Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வரலாறு எனது வழிகாட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு எனது வழிகாட்டி

Thesiyath-Thalaivar-2.jpg

குறிப்பு: தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தமிழ் நாட்டில் தங்கியிருந்த போது முதன் முதலாக பத்திரிகைக்கு அளித்த பேட்டி இது. இந்தியாவின் பிரசித்திபெற்ற ‘சண்டே’ (SUNDAY) எனப்படும் ஆங்கில வார ஏடு (11 – 17, மார்ச், 1984) தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் இந்த நேர்காணலை பிரசுரித்தது.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் படத்தை அட்டையில் தாங்கி, மிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்ட இந்த நேர்காணல் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சர்வதேச அரங்கில் பிரபல்யப்படுத்த பெரிதும் உதவியது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உருவாக்கம், கொள்கைத் திட்டம், ஆயுதப் போராட்ட வடிவம், மற்றும் அன்றைய காலத்து அரசியல் சூழ்நிலை, ஆகிய விடயங்கள் பற்றி தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் இந்த நேர்காணலில் மிகவும் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் தனது கருத்துக்களை எடுத்துக் கூறுகிறார். பிரபல இந்திய பெண் பத்திரிகையாளரான அனிதா பிரதாப் இந்த நேர்காணல் முன்னுரையில் தேசியத் தலைவரைப் பற்றி குறிப்பிடுகையில், “இவர் அன்பானவர்; பண்பானவர். மிகவும் பலம்வாய்ந்த விடுதலை இயக்கத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்துபவர் என்ற முறையில் அவர் சிங்கள ஒடுக்குமுறையிலிருந்து தமிழ் மக்களை விடுதலை செய்யும் இலட்சியத்தில் தீவிரமும் உறுதிப்பாடும் மிக்கவராக விளங்குகிறார்” என கூறியிருந்தார். ஆங்கிலத்தில் வெளியான இந்த நேர்காணலின் தமிழாக்கத்தை இங்கு தருகிறோம்.

Thesiyath-Thalaivar.jpg

கேள்வி: வழக்கமான அரசியல் அமைப்பில் இருந்து விலகவும், ஒரு விடுதலை இயக்கத்தை உருவாக்கவும் உங்களைத் தூண்டியது எது? அத்தகைய ஒரு விடுதலை இயக்கம் சட்ட விரோதமாக்கப்படும் என்பது உங்களுக்குத் தெரியும் தானே?

பதில்: இலங்கையின் சனநாயகப் பாராளுமன்ற அமைப்பு அல்லது நீங்கள் சொல்வதைப்போல இலங்கையின் வழக்கில் உள்ள அரசியல் அமைப்பு எப்போதுமே பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தையே சிறுபான்மையினர் மீது திணித்து வந்திருக்கிறது. இந்த அரச அமைப்பானது எங்கள் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறிவிட்டது என்பதுடன், எமது நிலையை மேலும் மோசமாக்கிவிட்டது. காலம் காலமாக அரசின் ஒடுக்குமுறை ஆட்சியானது எம் மக்களின் வாழ்வு நிலையைச் சகிக்க முடியாததாகவும் துன்பகரமானதாகவும் மாற்றிவிட்டது. எம்மக்கள் நடத்திய சாத்வீக சனநாயகப் போராட்டங்கள் இராணுவத்தால் நசுக்கப்பட்டன. எமது நியாயமான கோரிக்கைகள் முற்று முழுவதாகப் புறக்கணிக்கப்பட்டதுடன் இந்த அடக்குமுறையானது தமிழ் மக்களின் உயிர் வாழ்வுக்கே ஆபத்தாக அமைந்தது. இத்தகைய சூழ்நிலைகளே ஒரு விடுதலை இயக்கத்தை உருவாக்க என்னைத் தூண்டின. தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மட்டுமல்ல, சிங்கள அடக்குமுறையிலிருந்து இறுதியாகத் தங்களை விடுவித்துக்கொள்ளவும் எம் மக்களுக்கு ஆயுதப் போராட்டமே நடைமுறைச் சாத்தியமான ஒரே வழியென்று நான் உணர்ந்தேன். எங்கள் இயக்கம் தடை செய்யப்படும் என்பது எனக்கு முன்கூட்டியே தெரியும். அதனால் தான் எங்கள் இயக்கத்தை அதன் ஆரம்ப காலத்திலிருந்தே ஒரு தலைமறைவு இயக்கமாக உருவாக்கினோம்.

கேள்வி: இலங்கைத் தமிழர்களுக்கு ஆயுதப் போராட்டமே ஒரே வழியென்று நீங்கள் தீர்க்கமான முடிவுக்கு வர நிர்ப்பந்தித்த உங்களின் தனிப்பட்ட அனுபவங்களைச் சற்றுக் கூறுவீர்களா? கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இலங்கை அரசு காட்டிய பாரபட்சமான கொள்கையால் நீங்களோ உங்கள் குடும்பத்தவரோ அல்லது உங்களது நண்பர்களோ நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனரா?

