான் கல்லூரி வீரர்), தெய்வேந்திரன் தினோஷன் (யாழ் பரி யோவான் கல்லூரி வீரர்) ஆகியோர் இடம் பிடித்திருப்பது யாழ்ப்பாண மக்கள் மத்தியில் மாத்திரமல்ல அனைத்து தமிழ் மக்கள் மத்தியிலும் ஒரு ஆரவாரம் எதிர்பார்ப்பு கவனிப்பு என்பனவற்றை ஏற்படுத்தியுள்ளது. இந்த யாழ்ப்பாண அணியை பிரித்தானியாவின் பிரிந்தன் பகிரதன் என்பவரும் கனடாவின் ராகுல் சூட் (Rahul Sood) என்ற தொழிலதிபருடன் இன்னும் சில தமிழ் விளையாட்டு பிரியர்களும் இணைந்து உரிமையாளர்களாக உருவாக்கியுள்ளார்கள். இந்த அணிக்கு இலங்கை அணியின் ஒருநாள் ஆட்டக்காரரும் முன்னாள் டெஸ்ட் ஆட்டக்காரருமான திசர பெரேரா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் தெரிவுசெய்யப்பட்டுள்ள வியச்காந்த், கபில்ராஜ் அகில இலங்கை 19 வயதுக்கு கீழான அணியில் விளையாடிய அனுபவம் உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LPL போன்ற போட்டிகளால் வடக்கு கிழக்கு வீரர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படுமா?

யாழ்ப்பாண stallion அணியில் மூன்று யாழ்ப்பாண வீரர்கள் இடம்பெற்றதாலும் யாழ் அணியை முக்கியமாக வெளிநாட்டில் வாழுகின்ற தமிழர்கள் உருவாக்கினார்கள் என்பதாலும் மட்டும் வடக்கு கிழக்கில் கல்லூரிகள் கழகங்கள் மட்டில் விளையாடுகின்ற வீரர்களுக்கு நல்ல எதிர்காலம் உருவாகும் என்று கூறமுடியாது. LPL வெறும் போட்டி அடிப்படையிலும் தொழில் அடிப்படையிலும் மட்டும் உருவாகிய ஒன்று. இதன் மூலம் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதியில் விளையாடுகின்ற வீரர்களுக்கு குறிப்பாக கொழும்பு கண்டி காலி போன்ற நகரங்களை அண்டி இருக்கக்கூடிய கல்லூரிகளின் கழகங்களின் வீரர்களுக்கும் கொழும்பில் முதற்தர கிரிக்கெட் ஆடுகின்றவர்களுக்கும் ஒரு முக்கிய களமாக இது அமையும் என்பதில் ஐயமில்லை. அப்படியானால் வடக்கு கிழக்கில் இருக்கக்கூடிய திறமையுள்ள வீரர்கள் புறக்கணிக்கப்படுவார்களா என்ற கேள்வி பலருக்கும் எழலாம். இல்லை புறக்கணிக்கப்பட மாட்டார்கள் என்பதற்கும் அப்பால் அவர்களை விட வசதியும் அதனூடான அனுபவம் திறமையும் ஏனைய பகுதிகளில் உள்ள வீரர்களுக்கு அனுகூலமாக இருப்பதே காரணம். அதற்கு முக்கியமான காரணம் வசதிவாய்ப்பு என்பதே.