பதில்: நான் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது 1958ஆம் ஆண்டின் இனக் கலவரங்களில் நிகழ்ந்த பயங்கரச் சம்பவங்கள் என் மனத்தில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியர்களால் எம் மக்கள், ஈவிரக்கமில்லாது குரூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன். எங்கள் குடும்பத்திற்குத் தெரிந்த ஒரு விதவைத் தாயை நான் ஒருமுறை சந்தித்தபோது அவர் இந்த இன வெறியாட்டத்தால் தனக்கு நேர்ந்த துயரமான அனுபவத்தை என்னிடம் சொன்னார். இனக் கலவரத்தின் போது சிங்களக் காடையர்கள் கொழும்புவிலிருந்த அவர் வீட்டைத் தாக்கினார்கள். அவரது வீட்டுக்குத் தீ வைத்து, அவருடைய கணவரையும் குரூரமாகக் கொலை செய்தனர். அவரும் அவரது பிள்ளைகளும் பலத்த எரிகாயங்களுடன் தப்பினார்கள். அவரது உடலில் காணப்பட்ட எரிகாயத் தழும்புகளைப் பார்த்தபோது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். சிறு குழந்தைகளைக் கொதிக்கும் தாருக்குள் உயிருடன் வீசிக்கொன்ற கோரச்சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன். அநாதரவான அப்பாவித் தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடூரமான தாக்குதலுக்கு இலக்காகினர் என்பதையெல்லாம் கேட்கும்போது என் மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும், அன்பும் ஏற்பட்டன. இந்த இனவெறி அமைப்பின் பிடிக்குள்ளிருந்து எம் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற பெரும் உந்துதல் என்னிடம் தோன்றியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இந்த அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று நான் ஆழமாக உணர்ந்தேன்.

கேள்வி: எந்தக் கட்டத்தில் நீங்கள் பாராளுமன்ற அமைப்பில் நம்பிக்கை இழந்தீர்கள்? உங்கள் நம்பிக்கையைச் சிதைத்தது எது?

பதில்: எழுபதுகளின் ஆரம்பத்தில், இளம் தலைமுறையினர் பாராளுமன்ற அரசியலில் நம்பிக்கையிழந்திருந்த கால கட்டத்தில் தான் நான் அரசியலில் நுழைந்தேன். ஆயுதம் தாங்கிய புரட்சிவாதியாகவே நான் அரசியலில் புகுந்தேன். அடுத்தடுத்து பதவிக்கு வந்த சிங்கள அரசுகள் எமது மக்களின் துன்ப, துயரங்களை ஈவிரக்கமின்றி முற்றிலும் புறக்கணித்து வந்த காரணத்தினால் பாராளுமன்ற அரசியலில் எனக்கு அவநம்பிக்கை ஏற்பட்டது.

கேள்வி: நீங்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தை எவ்வாறு ஆரம்பித்தீர்கள்?

பதில்: எம் மக்களின் விடுதலைக்கு ஆயுதப் போராட்டம் தான் ஒரே வழி என்பதில் முழுமையான நம்பிக்கையுடைய புரட்சிகர இளைஞர்களின் துணையுடன் தான் நான் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தேன்.

கேள்வி: உங்களைப் ‘புலிகள்’ என்று ஏன் அழைத்துக் கொள்கிறீர்கள் ?

பதில்: தமிழர்களின் அரசியல் வரலாற்றில் புலிச்சின்னமானது ஆழ்ந்து வேரோடி இருப்பதால் தான் எமது இயக்கத்திற்கு ‘விடுதலைப் புலிகள்’ என்று பெயரிட்டேன். புலிச்சின்னமானது தமிழ்த் தேசியத்தின் புத்தெழுச்சியை உருவகப்படுத்துகிறது. அத்துடன் கெரில்லா யுத்த முறையையும் புலிச்சின்னம் குறித்து நிற்கிறது.

கேள்வி: நீங்கள் “விடுதலைப் புலிகள்” இயக்கத்தை ஆரம்பித்த போது உங்கள் குடும்பத்தாரும் நண்பர்களும் அதனை எவ்வாறு வரவேற்றனர்?

பதில்: விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்ததுமே நான் தலைமறைவாக இயங்கி வந்தேன். அத்துடன் எனக்கும் குடும்பத்தாருக்கும் இருந்த தொடர்பு அறுந்து விட்டது.

கேள்வி: உங்கள் குடும்பத்தாரைக் கடைசியாக எப்போது சந்தித்தீர்கள்? உங்கள் தலைமறைவு வாழ்க்கையை அவர்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்களா?

பதில்: என் குடும்பத்தாரை நான் சந்தித்துப் பதினொரு வருடங்கள் ஆகி விட்டன. சாதாரண வாழ்க்கை நடத்தும் சாமான்யனாக அவர்கள் என்னைக் கருதுகிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. என்னுடைய தலைமறைவுக் கெரிலாப் போராளி வாழ்க்கையை அவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.

கேள்வி: 12 வருடகாலப் போராட்டத்தின் பின், உங்கள் இலக்கை நெருங்கிக் கொண்டிருக்கும் கட்டத்தில் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: இந்த நீண்ட போராட்டத்தின் பின் எமது இலட்சியத்தை நோக்கி நாங்கள் வேகமாக விரைந்து கொண்டிருப்பதாகவே நான் உணர்கிறேன். ஜூலை 1983 பேரழிவுகள் தமிழ் மக்களின் சகல பிரிவினரையும் ஒரே இலட்சியத்தின் கீழ் ஒன்றிணைத்துவிட்டன. எமது இயக்கத்தின் ஆயுதப்போராட்டத் திட்டத்திற்கு மக்களின் பேராதரவு பெருகி வருகிறது.

கேள்வி: கடந்த 12 வருடகால அனுபவங்கள் உங்களைத் தனிநபர் என்ற முறையில் எவ்வாறு பாதித்து இருக்கின்றன?

பதில்: இந்தப் போராட்ட அனுபவங்கள் எனது இலட்சியத்தை ஆழமாக வலுப்படுத்தியிருக்கின்றன. எனது பார்வையை மேலும் கூர்மைப்படுத்தியிருக்கின்றன.

கேள்வி: இதுவரை உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களில் மகத்தான அனுபவம் என்று எதைக்கூறுவீர்கள்?

பதில்: ஒரு குறிப்பிட்ட அனுபவத்தை மகத்தானது என்று தனிமைப்படுத்திக் கூறுவது எனக்குக் கடினமானது. ஒரு கெரில்லாப் போராளியின் வாழ்க்கையானது துயரமும் மகிழ்ச்சியும் விரக்தியும் கலந்த பல்வேறுபட்ட அனுபவங்களின் கலவையாகும். இவற்றுள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு வகையில் மகத்தானது தான்.

கேள்வி: விடுதலைப் போராட்டத்தில் உங்களது நீண்டகால அனுபவமானது, வாழ்க்கை பற்றிய உங்களது நோக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். இந்த அனுபவங்களின் மூலம் உங்கள் பார்வையில் ஏற்பட்ட தாக்கங்கள் பற்றியும், உங்கள் இலட்சியத்தில் எழுந்த உறுதிப்பாடுகள் பற்றியும் கூறுவீர்களா? அத்துடன் உங்கள் அனுபவங்கள் நீங்கள் ஏற்கனவே வரித்துக் கொண்ட சில கொள்கைகள், கோட்பாடுகள் நடைமுறையில் எத்துணை பொருத்துமற்றது என்பதனை உணர்த்தும் அதேவேளையில் வேறு சில சரியானவைதாம் என்ற கருத்தினையும் ஏற்படுத்தியிருக்கலாம் அல்லவா ? அவற்றில் சிலவற்றைக் கூறுவீர்களா?

பதில்: நாங்கள் வரித்துக்கொண்ட ஆயுதப் புரட்சிப் பாதை மிகவும் சரியானது என்பதைக் கடந்த 12 வருடகால அனுபவங்கள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் எனக்கு உணர்த்தியிருக்கின்றன. எமது ஆயுத ரீதியிலான போராட்ட வடிவத்தை ‘பயங்கரவாதம்’ என்று விமர்சித்த மற்ற விடுதலைக் குழுக்குள் ஒடுக்கப்பட்ட எமது மக்களின் விடுதலைக்கான ஒரே வழி ஆயுதப் போராட்டம் தான் என்பதை இப்போது ஏற்றுக்கொண்டு விட்டன. நாங்கள் கைக்கொண்ட கெரில்லா யுத்தமுறையானது விடுதலைப் போராட்டத்தின் வலிமைமிக்க வடிவமாக அமைந்திருக்கிறது. எமது வெற்றிகரமான கெரில்லாத் தாக்குதல்கள், சிங்கள ஆயுதப் படைகளைத் தோற்கடித்து, சுதந்திரத்தை வென்றெடுக்க எம்மால் முடியுமென்ற நம்பிக்கையை எமது மக்களுக்கு ஊட்டியிருக்கின்றன.

கேள்வி: உங்கள் நண்பன், தத்துவாசிரியன், வழிகாட்டி யார்?

பதில்: இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.

கேள்வி: இலங்கை அரசாங்கத்தால் தேடப்படுபவர்களில் முதன்மையானவராக இருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: பிரிட்டிஷ் அரசாங்கம் யாரைப் ‘பயங்கரவாதி’ என்று சொல்கிறதோ, அவனே உண்மையான ஐரிஸ் தேசியப் போராளி என்று ஐரிஸ் தலைவர் ஒருவர் குறிப்பிட்டார். அதுபோல, இலங்கை அரசு என்னைத் தேடப்படுபவர்களில் முதன்மையானவராகக் கருதினால் அது நான் உண்மையான தமிழ்த் தேசியப் போராளி என்பதையே உணர்த்துகிறது. அவ்வாறு தேடப்படும் நபராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.

கேள்வி: உங்கள் வாழ்க்கையில் மிகுந்த விரக்தியைத் தந்த கணம் என்று எதையாவது கூறுவீர்களா?

பதில்: என் வாழ்க்கையில் அப்படி விரக்தி ஏற்பட்ட கணம் என்று எந்த ஒன்றையும் குறித்துச் சொல்ல முடியாது. இலட்சிய நோக்குக் கொண்டவர்கள் என்று நான் நினைத்து நம்பிய சில நண்பர்கள், சுயநலச் சந்தர்ப்பவாதிகளாக மாறியபோது, நான் மிகுந்த விரக்திக்குள்ளானதுண்டு.

கேள்வி: உங்களுக்கும் உமாமகேஸ்வரனுக்கும் இடையிலான பிளவு எப்படி ஏற்பட்டது?

பதில்: இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டிருக்கும் விதம் தவறானது. இப் பிரச்சினையை எனக்கும் உமாமகேஸ்வரனுக்கும் இடையிலான தனிப்பட்ட விரோதமாக அல்லது பிளவாக நோக்குவது தவறானது. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் ஒரு தனி நபருக்கும் இடையிலான பிரச்சினையே அது. இப்பிரச்சினைக்கு நான் தனிப்பட்ட முறையில் எந்த விதத்திலும் பொறுப்பாளியல்ல. அந்தப் பிரச்சினை உமாமகேஸ்வரனாலேயே உருவானது. ஒரு புரட்சி இயக்கத்தின் முக்கியஸ்தர், அந்த இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் இயக்கத்தில் ஒழுங்கும் கட்டுப்பாடும் நிலவும் அடிப்படை விதிகளை அம் முக்கியஸ்தரே மீறி நடப்பாரேயானால் ஒழுங்கு குலைந்து, குழப்பம் மலிந்து, இயக்கம் சிதைந்து போகும். உமாமகேஸ்வரன் எமது இயக்கத்தின் விதிகளை மீறி நடந்தமையால் ஒழுங்கு நடவடிக்கையாக அவர் மத்திய குழுவால் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த இயக்கத்தை ஸ்தாபித்தவன் என்ற முறையிலும், உமாமகேஸ்வரனை இயக்கத்தின் ஒரு உறுப்பினராக நியமித்தவன் என்ற முறையிலும் மத்திய குழுவின் தீர்மானத்தை உறுதியாகக் கடைப்பிடிப்பதைத் தவிர வேறு எந்த வழியும் எனக்கு இருக்கவில்லை.