வடக்கிலும் கிழக்கிலும் இதுவரைக்கும் 99% வரையிலான கிரிக்கெட் ஆட்டங்கள் Matting என்று சொல்லப்படுகின்ற செயற்கை விரிப்புத்தரையிலேயே விளையாடப்படுகிறது. முதன்முறையாக புற்தரை (Turf) தளத்தை தன்னகத்தே உருவாக்கியது யாழ் புனித சம்பத்தரிசியார் கல்லூரியே. அனால் அக்கல்லூரிகூட அனைத்து போட்டிகளையும் செயற்கை விரிப்பிலேயே விளையாடுகிறார்கள் என்பது கவலைக்குரியது. தமிழ் வீரர்களை இலங்கை அணியில் சேர்த்துக்கொள்கிறார்கள் இல்லை என்று கவலைப்படுகின்ற அல்லது கோவப்படுகிற நாம் முதலில் எமக்கு சரியான வசதிகள் மற்றும் புற்தரையில் ஆடிய முதிர் அனுபவம் இருக்கிறதா என்ற கேள்வியை கேட்கவேண்டும். அப்படியானால் எம்மில் தரமான திறமை மிக்க வீரர்கள் இல்லையா என்று நீங்கள் கேட்கக்கூடும். திறமைமிக்க வீரர்கள் இருந்தும் அவர்கள் அடுத்தபடியான மட்டத்திற்கு செல்லமுடியாமல் வசதிவாய்ப்புக்கள் இல்லாமை என்பது தடைபோட்டுக்கொண்டு இருந்தது. அதே நிலைமை இன்றும் உள்ளது. 60, 70, 80 களிலும் 90 கள் வரை வடக்கில் கிரிக்கெட் என்பது வெறும் மூன்று மாதங்களே விளையாடப்பட்டது. அப்பொழுதெல்லாம் பருவகால விளையாட்டுக்களாகவே உதைபந்தாட்டம் கிரிக்கெட் ஹொக்கி என்பன விளையாடப்பட்டன. வருடத்தின் முதல் மூன்று மாதங்கள் கிரிக்கெட் அதன் பின்னான மூன்று மாதங்கள் மெய்வல்லுனர் மற்றும் ஹொக்கி ஏனைய மூன்று மாதங்கள் உதைபந்தாட்டம் என்ற அளவில்தான் முறை இருந்தது. அனால் அதில் ஒரு முன்னேற்றம் இப்பொழுது நிகழ்ந்திருக்கிறது. அதாவது யாழ்ப்பாணத்தின் அநேகமான பாடசாலைகளில் ஒவ்வொரு விளையாட்டும் வருடம் முழுவதும் விளையாடும் நிலைமை தோன்றியிருப்பது ஒரே விளையாட்டில் தொடர்ந்து பயிற்சியும் முழு அளவிலான ஈடுபாடும் வீரர்களுக்கு ஏற்படுவது நன்மையான விடயம். ஆனால் TURF ஆடுதரையை பொருத்தமட்டில் வடக்கு கிழக்கு பகுதிகள் பல ஆண்டுகள் பின்னுக்கு நிற்கிறோம் என்பதே உண்மை. அண்மையில் யாழ் இந்துக்கல்லூரியும் TURF WICKET இனை தமது பழைய மாணவர் சங்கங்களினூடாக தயாரித்திருப்பது அவர்களது கல்லூரிக்கும் யாழ்ப்பாண பகுதியின் கிரிக்கெட் விளையாட்டுக்கும் ஒரு முன்னேற்றகரமான விடயமாகும். யாழ் மத்திய கல்லூரியும் பரியோவான் கல்லூரியும் பயிற்சிக்காக TURF practice pitch இனை மைதானத்தின் மூலை பகுதிகளில் வைத்திருக்கிறார்கள். ஆனால் அதில் பயிற்சி செய்வதும் அந்த புற்தரையினை தொடர்ந்து நேர்த்தியாக வைத்திருப்பது என்பதும் சிரமமான காரியமாகவே படுகிறது.

தற்பொழுது யாழ்ப்பாணத்தின் முக்கியமான கிரிக்கெட் விளையாடும் கல்லூரிகள் இலங்கை பள்ளிக்கூட கிரிக்கெட் தரத்தில் மூன்றாவது தரத்தில்தான் (Division 3) விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். யாழ் பரியோவான் கல்லூரி இரண்டாவது தரத்திற்கு முன்னேறியிருந்தாலும் முதற்தரத்தில் விளையாடினால் மட்டுமே எமது வீரர்களின் திறமை உரிய கிரிக்கெட் உயர்மட்டத்திற்கு சென்றடையும் அல்லது பார்வையில் படும். கல்லூரி அளவில் நன்றாக விளையாடியவர்கள் தொடர்ந்தும் கழகங்களுக்கு உயர்நிலையில் ஆடமுடிந்தால் மட்டுமே எங்களது வீரர்களின் திறமை உரிய கதவுகளை தட்ட முடியும். ஆனால் எப்பொழுதாவது கைவிரல் விட்டு எண்ணக்கூடியவர்களே கொழும்பு சென்று தமிழ் யூனியன் போன்ற பெரிய கழகங்களுக்கு விளையாடும் வாய்ப்பை அவ்வப்போது பெற்றிருக்கிறார்கள். ஆக வடக்கு கிழக்கு பகுதிகளின் விளையாட்டு தரம் உயரவேண்டுமானால் விளையாட்டு வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும். அங்கு கிரிக்கெட்டை பொறுத்தவரை TURF விக்கெட் மைதானங்கள் உருவாக்கப்பட அல்லது மாற்றியமைக்கப்பட வேண்டும். கொழும்பில் அல்லது தெற்கில் இருப்பது போன்று வடக்கிலும் கிழக்கிலும் முதற்தர விளையாட்டு கழகங்கள் உருவாக வேண்டும். பாடசாலை முடித்து வெளியில் வரும் திறமை வாய்ந்தவர்களுக்கு மேலும் அந்த திறமைகளுக்கு வடிகால் அமைப்பது போல கழகங்கள் உருவாக வேண்டும். தற்பொழுது இருக்கின்ற கழகங்கள் பழைய மாணவர்களை உள்ளடக்கிய கழகங்களாகவோ அல்லது எல்லோரையும் உள்வாங்கிய கழகங்களாக தமக்குள் மட்டும் போட்டிகளை நடாத்தி முடித்துவிட்டு போகின்ற நிலைமையும் தெற்கில் சென்று விளையாடி வென்று அல்லது பெயர்வைத்து வருகின்ற அளவில் எமது பகுதி விளையாட்டு இன்னும் எட்டவில்லை. இலங்கையணியில் விளையாடிய தமிழ் வீரர்கள் அனேகமாக தெற்கிலோ அல்லது மத்தியை அண்டிய வசதிகளோடு கூடிய பாடசாலைகளில் விளையாடியவர்களாகவே இருந்தார்கள். பாடசாலை மட்டத்தில் ஒருசில வீரர்கள் அண்மைய மத்திய கல்லூரி வீரர் வியாச்காந்த் மற்றும் பரியோவான் கல்லூரியின் கபில்ராஜ் போன்றவர்கள் தெரிவுசெய்யப்பட்ட பொழுதும் அவர்களுக்கும் தொடர்ந்த விளையாடும் வசதிகளை எமது பிரதேசங்கள் அடுத்த கட்டத்திற்கு ஏற்படுத்தி கொடுக்கவில்லை என்பது மனவருத்தமான ஒன்று.