கேள்வி: இன்று பல்வேறு ஈழ விடுதலைக்குழுக்கள் தமக்குள் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன. எல்லாரது இலட்சியமும் ஒன்றேயாதலால், இவற்றை ஒருங்கிணைக்கும் முயற்சி அவசியமல்லவா? பொது எதிரிக்கு எதிராக உங்களின் ஒருங்கிணைக்கப்பட்ட சக்தியால் நீங்கள் அதிகளவு பயனடையலாமே!இக்குழுக்கள் ஒருங்கிணைவதை நீங்கள் கொள்கையளவில் எதிர்க்கிறீர்களா?

பதில்: இத்தகைய ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கு நான் ஆதரவுடையவன் என்பதை மிகத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் தெரிவித்திருக்கிறேன். இத்தகைய திட்டத்தை நான் வரவேற்கிறேன் என்பதையும், மற்ற விடுதலைக் குழுக்கள் தமக்கிடையிலான வேறுபாடுகளைக் களைந்து, பொது வேலைத் திட்டமொன்றினை ஏற்கும்பட்சத்தில் அத்தகைய கூட்டு முன்னணியில் இணைந்துகொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதையும், இந்த விடுதலை அணிகளுக்கு 2-9- 82இல் நான் கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறேன். ஆனால், துரதிர்ஷ்ட வசமாக இக்குழுக்கள் ஒரு பொதுப்படையான வேலைத்திட்டத்தை உருவாக்குவதில் தோல்வி கண்டன. மாறாக, ஒவ்வொரு ஒருங்கிணைப்புக் கூட்டத்திலும் ஒருவருக்கொருவர் பிணக்குப்பட்டு, மேலும் பிளவுற்றனர். இதில் வருந்தத்தக்க உண்மை என்னவென்றால், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற உண்மையான நோக்கம் இந்தக் குழுக்களிடையே இல்லை என்பது தான். அவர்களது சொல்லுக்கும் செயலுக்குமிடையே பெரும் இடைவெளி காணப்படுகிறது. தங்களுக்கிடையிலான ஒற்றுமையின்மைக்குப் புலிகளைக் குற்றம் சாட்டுவதைக் கைவிடுத்து இக்குழுக்கள் தங்களுக்கிடையிலே ஒற்றுமையை ஏற்படுத்தி முன்னுதாரணமாகத் திகழவேண்டும். ஒரு பொதுத் திட்டத்தில் அவர்கள் ஒருங்கிணையும்போது அவர்களுடன் கைகோர்த்துச் செல்ல நாம் தயாராக இருக்கிறோம்.

கேள்வி: உங்களைத் தவிர மற்ற அனைவரும் ஒருங்கிணையும் கருத்திற்கு ஆதரவு தருவதாக ஏனைய விடுதலைக் குழுக்களின் அமைப்பாளர்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள். இது உண்மையா?

பதில்: இது முற்றிலும் பொய்யானது; எங்கள் இயக்கத்திற்கு இழிவுதேட ஏனைய குழுக்கள் மேற்கொண்டிருக்கும் பொய்ப் பிரச்சாரத் தந்திரம் இது.

கேள்வி: விடுதலைப் போராட்டத்தில் நீங்கள் தனித்து நிற்கிறீர்களா?

பதில்: இல்லை. நான் பலம்மிக்க தேசியப் போராட்ட இயக்கமொன்றினை தலைமைதாங்கி நடத்துபவன். பரந்துபட்ட தமிழ் மக்கள் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

கேள்வி: தனிமை உங்களை வாட்டும் கணங்கள் உண்டா? அதை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?

பதில்: இத்தகைய தனிமையுணர்வுகள் என்னைப் பீடித்ததில்லை. தங்களின் தனிப்பட்ட மனக் குகைக்குள் தங்களை அமிழ்த்திக்கொள்பவர்களுக்கு இந்தத் தனிமையுணர்வு ஒரு பிரச்சினைதான். ஒரு உண்மையான புரட்சியாளன் இத்தனி நபர் பிரச்சினைகளை மேவி, ஒரு கூட்டு பிரக்ஞையை, சமூகப் பிரக்ஞையை உருவாக்குகிறான். நான் ஒரு பொதுவான சமூக இலட்சியத்திற்காக வாழ்பவன்; அதற்காகப் போராடுபவன்.

கேள்வி: ஒரு சாதாரண இளைஞனின் வாழ்க்கையை வாழவில்லையே என்று நீங்கள் வருந்தியதுண்டா?

பதில்: நீங்கள் சொல்லுகிறமாதிரி சாதாரண வாழ்க்கை நடத்துகின்ற இலட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். ஆனால், நாங்களோ ஒரு உன்னத இலட்சியத்துக்காகப் போராடி வருகிறோம். அந்த இலட்சியத்திற்காக உழைப்பதும், வாழ்வதும் எங்களுக்குப் பூரண ஆத்ம நிறைவைத் தருகிறது.

கேள்வி: இலங்கையில் பெரும்பாலான தமிழ் இளைஞர்கள் இருள்மயமான எதிர்காலத்தை எதிர்நோக்கியிருக்கின்றனர் என்று நீங்கள் கவலைகொள்வதுண்டா ?

பதில்: இல்லை. இன்றைய இளம் சமூகத்தினர் சுதந்திரத்திற்கான போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். இவர்களின் எதிர்காலம் ஒளிமயமானது என்றே எனக்குத் தெரிகிறது.

கேள்வி: விடுதலைப் போராட்டத்தில் மேன் மேலும் இளைஞர்கள் பங்குகொண்டு வருகிறார்கள் என்பது உண்மைதானா?

பதில்: ஆம். மேன்மேலும் இளைஞர்கள் புரட்சிப் போரில் குதித்து வருகின்றனர். தங்களுக்கும் தங்கள் சமூகத்துக்கும் ஆயுதப் போராட்டத்தின் மூலமே விமோசனம் உண்டு என்பதை உணர ஆரம்பித்துள்ள இளைய தலைமுறையினர் எங்கள் இயக்கத்தின் தலைமையின்கீழ் அணிதிரண்டு வருகின்றனர்.

கேள்வி: ‘பிரிவினைவாதிகள்’ என்றும் ‘சுதந்திரப் போராளிகள்’ அல்லது ‘பயங்கரவாதிகள்’ என்றும் உங்கள் இயக்கத்தைப் பற்றிக் கூறப்படுகிறதே, அதற்கு உங்கள் பதில் என்ன?

பதில்: ‘பிரிவினைவாதிகள்’ என்று எமது இயக்கத்தைக் குறிப்பிடுவது மிகத் தவறானது. பிரிவினைவாதம்’ என்பது தவறான சித்தாந்தம். இதனை எங்கள்போராட்டத்திற்குப் பிரயோகிக்க முடியாது. எங்கள் இனத்தின் தேசிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தேசிய விடுதலைக்காக நாங்கள் போராடி வருகிறோம். சுயநிர்ணய உரிமைக்காக நாங்கள் போராடுகிறோம். எங்கள் தாயகத்தின் இறைமையை மீட்டெடுக்க நாங்கள் போராடுகிறோம். பிரிவினைக்காகவோ, நாட்டை கூறுபடுத்துவதற்காகவோ நாங்கள் போராடவில்லை. எங்கள் மக்கள் சுதந்திரத்தோடும், சுய கௌரவத்தோடும் வாழுகின்ற புனித உரிமையைப் பாதுகாப்பதற்காக நாங்கள் போராடுகிறோம். இந்த அர்த்தத்தில் நாங்கள் பயங்கரவாதிகள் அல்லர்; சுதந்திரப் போராட்ட வீரர்களே.

கேள்வி: சிங்கள இராணுவத்தின் கரங்களில் பிடிபடுவதைவிட மரணமடைவது மேலானது என்று கருதுகிறீர்களா?

பதில்: உயிரோடு எதிரிகள் கைகளில் பிடிபடுவதைவிட கௌரவமாகச் சாவதையே விரும்புகிறேன்.

கேள்வி: உங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஜூலை 23ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 13 சிங்கள இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அப்பாவித் தமிழர்களுக்கு எதிராகச் சிங்களவர்கள் தாக்குதல் நடத்தியமைக்கு உங்ககளின் கெரில்லாத் தாக்குதலே காரணம் என்று கூறப்படுகிறது. இத்தகைய பாரிய பதில் தாக்குதலை நீங்கள் எதிர்பார்க்கவில்லையா?

பதில்: ஜூலைக் கலவரத்தை விடுதலைப் புலிகளின் கெரில்லாத் தாக்குதலுக்கு எதிரான சிங்களவர்களின் பதில் தாக்குதல் என்று வெறுமனே மதிப்பிட்டு விட முடியாது. இவ்வாறு கூறுவது அந்தச் சம்பவத்தை மிகவும் எளிமைப்படுத்துகிறது. இலங்கையில் காலம் காலமாக, திட்டமிட்ட முறையிலே தமிழர்களுக்கெதிரான தாக்குதல் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. எங்களின் இயக்கம் தோன்றுவதற்கு முன்பே இனவெறிப் பேரழிவுகள் நடந்திருக்கின்றன. நாங்கள் இராணுவத் தாக்குதலை நடத்துவதற்குச் சில கிழமைகளுக்கு முன்பே திருக்கோணமலையில் மோசமான இனத் தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்தன. ஆகவே, தமிழர்களுக்கெதிரான இனத் தாக்குதலைத் தனித்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில் விமர்சிக்க முடியாது. நாங்கள் நீண்ட ஒரு கெரில்லா யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறோம். பல கெரில்லாத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறோம். பல சிங்கள இராணுவ வீரர்களையும் பொலிஸ்காரர்களையும் அழித்திருக்கிறோம். ஜூலையில் நாங்கள் நடத்திய கெரில்லாத் தாக்குதல் நாங்கள் நடத்திவரும் தொடர்ச்சியான போராட்டத்தின் ஒரு அங்கம்தான். குறிப்பிட்ட ஒரு இராணுவ நடவடிக்கைதான் முழுக் கலவரத்திற்கும் காரணம் என்று கருதுவது தவறானதாகும். ஜூலைக் கலவரமானது எம் மக்களைக் கொன்று குவிக்கும் நோக்கம் மட்டும் கொண்டதல்ல, கொழும்பில் வாழுகின்ற தமிழர்களின் பொருளாதாரத் தளத்தையே அழித்து விடுவதையும் நோக்கமாகக் கொண்டிருந்ததை நீங்கள் நிச்சயமாக அவதானித்திருப்பீர்கள். எங்களுடைய கண்ணோட்டத்தில், ஜூலைப் பேரழிவானது ஆளும் கட்சியின் இனவெறிச் சக்திகளால் தமிழர்களுக்கெதிராக நன்கு திட்டமிடப்பட்டு, செயற்படுத்தப்பட்ட இனப் படுகொலைத் திட்டமாகும். ஆரம்பத்தில் இந்த வெறிக் கும்பல் முழுக் குற்றச்சாட்டையும் புலிகள் மேல் சுமத்த முனைந்தது. பிறகு திடீரென்று தங்கள் கருத்தை மாற்றிக்கொண்டு இனக்கலவரங்களுக்கு இடதுசாரிகளே காரணம் என்று குற்றம் சாட்டியது. உண்மையில் எமது மக்களின் பாரிய உயிரிழப்பிற்கும், அவர்களின் உடைமை நாசத்திற்கும் இன்றைய அரசாங்கத்தின் இனவெறிபிடித்த தலைவர்களே பொறுப்பேற்க வேண்டும்.