விளையாட்டு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க புலம்பெயர்ந்த பணவசதி பெற்ற தொழிலதிபர்கள் மனமுவந்து முன்வரவேண்டும். நாட்டிலும் புலத்திலும் நல்ல திறமையான விளையாட்டு பயிற்சியாளர்கள் சகல விளையாட்டு துறைகளிலும் இருக்கிறார்கள். அவர்களின் உதவியோடு ஒரு முதலீட்டாகவும் எமது பகுதிகளுக்கான சேவையாகவும் இதை செய்ய முன்வரவேண்டும். இங்கிலாந்தில் பல இலங்கை தமிழ் பெற்றோர்களின் பிள்ளைகளும் இலங்கையிலிருந்து அந்நாட்களில் பாடசாலைகளுக்கு விளையாடிவந்த வீரர்களும் வெவ்வேறு மட்டங்களில் தமது கிரிக்கெட் திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பல பிள்ளைகள் இளவயது முதற்தர போட்டிகளில் மிளிர்ந்துமிருக்கிரார்கள். அதற்கு காரணம் இந்நாடுகளில் உள்ள வசதிகள் இலகுவாக இவர்களுக்கு கிடைப்பதாலும் விளையாட்டை ஊக்குவிக்கும் சூழ்நிலையின் நிமித்தமுமே. உள்ளூர் மைதானங்கள் தனியார் மைதானங்கள் சகல வசதிகளுடன் வாடகைக்கு எடுக்க கூடிய வசதிகள் இங்கிருக்கின்றன. ஆனால் இந்தளவுக்கு இல்லாது போனாலும் ஓரளவுக்கு வசதிகள் எமது பகுதிகளில் ஏற்படுத்தினால் மட்டுமே பல இளம் வீரர்களை சர்வதேச தரத்திற்கு நாம் உயர்த்த முடியும்.

வடக்கு கிழக்கில் ஆட்சியதிகாரத்தை எடுக்கின்ற தமிழ் தரப்புக்களும் தமது பட்ஜெட்டின் ஊடாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் செல்வாக்குடையவர்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைப்பதாலும் வெளிநாட்டு தமிழ் பெருமக்கள் செல்வந்தர்கள் ஊடாகவும் கல்லூரிகள் அதிபர்கள் கல்வியமைச்சுக்கு கோரிக்கை வைப்பதாலும் ஒரு கூட்டு முயற்சிக்கு ஊடாகவே விளையாட்டு வசதிவாய்ப்புக்களை உருவாக்கி விளையாட்டுத்துறையில் முன்னேற்றம் அடைந்த சமூகமாக இளம் சந்ததியினரை படிப்பிலும் விளையாட்டிலும் ஈடுபாடுடையவர்களாக்குவதன் மூலம் ஆரோக்கியமான சமூகமாக ஆவா குழு போன்ற வன்முறையற்ற இளம் சமுகத்தை கட்டியெழுப்ப முடியும். அவர்களை சர்வதேச விளையாட்டு தரத்திற்கு உயர்த்தவும் முடியும். LPL விளையாட்டு பிரியர்களுக்கு IPL போன்ற பரபரப்பான பொழுதுபோக்கேயன்றி எமது பகுதி விளையாட்டை தரமுயர்த்தும் பொறிமுறையாகாது.

https://sdptnews.org/2020/11/26/எல்-பி-எல்-lpl-கிரிக்கெட்டும/?fbclid=IwAR3j0M-gfvSyWSiDB5ErvhAyWY0MedkunDh4mUbjI1OsWlwHoLLuDaN4m9I

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.