கேள்வி: ஏன் நீங்கள் இந்தத் தாக்குதலை நடத்தினீர்கள்? இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. நான்கு தமிழ்ப் பெண்மணிகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதற்கு எதிரான ஒரு பழி வாங்கல் நடவடிக்கைதான் இது என்று சிலர் கூறுகிறார்கள். நான் விசாரித்தவரையில், உங்களின் இராணுவப் பிரிவுத் தலைவரும் நெருங்கிய நண்பருமான சார்ல்ஸ் அன்ரனியின் மரணத்தில் வெற்றிப் பெருமிதம் கொண்டிருந்த சிங்கள இராணுவத்திற்குப் பாடம் படிப்பிப்பதற்காகத்தான் இத்தாக்குதல் நடந்தது என்று தோன்றுகிறது. அதாவது விடுதலைப் புலிகள் இயக்கம் அதன் ஆற்றல் மிகுந்த தலைவர்களில் ஒருவரை இழந்துவிட்ட பிறகும்கூட சிங்கள இராணுவத்தை எதிர்கொள்ளக்கூடிய வலிமை கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் நிரூபிக்க முயன்றிருக்கிறீர்கள் என்று நான் கருதுகிறேன். இந்தக் கருத்து சரியா? அல்லது இதை விடவும் கூடுதல் காரணங்கள் உண்டா?

பதில்: சார்ல்ஸ் அன்ரனி பற்றியும் இத்தாக்குதல் பற்றியும் நீங்கள் சொல்வதில் ஓரளவு உண்மை இருக்கத்தான் செய்கிறது. இத்தாக்குதல் ஓரளவிற்குப் பதிலடிதான்; சிங்கள இராணுவத்திற்குத் தண்டனை தான். இருப்பினும் எங்களைப் பொறுத்தவரை சார்ல்ஸ் போன்ற உன்னத புரட்சிவாதியின், விடுதலை வீரனின் உயிருக்குப் பதின்மூன்று இராணுவத்தினரின் உயிர்கள் ஒருபோதும் ஈடாகாது. வேறொரு வகையில், எதிரியை நோக்கித் தொடுக்கப்பட்டிருக்கும் எமது கெரில்லாப் போர்முறையின் ஒரு பகுதிதான் இத்தாக்குதலாகும்.

கேள்வி: வட்டமேசை மாநாடு எந்தவித நிரந்தரமான தீர்வையாவது உருவாக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்: தமிழர்களின் பிரச்சினைகளுக்கு வட்டமேசை மாநாடு எந்தவித நிரந்தரத் தீர்வையும் தராது என்பது என் கருத்து. கடந்தகால அரசியல் அனுபவத்தின் அடிப்படையிலேயே இம்முடிவிற்கு வந்திருக்கிறோம். சிங்களத் தலைவர்கள் ஒருபோதும் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண எந்தவித நேர்மையான முயற்சியும் மேற்கொண்டதில்லை. இப்போதைய பேச்சு வார்த்தைகளுக்கும் இந்தக்கதி தான் நேரும். முக்கியமான சகல சிங்களக் கட்சிகளும் பௌத்த அமைப்புகளும் தமிழர்களுக்குப் பிரதேச சுயாட்சியை எந்த வடிவத்திலும் எந்த அளவிலும் தரத் தயாராக இல்லை. சிறு சலுகைகள் வழங்கப்படுவதைக்கூட அவர்கள் எதிர்க்கிறார்கள். இம்மாநாட்டிலிருந்து உருப்படியாக எதுவும் கிடைக்காது.

கேள்வி: தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் விடுதலைப் போராட்டத்தைப் பின்னுக்குத் தள்ளுகிறார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா? ஏன்? அவர்களைத் துரோகிகள் என நினைக்கிறீர்களா?

பதில்: தமிழர் விடுதலைக் கூட்டணியின் சந்தர்ப்பவாத அரசியலானது விடுதலைப் போராட்டத்தை நிச்சயமாகப் பின்னுக்குத் தள்ளத்தான் செய்கிறது. இப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல திட்டவட்டமான நடவடிக்கைகள் எதனையும் அவர்கள் ஒருபோதும் எடுத்ததில்லை. மாறாக, அவர்கள் பொய்யான நம்பிக்கைகளைத் தருகிறார்கள்; பிரமைகளை ஏற்படுத்துகிறார்கள்; எமது மக்களைத் தொடர்ந்து அடிமைத்தனத்திலேயே வைத்திருக்க முனைகிறார்கள். அவர்கள் தங்களது சுயநல அபிலாசைகளை அடையவே அரசியலில் நுழைந்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலை செய்வதற்கான உண்மையான நோக்கம் எதனையும் அவர்கள் ஒருபோதும் கொண்டிருக்கவில்லை. அத்தோடு, எந்தவிதமான உருப்படியான அரசியல் வேலைத் திட்டத்தையும் அவர்கள் முன்வைக்கவில்லை. இந்த விடுதலைப் போராட்டச் சூறாவளியில் மாட்டிக்கொள் வார்கள் என்று, அவர்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. புரட்சியின் ஜுவாலை தமிழீழம் முழுவதும் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. இதை அணைக்க அவர்கள் தங்களால் ஆனமட்டும் முயன்று பார்க்கிறார்கள். இந்த அர்த்தத்தில் அவர்களைத் துரோகிகள் என வர்ணிக்கலாம்.

கேள்வி: தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் தமது சொந்த வீடுகளுக்குத் திரும்பப் பயப்படுகிறார்கள் என்பதற்குக் காரணம் சிங்களவர்கள் அல்ல, புலிகள்தான் என்கிறார்களே! இது உண்மையா?

பதில்: அவர்கள் பயப்படுவது புலிகளுக்கல்ல. சுதந்திரத் தமிழீழம் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களுக்கு வாக்களித்த மக்களின் கோபா வேசத்துக்குத்தான் அவர்கள் பயப்படுகிறார்கள்.

கேள்வி: இந்தியாவின் நல்லெண்ண முயற்சிகள் உருப்படியான தீர்வு எதையும் தருமா?

பதில்: இந்தியாவின் நல்லெண்ண முயற்சிகள் எம் மக்களுக்கும் ஆக்கபூர்வமான நம்பிக்கையைத் தந்திருக்கின்றன. ஆனால், சிங்கள இனவெறி அரசு தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்க இந்த உதவியைப் பயன்படுத்திக்கொள்ளும் என, நான் நினைக்கவில்லை.

கேள்வி: இந்தமாதிரி நிலைமையில், தமிழர்களுக்கு உதவ இந்தியா செய்யக்கூடிய மிகச் சரியான காரியம் எதுவாக இருக்க வேண்டும்?

பதில்: எம் மக்களின் நியாயமான, நேரிய கோரிக்கைகளை இந்திய அரசு அங்கீகரித்து, சுயநிர்ணயத்திற்கான எங்கள் உரிமையினை ஏற்க வேண்டும்.

கேள்வி: இந்தியாவின் இராணுவம் இதில் தலையிட வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: எமது சுதந்திரத்தை நாமே போராடி வென்றெடுக்கும் மனோதிடமும், நம்பிக்கையும், உறுதிப்பாடும் எங்களிடம் உண்டு. நாமே போராடி எம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும். எனினும் எங்களுக்கு இந்தியாவின் தார்மீக ஆதரவும் அனுதாபமும் அவசியமாகின்றது.

கேள்வி: ஜனாதிபதி ஜெயவர்த்தனா பற்றிய உங்களின் தனிப்பட்ட மதிப்பீடு என்ன?

பதில்: ஜெயவர்த்தனா ஓர் உண்மையான பௌத்தராக இருப்பாராயின், நான் ஆயுதம் ஏந்தியிருக்க நேர்ந்திராது.

கேள்வி: இந்தப் பேச்சுவார்த்தைகளை ஜெயவர்த்தனா நடத்துவதன் நோக்கம் என்னவென்று நினைக்கிறீர்கள்? காலங் கடத்தப் பார்க்கிறாரா? அப்படியானால் எதற்கு?

பதில்: இந்தச் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஜெயவர்த்தனா நடத்துவதற்குப் பல காரணங்கள் உண்டு. முதலில், இந்தியர்களின் கோபத்தைத் தணிப்பது. இரண்டாவது, இனக் கலவரங்கள் இலங்கையின் பெயருக்கு ஏற்படுத்திய பெரும் களங்கத்தை நீக்குவது. மூன்றாவதாக, நிதியுதவி தரும் மேற்கத்தைய ஸ்தாபனங்களிலிருந்து உதவி பெறுவது; கால அவகாசம் பெற்று சிங்கள இராணுவ இயந்திரத்தைப் பலப்படுத்துவது.

கேள்வி: தன்னுடைய அமைச்சரவையில் இருக்கும் தீவிரவாதிகளின் பிடிக்குள், ஜனாதிபதி ஜெயவர்த்தனா சிக்கிக்கொண்டிருக்கிறாரா? அல்லது அவர் தன்னிச்சையாகவே இயங்குகிறாரா? அல்லது பௌத்த குருமார்களால் நெருக்கப்படுகிறாரா?

பதில்: ஜெயவர்த்தனா சுயமாகத்தான் இயங்குகிறார். அவருக்கு சர்வ அதிகாரங்களுமுண்டு. அமைச்சரவையின் தீவிரவாதிகளும் பௌத்த குருமார்களும் அவருக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.

கேள்வி: சிறீலங்காவில் பௌத்த குருமார்கள் என்ன பங்கு வகிக்கிறார்கள்?

பதில்: சிறீலங்காவின் அரசியற் போக்குகளை நிர்ணயிப்பதில் பௌத்த குருமார்களுக்கு மிக முக்கியமான பங்குண்டு. சிங்கள மக்கள் மத்தியில் தமிழருக்கு எதிரான இனவெறியைத் தூண்டி விட்டதில் அவர்கள் மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள்.

கேள்வி: சிறீலங்காவை தனிச்சிங்கள பௌத்த நாடாக மாற்றும் முயற்சியில், பௌத்த குருமார்கள் கணிசமான வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா?

பதில்: சிறீலங்கா ஏற்கெனவே ஒரு தனிச் சிங்கள பௌத்த நாடுதான். இதில் பௌத்த பிக்குகளுக்குப் பெரும் பங்குண்டு.

கேள்வி: இது பௌத்த குருமார்களின் இன வெறியின் விளைவா? அல்லது கிறிஸ்தவ குருமார்கள் தமிழர்களுடன் ஒன்றுபட்டதன் விளைவா?

பதில்: இந்த இனவெறி அரசை ஸ்திரப்படுத்துவதில் பௌத்த குருமார்களுக்கு முக்கியமான பங்கு உண்டு. தமிழ் கிறிஸ்தவ பாதிரிமார்கள் தமிழர் பிரச்சினைக்கு அனுதாபம் காட்டுகின்றனர். ஆனால், சிங்கள கிறிஸ்தவப் பாதிரிமார்கள் சிங்களப் பேரினவாத வெறுப்புணர்வை வெளிப்படுத்தித் தமிழர்களின் கோரிக்கைகளை எதிர்க்கின்றனர்.

கேள்வி: உலக விடுதலை இயக்கங்களுடன் உங்களுக்குத் தொடர்புகள் உண்டா? எந்த அமைப்புகள் உங்களுக்குப் பயிற்சியும், ஆயுத உபகரணங்களும் தந்து உதவுகின்றன?

பதில்: உலகின் ஏனைய விடுதலை இயக்கங்களுடன் எங்களுக்குத் தொடர்புகள் உண்டு. உங்களின் இரண்டாவது கேள்விக்குப் பதிலளிக்க நான் விரும்பவில்லை.

கேள்வி: உங்களின் இந்தப் போராட்டத்திற்கு எந்த நாடு மிகவும் அனுசரணையாக இருக்கிறது?

பதில்: இதுபற்றி ஒன்றும் நான் சொல்ல விரும்பவில்லை.

கேள்வி: உங்களின் சித்தாந்தக் கோட்பாடு என்ன ?

பதில்: சனநாயக சோசலிசம்.

கேள்வி: எதிர்காலத்தில் தமிழர்கள் மீது தாக்குதல்களை எதிர்பார்க்கிறீர்களா? எந்தக் காரணத்தை முன்னிட்டு?

பதில்: ஆம். நான் எதிர்பார்க்கிறேன். திருகோணமலையிலும் வவுனியாவிலும் பெரும் எண்ணிக்கையில் தமிழர்களைக் கொல்லுவதற்கான ஒரு நாசகாரத் திட்டத்தை இனவெறி பிடித்த பாசிச சக்திகள் உருவாகி வருகின்றன. தங்களுடைய உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்கும் சக்தி வாய்ந்த தேசிய இராணுவத்துடன் சுதந்திரமான தமிழீழத் தேசம் உருவாக்கப்படும் வரை தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது.

கேள்வி: கெரில்லாக்களுக்கு எதிரான போர்முறையில் சிங்கள இராணுவத்திற்கு இஸ்ரேலியர்கள் பயிற்சி தருகின்றனர் என்பது உண்மையா?

பதில்: இதுவரை இலங்கையில் இஸ்ரேலிய இராணுவ நிபுணர்கள் இருப்பதைப் பற்றி நம்பத்தகுந்த செய்திகள் எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட செய்திகள் உண்மையாக இருந்தாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன். சிறீலங்கா அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் அதன் கூலிகளுக்குமான ஒரு தளமாக விரைவாக மாறிக் கொண்டு வருகிறது. பயிற்சி தருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் நிபுணத்துவம் எத்தகையதாக இருந்தாலும், விடுதலைப் புலிகளின் மனோ திடத்தையும், உறுதியையும் அழித்துவிட சிங்கள இராணுவத்தால் முடியாது. மகத்தான தார்மீக வலிமையும், தியாக உணர்வும், உன்னத இலட்சியப்பற்றும் எங்களுக்கு உண்டு.

கேள்வி: அமெரிக்காவிலிருந்து சிறீலங்காவிற்குப் பெருமளவில் ஆயுதங்களும், உபகரணங்களும் வந்து குவிவது பற்றி உங்கள் கருத்து என்ன ?

பதில்: இந்த ஆயுதக் குவிப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்பிற்கும் ஆபத்து விளைவிக்கக் கூடியது. சிறீலங்கா இராணுவத்திற்கு உதவிசெய்து தமிழீழ சுதந்திரப் போராட்டத்தை நசுக்குவது மட்டும் அமெரிக்காவின் நோக்கமல்ல என்பது உங்களுக்கத் தெரிந்ததே. திருகோணமலையில் ஒரு கடற்படைத் தளத்தை அமைத்துக் கொள்வது அமெரிக்க ஏகாதிப்பத்தியத்தின் கபட நோக்கம். இது இந்து சமுத்திரப் பகுதியை யுத்தப் பிராந்தியமாக மாற்றுவதுடன் இப்பிரதேசத்தில் யுத்த நெருக்கடியை உண்டுபண்ணும்.

கேள்வி: எப்படியோ ஒருகாலம் தமிழீழம் கைகூடிவிட்டால் அது எவ் வகையான நாடாக அமையுமென நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்: தமிழீழம் ஒரு சோசலிச அரசாக அமையப் பெறும். சோசலிசம் என்பதன் மூலம் சமத்துவமான சமூக அமைப்பை நான் கருதுகிறேன். இதில் மனித சுதந்திரத்திற்கும், தனிநபர் உரிமைகளுக்கும் உத்தரவாதமுண்டு. எல்லாவித ஒடுக்குமுறையும் சுரண்டலும் ஒழிக்கப்பட்ட மக்களின் உண்மையான ஜனநாயகமாக அது திகழும். தமிழ் மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தைப் பேணி வளர்த்து தமது கலாசாரத்தை மேம்பாடு செய்யும் வகையில் அவர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புகள் கிடைக்கின்ற ஒரு சுதந்திரச் சமூகமாகத் தமிழீழம் அமையும். இந்தச் சுதந்திரத் தமிழீழம் நடுநிலை நாடாக இருப்பதுடன் அணிசேராக் கொள்கையைக் கடைபிடிக்கும். அத்தோடு இந்தியாவோடு நேச உறவு கொண்டு அதன் பிராந்தியக் கொள்கைகளை, குறிப்பாக அந்துமகா சமுத்திரத்தை ஒரு சமாதானப் பிராந்தியமாக்கும் வெளிநாட்டுக் கொள்கையைக் கெளரவிக்கும்.

கேள்வி: உங்கள் கணிப்பில் தமிழீழத்தை எப்போது அடைவீர்கள்?

பதில்: விடுதலைப் போராட்டத்திற்கு காலவரையறையோ அல்லது ஒரு பூர்வாங்கத் திட்டமோ இருக்க முடியாது. தமிழீழத்திலும் உலக அரங்கிலும் உருவாகும் நிலைமைகளைப் பொறுத்து இது அமையும்.

நன்றி: எனது மக்களின் விடுதலைக்காக நூல்.

 

https://thesakkatru.com/history-is-my-guide/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.